அம்பை – குறிப்புகள்

இணையத்திலும் புத்தகங்களிலும் கிடைத்த அம்பையைக் குறித்த பதிவுகளின் தொகுப்பு

பெண்ணிய அணுகுமுறைகள்: டாக்டர் (திருமதி) இரா. பிரேமா

பெண்கள் பத்தாண்டு 1975-ல் தொடங்கிய பின் பல நாவலாசிரியர்கள் எழுத்தில் பெண்ணியச் சிந்தனைக் கருத்தாக்கம் கொண்டது. குறிப்பாக வாஸந்தி, அனுராதா ரமணன், ஜோதிர்லதா கிரிஜா போன்ற பெண் எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களில் பெண் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எழுதத் தொடங்கினர். வாஸந்தி, பட்டணத்தில் வாழக் கூடிய நவநாகரிகப் பெண்மணிகளின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை ஆய்ந்து, தன் படைப்புகளில் படைத்துள்ளார். மேலும், இவர் சமூக நிலையில் வரதட்சணை பிரச்சினை, கட்டுப்பாடற்ற ஆண் பெண் நட்பு, பெண்களின் பாலியல் பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி சிந்தித்து எழுதியுள்ளார்.

எண்பதுகளில் காவேரி, அம்பை போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண்ணியக் கோட்பாட்டைஅடியொற்றி உரத்த சிந்தனையோடு எழுதத் தொடங்கினர். அம்பையின் ‘சிறகுகள் முறியும்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கள் இக் கோட்பாட்டை அடியொற்றியன.

“பெண் உடைமைப் பொருள் அன்று; அவளும் ஓர் உயிரி; தனக்கு என்று தனி விருப்பங்களும், சுய மரியாதையும் உடையவள்” என்பதை அவர் படைப்புகள் வற்புறுத்திக் கூறுகின்றன. பெண், கணவன் என்ற உறவுக்காகத் தன்னை அழித்துக் கொள்வதோ, எல்லாவற்றையும் முழுமையாகத் தியாகம் செய்வதோ, அடங்கிப் போவதோ தேவையில்லை என உரிமைக் குரல் எழுப்புகிறார் அம்பை. மேலும் அவரின் சிறுகதைகளும், “உணர்வுகள் ஒடுக்கப்பட்டு வாழ வேண்டிய நிர்பந்த நிலைய” எதிர்த்துக் குரல் கொடுக்கின்றன. இவரது ‘இலக்கியப் பார்வை’ உறுதியான தெளிவான அசைவிலாப் பாதையாக அமைந்துள்ளது.

சிறுகதைகளின் மூலம் பெண் விடுதலை பற்றித் தீர்க்கமான குரல் எழுப்புதலே இவரது அடிப்படைக் கொள்கை. சொல்ல வந்ததைத் தீவிரமாகச் சொல்லல், மனதில் பட்டதை அப்படியே எழுத்தில் வடித்தல், எழுத்துக் கூச்சமின்மை, எழுத்தில் ஆண்/பெண் பேதமின்மை என்பன பிற இலக்கியப் படைப்பாளர்களில் இருந்து இவரைத் தனித்து இனம் காட்டுகின்றன.

“பெண்கள் சாக முடியாது, ஏனென்றால் அவர்கள் வாழவில்லை” என்று குமுறுவதும்,

“வருடத்திற்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள், இது தவிர இட்லிகள், வடைகள் அப்பளங்கள், பொரியல்கள், குழம்புகள், எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள், எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்” என்று பெண்ணின் வாழ்வை வருத்தத்துடன் கணக்கிடும் இவர்,

“பெண்கள் மூளையின் இழுப்பறையில் மட்டன், புலவு, மசாலா, பூரி, தனியாப் பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று இவற்றைப் போட்டு நிரப்பியிரா விட்டால், ஒரு வேளை அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களைக் கண்டு பிடித்திருக்கலாம். கைலாஸ பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம். குகைக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். படித்திருக்கலாம். போர்கள், சிறைகள், தூக்கு மரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கி இருக்கலாம்” என்கிறார் அம்பை.

அதாவது பெண்களும் ஆண்களுக்குச் சமமாக அறிவியல், வன்கலை மற்றும் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருக்க முடியும்; அவர்களை முன்னேற விடாமல் மழுங்கடித்தது சமையலறையும் வீடும் என்கிறார். இது பெண்ணியப் பார்வையின் சில பரிணாமங்கள் ஆகும்.

oOo

சுந்தர ராமசாமி

அம்பையின் சிறகதைகளைப் பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம். வாழ்வின்மீது கவியும் துன்பங்களையும் தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம். நுட்பமும் கலை அழகும் கொண்டவர் என்றாலும் வாழ்வு பற்றிய இவரது அறிவுப்பூர்வமான புரிதல்கள் அனுபவங்களை வழிநடத்துவதில் கதைகளின் உணர்வு நிலைகள் பாதிக்கப்படுகின்றன.

ஜலான் தம்பி அப்துல்லா, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர் – இலக்கியச் சிந்தனையின் சிறுகதைத் திறனாய்வுக் கருத்தரங்கக் கூட்டத்தில் 25.08.1985 அன்று படிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.

‘மாதவன் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற முன்னுரை, கலைஞன் பதிப்பகம், 1985.

oOo

அனார்

வரையறைகளுக்கு அப்பால்: கனன்று ஒளிவிடும் அம்பையின் கதை எனும் நெருப்பு – இதமி:

ஆயிரத்தியொரு இரவுகள் எனும் அராபிய நெடுங்கதையை வெஞ்சினமும் அதிகாரமும் கொண்ட மன்னன் ஷெஹ்ரியாருக்கு அவனது மரண தண்டனை தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் பெண்களைக் காப்பாற்றும் பொறுப்போடு கதை சொல்லிக் கொண்டிருப்பாள் ஷெஹர் ஸாத் எனும் பெண். அவளுடைய கதைகள் தற்காப்புக் கேடயம் மட்டுமல்ல, அவளிடமிருந்த முதலும் கடைசியுமான ஆயுதமும்கூட. அவளது கதைகள் தான் வியூகமாக செயற்பட்டன. அங்கே எவருடைய சாணக்கியமும் உதவவில்லை. பெண்ணொருத்தி ஒவ்வொரு இரவும் முடிவற்ற கதையைச் சொல்லி சொல்லி இரவுகளை நிறுத்தி வைத்திருந்தாள். மரணத்தை நிறுத்தி வைத்திருந்தாள். கதைகள் மரணத்தை திரும்பிச் செல்ல வைப்பவையா? காலத்தை மொழியின் வலைக்குள் பிடித்துக்கொள்ளும் வல்லமை கதைகளுக்கு உண்டா? ஷெஹர் ஸாத் எனும் பெண் கதைகளாலான ஆயுதமாவாள். அம்பையின் ஆயுதமானது சுயமுள்ள பெண்ணின் ஆன்மாவிலானதாகும். தேடல்களாலும் உணர்ச்சிகளாலும் புடம் போடப்பட்ட ஆயுதம்.

