‘உடலே இல்லாத ஒரு வெளியில் மிதந்து கொண்டிருந்தோம்’ – பேட்டி

பெண்ணியம் தொடர்பான கேள்விகளுக்கு அம்பையின் எழுத்து வடிவிலான பதில்கள்

தமிழ் நவீன பெண்ணிலக்கியத்தில் அம்பையின் தடம் அழுத்தமானது. அவரது பெண்ணியச் சிந்தனையின் ஆழ்ந்த பயணங்களும் சுயவிசாரணைகளும்தான் பெண்ணியத்தைத் தனது வாழ்க்கையோடு இயைந்த கூறாக முழுமையையும் நோக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் அழைத்துச்சென்றன. அம்பையின் இந்தப் பதில்கள் அந்தப் பயண வழியினூடே ஜன்னல் வழி கண்ட வனக்காட்சிகளின் பதிவுகள்.

உங்களுடைய எழுத்துகளில் ‘பெண்ணியம்’ சார்ந்த கருத்தியல்களைப் பதிவு செய்ய உந்துதலாய் இருந்தது எது?

குறிப்பிட்ட ஒன்று உந்துதலாக இருந்ததாகச் சொல்ல முடியாது. வாழ்க்கை வாழப்படும் விதத்தை நாம் உணர்வது, சொந்த வாழ்க்கையில் செய்யும் தேர்வுகள், ஏற்படும் அனுபவங்கள், சமூகச் சரித்திரம் பற்றிய பிரக்ஞை இவை எல்லாம் ஒரு படைப்பாளியின் பின் உள்ளன. மேலும், கதை எழுதும் போது ‘இந்தக் கதையில் பெண்ணியம் சார்ந்த கருத்தியல்களைப் பதிவு செய்யப் போகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு எழுத முடியாது. கதைகள் அப்படி அமைவதில்லை. கவிதையும் அப்படி அமைவதில்லை என்று உனக்கு தெரியாதா ரேவூ? கண்ணுக்கும் புலப்படாத எல்லைக்கோடுகளுடன் சுயம், வாழ்க்கை, சரித்திரம், அரசியல் எல்லாம் கலந்த ஓர் இடம் வெளிப்பாடு. இது நேரும் போது கதை, கதையாக அமைய வேண்டும். கவிதை கவிதையாக உருவாக வேண்டும் என்ற முனைப்புதான் இருக்க முடியும். குறிப்பிட்ட ஓர் உந்துதல் அல்லது உந்துதல்கள் மட்டுமே ஒரு படைப்பாளியை இயக்க முடியாது.

பெண்ணியக் கருத்தாக்கத்திற்குட்பட்டு நீங்கள் சில முடிவுகளை எடுத்து செயல்படும் போது, அவை சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் கூட சில சமயங்களில் செல்வதுண்டு. அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நான் முடிவுகளை எடுக்கும்போது அந்தத் தருணத்தில், அந்தக் கால கட்டத்தில் நான் சரி என்று நம்புவதைப் பொறுத்து, முடிவுகளை எடுக்கிறேனே ஒழிய அது பெண்ணியக் கருத்தாக்கத்திற்கு உட்பட்டதா என்று சீர்தூக்கி பார்ப்பதில்லை. இதற்குக் காரணம் பெண்ணியக் கருத்தாக்கம் என் வாழ்க்கையில் வெளியே ஒரு கருத்தாக்கமாக மட்டுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை. அது என் வாழ்க்கையில் ஒன்றிக் கலந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். அது பெண்ணியக் கருத்தாக்கம் என்று உணரும் முன்பே நான் சில முடிவுகளை எடுத்தேன். இதற்கு காரணம் ஒரு பெண் எந்த வகையிலும் அவள் கௌரவமானது, மரியாதைக்குரியது என்று கருதும் மட்டத்திலிருந்து கீழே தள்ளப்படக்கூடாது என்பது எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது. நான் எடுத்த எல்லா முடிவுகளும் குழப்பமும் முரணும் இல்லாதவை என்றும் கூற முடியாது. என்னை நானே எடை போட்டுக்கொள்ளும் போது குழப்பமும் முரணும் என்னைப் பாதித்த போது  முடிவுகளை மாற்றியிருக்கிறேன் – அந்த மாற்றத்தின் அத்தனை வலிகளையும் ஏற்றுக்கொண்டு; நான் நம்பும் ஒன்றிற்கான விலையைத் தந்து.

