‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ : மூவகை முரண்கள்

அம்பை சில ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக ஒருநாள் நாமக்கல் வந்திருந்தார். மாதந்தோறும் எங்கள் வீட்டு மாடியில் நடைபெறும் ‘கூடு ஆய்வுச் சந்திப்பு’ நிகழ்வு அன்றைக்கு நடந்தது. அதில் அவரைப் பேசக் கேட்டோம். ஒத்துக்கொண்டார். அவர் பேசி முடித்த பின் நன்றியுரை கூறியவர் என் மாணவர் ஒருவர். அப்போது அம்மாணவர் சுயநிதிக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். தம் பேச்சில் அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையைக் குறிப்பிட வந்தவர் நாப் பிறழ்ந்து ‘அம்பை ஒரு கொலை செய்தாள்’ என்று சொல்லிவிட்டார். அம்பை உடனடியாகச் சொன்னார், ‘இன்னும் நான் கொல மட்டுந்தான் செய்யல. இப்படிச் சொன்னா அதயும் செஞ்சிருவம் பாத்துக்க.’

அந்த நிகழ்வால் எனக்கு ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையைப் பற்றிய சிந்தனை தொடர்ந்தது. அம்மாணவர் பணியாற்றும் கல்லூரியில் பாடத்திட்டம் உருவாக்கிய போது சிறுகதைகள் பற்றி என்னிடம்தான் ஆலோசனை கேட்டார்கள். பத்து எழுத்தாளர்கள்; பத்துக் கதைகள். எழுத்தாளர்களைத் தேர்வு செய்து அவர்களின் கதைகளில் மும்மூன்று கதைகளையும் கொடுத்தேன். கல்லூரிப் பாடத்திட்டக் குழு நான் கொடுத்த கதைகளில் இருந்து ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொன்று எனத் தேர்ந்தெடுத்தார்கள். அம்பையின் கதைகளையும் நான் கொடுத்திருந்தேன். அவற்றிலிருந்து ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையைத் தேர்வு செய்தார்கள். பாடம் நடத்துவதற்காக அம்மாணவர் அக்கதையை வாசித்திருந்தார். ஆகவே என் மாணவருக்கு அம்பை எழுதிய அந்த ஒரு கதை தவிர வேறு எதுவும் தெரியாது என்பது உண்மை. இந்நிலைக்குக் காரணம் நமது கல்வி முறை. 

பன்னிரண்டாம் வகுப்பிலும் உயர்கல்வியிலும் சிறுகதைத் தொகுப்பு ஒன்று பாடத்திட்டத்தில் இடம்பெறுவது வழக்கம். பலரது கதைகளின் தொகுப்பாகிய அதில் பெண் எழுத்தாளர் எழுதிய கதை ஒன்றாவது இடம் பெற வேண்டும் என நினைப்பர். பள்ளி மாணவர்களுக்கான தொகுப்பில் அந்த இடம் சூடாமணி, கோமகள் போன்றவர்களுக்கே கிடைக்கும். அம்பையின் சிறுகதை எதுவும் பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற்று நான் கண்டதில்லை. அவர் கதை பள்ளி மாணவர்களின் புரிதல் தரத்திற்கு மேம்பட்டது என்று நினைத்திருப்பார்கள். அல்லது அவர் கதைகள் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவதால் அவற்றை மாணவர்கள் படித்தால் ‘கெட்டுப் போய்விடுவார்கள்’ என்னும் தயக்கம் காரணமாக இருக்கலாம். நிலவும் விழுமியங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் ஒழுக்கம் என்பது நம் கல்விமுறையின் புரிதல். 