என்னால் இந்தக் கடின உழைப்பாளியின் சிறுகதைகளை வாசித்து விளங்கிட முடியுமா என்னும் திகைப்பே ஆரம்பத்தில் தோன்றியது. உணர்ச்சி நிலைகளின் மொத்தக் கொதிப்பை அம்பை எங்கிருந்து பெற்றிருக்கக் கூடும்?. கால காலமாக நெருப்பெரியும் சமையலறை அடுப்புகளில் இருந்தா? சாமி அறையின் தீபங்களில் இருந்தா? வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கும் பெண்ணின் வயிற்றில் இருந்துதானே எல்லாப் பெண்களும் பிறந்திருக்கின்றார்கள். அதனால் நெருப்பு, கொதிப்பு என்பது தன் தாய் வயிற்றிலிருந்தும் தாய் வீட்டிலிருந்தும் பெற்றுக் கொண்டதாக இருக்கலாம்.

சிறுகதைப்பரப்பில் அம்பையின் தனித்துவமான அடையாளமானது ஆழ வேரூன்றியதும் முன்னிலை வகிப்பதுமாக இருக்கின்றது. முன்னோடியான புனைகதையாளராகவும் ஆண் பெண் என்ற பிரிப்புகளுக்குள் நிற்காதவராகவும் எல்லைகள் வரையறைகள் அல்லது பேணப்பட்ட வழக்கங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் பயணித்தவராகவும் அம்பை தன்னை நிறுவ எழுத்துக்களினூடே தொடர்ந்து முயன்று வருபவர். காட்டின் இருளில் மெல்லக் கசியும் மூலிகை வாசனையை காற்று சிறுகச் சிறுக அவிழ்த்து விசிறுவதுபோல கதைகளின் வெளியில் அம்பை சலனங்களை தோற்றுவிக்கின்றார். ஒரு வகை இசைத் தன்மையான அந்த அலைகள் அவரது மொழியைத் தூக்கிப்பறக்கின்றன. நெகிழ்த்தியும் இறுக்கியும் பிணைந்தும் விலகியும் தோன்றி மறையும் ஈர அலைகளாக.

மனங்களின் உள்ளார்ந்த அடுக்குகளில் கீறப்பட்ட சுவரோவியங்களின் சிதிலங்களையும் தாண்டி கலைத்துவமான சித்திரங்களை ஊடுருவி நோக்கும் அவரது பார்வையை பாராட்டி வியப்பதா அல்லது வாசகருக்கும் அதனைப் புரியவைக்கும் அம்பையின் கலை மனதை வியப்பதா?

சொல்லாமல் சொன்னவற்றின் வெம்மையும் அந்தரத்தில் விடப்பட்ட மௌனவெளியின் குளிர்விறைப்பும் எம்மை நிச்சலனத்தின் முன் நிறுத்துகின்றன.

பெண்ணின் முழுப் பரிமானத்தையும் கதை சொல்பவரின் ஆழ்ந்த கலைத்துவ தரிசனங்களையும் வாழ்க்கையை பிரக்ஞையோடு எதிர்கொண்ட ஒற்றைப் பெண்னொருவரின் சாகசத்தையும் அனுபவங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடையே காணும் உருமாற்றங்களையும் அம்பையின் எழுத்துக்கள் நிகழ்த்துகின்றன.
பண்பாட்டின் கலாச்சார நிர்ப்பந்தங்கள் தொன்மமான ஆதிக்க திணிப்புகள் என்பன அம்பையின் கதைகளில் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. வாசகர்களை பல்வேறு சமயங்களில் குற்றவுணர்ச்சிக்கு தள்ளுகின்றன. தொன்று தொட்டு முன்னெடுத்து வரும் பழக்கங்களை ஒடுக்குமுறைகளை சுக்குநூறாக உடைத்தெறிகின்றன.

அம்பை தன் சிறுகதைகளில் வலியுறுத்துவது தன் நம்பிக்ககையின் அடிப்படையிலான அற உணர்வே ஆகும். நன்மை, தீமை என்ற பிரிப்புகளற்ற இடத்தில் அம்பை தன் கதைகளோடு நிற்கிறார். அதுதான் அவரது பெருமிதம். தன்னை அதனூடாகவே எழுத்திற்கு அர்ப்பணித்திருப்பவர் அம்பை.

அம்பை பெண்ணை அதன் முழு அர்த்தத்தில் வெளிக்கொணருகின்ற அதே சமயத்தில் பெண்ணானவள் தன்சுயத்தை மீட்டு தக்க சமயத்தில் முடிவுகளை எட்டக்கூடிய ஆற்றலுள்ள பெண்களையும் அடையாளப்படுத்துகின்றார். அவரது கதைகளில் அவர் முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவையாகும். பெண்கள் பற்றி இருந்த மதிப்பீடுகளை எழுத்தின் மூலமும் செயற்பாட்டின் மூலமும் மீள் நிர்ணயம் செய்கிறார். விரிவான சமுக மாற்றங்கள் இடம்பெற்ற இன்றைய காலத்திலும் ”அம்மா ஒரு கொலை செய்தாள்”, ”காவுநாள்” போன்ற கதைப்பெண்கள் நம் கண்முன்னே மாறுதலற்றும் ஒலிகளற்றும் நம்மருகிலேயே உள்ளனர். எழுத்தாளரின் நுணுக்கமான இந்தப்பின்னல் இணைப்பு அவரது சுயம் சார்ந்த ஆளுமையின்பாற்பட்டது.

கற்பு பற்றிய கற்பிதங்களும் கருத்து நிலைகளும் பால் தன்மை பற்றிய புரிதல் கொண்ட அம்பையின் கதைப் பெண்கள் கொண்டுள்ள தீர்மானங்கள் அன்றைய நாளில் எவ்வளவு சவால் மிகுந்ததாக இருந்திருக்கும். அம்பை தனது ஆரம்ப நாட்களில் அவர் பெண்ணாக இருப்பதற்காகவே மிகுந்த புறக்கணிப்புகளை எதிர்ப்புகளை எதிர் கொண்டிருப்பார் என்பதை பூரணமாக உணரமுடிகிறது.