சிறுமியாக இருக்கும் போதே திருமணம் என்ற பந்தத்திற்கும் அதனுடன் வரும் மற்ற விஷயங்களுக்கும் நான் முற்றும் லாயக்கில்லாதவள் என்ற ஓர் உணர்வு ஏற்பட்டுவிட்டது. எனக்கு ஒரு அக்காள் ஒருத்தி இருந்ததால் நான் கூறியதை யாரும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஐம்பதுகளில் வளர்ந்த என்னைப் போன்றவர்கள் மனதில் சமூகசேவை என்ற சொல் மிகவும் புனிதமாகப் படிந்திருந்தது. தியாகம் என்ற சொல் எங்களை வெகுவாக ஈர்த்தது. சுதந்திரம் கிடைத்த பின் வந்த தசாப்தத்தில் நாங்கள் வளர்ந்தோம் என்பதை நீ மறக்கக் கூடாது. எங்கள் பள்ளியில் இருந்த பாதி டீச்சர்கள் படிப்பித்தல் என்பதைத் தங்கள் வாழ்க்கையாகத் தேர்வு செய்து திருமணத்தை ஒதுக்கியவர்கள். சிலர் விதவையான பின் படித்து டீச்சரானவர்கள். தொண்டு, சேவை, தியாகம், நாடு போன்ற சொற்கள் எங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தன. வாழ்க்கை பற்றிய எண்ணங்கள், கற்பனைகள் இதை ஒட்டியதாகவே இருந்தன. எங்கள் கனவு நாயகன் அப்போது தாகூர், ராமகிருஷ்ணார், விவேகானந்தர் இவர்களின் கலவை.நியாயமான கனிவு, கோபம், மென்மை, கலை ஆகியவற்றின் மொத்த உரு. அவன் பெங்காலி. கவிஞன். கலைஞன். நாட்டுக்காக உழைப்பவன். இந்த ஆண் நடுத்தரக் குடும்பங்களில் ஏற்கப்படாதவன், தியாக மனப்பான்மையை ஒட்டிய வேறு கற்பனைகளும் உண்டு. உடல் ஊனமுற்ற லட்சிய புருஷனைச் சக்கர நாற்காலியில் தள்ளியபடி, “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்” என்று பாடியபடி போவது போலவும் கற்பனை செய்ததுண்டு. நளாயினி போன்ற பிம்பங்களில் இருந்து அதிகம் விலகாத கற்பனைகள். மிகவும் வயதான கிழவனை (கிழவனுக்கு வயது ஐம்பது தான். அந்த வயதில் ஐம்பது வயதுக்காரன் எல்லாம் படுகிழம்) மணக்க ஒப்பி, மணவறையிலேயே அந்த கிழவன் மரித்துவிடுவான். ஆனால் அவன் பணக்காரக் கிழவன். அவன் சொத்து அத்தனைக்கும் வாரிசு நான். உடனே விதவையாகி சேவையில் ஈடுபடுவேன்! நீ கூர்ந்து கவனித்தால் அத்தனை கற்பனைகளிலும் உடல் என்ற ஒன்று விலக்கப்பட்டுள்ளது உனக்குத் தெரியும். உடலே இல்லாத வெளியில் மிதந்து கொண்டிருந்தோம்.

இந்த இதமான கற்பனைகளில் இருந்து வெளியே வந்த போது ஒன்று தெரிந்தது. என் காலில் நான் நிற்க வேண்டுமானால் மிகவும் முக்கியமானது கல்வி. அடுத்து வாழ்க்கை பற்றிய பட்டுணர்வு. வீட்டை விட்டு வெளியேற கல்வியை விட நல்ல சாக்கு இருக்க முடியாது. வீட்டை விட்டு வெளியேற கல்வியை நான் பயன்படுத்திக் கொண்டேன். வீட்டில் இதற்கு எதிர்ப்பு இருந்தது. ஒரு முறை வீட்டை விட்டு வெளியேறினால் நான் திரும்ப வர மாட்டேன் என்று அஞ்சினார்கள். அவர்கள் பயந்தது போலவே நான் வீட்டிற்குத் திரும்பவில்லை. வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தேனே ஒழிய என் வாழ்க்கை வீட்டின் வெளியில், என் போக்கில் இருந்தது.