ஆனால் உயர்கல்வியில் ஏதாவது ஒரு நிலையில் அம்பையின் கதையை மாணவர்கள் படித்தே ஆக வேண்டும். பொதுத்தமிழ்ப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றால் எல்லா பட்ட வகுப்பு மாணவர்களும் படிப்பார்கள். பொதுத்தமிழ்ப் பாடநூல் பெரும் வருவாய் தரக்கூடியது. பல்கலைக்கழகச் செல்வாக்குப் பெற்ற பதிப்பகங்கள் அவ்வருவாயைக் குறி வைத்து இயங்குகின்றன. எழுத்தாளர்களிடம் அனுமதி பெற்றும் பெறாமலும் உருவாக்கிய தொகுப்புகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்துவிடுவது சாதாரண நடைமுறை. இந்த விற்பனை வாய்ப்பைக் குறி வைத்துத் தமிழாசிரியர்களே சிறுகதை ஆசிரியர்களாக அவதாரம் எடுத்துவிடுவதும் உண்டு. பாடத்திட்டத்திற்காகத் தமிழாசிரியர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள் கணிசமாகத் தேறும். பழைய புத்தகக் கடைகளில் பார்த்தால் அவற்றின் பல பிரதிகள் கிடைக்கும். பாடத்திட்டக் கதைகளுக்கு என்று வைக்கப்பட்டிருக்கும் வரையறைகள் எவை என்பதை அத்தொகுப்புக் கதைகளிலிருந்து எளிதாகத் தொகுக்க முடியும். 

விற்பனை வாய்ப்பு பெரிதாக இல்லாதது தமிழ் இலக்கிய இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளுக்குரிய பாடத்திட்டங்கள். இப்போதெல்லாம் பல கல்லூரிகள் தன்னாட்சி மதிப்பு பெற்றவையாக இருக்கின்றன. அக்கல்லூரிகளில் தமிழ்த்துறையினரே தமக்கான பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். பத்து எழுத்தாளர்களின் பத்துக் கதைகள் எனத் திட்டமிட்டு அக்கதைகளை நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்கிவிடுகிறார்கள். இங்கெல்லாம் பெண் எழுத்தாளராக அம்பைக்கே இடமுண்டு. பெண் எழுத்தாளராகவும் சிறுகதை ஆசிரியராகவும் அம்பையைக் கல்வித்துறையினர் அடையாளம் கண்டிருப்பது 

முக்கியமான விஷயம்தான். அதற்குச் சில காரணங்களை யோசித்துப் பார்க்கிறேன். பாடத்திட்ட இலக்கிய வரலாறுகளில் ஒருவருடைய பெயர் இடம்பெற்றுவிட்டால் அவருடைய படைப்புகள் எப்போதாவது பாடத்திட்டத்தில் சேர வாய்ப்பிருக்கிறது. அந்தப் பேறு அம்பைக்குக் கொஞ்சமாகக் கிடைத்திருக்கிறது. இலக்கிய வரலாறுகளில் நவீன இலக்கியத்திற்கு ஒதுக்கும் பக்கங்கள் மிகவும் குறைவு. சிறுகதை வரலாற்றுக்கு இரண்டு பக்கங்கள் ஒதுக்கினால் பெரிது. அதனால் ஒரு பெரிய பெயர்ப் பட்டியல் கொடுத்து வரலாற்றை முடித்துவிடுவார்கள். 

அத்தகைய பல இலக்கிய வரலாற்று நூல் பட்டியல்களில் அம்பையின் பெயரே கிடையாது. சில சான்றுகளைக் காட்டலாம். 

‘…லட்சுமி, சிவசங்கரி, வசுமதி ராமசாமி, சூடாமணி, சரோஜா ராமமூர்த்தி, ஜோதிர்லதா கிரிஜா, வாஸந்தி, ஆனந்தி, அனுத்தமா, அனுராதாரமணன், ரமணிச்சந்திரன் முதலிய பெண் எழுத்தாளர்களும்…’ (கமலா முருகன், தமிழ் இலக்கிய வரலாறு, ப.528) 

‘பெண் எழுத்தாளர்களில் ஆர்.சூடாமணியின் சிறுகதைகள் ஒரு நேர்முக வருணனை போல் அமைந்து மன உணர்வுத் தடங்களைச் சித்தரிப்பன. திலகவதி உலகத்தில் தோன்றிய சிறந்த சிறுகதைகளைத் தமிழில் தருவதில் ஆர்வம் மிக்கவர். அவருடைய சிறுகதைகள் கற்பனை நயம் மிக்கவை.’ (தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ப.379) 

‘ஆர்.சூடாமணி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை ஆகியோர் பெண் எழுத்தாளர்களில் சிறந்தவராவர்.’ ( ஸ்ரீசந்திரன், தமிழ் இலக்கிய வரலாறு, ப.389) 

மேற்காணும் நூல்களில் அம்பை பெயரளவுக்குக்கூட இடம்பெறவில்லை. சில இலக்கிய வரலாற்றுப் பட்டியல்களில் பெயரளவுக்கு அம்பை இடம் பிடித்துள்ளார். 

