
தன்னுடைய ‘அந்தி மாலை’ என்ற, கலைமகளில் வெளிவந்த அந்தத் தொடர்கதை குறித்து, இந்த 2019-ல், அம்பை என்ற அபூர்வமான சிறுகதை ஆசிரியருக்குப் பெரிதாக எந்த அபிப்பிராயமும் இருக்க முடியாது என்றாலும், எனக்கு ‘அம்பை’ என்ற புதுமையான பெயரை அறிமுகம் செய்து வைத்தது, மாதாமாதம் கலைமகளில் வந்த அந்தத் தொடர்தான். எங்களுடைய திருநெல்வேலிப் பக்கத்தில், மஹாபாரதப் பரிச்சயமற்ற சாதாரண மனிதர்களுக்கு,’அம்பை’ என்பது ‘அம்பாசமுத்திரம்’ என்ற ஊரைத்தான் குறிக்கும்.’ அந்திமாலை’தொடரை நான் வாசிக்கவில்லை. ஆனால், ‘அம்பை’ என்ற புனைபெயர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆனந்தவிகடனில் கூட அந்த அறுபதுகளில் அம்பையின் சிறுகதை ஒன்று வெளிவந்த நினைவு.
நான் முதல் முதலாக முழுமையாகப் படித்த அம்பையின் சிறுகதை ‘மிலேச்சன்’. அந்தச் சிறுகதை சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால், கணையாழியில் வெளிவந்த ‘ம்ருத்யு’என்ற சிறுகதை எனக்குப் பிடித்திருந்தது. பிறகு அந்த நாட்களில் எல்லோராலும் பாராட்டப்பட்ட ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்னையும் கவர்ந்தது. ’சிறகுகள் முறியும்’ கதையையும், பிடித்தமான கதைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 1971 முதல் அம்பை சிறுகதைகள் எழுதி வருகிறார். கடந்த 2019 மார்ச் ’உயிர்மை’ இதழில் வெளிவந்த, அவருடைய அண்மைக்காலச் சிறுகதைகள் வரை ‘அம்பை’யின் கதைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ‘அம்பை’ எழுதி வருகிறார்.
அவரது ‘சிறகுகள் முறியும்’ தொகுப்பிலுள்ள முதல் சிறுகதை ‘சூரியன்’. 1972 தீபம் தீபாவளி இதழில் வெளிவந்த இந்தச் சிறுகதையையே அம்பையின் முதல் சிறுகதையாக எடுத்துக் கொள்ளலாம். இது முதல் சமீபத்திய உயிர்மைச் சிறுகதைவரை, அவரது விவரிப்பு, நடை எல்லாமே மெல்ல மெல்ல மாறி வந்துள்ளன. தி. ஜானகிராமன், லா.ச.ரா, மௌனி போன்ற எழுத்தாளர்களுக்கென்று தனித்துவமான நடை உண்டு. அந்த மாதிரி அம்பை தனக்கென்று எந்த தனித்துவமான நடையழகிற்கும் முயற்சிக்கவில்லை. ஆரம்ப காலச் சிறுகதைகளில் அம்பைக்கு தனது விவரிப்பு மொழி, கனமான சொற்களாலும், வீங்கிப் புடைத்த வார்த்தைகளினாலும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் போல. ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ சிறுகதையின் விவரிப்பு சில இடங்களில் ஜெயகாந்தனையும், சில இடங்களில் தி. ஜானகிராமனையும் கூட நினைவுபடுத்துகிறது. ’சிறகுகள் முறியும்’ தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் உரத்த குரலில் சொல்லப்பட்டுள்ளன. உணர்ச்சிப் பிரவாகமெடுத்தோடும் கதைகள் அவை. அதனால், அலட்டல் மிக்க கதைகளாக அவை உள்ளன. இந்த ரகமான சிறுகதைகளை அந்த நாட்களில் நானே விரும்பியிருக்கிறேன். இன்றும் கூட இதற்கு வாசகர்கள் இருக்கலாம்.

‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ என்ற தொகுதியிலுள்ள சிறுகதைகளும், அதற்குப் பின்பு அம்பை எழுதிய சிறுகதைகளிலும் ஆரவாரமும், படாடோபமான விவரிப்பும் இல்லை. மொழி அமைதியாகிவிட்டது. ஆனால்,ஒரு சிறுகதையாசிரியனுக்கோ, நாவலாசிரியனுக்கோ தேர்ந்த வாசகன் சகித்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஓரளவாவது அலங்காரமான மொழி தேவைதான். வலம்புரி ஜான், அக்னி புத்திரன் போன்றவர்களிடம் இருக்கும், கூழாங்கற்களைத் தகர டப்பாவில் போட்டுக் குலுக்குவது போன்ற ‘அந்தக இரவில் சந்தன மின்னல்’என்பது முதலான வீங்கிப் புடைத்த சொற்களிலான நடைப் படாடோபம் வேண்டாம்; அதே சமயம் செய்திக் கட்டுரை போன்ற வறட்டு நடையும் வேண்டாம். இரண்டுக்கும் இடைப்பட்ட, வறண்டு போகாத, ஓரளவு அழகான மொழி நடை தேவை. ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுதியில் உள்ள கதைகள் எளிமையான நடையில் உள்ளன. ஆனால், இந்தச் சிறுகதைகளுக்கு இன்னும் சற்று அழகான நடை, விவரிப்பு பாணி கைகூடி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
‘சிறகுகள் முறியும்’ தொகுப்புக் கதைகளின் விவரிப்பு, நடை இவை உப்பும், காரமும் தூக்கலாக இருக்கும் சமையலை நினைவுபடுத்துகின்றன. அந்தேரி மேம்பாலம், சமீபத்திய உயிர்மை இதழ் முதலான கதைகள் ஒரேயடியாகச் சப்பென்றிருக்கின்றன. இன்னும் ஒரு 25 சதவிகித மொழி நடை இக்கதைகளுக்குத் தேவை.
அடுத்து, அம்பை தன் சிறுகதைகளில் ஏராளமான உத்திகளைக் கையாளுகிறார். இது, அவரது ஆரம்பக் காலச் சிறுகதையான ‘சிறகுகள் முறியும்’ கதையிலேயே தொடங்கிவிடுகிறது. 1972 மே-ஜூன் இதழ்களில் வெளிவந்த ‘சிறகுகள் முறியும்’ ஒரு நீண்ட சிறுகதை. இதில் வரும் சாயா (அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ நாவலின் கதாநாயகி பெயரும் சாயாதான்) பாத்திரம், கதையினூடே, ’சட்டம் இயற்ற வேண்டும்’ என்று அடிக்கடி கூறுகிறது. (இந்த உத்தியை கே.பாலசந்தர், தனது ‘நிழல் நிஜமாகிறது’திரைப்படத்தில் அப்படியே எடுத்துக் கையாண்டுள்ளார்.) பிரயாணம் I, II என்றெல்லாம் சில சிறுகதைகளுக்கு அம்பை தலைப்பிட்டுள்ளார். இதுவும் அவரது உத்தி சார்ந்த தேடல், ஆசையின் வெளிப்பாடுதான் என்று தோன்றுகிறது.
பெரும்பாலான ஆரம்பக் காலக் கதைகளில், அவரது கதாநாயகியரை வதைக்கும், ஆணாதிக்கம் மிகுந்த ஆண் கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. ’வல்லூறுகள்’ என்ற சிறுகதை ஷியாம் பெனகலின் பழைய படங்களை நினைவு படுத்தினாலும், இது மிக முக்கியமான அம்பையின் சிறுகதை. இதிலும் ஆணாதிக்கப் பாத்திரம் வருகிறது. ஆணாதிக்கத்தால் வதைபடும் அம்பையின் இந்த ஒற்றைப் பெண்முகம் பல சிறுகதைகளில் இடம் பெற்றுள்ளது. ’பெண்’ என்ற நிலையில், அவள் எதிர் கொள்ளும் மானுடத் துயரம் இது, எல்லா நாடுகளிலும், சமுதாயங்களிலும் உள்ளது. பெண்ணின் உடம்பும், அவளது மனமும் பெரும்பாலான ஆண்களால் வதைக்கப்படுகிறது என்கிற உண்மையை அம்பை விதவிதமாகத் தனது சிறுகதைகளில் எழுதுகிறார்.