தனியே வாழ்ந்து உலகை எதிர்கொண்ட போது தான் உடல் என்ற ஒன்று பெரும் பிரும்மாண்டமாய் என்னைத் தாக்கியது.எல்லாவித விளக்கங்களையும் தவிர்த்து என் உடலின் மொழியை ஓசைகளை நான் கேட்க முற்பட்டேன். ஒரு சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நான் எழுதிய கதைகள் வேறு மாதிரி அமைந்தன. இந்த காலத்தில் நட்பு பூணுவதில், உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் நான் பல தவறுகளை செய்தேன். நான் சந்தித்த ஆண்கள் என்னைப் போலவே நிறைகுறைகள் உள்ளவர்களாக இருந்தார்கள். பல உறவுகள் முறிந்தன. ஆனால் இவை அத்தனையும் நான் செய்த தவறுகள். அதனால் அவற்றை என்னால் ஏற்க முடிந்தது. அதன் விளைவுகளைச் சந்திக்க முடிந்தது. எனக்கு நானே உண்மையானவளாக இருப்பது எனக்கு முக்கியமாகப்பட்டது. அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்: “இதோ பார் லக்ஷ்மி, உனக்கு நீதான் துணை, சோர்வடையாதே.” என்னைப் பற்றிய பல செய்திகள் வீடு வரை அரசல் புரசலாக எட்டின. ஒரே ஒரு முறை என் அம்மா என்னிடம் சற்று சுற்றி வளைத்து நான் கன்னிதானா என்று விசாரித்தார். “அம்மா, நான் கன்னிதான் என்றால் நீங்கள் நம்பப்போவதில்லை. கன்னி இல்லை என்று சொன்னால் வருத்தப்படுவீர்கள். அதனால் இது பற்றி பேச வேண்டாம்,” என்றேன். “தனியாக இருக்கும் பெண் நெருப்பு போல் இருக்க வேண்டும்” என்றார். “நெருப்பு போல் தான் இருக்கிறேன், என்னைப் பொறுத்தவரை,” என்று கூறி முடித்துவிட்டேன். வீட்டாரை விட வெளியார் செய்த விமர்சனங்களும் கண்டனங்களும் அதிகம். இவர்களில் சிலர் எழுத்தாளர்கள். கவிஞர்கள். இந்த அத்தனை ஆண்டுகளிலும் என்னிடம் தொடர்ந்து நட்பு பூண்டிருந்தவர் ஆர். சூடாமணி. என்னைவிட பெரியவர். இருந்தாலும் அவர் ஏற்காத விஷ்யங்களைக் கூட செவிமடுத்து, என்னை என் போக்கில் வளர விட்டவர். எங்கள் நட்பின் தன்மை மாறியபடியே இருந்தது. காலப்போக்கில், எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் அவருடன் பழக முடிந்தது. இப்பொழுதும் இந்த நட்பு என் வாழ்வில் ஒரு இளைப்பாறும் இடமாகவே இருக்கிறது.

ஆண்கள் பெண்களுக்கு (பெண் சமுதாயத்திற்கு) எதிராக இழைத்த கொடுமைகளில் மிகவும் குரூரமானது என்று எதை நினைக்கிறீர்கள்?

ஆண்வழி சமுதாயம் அதில் தொக்கி நிற்கும் மதிப்பீடுகள் இவைதான் பெண்களுக்குக் கொடுமை இழைத்திருப்பதாக நான் நினைக்கிறேன். பெண்ணின் உடலும், அதை ஒட்டிய தேர்வுகளும் பெண்ணின் வசம் இல்லாமல் இருப்பதுதான் ஆண்வழிச் சமுதாயம் இழைத்திருக்கும் குரூரம் என்று நினைக்கிறேன். இச்சையிலிருந்து தாய்மை வரை பெண்ணின் உடல் அவள் ஆளுமையில் இல்லாமல் இருப்பது, அவள் உடலை மற்றவர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப விளக்கிக்கொள்ள அனுமதி அளிக்கிறது.

இன்றையத் தமிழ்ச்சூழலில் பெண்களின் எழுத்துக்கள் எந்த அளவிற்கு உண்மையாக உள்ளன?

