

சுய புலம்பல்களும், தன்னிரக்க வெளிப்பாடுகளும் மட்டுமே பெண் எழுத்துக்கள் என்ற போக்கை மாற்றிப் பெண் தனது உண்மையான சுயத்தை உணருவதே பெண்ணியம் என்பதைத் தன் புனைவுகள்,மற்றும் கூரிய சமூக ஆய்வுகள் வழியே முன்வைத்து நவீன பெண்ணியத் தமிழ்ப்படைப்புக்களின் திசைதிருப்பியாக விளங்கியவர் அம்பை என்ற சி.எஸ்.லக்ஷ்மி. ’80களுக்குப் பின் தமிழில் எழுதப்பட்ட தீவிரமான பெண்ணிய எழுத்துக்கள் பலவும் அவரது தாக்கத்தில் வேர் கொண்டவையே. கனடா நாட்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இயல்’ விருது பெற்றிருக்கும் அம்பை, ஒரு கதைசொல்லி மட்டுமில்லை,நேரடியாகக் களத்திலிறங்கி மறைக்கப்பட்ட பெண்களின் பலதரப்பட்ட முகங்களை –எழுத்தை..ஓவியத்தை, இசையை, நாட்டியத்தை, வேறு பல கலைநுட்பங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் செயல்பாட்டாளரும்-activist-கூட. அவர் பங்கு கொண்டிருக்கும் SPARROW என்னும் அமைப்பின் மூலம் அதையே அவர் சாத்தியப்படுத்தி வருகிறார். தமிழகப் பெண் எழுத்துக்கள்-தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியாலும் களப்பணியாலும் முகிழ்த்திருக்கும் அவரது THE FACE BEHIND THE MASK என்னும் ஆங்கில நூல் நவீனப் பெண் எழுத்து சார்ந்த மிகச் சிறந்த ஒரு பங்களிப்பு,
பெண்ணிய எழுத்துக்களின் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட அடித்தளம் அமைத்திருக்கும் அம்பை, தமிழ்ப்புனைவு வெளியில் மிக அரிதாகவே பதிவாகியிருக்கும் பெண்ணின் இறுதிக்கட்ட வாழ்வு குறித்த வெற்றிடத்தையும் தன் படைப்புக்கள் சிலவற்றின் வழியே முழுமைப்படுத்தியிருக்கிறார். இன்றைய சூழலில் பெண்ணின் வானப்பிரஸ்தம் என்பது இளமை முதல் நீறு பூத்த நெருப்பாய் அவளுக்குள் கனன்று கொண்டிருந்ததும், குடும்பம் சமூகம் ஆகிய கட்டுக்களால் நிறைவு செய்து கொள்ள முடியாமல் நழுவ விட்டவையுமாகவே இருக்க முடியும். தனக்கே உரித்தான அந்தப்பிரத்தியேகத் தேடல்களை நாடி அவள் மேற்கொள்ளும் பயணமே அவளது வானப்பிரஸ்தம்.
அதன் முதலடியைத் தன் ‘செந்திரு ஆகிவிட்டாள்’ கதை மூலம் முன் வைத்தவர், ஆர் சூடாமணி. மனைவியாகவும்,தாயாகவும் மட்டுமே இருந்த ஒருத்தி, தன் உலகியல் கடமைகள் அனைத்தும் முடிந்தபின், தனக்கே உரித்தான தன் ‘சுயமாய்’ – ‘செந்திரு’ என்னும் ‘அவ’ளாய் மட்டுமே மாறுகிறாள். ராஜம் கிருஷ்ணனின் ‘வீடு’ நாவல், வாழ்நாள் முழுவதும் தான் கைக்கொண்டிருந்த மதிப்பீடுகளின் குலைவையும் கூட்டுக்குடும்ப அமைப்பைக்கட்டிக்காப்பதற்காகப் பல ஆண்டுக்காலம் பொறுத்து வாழ்ந்த ஒரு பெண் முதிர்ந்த வயதில் எல்லாக் கடமைகளும் நிறைவுற்றபின் அந்த அமைப்பை விட்டு விலகிச் செல்வதைக்காட்டுகிறது.

