அம்பையின் கதைகள்

பொதுவெளியில் பெண்களின் புழக்கம் வெகுவாக குறைந்திருந்த காலக்கட்டம் அது. கல்வி பயில்வதற்காகவும் பொருளீட்டவும் வெளிக்கிளம்பும் பெண்கள் கூட, பொதுவாக, இருக்கும் சட்டகத்துக்குள் எவ்வித முரண்களுமின்றி தங்களை பொருத்திக் கொள்ளவே விரும்பினர். இலக்கியத்தை பொறுத்தவரை, பரவலாக்கப்பட்ட கல்வியால், பெண்களுக்கு வாசிக்கவும் எழுதவும் வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தில் அவற்றுக்கு கிடைத்த அங்கீகாரம், எழுபதுகளில் பெண்ணெழுத்துகள் பெருகி வர காரணமாகின. ஆனால், அவை ஆண் மைய சமூகத்தின் பொது விதிகளை மீறாமல் அல்லது, ததும்பும் தன்மை கூட அற்று, விளிம்புகளுக்குள்ளேயே அடங்கியிருந்தன. அதன்பொருட்டே இத்தகைய அங்கீகாரம் என்பதை உணராத அவ்வெழுத்துகள், சமூகம் தம்மை நோக்கி வலியுறுத்துபவற்றையே தாமும் படியெடுக்கிறோம் என்ற தன்னுணர்வற்று நீண்டு கொண்டேயிருந்தன. விதிவிலக்கான படைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலை காட்டினாலும், பெரிதான வேறுபாடுகளற்று “இயக்கப்படும்“ படைப்புகளாகவே அவை நீடித்தன. போல சொல்லும் முறை, பழக்கமான சொல்லாடல்கள், கற்பிதமான உறவுநிலைப்பாடுகள் என்ற தளங்களில் அவை ஜல்லியடித்தன.

மறுபுறம், ‘நீ சுத்தமாயிட்டேடி… உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி… நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே..“ என்ற ஜெயகாந்தனின் “அக்னிபிரவேசத்தின்“ புரட்சியை இலக்கிய உலகம் கொண்டாடித் தீர்த்தது.

“கெட்டுப்போய்..“ என்பதே அர்த்தமற்றது எனில், “சுத்தப்படுத்துதலுக்கு“ என்ன தேவை? அம்பையின் அறிவார்ந்த இலக்கியத்தளம் இங்கிருந்து தனக்கான கேள்வியை எழுப்பிக் கொள்கிறது. இயக்கப்படும் பெண்ணெழுத்துக்கு மத்தியில், இயங்கும் எழுத்துகளாக அவை இலக்கியத்தளத்தில் மையம் கொள்ளத் தொடங்கின. இலக்கியத்தில் பால்பாகுபாடு தேவையற்றது எனினும், அவரின் பெரும்பாலான புனைவுகள் உள்கட்டுக்கு பின்னிருக்கும் உலகின் கசகசத்த மனஇறுக்கத்தை வெளியே இழுத்து வந்தன. இயங்குப்பாதையில் பெருகிக்கிடக்கும் சிக்கல்களை நேரடியாக சித்தரித்தன. புறவெளிப்பயணங்களை போலவே அகம்நோக்கிய பயணங்களிலும் அவரின் படைப்புலகம் விரியத் தொடங்கியது.

புலன்களின் மீதான அடக்கமும், எண்ணவோட்டங்களின் மீதான கட்டுப்பாடுமாக கறார்த்தனத்தோடு ஆண்மைய சமுதாயம் பெண்களை இறுக்கியிருக்க, “சிறகுகள் முறியும்“ நாயகி நமக்கு அறிமுகமாகிறாள். அவளுக்கு எல்லாமும் இருக்கிறது. உயரதிகாரியின் மனைவி என்ற அந்தஸ்து, ஆண்வாரிசு, மாமியார், நாத்தி போன்ற உபத்திரவங்கள் இன்மை (சொல்லப்போனால் நாத்தனார் நல்லவிதமாகவே வந்து போகிறார்.) (நாத்தி, மாமி போன்ற உறவுகளை கொடுங்கோலர்களாக சித்தரித்ததில் இன்றைய தொலைக்காட்சித்தொடர்களுக்கு எழுபதுகளின் எழுத்துகள்தான் முன்னோடி) என்று எல்லாமே வாய்த்திருக்கிறது அவளுக்கு. ஆனால் ஸோபாவை போல கட்டிலை போல தானும் கணவனின் உடமை என்பதை ஏற்கவியலாமையும், கூடவே அவனை விட்டு விலகும் விடுதலையை துய்க்க தன்னிச்சையாக பறந்தலையும் மனதின் மீதான கட்டுப்பாடின்மை குறித்த ஏக்கமும் அவளுக்குண்டு. மகாகஞ்சனான அவனிடம் இரண்டாவதாக குழந்தை தரித்திருப்பதை வெற்றுச் சொல்லென சொல்லி விட்டு, உறங்கி விடுகிறாள். பெண்ணின் எண்ணவோட்டங்களை நுணுக்கமாக பேசும் இக்கதையை, அது எழுதப்பட்ட காலக்கட்டத்தோடு ஒப்புநோக்கும்போது, முக்கியமான அதிர்வென்றுதான் கொள்ள வேண்டும். ஆண்கள் பேசி வந்த பெண்ணின் அகத்துக்கும் பெண் எடுத்துக்காட்டும் அகத்துக்குமான வேறுபாட்டின் நுாலிழைகள் இவை.