”நிலவைத் தின்னும் பெண்” சிறுகதையில் அப்பெண் எதிர்கொள்ளும் காதலும் துரோகமும், பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான அனுபவப் பகுதியைக் காண்பிக்கின்றது. கதைநிகழும் கணமும் களமும் கண்முன்னே துல்லியமாகத் தெரியும் விதம் அந்நியோன்யமான உணர்வு மொழியில் எழுதியிருப்பார். மேலும் இக்கதையில் பெண் உடல்பற்றிப் பேசுகிறார். நுண்மையான பட்டு நூலிழைகளால் அங்கே பெண் உடலை பின்னுகிறாள். பழுக்கக் காச்சும் தீயின் கங்குளால் நமக்கும் அவ்வனல் வெம்மை தாவுகின்றபடியாக.

இவ்வளவு தூரம் பெண் உடலைத்திறந்து தரிசிக்க முடியுமா என அதிசயிக்க வைக்கின்ற வகையில், நிலவைத் தின்னும் சிறுகதையில் ஒரு முதிர்ந்த பெண் இளம் பெண்ணுக்கு எழுதும் கடிதத்தின் சிறு பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

“அதனால் எல்லாவற்றையும் பிரி சகு. கலை – கலைஞர், இரவு – நிலவு, பகல் – சூரியன், ஒலி – இசை எல்லாவற்றையும் பிரி. எதற்குள் எதுவெனத் தெரியாமல் கலந்து கிடக்கும். அதைப் பிரிக்கும் போது அவை ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது தெரியும். பெண் – தாய்மை இதையும் பிரி. ஆமாம் அதையும். அவை பிரிக்க முடியாமல் இணைந்தவை என்னும் பிரமை இருக்கிறது. அதை உடை, அப்போதுதான் யதார்த்தத்தை’யும் தற்செயல் நிகழ்வையும் பிரிக்க முடியும். அனுபவத்தையும் வலியையும் பிரிக்க முடியும். இரண்டுக்கும் வேறு வேறு இலக்கணங்கள்”.

பெண் உடல் ஒரு ஆயுதம். அதே நேரம் ஒரு திறவுகோல் தான் எனும் புதையல் அங்குண்டு. முடிவற்ற விரிவும் புதிருமான சுழற்சியைக் கொண்டிருப்பது. கனவுக்குள் சுநதந்திரத்தை உருவாக்குதல் என்பதும் பின் கனவை வாழ்தலாகவும் பின்னும் அதனைக் கடந்து உயர சீறிப் பாய்கின்றவளாகவும் உடலே பெண்ணைப் பழக்குகின்றது. ’கைலாசம்” கதையில் வரும் பெண் கமலம் அற்புதமான பெண்மை நிறைந்தவள்.

“அவனை மணந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் காதல் புரியவில்லை, கைலாசம் மோகம் புரிவது எளிது. காதல் அப்படியல்ல. பெண் – ஆண் உறவு மிகவும் சிக்கலானது. அதில்தான் எத்தனை நெருக்கம், எத்தனை விலகல்? எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை? எத்தனை வன்முறை, எத்தனை மென்மை? எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு? எத்தனை ஆதுரம், எத்தனை ஆவேசம்? காதலிக்கும் நபரையே விசம் வைத்துக் கொல்லலாம் என்று ஆத்திரம் வருகிறது. தணிகிறது. பந்தம்போல் கட்டிப்போடுகிறது. கூடுபோல் ஆசுவாசம் தருகிறது. தகிக்கிறது. குளிர்விக்கிறது. என் உடலை ஒரு பிரதியாகப் பார்க்கும் போது, அது ஒரு நிலைத்த பிரதியாக இல்லை கைலாசம்“

பெண்ணுக்குரிய காமம் என்பது முதலில் முழுமையான கலைத்துவத்தைக் கோருவது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களில் உள்ளிருக்கும் சுயநலங்கள் தவறுகள் துரோகம் அதனால் விழையும் மனநெருக்கடிகள் விடுவிக்க முடியாதபடி ஏற்படும் நீண்டகால உளச்சிக்கல்கள் இந்தக் கதைகளில் அம்பை உணர்த்தும் இடங்கள் அவரை வித்தியாசப்படுத்துகின்றன. அம்பையின் நோக்கம் இத்தகைய போக்குகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதாகவோ தவிர்க்க முடியாமல் இவ்விதம் நேர்ந்துவிடும் அனுபவங்களை வெளிப்படுத்துவதாகவோ இருக்கின்றது என நாம் கருதமுடியும்.

”அம்மா ஒரு கொலைசெய்தாள்” – கதையை ஒரு ஆணினால் என்றைக்குமே எழுத முடியாது. பருவம் என்றால் என்ன என்ற கேள்வியை யோசிக்காத சிறுமிகள் இல்லை. அந்தக் கேள்வியில் இருந்துதான் சிறுமிகளின் குதூகலங்களின் மீது விழும் முதலாம் வெட்டுக்கள் தொடங்குகின்றன. சிறுமிகள் பெரிய மனுஷிகளாகிவிடுகின்ற பிற்பாடு தேவதைகள் போன்ற அம்மாக்கள் மனித அம்மாக்களாக ஆகிவிடுகின்றனர். காரணமற்ற குற்ற உணர்ச்சி தாழ்வுமனப்பான்மையில் உள்ளொடுங்குதல் நிர்ப்பந்தங்களுக்கும் கண்டிப்புகளுக்கும் ஆட்படத் தொடங்கிவிடும் நிலைக்கு பருவத்தின் ஆரம்பத்திலேயே பெண் தள்ளப்படுகிறாள் அதனையே இக்கதை வலுவாகப் பேசுகிறது. அம்பையின் பிற கதைகளில் இடம்பெறுகின்ற அம்மாக்கள் பெருமளவு மதிப்பிற்குரிய அம்மாக்களே. அதைவிடவும் வெகுசாதாரண அம்மாக்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களது கதைகளை அம்பையைத் தொடர்ந்துவரும் இன்னொரு பெண் எழுதக்கூடும். 

பெண்கள் சார்ந்துள்ள தந்தையர் கணவன்மார் சகோதரர்கள் தோழமை பற்றிய கணிப்புகள் பல்வகையான மனித உறவு நிலைசார்ந்த சந்தர்ப்பங்களை சிறுகதைகளில் பிராதனப்படுத்துபவராக இருக்கிறார். மேலும் ஆணின் ஆதிக்கம் அரசியல் சுயநல எதிர் நடத்தைகள் பற்றியும் வாழ்வின் மேடு பள்ளங்களை தடுமாற்றங்களை துரோகத்தை தன் ஆன்மாவினால் ஆராய்கின்றார். பாத்திரங்களின் மனதிலிருந்து வாசிப்பவரின் மனதிற்கு கூடு பாய்வதான ஒரு மாயப்பரிமாற்றத்திக்கு உள்ளாகின்றோம். பெண் வாழ்வதற்கும் வாழ நினைப்பதற்கு இடையே ”முறிந்த சிறகுகள்” கதைக்குள் ஒருத்தி அல்லாடுகின்றாள். அவள் மீள முடியவில்லை என்றானபின் நம்மாலும் மீளமுடிவதுமில்லை.

