
1953இல் ராஜம் கிருஷ்ணன் அவர் பெண் குரல் நாவலுக்கு கலைமகள் பத்திரிகையின் நாராயணசாமி ஐயர் விருது பெற்றபோது எனக்கு ஒன்பது வயது ஆகியிருக்கவில்லை. கி.வா.ஜ. என்று அறியப்பட்ட கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக்கொண்ட கலைமகள் பத்திரிகை இலக்கியப் பத்திரிகையாக கருதப்பட்டது. எங்கள் வீட்டில் மாதாமாதம் கலைமகள் வந்துவிடும். காரணம் என் அன்னை தமிழ்ப் பத்திரிகைகளின் தீவிர வாசகி. கதைகள் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். பெண் குரல் சம்பிரதாயமாகத் தீர்மானிக்கப்பட்ட திருமணம் ஒன்றில் தம்பதியர் மன உணர்வுகள் சொற்களில் வெளிப்படாமல் இருவரிடையே தொடர்பு அறுபடுவதையும் குடும்ப அரசியலில் சிக்கிக்கொண்ட பெண் ஒருத்தி காதலை அடைய முயற்சி செய்வதையும் கூறும் கதை. கலைமகளில் தொடராக வெளிவந்த அந்த நாவலை நான் சிறுமியாக இருந்தாலும் படித்தேன். திருமண வாழ்வின் ஆழ்மனச் சிக்கல்களை மிகவும் நுட்பமாகக் கூறும் நாவலாக அது இருந்தாலும் அதன் அதிர்வுகளை முற்றிலும் உணராமலே என்னால் உள்வாங்க முடிந்தது. பிறகு பதின்ம வயதில் அதை மீண்டும் படித்தபோது குடும்ப அமைப்புக்குள்ளே இருக்கும் வாழ்க்கையைக் குறித்து எழுதப்பட்ட எத்தகைய அசாதாரண பகுப்பாய்வு அது என்பதை உணர முடிந்தது. பெண் குரல் என்ற அதன் தலைப்பும் வழக்கமான தலைப்பாக இருக்கவில்லை. பெண்ணின் குரல் என்ற பொருள் கொண்டதாக அது இருந்தாலும் திருமண உறவில் தன் குரலைத் தேடும் ஒரு பெண்ணின் கதைதான் அது. தன் எண்ணங்களை, அபிப்பிராயங்களை வெளியிடும் குரல் ஒரு பெண்ணுக்குத் தேவைப்படுகிறது என்ற கருத்துதான் நாவலை மீண்டும் படித்தபோது என்னை ஈர்த்தது.

பின் வந்த ஆண்டுகளில் என் வயதுள்ள பல பெண்களை ராஜம் கிருஷ்ணனின் கதைகள் தொட்டதை நான் அறிந்துகொண்டேன். பல நாவல்களையும், சிறுகதைகளையும் கட்டுரைகளையும் ராஜம் கிருஷ்ணன் எழுதியிருந்தாலும் தன் எழுபத்தெட்டாம் வயதில் அவர் எழுதிய உத்தர காண்டம் அவர் ஆழ்மனக் குரலாக இருந்தது என்று அவருடன் நெருங்கிப் பழகிய எனக்குத் தோன்றியது. 2002இல் உத்தர காண்டம் நாவல் வெளிவந்தபோது ராஜம் கிருஷ்ணனின் வாழ்க்கையில் பல இடர்கள் வந்துபோயிருந்தன. அவர் கணவர் மறைவுக்குப் பின் பல ஆண்டுகளாக அவர் வாழ்ந்த தாம்பரத்தில் இருந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டுக்குக் குடிபுகத் தீர்மானித்தார். தனியாக இருக்கும் தனக்குச் சொந்த வீடு தேவையில்லை என்று பிடிவாதமாக இருந்தார். உற்ற நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்க மறுத்தார். பல வீடுகள் மாற வேண்டி வந்தபோதும் அவர் மனம் சோரவில்லை. தவிர, பெண்கள் சரித்திரம் குறித்தும் அதை நாட்டின் சரித்திரத்தினுள் சரியான முறையில் இருத்துவது குறித்தும் அவர் மேற்கொண்டிருந்த முயற்சிகளை அவர் விடாமல் தொடர்ந்ததை நாங்கள் வியந்து பாராட்டினோம். உத்தர காண்டம் குறித்து நான் இக்கட்டுரையில் குறிப்பிட்டுப் பேச விரும்புகிறேன். காரணம் இந்த நாவல் பெண்களுக்கும் அவர்கள் பல்வேறு குரல்களுக்கும் மையமான இடம் ஒன்றை அளிக்க ராஜம் கிருஷ்ணன் விடாமுயற்சியுடன் செயல்பட்டு உருவாக்கிய பல இலக்கிய ஆறுகள் முடியும் கடலாகும்.
