அம்பையின் அண்மைக்காலக் கதைகளும் மூப்பியலும்

                       சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானியாக் கவி குளோரியா ஃப்யூர்டஸ்சின் கவிதைகள் பற்றிய ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருந்த போது,  ‘Gerentological Discourse’  என்னும் புதிய சொற்றொடரை எதிர் கொண்டேன். ‘Geriatrics’ என்ற சொல்லை நாம் அனைவரும் அறிவோம். அது மூத்தோர் மருந்தியல் பற்றிய சொல்லாகும். ஆனால் மூப்பியல் (Gerentology) என்பது மூப்படைதல் பற்றியும் மூத்தவர்களின் வாழ்நிலை, சமூகத்தில் அவர்கள் நடத்தப்படும் விதம், அண்மைக் காலமாக குடும்பங்களில் மூத்தோர்கள் கையாளப்படும் விதம் குறித்த தலைகீழ் பண்பாட்டு மாற்றங்கள், அது குறித்த மூத்தோர்களின் அச்சம் மற்றும் உளவியல் சிக்கல்களைப் பேசும், ஆய்வு செய்யும் ஒரு துறையாக இந்த மூப்பியல் துறை வளர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியாகி இருக்கும் அம்பையின் “சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” சிறுகதைத் தொகுப்பில் பெரும்பாலான கதைகள் மூப்படைதல் மற்றும் முதியோர்கள் பற்றிய மிக ஆழமான கதைகளாக இருக்கின்றன. வீட்டில் ஒரு தேவையற்ற சுமையாக கருதப்படும் முதியோர்களை எவ்வாறு dispose செய்வது என்பது தற்கால இளம் தலைமுறையினருக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நகரமயமாதலில் முதியோர்களுக்கான புழங்குவெளி என்பது மறுக்கப்பட்டு, வராந்தாக்களில் படுக்க வைக்கப் படுகிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சம்பாதித்த வீடுகளில், மிகச்சிறிய அறைகளில் ஒதுக்கப்படுகிறார்கள். அம்பை கதையில் முதியவர்கள் தற்கொலை செய்துகொள்வது எவ்வளவு பெரிய வேதனை?

                        “தொண்டை புடைத்த காகம் ஒன்று” கதை, ஒரு மகளின் பார்வையில், இறந்து போன அப்பாவின் இறுதி நாட்களாக விரிகிறது. அப்பா, மறதி காரணமாக, ஞாபகங்களின் அடுக்குகளில் வெவ்வேறு காலங்களில் முன்னும் பின்னுமாகக் குழம்பிக் குழம்பி சஞ்சரிக்கிறார். “சாப்பாடு, சாப்பாடு…” என்று அப்பாவின் வீரிடல்…இப்படித் தொடங்கும் பகுதியில் அவரது முழு வாழ்க்கையும் நமக்குத் தெரிய வருகிறது. வீட்டில் செவிலியர் வைத்து நல்ல முறையில் கவனிக்கப்படும் அப்பா அவர். சாப்பிட்டது மறந்துவிடுகிறது. கல்லூரியில் பேராசிரியை ஆக இருக்கும் மகளை மாணவியாகவே பார்க்கிறார். இறந்து படமாகத் தொங்கும் அம்மாவை, “காய்கறி வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா?” என்று நிகழ்காலத்தில் தேடுகிறார். வினோதமான பலவற்றையும் ஞாபகம் கொள்கிறார். வாழ்ந்த வாழ்க்கையை தொகுத்துப் பார்ப்பது போல கடந்த காலம் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார். தொண்டைப்புற்று ஏற்பட்டு உணவை விழுங்க முடியாமல் ஒரு நாள் இறந்தும் போகிறார். ஆனால் இதை அம்பை வெறுமனே எழுதியிருந்தால் நினைவுக் குறிப்புகளாக எஞ்சியிருக்கும். இத்துடன் ஒரு காகத்தையும் இணைக்கிறார். அந்தக் குறிப்பிட்ட காகம், அப்பாவைப் போலவே தொண்டை புடைத்த காகம், ‘காலையில் முதல் தோசை ஊற்ற ஆரம்பிக்கும் போது கரையத் துவங்கும்.’ ஒரு நாள் அவளது இறந்து போன அப்பா அழைப்பது போலவே “க..ல்..லூ…” என்று கூப்பிடுவது கண்டு அதிர்ச்சி அடைகிறார். ‘சட்டென்று ஒருநாள் கத்திக் கீறலாய் அந்த எண்ணம் ஓடியது. அது காகம் தானா?’

