ஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு

ராஜஸ்தானத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக வேலை செய்ததால் உயர்சாதியினரால் மானபங்கப் படுத்தப்பட்டு, நீதிக்காகப் போராடி பின்னர் நீரஜா பனேட் விருது பெற்ற பவ்வரி தேவியை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராஜஸ்தானத்தில் பல பவ்வரிகள். பவ்வர் என்று ஆண் குழந்தைகளையும், பவ்வரி என்று பெண்குழந்தைகளையும் கூப்பிடுவது வெகு சகஜம். செல்லமாக, கிராமப்புறங்களில் இந்தச் செல்லப் பெயரே பெயராக நிலைத்து விடுவதும் உண்டு. பவ்வரிகளின் வாழ்க்கை, போராட்டங்களுடன் இணைந்த வாழ்க்கையாக இருப்பதும் வியப்புக்குரியது இல்லை. காரணம், தாழ்ந்த சாதியினர் என்று அடையாளமிடப் பட்டவர்களிடையேதான் பவ்வரிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட  ஒரு பவ்வரிதான் பவ்வரி பாயிபட். அஜ்மீரில் இருப்பவர். பவ்வரி தேவியை நான் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட போது, “ராஜஸ்தானத்தில் எல்லோருமே பவ்வரிகள்தான். நானும் ஒரு பவ்வரிதான். நான் உங்களுடன் பேசுகிறேன்.” என்று அழைத்தார் பவ்வரி பாயிபட். அவரை முன்பின் பார்த்ததில்லை. அரை நாளில் எப்படிப் பேசி, எதை அறிந்து கொள்வது என்று நினைத்ததை பவ்வரி மாற்றிக் காட்டினார். தன் வாழ்க்கை முழுவதையும் என்னிடம் அவரால் திறந்து காட்ட முடிந்தது. காரணம், அத்தனை அந்தரங்கங்களும் பொது இடத்துக்கு இழுக்கப்பட்டுவிட்ட வாழ்க்கை அவரைப் போன்றவர்களுக்கு. இதில் எதை மறைக்க, எதைத் திறக்க? மறைப்புகள் அகற்றப்பட்டு விட்ட, எங்கும் ஒளிய முடியாத வாழ்க்கை. அதனால் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், எந்தவிதக் கூச்ச உணர்வும்  இன்றித் தன் வாழ்க்கை விவரங்களை அவர் கூறினார். ஆனால், எத்தனை முறை பேசினாலும் அவை வெறும் விவரங்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. பேசும்போது அவர் குரல் உடைந்தது. சில சமயம் கண்களில் நீர் நிறைந்தது. அவர் வாழ்க்கையினுள் தனியே பயணிப்பவர் போல், தனக்குத் தானே பேசிக் கொள்பவர் போல் தெரிந்தார். எதிரே இருந்த நான் பலமுறை இல்லாமல் போனேன். அவர் என்னிடம் கூறியவற்றைப் பலருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஓர் இடமாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு இந்தச் சந்திப்பு நடந்தது. பவ்வரியின் வாழ்க்கை விவரங்களை மஹிலா ஸமுக் என்ற பெண்கள் குழுவின் அமைப்பாளரான தீபா மார்டின்ஸ் என்னிடம் கூறியிருந்தார். நான் அறையில் நுழைந்தபோது பவ்வரி சோபாவில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். அறிமுகப் படுத்தப்பட்டதும் நேராக என் கண்களைப் பார்த்தார். அதனுள் எதையோ தேடுபவர் போல் பார்த்து விட்டு, தான் பேசத் தயார் என்று தீபாவிடம் கூறினார். நாற்பத்தைந்து வயதிருக்கும். சற்று இறுகிய முகம். அவர் எப்போதாவது சிரிக்கும் போது அந்த முகம் கனிந்து  போயிற்று. குள்ளமான உருவம். ஆரம்பத்தில், “நீயெல்லாம் என் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன செய்து கிழிக்கப் போகிறாய்?” என்று சொல்வது போல் ஓர் அலட்சியம் அவர் தொனியில் இருந்தது. ஆனால் அது போகப் போக மாறி, எதிரிலுள்ளவரை தன் வாழ்க்கையினுள் சுலபமாகக் கூட்டிக் சென்றார்.