இதே வகையான தேடலையும் கேள்வியையும் இன்னும் அடுத்தடுத்த தளங்களுக்கு இட்டுச்சென்றபடி, மறுதலிக்க முடியாத சில கேள்விகளை எழுப்பி, முக்கியத்துவம் பெறக்கூடிய இரு படைப்புக்கள் என்று அம்பையின் ‘அடவி’யையும், ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பை’யும் மதிப்பிடலாம். தொன்மத்தையும் நடப்பியலையும் ஒருசேர நெய்திருப்பது அடவி என்றால் யதார்த்தக் களத்தில் மட்டுமே நிலை கொண்டிருக்கிறது ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’.
ஓர் அடவியினுள் புதைந்து கிடக்கும் பலவகை அடுக்குகளைப்போல் பல அடுக்குகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் புனைகதைப்பிரதி, நீள்கதையாகிய ‘அடவி‘. இக்கதையின் முதன்மைப்பாத்திரமாகிய செந்திரு [சூடாமணியின் கதையிலிருக்கும் ‘செந்திரு’ என்ற பெயரே இந்தப்பாத்திரத்துக்கும் அமைந்து போயிருப்பது ஒரு தற்செயல் ஒற்றுமையா என்பதைக் கதைசொல்லியால் மட்டுமே கூற முடியும்] மேற்கொள்ளும் காட்டுவாசம் ஓர் அடுக்கு; அங்கே சீதை, தன் கதையைத் தானே புனைந்து கொள்வதாக அவள் எழுதும் கதை ஓர் அடுக்கு;காட்டினுள் செந்திருவுக்கு எதிர்ப்படும் காட்டுவாசிப்பெண்களின் வாழ்வு, பிறிதோர் அடுக்கு. இம்மூன்று அடுக்குகளிலும் மாறி, மாறிச் சஞ்சரிக்கும் இந்நெடுங்கதை, மரபார்ந்த கதை கூறலைத்தவிர்த்து, சில துண்டு துண்டான கணங்களையும்,அவற்றின் நிகழ்வுகளையும், உணர்வுகளையும் மட்டுமே முன்வைக்கிறது. படைப்பின் மையம் எது என்பதைக்கண்டடையும் பொறுப்பும், தேடலும் வாசகருக்கே உரியதாகின்றன.
தன் கணவனின் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் அனைத்திலும் துணையிருந்து-அவற்றுக்கு மூளையாகச்செயல்பட்ட செந்திரு, அவனது தொழில் கூட்டாளியாகத் தானும் ஏற்கப்பட்டிருக்க வேண்டிய தருணத்தில் அது மறுக்கப்பட்டுவிட-அதை ஒரு காரணமாக்கிக்கொண்டு, நடுத்தர வயதை எட்டிய நிலையில் ‘வானப்பிரஸ்த’ வனவாசத்தை மேற்கொள்கிறாள்.அங்கே அவள் பெறும் அனுபவங்கள்….,அவளுக்குள் கிளர்ந்தெழும் சிந்தனை ஓட்டங்கள்.., மனக்காட்சியாக அவளுக்கு சித்திக்கும் தரிசனங்கள் …இவையே இப்படைப்பின் அடிமூலங்கள்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைக் காட்டுவாசத்தில் கழித்த சீதையின் கதை- நாட்டுப்புறக் கதையாடல்கள், இதிகாசக் குறிப்புகள், மற்றும் சில தொன்மங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடவியில் மறு வாசிப்பு செய்யப்பட்டு ‘சீதாயண’மாக மூலப்பிரதியின் இடையிடையே-அதன் யதார்த்தத்தை ஊடறுத்துக்கொண்டு இடம் பெறுகிறது.
சமகாலம், புராண காலம் என்ற இரு களங்களிலும் மறி, மாறிப்பயணப்படும் இப்புனைவு, அந்த எடுத்துரைப்புக்களின் வழி முன்வைக்க முயல்வது பெண்ணின் இருப்புக் குறித்த தேடல்களையே.