உண்மையாக இருப்பது என்றால் என்ன குட்டி? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா? சுற்றியுள்ள் யதார்த்தத்திற்கா? எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பது என்று நினைக்கிறாயா? போலி இல்லாத எழுத்து என்று நீ சொல்ல நினைக்கிறாய் என்றால் எது போலி, எது உண்மை என்பதை பாகுபடுத்த காலம்தான் உதவ முடியும். மேலும் சில சமயம் ஒரு வெளிப்பாட்டின் போலித்தனத்தை நம் நுண்ணுணர்வால் மட்டுமே நாம் உணர முடியும். ‘உண்மை’ என்று நீ நினைப்பது ‘சந்தையுடன் உடன்படாமை’ என்ற அர்த்தத்தில் நீ சொல்லி இருந்தால், இது ஆண், பெண் இருவர் எழுத்துக்கும் பொதுவான அளவுகோல் இல்லையா? இந்த அளவுகோல் மிகவும் ஒழுக்க உணர்வை ஒட்டி இருக்கிறது. இதை நாம் வேறு மாதிரி பார்க்கலாம். இன்றையச் சூழலில் பெண்களின் எழுத்தின் மொழியும், உள்ளடக்கமும் எவ்வளவு தூரம் அவர்களின் சுயதேர்வாக இருக்கிறது? விருதுக் கெடுபிடி, பிரசுரிப்பதற்கான கெடுபிடி, புகழுக்கான கெடுபிடி, இவை எல்லாம் இல்லாமல் வெளிப்பாடு ஒன்றையே குறியாக கொண்டுள்ளது என்று வேண்டுமானால் பார்க்க முடியும். ஆனால் இதுவும் பால்தன்மை அற்ற ஒரு அளவுகோல்தான். ஏனென்றால் வாழ்க்கையில் உள்ள ‘உண்மைகளை’ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். மேலும் இந்த உண்மையின் தன்மை மாறியபடியே இருக்கிறது, நம் வாழ்வில். அழகியநாயகி அம்மாளின் குடும்பச் சரித்திரம் நமக்கு இலக்கியமாகப் படுவதற்கு காரணம், அது உண்மையை கூறுவதனால் மட்டுமல்ல.சில உண்மைகளை கூறி சிலவற்றைக் கூறாமல் விடுவதனாலும்தான். அதாவது உண்மையை அது அணுகும் முறையினால் அது இலக்கியமாகிறது. உண்மையான காதல் கடிதங்களை உண்மையாகவே வெளியிட்டுக் கொள்கிறார்கள் சிலர். அதில் துளிக்கூட உண்மை இல்லை என்று எனக்குப் பட்டது. அதை எழுதியபோது அது இலக்கியமாகலாம் என்ற உணர்வுடன் வெகு கவனத்துடன், ‘குப்பைகளை’த் தவிர்த்து எழுதப்பட்டதால் அக்கடிதங்கள் எழுதப்பட்டபோதும் பொய், பிரசுரிக்கப்பட்டபோதும் பொய் என்றே எனக்கு தோன்றியது. அக்கடிதங்களின் மொழி நேர்த்தியாக இருந்தது என்றும், அவை காதல் கடிதங்களுக்கு ஓர் உதாரணம் என்றும் சில பேர் என்னிடம் சொன்னார்கள். அக்கடிதங்களில் வழக்கமான தனிமை போன்ற் சங்ககால விஷயங்கள் இருந்தனவே ஒழிய, காதலின் உத்வேகம், இச்சைகள், கோபதாபங்கள், அதீதம் என்று எதுவும் இருக்கவில்லை. இவை எல்லாம் இருந்தால்தான் காதல் என்று காதலை நான் காதலை ஒரு விளக்கத்திற்கு உட்படுத்துகிறேன் என்று நினைக்காதே. ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு மாதிரி உணர்கிறோம் இல்லையா? அந்த உணர்வின் வெப்பமும், தண்மையும், சுடுமூச்சும், தகிப்பும், சுகமும் நபருக்கு நபர் மாறுபடுகிறது, இல்லையா? அந்த காலகட்டத்தின் மற்ற நிகழ்வுகளும் அதில் கலக்கின்றன, அல்லவா? அவற்றை நாம் எப்படி மொழி ஆக்குகிறோம் என்பது தானே இலக்கியம். அவற்றின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும் உணர்வுகளை இலக்கியமாக்குகிறது. இந்த வெளிப்படை-மறைப்பு இவற்றின் கண்ணாமூச்சி விளையாட்டுதான் இலக்கியம். ஒரு கடிதம் எழுதும்போது நாம் இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி வலிந்து நினைத்து எழுதும்போது அது எழுதப்படும் கணத்தில் பொய்யாகவும், பிரசுரிக்கும்போது இன்னொரு பொய்யாகவும் மாறிவிடுகிறது என்றே நினைக்கிறேன்.

தான் நினைப்பதை, உணர்வதை அப்படியே வெளிப்பாடாக்கலாம். ஆக்கியிருக்கிறார்கள் சிலர். அதைப் படிக்க முடிவதில்லையே! அனுபவத்திற்கும், வெளிப்பாடிற்கும் இடையே அனுபவத்திலிருந்து பிறந்த, அதை நினைவூட்டும், அதன் பொழிவாக ஆனால் முற்றிலும் வேறு தோற்றத்தில் மாறும் ஒரு உருமாற்றம் நேர்கிறது. நவீன ஓவியம் மூலத்தைச் சுட்டிக்காட்டி – ஆனால் மூலத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டு இருப்பதைப் போல- அதை ஒவ்வொருவரும் அவரவர் புரிதலுக்கேற்ப அர்த்தப்படுத்திக்கொள்கிறோம் இல்லையா? ‘ஓ, எனக்கு இது புரிகிறது, இது எனக்கு நேர்ந்திருக்கிறது அல்லது இந்தத் தேர்வை என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது’ என்று அதனுடன் ஒன்றுகிறோம் இல்லையா, அத்தகைய அனுபவத்தை நீ ‘உண்மையான இலக்கியம்’ என்று அடையாளமிடும் இலக்கியம் செய்யும். நவீன ஒவியத்தில் நுழையப் பல கதவுகள் இருப்பது போல் இதற்கும் உண்டு. வண்ணம், கோடு, கீற்று, வடிவம் என்று எதையாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு ஓவியத்தினுள் நுழைந்துவிடலாம். இசையிலும் அப்படிதான். ஆதார ராகம் பற்றி எதுவும் தெரியாமலே கூட, அதனுள் முங்கலாம்.  சுருதியின் சுத்தம், ஸ்வரங்களின் விஸ்தரிப்பு என்று பல உண்மைகளை அது உருவாக்கிக் கொண்டே போகிறது. இலக்கியமும் இதைச் செய்கிறது.  இப்படித்தான் நான் அதைப் புரிந்து கொள்கிறேன்.

ஆண்களின் எழுத்துக்கும் பெண்களின் எழுத்துக்கும் அடிப்படையாக உள்ள வித்தியாசங்கள் என்ன?