பவ்வரி, பிசன்கன் பஞ்சாயத்தைச் சேர்ந்த நுரியாவாஸ் என்ற கிராமத்தில் பிறந்தார். பிறந்த தேதி, ஆண்டு எதுவும் அவருக்கு நினைவில்லை. அது அவ்வளவு முக்கியமாகவும் அவருக்குப் படவில்லை. பத்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். ஆனால் சாவிலிருந்து தப்பியவர்கள் இவரும் இவர் சகோதரரும் தான். மற்ற குழந்தைகள் நோய்களால் இறந்து போனார்கள். பவ்வரியின் தந்தை ஒரு கவிஞர். அதாவது பரம்பரையாக மகாராஜாக்களின் அவைகளுக்குச் சென்று பாடும் குலத்தைச் சேர்ந்தவர். ‘டோல்’ (கஞ்சிரா) என்ற வாத்தியத்தில் தாளம் போட்டபடி பாடுவதால் இவர்களுக்கு ‘டோலி’ என்ற பெயருண்டு. தந்தை இவரைப் பள்ளிக்கூடத்தில் போட்ட போது பெண்கள் படிக்கக் கூடாது என்று உறவினர்கள் பலர் எதிர்த்தனர். கூரையே இல்லாத ஒரு திறந்த வெளிப் பள்ளிக்கூடத்தில் படிக்கத்தான் இத்தனை எதிர்ப்பு. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பின் படிப்பதற்கான சலுகைப் பணம் இவருக்குக் கிடைத்தது. சற்றே தள்ளி இருந்த சராதானா என்ற  இடத்தில் இருந்து இந்தப் பணத்தை வாங்கி வர இவர் தந்தை இவரை ஒட்டகத்தின் மேல் ஏற்றிக் கூட்டிப் போவார். பள்ளியின் தலைமையாசிரியர் இவர் மேலே படிக்க வேண்டும் என்று எவ்வளவோ கூறியும் இவர் ஐந்தாவது வரைதான் படித்தார். அதன் பின்பு பிழைப்பைத் தேடி மத்தியப் பிரதேசம் போய் விட்டனர். இவர்கள் எஜமான் என்று அழைக்கும் நபர் மத்தியப் பிரதேசம் சென்றதால் இவர்களும் சென்றனர். அங்கு சென்ற ஒரு ஆண்டில் பவ்வரிக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு ஏழெட்டு வயதிருக்கும். பதினாலு வயது வரை தந்தையின் செல்லப் பெண்ணாக இருந்து விட்டு, ராம்புராவில் உள்ள கணவன் வீட்டுக்கு வந்தார். ராஜஸ்தானத்தின் அந்தக் கிராமத்தில் இவர்கள் தொழில் ‘டோல்’ வாசிப்பதும், விவசாய வேலையும் தான். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் (சுமார் 300 குடும்பங்கள் இருந்தன) ஆறு மாதத்துக்கு ஒரு முறை பத்து கிலோ தானியம் இவர்களுக்குத் தந்தும் வீட்டில் வறுமை. காரணம் எப்போதும் போல் குடிப்பழக்கம்தான். கணவர், மாமனார் இருவருமே மொடாக் குடியர்கள். தானியத்தின் மேல் அது வரும் முன்பே கடன் வாங்கிக் குடித்து விடுவார்கள். மாமனாருக்கு இரு மனைவிகள். இன்னும் இரண்டு பிள்ளைகள். இன்னொரு மருமகள். இன்னொரு நபருக்குச் சோறு கூடப் போட முடியாத வறுமை. பவ்வரி மீண்டும் தந்தையிடமே போனார். இங்கு வாழ விருப்பமின்றிப் போனார். ஆனால் வயிற்றில் மூன்று மாதக் குழந்தை. தந்தையிடமே ஐந்தாண்டுகள் இருந்தார். பிறகு பலரின் வற்புறுத்தலால் மீண்டும் ராம்புரா வந்தார். ராம்புராவில் மீண்டும் வறுமை. மீண்டும் கணவருடன் மத்தியப்பிரதேசம் வந்தார். அவருக்குக் கட்டிடத் தொழிலாளி வேலை கிடைத்தது. ஒரு நாளுக்கு 1 ரூ 25 பைசா கூலி பவ்வரியும்   போனார். கூலி ஒரு ரூபாய். ஆனால் அவரால் கல்லுடைக்க, மண் சுமக்க முடியவில்லை. அவரால் ஒரு உபயோகமும் இல்லை என்று “ராம்புரா போய் புகுந்த வீட்டுக்கு உழைத்தப் போடு” என அனுப்பி விட்டார்கள்.