’…சிவசங்கரி, ஜே.எம்.சாலி, ஜ.ர.சுந்தரேசன், ஜோதிர்லதா கிரிஜா, சுஜாதா, கோமகள், வே.சபாநாயகம் (சபா), வையவன், இருகூரான், அம்பை, வத்சலா கோபாலகிருஷ்ணன், வாஸந்தி, அசோகமித்திரன் முதலிய பல எழுத்தாளர்களும் சிறுகதை இலக்கியத்திற்குச் சேவை செய்து வருகின்றனர்.’ (பூவண்ணன், தமிழ் இலக்கிய வரலாறு, ப.288) 

மேற்கண்டதைப் போன்ற பதிவுகள் இருப்பதே அரிது. இந்நிலையில் மிகச் சில நூல்களில் அம்பைக்கு ஓரிரு வரிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அபூர்வமாகக் கருதலாம். ஓர் உதாரணம்: 

‘அம்பை: பெண்களின் சிக்கல்களை ஆழமாகப் பதிவு செய்பவர். ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்னும் சிறுகதை பெண்ணின் வாழ்விடமும்கூட வீட்டின் மூலையில் வரையறுக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறது. ‘மல்லுக்கட்டு’ம் சிறப்பான கதை.’ (பாக்யமேரி, இலக்கணம் இலக்கிய வரலாறு மொழித்திறன், ப.712) 

இலக்கிய வரலாறுகளில் அம்பையின் இடம் இத்தகையதாக இருப்பதுதான் அவருடைய சிறுகதை பாடத்திட்டத்தில் இடம்பெற நேர்வதன் காரணம். இது ஒருபுறம் இருக்கட்டும். பாடத்திட்டத்தில் அம்பையின் சிறுகதைகள் எவையெவை இடம்பெற்றுள்ளன என்பதைக் காண்பதற்கு முழுமையான சான்றுகள் இப்போது என்னிடமில்லை. எனினும் என் கண்ணில் பட்ட அளவில் பாடத்திட்டத்திற்கு என்று நேர்ந்துவிட்ட அம்பையின் ஒரே சிறுகதை ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’தான். இந்தக் கதை முதலில் எப்போது பாடத்திட்டத்திற்கு வந்து சேர்ந்தது எனத் தெரியவில்லை. அப்படியே தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. யாரோ ஒருவர் தொகுத்த பாடத் திட்ட நூல் தொகுப்பிலிருந்து இன்னொருவர் எடுத்துக்கொள்வது வழக்கம். மூலத் தொகுப்புகளைப் பார்ப்பதில்லை. அப்படி ஒரு தொகுப்பிலிருந்து இன்னொன்றுக்கு என்னும் விதமாகவே ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ பயணம் செய்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். மேலும் அம்பையின் வேறு கதைகளைக் கொடுத்தாலும் அவற்றைத் தேர்வு செய்ய மாட்டார்கள். ஏனோ இந்தக் கதை மீது கல்வித் துறையினருக்கு அப்படியோர் ஈர்ப்பு. 

