அணில் கட்டிய பாலம் ஒன்று

ராமாயணத்தில் இலங்கையை அடையக் கடல் மேல்  பாலம் மும்முரமாகக் கட்டிக்கொண்டிருந்தபோது ஒரு சிறு அணில் தண்ணியில் குதித்துத் தன்னை நனைத்துக்கொண்டு பின் மணலில் புரண்டு அதன்பின் பாலம் கட்டுமிடத்துக்குப் போய் தன் உடல் மணலை உதிர்த்துவிட்டு வருவது என்று தொடர்ந்து செய்துகொண்டு இருந்தது. அதன் செயலைப் பார்த்து வியப்புற்ற ராமர் அது பற்றி விசாரித்ததும் தானும் பாலம் கட்டுவதில் உதவுவதாக அணில் கூறியதாம். ரோஜா முத்தைய்யா ஆராய்ச்சி நூலகத்தைப் பொறுத்தவரை அதை உருவாக்கியதில் என் பங்கு அந்த அணிலினுடையது போல்தான். நான் செய்ததெல்லாம் நான் சிகாகோ பல்கலைக் கழகத்துக்கு 1992வில் ராக்க்ஃபெல்லர் உயர் ஆராய்ச்சி விருது பெற்ற ஆராய்ச்சியாளராகச் சென்றபோது, மிகச் சிறந்த தென் ஆசிய மையத்தின் நூலகரான ஜிம் நையிடமும் அவர் குழுவிடமும், கோட்டையூரில் உள்ள ஒரு தனி நபர் நூலகம் பற்றியும், அதில் உள்ள புத்தகங்கள் மற்றும் இதர ஆராய்ச்சி தரவுகள் பற்றியும் விவரமாக எடுத்துக் கூறி, அந்நூலகத்தைப் பாழாக விடக்கூடாது என்று வலியுறுத்திக் கூறியதுதான். நூலகம் பற்றிய சில கட்டுரைகள், அது அப்போது விலைபேசப் படுகிறது என்ற விவரம் மற்றும் அதுவரை யாரும் வாங்க முன்வரவில்லை என்ற தகவல் இவற்றை அவர்கள் முன்வைத்து அந்த நூலகத்தைப் பாதுகாக்க ஏதாவது செய்யும்படி தொடர்ந்து நான் அங்கிருந்தபோது கூறிக்கொண்டிருந்தேன். பேராசிரியர் ராமானுஜம் அவர்களும் நான் இது பற்றிக் கூறியதும் இதில் ஆர்வம் காட்டலானார். அதன் பின் ரோஜா முத்தைய்யா ஆராய்ச்சி நூலகம் எப்படி உருவாகியது என்பது சரித்திரத்துடன் இணைந்துவிட்ட ஒன்று. அதைக் கூற பலர் இருக்கிறார்கள்.

1974இல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஆராய்ச்சிக்காகத் தமிழ் நாடு ஆவணக் காப்பகத்தின் ஆராய்ச்சி நிதி உதவி நல்கை எனக்குக் கிடைத்தது. முதல் முறையாகத் தமிழ் நாடு என் ஆராய்ச்சிக் களமாகியது. தமிழ் நாடு ஆவணக் காப்பகம் தவிர வேறு பல தனியார் நூலகங்கள் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. அப்போது தியடோர் பாஸ்கரன் அவர்களும் அங்கு ஆராய்ச்சியாளராக இருந்தார். தமிழ் நாடகம், சினிமா, சுற்றுச் சூழல், புராதன சிற்பங்கள் என்று பல விஷயங்களில் அவருக்கு ஈடுபாடு இருந்தது. தமிழ் இலக்கியத்திலும் அவருக்கு ஆர்வம் இருந்ததால் பல முறைகள் அவரவர் கள வேலைகள் பற்றிப் பேசுவோம். ஒரு முறை அவர் கோட்டையூரில் உள்ள ரோஜா முத்தைய்யா அவர்கள் சேகரித்துள்ள நூல்கள் பற்றிக் குறிப்பிட்டார். அங்கு செல்ல வேண்டும் என்று ஓர் ஆசை எனக்கு ஏற்பட்டது. தியடோர் பாஸ்கரன் அரசுத் துறை ஒன்றில் உயர் அதிகாரியாக இருந்ததால் பயணங்களைத் திட்டமிடுவது அவருக்கு எளிதாக இருந்தது. தமிழ் நாட்டை நன்கு அறிந்தவராதலால் எங்கு, எப்படிச் செல்ல வேண்டும், கள வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அவர் சிறப்பாகத் திட்டமிட்டு செயல் பட்டார். அந்த அனுகூலங்கள் எனக்கு இருக்கவில்லை. காரணம் நான் டில்லியில் பல ஆண்டுகளாக வாழ்ந்திருந்தேன். தமிழ் நாட்டில் அதிகம் பயணம் செய்ததில்லை. தனியாகப் பயணம் போகும் பெண்ணுக்கு ஹோட்டலில் தங்க அறை தர மாட்டார்கள் போன்ற அனுபவங்கள் எனக்கு இந்த ஆராய்ச்சியில்தான் ஏற்பட்டன. திருச்சியில் ஒரு முறை இரவு எங்கு போவது என்று தெரியாமல் தவித்தபின்பு ஒரு ஹோட்டலில் அறை கிடைத்தது. டாக்டர் லக்ஷ்மி என்று குறிப்பிட்டதால் வைத்தியர் என்று நினைத்துத் தரப்பட்ட அறை! ஆகவே கோட்டையூர் போக நான் சிறிது கவனத்துடன் திட்டமிட நேர்ந்தது. காரைக்குடியில் நண்பர் ஒருவரின் மாமாவுடன் தொடர்புகொண்டு அவர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்துகொண்டு புறப்பட்டேன். போய்ச் சேர்ந்த மறு நாள் காலையில் பேருந்தில் கோட்டையூர் போனேன்.

