ஊர் வேண்டேன்…

1958 வெளிவந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ’எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன், பதில் எப்படிச் சொல்வேன்’ என்று ஒரு பாட்டு வரும். பி சுசீலா பாடியது. ’நீ எந்த ஊரு, என்ன பேரு, எந்த தேசம், எங்கிருந்து இங்க வந்தே?’ என்று அதில் ஒரு வரி வரும். அப்போதே நான் நினைப்பேன், இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியுமா என்று. பலருக்கு ஓர் ஊர் இருக்கும். அதில் ஓர் ஆறு ஓடும். அந்த ஊர் மண் அவர்களை நெகிழ்த்தும். தொடர்ந்து அவர்களை ஈர்த்துத் தன்னுடன் தக்க வைத்துக்கொள்ள அந்த ஊரில் மனிதர்களும் விஷயங்களும் இருக்கும். ஆனால் என்னைப் போன்ற நாடோடிகளுக்கு ஏது ஊர்?

என் தலைமுறையினர் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே பாலக்காட்டிலிருந்து கோயமுத்தூர் குடியேறிய குடும்பங்களில் என் தாய் வழிக் குடும்பமும் என் தந்தை வழிக் குடும்பமும் இருந்தன. என் தாய் வழித் தாத்தா எஞ்சினியராக கோவில்பட்டி, ஆந்திராவில் நெல்லூர் என்று பல ஊர்களில் வேலை செய்துவிட்டு தன் ஊரான கோயமுத்தூருக்குக் கடைசியாக வந்தார். பொன்னுரங்கம் வீதியில் வீடு. என் தாய்வழிப் பாட்டியின் ஊர் சத்தியமங்கலம். கோயமுத்தூரில்தான் நான் பிறந்தேன். பிறகு எட்டு வயது வரை மும்பாயில் வளர்ந்தாலும் அப்போதும் பிறகும் லீவுக்கு எல்லாம் வந்தது கோயமுத்தூர்தான். பொன்னுரங்கம் வீதியில் இந்தத் தாத்தா வீடு. சென்குப்தா வீதி, ராம் நகரில், பெரியப்பாவும் அப்பா வழிப் பாட்டியும் இருந்த வீடு. அப்பாவின் குடும்பத்தின் இரண்டு பெரியப்பா, ஓர் அத்தை எல்லோரும் கோயமுத்தூரில்தான் இருந்தார்கள். அம்மாவின் குடும்பத்தில் பத்து குழந்தைகளில் என் அம்மாதான் மூத்தவள். ஐந்து மாமாக்களும், நான்கு சித்திகளும். தவிர அம்மாவின் பெரியப்பாவின் குழந்தைகளும் இங்கே வளர்ந்ததால் ஆறு மாமாக்கள், ஐந்து சித்திகள். தவிர அம்மாவின் அத்தை குடும்பம், சித்தப்பா குடும்பம் எல்லாம் கோயமுத்தூரில்தான். எல்லோர் குழந்தைகளும் லீவுக்கு வருவது கோயமுத்தூர்தான். மல்லியும், ரோஜா நிற போகன்விலியாவும் மற்ற பூச்செடிகளும் விசிறிவாழையும் இருந்த முன் தோட்டம். கிணறும், விறகுகள் அடுக்கிய, பாய்லர் எரியும் குளியலறை, காய்கறித் தோட்டம், தோட்டத்தின் முடிவில் எடுப்புக் கழிப்பிடங்கள் இரண்டு என்று நீண்ட கொல்லைப்புறம். மாடி வீடு. இதுதான் தாத்தாவின் வீடு. பெரிய திண்ணையும், வக்கீலாக இருந்த பெரியப்பாவின் அலுவலக அறையும், ஊஞ்சல் தொங்கும் பெரிய கூடமுமாய் பெரியப்பா வீடு. அதிலும் மாடி உண்டு. கல்கண்டு பத்திரிகைகளைச் சேர்த்து பைண்டு செய்து வைத்த பெரியப்பாவின் பேரன் உண்டு. ஒரு மூலையில் இருந்துகொண்டே பல கேள்விகளை எழுப்பிய, மழிக்கப்பட்ட தலையை எப்போதும் மூடிக்கொண்டே இருக்கும் நார்மடிப் புடவை உடுத்திய பாட்டி உண்டு.