 மீண்டும் ராம்புரா. விவசாயக் கூலி வேலை. நாளொன்றுக்கு ஆறணா கூலி. இரவு பகலுக்குப் போட தவிடு புடைத்துத் தந்தால் நாலரை. கிராமத்தில் ஏகத்துக்கு சாதிக் கெடுபிடி. காலில் செருப்பணியக் கூடாது. உயர் சாதியினர் எதிரே சைக்கிள் ஓட்டக் கூடாது. குடிக்கத் தண்ணீர் கொண்டு வர இரண்டு மூன்று மைல்கள் நடை. வீட்டு வேலை. கிராமத்தில் அதிகாரம் பிராமணரல்லாத உயர்சாதியினரிடம் இருந்தது. ஜாட், யாதவ் போன்ற சாதியினர். தண்ணீருக்காக நடப்பதுதான் பெரும் தொல்லையாக இருந்தது. “வீட்டில் யாராவது விருந்தாளி வந்தால், இவர் குடிக்கத் தண்ணீர் கேட்கக் கூடாதே என்று நினைப்பேன்”. என்றார் பவ்வரி. அப்படி ஒரு எண்ணம் மனதில் வருவதே அவமானமாக இருந்தது. காரணம், யார் வந்தாலும் தாகத்துக்குத் தண்ணீர் தரும் பழக்கத்தில் ஊறியவர்கள். வீட்டில் ஆண்களுக்கு இந்த நடை கண்ணில்படவே இல்லை. பவ்வரியின் கணவரும் திரும்பி வந்துவிட, அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள். `இத்தனை பிள்ளைகள் வேண்டாமே’என்று பவ்வரி சொல்லியும் ஐந்து ஜீவன்கள் காப்பாற்ற.

 இந்தச் சந்தர்ப்பத்தில் SASVIKA (SAMUDHAYIK SWASTHIYA VIKAS KARYAKRAM) என்ற கன்யாஸ்திரீகள் ஆரம்பித்த அமைப்பு ஒன்று சமூக ஆரோக்ய மேம்பாட்டுக்காக கிராமங்களில் வேலை செய்ய நினைத்தது. ராம்புரா கிராமத்தில் பால்வாடி நடத்தவும், முதியோர் கல்வித் திட்டத்தை நடத்தவும் கொஞ்சம் படித்த பெண்ணைத் தேடிய போது பவ்வரி அவர்களுக்கு அறிமுகமானாள். கிராமத்தில் பவ்வரியாக இருந்த ஜாட் சாதியினர் தன் வீட்டில் பள்ளியையும், பால்வாடியையும் நடத்த அனுமதி தந்தார். அரசாங்கக் காரியமாதலால் அவரால் மறுக்க முடியவில்லை. ஆனால் பவ்வரி போன்ற தலித் அதை எடுத்து நடத்துவதில் அவருக்கும், கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எதிர்ப்பு இருந்தது. இதில் பவ்வரிக்குக் கிடைத்த வருமானம் ரூ.200/-. “ஒரு தலித் பெண்மணி நாற்காலியில் அமர்ந்து பாடம் கற்பிப்பதா?” என்ற விமர்சனங்கள். முதியோர் கல்வித் திட்டத்தைச் சீராக நடத்தியதற்கு ரூ.5,000/- பரிசும், தையல் இயந்திரம், பின்னும் இயந்திரம் இரண்டும் கிடைத்தன பவ்வரிக்கு. பவ்வரி வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை.  ஆனால் வறுமையை விடவும் மோசமான நிலைக்குத் தான் தள்ளப் படுவோம் என்று பவ்வரி எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் தண்ணீர் அவள் வாழ்க்கையின் போராட்டக் குறியீடாகி விடும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