கோட்டையூரில் ரோஜா முத்தைய்யா வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்தவித சிரமமும் இருக்கவில்லை. அந்தச் சிறிய ஊரில் அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கவில்லை. பேருந்தின் நடத்துனரே என்னிடம் முத்தைய்யா அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு நான் போகிறேனா என்று விசாரித்திருந்தார். அவர் வீடு பல ஆராய்ச்சியாளர்கள் வந்துபோகும் இடமாக இருந்தது போலும். நான் வருவது குறித்து முன்பே எழுதியிருந்ததால் பழங்கால வீட்டின் நீண்ட தாழ்வாரத்தை அடுத்த பெரிய் முன்னறையில் கீழே தரையில் அவர் அமர்ந்திருந்தார்.

“வாங்கம்மா” என்று வரவேற்றார்.

வணக்கம் கூறிவிட்டு நான் அமர்ந்ததும், “டில்லியிலே இருக்கீங்க. தமிழ் நல்லா தெரியுமா?” என்று கேட்டார். ரோஜா முத்தைய்யா அவர்களுக்குக் கூர்மையான கண்கள். என்னை எடைபோடுகிறார் என்பது புரிந்தது. தமிழ் தெரியும் என்றும் அதனால்தான் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்றும் கூறினேன்.  

“உம்” என்று தலையை ஆட்டியபடி சற்று மௌனமாக இருந்தார். பிறகு “இந்த லைப்ரரி பற்றி எப்படி தெரியும்?” என்று கேட்டார். நான் தியடோர் பாஸ்கரன் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர் இது பற்றி எனக்குச் சொன்னதாகக் கூறினேன். தியடோர் பாஸ்கரனின் பெயர் மந்திரம் போல் செயல்பட்டது! ஒரு பெரிய கோட்டையைத் திறக்கும் திறவுகோலாகியது அவர் பெயர்.

“அவரா? அவர் பெரிய ஆளாச்சே? அவரா உங்களுக்குச் சொன்னார்?” என்றார்.

அந்தப் பெரிய ஆளைப் போலவே நானும் ஆராய்ச்சிக்கான நிதி உதவி பெற்றிருப்பதாகக் கூறியதும் அவர் முகம் மலர்ந்தது. “இங்க என்னென்ன பார்க்கணும் உங்களுக்கு?” என்று அடுத்த கட்ட கேள்விகளுக்குப் போனார்.

பெண்களுக்காக ஆண்கள் நடத்திய பெண்மதி போதினி போன்ற பத்திரிகைகளும், பெண்களே நடத்திய மங்கை போன்ற பத்திரிகைகளும், மரகதவல்லி அம்மாள் நடத்திய மாதர் மறுமணம் பத்திரிகையும், பெண்கள் படைப்புகளும் பார்க்க வேண்டும் என்று நான் விளக்கியதும், மரகதவல்லி அம்மாள் இருக்கும் ஊர் தெரியுமா என்று கேட்டார். அமராவதிபுதூர் என்று கூறினேன்.

“எல்லா விஷயமும் நல்லா தெரிஞ்சிருக்கு…” என்றார்.

“விஷயம் தெரியாம ஆராய்ச்சி செய்ய முடியுமா ஐயா?” என்றுவிட்டு, புத்தகங்கள் பட்டியல் இருக்குமா என்று விசாரித்தேன்.

“இருக்கு. தரலாம்” என்றார். பட்டியல் வெளியே வரவில்லை. இதற்குள் உள்ளே இருந்து ஒரு பெண்மணி வர, என்னை அறிமுகப் படுத்தினார் “டில்லியிலேந்து வந்திருக்காங்க” என்று. பிறகு ஒரு பெரிய சாவிக்கொத்து ஒன்றை அந்தப் பெண்மணி தர, “வாங்க, போகலாம்” என்று எழுந்தார்.