எழுதியவேண்டிய கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து, அது குறித்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பின்பு அதை புனைகதையாக்கும் எழுத்தாளர்கள் வெகு சிலர்தாம். களக் குறிப்புகளை புனைகதைகளாக்கும் முயற்சியை வெகு சிலரே மேற்கொண்டுள்ளனர். காரணம் பயணங்கள், ஆதாரங்களைத் தேடல், குறிப்பெடுத்தல், அதன்பின் தகவல்களை உள்ளடக்கி கதை ஒன்றை உருவாக்குவது என்ற கடினமான வேலை அது. தற்போது பலர் இதைச் செய்ய முற்பட்டாலும் அவர்களுக்கு முன்பே இதைப் பல்லாண்டுகளாகச் செய்து வந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்தான். களக்குறிப்புகளை ஒட்டி அவர் அமைத்த சில கதைகள் குறித்து எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனாலும் சோராமலும் தைரியத்துடனும் பல்வேறு இடங்களையும் அனுபவங்களையும் தன் எழுத்தில் அவர் உயிர்பெறச் செய்வதை நான் வியந்தபடிதான் இருந்தேன். தஞ்சாவூர் போய் சேற்றில் நின்றுழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கையையும் அவரால் எழுத முடியும். கோவா போய் கோவா சுதந்திரம் பெற்ற விதத்தையும் எழுத முடியும். உப்பளங்களில் வேலை செய்யும் பெண்களைப் பற்றி எழுதும் அதே முனைப்புடன் தேசிய அரசியலில் அயராது உழைத்தும் மறக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் எழுத முடியும். அலைவாய்க்கரையில் உள்ள மீனவர் வாழ்க்கை பற்றியும் மலைவாழ் படுகர்களைப் பற்றியும் எழுத முடியும். இந்தப் படைப்புகளின் பின்புலமாய் உள்ள களப் பணியும் களக்குறிப்புகளும் மனித இன ஆராய்ச்சியாளர்கள் பெருமையுடன் சான்றுகளாகக் கூறத்தக்கவை.