000 

தமிழ் யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாகக் கூறப்படுவது தொடை. தொடை எட்டு வகைப்படும். மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடை ஆகியன அவை. செய்யுளில் இடம்பெறும் எழுத்து, சொல் ஆகியவை அழகுறக் கட்டப்படுதலை வகைப்படுத்தித் தொடை என்னும் உறுப்பு விளக்கப்பட்டுள்ளது. இதன் வகைகளுள் சற்றே வேறுபட்டது ‘முரண்.’ முரண் தொடை எழுத்து சார்ந்ததல்ல. சொல், பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் முரண் தொடை விளக்கப்படுகின்றது. முரண் பற்றிய தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பா இது: 

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. (செய்யுளியல், நூற்பா: 91) 

இந்த ஓரடி நூற்பாவை உரையாசிரியர்கள் விரித்தும் வகுத்தும் பலவித விளக்கங்கள் கொடுத்துள்ளனர். ‘மொழி’ என்று நூற்பாவில் குறிப்பிடப்படுவது ’சொல்’ ஆகும். அதைப் பொருள் கொள்வதில் பிரச்சினையில்லை. ‘பொருள்’ என்பதைப் அர்த்தப்படுத்துவதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன. இளம்பூரணர் சுருக்கமாகவே இதை விளக்குகிறார். ‘பொருள்’ என்பதை அவர் object எனக் கொண்டது போலத் தெரிகிறது. ‘அர்த்தம்’ என்பதையும் அவர் குறித்திருக்கலாம்; ஆனால் தெளிவாகவில்லை. பின்னர் வந்த உரையாசிரியர்கள் இரண்டையும் கொண்டுள்ளனர் எனத் தெரிகிறது. ஆனால் வகைப்படுத்தும்போது நூற்பாவை ஒட்டி இளம்பூரணர் சொல்முரண், பொருள்முரண் என்னும் இரண்டு வகையை மட்டும் குறிப்பிடுகின்றார். 

பிந்தைய உரையாசிரியர்கள் ஐந்து வகையாக்கிச் சொல்லும் சொல்லும் முரணுதல், பொருளும் பொருளும் முரணுதல், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல், சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதல், சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணுதல் என விரித்துள்ளனர். இந்த வகைகளை நுட்பமாக்கிப் பிரித்துக் காண்பது பெரும்சிரமம். அதனால் இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் நுட்பம் கூடவுமில்லை. தம் புலமைத்திறத்தைக் காட்டுவதுதான் இத்தகைய வகைக்குள் வகையெனப் பிரித்துச் செல்வதன் நோக்கமாக உள்ளது. தொல்காப்பிய நூற்பாவை அப்படியே எடுத்தாளும் யாப்பருங்கலம் நூலின் விருத்தியுரையாசிரியர் சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என மூவகையாகக் கொள்கின்றார். 

நூற்பாவில் தெளிவாகச் சொல், பொருள் என இரண்டாகப் பிரித்துக் கொடுத்துள்ளார் தொல்காப்பியர். ஆகவே அதையே அடிப்படையாகக் கொண்டு விளக்கம் பெறுவது எளிதாகவும் போதுமானதாகவும் உள்ளது. வகைகளைப் பற்றிக் கவலைப்படாமல் 

சொல்லாலோ பொருளாலோ சொல், பொருள் இரண்டாலுமோ மாறுபடுவது முரண் என்று புரிந்துகொள்வது பொருத்தம். வகைப்படுத்தியே ஆக வேண்டும் என்றால் மூவகையாகக் கொள்ளும் யாப்பருங்கல விருத்தியுரையே சரியாகத் தோன்றுகின்றது. சொற்கள் மட்டும் முரண்பட்டுப் பொருள் முரண்பாடு இல்லாமல் இருப்பின் அது சொல் முரண் ஆகும். ‘காலையில் புறப்பட்டுப் போய் மாலை வாங்கி வா’ என்றால் சொல் முரண் ஆகும். காலை, மாலை எனச் சொற்கள் முரண்படுகின்றன. ஆனால் காலை என்பது பொழுதையும் மாலை என்பது பூவையும் குறிப்பதால் பொருள் முரண்படவில்லை. ‘காலையில் புறப்பட்டுப் போய் சாயந்திரம் வந்துவிடு’ என்றால் பொருள் முரண் எனக் கொள்ளலாம். காலை என்பதற்கு முரணான சொல் மாலைதான்; ‘சாயந்திரம்’ என்னும் சொல் முரணாகாது எனக் கொள்ள வேண்டும். ஆனால் பொருளில் முரண் வருகிறது. இதுவே ‘காலையில் புறப்பட்டுப் போய் மாலையில் வந்துவிடு’ என்றால் சொல்லாலும் பொருளாலும் முரண் உருவாகிறது. இதைச் சொற்பொருள் முரண் என்று சொல்லலாம். 