பிறரின் சுமைகளைச்சுமத்தல், பிறருக்காக வாழ்தல் என்பதன்றித் தனக்கான ஒரு வெளியைப் பெண் தானாகவே அமைத்துக்கொள்வதும், தனக்கென்ற ஒரு தேடலை வகுத்துக்கொள்வதும் மட்டுமே அவள் வாழ்வை அவளுடையதாக்கும் என்ற செய்தியே, இப்பிரதியின் உட்பொருளாக உறைந்திருக்கிறது.
”நான் லேசாகணும்” என்கிறாள் செந்திரு.
”ஏதோ ஒரு விஸ்தரிப்பை அவள் அடைய நினைத்தாள்; எல்லா எல்லைகளும் உடைபடும் விஸ்தரிப்பு” என அவளது மனநிலையைக் காட்டுகிறார் அம்பை.
மரபார்ந்த வாழ்க்கைத்தடத்தில் பழகிப்போன எளிமையான காட்டுவாசிப் பெண்களுக்கும் கூட மேற்குறித்த தேடல்கள் இருப்பதை அவர்களோடு பழகும்போது கண்டுகொள்கிறாள் செந்திரு. கணவர்களோ, பிற குடும்ப நபர்களோ ஊரில் இல்லாதபோது அப்பெண்கள் விருந்துண்டு களித்து,மகிழ்ந்து தங்கள் விருப்பங்களுக்கு வடிகால் தேடிக்கொள்கிறார்கள்; தங்களுக்கான தனிப்பட்ட வெளியை அமைத்துக்கொண்டு-அங்கு கிடைக்கும் சுதந்திரமான தனிமையில் மரபுக்கருத்தியல்களைக் கட்டுடைத்து நொறுக்குகிறார்கள்.
வாழ்வின் பல நிலைகளிலும் ஆணுலகால் பந்தாடப்பட்ட சீதையும் , தன் வாழ்வின் இலக்கைத் தேடித் தானே பயணிப்பதாகத் தன் கதையை அமைக்கிறாள் செந்திரு. பூமி பிளந்து சீதையை விழுங்கியதான புராண அதிநிகழ்வைப் ‘பூமியின் அடியே யாரும் எட்ட முடியாத வெகு ஆழத்தில்’ சென்று விட்டது போன்ற உணர்வை அவள் பெற்றுவிட்டதாக யதார்த்தப்போக்கில் மாற்றி அமைக்கிறாள் அவள். காமம், குரோதம், பகைமை என அனைத்து உணர்வுகளும் மாறி மனமுதிர்ச்சி அடைந்த ஒரு கட்டத்தில் சற்றும் எதிர்பாராமல் அவள் இராவணனைச் சந்திக்கும்போது, அவன் அவளுக்கு நண்பனாகவே ஆகி விடுகிறான்.
கணவனும், குழந்தைகளும் பலமுறை தொலைபேசியில் அழைத்தும், காட்டு வாழ்க்கையை விட்டுவர செந்திருவுக்கு மனமில்லை; அவள் உருவாக்கும் சீதையும் அப்படிப்பட்டவளே. அயோத்தி அரசன் இராமனே அவளை அழைத்தும், அனுமனைப் பல தடவை அனுப்பிவைத்தும் காட்டை விட்டுத் திரும்பிச்செல்ல அவள் மனம் ஒப்பவில்லை. செந்திரு, சீதை ஆகிய இருவரும் மேற்கொள்வது….தங்களின் ஆழத்தைத் தாங்களே அறியும் பயணம்; தங்களது வாழ்வைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் முயற்சி.
பொதுவான சமூக நிலைப்பாட்டில், காடு-அடவி என்பவை ஆண்களின் வெளியாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. காட்டு வாசம் செய்து உண்மையை- தத்துவ ஒளியைத் தேடுவது, அவனுக்குரியதாக மட்டுமே இதுவரை கூறப்பட்டு வந்திருக்கிறது.