நாடும் அதன் அரசியலும் குறித்த ராஜம் கிருஷ்ணனின் சிந்தனைகளின் உச்சமுகடாக உத்தர காண்டம் அமைந்தது என்றால் மிகையில்லை. அரசியல், அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராளிகள், அவர்களுடைய வாழ்க்கைகள் இவற்றைச் சிக்கலான முறையில் கோர்க்கும் நாவல் உத்தர காண்டம். தாழ்த்தப்படுத்தப்பட்ட மனித வாழ்க்கையையும் கைவிடப்பட்ட காந்திய கருத்துகளையும் மையமாக்கிய நாவல் எனலாம். முன்னுரையில் தன் எழுபத்தெட்டு வயதில் தான் அறிந்தவர், அறிந்தவை எல்லாவற்றையும் பற்றிய நாவல் இது என்கிறார். பெண்கள் தாய், தாய்க்குலம் என்று கூறப்பட்டாலும் தமிழ் நாட்டில் பெண்களை முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களாக்கிய தரம் குறைந்த அரசியல்தான் தமிழ்நாட்டு அரசியல் எனக் கருதுகிறார் ராஜம் கிருஷ்ணன். அதிகாரமற்று பொருளாதார ரீதியில் முடக்கப்பட்டிருக்கும் பெண்களைப் பலிகடாக்களாக்கி, அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் பணம், எல்லையற்ற அதிகாரம், சுய ஆதாரம் இவை கூடிய போட்டி அரசியலில் எளிதாகப் பங்கேற்கும் அரசியல் இது. தங்கள் சொந்த வாழ்க்கையைப் பணயமாக்கி சுதந்திரப் போராட்டம் கற்றுத் தந்த மதிப்பீடுகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த பலர், இந்த மதிப்பிடுகளை உணராத, அவற்றை முற்றிலும் புறக்கணித்த, அவர்களுக்கு நேர் எதிர்மறை நிலையில் வந்த பல தலைமுறைத் தலைவர்கள், அவர்கள் கால்வருடிகள் இவர்களின் மாறுபட்ட பல பிம்பங்களை இணைத்த கலவை ஓவியம் உத்தர காண்டம்.
நாவலின் மையப் பாத்திரம் எண்பது வயதான தாயம்மா. தன் தற்போதைய வாழ்க்கையின் யாதார்த்தங்களினூடே தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும் தாயம்மா. காந்திய தம்பதியரால் வளர்க்கப்பட்டு, அரசியல் அதிகாரத்தைப் பெற எந்த வழியையும் பின்பற்றும் வக்கிர விளையாட்டாக அரசியலை மாற்றிய மகன் ஒருவனைப் பெற்ற அவமானத்தைச் சுமப்பவர் அவர். பெண்களை எந்த விதத்திலும் மதிக்காவிட்டாலும் அரசியல் எதிரிகள் விமர்சனங்களிலிருந்தும் தப்பிக்க எப்போதாவது தன் அம்மாவிடம் வந்து தன்னுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளும் மகன். நாவலில் வரும் மனத்தைத் தொடும் பாத்திரங்கள் ராமுண்ணி, சாயபு, சுப்பைய்யா, சம்பு அத்தை மற்றும் அந்தக் காந்திய தம்பதி. ராமுண்ணியும் சாயபுவும் ஆரம்பத்திலேயே இறந்துவிட்டாலும் அவர்கள் குரல்களும் கண்ணீரும் நாவலைத் தொடர்ந்து ஓட்டியவண்ணம் இருக்கின்றன. இளம் வயதில் பொதுவுடமைக்கட்சி மறைந்திருந்து செயல்பட்டபோது, தன் பொதுவுடமைக் கருத்துக்களுக்காக, தூக்கிலிடப்படுவதிலிருந்து தப்பித்த ராமுண்ணி, எதுவும் செய்ய வகையில்லாத ஏழையாக மரிக்கிறார். தாயம்மா அவரைக் காண வரும்போது அவர் உடைந்துபோய் அழுகிறார். “அம்மே, நான் தூக்குக் கயிற்றில் முடிந்திருக்கலாம்… இந்த பாரத சமுதாயம், கனவுகண்ட, சமத்துவ, ஜனநாயக, அஹிம்சைச் சமுதாயம்… அந்தக் கனவு துண்டுதுண்டாய் போயிட்டதம்மா…” எனக் கூறி கண்ணீர் வடிக்கிறார். பாரதியின் கனவான பாரத சமுதாயம் அது. ராமுண்ணியின் உடைந்த மனத்தின் கண்ணீர் அவர் தலைமுறையின் உருவகமாகிறது.
