இதழ் 200- பதிப்புக் குறிப்பு

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 200 ஆவது இதழ் இது. சுமார் பத்தாண்டுகளில் மாதமிரு பத்திரிகையான இது இந்த எண்ணிக்கையைச் சரியான நேரத்தில் வந்தடையவில்லை. சில இதழ்களைப் பிரசுரிக்கத் தவறினோம், சிலவற்றை இணைத்து ஒன்றாக, இந்த இதழைப் போல, சிறப்பிதழாகப் பிரசுரித்தோம் – கணக்கு இப்படி நேர அட்டவணையிலிருந்து பிசகி ஒரு வழியாக 200 ஐ எட்டி இருக்கிறது.  

நேர அட்டவணையிலிருந்து மட்டுமல்ல, வலையிலிருந்தே சொல்வனத்தை அகற்ற யாரோ முகமறியா நபர்கள் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தகவல்களையும் வலைத்தளத்திலிருந்து அழித்தார்கள். சென்ற அக்டோபர் மாத இறுதியில் நடந்த அற்பத்தனம் இது.

லாபநோக்கு இல்லாத, வாசகர்களுக்கு இலவசமாகப் படிக்கக் கொடுக்கப்படுகிற ஒரு பத்திரிகையின் மீது தாக்குதல் தொடுக்க வேறேதோ காரணங்கள் இருந்திருக்க வேண்டும். இதைச் செய்தவர்கள் யாராயினும் அவர்கள் சிறுமையைத் தவிர வேறேதும் தம்மில் கொள்ளாத மனிதர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

இந்தச் சிறுமையின், வன்மத்தின் தாக்குதல் ஒரு முறை அல்ல, மூன்று முறைகள் நடந்தது. கணிசமான பொருட்செலவுக்குப் பிறகே எங்களால் தளத்தை மறுநிர்மாணம் செய்ய முடிந்தது. இதற்கு மூன்று மாதத்துக்கும் மேலாக ஆயிற்று. நவம்பர், டிசம்பர் 18, ஜனவரி/பிப்ரவரி/மார்ச் 19 வரை சுமார் 8 அல்லது 9 இதழ்களைக் கொணர முடியவில்லை.

ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இதழுக்கு மறு உருவாக்கம் செய்து மேலும் பொலிவாகக் கொணர்ந்திருக்கிறோம்.

***

இப்படி ஒரு வன்மம் பொங்கும் சூழலில் 10 ஆண்டுகள் தாக்குப் பிடித்தது மட்டுமல்ல, அனேகமாகத் துவக்கத்தில் இருந்த அதே தரத்திலோ, அல்லது அதை விட மேலான தரத்திலோதான் நிறைய இதழ்களைக் கொடுத்திருக்கிறோம்.

எழுதுவோருக்கும், நடத்துவோருக்கும் எந்த சன்மானமும் கொடுக்காத பத்திரிகை, விளம்பரங்கள் இல்லாத பத்திரிகை, படிப்பவர்களை உளவு பார்க்காத பத்திரிகை, மொத்தத்தில் இன்றைய முழு மூச்சு வணிகம் சூழ்ந்த புலத்தில் அதை எதிர்த்து அல்லது அதில் பங்கெடுக்காமல் செயல்படும் பத்திரிகை இது.

அதுமட்டுமல்ல, தமிழ் நாட்டின் சாபக்கேடான ஜாதி அரசியல், மத அரசியல், கருத்து ஊழல்கள், ஆளுமை வழிபாடுகள், பெண்களை இழிவு செய்யும் கவர்ச்சிப் பட மலினம், கருத்தளவில் ஓட்டைப் படகில் பயணம் செய்து கொண்டு, நாட்டை, மக்களை, குறிப்பிட்ட சமூகக் குழுக்களை மட்டும் தாக்கும் இனவெறி அரசியல் போன்ற மனநோய்களோ, தொற்று நோய்களோ தாக்காத கருத்து வெளியாக இந்தப் பத்திரிகையை நடத்தி வருகிறோம்

அது ஒன்றே போதுமா என்றால், போதாது. அதனாலேயே தொடர்ந்த தர முன்னேற்றம், கள விரிவுபடுத்தல், கருத்து ஆழப்படுத்தல், பரந்த பார்வைகளுக்கும், தீர்க்க சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்தல் என்று பற்பல விதங்களில் பத்திரிகையை மேம்படுத்தத் தொடர்ந்து முயல்கிறோம்.

இத்தனையும் தன்னார்வலர்கள் மட்டுமே கொண்ட ஒரு குழுவினரால் நடக்கிறது. அக்குழுவினரின் பெயர்களோ எங்கும் விளம்பரப்படுத்தப் படுவதில்லை. இந்தப் பத்திரிகை மூலம் ஒரு ஆதாயமும் தேடாத தன்னடக்கம் கொண்டவர்கள் இக்குழுவினர்.