தாத்தா வீட்டில் குறுக்கே கம்பி போட்ட ஆண்களுக்கான சைக்கிள் இருந்தது. கடைசி இரண்டு சித்திகளும் அதில் அனாயாசமாகக் காலைத் தூக்கிப்போட்டு ஏறி சைக்கிள் விடுவார்கள். அக்காவும் காம்பௌண்டு சுவரைப் பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓட்டப் பயில்வாள். கடைசிச் சித்தி சாமான் வாங்கச் சைக்கிளில் போகும்போது பின்சீட்டில் போவதற்குச் சின்னக் குழந்தைகள் போட்டிபோடுவோம். பலமுறைகள் நான் வெற்றி பெறுவேன். சித்தி வேகமாக ஓட்டும் சைக்கிளில் அவளைப் பின்னால் இருந்து பிடித்துக்கொண்டு பறப்பது போல் நினைத்துக்கொள்வது பரம ஆனந்தம் தரும் நிகழ்வு சின்ன வயதில். பெரிய பெரிய வாணலிகளில் பாட்டி வதக்கும் ருசியான காய்கறி, பெரிய பாத்திரங்களில் செய்யும் சாம்பார், ரசம் மற்றும்  இட்லி, தோசை, உப்புமா இவற்றையும், எங்கள் வரவை எதிர்பார்த்து பெரிய அண்டாக்களில் செய்த பட்சணங்களையும் ருசித்துச் சாப்பிடுவதுதான் எங்கள் வேலை கோயமுத்தூரில். பாட்டிக்குப் பூனைகளைப் பிடிக்கும். வீட்டில் ஓர் எட்டு, ஒன்பது பூனைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியபடியும், ஏதாவது வண்ணான் கூடையில் குட்டி போடுவதுமாக இருக்கும்.

பெரிய சிவப்புக் குங்குமப் பொட்டுடன், கெம்புக்கற்கள் பதித்த தோடுகளுடன் வளைய வரும் பாட்டியின் வாய் முழுவதும் தேவாரம், திருப்புகழ்தான். காலையில் தாத்தாவுடன் பூசைக்குப் பூக்கள் பறிப்போம். மாலையில் மல்லிகைப்பூ பறித்துத் தொடுத்து எல்லோருக்கும் ஒரு துணுக்கு கிடைக்கும் முடியில் சூட்டிக்கொள்ள. சனிக்கிழமையன்று ஒரு பெரிய அடுக்கில் அரிசியைப்  போட்டு சின்ன உழக்கு ஒன்றைப் போட்டு ஒரு குழந்தையின் கையில் கொடுத்துவிடுவார்கள். பிச்சை கேட்டு வருபவர்களுக்கு ஓர் உழக்கு அரிசி போடவேண்டும் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு. சில சமயம் சிலர் திருப்பதி போக வேண்டும் என்று சொல்வார்கள். தாத்தா வெளியே வருவார். அவர்கள் சொல்வது உண்மை என்று தோன்றினால் ஏதாவது பணம் தருவார். நம்பிக்கை ஏற்படவில்லை என்றால், “திருப்பதிதானே? இதுதான் வழி” என்று வெளி வாசலைக் காண்பிப்பார். சில சமயம் நாங்களே இந்த முடிவை எடுத்து தாத்தாவின் “திருப்பதிதானே?…” வசனம் பேசுவோம்.      

அம்மா வீட்டில் அத்தனை பேர்களும் பாடகர்கள். மாலையில் குழந்தைகளுடன் தாத்தா ஸ்லோகம் சொன்னபின் இரவு உணவுக்குப் பிறகு பாட்டுக் கச்சேரி ஆரம்பமாகும். தெரிந்த கீர்த்தனைகளில் குழந்தைகளும் சேர்ந்துகொள்வார்கள். இரவு வரை இது போகும். குழந்தைகள் அங்கங்கே தூங்கிப்போவார்கள்.  குடும்பங்களின் அத்தனை கல்யாணங்கள், மற்ற நிகழ்வுகள் எல்லாம் கோயமுத்தூரில்தான்.  மாமாக்கள் சினிமா கூட்டிப் போவார்கள் எப்போதாவது. ஹிந்தி சினிமா என்றால் மும்பாய்ப் பெண்களாகிய நானும் அக்காவும்தான் அது பற்றித் தெரிந்தவர்கள். நாங்கள் சொல்வதுதான் சரி. இது தவிர பொன்னுரங்கம் வீதியிலிருந்து ராம் நகர் போவது வருவது இவ்வளவுதான் கோயமுத்தூரில் செய்தது. மற்றபடி கோயமுத்தூரில் எதுவும் நினைவில்லை. இருந்தாலும் மனத்தின் மூலையில் கோயமுத்தூர் பசுமையாக இருக்கிறது. இப்போதும் போகிறேன் உறவினர்களைச் சந்திக்க. இருந்தாலும் அதை என் ஊர் என்று சொல்ல முடியாது.