மிகவும் நாடகத்தன்மையுடன் நாவல் முடிகிறது. தாயம்மா பலவகைகளில் ஒடுக்கப்பட்டு அடிபட்ட ஓர் இளம் பெண்ணுடன் வீட்டை விட்டுப் போக முடிவெடுக்கிறார். ஆரம்பத்தில் காந்திய தம்பதி அவரை வளர்த்த கிராமத்துக்குப் போக முடிவெடுக்கிறார். அந்தக் கிராமத்தில் அப்போதுதான் ஒரு சாதிக் கலவரம் நடந்து முடிந்திருக்கிறது. இரு வேறு சாதியைச் சேர்ந்த இருவர் கிராமத்திலிருந்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டபின், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் கொன்றிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கிராமத்தில் காந்திய தம்பதியரையும் அவர்கள் செய்த தொண்டையும் அறிந்த ஒரு போலீஸ்காரரும் இருக்கிறார். குழந்தைகள் அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் வாழச்சென்றபின் கிராமத்திலேயே வாழ முடிவு செய்துவிட்ட ஒரு பழைய நண்பரும் இருக்கிறார். ராஜம் கிருஷ்ணனின் வழக்கமான எங்கிருந்தோ நம்பிக்கை சுரக்கும் பாணியில் நாட்டின் பல இடங்களிலிருந்தும் பெண்களும் ஆண்களுமாய் இளைஞர் கூட்டமொன்று பழைய மேன்மையான மதிப்பீடுகளை மீண்டும் கொண்டுவர உறுதிபூண்டு கிராமத்துக்கு வருகிறது. தாயம்மாவுக்கு ஆரம்பத்தில் உதவிய பெண்மணியின் குடும்பத்துப் பெண்ணும் உண்டு அந்த இளைய சமுதாயக் குழுவில். தாயம்மாவின் வாழ்க்கை ஒரு முழு வட்டம் சுற்றிவிட்டு எல்லாம் ஆரம்பித்த இடத்துக்கு வந்து நிற்கிறது. புது உயிர் ஒன்று பிறப்பதுபோல நம்பிக்கை அவருள் உயிர்பெறுகிறது. அவருடைய வெள்ளைப் புடவை உள்ள பையை இன்ஸ்பெக்டர் பத்திரமாகத் திருப்பித் தருகிறார். அதில் ஒரு கறையும் இல்லை. அவர் புனிதம் என்று நினைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் குறியீடாகிறது அந்த வெள்ளைப் புடவை. அவர் இழந்த நம்பிக்கையை அது மீண்டும் கொண்டுவருகிறது.
அந்தக் கறைபடாத வெள்ளைப் புடவை ஒடுக்குமுறைக்கும் அநியாயத்துக்கும் தனிப்பட்ட முறையிலும், எழுத்தாளராகவும் என்றும் பணியாத ராஜம் கிருஷ்ணன் நமக்குச் சொல்லும் சேதி.