எழுத்து, சொல் ஆகியவற்றை மட்டும் கொள்ளாமல் பொருளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதால் முரண் என்பதை ஓர் இலக்கியக் கோட்பாடாக வளர்த்தெடுக்க முடியும். பொருளையும் குறிப்பதால் இது செய்யுளை அழகுபடுத்துதல் என்னும் வரையறையோடு முடிந்துவிடாமல் அதைக் கடந்த இலக்கியக் கோட்பாடாக வடிவம் பெறத்தக்க கூறுகளைக் கொண்டுள்ளது. செய்யுள் இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உரைநடை சார்ந்த புனைவிலக்கியத்திற்கும் இக்கோட்பாட்டை விரிவாக்கிப் பயன்கொள்ள இயலும். நவீன இலக்கியத்திற்கு இக்கோட்பாட்டைச் சொல்முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என்னும் மூவகையிலும் பயன்படுத்த முனைகிறேன். உரையாடலிலோ ஆசிரியர் கூற்றிலோ உருவாகும் நேரடி முரணைச் சொல்முரண் எனலாம். வருணனை, சம்பவம், உரையாடல், ஆசிரியர் கூற்று எனப் பல நிலைகளில் சொல்முரண் கதைகளில் உருவாகும். கதையின் உரிப்பொருளில் (கரு) தோன்றும் முரணைப் பொருள் முரண் என்று சொல்லலாம். பொருள் முரணை வெளிப்படுத்துவதுதான் கதையின் நோக்கமாக இருக்கும். கதையின் முடிவில் பொருள் முரணை வாசகர் உணர்ந்துகொள்ள முடியும். பொருள் முரணை ஆசிரியர் சொற்களால் வெளிப்படுத்த வேண்டியதில்லை. அதை உணரும்படி விட்டுவிட்டால் போதுமானது. உரிப்பொருள் முரண் உணர்த்தப்பட்ட பின்னும் அதுவே சொற்களிலும் வெளிப்பட்டிருந்தால் அதைச் சொற்பொருள் முரண் எனக் கருதலாம். 

000 

‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதை முழுக்கவும் முரணால் கட்டப்பட்டிருக்கிறது. இக்கதை சிறுமி ஒருத்தியின் நோக்கில் தன்மைக் கூற்றில் அமைந்திருக்கிறது. சிறுமியின் மனத்தில் பதிந்திருக்கும் அம்மாவைப் பற்றிய பிம்பமே கதை முழுக்கவும் விவரிக்கப்படுகிறது. அப்பிம்பத்தை உருவாக்க அம்மாவின் இயல்புகளுக்கும் பிறரது இயல்புகளுக்குமான முரண்கள் நேரடியாகக் கூறப்படுகின்றன. அச்சிறுமியை அப்பா ‘இந்தாடி கறுப்பி’ என்றே கூப்பிடுவார். அம்மாவோ ‘எத்தனை அழகு நீ’ என்பார். அம்மா வெளியூர் போயிருக்கும் நேரத்தில் அச்சிறுமி பருவம் அடைகிறாள். அதைப் பற்றி அவளுக்கு ஏதும் தெரியவில்லை. யாரும் தெளிவாக எடுத்துச் சொல்லவும் இல்லை. அவளுக்குப் பயமாக இருக்கிறது. உடனிருப்பவர்கள், உதவுபவர்களாகிய அக்கா கல்யாணி, மொட்டைப் பாட்டி, அடுத்தகத்து மாமி, எதிர்வீட்டு மாமி ஆகிய அனைவரும் சொல்பவை அவளுக்கு ஆதரவான வார்த்தைகளாக இல்லை; அவள் இயல்புகளை முடக்குபவையாக இருக்கின்றன. அம்மா இருந்திருந்தால் அந்தச் சூழலை எப்படிக் கையாள்வாள், எவ்விதம் விஷயத்தைத் தெளிவுபடுத்துவாள், எவ்வாறெல்லாம் ஆதரவு காட்டுவாள் என்பதை அச்சிறுமி எண்ணி எண்ணி அழுகிறாள். இந்தச் சொல்முரண்களே கதையின் பெரும்பகுதி. 