பால்வாடியில் குழந்தைகள் வந்தன. அவர்கள் தண்ணீர் கேட்டபோது பவ்வரி அவர்களைப் பொது பம்ப் குழாயடிக்கு அனுப்பினார். காரணம் சில உயர்சாதிப் பிள்ளைகளுக்கு அவர் எப்படித் தண்ணீர் தர முடியும்? உயர்சாதிப் பிள்ளைகளுடன்  தலித் பிள்ளைகளும் பொதுக் குழாயடியில் குடிக்கப்போனார்கள். ஆரம்பித்தது தொல்லை. மக்கள் எல்லோரும் கூடும் சௌபல் என்ற கூட்டம் இரவு நடந்தது. அதில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. பவ்வரியின் கணவன் அழைக்கப்பட்டு அவமானப் படுத்தப் பட்டார். ஏசப்பட்டார். ‘மனைவியை அடக்கு’ போன்ற உத்தரவுகள் பிறந்தன. ஏற்கனவே குடிகாரர். அதில் இதுவும் சேர்ந்து கொள்ள நிதம் வீட்டில் சண்டை, சச்சரவு, ஏசல், அடிதடி. பவ்வரியின் பள்ளிக்கு வந்த சற்றே பெரிய பெண்களைப் பொழுது சாயும் நேரம் ஊர் இளைஞர்கள் வம்புக்கு இழுத்தனர். இது பற்றி அவர் முறையிட்டபோது “கிராமத்து இளைஞர்கள் கிராமப் பெண்களிடம்தான் விளையாடுவார்கள். வெளியேயா போக முடியும்?” என்று பதில் வந்தது. பவ்வரியின் அப்பா வரவழைக்கப் பட்டார் அவருக்குப் புத்தி சொல்ல. அவர் தன் பங்குக்கு ஏசி விட்டுப் போனார். அரசாங்க அதிகாரியிடம்  பவ்வரி முறையிட, அவர் தொடர்ந்து பள்ளியை நடத்துமாறு கூறினார். தொல்லைகள் தொடர்ந்தன.

இதற்கிடையில் கன்யாஸ்திரிகள் அம்பேத்கர் ஜயந்தி கொண்டாட நினைத்தார்கள் பவ்வரியின் கிராமத்தில். அவர்களுக்கு அது மேம்பாட்டு முயற்சி. ஆனால் அவர்கள் வெளியாட்கள். அதனால் இச்செயல்களின் மொத்தச் சுமையும் பவ்வரியின் தோள்களில். மேம்பாட்டு வேலை வேண்டாம் என்று பவ்வரி கூறவில்லை. ஆனால் விளைவுகளை எதிர் கொள்ளவும் அரசு அமைப்பு துணை நிற்க வேண்டும் என்கிறார். பவ்வரியின் கிராமத்தினர் அம்பேத்கர் ஜயந்தி அரசியல்வாதிகள், பல பெண்கள், கிராமத்துப் பெண்கள் எல்லோரும் வந்தனர். இதில் ஒரு அறிவு ஜீவியும் வந்திருந்தார். அவர் அம்பேத்கரின் வாழ்க்கை பற்றியும், போராட்டங்கள் பற்றியும் பேசப் பேசக் கூட்டத்தினர் அமைதி இழக்க ஆரம்பித்தனர். வெறும் வாண வெடி வெடித்து, மாலை போடும் கொண்டாட்டம் இல்லை இது; தலித்துக்களை உசுப்பி விடும் கொண்டாட்டம் என்று புரிந்ததும் கற்கள் பறக்க ஆரம்பித்தன. அம்பேத்கரைப் பற்றிப் பேசிய அறிவுஜீவி உட்பட அத்தனை பேரும் நொடியில் ஓடிப்போயினர். பவ்வரியும், அவர் மகளும் இந்த வெறிக் கூட்டத்தின் பிடியில் சிக்கினர். இருவரையும் கூட்டம் அடித்து நொறுக்கியது. ஓட ஓட விரட்டியது. வீடு வரை துரத்தியடித்து, பின்பு வீட்டில் புகுந்து  எல்லாவற்றையும் உடைத்து, சின்னாபின்னமாக்கினார்கள். பவ்வரியை அவர் கணவர், காப்பாற்றுவதற்காக ஓர் அறையில் வைத்துப் பூட்டினார். ஆனால் மகளை நையப் புடைத்தனர். அவரால் தடுக்க முடியவில்லை. வயிற்றிலும், வாயிலும், இடுப்பிலும் உதை. அவளையும், பவ்வரியையும் ‘ரண்டி’ (வேசி) என்றழைத்து ஏசல்கள்.