அம்பையின் கதைக்களங்கள் பல்வேறு அம்சங்களோடு விரிவுடையன. அவரது பயணங்கள் அத்தகையதாக அமைந்துள்ளது. சவாலான பல விடயங்களையும் அதனூடாக அனுபவங்களையும் படிப்பினைகளையும் பயணங்கள் அவருக்குக் கொடுத்திருக்கின்றன. இத்துணிச்சல்மிக்க பயணங்கள் வேறு பெண்களுக்கு எளிதில் கிடைத்துவிட முடியாததுமாகும். அம்பை தன்னை தயார்படுத்திய நிலையில் வைத்திருக்கின்றார். அம்பையின் பயணங்கள் நாம் செல்லாத பயணங்களாகும். பெண் எழுத்தாளர்களுக்கு பயணங்கள் வாய்ப்பது மிக அரிதான ஒன்றாகவும் தமிழ்ச்சூழலில் காணப்படுகின்றது. அம்பை தன் தொடர்ச்சியான பயணத்தின் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட அனைத்து கட்டுமானங்களையும் தகர்த்தவர். அவரது தொகுப்புகளில் பயணம் பற்றிய கதைகளை தனியான வகைப்படுத்தலைக் கொண்டும் நோக்கலாம்.

பயணங்கள் பற்றி ”வற்றும் ஏரியின் மீன்கள்” சிறுகதையில் அம்பை குறிப்பிடுகிறார். “பயணங்கள் அவள் வாழ்க்கையின் குறியீடாகிவிட்டன. இலக்குள்ள பயணங்கள், நிர்ப்பந்தப் பயணங்கள், திட்டமிட்டு உருவாகாத பயணங்கள், திட்டங்களை உடைத்த பயணங்கள், சடங்காகிப்போன பயணங்கள் “ என விபரிக்கிறார்.

வீதிகள் சனநெரிசல் வாகன தரிப்பிடங்கள் சாரதிகள் ரயில் நிலையங்கள் நிலத்தின் காலநிலைகள் என கதையோட்டத்தோடு பிரதானப்படுத்துகின்றார். சாதாரண மனிதர்களிடம் ஏற்படும் உறவு நட்பு அனைத்தையும் பயணக் கதைகளில் அம்பை எழுதுகிறார். இயல்பாகவே அம்பையிடம் உள்ள அவதானம். ஒருவகை கரிசனம் பெண் சார்ந்தே இருக்கின்றது. ஒவ்வொரு கதைகளுடனும் உறவாடும் திறன் என்பது ஒரு ஆணுக்கு ஏற்படும் வாசிபனுபவத்தை ஒத்ததல்ல பெண்ணுக்கு நேரும் வாசிப்பு. வாசிப்பவரின் மன உணர்தலுக்கு எந்தளவான ஆற்றல் இருக்க முடியுமோ அவ்வளவிற்கு இக்கதைகளின் தனிமை வெளி, மௌனங்கள் இலக்கிய ஆற்றல் என்பனவற்றை. ஒருவர் உள்வாங்க முடியும். சில வேளை கதைகளின் விபரிப்பு அல்லது கதையளத்தல் சற்றுக் கூடிவிட்டது எனத் தோன்றினாலும் அது கதையின் ஆன்மாவை நட்டாற்றில் விட்டுச்செல்லவில்லை. 

”ஒரு இயக்கம் ஒரு கோப்பு சில கண்ணீர்த்துளிகள்” சிறுகதை முக்கியமான பதிவும் படைப்புமாகும் இக்கதையின் விபரிப்பும் மன உணர்வுகளும் கதை சொல்பவரினது மனச்சாட்ச்சியின் குரலும் “சதாத்ஹசன் மண்ட்டோ“ வைப் போன்றது.. ஸகீனாவின் அனுபவங்கள் உணர்த்தும் அரசியல் முக்கியமானது. கதையில் காலா என்பவரது முதிர்ந்த பாத்திரம் செல்வி சாரு என்கின்ற நபர்கள் என நீளமான இக்கதையில் பல கிளைக்கதைகளையும் இந்து முஸ்லிம் அரசியல் கலவரங்களின் பிரதிபலிப்பையும் இருமதங்களிடையே உருவாக்கப்பட்ட பிளவுகள் உக்கிரமான நிகழ்த்தப்பட்ட கலவரம் வலுவான சித்தரிப்புகளாக இருக்கின்றது.

“அது முஸ்லிம் அதைக் கொன்னுட்டேன்” என ஒரு குழந்தை தன் பொம்மையை உடைத்துவிட்டுச் சொல்லும் என்கின்ற பகுதியும், “நான் பச்சைப்புடவை வாங்கியபோது, இந்த துலுக்கப் பச்சையை ஏன் வாங்கினாய்? என்று அம்மா கூறியது“ என வரும் பகுதியும் பல்லாயிரம் அர்த்தம் கொள்கின்றது.

இதே சிறுகதையில் அபூர்வமான மனிதராக வரும் காலாவிடம் கதைப்பெண் உரையாடும் ஒரு பகுதி இருக்கிறது. “சும்மா இருங்கள் காலா. உங்களைப் போன்றவர்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை காந்தியுடன் கழித்து, சுதந்திரத்துக்காக உழைத்த உங்களைப் போன்றவர்கள், அதன் பின்பு ஏன் ஆசிரமங்களிலும், சிற்றுர்களிலும் முடங்கிக் கொண்டீர்கள்? அரசியல் லாபம் வேண்டாம் என்று ஏன் தீர்மானித்தீர்கள்? காந்திமேல் வைத்த பாதிப் பக்தியை நாட்டின் மேல் வைத்திருந்தால் நம் நாட்டு அரசியல் மாறி இருக்கும். யார் உங்களை இந்த தியாகம் செய்யச் சொன்னது ? 1942இல் இந்த வீதிகளில் நீங்கள் எல்லாம் பேட்டை ராணிகள்போல் ஊர்வலம் போனீர்கள். யாருக்கும் பயப்படாமல். நீங்கள் எங்களுக்குத் தந்திருப்பதெல்லாம் இந்த பிம்பங்களைத்தான். கொடியை உயர்த்தியபடி நீங்கள் போன ஊர்வலப் புகைப்படங்களை எத்தனை தடவை நாங்கள் பார்த்து புல்லரித்திருப்போம்? என் ஆத்திரத்தைக் கிளப்பாதீர்கள். நீங்களும் உங்கள் கதறும் ராட்டையும், காந்தியும் வெறும் சின்னமாகி விட்டீர்கள்“.