இவர்களுக்கு இந்த இதழில் இந்தக் குறிப்பின் மூலம் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதற்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையாகவே அரிய மனிதர்கள் இவர்கள். இவர்களுடன் சேர்ந்து இயங்க இப்படி ஒரு வாய்ப்பு, இத்தனை ஆண்டுகளுக்குக் கிட்டியது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

துவக்கத்திலிருந்த குழுவினர்கள் சிலர் தம் வாழ்க்கையின் அழுத்தங்கள், வேலைப் பளு ஆகியவற்றால் பின்னொதுங்கினார்கள் என்றாலும், அவர்கள் இன்னமும் குழுவின் பின்னணியில் இருப்பதோடு அவசரத் தேவைகள் அல்லது சிக்கல்கள் எழுந்தால் அழைப்புக்குச் செவி மடுத்து வந்து உதவுபவர்களாக இருப்பது இன்னொரு பாக்கியம்.

இவர்களுக்கும் எங்கள் நன்றி.

யாருடைய பெயரையும் சொல்லாமல் நன்றி சொல்வதில் என்ன பயன் என்று கேட்டால், யாருக்குப் போக வேண்டுமோ அவர்களுக்குத் தெரிகிறது அது போதாதா என்பேன்.

இனி இந்த இதழ் பற்றி.

சென்ற வருட த்தின் நடுவிலேயே யோசிக்கத் துவங்கினோம். இதைத் திருநெல்வேலி சிறப்பிதழாகக் கொணரத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்தத் திட்டம் கொந்தர்கள் (hackers) நடத்திய அற்பத் தாக்குதலால் கைவிடப்பட்டிருந்தது. முன்பு வருடந்தோறும் ஒரு எழுத்தாளருக்கு ஒரு சிறப்பிதழ் கொண்டு வந்திருக்கிறோம். அதை 2019 இன் துவக்கத்தில் செய்ய நினைத்திருந்தோம், அந்த இதழாக 200 அமைந்தது.

அம்பை அவர்களை மையம் கொண்ட இதழாக இதை ஆக்கத் திட்டமிட்டபோது அதற்குக் கடும் எதிர்ப்பு வந்தது. அது எங்களுக்கு வியப்பை அளித்தது. இத்தனை கசப்பு, இத்தனை விலகலா என்றுதான் வியப்பு. அந்த எதிர்ப்பு பூராவும் எங்களை இந்த முயற்சியைக் கைவிடச் சொல்லிச் செய்யப்பட்ட வற்புறுத்தல்கள். செய்தவரோ நண்பர் மட்டுமல்ல, சிறப்பிதழின் நாயகியே அவர்தான்.

அம்பைதான் அத்தனை எதிர்ப்பு தெரிவித்தவர்.

கடைசியில் நாங்கள் பிடிவாதம் பிடிப்பதைப் பார்த்து, ’இதெல்லாம் ஒண்ணும் உருப்படாது, நீங்களே தெரிஞ்சுப்பீங்க, நல்லதைச் சொன்னேன், கேட்கல்லைன்னா என்ன செய்ய முடியும்,’ என்று கை கழுவி விட்டார். அதற்குப் பிறகு சில வாரங்கள் தொடர்ந்து பேசி, எழுதிச் செய்த முயற்சிகளுக்குப் பின்னர் ஒத்துழைக்க முன் வந்தார். பத்து பதினைந்து நாட்கள் முன்பு கூட இது வேண்டாமென்று கைவிடச் சொன்ன விபரீதமான நபர் அம்பை.  இந்த எதிர்ப்பு ஒன்றும் தன்னடக்கம் அல்லது கூச்சத்தால் வந்தல்ல. தன் பல பத்தாண்டு உழைப்பு, இயக்கத்தின் மதிப்பை நன்கறிந்தவர் அவர். அதை உருப்பெருக்கியும் அவர் புரிந்து கொள்ளவில்லை, சுருக்கியும் பார்ப்பதில்லை. இந்தியச் சூழலில் தன் முயற்சிகளுக்கான அவசியம், அதன் தாக்கம் போன்றனவற்றை மனதில் கொண்டுதான் அவர் தொடர்ந்து இயங்குகிறார்.

அந்த இயக்கத்திலிருந்து தனக்கான ஆதாயம் தேடாதவர் என்பதாலும், இன்னும் சரியான அங்கீகாரம் பெறாதவர்கள் தமிழ் எழுத்துலகில் பலர் உள்ளனர் அவர்களுக்கு இந்த கௌரவத்தைக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தாலும் இப்படி மறுப்பு சொன்னார் என்பது இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி, தமிழக எழுத்துலகில் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறோம் என்ற அபிப்பிராயமும் அவரிடம் இருக்கிறது.