எனக்குத் தெரியவில்லை. ரேவூ! அடிப்படை என்ற சொல்லும் எனக்கு உடன்பாடு இல்லை. அடிப்படை என்ற சொல்லும் எனக்கு உடன்பாடு இல்லை. அடிப்படை என்ற சொல் நேராக உடலைப் போய் முட்டும் சொல். ஒரு வகை உடல் இருப்பதால் ஒரு வகை மொழி பிறக்கிறது என்று வலியுறுத்தும் சொல். இவைதான் வித்தியாசங்கள் என்று நான் ஒன்று, இரண்டு மூன்று என்று பட்டியலிட்டால் அது இருவகை வெளிப்பாட்டை மட்டுமல்ல, இருவகை உடல்களையும் குறுக்குகிறது. ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு காலத்தில், வேறுவேறு வகையில் உணரும் ஒன்றை, ஓர் இலக்கணத்திற்கு, விளக்கத்திற்கு உட்படுத்திக் கட்டிப் போடுகிறது. இது எனக்கு உடன்பாடில்லை. எல்லைகள் என்றும் என்னிடம் எதிர்ப்புணர்வையே உண்டாக்குகின்றன. ஆனால் பெண்ணாக வாழ்வதால், பெண் என்ற நிலையிலிருந்து எழுதுவதால் ஒருவித மொழி பிறக்கலாம். சில உதாரணங்களைச் சொல்கிறேன்.  என் ஆராய்ச்சிக்காக நான் பல பெண்களின் கதைகளைப் படிக்க நேர்ந்தது. ஆண்களுடையதையும் படிக்க நேர்ந்தது. சில விஷயங்கள் என்னைச் சிந்திக்க வைத்தன. நிறம், வடிவம் போன்ற விஷயங்கள். ஆண்களை விவரிக்கும் போது அவர்களுக்கான உபமானங்களாக தேக்கு மரம்,  உலக்கை, பாறாங்கல் போன்றவை இருந்தன.  ஆண்கள் எழுத்தில் அதேசமயம் பெண்கள், கொடிகள், மிரளும் மான், பூக்கள், பழங்கள் என்று சித்தரிக்கப்பட்டனர். வேர்கள் ஆழப் புதைந்தும் கனத்துடன் கூடியும் உள்ள பொருட்கள் ஆண்களைக் குறித்தன. எடை இல்லாமல் மற்றவற்றைச் சார்ந்து, மற்றவர்களுக்குக் களிப்பும் சுகத்தையும் தரும்  பொருட்கள் பெண்களுக்கு உவமை ஆகின. நிறத்தைப் பொறுத்தவரை  சிவந்த அல்லது சந்தன நிறம் உடைய பெண் தான் அழகு என்று சொல்லப்பட்டாள் . “அவள் கறுப்பு ஆனாலும்  அழகு” என்ற விவரணை சாதாரணமாகப் பல கதைகளில் இருந்தது.  இதில் விஷயம் என்னவென்றால் பல பெண்களும் தங்களை அப்படியே விளக்கப்படுத்திக்கொண்டார்கள். அப்படி அவர்கள் விளக்கப்படுத்திக் கொண்டதும் அவர்கள் சமுதாயச் சார்பு  நிலையையே எனக்குச் சுட்டிக்காட்டியது. அந்தச் சார்பு நிலையை ஒட்டியே மொழியும் அமைந்தது என்று தோன்றியது, வேறு சில உபமானங்களும் சுவையாக இருந்தன. ஒரு பெண் எழுதும் போது ‘மனம் பால் போல் பொங்கியது’ அல்லது ‘உலை நீர் போல் கொதித்தது’ என்று இயல்பாக உவமைகள் வந்தன. ‘கடல் போல் அவள் மனம் ஆர்ப்பரித்தது’ அல்லது ‘அருவி போல் பொங்கியது’ போன்ற உவமைகள் பெண்கள் எழுத்தில் அதிகம் காணக் கிடைக்கவில்லை, பட்டுக்  கருநீலப் புடவை அணிந்த பெண் கூட ஆகாயத்துடன் அதை ஒப்பிடவில்லை. இரவில் ஆகாயத்தை பல மணி நேரம் வெறித்து பார்த்திருந்தால் அப்படி ஒப்பிட்டிருப்பாளோ என்னவோ?

பல ஆண்கள், பெண்களை சுவைக்கும் ஒன்றாக பார்த்தனர். உதடுகள் கோவைக் கனி, கண்கள் திராட்சைப் பழம் , முலைகள் மாம்பழம் என்று எல்லாம் ஒரே சாப்பாட்டு சமாச்சாரம் தான்! மணியன் ஒரு கதையில் திருமணமாகாத முதிர்கன்னியை ஊசிப் போன பண்டம் என்று வர்ணிப்பார். பெண்கள் எழுத்தில் ஆண்களைச் சாப்பிடும் வகையில் எதுவும் இல்லை. அவர்களுக்கு விருந்து படைக்கும் வைபவம் தான்.’பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் ஒரு கதாபாத்திரம்,, தனியாக இருக்கும் ஓரு பெண் பாலூட்டும் இரு முலைகளையுடைவளாகவும் பல பெண்கள் கூடி இருக்கும் போது அவர்கள் பெருச்சாளிகள் போல் இருப்பதாகவும் கூறுவார். ஊட்டும் தொழிலைத் துறந்து விட்டால் பெருச்சாளிகளாவதுதான் வழி போலும்.