ஆனால், ஆண்களை மிக மோசமாக நடத்தும், காரண- காரியமின்றியே ஆண்களிடம் கோபப்படும், எரிச்சல் படும் (இது மாத விடாய் குறித்த உளவியல் பிரச்னை என்றாலும்) பெண்களும் சமூகத்தில் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அம்பையின் கண்களில் படுவதில்லையா?ஒரு வேளை, தன்னுடைய, ’ஆணாதிக்க எதிர்ப்பாளர்’ என்ற இமேஜ் குலைந்துவிடக் கூடாது என்று அம்பை, திரும்பத் திரும்ப பெண்கள் மட்டுமே ஆண்களிடம் அவதியுறுவதாகச் சித்தரிக்கிறாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. 2013-ல் காலச்சுவட்டில் வெளியான ‘காவுநாள்’ என்ற சிறுகதையில் கூட மொண்ணையான, ஒருதலைப்பட்சமான ‘ஆணாதிக்க எதிர்ப்பு’ என்ற நிலைப்பாடே வெளிப்படுள்ளது. ரசனையற்ற,பண்பாடற்ற ஆணிடம் வதைபடும் காவுநாளின் பிரமரா, ’சிறகுகள் முறியும்’சாயாவின் பிரதிதான். இச்சிறுகதை ஒரு சிறுகதையாகத் திரளவில்லை.புறத் தகவல்களின் பெருக்கத்தில் சிறுகதையின் கலை கொலையுண்டுவிட்டது.
‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுப்பில் இந்த ஆணாதிக்க எதிர்ப்பு, ரசனையற்ற ஆண்களைச் சித்தரித்து உவகை கொள்ளும் போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு,பாம்பு தன் சட்டையை உரிப்பது போல் உரித்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார் அம்பை.பொதுவாக எந்த எழுத்தாளரும் செல்ல விரும்பாத பகுதி இது. ஒரே மாதிரி எழுதினால் தான் ‘இமேஜ்’ அடிபடாமல் இருக்கும், சுந்தர ராமசாமி,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற வெகு சிலரே தங்களை அடிக்கடிச் சட்டையுரித்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டையுரிப்பில், தனது பழைய இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல்,அம்பையும் இறங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ கதைகள் எல்லாமே துப்பறியும் கதைகள். தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளில் வரும் சங்கர்லால், சங்கர்லாலின் உதவியாளான கத்தரிக்காய், அடிக்கடி தேநீர் தயாரித்துத் தரும் நாயர் போன்ற நிரந்தரமான கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் கதாபாத்திரங்கள் ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுப்புக் கதைகளில் இடம் பெற்றுள்ளதை அம்பை தவிர்த்திருக்கலாம்.
என்றாலும், அம்பையின் எழுத்துலகப் பயணத்தில் இச்சிறுகதைகள் மிக முக்கியமானவை. பெண்களின் இருட்டான மனப்பகுதிகளையும், அம்பை சித்திரிக்க முயற்சிப்பது தெரிகிறது. பரீட்சார்த்தமான கதைகளை எழுதும் ஆர்வம் மிக்க அம்பை இந்த பாணிக் கதைகளையும் தாண்டிச் செல்லக் கூடும். இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் அம்பையினால், இன்னும் செறிவான, சிறந்த சிறுகதைகளை எழுத முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.