எட்டு வயது வரை மும்பாயில்தான் வளர்ந்தேன். அதன்பின் இருபது வயது வரை பெங்களூரில், பிறகு மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் சென்னையிலும் பண்ருட்டியிலும், பிறகு பதினோரு  ஆண்டுகள் டில்லியில். பின்பு மீண்டும் மும்பாய். இன்று வரை மும்பாய்தான். உடைப்பெடுத்து மும்பாயை வெள்ளத்தில் ஆழ்த்திய பின்தான் இருக்கிறது என்றே தெரிய வந்த மித்தி ஆறு ஓடும் மும்பாய்.

எட்டு வயது வரை மும்பாயில் இருந்தபோது சிவாஜி பார்க் பகுதியில் லக்ஷ்மி நிவாஸ் என்ற கட்டடத்தில்தான் வசித்தோம். கீழ்த்தளத்தில் இரண்டு அறைகள், ஒரு சமையலறை கொண்ட வீடு. இந்த வீட்டில்தான் இரண்டாம் உலகப்போர் முடியும் தருணத்தில் கோயமுத்தூரில் பிறந்த என்னை எடுத்து வந்தாள் என் அம்மா. வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் மேற்கே நடந்தால் கடல். கிழக்குப் பக்கம் அதே தூரம் நடந்தால் ட்ராம் வண்டிகள் ஓடும் லேடி ஜம்ஷேட்ஜி வீதி. கட்டடத்தின் பின்னாலேயே ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் இருந்தது. அங்குதான் என்னைச் சேர்த்தார்கள் நான்கு வயதில்.

அம்மாவிடம் தையல் மெஷின் இருந்தது. விதம்விதமாகத் தைப்பாள். தம்பியை நான் தூக்கிக்கொள்ள ஒரு தையல் வகுப்புக்கும் போவாள். வீட்டில் ஒரு பெரிய பச்சை வண்ணம் அடித்த மரப் பெட்டியில் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் இவற்றில் வரும் தொடர்கதைகள் பைண்டு செய்யப் பட்டு வைத்திருக்கும். சிறுவர் பகுதிகளும் இருக்கும். அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு படிப்பேன். அம்மா நீலாம்பரியில் ஏதாவது பாட, புத்தகத்துடன் உறங்கியதும் உண்டு. ட்ராம் வீதியைக் கடந்தால் எதிரே உள்ள வீதியில்தான் சுதேசமித்திரன் வாங்கும் மாமி இருந்தாள். வாரம் ஒருமுறை போய் சுதேசமித்திரன் வாங்கிவருவது என் பொறுப்பு. பதிலுக்கு அம்மா விகடன் அல்லது கல்கி தருவாள் மாமிக்கு. மாமி என்றைக்காவது ஒரு மைசூர்பாகோ, மிட்டாயோ தருவதுண்டு. ஒரு சித்தி மற்றும் அத்தையின் குடும்பங்களும் பக்கத்திலேயே தாதரில்தான் இருந்தன. சித்தி குடும்பத்துடன்தான் அதிக நெருக்கம். நாலு குழந்தைகள் அந்தக் குடும்பத்தில்.  என் அக்கா வயதில் ஒரு பெண்ணும், என்னைவிடச் சற்றே  பெரிய ஓர் அண்ணாவும், என் வயதில் ஓர் உடன்பிறந்தானும், ஒரு வயது சிறிய தங்கையும் இருந்தார்கள். பக்கத்திலேயே இருந்ததால் தினம் சந்திப்போம். இரண்டு குடும்பங்களும் சேர்ந்துதான் கோயமுத்தூர் பயணங்கள் மேற்கொள்வோம். 