மீண்டும் சௌபல் கூடியது. பவ்வரியின் கணவர் வரவழைக்கப் பட்டார். இந்த முறை நல்ல உதை அவருக்கு. பவ்வரியின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தனர் கிராமத்தினர். குடும்பத்தில் சச்சரவும், சண்டையும்.பவ்வரி, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டார். வீட்டினுள் மூச்சு முட்டியது பவ்வரிக்கு. ‘இனி ஏன் இந்த வாழ்க்கை?’ என்று தோன்றிது. ஒருநாள் பித்தளைக் குடத்தை எடுத்துப் பளபளவென்று தேய்த்தார். மணப் பெண்ணைப் போல் உடைகளும், நகையும் அணிந்து கொண்டார். தன்னை அடக்கம் செய்வதற்கான உடைகளை ஒரு பக்கம் எடுத்து வைத்தார். குடத்தைத் தலையின் மேல் வைத்துக் கொண்டார். அவர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும், தழுவிக் கொண்டு விடை பெற்று, அழுதபடி வீட்டை விட்டு வெளியே வந்தார். “நான் தண்ணி பிடிக்கப் போகிறேன். வேண்டுமானால் இதற்காக என்னைக் கொல்லுங்கள்” என்று கூவியபடி, பொதுக் குழாயடியில் தண்ணி பிடித்தார். ஒரு ஈ, காக்கை வெளியே வரவில்லை. இரவு படுக்கும்போது ஓர் அரிவாளைப் பக்கத்தில் கிடத்திக் கொண்டார். அவர் நினைத்தபடியே இரவு  ஒரு கூட்டம் வந்தது.. அரிவாளுடன் எழுந்து நின்றதும் ஓடிவிட்டது. ஆனால் பவ்வரியின் ஆத்திரம் தணியவில்லை. இரவில் கையில் அரிவாளோடு, நாய்கள் தூரத்த, கிராமத்து ஆண்களின் பிறப்பைச் சந்தேகிக்கும் வசைகளை ஓலமிட்டபடி கிராமத்தை வளைய வந்தார்.