வன்முறைகளது ஒரு வகை முகமும், அதற்கு நட்பும் தோழமையும் உறவுகளும் பலியாகும் இடங்களும் அம்பை விபரித்துச் செல்லும் இடங்களில் நமது இயலாமையும் கரிய புகையாய் கவிகின்றது. போரும் கலவரங்களும் நசுக்குகின்ற அனைத்து நிலங்களுக்கும் மனித இனங்களுக்கும் பொருத்தப்பாடுகளைக் கொண்டுள்ளது இச்சிறுகதை.

இத்துடன் இணைந்ததாகவும் வேறு கோணங்களில் அம்பையின் உணர்வோட்டங்கள் பயணிக்கின்றன. ” பயணம் 20”, ”பயணம் 7” இந்தக் கதைகளும் கூட சிந்திக்கத்தக்க மத, இன முரன்பாடுகள் பற்றிய பக்கங்களை அடையாளப்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பில் பல சிறந்த கதைகள் விடுபட்டுள்ளதற்கான. காரணம் எனக்கு கொடுக்கப்ட்ட நூலின் பக்க வரையறையாகும். அம்பையின் தொகுப்புகளான ”சிறகுகள் முறியும்”, ’வீட்டின் மூலையில் சமையல் அறை”, ”காட்டில் ஒரு மான்”, ”வற்றும் ஏரியின் மீன்கள்”, ”கறுப்புச் சிலந்தியுடன் ஒரு இரவு” – இவ் ஐந்து தொகுப்புகளிலிருந்தும் சிறுகதைகளை தேர்ந்திருக்கிறேன். அதாவது ”அடவி”, ”புனர், பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்”, ”கூடத்தில் துள்ளிய கன்றுக்குட்டி” என பல நல்ல சிறுகதைகளை இணைக்க முடியாமல் விடுபட்டுப்போனது தனிப்பட்ட வகையில் எனக்கு மிகுந்த கவலையைத் தருவன.. அவற்றை வாசகர்கள் தேடிப்படிக்க முடியும் இவ்வாறான சில கதைகள் விடுபட்ட நிலையில் அந்தேரி மேன்பாலத்தில் ஒரு சந்திப்பு என்ற தொகுப்பிலிருந்து கதையை தேர்வு செய்யாமல் தவிர்த்திருக்கிறேன்.

வேறொருவருக்கு அவரின் ரசனையின் அடிப்படையில் இத்தொகுப்பில் விடுபட்ட கதைகளில் சிறப்பான கதைகள் இருப்பதாகத் தோன்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்கின்றேன்.

தலை கீழாக உயரத்திலிருந்து வீழும் வாள் சிலரை குத்தி விடுகிறது. சிலரின் அருகே விழுகிறது. சிலர் தப்பி விடுகின்றனர். சிலருக்கு வெட்டுத் தழும்புகள் வாழ்க்கை அப்படிப்பட்ட கூரான வாள் எனில், அம்பையின் கதைகள் நமக்குத் தடுத்தாளத் தெரிந்திருக்க வேண்டுமென்பதையே வலியுறுத்துகின்றன.

அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர். அம்பையின் சிறுகதைகள் வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியை கொண்டிருக்கின்றன. ஷெஹர் ஸாத்தின் கதைகளைப்போல மரணத்தை நிறுத்தி வைக்கும்நிர்ப்பந்தங்களில் இருந்து எழுந்தவையல்ல. அம்பையின் கதைகள். பெண்ணானவள் கொல்லப்படுகின்ற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை. பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னை பரிபூரணமாக அர்ப்பணித்தவர். சமகாலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் அம்பையின் மொழியானது எந்த இருட்டிலும் கனன்று ஒளிவிடும் உயிர் நெருப்பு…

அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்“ நூலுக்கு எழுதிய முன்னுரை.

oOo

அம்பை – ஆசிரியர் குறிப்பு

எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட ‘அம்பை’யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம்புத்தூரில் (17-11-1944). சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலையும் , வரலாற்றில் முதுகலைப் பட்டமும் டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கன் ஸ்டடீசில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியும் கன்னடமும் அறிந்தவர்; ஆராய்ச்சி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் பணியாற்றியவர்; SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்னும் அமைப்பின் நிறுவனர்; இயக்குநர்.

1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். இவருடைய முதல் நாவலான அந்திமாலை இளம் வயதிலேயே வெளிவந்து கலைமகள் பரிசை பெற்றுத் தந்ததோடு இவருக்கு பெரும் புகழையும் கொடுத்தது. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று இவர் அறியப்படுகிறார்.

மரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அம்பை மறுத்தாலும், தன் சுதந்திரத்தை தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்

இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. பெண் இசைக் கலைஞர்கள், நடன மணிகள் பற்றிய இவரது நூல் Singers and the Song, Mirrors and Gestures எனும் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. The Economic and Political Weekly, The Times of India, Free Press Bulletin, The Hindu போன்ற இதழ்களில் கட்டுரைகளும் நூல் விமரிசனங்களும் எழுதி வருகிறார்; பல ஆவணப் படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி, உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.

‘அந்தி மாலை’  (நாவல், 1966), ‘நந்திமலைச் சாரலிலே’ (குழந்தைகள் நாவல், 1961), ‘சிறகுகள் முறியும்’ (சிறுகதைகள், 1976) – இவை நூல் வடிவில் வெளிவந்துள்ள படைப்பு கள். ‘தங்கராஜ் எங்கே?’ என்ற குழந்தைகள் திரைப் படத்துக்காக வசனம் எழுதியிருக்கிறார்.

இவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். “பயணப்படாத பாதைகள்” என்ற ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு “சொல்லாத கதைகள்” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

கடந்த நாற்பதாண்டு காலமாக தமிழ் எழுத்துலகில் மட்டுமன்றி தன் செயல்பாட்டை பெண்கள் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் விரித்து தன் பதிவுகளை இலக்கியத்துக்கும் அப்பால் வேறு வடிவங்களுக்கும் கடத்தியவர் என்ற வகையில் அம்பை அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2008ம் ஆண்டு இயல் விருதை வழங்கியது.

சொல்வனம் இதழில் அம்பை எழுத்துகள்

இரவு நேர உரையாடல்: அம்பை

தமிழ் இனி 2000 கருத்தரங்கின் தன்னிச்சையான ஒரு நிகழ்வாகக் கடைசி நாளன்று இரவு ஒன்பது மணிக்குப் பெண்கள் அமர்வு ஒன்று நடந்தது. இலங்கையிலிருந்து வந்திருந்த பெண்களும், சென்னைப் பெண்களும் வேறு இடத்திலிருந்து வந்த பெண்களுமாய்க் கூடினோம். எதைப் பேசுவது அது பற்றிப் பேசுவது என்று திட்டம் ஏதுமில்லை. ஒரு சிறு அறையில் உட்கார்ந்து கொண்டும் சாய்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் பக்கத்தில் உள்ள தோளில் தலை வைத்தும் இருந்தபடி பேசுவது ஒரு இதமான அனுபவம்.