இருப்பு, உலகம், வாழ்க்கை, சமூகம் இவை பற்றிய உணர்வு நிலையை ஒட்டியே வெளிப்பாடு அமைகிறது. பல ஆண் எழுத்தாளர்கள் பெண் வாழ்க்கை பற்றி, அவர்கள் உணர்வுகள் பற்றிச் சிறப்பாகவே எழுதி உள்ளார்கள்.இதற்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு. பெண் வேடம் போட்ட ஆண் நடிகர்களுக்குச் சற்று அதிகப்படியாக பெண் ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது. ‘தத்ரூபமாய் பெண்ணாகவே இருக்கிறானே’ என்ற விமர்சனத்துக்கு தங்களை தகுதியாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பால கந்தர்வா போன்ற ஆண்  நடிகர்கள் பெண்களுக்கான மோஸ்தர்களை கூட உண்டாக்கினார்கள் என்பார்கள். ஆன் உருவாக்கின பெண்ணாய் பெண் மாறி அதை தன இயல்பாக்கி கொள்வது என்பது எத்தனை படிமங்களில் பெண் உருவாகிறான் என்பதை தெளிவாக்குகிறது. இந்த தத்ரூபமான பெண்ணாக மாறும் மிகை, அந்த முனைப்பு வலியுறுத்தல் இவற்றை ஒரு ஆண் எழுத்தில் நாம் காண முடியும். ஒரு பிச்சைக்காரன் தன்னை பற்றி எழுதினால் தன் அழுக்கு சால்வை பரட்டை தலை வளைந்த நகம் இவற்றை பற்றி எழுத மாட்டான். அவை அவனுக்கு இயல்பானவை, அன்றாட வாழ்க்கையுடன் பிணைந்தவை.ஆனால் அவன் வாழ்க்கை பற்றிய ‘உண்மையை’ எழுத விரும்புகிறவர்கள் இதை எழுதாமல் விட முடியாது. பெண்கள் சில விஷயங்களை எழுதாமல் தவிர்த்ததற்குக் காரணம் அவற்றை உணராததால் அல்ல. அவை அவர்களுக்கு மிக அருகே இருந்ததால், அவற்றை நோக்க முடியாமல் போனதுதான் என்று நினைக்கிறேன்.

பெண்ணியம் என்பது பெண்ணின் உடல் சார்ந்தது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

பெண்ணியம் என்பது பெண்ணின் உடல் சார்ந்தது அல்ல. உடல் பற்றிய பட்டுணர்வைச் சார்ந்தது. உடல் சமுதாயத்தில் ஆக்கிரமிக்கும் இடத்தைச் சார்ந்தது. காலம், சரித்திரம் இவற்றால் தொடப்படாத உடல் இல்லை. பெண் உடல், குழந்தை உடல், இளம் பெண் உடல், தாயின் உடல், தாயாகாத உடல், வயோதிக உடல், நோய்வாய்ப்பட்ட உடல், ஆரோக்கியமான உடல், உடலுக்கான இன்பங்களை அனுபவித்த உடல், அவற்றைத் தவிர்த்த உடல், சாதி அடையாளம் உள்ள உடல், பலாத்காரத்திற்கு உட்பட்ட உடல் என்று உடல்கள் பலதரப்பட்டவை. உடல் பற்றிய உணர்வுகளும் பலதரப்பட்டவை. எந்த வித வித்தியாசமும் அற்ற ஒற்றை உடலாய், ஒரே குணங்கள் உடையதாய் பெண் உடலைப் பார்ப்பது சரித்திரத்தைப் புறக்கணிக்கும் செயல். ஹெலன் ஸிஸ்யூ போன்றவர்கள் உடலில் ஊறும் ரசங்களால் எழுதுவது – பால், மாதவிடாய் குருதி போன்றவை – என்று கூறும் போது அதை ஒரு எதிர்வினைச் செயலாகவே நோக்க வேண்டும். அதாவது ‘இது தான் பெண் என்று நீ என்னைக் குறுக்கினால் அதையே ஒரு பிரும்மாண்டமாக்கி காட்டுகிறேன் பார்’ என்று கூறும் செயலாக அதை பார்க்கலாம். ஆனால் அதில் ஏற்கனவே கருப்பையை மையப்படுத்தி அடையாளப்படுத்திய பெண் உடலில் மீண்டும் புகுந்தது கொள்ளும் அபாயம் இருக்கிறது. அந்த குறுக்கலை ஏற்கும் நிலை இருக்கிறது. அது மட்டுமல்ல, இதுதான் நான் என்று அடையாளப்படுத்திக் கொண்டு நிலைப்பட்ட பின், அது இல்லாத மற்ற உடல்களை ஒதுக்கும் உதாசீனம் இருக்கிறது. பால் இல்லாத, மாத விடாய்க் குருதி நின்று போன பெண்கள் எதைக் கொண்டு எழுதுவார்களாம்? இப்படிப் பெண்ணின் உடலைக் குறுக்குவது இது வரை இருந்த விளக்கங்களுக்கு உள்ளேயே பெண்ணைக் குறுக்கும் செயல் தான். ஒரு காலகட்டத்தில் பனிக்குடத்தைப் பிரதான படுத்துவது தவறு அல்ல. ஆனால் பனிக்குடமே பெண் உடல் அல்ல.  பனிக்குடமே இல்லாத, பனிக்குடத்தைச் சுமக்காத ஏகப்பட்ட பெண் உடல்கள் உண்டு. புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு முலைகளை இழந்த பெண்கள் உண்டு. ஒரு வகை உடலையோ, ஒரு அங்கத்தையோ நாம் பிரதானப்படுத்தும் போது சிலரை கூட்டிக் கொண்டு, சிலரை ஒதுக்குகிறோம். பெண் உடலை மறுவாசிப்பு செய்யலாம், அவரவர் பட்டுணர்வை ஒட்டி. அப்போது தான் அதன் லட்சக்கணக்கான அர்த்தங்களும் அழகுகளும் வெளிவரும். அழகு என்பதன் அர்த்தங்கள் மாறும். பெண் உடல் அதற்குரிய சரித்திர இடத்தைப் பெறும். அதன் தகுதியைப் பெறும் . உன் கவிதைகளில் நீ இந்த மறுவாசிப்பை மிக நேர்த்தியாகச் செய்கிறாய். உடலை ஒரு வெளியாக்கி அதில் பயணம் போகிறாய். முலைகளை இன்னும் ‘சிந்தாமல் தளும்பும் கண்ணீர்த் துளிகள்’ என்கிறாய். இப்போது கண்டனம் செய்யப்பட்டுள்ள அத்தனை பெண் கவிஞர்களும் இந்த மறுவாசிப்பை அவரவர் உடல் பற்றிய பட்டுணர்விற்கேற்பச் செய்திருக்கிறார்கள். இவை மிகவும் முக்கியமானவை, சரித்திரம் படைப்பவை.

இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் oral history documentation எந்த வகையில் எதிரொலிகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்? இதற்கு முன் இது போன்ற பெண்ணின் சித்திரங்களும் சரித்திரங்களும் பதிவு செய்யப்படாமல் இருந்ததற்கான அரசியல் காரணம் என்ன?

oral history documentation இதுவரை எழுதப்படாத சரித்திரத்தை வெளிக்கொணரும் ஒரு முயற்சி தான். பெண்களின் வாழ்க்கை என்பது எவ்வளவு வகைப்பட்டது, அவை படைக்கும் சரித்திரம் எத்தகையது என்பதைக் கூறும் முயற்சி. இத்தகைய சரித்திரங்கள் நம் வாழ்க்கையில் உள்ள பலவகைத் தேர்வுகள், தீர்மானங்கள், முடிவுகள், கற்பனைகள், செயல்பாடுகள் இவற்றை நாமே தொடர்ந்து தெரிந்து கொள்ள உதவும் என்று நினைக்கிறேன். நம் சொந்தச் செயல்பாடுகளைக் குறித்து அடக்கம் பயில நமக்கு உதவும் என்று நினைக்கிறேன். இதற்கு முன்பு இத்தகைய பதிவுகள் செய்யப்படாததற்கு காரணங்கள் தெள்ளத் தெளிவானவை. ’72 இல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஆராய்ச்சியை நான் மேற்கொண்ட போது “உங்களுக்கு வேறு முக்கியமான விஷயங்கள் எதுவும் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்கள். பெண் சம்பந்தப்படட எதுவுமே முக்கியம் இல்லாதது என்றே கருதப்பட்டது. கருதப்படுகிறது. இப்போதும் நாங்கள் சில பெண்களைப் பேட்டி காணப் போகும் போது அவர்கள் வீட்டார் அல்லது சுற்றி உள்ளவர்கள் ‘இவள் என்ன செய்துவிட்டாள் என்று இவரைப் பேட்டி காண்கிறீர்கள் ?” என்று கேட்பது உண்டு. அந்தப் பெண் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாம். அல்லது நில உரிமைக்குப் போராடிய ஒரு ஆதிவாசியாக இருக்கலாம்; அல்லது எழுத்தாளராக இருக்கலாம்.

தொடர்ந்து நடக்கும் ஏய்ப்பு இது. இப்போதும் நாங்கள் செய்வது மேம்பாடடைச் சேர்ந்த செயலாகக் கருதப்படவில்லை. மேம்பாடு என்றால் எண்ணிக்கையில் சேர்க்கக் கூடியவற்றை விநியோகம் செய்வது.

நீங்கள் வெகுஜன பெண் எழுத்துக்களையும் தீவிர இலக்கியம் சார்ந்த பெண் எழுத்துக்களையும் வேறுபடுத்திப் பார்க்காமல், பெண்கள் எழுத்துச் சூழலுக்கு வருவதே முக்கியமென்று நினைப்பது ஆச்சரியமாக உள்ளது. இதற்கு காரணங்கள் என்ன?