 இம்முறை போலீசிடம் போனார் பவ்வரி. ஆனால் எந்தப் போலீசும் வரவில்லை. மீண்டும் பொதுக்குழாயில் தண்ணி எடுத்தார். இந்தத் தடவை அவர் தண்ணி எடுத்தபின் குழாய் கழுவப்பட்டது. பவ்வரி காத்திருந்து உயர் சாதிப் பெண்கள் தண்ணீர் எடுத்த பின்பு குழாயைக் கழுவலானார். அவர்கள், ஏன் என்று கேட்டபோது, “நான் உங்களுக்கு தீண்டத்தகாதவள் என்றால் நீங்களும் எனக்குத் தீண்டத் தகாதவர்கள் தானே?. நீங்கள் தொட்ட குழாயை நான் கழுவ வேண்டாமா?” என்று கேட்டார். படிப்பு விஷயத்தில் அவருடன் உடன்பட்ட உயர்சாதிப் பெண்கள், இவர் சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதும், இவர் மேல் பாய்ந்து உடையைக் கிழித்து, அடிக்க ஆரம்பித்தனர். பவ்வரி மீண்டும் போலீசிடம் சென்றார். எல்லோரும் தன்னை எதிர்ப்பதாகக் கூறினார். அக்கம் பக்கக் கிராமங்களில் விஷயம் பரவி, எல்லோரும் பவ்வரியின் கணவரிடம் பவ்வரியை புத்தி வரும் வரை உதைக்கும்படிக் கூறினார். போலீஸ் கண்டு கொள்ளாமல் இருந்தது. பவ்வரி அஜ்மீரிலுள்ள SASVIKA கன்யாஸ்திரீகளிடம் போய் “என்னை இப்படித் தனியே போராட விட்டு விட்டீர்களே?” என்று அழுதார். ஆனால் ஸிஸ்டர் ராம்புராவில் நுழைய முடியாமல் போனதற்குக் காரணம் அவர் குழுவினர் மதமாற்றம் செய்து விடுவார்கள் என்ற வதந்தி பரவிவிட்டதால்தான். ஸிஸ்டரும் பவ்வரியும் அஜ்மீரிலுள்ள எஸ்.பியிடம் போய் முறையிட்டனர். எஸ்.பி. கட்டாயம் உதவுவதாகக் கூறினார். பவ்வரி சற்று நிம்மதியுடன் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார் கிராமத்துக்குப் போக. பாதி வழியில் போலீசார் பஸ்ஸை நிறுத்தினார். உள்ளே புகுந்து, குற்றவாளியைத் தேடுவது போல், “பவ்வரி பாயி யார்?” என்று கேட்டனர். பவ்வரி பாயி எழுந்ததும் “இறங்கு உடனே” என்றனர். இறங்கியதும், “எஸ்.பியிடம் போகிறயா?” என்று அதட்டினர். ஒரு கான்ஸ்டபிள் அவளைக் கிராமத்துக்குப் போகச் சொன்னார். தான் அங்கு வந்து விசாரிப்பதாகக் கூறினார். கிராமத்தில் பவ்வரியை அடித்தவர்கள் வீடுகளுக்குப் போகும் முறைப்படி முகம் முழுவதும் முக்காடு போட்டு மறைத்துக் கொண்டு சென்றார் பவ்வரி. வெகு தூரத்தில் அவரை உட்காரச் சென்னார்கள். “என்னதான் வேண்டும் உனக்கு?” என்று கேட்டார்கள். “எனக்கு நிம்மதி வேண்டும்” என்று குமுறி அழுது அரற்றலானார் பவ்வரி. “வாயை மூடித் தொலை” என்று அதட்டினர். கான்ஸ்டபிள் திரும்பிப் போனார்.

 பவ்வரி வழக்கம்போல் குழாயடிக்குப் போனார் தண்ணீர் எடுக்க அதை யாரும் எதிர்க்கவில்லை. குழாய் கழுவப் படுவதும் நிற்கவில்லை. பள்ளிக்கூடம் தொடர்ந்து நடத்தப்பட்டது. ஆனால் உயர்சாதியினர் பவ்வரிக்குத் தண்டனை தரவேண்டும் என்பதை மறக்கவில்லை. ஒரு யாதவ குல இளைஞன் பவ்வரியின் 13 வயதுப் பெண்ணைப் பலாத்காரம் செய்தான் ஒருநாள். அந்தச் சிறு பெண்ணுக்குத் தனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. வெறித்த பார்வையுடன் வீட்டுக்கு வந்தவளை உசுப்பி விவரம் கேட்டறிந்த பவ்வரி முதல் முறையாக இடிந்து போனார். பலாத்காரம் பற்றிச் சாதரணமாகக் கிராமத்தில் யாரும் புகார் செய்யமாட்டார்கள். பவ்வரி மீண்டும் போலீசாரிடம் போனார். அவர் கூறுவதைக் கூட யாரும் கேட்கவில்லை. திரும்பி வந்து இம்முறை பஞ்சாயத்தைக் கூட்டினார். ஆனால் பஞ்சாயத்திலும் பெண்களுக்கு இடமில்லை. வெகு தூரத்தே நின்று கொண்டு, முக்காட்டுக்குள்ளிருந்து, கூவும் குரலில் பேசினார் பவ்வரி. பலாத்காரம் என்பதே பொய் என்றனர் பலர்.  “தீண்டவே கூடாதவளிடம் யார் இதைச் செய்ய முடியும்?” என்றனர். பவ்வரியின் குடும்பத்தினரும் பலாத்காரம் பற்றிக் கூற வேண்டாம் என்றனர். மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார் பவ்வரி. தன் பெண்ணை அடித்ததாகக் குற்றம் சாட்டினார். “போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதே உன் பழக்கமாகி விட்டது. எங்கள் வேனில் டீசல் இல்லை. வரமுடியாது” என்றனர். கிராமத்துக்குத் திரும்பிய பவ்வரி கோபத்தில், “தலித் பெண்கள் பலாத்காரம் செய்யப் படுவது போல, யாதவப் பெண்களுக்கு நடந்தால் என்ன ஆகும்?” என்று கூற பெண்களே இவரை அடித்து நொறுக்கினர். மீண்டும் அஜ்மீருக்கு ஓட்டம். கன்யாஸ்திரீகளிடம் முறையீடு. அவர்கள் கை விரித்த பின்பு, தற்கொலை பற்றி யோசிக்கலானார் பவ்வரி. தன் பொருட்டு குலைக்கப்பட்ட 13 வயதுப் பெண், சிதிலமடைந்த வீடு, குடும்பம் இவற்றை நினைத்துப் பார்க்கையில், உயிரை விட்டு விடலாம் என்று தோன்றியது. அப்போதுதான் மஹிலா ஸமுக் பற்றிக் கேள்விப்பட்டார். அக்குழுவைச் சேர்ந்த ஒருவருடன் தங்கினார். மொத்தக் குழுவும் டி.ஐ.ஜி.யிடம் போயிற்று. டி.ஐ.ஜி போலீசை அனுப்பியதும் குற்றவாளிகள் ஓடி விட்டனர். கிராமமே பவ்வரி குடும்பத்தை எதிர்த்து நின்றது.

 சில வருடங்களுக்கு முன்பு  மார்ச் எட்டாம் தேதி மகளிர்தின ஊர்வலத்தில் கலந்து கொள்ள பவ்வரி வந்தபோது குடும்பத்தினரும் வந்தனர். அவர் கணவர் கிராமத்துக்குத் திரும்பிப் போக மறுத்தார். தன்னால் உதை பட முடியாதுஎன்றார். பவ்வரி, கணவரின் தம்பி வீட்டில் ஒரு நாள் தங்கி விட்டு, தம்பி மனைவியிடம் தன் குடும்பத்தினருக்கு ஓர் அறை வாடகைக்குப் பார்க்கும்படிக் கூறினார். ஒரு கழிப்பிடத்தின் அருகே ஓர் அறை கிடைத்தது. கணவருக்கு வேலை இல்லை. பவ்வரி காய்கறிகள் வாங்கிக் கூடையில் வைத்து விற்கத் தீர்மானித்து, ஒரு கடையின் முன் அமர்ந்து கொண்டார். இரண்டு நாட்கள் அமர்ந்தும் ஒரு வியாபாரமும் நடக்க வில்லை. கடைக்காரர், “பாயி, வியாபாரமே நடக்கவில்லையே?” என்று கனிவுடன் கேட்டதும், கரகரவென்று கண்ணீர் பொங்கி வழிந்தது. ஒரு மோதிரத்தை விற்று, மீண்டும் ராம்புரா சென்றார். வீடு முழுவதும்  இடிக்கப்பட்டுச் சாமான்கள் இறைக்கப்பட்டிருந்தன. தளராத மனத்துடன் மீண்டும் போலீசிடம் போனார் பவ்வரி. மஹிலா ஸமுக் குழுவினர் உதவியுடன் வழக்கு கோர்ட்டுக்கு வந்தது.  கோர்ட்டில் என்ன நீதி வழன்றதும் “கெடுக என் ஆயுள்” என்று உயிர் விட்ட மதுரை மன்னனா இருந்தான்? கோர்ட்டில் இருந்தது பெண்கள் குழுக்களையே வெறுத்த ஒரு நீதிபதி. கிராமத்தின் யாதவர்களும் கிராமத்தின் மற்ற தலித்துகளை அழைத்து வந்து கிராமத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூற வைத்தனர். பவ்வரி தோற்றுப் போனார்.