“காட்டிலே ஒரு மான்“ கதையின் தங்கம் பூக்கவில்லை. பூக்கவில்லை என்றால் பொக்கை உடம்பு அவளுக்கு. பொக்கையென்றால் பொக்கை.. உள்ளே ஏதுமின்றி கூடாய் இருப்பது. அவளின் கரியஉடல் அப்படியெல்லாம் வித்யாசப்படவில்லை. அவளுடைய கதகதப்பான அணைப்பிலோ, பிரியத்திலோ அவள் அன்பு செய்யும் பிள்ளைகளுக்கும் வித்யாசம் தெரிவதில்லை. தங்கத்துக்கே கூட வித்யாசம் தெரியவில்லை. எல்லோரையும் போல எனக்கும் பசிக்குது… துாக்கம் வருது… அடிப்பட்டா வலிக்குது… ரெத்தம் வருது… என்கிறாள்.

சுற்றிலும் உறவுக்கார பொடிசுகளை அமர்த்தி கதை சொல்ல பிடித்திருந்தது அவளுக்கு. அவள் அதற்கான கதைகளை காப்பியங்களிலிருந்து உருவிக் கொள்கிறாள். அவளது கதையில் சூர்ப்பனகை, தாடகை போன்ற ராட்சசிகளாக உணரப்பட்ட பெண்கள் உணர்வுப்பூர்வமாக நடமாடுகிறார்கள். பாதை விலகிப்போன மானை பற்றி அவள் அன்றைய கதையை தொடங்குகிறாள். பழக்கப்படாத புதிய காட்டில், அதன் நாட்கள் அச்சத்தோடு கழிய, பின்னொரு நாளில் பவுர்ணமி வருகிறது. பயத்தின்பிடியில், அம் மான் மரத்தின் பின்னோடு ஒடுங்கியபடி காட்டை நோட்டமிடுகிறது. எவையெல்லாம் அதை மருள வைத்ததோ, அவையெல்லாம் நிலவொளியில் அதற்கு சிநேகமாகிப்போக, புதுக்காட்டின் ரகசியமெல்லாம் சட்டென கட்டவிழ்ந்து போகிறது. கிலேசங்களும் அலைகளுமற்ற உள்மனம் விழித்துக் கொள்கிறது. இயல்பு, இயல்பற்றவை என்ற வகைப்பாடுகளெல்லாம் பொருளற்று போவதில், இயல்பல்லாதவற்றை அல்லது இயலாதவற்றை, இயல்பாக்கிக் கொள்வது இயலுவதாகிறது.

தன்னை தானே ஆதரிப்பளாக.. ரட்சிப்பவளாக.. உடலை விடுத்த மாந்த உருவாகக் கூடத்தில் வெளிச்சத் திட்டில் அமர்ந்திருக்கும் தங்கம் அத்தையை தொடர்ந்து விழிக்க வைக்கும் பாதையில்தான் செந்திரு வருகிறாள். “அடவி்“யின் கதாநாயகி.. செந்திருவுக்கு கணவன் மீது வருத்தம். வியாபாரத்தில் தோளோடு தோளாக நிற்பவளைப் பெண் என்பதாலேயே சம அங்கத்தினராக ஏற்றுக் கொள்ளவியலாத கணவன் உட்பட ஆண்கள் மீது கோபம். அவளின் சினம் ஆக்ரோஷமானதுதான். ஆனால் நிதானிக்கும் போக்குடையது. நடந்து நடந்தே தன்னை சமநிலைப்படுத்திக் கொள்கிறாள். குடும்பத்தை விட்டு சற்று நகர்ந்திருக்க விரும்புகிறது மனம். காடு அவளை பித்தேற வைப்பது. ஏனெனில் அவள் காட்டில் பிறந்தவள். காட்டில் வளரும் வாய்ப்பை பெற்றவள். அவ்வப்போது சீதைக்கு ‘விதிக்கப்படும்’ காட்டை இவள் விருப்பமாக அண்டிச் செல்கிறாள். வனத்துறையின் விடுதி ஒன்றில் தங்கி வர உத்தேசிக்கிறாள்.