சிட்டி லைட் சினிமா அரங்கத்தில் மதியம் 12 மணிக்கு ஒரு படம் காட்டுவார்கள். மாமி ஷோ என்று பெயர். தாதர், மாடுங்கா, மாஹிம் பகுதியில் நிறையத் தமிழர்கள் இருந்ததால் அந்தப் பெயர். பெண்கள் அதிகமாக வருவார்கள் அந்த நேரத்தில். அங்குதான் சந்திரலேகா பார்க்கப் போனேன் அம்மாவுடன். முதல் இரண்டு முறை டிக்கட் கிடைக்கவில்லை. மூன்றாம் முறைதான் கிடைத்தது.

நாங்கள் இருந்த கட்டடத்தில் பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள். பெங்காலிகள், குஜராத்தியர்கள். மராட்டியர்கள், பஞ்சாபியர்கள் என்று பலர். எல்லா மொழிக்காரர்களையும் எல்லோரும் கேலி செய்வார்கள். அதில் கோபமோ அவமதிப்போ இருக்காது. வேடிக்கைதான். ஒருவருக்கொருவர் உதவும் குணம் இருந்தது.  

அண்டு குண்டு டண்டா பானி

சோடா லெமன் கரம் பானி என்று தமிழ் பேசுபவர்களையும் 

பெங்காலி பாபு

பைஸே கா சாபூன் என்று பெங்காலிக்காரர்களையும்

ஸூசே ஸாரூசே

டண்டா லேகே மாரூசே என்று குஜராத்திக்காரர்களையும்

அஸ கஸ மஸாலா

மச்சி காத்தா மராட்டி என்று மராட்டிக்காரர்களையும்

கிண்டல் செய்யும் பாடல்கள் உண்டு. அப்போது மகாராஷ்டிர மாநிலம் என்று பிரித்திருக்கவில்லை.

எட்டு வயது வரை—இடையில் ஓர் ஆண்டு அப்பாவுக்கு டில்லி மாற்றலாகி டில்லி போன ஆண்டு தவிர்த்து—இந்த மும்பாய் வாழ்க்கை. அதன்பின் பெங்களூரில் கல்லூரி முடியும் வரை.

பெங்களூருக்கும் ஒரு தனியிடம் உண்டு மனத்தில். நல்ல பெரிய வீடுகளில் இருந்தோம் ஆரம்ப சில வருடங்கள். அதன் பின் மல்லேஸ்வரத்தில் எட்டாவது மெயின் தெருவில் குடிவந்தோம். வீட்டின் முன் பெரிய தோட்டம். பின்னால் பலா, முருங்கை, தென்னை பப்பாளி மரங்களும், புடலை, பாகல், பூசணிக் கொடிகளும் மற்ற காய்கறித் தோட்டமும் இருந்த நீண்ட கொல்லைப்புறம். நடனம், பாட்டு, படிப்பு, எழுத்து எல்லாம் நடந்தது பெங்களூரில்தான். அப்போது பெங்களூர் குளுகுளுவென்றிருக்கும். வீட்டில் மின்விசிறிக்கு அவசியம் இருக்காது. குளிர்பதனப்பெட்டியும் கிடையாது. விறகடுப்புத்தான் பல ஆண்டுகளுக்கு.

ஒவ்வொருவருக்கும் தனியறை என்றில்லாவிட்டாலும் வீடு பெரிய வீடு. கூடத்தைத் தவிர நான்கு அறைகள். அதைத் தவிர சாப்பாட்டு அறை சமையலறையை ஒட்டி. பெரிய சமையலறை. பெரிய பூஜையறை. சாமான் வைக்கும் அறை. சாமான் அறையில் காப்பிப் பொடி செய்ய ஒரு சின்ன இயந்திரத்தைப் பலகையில் பொருத்தியிருக்கும். தினம் இரவு அதில் காப்பிக்கொட்டைகளைப் போட்டுப் பொடிக்கும் வேலை எங்களில் யாருக்காவது தரப்படும். அதிலுள்ள பிடியைச் சுழற்றிப் பொடிக்க வேண்டும். அம்மா பெரிய பூஜை எல்லாம் செய்ய மாட்டாள். குளித்துவிட்டு இரண்டு பூ போட்டு விளக்கை மட்டும் ஏற்றுவாள். பூ பறிப்பது என் வேலை. காசித்தும்பை, பவழ மல்லிகை இவற்றைப் பறிப்பேன். நாள் கிழமைகளில் முன்  வாசலை அடைத்துக் கோலங்கள் போடுவோம்.