நல்ல குரலில் இரண்டொரு பாடல்கள் முதலில். பிறகு அவரவர் குடும்பச் சூழலில், சமுதாயக் கட்டுக்கோப்பினுள் பெண் பற்றிய பிரக்ஞை எப்படி நேர்கிறது என்று ஒரு கேள்வி பேச்சினிடையே எழுந்தது. ஒவ்வொருவரும் சில அனுபவங்களைக் கூறத் தொடங்க, உரையாடல் களைகட்டிவிட்டது. ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்த பத்திரிகையாளரை அதை எல்லாம் பையில் வைக்கும்படி கூச்சல் போட்டோம்.

பேசப் பேச சிலர் உறங்கிப் போயினர். சிலர் இணைந்த மனங்களின் உரையாடலில் மேலும் நெருங்கிப் போனவர்கள் போல் உணர்ந்தனர். முகவரிகள் எழுதப்பட்டன. தொலைபேசி எண்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. அறிக்கை எதையும் எழுதவில்லை. மீண்டும் மீண்டும் கூடுவோம். செயலாற்றுவோம். ஒருவருக்கொருவர் துணை புரிவோம். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம் என்று நிறைவைத் தரும் உணர்வுடன் இரவு ஒரு மணிக்குப் பிரிந்தோம்.

காலச்சுவடு 32, நவ. டிச 2000

அம்பை ஆங்கில வெளியீடுகள், பதிப்புகள் பட்டியல்

Her research works in English include:

 • The Face behind the Mask: Women in Tamil Literature
 • Seven Seas & Seven Mountains series: (2 volumes)
 • Volume 1: The Singer and the Song – Conversations with Women Musicians
 • Volume 2: Mirrors and Gestures – Conversations with Women Dancers (ed.) The Unhurried City – Writings on Chennai.

Translated works:

 • Black Coffee in a Coconut Shell (Translated from a series of articles on personal experiences of caste edited by Perumal Murugan)
 • Amaithiyin Narumanam (Irom Sharmila’s poems translated from English translation of her poems)

Her translated fictional works include:

 • A Purple Sea
 • In a Forest, A Deer
 • Fish in a Dwindling Lake
 • A Night with a Black Spider
 • A Meeting on the Andheri Overbridge.

oOo

த. சிவபாலு (கனடா)

துணிவும் தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை!

எழுத்தாளர் மல்சௌமி ஜேக்கப் அவர்களால் தொடுக்கப்படட கேள்விக்கு விடையளிக்கும் போது பின்வருமாறு பதிலளிக்கின்றார் அம்பை.:

நான் ஒரு சடப்பொருளாலான பெண் என நினைக்கவில்லை, நீங்கள் பார்க்கும் பெரும்பான்மையான பெண்கள் கிரான் பேடி. அல்லது இந்திரா நூயி போன்றவர்களைப் போலானவர்கள். ஆனால் நான் எனது வாழ்வில் என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்துள்ளேன் என்று என்னால் சொல்ல முடியும். நான் அவற்றை பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே செய்தேன், ஆனால் நான் அவற்றை மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் செய்துள்ளேன். எனது முயற்சிகளில் கிடைத்த தோல்விகள் எனக்குப் படிப்பினையாக அமைந்தன.  ஆய்வுகள் எழுத்துகள் என்னால் மேற்கொள்ளப்பட்வை, அவற்றை என்னால் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது, ஏனெனில் நான் மேற்கொண்ட பெண்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் எழுத்துகள் எனது  மனித வாழ்க்கை பற்றிய  எண்ணங்களேயாகும். பெண்கள் சார்ந்துள்ள தந்தையர், கணவன்மார், சகோதரர்கள், பற்றிய மிகச் சுவையான சம்பவங்கள் என்னிடம் உள்ளன. இவை தாம் நான் மிகவும் முக்கிய அழுத்தம் கொடுக்கும் விடயங்கள் ஆகும். அவர்களின் வாழ்கைக்கதைகள், குறிப்பிடத்தக்க  வகையான விழுமிய முறைமை பெண்களை அடக்கிவைத்திருக்கின்றது. ஆண்கள் பெண்களை அடக்கிவைத்திருப்பதல்ல.” எனத் தான் சந்தித்த கதாபாத்திரங்கள், சமுதாய நிலைமைகள்  பற்றிய கருத்தினை அவர் கொண்டுள்ளமை புலனாகின்றது.

oOo

கார்த்திகா வாசுதேவன்

விட்டு விடுதலையாகி..: அம்பையின் காட்டில் ஒரு மான்(“அடவி” – சும்மா ஒரு பார்வை ):

“வால்மீகி ராமாயணம் வேறு தளம்; கம்ப ராமாயணம் வேறு தளம்” என்பது உண்மை . சீதையை ராவணன் கடத்திச் செல்வதாக கம்பர் சொல்லும் இடங்கள் மிக மிக நாகரீகம். பண்பான வர்ணனை என்று நாம் கருதும் அந்த ஓரிடத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லவில்லை. கம்ப ராமாயணத்தில் காணக் கிடைக்காத பல முரண்பாடுகள் ஒருவேளை வால்மீகி ராமாயணத்தில் காணக் கிடைக்கலாம்.

செந்திருவுக்கு கணவன் தன்னை தொழிலில் பாகஸ்தியாக சேர்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம். மன உளைச்சல் வாழ்வின் மீதான வெறுப்பாக மாறி வனத்தின் நிசப்தத்தின் நடுவில் தன்னை தான் அறிய நடக்க ஆரம்பிக்கிறாள். அவளது நடை அவளோடு கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறது, அவளோடு நாமும் வானம் முழுக்க அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் நடக்கிறோம் காலின் அசதியே தோன்றாமல்.

