அம்பை குறித்து நான் முதன் முதலாக தெரிந்து கொண்டது ஒரு குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளரின் வீட்டு வாசலில்தான். ‘படித்துப்பார்’ என அவர் நீட்டிய ஒரு இலக்கிய இதழில் அம்பை 2002 குஜராத் கலவரங்களை பின்னணியாக வைத்து எழுதிய ஒரு கதை இருந்தது. அம்பை என்கிற லட்சுமி சுப்ரமணியம் என்கிற எழுத்தாளர் மீது எனக்கு முழு வெறுப்பு வர வேண்டுமென்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு இலக்கிய-அரசியல் அடவு அது என்பதை புரிந்து கொள்ள அதன் பின்னர் 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த 13 ஆண்டுகளில் என்னைப் பொறுத்தவரை அம்பை என்பவர் முற்போக்கு வேடம் போட்டு தன்னை அதிகாரத்தில் நிலை நிறுத்திக் கொள்கிற ஒரு ஃபெமினிஸ்ட் பூர்ஷ்வா. தன் சுக போக வாழ்வுக்காக பணம் திரட்ட பெண்ணியத்தை பயன்படுத்துகிறவர்.

இன்றைக்கு எனக்கு அம்பையை தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் எதுவாக இருந்தாலும் நேர்மையற்றவரல்ல என்பது தெரியும். அவர் குறித்து எனக்கு ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு உந்துதலிலிருந்து நான் எழுதிய கடுமையான சொற்களுக்கு அவரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய உலகப்பார்வைக்கும் என்னுடைய உலகப்பார்வைக்கும் கடும் ஒவ்வாமைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இன்றைக்கு எனக்கு தமிழ் நாட்டு இலக்கியவாதிகள் மீது கடும் அவநம்பிக்கை உண்டு. நான் பழகிய தமிழக இலக்கியவாதிகள் எவரிடமும் நான் அடிப்படை நேர்மையை கண்டதில்லை. சித்தாந்த வேறுபாடுகள் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அடிப்படை நேர்மை என்பது வேறு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதை, நான் பழகிய தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் ஒரு செய்முறை அறிவியலாகவே மாற்றியிருக்கிறார்கள் என்பதை அனுபவரீதியில் கண்டேன். தங்கள் சுயநலம், தங்கள் அதிகார லாபங்கள், இதர ஆதாயங்கள் இவற்றின் அடிப்படையிலேயே அவர்களின் அறச்சீற்றங்கள் அமையும். அவர்கள் ஒருவரைப் பாராட்டினாலும் திட்டினாலும் அதன் பின்னால் துல்லியமான சுயநல சமன்பாடுகள் இருக்கும். இப்போதெல்லாம் இலக்கியவாதிகளை எங்கே பார்த்தாலும் பழகிய தோஷத்துக்கு ஒரு அவசர புன்னகைப் போல ஏதோ ஒன்றை உதிர்த்துவிட்டு எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக பதறி விலகிவிடுவேன். கொம்புளதுக்கு எத்தனையோ முழம் யானைக்கு இத்தனை என்றெல்லாம் ஒரு பாட்டு வருமே. என்னைப் பொறுத்தவரையில் இலக்கியவாதிகளுக்கு ஒளிஆண்டுகள்.
ஆனால் என்ன ஒரு முரண்நகை என்றால், எந்த இலக்கியவாதிகளால் அம்பை தூற்றப்பட்டாரோ அந்த இலக்கியவாதிகளைக் குறித்துதான் மேலே உள்ள பத்தி. அம்பையுடன் பழகிய சில நாட்களிலேயே புரிந்துவிட்டது இவர் ஒன்றும் நமக்குக் கூறப்பட்ட படி பெண் சகுனி அல்ல என்று. இன்னும் ‘பிழைக்க தெரியாதவர்’ என்று கூட சொல்லலாம்.