அம்மாவுக்கு ஒரு தோழிகள் கூட்டம் அமைந்தது. பல இடங்களுக்கும் போவோம். லால் பாக், கப்பன் பார்க், பசவன்குடியிலிருந்த நந்தி கோவில்,  விதான சௌதா கட்டப்பட்ட பின்பு அதைப் பார்க்க என்று ஒரு பயணம் என்று அமையும். அரைக் கிலோ மீட்டர் தொலைவில் பிள்ளையார் கோவிலும், கன்னிகா பரமேஸ்வரி கோவிலும். ஹரிகதைகளும், ராமாயணப் ப்ரவசனங்களும், கதா காலட்சேபங்களும், கச்சேரிகளும் கேட்டது பிள்ளையார் கோவிலில்தான். பெங்களூர் ஓய்வு பெற்றவர்களுக்கான ஸ்தலம் என்று அப்போது கூறுவார்கள். எல்லாமே நிதானம்தான். காலையில் பால்காரன் மாட்டுடன் வந்து, குவளையைக் கவிழ்த்துக்காட்டிவிட்டுப் பால் கறந்து தருவான். எச்.ஏ.எல் போன்ற நிறுவனங்களில் வேலை செய்வோர்களைக் கொண்டு செல்ல அந்தந்த நிறுவனங்களின் பேருந்துகள் வரும் காலையில். அவர்கள் போன பின் எல்லாம்   நத்தை வேகம்தான். இடையிடையே தேவர் நாமாக்களும், அக்கம்மா தேவி பாடல்களும், பெங்களூரில் இருந்த மண்டயம் அய்யங்கார்கள் பேசும் கொச்சைத் தமிழும் செவிகளில் விழுந்தவண்ணம் இருக்கும். ஸ்வஸ்திக் மற்றும் சென்ட்ரல் தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் வரும். பொங்கலன்று தமிழ்ப் படம் கட்டாயம் பார்ப்போம். ஹிந்திப் படங்களும் பார்ப்போம் சிலசமயம் மெஜஸ்டிக் வரை போய். அந்தந்தக் காலங்களுக்கு ஏற்ப, அப்பளம், வடகங்கள், ஊறுகாய், ஜாம், பட்சணங்கள் எல்லாம் நடந்தபடி இருக்கும். மல்லேஸ்வரம் மார்க்கெட்டில் தமிழ்ப் பத்திரிகைக் கடை உண்டு. தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் புத்தகசாலையும் உண்டு. தினம் மாலை ஒரு நடை அங்கு போவோம். தீபாவளி அன்று காலையே போய், சேர்த்துவைத்த பணத்தில் தீபாவளி மலர்களை வாங்குவோம்.   

பி.ஏ முடிக்கும் வரை இந்த வாழ்க்கைதான். பின்பு சென்னை கிறித்துவக் கல்லூரி வாழ்க்கை. அதன்பின்பு டில்லி. டில்லியின் அகன்ற சாலைகளிலும் இந்தியா கேட் அருகிலும் நடந்தபடியும், வேலை பார்த்தபடியும் 11 ஆண்டுகள். இப்போது மீண்டும் மும்பாய்.