அம்மாவைப் பற்றிய மனப்பிம்பம் தோற்றம், செயல், சொல் எனப் பலவகைகளில் உருவாக்கப்படுகிறது. அடுப்புக்கு அருகில் நிற்கும் அம்மாவின் தோற்றத்தைக் காண்கையில் ‘எங்கிருந்தோ பறந்து வந்து அங்கே நின்ற அக்கினியின் பெண்ணாய்’ அம்மா தோன்றுகிறாள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும் அம்மாவின் செயலுக்கும் அம்மா இல்லாத போது தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும் அக்கா கல்யாணியின் செயலுக்குமான வேறுபாடு சிறுமிக்குத் தெரிகிறது. அம்மா பேசும் விதமும் பிறர் பேசும் விதமும் ஒப்பிடப்படுகிறது. விசாரிக்க வரும் பக்கத்து வீட்டு மாமிகள் ‘தாவணி போடலியா?’ என்று கேட்கிறார்கள். ‘இப்படியே இருடீம்மா… பாவாடையை அலைய விட்டுண்டு’ என்று அம்மா சொன்னது அப்போது நினைவு வருகிறது. அம்மாவைப் பற்றிய பிம்பம் உருவாவதில் அம்மாவைப் பற்றிச் சொல்வதற்கும் பிறரைப் பற்றிச் சொல்வதற்குமான முரண் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

இவ்விதம் உருவாக்கப்படும் அம்மா மனிதப் பிறவியாகவே அச்சிறுமிக்குத் தோன்றுவதில்லை. அவள் தெய்வாம்சம் பொருந்தியவள். ‘அம்மா வித்தியாசமானவள். அவள் நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும். அவளுக்கு எல்லாமே அழகுதான்’ என்றும் ‘அம்மா சிருஷ்டிப்பவள். ஆனந்தத்தை, உத்ஸாகத்தை, அழகை எல்லாம் தலையைத் திருப்பி ஒரு புன்னகையான ஜாலம் செய்து வரவழைப்பவள்’ என்றும் கதையின் இறுதிப் பகுதியில் தொகுத்தும் சொல்லப்படுகிறது. இப்படிச் சிறுமியின் மனதில் இருக்கும் அம்மாவைப் பற்றிய பிம்பம் சிதைந்து போவதுதான் கதையில் நிகழும் பொருள் முரண். 

பருவம் அடைந்ததால் ஏற்பட்ட மனக்குழப்பம் அனைத்தும் அம்மா வந்ததும் அவளால் தீர்ந்துவிடும் என எதிர்பார்த்திருக்கிறாள் அச்சிறுமி. அம்மா திரும்பி வருகிறாள். ‘வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப் போகிறேன் உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன்’ என எதிர்பார்த்து எதிரே சென்று நிற்கும் சிறுமியை அம்மா பார்க்கிறாள். ‘உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இது வேற இனிமே ஒரு பாரம்’ என அம்மாவின் வாயிலிருந்து சொற்கள் சுளீரென்று வருகின்றன. சிறுமியின் எதிர்பார்ப்பைச் சிதைத்துவிடும் அம்மாவின் செயலையே தலைப்பு ‘கொலை’ எனக் குறிக்கிறது. அது மட்டுமல்ல, அம்மாவைப் பற்றிச் சிறுமியின் மனதில் இருந்த பிம்பத்தை அம்மாவே கொலை செய்து கலைத்துவிடுகிறாள். இதுதான் கதை காட்டும் பொருள் முரண். 

அம்மாவின் சொற்களோடு கதை முடியவில்லை. அதற்குப் பின் சில பத்திகள் எழுதப்படுகின்றன. அவற்றில் இப்படிச் சொல்லப்படுகிறது: ‘அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள். அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளை விட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத்தனமாக ஹதம் செய்கிறது.’ தேவ ஸ்வரூபம் x மனித அம்மா எனக் கதையின் பொருள் முரணை இப்பகுதி வெளிப்படையாகச் சொல்கிறது. ஆகவே இதைச் சொற்பொருள் முரண் என்று சொல்லலாம். 