”வேட்டையாட, சம்ஹாரம் செய்ய என்று தனியாகப்போனவர்கள் இதிகாச புருஷர்கள் தான்….இதிகாசப்பெண்கள்…அவரவர் கணவன்மார்களுடன் காட்டிற்குப் போயிருக்கின்றனர்..வனவாசம் செய்யும்படி தந்தை உத்தரவிட்டால் வனம் செல்லும் இராமனுடன் சீதைப்பதவிதான் பெண்ணுக்கு; நளனுடன் நடக்கும் தமயந்தியாகத்தான் பெண்ணின் காட்டு விஜயம்; ரிஷியான கணவனுடன் செல்லும் ரிஷி பத்தினி நிலைதான் பெண்ணுக்குரியது. தனியாகப் போனால் தவத்தைக்குலைக்கும் மேனகையாகப் போகலாம்…இல்லாவிட்டால் பெண்ணுக்குக்காடு திக்குத் தெரியாத ஒன்றுதான்…..அவளை ரட்சிக்க ஒருவன் வரவேண்டும் பின்னாலேயே”, ”எல்லாத்தரிசனங்களும், தேடல்களும் ஆண்களுக்குத்தான்; இவள், ஆயிரம் விளக்கங்கள் தர வேண்டும்…சாக்குச்சொல்ல வேண்டும்…இல்லை,கண்ணனையோ, சிவனையோ வரித்துவிட வேண்டும்,” என்கிறார் அம்பை.
பெண்ணைப் பொறுத்தவரை காடு என்பது.. ஒரு தண்டனையாகவும், அவளை அபலையாக்கி ஒதுக்கிவிடும் முயற்சியாகவும் மட்டுமே பழம்புனைவுகளில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இக்கருத்தாக்கத்தைத் தகர்த்து, காடு என்னும் வெளியையும், அங்கே மேற்கொள்ளும் அகமுகத் தேடல்களையும் பெண்ணுக்கும் உரியதாக ஆக்கியிருப்பதே அம்பையின் புனைகதைப் பிரதியாகிய ‘அடவி’யின் தனித்துவம்.
அடவியில் வானப்பிரஸ்த வாழ்வே காட்டப்பட்டிருக்க ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ அதற்கான சந்தியாபாயின் போராட்டத்தைச் சித்தரிக்கிறது. அதில் இடம்பெறும் சந்தியாபாயின் வாழ்வு, யாரோ ஒரு சந்தியாவின் கதை மட்டும் அல்ல, வயது முதிர்ந்தபின் குடும்ப அமைப்புக்குள் வாழும் பல முதிய பெண்களின் ஒரு ‘மாதிரி’ யாக (sample), அவர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள், விருப்பங்கள் கண்டுகொள்ளப்படாமல் போவதால் அவர்களுக்குள் எழும் அக, புறப் போராட்டங்களை முன் வைக்கும் கதையாக அது அமைந்திருக்கிறது.
அறுபது வயதாகும் சந்தியாபாய் இளமை முதல் கிராமத்து விவசாயத்தோடு அந்த மண்ணோடு வளர்ந்து பழகியவள். அதற்கு நேர்மாறான ஒரு நகரத்து வாழ்க்கையே அமைந்தபோதும், அதையும் தட்டாமல் ஏற்றுத் தன் கடமைகள் அத்தனையும் பழுதின்றிச் செய்தவள் அவள். அன்பான கணவர், மகன்கள் மருமகள்கள், செல்வச்செழிப்பு என எந்தக்குறையும் சொல்ல முடியாத வாழ்வு. அவளுக்கும் யார் மீதும் எந்தப்புகாரும் இல்லை. கிராமத்திலிருக்கும் தன் தங்கை கணவர் இறந்து, அவளும் தனிமைப்பட்டிருக்கும் சூழலில் தங்கையோடு உடனிருந்து, தந்தையின் காலம் முதல் தங்களுக்குப்பழகிப்போன மூலிகைத்தோட்டக்கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள அறுபது பூர்த்தியாகும் நிலையில் அவள் மனம் ஆசைப்படுகிறது.