செந்திருவின் பால்ய வயது ,அவள் மும்பையில் பெரியம்மா வீட்டில் திருமலையைக் கண்டு காதல் கொள்வது, இந்தக் காதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் தன் தந்தையிடம் ஒன்றிற்கு இரு முறை சாதாரணமாகவே போகும் போக்கில் இது திருமணத்தில் முடிய வேண்டிய பந்தம் என உணர்த்தும் திண்மை, கணவனிடம் காட்டை விட்டு வரமாட்டேன் என நடத்தும் வாக்கு வாதங்கள், கூடவே தன் பிள்ளைகள் மற்றும் உறவுகளைப் பற்றிய நினைவுகள் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் செந்திரு ஒரு தன்னிச்சையான மனுஷியாகத் தான் தெரிகிறாள்.
அவள் தனக்கான முடிவுகளை எப்போதும் தானே எடுத்துக் கொள்கிறாள், மற்றவர்களை பொருட்படுத்துவதில்லை, அது தந்தையோ அல்லது கணவனோ ஆனாலும் சரி. அவளது முடிவுகளை அவளே எடுக்கிறாள்

oOo

அபிநயா ஸ்ரீகாந்த்

காட்டில் ஒரு மான் – அம்பை

‘பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்’. அம்மாக்கள் தங்களுக்குப் பிடித்துத்தான் தனி ஒரு உலகை ஏற்படுத்திக்கொண்டார்களா அல்லது வேறுவழியில்லாமல் உண்டாக்கிக் கொண்டார்களா என்ற கேள்வியே என் மனதைக் குத்தியது.

பெண்கள் காதலிகளாக , மனைவியாக, என்று பல பரிணாமங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்  ஒரு பெண்ணின் பார்வையில் ஆண் காதலும் காமமும் கலந்து வர்ணிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம். ‘மழையில் அவன் முழுவதும் நனைந்திருந்தான். அப்போதே அவனை அணைத்து அந்தத் திண்ணையில் கிடக்க வேண்டும் என்று தோன்றியதாம்’.’வற்றிய நீர்வீழ்ச்சி போல் இறங்கிய தொடைகளும்,கால்களும். வாடி உலர்ந்துபோன பழம் போல் லேசாகக் கிடந்த மென்சிவப்பு ஆணுறுப்பு’

‘கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்’ பழக்க வழக்கங்களின் அடிப்படைத் தத்துவத்தை மறந்து மிடுக்குக்காக சுற்றம் சீரழிக்கப்படுவதை வலியுடன் பதிவு செய்கிறது.’ பயணம்’  சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுடன் மாரியம்மன் வழிபடப்படும் பொழுது நாமும் அவர்களுடன் சேர்ந்தே கோழிச் சோறைத் தையல் இலையில் சாப்பிட்டு படம் பார்த்து வருகிறோம்.

oOo

கே.என். செந்தில்

அம்பையின் படைப்புலகு – கே.என்.செந்தில் : கட்டுரைகள் | கபாடபுரம்:

திரைச்சீலைகளுக்கு பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும் புழுங்கித் தவித்தவர்களை வரவேற்பறைக்கு கொண்டு வந்தவர் அவர். பெண்களின் உலகம் என அதுவரை ஆண்கள் எழுதிக்காட்டியவற்றை மூர்க்கமாக மீறும் ஆக்கங்கள் இவை. இதன் பொருள் ஆண்களை வில்லன்களாகச் சித்தரிக்கிறார் என்பதல்ல. அதுவரை பார்க்க மறுத்தவற்றின் அல்லது மறந்தவற்றின் திசை நோக்கி நம்மை திருப்புகிறார் என்பதே. இந்த ஆண் உலகு/ பெண் உலகு என்ற பாகுபாடும் வகைப்படுத்தலும் வசதிக்காகவேயன்றி விமர்சனக்கூண்டுக்குள் படைப்பாளியை நிறுத்தும் எண்ணத்தால் அல்ல. அம்பையின் பெரும்பாலான கதைகளின் முனைப்பு கலையை நோக்கியே. கலையின் ஆதார சுருதியை மீட்டியபடியே தன் பிரத்யேக கருத்துக்களை அதன் வழி சொல்ல விரும்புவதை விட்டுக் கொடுக்காமல் நகர்த்திச் செல்கிறார். இந்த பயணம் உறவுகளால் போராட்டங்களால் கசப்புகளால் தனிமைகளால் அபூர்வமான பரவசங்களால் விம்மல்களால் கண்முன் தன் நிறங்களை இழந்து வெளிரும் சமூகத்தவர்களால் இடர்களை நேர்நின்று எதிர்கொள்ளத் துணிந்தவர்களால் இன்ன பிறவற்றால் ஆனது.

வரிசைக்கிரமமான வாசிப்பாக அல்லாமல் ஒரே அமர்வில், இரண்டாம் தொகுப்பில் இரு கதைகள், நான்காம் தொகுப்பில் ஒரு கதை, முதல் தொகுப்பில் சில கதைகள் எனக் கதைசொல்லி வேறுவேறான காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளின் ஊடாக அந்தந்த உலகிற்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தேன். இதன் மூலம் சொந்த வாழ்க்கையின் சுயஅனுபவங்களிலிருந்தும் கண் முன் ஓடும் உலகிலிருந்து விரும்பியோ / விரும்பாமலோ வந்து சேரும் அனுபவங்களிலிருந்தும் பெரும்பாலான ஆக்கங்கள் தோன்றியிருப்பதால் அந்த அனுபவத்திலிருந்து எவற்றை கதைகளாக ஆக்க முயன்றிருக்கிறார் என்பதிலுள்ள தேர்வு, சொல்முறை, வடிவம், மொழி, போன்றவற்றில் படைப்பாளி மேற்கொண்ட பயணத்தின் தொலைவை கண்டு கொள்ள இயலும் என்பதே காரணம்.

oOo

மண்குதிரை

பாதையற்ற நிலம் 02: ஒழுக்க விதிகள் மீதான குறுக்கீடு – இந்து தமிழ் திசை:

“அன்றைய வெகுஜன வாசிப்பின் வழியாகவே கதை சொல்வதற்கான ஒரு மொழியையும் வடிவையும் எடுத்துக்கொண்டேன்” என ஒரு நேர்காணலில் அம்பை சொல்கிறார். இதன் மூலம் மொழியை ஒரு உன்னத வடிவமாகத் தூக்கிக் கொண்டாடவில்லை எனத் தெளிவாகிறது. கதையைச் சொல்வதற்கு ஒரு மொழி, அவ்வளவுதான் அவரது லட்சியம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஏனெனில் அம்பை எழுதவந்த காலகட்டக் கதைகளில் மொழிக்கு அழகியல் முக்கியத்துவம் இருந்தது. அம்பை அதைத் தவிர்த்தார். ஒரு கற்பனையாளராகத் தன் கதைகளுக்குள் அழகியல் விவரிப்புகளைச் சொல்வதைவிட, ஒரு பெண்ணாக அவர்களின் பிரச்சினைகளைச் சொல்வதில்தான் அம்பைக்கு விருப்பம் அதிகம். ஒரு பெண்ணின் நிலையைச் சொல்லும் கதைகளில் சொற்கள், எல்லைகளை மீறித் திரண்டுவருகின்றன.