இவ்வாறு காகத்தை வாழ்வியலோடு இணைப்பது மதரீதியானது அல்ல. காலை உணவுக்கு முன்பு காகத்திற்கு உணவிடுவது என்பது பலகாலமாக தமிழர்கள் வாழ்வோடு இணைந்த பழக்கம். என்னுடைய தாத்தா ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிடுவார். இரவு தவிர மற்ற எல்லா வேளைகளிலும் காக்கைக்கு உணவளிப்பதை அவர் இறந்த நாள் வரையிலும் செய்து வந்தார். அம்பையின் இந்தக் கதையை ஒரு பிரியம் கொண்ட மகள் மட்டுமே எழுத முடியும். மிக நுட்பமாக, மிகக் குறைந்த சொற்களில் எழுதப்பட்ட இந்தக் கதையை எல்லா அப்பாக்களும் விரும்பி வாசிப்பார்கள். 

                      “சாம்பல் மேல் எழும் நகரம்” கதை, 75 வயது ஊர்மிளாத்தாயி அவரது 95 வயது மாமியார் ஆகியோரது கதை. அவர்களது ரயில்ப்பாதையோர குடியிருப்புப் பகுதி இடிந்து விழுந்து, மாற்று வீடு தரப்படாததால் அவளது அண்ணனும் அக்காவும் இறந்து போகிறார்கள். கிழவி குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பெலும்பு விரிசல் கண்டும் பிழைத்துக் கொள்கிறாள். இவர்களது குடியிருப்பும் அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறுவதற்காக இடிபடக் காத்திருக்கிறது.  நடமாட முடியாத 95 வயதுக் கிழவியை எங்கே கூட்டிப் போவாள்? 75 வயது ஊர்மிளாத்தாயி வீட்டுக்கு வெளியே தீயிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இத்துடன் இந்தத் துயரக் கதையைக் கூறும் கதைசொல்லியின் கதையும் இணைக்கப்படுகிறது. ஓய்வு பெற ஐந்து வயதே இருக்கும் கதைசொல்லி, அவளது கணவன் குமாரப்பா, மன வளர்ச்சி குன்றிய 60 வயது நாத்தனார் மற்றும் நடமாட முடியாத மாமியார். இத்துடன் இந்த வீட்டில் வேலை செய்யும் கம்லியின் கதையும் சேர்ந்து கொள்கிறது. இந்த 60 வயது நாத்தனாரும் மாமியாரும் அடுத்தடுத்து இறக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட ஊர்மிளாவின் மகன் தனது பாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான். அவள் பத்தாவது நாளே இறந்து போகிறாள். இந்த எல்லாரது குடியிருப்புப் பகுதிகளும் இடிக்கப்படுகிறது. கம்லியின் சதுப்பு நிலக் குடியிருப்புப் பகுதி தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. ஐம்பது பேர் இறந்து போகிறார்கள். கிரன்காவ் ஆலைக் கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கே பாங்காங்க் போன்றதொரு குடியிருப்புப் பகுதி எழும்புகிறது. அதில் 22வது மாடியில் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு கதைசொல்லி குடியேறுகிறார். அங்கே கம்லி வர முடியாதால் அந்த மில்லில் வேலை பார்த்தவரின் மகள் கம்மு புதிய வேலைக்காரியாக வருகிறாள். கம்மு பற்றியும் நாம் ஒரு வரியாவது எழுத வேண்டும் என விரும்பும்படியான பாத்திரம். மனிதர்கள் மீதான அம்பையின் பிரியம் விரிந்து கொண்டே செல்கிறது.

                  முதியவர்களின் மரணங்களும் குடியிருப்புப் பகுதிகளின் அழிவுகளுமாக இந்தச் சிறிய கதை முழுவதும் நிரம்பி வழிந்து நம் மூச்சை அடைக்கிறது. கதையின் கடைசியில், ஆரண்யங்களை நெருப்பிட்டு அழித்து இந்திரப் பிரஸ்தம் எழும்பிய புராண இதிகாசத் தொன்மங்களையும் அம்பை இணைக்காமல் இல்லை. ஒரே தம்மில் மூச்சைப் பிடித்துக்கொண்டு அத்தனை கதைகளையும் அடர்வனம் போல ஒரு பிழையும் இல்லாமல் எழுதியிருக்கிறார்.  அப்படியும் கதை 11 பக்கத்தில் முடிந்துவிடுகிறது. வெற்றிகரமான சிறுகதைகளின் எண்ணற்ற வடிவங்களில் இதுவும் ஒன்று.