அவர் இலக்கிய படைப்புகளில் எனக்கு பிடித்த ஒன்று ‘வாமனன்’. 1980களின் இறுதியில் எழுதப்பட்டதாக இருக்கலாம். சுஜாதாவின் தாக்கம் கொண்ட மொழிநடை. ஆனால் உட்பொருள் நிச்சயமாக ஆழமானது. அறிவியல் ஆராய்ச்சி உலகத்தின் ஆண்கள் பெரிய அளவில் இருக்கிறார்கள். அவர்களின் உலகப்பார்வையே நிச்சயமாக அறிவியலின் திசையை இன்னும் முக்கியமாக தொழில்நுட்பத்தின் திசையை நிர்ணயிக்கிறது. வாமனன் கதையின் கதை சொல்லி அம்பையின் அல்டர்-ஈகோ. செயற்கை அறிவு உருவாக்க ஆராய்ச்சி சாலையில் ஒரே பெண். ஆண் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஆண் செயற்கை அறிவு கொண்ட கம்ப்யூட்டராக வாமனன் அறிமுகம் ஆகிறான். அந்த கம்ப்யூட்டரின் பெண்கள் குறித்த ஹாஸ்யம் சுஜாதா விடலைத்தனத்தை தாண்டவில்லை. ‘ஒரு கம்ப்யூட்டரையாவது பால்மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என எனக்குப்பட்டது.’ மெதுவாக வாமனன் உணர்ச்சிகளை உள்ளேற்றுகிறது. அதன் உலகப்பார்வை மாறுகிறது. இறுதியாக அது மரணத்தை ஏற்கிறது. அதுவும் அந்த பல்கலைக்கழக வளாகத்திலிருக்கும் பரிசோதனை சாலையின் அனைத்து கம்ப்யூட்டர்களும். 1980களின் கற்பனை என்பதை நினைவில் கொண்டு படித்தாலும் கூட இதிலிருக்கும் உள்ளீட்டை அப்படியே எடுத்து இன்றைய தொழில்நுட்ப உடலுக்குள் கூடு விட்டு கூடு மாற்றிவிடலாம். ஒரு அருமையான அறிவியல் புனை நாடகமாக அமையும். பல தளங்களில் செயல்படும் ஒரு புனைவு இது. ஆழமான கேள்விகளை எழுப்புவது. பெண்ணை உடலாக சுருக்கும் ஆண் பார்வை என்பது ஒரு வித இயந்திர பார்வை என சொல்லலாம். அது ஆண்-ஈகோவினை மேலேற்றினாலும் கூட அதில் ஒரு உயிர் மறுப்பு இருக்கிறது. பெண்ணை சக சம உயிராக கருதும் தன்மையை வந்தடையும் ஆணில் இந்த இயந்திரத்தன்மையிலிருந்து உயிர்த்தன்மை பெறும் பிரயாணமும் நிகழ்கிறது. அதோடு தொடர்பான பார்வை மாற்றங்கள் சக உறவுகளில் ஆரம்பித்து சமூக உறவுகள் வரை நம் இயக்கவியலையும் பார்வையையும் மாற்றுகின்றன. ஆண்மைய சமுதாயத்தில் அது ஒரு தற்கொலையாகவே அமையவும் கூடும். இச்சிறுகதையின் ஒரு இடத்தில் இந்த நுண்ணிய இடத்தை அது தொடுகிறது.

அம்பையுடன் உரையாடியதன் மூலம் நிச்சயமாக எனக்கு சில பலன்கள் கிடைத்துள்ளன. அம்பை எழுத்தாளர் என்பதைத் தாண்டி களத்தில் இயங்கும் ஒரு பெண்ணியலாளர். அவரது ‘ஸ்பாரோ’ அமைப்பு பெண் குரல்களை அனுபவங்களை ஆவணப்படுத்தும் செயலை பல்லாண்டுகளாக செய்து வருகிறது. அதில் அவருக்கு எவ்வித கோட்பாட்டு சார்பும் இல்லை. இதனால் ஸ்பாரோ அமைப்பின் ஆவண சேகரிப்பு இந்திய பெண்களைக் குறித்து அறிந்திட சிறப்பான தரவு பொக்கிஷம். குறிப்பாக அவர்கள் வெளியிட்டுள்ள, அதிகம் வெளியே தெரியாத விடுதலைப் போராட்ட பெண் மாந்தர் (அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக பங்கு பெற்றவர்களாக இருக்கலாம், அல்லது விடுதலை போராட்டத் தியாகிகளின் மனைவியர், சகோதரிகளாக இருக்கலாம்), அறிவியல் துறையில் பெண்கள், இலக்கியத்தில், நிகழ் கலைகளில், கிராம கலைகளில் பெண்கள், குடும்பங்களில் உள்ள பெண்கள் என அனைத்து துறைகளிலும் உள்ள பெண்களின் அனுபவங்களை ஸ்பாரோ மூலம் ஆவணப்படுத்துகிறார். சமுதாயத்தில் நம் கண்முன்னே ஒலித்துக் கொண்டிருந்த போதிலும் அதை நாம் கேட்காமல் நம் மனதில் பதியவிடாமல் அவையே மௌனமாக கரைந்து போகும் வரை கண்டு கொள்ளாமல் இருந்து விடும் குரல்கள் இவை. இவற்றை ஊர் ஊராக அலைந்து சேகரித்திருக்கிறார். ‘பெரும் சௌகரியத்தில் மிதக்கும் பெண்’ என என்னிடம் கூறப்பட்டு எப்போதும் அதீத செல்வ வளத்தில் இருக்கும் ஒருவர் என நான் நினைத்தவர் ஒவ்வொரு நாளும் வேக வேகமாக இன்றைக்கும் மின் ரயிலை பிடிக்க ஓடுபவர்.