இலக்கு இல்லாத பயணம். வால்மீகியைப் போல அவளுக்கும் இராமாயணம் எழுத வேண்டும் என்று ஆசை. செந்துருதான் சீதை. சீதைதான் செந்துரு. தன் அனுபவங்களை தன் மொழியில் எழுத விருப்பம் அவளுக்கு. ”நான் எழுதிய ராமாயணம் ஒன்று போதாதா?“ என்கிறார் வால்மீகி. ஆண் அல்லவா? ”இல்லை இனிவரும் யுகங்களில் பல ராமன்கள், பல சீதைகள்”  என்கிறாள் சீதை. ”நான் எழுதாத சீதையா?”  வால்மீகியின் அகங்காரம் விடுவதாயில்லை. ”நான் அனுபவித்தவள், பலவிதமான அனுபவங்களை உள்வாங்குபவள்; என் மொழி வேறு” என்கிறாள் சீதை. “இதை சாதாரண வாத்தியமாக நினைத்து விடாதே.. உன் வாழ்க்கையாக எண்ணி வாசி..“ என்றபடி ருத்ரவீணையை தன் மடியிலிருந்து எடுத்து தன்னிடம் நீட்டும் இராவணனிடமும் இதையேதான் கூறுகிறாள். “அது தரையிலேயே இருக்கட்டும்…” உடலே பாரம்… உடலே விடுதலை… தேகத்திலிருந்து தேகம் உந்தி எழ வேண்டும். பலபேர் பந்தாடிய தன் வாழ்க்கையை தானே கையில் ஏந்திக் கொள்வதாக கூறுகிறாள். ‘விதிகளை’ கடந்து விழித்துக் கொள்ளும் தருணங்கள் விதித்தவனின் விழைவுகளை புரிதலுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. சீதையும் இராவணனும் கூட இதில் நண்பர்களே.

உடல் மீதான சுதந்திரமின்மை அந்த தாயைக் கொலை வரை இயக்குகிறது. கொலை என்பது உடலிலிருந்து உயிரை உருவுவது மட்டுமல்ல. அவள், தாய் என்பதையும் கடந்து, ஒரு நாயகியாக மகளின் மனதில் உருப்பெற்றவள். அவளில்லாத தருணமொன்றில் மகள் பூப்படைந்து விடுகிறாள். அன்பாகவோ.. இரக்கமாகவோ.. கருணையாகவோ.. அனுசரணையாகவோ.. புரிதலாகவோ.. எந்த பாவனைகளுமின்றி. நிறைய “கூடாதுகள்“ மகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றன. உடல் உபாதை ஒருபுறம்.. மன உபாதை மறுபுறமுமாக எதனையும் கிரகிக்க இயலாது, தன் “நாயகி“யை எதிர் பார்தது காத்திருக்கிறாள் மகள். தங்கையின் மகளுக்கு வரன் தகையவில்லை என்ற புகாரோடு வந்திறங்கும் நாயகிக்கு தன் மகளும் அதே காரணத்தால் நிராகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது. அதன் அழுத்தத்தில் “உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்,” என்று படபடக்கிறாள். ஐந்து வயதில் ஒருமுறை இவள் காணாமல் போய் திரும்ப கிடைக்கும்போது அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். இன்று காணாமல் போயிருக்கும் அம்மா, திரும்பி வந்ததும் பயம் மொத்தத்தையும் தொலைத்து விடும் நம்பிக்கையோடு நின்றவளை தாயின் சொல் புரட்டிப் போட எலும்புகளற்ற உடல் போல நொறுங்கிச் சரியும் அந்த பதின்பருவத்து உணர்வுகளை மிக தீவிரமாகக் கடத்தியது “அம்மா ஒரு கொலை செய்தாள்“ என்ற அக்கதை. .