இந்த கேள்வி என்னை ஆச்சரியப்படுத்துகிறது. பெண்கள் எழுத்துச் சூழலுக்கு வருவது மிக முக்கியம் என்று நான் கட்டாயம் நினைக்கிறேன்.ஆனால் அவர்கள் எழுத்தை எடை போட அது ஒன்றே தகுதி என்று நான் எப்போதும் கூறியதில்லையே! ஒரு பெண் எழுத்துச் சூழலுக்கு வருவது என்பது ஒரு சரித்திர நிகழ்வு. சுயமாக விதித்து கொண்ட, மற்றவர் விதித்த பல தடைகளை மீறி வெளிப்பாடு எனும் பிரதேசத்திற்கு வருகிறாள் ஒரு பெண்.அந்த செயல் பாராட்டிற்குரியது. உற்சாக படுத்த வேண்டியது.ஆனால் இந்த கஷ்டங்களைப் பட்டதாலேயேஅவள் எழுத்து உயர்ந்துவிடாது. தரத்தைப் பொறுத்தவரை துன்பத்திற்கும் வெளிப்பாட்டிற்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. தாங்க முடியாத சோகங்களை அனுபவித்து விட்டு, தாங்க முடியாத இலக்கியங்களைப் படைத்தவர்கள் இருக்கிறார்கள். எழுத்தின் தரத்தை எடை போடும் போது எழுத்தாளரின் வாழ்க்கைச் சரித்திரத்தை ஒரு அளவுகோலாகக் கொள்ள முடியாது. ஆனால் அந்த வாழ்க்கைச் சரித்திரம் ஒரு சரித்திரக் கண்ணியாகக் கட்டாயம் இருக்கும். ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு கன்னடப் பெண் எழுத்தாளரைநாங்கள் பேட்டி கண்டோம். அவர் வாழ்க்கையில் அவர் படாத இன்னல்களே  இல்லை. பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார். கையில் பணமும் இல்லாத ஏழ்மை. விதவை. எழுத்து என்ற ஒரே விஷயம்தான் அவரை உயிருடன் வைத்திருக்கிறது என்றார். மாபெரும் இலக்கியம் எதுவும் அவர் எழுதி விட வில்லை. ஆனால் எழுத்து என்ற ஒன்றை அவர் தேர்வு செய்தது ஒரு சரித்திர நிகழ்வு. அவர் கதைகளைப் பற்றி என் கருத்தைக் கேட்டால் அதை நான் கதைகளை வைத்துதான் செய்ய முடியும். துன்பப்பட்டதற்காக எந்த சலுகைகளையும் தரமுடியாது. அப்படித் தருவது அவருக்கு நான் இழைக்கும் ஓர் அவமானமாகவே கருதுகிறேன். எனக்குத் தெரிந்த ஓர் எழுத்தாளரை ஒரு விமர்சகர் வெகுவாகப் புகழ்ந்து கூறுவார். ஒருமுறை “பாவம், அவங்க உடல்நிலை சரியாக இல்லாமல் இருப்பவராம், அவரைக் கடுமையாக விமர்சிக்க விரும்பவில்லை,” என்று கூறியிருக்கிறார். “இதை விட அதிகமாக அவர் என்னை அவமதித்திருக்க முடியாது. கடுமையான விமர்சனங்களை என்னால் ஏற்றிருக்க முடியும், அவர் புகழ்ந்ததை ஏற்க முடியவில்லை,” என்று அந்த எழுத்தாளர் என்னிடம் கூறினார் ஒருமுறை.

எழுத்தை சமூகச் சரித்திரத்தின் ஓர் அம்சமாகப் பார்ப்பதற்கும், இலக்கியமாகப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, பெண்ணே !

மற்ற மொழி மாநிலங்களில் உள்ள இலக்கியச் சூழலைப் போல் தமிழ்ச் சூழலில் இணக்கம் இல்லாததற்கு காரணம் என்ன? ஓர் இலக்கியவாதிக்கும் மற்ற இலக்கியவாதிக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கிறதே!

பல காலமாக அது அப்படித்தான் இருக்கிறது. மற்ற மொழி மாநிலங்களிலும் இது உண்டுதான் என்று நினைக்கிறேன். ஒரு மட்டம் வரை இலக்கியச்  சண்டை சுவையாகத்தான் இருக்கிறது. மிகவும் கொச்சையான மொழியில் தெருச் சண்டை அளவுக்கு அது போகும் போதுதான் தாங்க முடியவில்லை. இலக்கியவாதி என்று கூறிக் கொள்ளும் சிலருடன் இணக்கம் ஏற்படாமல் இடைவெளி இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

பேட்டியாளர்: குட்டி ரேவதி

[பனிக்குடம் பத்திரிகையின் 3 ஆம் இதழில் மார்ச்-ஏப்ரல், 2004 இல் வெளியான கட்டுரை]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.