கிராமத்திலேயே போய்த் தங்கி விட வேண்டுமென்னும் அவளது அந்த விருப்பம், அவளது உள்மன ஆசை- குடும்பத்தாருக்கு வினோதமாய்ப் படுகிறது. அவளது ஆழ்மனத் தேடலைப் புரிந்து கொள்ள முடியாத அடுத்த தலைமுறை, இங்குதான் எல்லாம் சரியாக இருக்கிறதே, அவள் வாழ்க்கை மிகவும் நிறைவாகத்தானே இருந்தது, எல்லாம்தான் சுபமுடிவு கண்டு விட்டதே..இன்னும் ..இதற்கு மேலும் இவளுக்கென்ன வேண்டும் என நினைக்கிறது. அவள் ஏதோ மனம் குழம்பிப்போய் இருப்பதாய் எண்ணியபடி மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும் முயற்சிக்கிறது. வேண்டுமானால் தீர்த்த யாத்திரை சென்றுவந்தால் அவள் மனம் ஆறுமோ என்றும் கணக்குப்போடுகிறது. தீர்த்த யாத்திரையால் தீர்வாகும் தேடலா அது என்று நின்று நிதானிக்க எவருக்கும் பொறுமை இல்லை.
சந்தியா உறுதியாக இருக்கிறாள். தனக்கு வந்த பூர்வீக சொத்தாலும், நகைகளாலும் தனக்கு உரிமை உடையதாகத் தன் பெயரிலுள்ள வீட்டை விற்று, மொத்தப் பணத்தை சில பாகங்களாய்ப் பிரித்துக் கணவருக்கும், மகன்களுக்கும் தந்து விட்டு ஒரு பகுதியைத் தன்னோடு எடுத்துக் கொண்டபடி இறுதி நாட்களில் எவரையும் சாராமல் வாழ வேண்டுமெனத் திட்டமிடுகிறாள். அதைப்புரிந்து கொண்ட குடும்பம் கிட்டத்தட்ட அவளை வீட்டுச் சிறையில் வைக்கிறது. வீடு சார்ந்த பத்திரங்களைப் பத்திரப்படுத்துகிறது, அவள் மனநலம் சரியில்லாதவள் என்பதால் எதையும் விற்கும் உரிமை அவளுக்கு இல்லையெனக் காட்ட மனநலமருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெற முயல்கிறது.
அத்தனையையும் மீறிக்கொண்டு குடும்பத்தார் வெளியூர் சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில் வெளிநடப்பு செய்து விடும் சந்தியா, அந்தேரி மேம்பாலத்தில் திக்பிரமை பிடித்த நிலையில் அமர்ந்திருக்க தற்செயலாய் அவளை எதிர்ப்படும் சுதா அவளது ஆழ் மனதைக் கண்டறிந்து ஆதுரம் அளிப்பதோடு தீர்வுக்கும் வழி செய்கிறாள்.
தான் நினைத்ததை முடித்து கிராமத்துக்கு நீங்கும் சந்தியா தன் கணவருக்கு எழுதும் இறுதிக்கடிதம் கதைக்குள் செறிந்திருக்கும் ஓர் கவிதையாய்க் காவியமாய் வாசக மனங்களில் சென்று அமர்கிறது. குடும்பத்தாரைக் குறை கூறாமல் அவர்கள் மீது கொண்ட நேசத்தைப்போலவே தன் சொந்த விருப்பத்தையும் அவள் தன் மனதுக்குள் பேணி வந்திருப்பதை இதை விட நுட்பமாய் , நளினமாய் உணர்த்திவிட முடியாது. சந்தியாவின் அந்தக் கடிதத்துக்குக் குடும்பத்தார் எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்பது சொல்லப்படாமல் வாசக ஊகத்துக்கு விடப்பட்டு விடுவது..இது கதை என்பதால்..!
அசல் வாழ்க்கையோ பெண்ணின் வானப்பிரஸ்த வாழ்க்கைக்குக் கடுமையான எதிர்வினை ஆற்றியபடி, கையில் பிரம்பேந்தி சட்டாம்பிள்ளையாய்க்காத்திருக்கிறது. ஆனாலும் கூட..செந்திருவைப்போலவோ சந்தியாபாய் போலவோ யாரோ ஒரு பெண்ணை நாமெல்லாம் ஏதோ ஒரு மேம்பாலத்தின் நடுவிலோ அடியிலோ தினமும் எதிர்ப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறோம்.