பன்றிக்கும் மனிதனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அந்த பன்றிக்கு தன்னை கொன்று சாப்பிடுவதில் எந்த விமர்சனமில்லை. அதைபற்றிய விசாரணையில், ஆட்சேபணை காட்டக் கூடிய அதிகாரம் உள்ள நிலையில் தான் இல்லை என்று பேச மறுத்து விடுகிறது பன்றி. அதை பொறுத்தவரை மரணம் ஒரு நீண்ட கழி. அது இரும்பாலோ மரத்தாலோ ஆனது. வலிக்க வலிக்கக் கிடைப்பது. விடுதலை என்பது. தப்பிக்க வசதியான சிறு ஓட்டை. இந்த இரண்டையும் தாண்டி சிந்தனை வேறில்லை. ”தயவுசெய்து சாவைப் பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்..“ என்று முடிக்கிறது பன்றி. நேரடியாக எதுவொன்றையும் கூறாது, உணர்த்த வேண்டியதை உணர்த்தி விடுகிறது “ஒரு கட்டுக்கதை“. கதை என்பதை விட நாடகம் எனலாம் இதை.

வீட்டின் ஒரு மூலையில் உள்ள சமையலறையை வெளியுலகம் உணர்வதில்லை. ஒருவேளை அங்கிருந்து எழும் பெருமூச்சுகள் புகைப்போக்கியின் வழியாக வெளியேறி வான்வெளியில் கலந்து விடலாம். அதற்காக, அதை விட்டுக் கொடுக்கவும் பெண்கள் விரும்புவதில்லை “சமையலறையை ஆக்ரமித்துக்கொள். அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே…. இரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உபதேசம் பெற்றவர்கள் அவர்கள். வீட்டின் மூலையில் தன்னுணர்வின்றி விழுந்து விடும் வயதான பெண்மணி, சமையலறையும் அதை தொடர்ந்து அதிகாரமும் தன்னை விட்டு போய் விடுமோ என்ற பயத்தோடுதான் எழுந்துக் கொள்கிறாள். அந்த நேரத்திலும் அலங்காரம் செய்துக் கொள்ள தோன்றுகிறது அவளுக்கு.

சக்கையாகிப் போன அப்பெண்ணின் பௌதீக உடலை பற்றி இப்படி விவரிக்கிறார் அம்பை. ”உடல் சிவக்கப் பழுத்த பழம் ஒன்று வற்றினாற்போல் இருந்தது அகங்கையில் கோடுகள் கனத்து ஓடின. புறங்கை சுருங்கி நரம்புகள் பளபளத்தன. அடிவயிற்றில் ஏரிட்டு உழுதாற்போல் ஆழமான பிரசவ வரித் தழும்புகள். அவள் உறுப்பின் மேல்புறத்து மயிர் வெளேரென்று பசையற்று, அங்கங்கே உதிர்ந்து இருந்தது. பருத்துப் பின் தளர்ந்த பின்பாகமும், தொடைகளும் வெளுத்த கீறல்களுடன் சுருங்கித் தொங்கின. உள்தொடை இடுக்கின் அருகே கருகிய வாழைத் தோல்போல் வதங்கிக் கிடந்தது. ஸ்தனங்கள் சுருங்கிய திராட்சை முலைக்காம்புகளுடன் தாழ்ந்து தொங்கின. கழுத்தில் பல தங்கச் செயின்களின் கரிக்கோடுகள். நெற்றியில் வகிட்டின் முனையில் கனத்த தங்கக் குண்டுடன் தலையில் அணிந்த சுட்டிப் பட்டம் அழுத்தி அழுத்தி வழுக்கை விழுந்தாற்போல் வழவழவென்று ஒரு தழும்பு.”  

கணவன் இறந்த பிறகு சுவையான உணவுகள் மறுக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட உணவுகளே பெண்களுக்கு கொடுக்கப்படும். நாவை ஜெயிக்க முடியாமல், தன் மீது அம்பாவை ஏற்றிக் கொள்கிறாள் படிஜீஜீ. அம்பா உண்ண வேண்டியதை பட்டியலிடுகிறது. உறைய வைக்கும் உள்ளறையின் புழுக்கத்தை, நுணுக்கமாக அணுகிய படைப்பு இது.

“சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை“ என்ற அவரது சமீபத்துக் கதையொன்றில், செவித்திறனற்றவள் தேன்மொழி. அவளின் வளர்ப்புத்தந்தை வசந்தன். அவன் மைதிலியை காதலித்து மணந்துக் கொள்கிறான். குழந்தையில்லாத ஏக்கம் அவனை ஆக்ரமிக்க, அதன் அதீதத்தில் தேன்மொழியைக் குழந்தையாக துாக்கி வருகிறான். தேன்மொழியின் வருகைக்கு பிறகு, தன் வாழ்க்கையை தேன்மொழிக்கு முன், தேன்மொழிக்கு பின் என இரண்டாக வகுத்துக் கொள்ளுமளவுக்கு மகள் மீது பாசம் கொள்கிறான். குழந்தை வளர்ந்த பிறகு, தெரிய வரும் அவளின் உடற்குறை அவனை நிம்மதியிழக்க செய்கிறது. செயற்கை கருவிகளின் மூலம், மகளை “இயல்பாக்க“ விழைகிறான். தேன்மொழிக்கோ மொழியின் மீது நாட்டமில்லை. அதன் ஒலி பரிமாற்றத்திற்கானது மட்டும. அகத்தைப் பிரதிபலிக்க அது அனாவசியமானது என்ற அவளின் அனாயாசமான சிந்தனை வசந்தனுக்கு தடுமாற்றத்தை ஏற்படுகிறது. கூடவே, கை கூடாது போன தன் முந்தைய காதலின், காதலிக்கு, அவளுக்கான திருமணத்தில் மூன்று பிள்ளைகள் இருப்பதையும், மைதிலி்க்குக் குழந்தையொன்று தரவியலாத தன் இயலாமையையும், தேன்மொழியின் நிலையுமாக மனம் இக்கட்டான இறுக்கத்தில் தவிக்கிறது. 

ஒலியின் ஆக்ரமிப்பில் மௌனம் வீழ்ந்து போவதாக எண்ணும் தேன்மொழியின்  உலகில், தான் இல்லை என்பதை உணரும் தருணத்தில், உடைந்து செம்மார்பு குக்குறுவான் போல ஒளிந்துக் கொள்ளும் முடிவோடு எங்கோ கிளம்புகிறான் வசந்தன். மைதிலியும் தேன்மொழியும் அவனை எங்கெங்கோ தேடியலைகிறார்கள். அவனின் இருப்பிடத்தை கண்டடைந்ததும், கதறியழும் மகளிடம், உன் தவறு இதில் ஏதுமில்லை என்று சமாதானம் செய்கிறாள் மைதிலி. அவனை மானசீகமாகத் தன்னின் எல்லாவற்றிலிருந்து விடுவித்துத் திரும்பும்போதே, அவன், அவளின் அத்தனைக்குள்ளும் நிரந்தரமாகியிருப்பது புரிகிறது. தேன்மொழி வசந்தன் மைதிலி மூவருக்குமான மனக்கட்டு மேம்போக்காக அவிழ்ந்திருந்தாலும், உள்ளார்ந்து இறுக்கப்பட்டுள்ளதாக உணர்ந்து கொள்ளலாம்.

சில சிறுகதைகளை மட்டுமே தெரிவு செய்துக் கொண்டு எழுதிய கட்டுரை என்பதால் இதனை அம்பையின் ஒட்டுமொத்த படைப்புகள் குறித்த கட்டுரையாக கொள்ளவியலாது. அவரின் பழமைப்பட்டு விடாத மொழியும், பெரிதாக ஏதொன்றும் நிகழ்ந்து விடாத சமூக அமைப்பும் (மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டிருந்தாலும், சமூகம் தன் விழுமியமாக கொண்டுள்ளவற்றை வெளிப்படையாக மாற்றிக் கொள்ள முன்வருவதில்லை என்பதால், நிகழும் மாற்றங்கள் உள்ளடுக்கான ஒரு வெளியை கட்டமைத்து பதுங்கலாக நகர்கிறது எனலாம்) கதையையும், கருவையும் புதிது போலவே காட்டுகின்றன. கலையின் வழியே தனது கருத்துகளை இலாவகமாகச் சொருகிச் செல்லும்போது., சில கதைகளில் அவை கருத்துகளாகவும் நின்று விடுவதுண்டு. பயணம் குறித்த எழுதப்பட்ட இவரது சில கதைகள் அதிகப்படியான தகவல்களால், நீர்த்தும் போயுள்ளன. ஆனால், காதலில் மயங்குவதும், கசிந்துருகுவதும், கையணைப்புக்குள் நெகிழ்வதுமாகப் படைக்கப்பட்ட பெண் கதாபாத்திரங்களுக்கிடையே, அம்பையின் கதைநாயகிகள் அறிவார்ந்தவர்கள். சுயதேடல் கொண்டவர்கள். சமுதாயத்தின், கெட்டித்தட்டிப்போன சமநோக்கின்மையை, மீறலான அவரது பாத்திரங்கள் சீறலோடு முன் வைக்கின்றன. அவற்றின் கம்பீரமும் குறைவதில்லை.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.