உத்தர காண்டம் நாவலுக்குப் பின் இருக்கும் உத்வேகத்தையும் ஈடுபாட்டையும் நாம் புரிந்துகொள்ளும்போது ராஜம் கிருஷ்ணன் எனும் நபரையும் எழுத்தாளரையும் நாம் புரிந்துகொள்ள ஏலும். விடாமல் எழுதியவர் ராஜம் கிருஷ்ணன். தொண்ணூறு வயதை அவர் எட்ட இருக்கும்போது நினைவு மங்கிய நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் சந்தித்தபோதும் மெலிந்த குரலில் அதே வேகத்துடன் தன் எழுத்து குறித்துப் பேசிக்கொண்டிருப்பார். சில சமயம் தான் ஒரு கதையை எழுதியாகிவிட்டதா எழுத வேண்டுமா என்பதை மறந்துவிடுவார். ஒரு முறை என்னை அவர் வாயருகே குனியச் சொல்லி, “மீன்காரி கதையை எழுதிவிட்டேனா?” என்று கேட்டார். அது எனக்கு மிகவும் பிடித்த கதை. அது அவருக்குத் தெரியும். ஏதோ ஒரு நினைவில் அதை என்னுடன் இணைத்திருக்கிறார். “எழுத இன்னும் நிறைய இருக்கிறது” என்று முணுமுணுப்பாகச் சொல்லுவார் ஒவ்வொரு முறை நான் அவரைப் பார்க்கப் போகும்போதும். இன்று மும்முரமாக விவாதிக்கப்படும் பல விஷயங்களைப் பற்றி அன்றே எழுதியவர் அவர். மேதா பாட்கர் பெரிய அணைகளைப் பற்றிப் பேசும் முன்னரே பெரிய அணைகளைப் பற்றியும் அவற்றைச் சூழ்ந்துள்ள வாழ்க்கை பற்றியும் எழுதியவர். நிறைய நாவல்களும் கதைகளும் எழுதிய பின்னர் தொண்ணூறுகளில் பெண்களின் இன்றைய இழிவு நிலை குறித்தும் காலம்காலமாகப் பெண்கள் நம் பண்பாட்டின் தொன்மங்களிலிலும் இதிகாசங்களிலும் வகித்த நிலையின் நீட்சிதான் இது என்பதையும் விரிவாக எழுத வேண்டியது அவசியம் என்று கருதி தொடர் கட்டுரைகள் எழுதினார். மதம், மத போதகர்கள் பண்பாட்டுக் குறியீடுகளாக இருக்கும் பல பெண் பிம்பங்கள், காந்தி உட்பட பல ஆண் வழிகாட்டிகள் எனப் பலரை ஒட்டி நிற்கும் மாயாவாதங்களை உடைத்துப் போட்ட கட்டுரைகள் அவை. அத்தனை கட்டுரைகள் எழுதிய பின்னும் பெண், பண்பாடு, நாடு இவற்றைக் குறித்து முழுவதும் கூறி முடிக்கவில்லை என்று நினைத்தோ என்னவோ உத்தர காண்டம் நாவலை எழுதுகிறார். எழுதிய அந்தக் கட்டுரைகள் புனைகதை உருவம் பெற்று முழு வீச்சையும் பெறுகின்றன. நம்பிக்கையுடன் முடிகிறது நாவல். தாயம்மா என்று தாயையும் அம்மாவையும் இணைத்த பெயராக இருந்தாலும் தாயம்மா மகன்களைப் பெறுபவள் மட்டுமல்ல. அவள் ராஜம் கிருஷ்ணனின் பிம்பத்தைப் பூண்டவள். அவர் தலைமுறையைச் சேர்ந்தவள்; அத்தலைமுறையின் மனோபாவங்களைக் கொண்டவள். அவள் எல்லாவற்றையும் காக்கப் புறப்படும் உக்கிர அன்னை. தன்னையும் தாண்டிச் சிந்திக்கும் புது யுகப் பெண் அவள். அத்தகைய பெண்கள் தன்னைச் சுற்றிலும் இருப்பதாகப் பெரிதும் நம்பினார் ராஜம் கிருஷ்ணன். உத்தர காண்டம் நாவலை எனக்கு அன்பளிப்பாகத் தந்தபோது ”எதிர்கால மனித சமுதாய நம்பிக்கையை அளிக்கும் பெண் இலக்கியவாதிக்கு, மிக்க அன்புடன்…” என்றெழுதிக் கையெழுத்திட்டவர். தற்கால நிகழ்வுகளில் நான் நம்பிக்கை இழந்து சோர்ந்து விழும்போதெல்லாம் அவர் எழுதியதைப் பார்த்து மீண்டும் மீண்டெழுகிறேன்.
*******
கொழும்பில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிடும் பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகையான நிவேதினியின் இதழ்16, 2014-2015இல் இடம் பெற்றுள்ள கட்டுரை.