கதையின் உரிப்பொருளை உணர்த்தச் சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் ஆகிய மூன்றும் இக்கதையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சொல் முரண்கள் வெளிப்படையானவை. பொருள் முரணை வாசகர் உணர்ந்துகொள்ள முடியும். ‘இது வேறே இனிமே ஒரு பாரம்’ என்னும் அம்மாவின் சொற்களோடு கதை முடிந்திருக்கலாம். அல்லது அதன் பின் எழுதப்படும் ‘யாரைக் குற்றம் சாட்டுகிறாள்? ஒலியில்லாக் கேவல்கள் நெஞ்சை முட்டுகின்றன’ என்னும் வரிகளோடுகூட முடிந்திருக்கலாம். கதை உணர்த்த முயலும் பொருள் முரண் அவ்விடத்திலேயே உருவாகிவிடுகிறது. ஆனால் அதற்கு மேலும் சில பத்திகள் எழுதித் ‘தேவ ஸ்வரூபம், மனித அம்மா’ என்னும் முரண் பற்றிப் பேசும் சொற்பொருள் முரண் பகுதி கதைக்குக் கூடுதலாக அமைந்துள்ளது. 

000 

பாடத் திட்டத்தில் வைக்கப்படுபவை பெரும்பாலும் இத்தகைய முரண்களைப் பேசும் கதைகளாகவே இருக்கின்றன. அதுவும் சொல் முரண், பொருள் முரண் ஆகியவற்றோடு சொற்பொருள் முரண் அமையும் கதைகள் பாடத்திட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவை. ஏனெனில் பாடம் எதையும் உய்த்துணர வைப்பதில்லை. எல்லாவற்றையும் வெளிப்படப் பேசிவிடுதல் அதன் இயல்பு. ‘ஐயந் திரிபறக் கற்றல்’ என்பது அதுதான். பொதுவாக அம்பையின் கதைகள் எல்லாவற்றையும் வெளிப்படப் பேசுபவை. அதுவும் அவரது தொடக்க காலக் கதைகளில் இவ்வம்சம் மிகுதி. இந்தக் காரணத்தாலேயே ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதை தொடர்ந்து பாடத்திட்டத்திற்குத் தேர்வு பெறுகிறது என்பது என் அனுமானம். 

000 

பயன்பட்ட நூல்கள்: 

1. அம்பை, சிறகுகள் முறியும், 1976, மதுரை, பி.கே.புக்ஸ். 

2. கமலா முருகன், தமிழ் இலக்கிய வரலாறு, 2009, சென்னை, சாரதா பதிப்பகம். 

3. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, 2012, இருபத்து ஒன்பதாம் பதிப்பு, மதுரை, மீனாட்சி புத்தக நிலையம். 

4. ஸ்ரீசந்திரன், தமிழ் இலக்கிய வரலாறு, 2001, எட்டாம் பதிப்பு, சென்னை, வர்த்தமானன் பதிப்பகம். 

5. பூவண்ணன், தமிழ் இலக்கிய வரலாறு,1984, சென்னை, வர்த்தமானன் பதிப்பகம். 

6. பாக்யமேரி, இலக்கணம் இலக்கிய வரலாறு மொழித்திறன், 2013, சென்னை, பூவேந்தன் பதிப்பகம். 

7. அடிகளாசிரியர் (ப.ஆ.), தொல்காப்பியம் பொருளதிகாரம் – செய்யுளியல் இளம்பூரனர் உரை, 1985, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம். 

8. க.வெள்ளைவாரணன் (உரைவள ஆசிரியர்), தொல்காப்பியம் உரைவளம் செய்யுளியல், 1989, மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம். 

9. வே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (ப.ஆ.), யாப்பருங்கலம், 1960, சென்னை, கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்.

One Reply to “‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ : மூவகை முரண்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.