இதையெல்லாம் கேட்டபின்பு, இந்த இதழைக் கொணரும் கருத்து எங்கள் நடுவே மேலும் வலுப்பட்டது. எந்த சுயலாபமும் தேடாத சொல்வனம் பத்திரிகை இப்படி ஒரு இதழை வெளியிடாவிட்டால் எப்படி என்ற எண்ணம்தான் அது. தவிர பெண்ணியம் என்ற கருத்தியலை மட்டுமல்ல, அப்படி ஒரு சமூக இயக்கத்தையே கூட சொல்வனம் ஆதரிக்கிற பத்திரிகைதான். ஆக இந்தச் சிறப்பிதழைக் கொணர எங்களுக்கு வேறேதும் தனி உந்துதல் தேவையாக இருக்கவில்லை. இயல்பான தேர்வு, இயல்பான வெளிப்பாடுதான் இது என்று எங்கள் எண்ணம்.

நாங்கள் தொடர்பு கொண்டு கேட்ட பலர் ஒத்துக் கொண்டு தக்க நேரத்தில் எழுதிக் கொடுத்தனர். சிலரே பதிலே போடாமல் விட்டு விட்டார்கள். சிலர் நேரம் போதாமையைச் சொல்லி பின்னாளில் எழுதுகிறோம் என்றும் சொன்னார்கள்.

நேரத்தில் எழுதிக் கொடுத்த அனைவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகிறது. எங்களால் இயன்ற மட்டில் உங்கள் எழுத்தை, பிழைகளின்றியும், நல்ல வடிவமைப்போடும் பிரசுரித்திருக்கிறோம். இந்த இதழ் இன்னும் பல ஆண்டுகளுக்கு அனைவருக்கும் கிட்டக் கூடிய வடிவில் எந்நேரமும் வலையில் இருக்கும்.

இதழை இரு பெரும் பிரிவுகளாக வகுத்தோம். ஒன்று அம்பையின் 40 ஆண்டுக்கும் மேலான இயக்கம் பற்றியும், அவரது படைப்புலகு பற்றியும் பலர் எழுதிக்கொடுத்த கட்டுரைகளின் தொகுப்பு. இன்னொன்று அம்பை தன் நீண்ட கால இயக்கத்திலிருந்து பொறுக்கிக் கொடுத்த சில கட்டுரைகளின் தொகுப்பு.

அவருடைய கதைகள் எதையும் இந்த இதழில் நாங்கள் பிரசுரிக்கவில்லை. (அவர் எழுதியவை சில முன்னரே சொல்வனத்தில் பிரசுரமாகியுள்ளன.)

இவை தவிர வேறு கருதுபொருட்களைக் கொண்ட சிலதும்  பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்த 200 வது இதழை அம்பை அவர்களைச் சிறப்பிக்கும் இதழாகக் கொணர்வதில் சொல்வனம் பதிப்புக் குழு மிக்க மகிழ்ச்சியைப் பெறுகிறது. அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள், இதழை இப்படிப் பிரசுரிக்க அனுமதித்ததற்கு அவருக்கு எங்கள் நன்றி.

இதழைத் தயாரிக்கப் பல பதிப்பாசிரியர்கள் கடும் உழைப்பை மேற்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இதழின் இலச்சினையைத் தயாரித்த அனுக்ரஹா சங்கரநாராயணனுக்கு எங்கள் பாராட்டுதல். இதழ் வடிவமைப்பிலும் அவர் பெரிதும் உதவியிருக்கிறார். பல கட்டுரைகளைத் தட்டச்சிக் கொடுத்த கிரிதரன், சிவா கிருஷ்ணமூர்த்தி, பிரபு ஆகியோருக்கு என் நன்றி. சென்னையிலிருந்து உதவிய கிருஷ்ணன் சுப்ரமணியனுக்கும், முன்னாள் தினமணி கதிர் ஆசிரியர் சிவகுமாருக்கும் என் நன்றி.

வண்ணநிலவனிடமிருந்து கையெழுத்துப் பிரதியைப் பெற்றுத் தட்டச்சி உடனே அனுப்பிய பானுமதி நடராஜ் அவர்களுக்கும் நன்றி. இந்த இதழுக்குச் சில முக்கியமான கட்டுரைகளைப் பிற நண்பர்களிடமிருந்து கேட்டு வாங்கிக் கொடுத்த நம்பி கிருஷ்ணன் அவர்களுக்கும் எங்கள் நன்றி.

இதழை முதலிலிருந்து கடைசி வரை தொகுக்கவும், வடிவமைக்கவும், சீராக்கவும் உதவி வந்திருக்கிற பாஸ்டன் பாலாஜிக்கும் என் நன்றியும் பாராட்டுதல்களும்.

இறுதியாக எங்கள் எல்லாரையும் விடக் கூடுதலாகவே உழைத்து பல விஷயங்களும் சீராக அமைய உதவிய அம்பை அவர்களுக்கு எங்கள் அனைவரின் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இதழைப் படித்து, இதைக் குறித்த உங்கள் எண்ணங்களை solvanam.editor@gmail.com என்ற  முகவரிக்கு மின்னஞ்சலாக எழுதி அனுப்பலாம். அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

இங்ஙனம்

மைத்ரேயன் / ஏப்ரல் 2019

(பதிப்புக் குழுவின் சார்பில்)

2 Replies to “இதழ் 200- பதிப்புக் குறிப்பு”

Comments are closed.