இன்னொரு விதத்தில் எனக்கு அம்பை ஒரு நல்ல மாதிரியாகவும் இருக்கிறார். முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனைகள் அல்லது at best நேருவிய மதச்சார்பற்ற சிந்தனை மண்டலத்தில் வளர்ந்த ஒருவர் இந்துத்துவ இயக்கங்களை எப்படி அணுகுகிறார் என்பது குறித்து அறிந்து கொள்ள அவருடனான உரையாடல்கள் உதவுகின்றன. ஹிந்து என்கிற வார்த்தையை தவிர்ப்பதில் அவர் காட்டும் அக்கறை இந்த மனநிலையிலிருந்து பெறப்பட்டது. ஒரே நேரத்தில் பரிதாபமாகவும் எரிச்சலூட்டும் விதமாகவும் அது அமையும்.
அவரது மிக இளம் வயதில் டெல்லியில் கல்லூரி ஆசிரியைக்கான நேர்முக தேர்வின் போது டெல்லியில் அவரிடம் சில விடுதலை போராட்ட வீரர்களின் பெயர் கேட்கப்படுகிறது. அவர் சொல்லிய பெயர்களில் சாவர்க்கரின் பெயரும் ஒன்று. அம்பைக்கு அப்படி சாவர்க்கர் மீது பெரிய ஈடுபாடெல்லாம் இல்லை. அன்றைக்கு இப்படி கோடுபோட்டு தேசபக்தர்களையும் விடுதலை போராட்ட வீரர்களையும் இழிவுபடுத்தும் மனநிலை குறைந்த பட்சம் சாதாரண மக்களிடம் இல்லை. ஆனால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை என்பது மட்டுமல பின்னால் சாவர்க்கரின் பெயரை ஏன் சொன்னீர்கள் என்றும் ஒரு கேள்வியை அவர் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அம்பை தன் சுய அனுபவங்கள் பலவற்றை சிறுகதைகளாக்கியிருக்கிறார். ஆனால் தனிப்பட்ட உரையாடலில் அவர் என்னிடம் சொன்ன இந்த நிகழ்ச்சி அவரது எந்த சிறுகதையிலும் இடம் பெறும் அளவுக்கு அவருக்கு முக்கியமானதாகக் கூட தோன்றவில்லை. ஆனால் நினைவு கொள்ளுங்கள் இது 1960-70 களிலேயே. எத்தனை கவனமாக இந்தியாவின் வரலாற்றை நேருவியர்கள் மட்டற்ற அதிகாரத்துடனும் நுண் கவனத்துடனும் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதற்கு அம்பையின் இந்த அனுபவம் ஒரு உதாரணம்.
ஐசிஹெச்ஆர் என்கிற இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியிருக்கிறார். இர்ஃபான் ஹபீப் போன்ற நேருவிய மார்க்ஸியர்கள் மீது பெரிய மரியாதை கொண்டவர். அப்போது ஐஸிஎச்ஆர் நிறுவனத்திலிருந்த மார்க்ஸியர்களால் எப்படி மார்க்ஸிய சார்பற்ற ஆய்வுகள் தவிர்க்கப்பட்டன என்பதைஅவர்அறிவார். இது இயல்பாகவே எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயமாக அவருக்கு இருந்திருக்கிறது. எனக்கோ கடந்த ஐம்பதாண்டுகளில் எப்படி மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு ஒரு சித்தாந்த கூட்டம் தம்மைத் தாமே ஒரே ஒற்றை அறிவியக்கமாக மாற்றியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இன்றைக்கு ‘இந்துத்துவர்களால் ஏன் ஒரு ரொமிலா தப்பாரை உருவாக்க முடியவில்லை?’ எனும் கேள்விக்கு பின்னால் இந்த ஐம்பதாண்டுகள் நேருவிய அமைப்பு ஒற்றைத்தன்மையின் ஆணவம் அமர்ந்திருக்கிறது. அமைப்பும் அதிகாரமும் சார்ந்து உருவாக்கப்பட்ட ஒற்றைத்தன்மையின் மீது அமர்ந்துதான் அதே பீடத்தின் உயர் பூசகர்கள் இன்றைக்கு இந்துத்துவத்தை பாசிசம் என வசைபாடுகின்றனர். அம்பையுடன் நான் உரையாடியிராத பட்சத்தில் எனக்கு இந்த உள்பார்வை கிட்டியிருக்காது.