                  இத்தொகுப்பின் இன்னொரு முதியவர் கதை “பயணம் 21”. இதில் காமும்மா என்னும் 85 வயது நிரம்பிய, ஒரு காலத்தில் மிகப் புகழ்பெற்ற புரட்சிகரமான பரத நாட்டியப் பெண்ணை, அவரது வேண்டுகோளுக்கிணங்க, வெளி நாட்டில் இருக்கும் அவளது மகள் அனன்யா பார்க்க வருகிறாள். என்ன பிரச்னை? மூப்பியலின் பிரத்யேகப் பிரச்சினைகளில் ஒன்று அது. மரணத்தின் அருகில் வசிக்கும் காமும்மா தனது வாழ்வை, பரத நாட்டியத்தில் தான் செய்திருக்கும் சாதனைகளை ஆவணப்படுத்த விரும்புகிறார். அவரது சுயசரிதையைத் தேசியப் புத்தக நிறுவனம் ஒன்று எப்போதோ வெளியிட்டிருக்கிறது. அந்த நூலின் ஒரு பிரதி கூட இப்பொழுது அவளிடம் இல்லை. அந்த நிறுவனம் இருக்கும் டெல்லி சென்று தேடி வருமாறு மகளிடம் கோரிக்கை.  அனன்யா அரசாங்க நிறுவனத்தின் புத்தகக் கிடங்குக்கே செல்கிறாள். அனுமதி பெற்று கிடங்கிற்குள் நுழைந்து தேடுகிறாள். தேசிய நிறுவனத்தின் கிடங்கு என்றால் சொல்லவா வேண்டும். சகல பலிகளும் நடந்திருந்த அந்தக் கிடங்கிலிருந்து அதன் சிப்பந்தி அந்த நூலின் இருபது பிரதிகளை எடுத்துத் தருகிறார். உண்மையில், ஒரு முதிய தாய்க்குத் தன்னைப் புரிந்து கொண்ட ஒரு மகள் கிடைப்பது பெரிய வரம்.

                         இத்தொகுப்பில் என்னை மனதளவில் மிகவும் பாதித்த கதைகளில் ஒன்றென முதலில் நான் விவரித்திருக்கும் “தொண்டை புடைத்த காகம் ஒன்று” கதை. அடுத்ததாக “வீழ்தல்” என்னும் தலைப்பிட்ட கதை. புரந்தரதாசரின், “நானேக்கே படவனு நானேக்கே பரதேசி” பாடலின் பெஹாக் ராகம் இந்தக் கதையைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அவன் சத்யா. அவள் கமலா. இந்திராகாந்தியின் எமெர்ஜென்சி அறிவிக்கபட்ட போது சத்யா வேலையை விடுகிறான். அவள் வேலையையும் விடச் சொல்கிறான். இருவரும் துணிந்து டெல்லியிலிருந்து மும்பை வருகிறார்கள். நண்பர்கள் வீட்டில் வரவேற்பறைகளில் வாசம். பிறகு ஒரு ஒற்றை அறை சால் வீடு. இரு கோப்பைகளில் பாலில்லாத தேனீர். உலர்ந்த ரொட்டி. பெஹாக். நானேக்கே பரதேசி. பின் வாழ்க்கை மாறுகிறது.

ஒரு நாள் கழிப்பறையில் விழுந்தவனுக்கு தலையில் அடி. மூளையில் ரத்தக் கட்டி. மருத்துவ மனையில் ஒரு உரையாடல்:

“எவ்வளவு வயது?” என்று கேட்டார் டாக்டர்.

“எழுபத்தஞ்சு”

“ஹூம். காலாவதியாகும் நேரம்தானே? யோசிச்சுச் சொல்லுங்கள்” என்றார்.

அவள் கூறுகிறாள்: “செலவைப் பத்தி யோசிக்காதே. சத்யாவுக்கு இன்ஷ்யூரன்ஸ் இருக்கு. என் நகையும் இருக்கு.”

அவள் மகன் ஆதி: “பார்க்கலாம்.”

அவள் கீழே போய் காண்டீனில் டீ குடித்துவிட்டு வருவதற்குள் ஆதியே முடிவெடுத்து சத்யாவின் தொண்டையில் ஓட்டை போடுகிறார்கள். சொன்னாற்போல் தொற்று வந்து சத்யா முடிந்து போனான்.

கமலா சிம்லாவுக்கு வருகிறாள். அவளுக்கும் காலாவதி வயது 72 வந்துவிட்டதாம். மிக நேர்த்தியாக உடுத்தியிருக்கும் அவள், மனதில் பெஹாக் ஓடிக் கொண்டிருக்க, அவளது அறையின் பால்கனியிலிருந்து சிம்லா பள்ளத்தாக்கில் குதித்து வீழ்கிறாள்.