வெகுஜனப் பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன.

oOo

சு.தமிழ்ச்செல்வி

தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை – சு.தமிழ்ச்செல்வி | Distinguished fiction writer C.S.Lakshmi – Ambai – Tamil literature – Vikatan Thadam | விகடன் தடம்:

சுயமரியாதையும் கட்டற்ற விடுதலை உணர்ச்சியும் கொண்டிருந்த எனக்கு, அம்பை ஏதோ நெருக்கமான உறவு போலத் தோன்றினார். அவரை அவரது கதைகள் வழியாகப் பின்தொடர்ந்தேன். இப்படி என் சிறுவயது நாளில் நான் படித்து வியந்த கதைசொல்லியோடு, சமகாலப் பெண்களுக்கு சுதந்திரத்தின் மீது, தற்சார்பு உணர்வின் மீது, சுயமரியாதையின் மீது வேட்கை ஏற்படுத்திய எனது பண்பாட்டு ஆசிரியையோடு, பின்நாட்களில் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைக்குமென நான் எண்ணியது இல்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, அம்பை முதன்முதலாக விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது நான் எழுத ஆரம்பிக்கவில்லை. எனது கணவரும் கவிஞருமான கரிகாலனைப் பார்க்கவே அந்த வருகை. அவருக்குக் கதா விருதைப் பரிந்துரை செய்ததும் அம்பைதான். அப்போது ஒரு வாசகியாக அவரது கதைகள் எனக்கு ஏற்படுத்தியிருந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். பிறகு குழந்தைகள், அவர்களது கல்வி எனப் பேச்சு நீண்டது.

oOo

இளங்கோ-டிசே

DISPASSIONATED DJ: அம்பையின் ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன், ஓர் இரவு’:

ம்பையின் பல கதைகள் எனக்கு நெருக்கமானதற்கு, பெரும்பாலான கதைகள் தமிழ்பேசும் சூழலிற்கு வெளியே நிகழ்பவை என்பதும் ஒரு காரணம். வாழும் சூழல் எப்படியிருந்தாலும் அந்த இடத்தில் தமிழ்மனம் எப்படி இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை சினிமாப் பாடல்களாலோ தமிழிசைப் பாடல்களாலோ மெல்லியதாய்த் தொட்டுக்காட்டிக்கொண்டேயிருப்பார். மேலும் அம்பையின் பெண் பாத்திரங்களை தமக்கான விடுதலையின் வெளியைத் தேடுபவர்களாய் இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் ஆண்கள் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்தாலும் அவர்கள் மீது காழ்ப்புணர்வைக் கொட்டுவதில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். தனக்கான சொந்தக்காலில் நிற்கும் பெண் தனக்கான ஒரு உலகைச் சிருஷ்டிததுக்கொள்ளவும், அங்கே வாழவும் தலைப்படுகின்றபோது அவர்களுக்கு ஆண்கள் ஒருபெரும் பொருட்டாய் இருப்பதுமில்லை.

பெண்களுக்கு இருக்கும் துயரங்களையும், திணறல்களையும், தடுப்புச்சுவர்களைப் பற்றி அம்பையின் கதைகள் கூறினாலும், அவை ஒருபோதும் ஆண் வெறுப்பை எந்த இடத்திலும் ஊதிப் பெருக்குவதில்லை. இந்த உலகமும், இந்த ஆண்களும் எவ்வளவு சிக்கலாகவும், மோசமாகவும் இருந்தாலும் அதைத்தாண்டி பெண்களை வாழ உற்சாகப்படுத்துகின்ற குரல்களை அம்பையின் பல கதைகளில் காணலாம். பெண்களின் இருத்தலை இன்னும் சற்று உள்முகமாய் நிதானமாய் பார்க்கக் கோருகின்ற கதைகளில் இருந்து நம்மால் தப்பிப்போக முடியாது, கரைந்து நெகிழத்தான் முடிகிறது

oOo

லதா ராமகிருஷ்ணன்

அம்பையின் எழுத்து | திண்ணை

சென்னையில் நடந்தேறிய ‘அம்பை’க்கு விளக்கு விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை

ECONOMICS AND POLITICAL WEEKLY இதழொன்றில், ‘திராவிட இயக்கமும், கட்சிகளும் கூட பெண்ணை சமமாக நடத்துவதில்லை’ என்ற பொருளில் அகல்விரிவாக அவர் எழுதியிருந்த கட்டுரைக்கு பெரிய அளவில் எதிர்ப்பெழுந்த போது கூட, அதை வைத்து, ஒட்டியும் வெட்டியும் பேசுபவர்கள், தன்னை பகடைக்காயாக்கி விட இடம் தரவில்லை!

‘அம்பை’யின் ‘கருப்புக் குதிரைச் சதுக்கம்’ என்ற சிறுகதையிலிருந்து ஒரு சிறிய பத்தி கீழே தரப்பட்டுள்ளது:-

‘வெகு எளிதான மராட்டியில் ஜரிகை அலங்காரம் செய்யாமல் அவள் பேசினாள். அவள் பேச்சுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு மீனா அரோரா அடுத்துச் செய்தது தான். அவளுக்குப் பிறகு பேச வந்த மீனா எதிரேயுள்ள கூட்டத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு பெருத்த விம்மல்களோடு அழத் தொடங்கினாள். அதை விட நன்றாகப் பேசியிருக்க முடியாது. நாங்கள் ஊர்வலச் செய்தியைக் காட்ட டி.வி. ஐ அணுகிய போது, அந்த கோபால் ஷர்மா, ” நாங்கள் காட்டுகிறோம். ஆனால், மௌனப்படம் தான். நீங்கள் என்ன பேசப் போகிறீர்களோ, யாருக்குத் தெரியும்?”, என்றான். மீனா அரோரா அழுது அவனைத் தோற்கடித்து விட்டாள் என்று நினைக்கிறேன். அவன் டி.வி. காமிராவைத் திருப்பிய பக்கமெல்லாம் கண்ணீர். அவன் செய்ததெல்லாம் படக்கென்று வெட்டி விட்டது தான். இவனை எல்லாம் தான் இடுப்பின் கீழே உதை விடலாம் என்று வருகிறது. உட்காரு என்றால் தவழ்பவர்கள்.”

– தமிழின் படைப்பாக்கத் திறனும், களனும் வீர்யத்தோடும், தனித்துவத்தோடும், இலக்கிய நயமும், சமூகப் பொறுப்பும் இரண்டறக் கலந்ததாய் தொடர்ந்து இயங்கி வரும் உண்மைக்குக் கட்டியங் கூறுபவை அம்பையின் எழுத்துக்கள்.

oOo

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.