கடந்த ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசின் போது ஷரியத் நீதி மையங்களுக்கு ஆதரவாக உச்ச நீதி மன்றத்தில் அரசே குரல் கொடுத்தது. அதன் விளைவுகள் விரைவில் நாடெங்கும் அடிப்படைவாத கட்டுப்பாடுகள் பெண்கள் மீது வன்முறையுடன் சுமத்தப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இரு இஸ்லாமிய பெண்கள் கொல்லப்பட்டார்கள். அம்பையிடம் கேட்டபோது இது குறித்து அவரிடம் எவருமே சொல்லியிருக்கவில்லை என்றார். இத்தனைக்கும் அவரது நெருங்கிய முற்போக்கு பதிப்பகம் தென் மாவட்டத்தில்தான் இருக்கிறது. இங்குள்ள ஊடகங்களும் சரி இங்குள்ள அறிவுஜீவிகளும் சரி மிகவும் தேர்ந்தெடுத்த தரவுகளை மட்டுமே அதுவும் அவர்களின் பார்வையில் மட்டுமே எடுத்துக் கொண்டு ஒரு கதையாடலை சிருஷ்டிக்கிறார்கள். அதையே உண்மை என உங்களுக்கு சொல்கிறார்கள். அதற்குத்தான் நீங்கள் எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என கூறியதை அவரால் ஏற்கவே முடியவில்லை. ஆனால் தரவுகளை அவர் மறுக்கவில்லை. பெண்மைய பார்வை என்பதைவிட ஆண்-மைய பார்வையிலிருந்து அகன்று பெண்ணையும் சமமாக உள்ளடக்கிய பார்வையை அவர் கோருகிறார். அதை மட்டுமே அவர் முன்வைக்கிறார். இதன் மூலம் அவர் அவருடன் பழகும் உரையாடும் ஒவ்வொருவரின் சமுதாய, குடும்ப, தனிநபர் உறவுப்பார்வைகளையும் மாற்றும் சாத்தியத்தை தருகிறார்.
அவர் எழுத்தாளர். அவர் பெண். அவர் பெண்ணியவாதி. இந்த மூன்றையும் இணைப்பதை அவர் விரும்புவதில்லை. ‘நீங்கள் ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்றோ அல்லது பெண் எழுத்தாளர்’ என்றோ சொல்வதை அவர் விரும்புவதில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலில் ஏறக்குறைய ஐம்பதாண்டுகள் ஒரு பெண்ணாக இயங்கிவந்ததன் தொடக்கக் கால தனிமையையும் வலியையும் நன்கு உணர்ந்தவர். அவரை குறிவைத்து அநாகரிகமான ‘கவிதை’ என்கிற பெயரில் மூன்றாந்தர வசை ஒன்று பிரசுரிக்கப்பட்ட போது அவர் மதிக்கும் ஒரு மூத்த எழுத்தாளராலேயே அந்த வலியை உணர முடியவில்லை என்பதை ஒரு தரவாகவே அவர் கருதுகிறார். இன்றைக்கு ஒருவிதத்தில் அவர் தனிமையாகவே இருக்கிறார். பெண்ணியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியையும் மதத்தையும் திட்டுவதையும் ஒரு சில அதிகார மையங்களின் வேட்டை நாய்களாக செயல்படுவதையும் தாண்டி எதுவுமில்லை என ஆகிவிட்ட நிலையில், அவரது மௌனம் அவர் மீது வசை பாட மீண்டும் ஒரு தூண்டுதலை சமூக ஊடகங்களில் அளித்துள்ளது. இம்முறை அவரது ’ஆரிய மூக்கு’ அடையாளம் காணப்பட்டது.
நான் அறிந்தவரையில் மதிப்பீடுகளில் சமரசம் செய்து கொள்ளாதவர். அதனாலேயே அவர் வசைபாடப்படுபவர். முனைந்து தன்னைக் குறித்த ஒரு பிம்பத்தை கட்டமைக்க முடியாதவர், தெரியாதவர். விருப்பமும் இல்லாதவர். எனவே அவரை எவரும் எப்படியும் முத்திரை குத்தலாம். ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி அவர் நேர்மையானவர். அவ்விதத்தில் இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் அவர் ஒரு விதிவிலக்கு. அல்லது ஏதோ இனமழிந்து போகும் விசித்திர உயிரினத்தின் கடைசி பிரதிநிதி.