இன்றைய இந்தியாவின் மூப்பியல் கதை இது தான். மரணம் வாசல்படியில் நிற்கும்போது கூட சமூகம் கணக்குவழக்குப் பார்த்துத்தான் முடிவெடுக்கும். மூப்பியல் பற்றியும் முதுமை பற்றியும் கொஞ்சமும் கவலைப்படாத அடிப்படை மனித நேயமற்ற கொடூரத்தை கமலா மரணம் மூலமே எதிர்கொள்கிறாள்.

******

                      மேலே நாம் பார்த்த “வீழ்தல்” கதையின் முடிவை மாற்றக் கூடாதா? அவள் சிம்லா பள்ளத்தாக்கில் குதித்து இறப்பதைக் காட்டிலும் வேறு ஏதேனும் ‘நல்ல’ முடிவு இருக்கக் கூடாதா என்று அம்பையிடம் யாரோ ஒரு இடதுசாரித் தோழி கேட்டாரோ என்னவோ தெரியவில்லை. அம்பை இதே தொகுப்பில் “வில் முறியாத சுயம்வரங்கள்” என்று ஒரு கதையை எழுதிச் சேர்த்துவிடுகிறார். இந்தக் கதையில் அவள் பெயர்: சாந்தி. அவன் பெயர்: அருண். பஞ்சாபி. அருண் மறைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இவள் கல்லூரி வேலையில் இருந்து ஓய்வு பெற இரண்டு மாதங்கள் இருக்கின்றன. மகள் அம்ரித் கௌரியும் மகன் நரேந்திரகுமாரும் வெளி நாட்டில் இருக்கிறார்கள். ஸ்கைப்பில் உரையாடல். பாட்டியுடன் பேரன் பேத்திகள் மகனும் மகளும். உடன் மருமகன் மற்றும் மருமகள். பிள்ளைகள் கூடி,  ஒரு யோசனையை முன் வைக்கிறார்கள். ‘சுயம்வர்’ என்ற அமைப்பின் மூலம் அவளுக்கு ஒரு கம்பேனியன்ஷிப் ஏற்பாடு செய்யலாம் என்கிறார்கள். “அவங்கவங்க சொத்து அவங்கவங்க குழந்தைகளுக்குத்தான்னுட்டு தெளிவா ஒப்பந்தம் பண்ணீட்டு திருமணம் பண்ணிக்கலாம். இதுல எந்த வகையான சுரண்டலும் இல்லை. தனிமையும் இருக்காது. எங்களுக்கும் ரொம்ப மன நிம்மதியா இருக்கும்.” இவள் மறுத்துவிடுகிறாள். “எனக்கு ஒரு நண்பன் இருக்கான்” என்று அறிவிக்கிறாள். யார் அது? அவன் என்ன செய்கிறான். அவன் வயது என்ன என்று இவளைக் குடைகிறார்கள். இவள் எலாவற்றுக்கும் விளக்கம் அளித்துவிட்டு ஸ்கைப்பைத் துண்டித்துவிடுகிறாள். அன்று இரவு அவளது பழைய ஸ்னேகிதன் மீன்களுடன் வருகிறான். அவனே மீன்களைச் சுத்தம் செய்து சமைக்க ஆரம்பிக்கிறான். மீன் வெந்து கொண்டிருக்கும் போது இடையில் அவளிடம் வந்து ஸ்கைப்பில் பேசியது பற்றிக் கேட்கிறான். அவள் எடுத்திருக்கும் முடிவை நந்துவிடம் கூறுகிறாள். நந்து சிரித்துவிட்டு “மீனைத் திருப்பிப் போடனும்” என்று கூறிவிட்டு எழுந்து போகிறான். இது தான் அம்பையின் கதை. முதியவர்களின் தனிமையை, துணையிழந்த சூழலை, பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் இடைவெளியைச் சரியாகக் கையாளும் கதையாகவும் அமைகிறது. 

தொகுப்பு முழுவதும், அனேக இடங்கள் இசையால், கவிதையால் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியா முழுவதும் நிரம்பியிருக்கும் பல மாநில மனிதர்களும் கதைக் களங்களும் வேறுபட்டுத் தெரியாமல் வெகு இயல்பாக வாசிக்க முடிகிறது. பல்வேறு தளங்களிலும் மனசோடு ஒட்டிக் கொள்ளும் எழுத்தை எல்லாரும் எழுதிவிட முடியாது. ஒரு நெருங்கிய தோழியுடன் உரையாடும் வாய்ப்பை இக்கதைகள் உருவாக்கின என்பது அம்பையின் வெற்றி தானே?

௦௦௦

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.