1978இல் மும்பாய் வந்தபோது ட்ராம்கள் இல்லை. மின்சார ரயில்கள் வந்தாயிற்று. சிவாஜி பார்க்கில் லக்ஷ்மி நிவாஸ் அப்படியே இருக்கிறது இன்னமும். அந்தப் பள்ளிக்கூடம் இல்லை. முதலில் வர்ஸோவாவில் இருக்க வந்தபோது சுற்றிலும் தென்னந்தோப்புகள். எதிரே கடல். தென்னை மர உயரத்துக்கு அலைகள் அடிக்கும். அலைகளின் நீர் தெருவுக்கு வரும். ஜனத்தொகை அதிகம்தான். ஆனால் அதிலும் அவ்வளவு சிக்கல் இல்லை. மின்ரயிலில் கூட்டத்தில் ஏறக் கற்றுக்கொண்டுவிட்டால் எங்கும் போகலாம். அரோரா தியேட்டரில் தமிழ் சினிமா பார்க்கப் போகலாம். மும்பாய்த் தமிழ்ச் சங்கம் வாசகசாலைக்குப் போகலாம். ஷண்முகானந்தாவில் கச்சேரி கேட்கலாம். செம்பூரிலும் தென்னிந்திய நிகழ்வுகள் உண்டு. அலுவலகங்கள் நாரிமன் பாயின்ட்டில் பல இருந்ததால் மின் ரயில் பிடித்து சர்ச்கேட் போகாமல் முடியாது. அந்தேரியிலிருந்து 40 நிமிடங்கள்தான் ஆகும். அத்தனை தூரம் போனால் கேட் வே, ஜஹாங்கீர் கலைக் கூடம், நவீன கலைக் கூடம் இவற்றையும் ஒரு சுற்று பார்த்துவிட்டு என்.ஸி.பி.ஏவில் நாடகமோ, நடனமோ, சினிமா விழாவோ இருந்தால் நுழைந்துவிட்டு வீட்டுக்கு இரவு 12 மணிக்கு வந்துவிடலாம். மும்பாயில் அது ஒன்றும் காலம் கடந்து வரும் நேரம் இல்லை.   

எப்படியும் வாழ்ந்துவிடலாம் என்ற உற்சாகத்தையும் நம்பிக்கையும் தரும் ஊர் மும்பாய். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் நெரிசல் அதிகம். கூட்டத்தில் போனால் மூச்சுத் திணறும். இப்போது மெட்ரோ கட்டும் வேலையில் தூசும் குப்பையும் வீட்டினுள்ளேயே இருக்க வைக்கிறது. எங்கு போகவும் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ஆகிறது. நிதம் பயணம் செய்யவே நான்கு மணி நேரங்கள் ஆகின்றன. தெருவெல்லாம் கார்கள். நடக்க இடமில்லை. வாகன ஓசை, பலவிதக் கொண்டாட்டங்களில் உச்சஸ்தாயியில் பிளிறும் ஒலிபெருக்கிகளின் ஓசை இவை மும்பாயின்  கடலோசையை அடக்கிவிட்டன. முன்பெல்லாம் விஷ்விஷ் என்ற ஒலியுடன் முட்டும் அலைகள் தொடர்ந்து பகல்களில் ஒலிக்கும்போது ஒரு துணை கூட வருவதாகத் தோன்றும். இரவில் தாலாட்டும். கடல் காற்று தெருவாசிகளைக் கூட உறக்கம் கொள்ள வைக்கும்.