பவ்வரி முற்றிலும் தோற்கவில்லை. தேவ்லி கிராமத்தில் தன் வேலையைத் தொடர்ந்தார். பெண்கள் தங்கள் குறைகளுடன் இவரிடம் வரத் துவங்கினர். அஜ்மீரில் இருந்து கொண்டு, மஹிலா ஸமுக் குழுவுடன் வேலை செய்தபடி தேவ்லியிலும் தன் வேலையைச் செய்கிறார். ராம்புராவுக்கும் போய் வருவதுண்டு. அஜ்மீரில் தனக்கென்று ஒரு இடம் தேடி ஓர் ஆலமரத்தடியில் தஞ்சம் புகுந்தவர், அந்த நிலத்தை மஹிலா ஸமுக் போன்றோரின் உதவியுடன் வாங்கி, ஒரு சிறு குடிசை கட்டிக் கொண்டார். ஸா என்ற குழுவினர் இவரைப் பார்த்துப் பேசி, இவர் பெயரைச் சிபாரிசு செய்ததால் ஒரு வெளிநாட்டு நிறுவனம் சிறந்த போராளிக்கான விருதை இவருக்குச் சென்ற வருடம் அளித்தது. 1200 டாலர்கள் பவ்வரிக்கும், 5000 டாலர்கள் அவர் தேர்வு செய்யும் ஒரு குழுவுக்கோ, அவரே ஆரம்பிக்க நினைக்கும் ஒரு குழுவுக்கோ தரலாம் என்று கூறி பவ்வரி பெயரில் பணம் வந்தது. நிமிடம் கூட யோசியாமல் 5000 டாலர்களை பவ்வரி மஹிலா ஸமுக் குழுவினரிடம் தந்தார். தன் வீட்டை உறுதியாகக் கட்டிக் கொண்டு ஆலமரத்தடியிலே தன் குடியிருப்பை நிரந்தரமாக்கிக் கொண்டார். குடும்பத்தினரும் மூச்சுவிட ஆரம்பித்தார்கள்.

 தேவதைக் கதைகளில் வருவது போல் “ஆனந்தமாகப் பல்லாண்டு வாழ்ந்தனர்” என்று இதை முடிக்க முடியவில்லை. காரணம் இத்தனை போராட்டங்களிலும் சிதைபட்டுப் போனது ஒரு 13 வயதுச் சிறுமி. முற்றிலும் மனம் பேதலித்துப் போய், போவோர் வருவோரை எல்லாம் தன்னுடன் படுக்க அழைக்கும் ஒரு சிறுமி. மகளுக்கு ஒரு திருமணத்தையும் செய்து பார்த்தார் பவ்வரி. குழந்தையும் உண்டு. ஆனால் கணவன் அவளை விட்டுப் போயாகி விட்டது. அந்தப் பலாத்காரத்திலிருந்து அச்சிறுமி மீளவே இல்லை. அந்தத் துக்கம்தான் பவ்வரியின் நெஞ்சைப் பந்தாக அடைத்துக் கொண்டு, குரலை கனத்துப் போக வைக்கிறது. உடைய வைக்கிறது. கண்களில் நீரை நிரப்புகிறது. வேண்டுதல் செய்து கொண்டு ஊர்த் தெய்வத்துக்குப் பலி போடுவது போல ஒரு மேம்பாட்டுத் திட்டம் நிறைவேற ராம்புராவில் உயிர்பலி; உபயம் – பவ்வரி.

( தலித் இதழ் எண் 4 1998 )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.