அவருடன் ஓர் ஐந்து நிமிடங்கள் நடந்ததும் மோட்டார் வண்டிகள் நிறுத்தப்படும் கொட்டில் போல் இருந்த ஓர் அறையின் கதவைத் திறந்தார். அது மேல்நோக்கித் திறக்கும் மடக்குக் கதவு என்று ஒரு மங்கலான நினைவு இப்போது. ஆனால் சரியாக நினைவில்லை. கதவைத் திறந்ததும் பழம் புத்தக நெடியும் அத்துடன் அவர் போட்டிருந்த மருந்து நெடியும் அடித்தது. சுற்றிலும், நடுவிலும்  திறந்த அலமாரிகள் நிறையப் புத்தகங்கள்.

“நீங்க கேட்டது இங்க இருக்கும்.” என்றுவிட்டு, புத்தகங்கள் பல கொட்டில்களில் இருப்பதாக விளக்கினார். அதன் விவரங்கள் அவருக்கு அத்துப்படியாக இருந்ததால்தான் எது தேவை என்று தெரிந்ததும் அவருக்கு எந்தக் கொட்டிலைத் திறக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது. நடுவே இருந்த அலமாரியை ஒட்டி ஒரு தாழ்வான தரை மேசை இருந்தது. அதன் அருகே பாய். வேண்டியதைப் பார்க்கலாம் என்றுவிட்டு எவ்வளவு நாட்கள் நான் வருவேன் என்று விசாரித்தார். காரைக்குடியில் நாலைந்து நாட்கள்தான் தங்க அனுமதி இருந்தது. அதைத் தெரிவித்தேன். அவர் விடை பெற்றுக்கொண்டார்.

சுற்றிலும்   இருந்த புத்தகங்களுக்கு இடையே அமர்ந்ததும் அறுசுவை உணவைப் பரப்பி உட்கார்த்தியது போல் நாவில் நீர் சுரந்தது. காலையிலிருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரை விடாது வேலை செய்தேன். மதியம் அவர் வீட்டிலிருந்து ஒரு பெரிய குவளையில் மோர் வந்தது. இப்படி ஒரு நான்கு நாட்கள். மருந்து நெடி பழகிவிட்டது. பழைய புத்தகங்களை வருடுவது போல் பிரிக்க முடிந்தது. ஒரே ஒரு நாள் ஒரு புத்தகத்தை முழுவதுமாக முடிக்க முடியாமல் போனபோது அதை வீட்டுக்கு எடுத்துப் போகலாமா என்று கேட்டபோது மறுத்தார். நான் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அவர் பெண் அந்தப் புத்தகத்தோடு ஓடி வந்தாள். “அப்பா தந்தார்” என்று விளக்கினாள். நான் கேட்ட புத்தகத்தை அனுப்பியிருந்தார்.

என் வேலை முடிந்ததும் மற்ற புத்தகங்களையும், மற்ற சேகரிப்புகளையும் அவர் சுயமாகச் செய்திருந்த பட்டியலையும் காட்டினார். அவருக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்பினேன். மற்ற ஆராய்ச்சியாளர்கள் அவர் நூலகத்தை உபயோகிக்க அவருக்கு ஒரு  தொகை அன்பளிப்பாகத் தருவது வழக்கம் என்று பிறகு அவர் எழுதிய தபால் அட்டையிலிருந்து தெரிந்தது. அதுகூடச் செய்யத் தெரியாதவளாக இருந்துவிட்டேனே என்று வெட்கப்பட்டேன். ஒரு சிறு தொகையை நான் பிறகு அனுப்பியதாக ஞாபகம். கோட்டையூர் அனுபவத்தை நான் மறக்கவில்லை. ஒரு மனிதர் தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்தப் புத்தகங்கள் விலைபேசப் படுகின்றன என்ற தகவலை நான் படித்ததும், அவற்றை வாங்கும் பணபலமோ, அவற்றைப் பாதுகாக்கும் சக்தியோ என்னிடம் இல்லையே என்று தோன்றியது. சிகாகோ போனபோது நான் இதுபற்றிப் பேசி அதன் மூலம் அந்தப் புத்தகங்களயும் மற்ற தரவுகளையும் பேணிப் பாதுகாக்க ஒரு நிறுவனம் அமைந்தது அத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நான் எதுவும் தராமல் கோட்டையூரை விட்டு வந்ததற்கு ஈடு செய்திருக்கும் என்று நம்புகிறேன். ஆரம்பத்தில் சுந்தரலிங்கமும் அதன் பிறகு நான் மிகவும் மதிக்கும் தியடோர் பாஸ்கரனும் அமைத்த இந்த ஆராய்ச்சி நிலையத்தின் வெளியே நான் இன்னமும் அது உருவாகச் சிறு மணல் தூவிய அணிலாக நிற்கிறேன்.

வெளியான இதழ்: மாற்றுவெளி ஜூன்10

One Reply to “அணில் கட்டிய பாலம் ஒன்று”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.