வரம் பெற்ற அடிபட்ட அரக்கன் போல மீண்டும் மீண்டும் எழுந்திருக்கும் ஊர் மும்பாய் என்றாலும் 1992இல் பாபர் மசூதி இடிப்புக்குப்பின் நடந்த மதக் கலவரங்களும், அதன்பின் நடந்த  குண்டு வெடிப்புகளும், தாஜ்மஹால் ஹோட்டலில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலும் மும்பாயை உலுக்கிவிட்டன என்றே சொல்லவேண்டும்.   தற்போது பணத்தை மட்டுமே மதிக்கும், வேகமாகச் செல்லும் அதிகப்படியான விசைகள் பொருத்தப்பட்ட அதிவேகமான மோட்டார்பைக்குகளை ஓட்டும், கார்கள் வைத்திருக்கும், அமெரிக்கா அல்லது வேறு நாடுகளுக்குச் செல்வதையே வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருக்கும் ஓர் இளம் தலைமுறையினரும் அவர்களை வளர்க்கும், செல்வத்தில் திளைக்கும் அல்லது பணம் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கும், பிஎம்டபிள்யு கார் வாங்குவதை வாழ்க்கையின் எட்ட வேண்டிய இலக்காகக் கொண்ட குடும்பங்களும்,   தெருவிலோ, கல்லூரியிலோ, பொதுவெளியிலோ நொடியில் சினம் கொண்டு குரூரம் காட்டும், மனித நேயத்தைக் கைவிட்ட, ஓர் அதிகாரத்தைக் கைப்பற்றிய கும்பலும் வந்துவிட்டது என்று தோன்றுகிறது. பணம் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் அதிகமாகப் போய்விட்டதாகத் தோன்றுகிறது. இது மும்பாய் நகரத்துக்கு மட்டுமே உரியது என்று தோன்றவில்லை. இருந்தாலும் ஒரு நகரத்தின் மாற்றங்களில் சாதகமான ஒன்றுதானா இது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியதற்கான நேரம் கூட இல்லாமல் மும்பாய் வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எங்கள் வீட்டைச் சுற்றிலும் இரண்டொரு தென்னை பனை மரங்கள் தவிர மரங்கள் கிடையாது. கட்டிட மலைகள். துண்டுத்துண்டாய்த் தெரியும் கடல். அப்படியும் காலையில் தானியம் போட்டால் புறாக்கள் பறந்து வருகின்றன. மரங்களில் அமர எங்கெங்கிருந்தோ கிளிகள் வருகின்றன. காலையில் குயில் பாடுகிறது இன்னும். வீட்டினருகே குருவிகள் அருகிவிட்டன. கைபேசிகளுக்காக எழுப்பப்படும் டவர்கள் காரணம் என்கிறார்கள்.  ஆனால் பெரியபெரிய மேல் நாட்டுப் பாணி மாளிகைக் கடைகளில் உள்ள சாப்பாட்டுத் தளத்தில் சாக்கலேட் கேக்குகளின் துகள்களைச் சாப்பிடவும், பாஸ்தா பீட்ஸா பர்கர்  சாப்பிடவும் ஏராளமான குருவிகள் உண்டு. கெட்டிக்கார மும்பாய்க் குருவிகள். சற்று தூரம் நடந்து காயல்புரம் போனால் அங்குள்ள வர்ஸோவா கிராமம் என்று இப்போதும் அழைக்கப்படும் காயல் பகுதியில் மீனவர்கள் வாழ்க்கையில் வளம் கூடியிருந்தாலும் அங்குள்ள வாழ்க்கைமுறை மாறவில்லை. அதே சிரிப்பு, வரவேற்பு, அதே காய்கறிச் சந்தை, மீன் மார்க்கெட், மீன் கொண்டு செல்லும் லாரிகள், பள்ளி செல்லும் சிறுவர் சிறுமிகள். கோலிகள் என்று அழைக்கப்படும் இவர்கள் ஊர்தான் மும்பாய். மும்பாயின் இதயம் இவர்களிடம்தான். இவை எல்லாம்தான் மும்பாயில் இருத்துகிறது என்னை.

இதுதான் ஊர் என்றாகிவிட்டாலும், யாராவது மலையாளம் பேசினால் நானும் கேரளத்தில் பாலக்காட்டிலிருந்து வந்தவள்தான் என்று சொல்லிக்கொள்கிறேன். யாராவது திருநெல்வேலித் தமிழ் பேசினால் என் அம்மா கோவில்பட்டியில் வளர்ந்ததைக் கூறி, அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் சில நாட்கள் பாட்டுப் படித்த கதையைச் சொல்லி உறவு கொண்டாடுகிறேன். கோயமுத்தூர்க்காரர்களிடம் இழைகிறேன்.  கன்னடம் பேசுபவர்கள் கிடைத்தால் பங்களூருக் கதைகள் பேசுகிறேன். டில்லிக்காரர்கள் வந்தால் தாபாக்கள் என்று கூறும் சாப்பாட்டுக் கடைகள் பற்றியும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் பற்றியும், பெங்காலி மார்க்கெட் ரஸமலாய் பற்றியும் பேசுகிறேன். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த விஷ்ணு என் வாழ்க்கைத் துணைவனாதலால் அங்கிருந்து வருபவர்களிடம் அஜ்மீரும் என் ஊர் என்கிறேன். மும்பாயில் வாழ்கிறேன். இப்படி ஓர் ஊரற்று, வேர்களற்று பஞ்சு போல் பறக்கும் எனக்கு ஏது ஊர்? எல்லாமே  ஊர்தான். எல்லாமே ஊர் இல்லையும்தான்.

[கபாடபுரம், எண்4, 2017 – இதழில் வெளியானது.]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.