அஞ்சலி: ஆனியெஸ் வர்தா

நேற்று என் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவு என்னைத் துயரிலாழ்த்தியது. ஃபிரெஞ்சு சினிமாவின் முதுபெரும் மேதை ஆனியெஸ் வர்தா மறைந்த செய்தி குறித்த தன் வருத்தத்தை அவர் எழுதியிருந்தார். இந்த மேதையின் திரைப்படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் குறித்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படங்களின் சிறப்பான கிரைட்டீரியன் பதிப்புகள் இன்னும் என்னிடம் இருக்கின்றன என்பது பெருமையாகத்தான் இருக்கிறது:  Vagabond(1985), Le Bonheur (1965), Cleo 5 to 7 (1962) மற்றும் துவக்க கால கருப்பு வெள்ளை மாயத்தின் உச்சமான La Pointe Courte (1955) (நியூ வேவ் திரைப்படங்களின் இயல்புகள் என்று நாம் தொடர்புறுத்துவனவற்றின் முன்னோடி இதுவே என்று வலுவான ஒரு வாதத்தை முன்வைக்கலாம்).

பின்னர் அவர் பிற்காலத்தில் இயக்கிய புகழ்பெற்ற ஆவணப்படங்கள் நினைவுக்கு வந்தன: குறிப்பாக, ‘Gleaners and I” (2000). மெல்ல மெல்ல ஒன்றன் மேலொன்றாய் அடுக்கப்படும் காட்சிகள் இந்த ஆவணப் படங்களுக்கு ஒரு அந்தரங்க கட்டுரைக்கு உரிய உணர்வு அளிப்பது நிழலாடியது. சிறப்பித்துக் குறிப்பிடத்தக்க இந்த கலைவடிவுக்குரிய ‘Essay’ என்ற ஆங்கிலப் பதத்தின் வேர்ச்சொல்லுக்கு ஏற்ப இவை உண்மையில், திரைப்பட ஊடகத்தின் மூலம் ‘காட்சிகளில் சிந்திக்க’ முனையும் ‘முயற்சிகள்’. இன்று மறக்க முடியாத திரைப்படத் தலைப்பாகிவிட்ட பெயரை மாற்றிச் சொல்வதானால், பல வகைகளில் இவர் ஒரு, “”Woman with a Movie Camera”. தனது மினி-DV சாத்தியப்படுத்தும் கைவினை அந்தரங்கத்தை கணப்பொழுதும் கண்ணகற்றாமல் சொற்களில் சித்தரிப்பவர். ஒரு இயக்குனராக ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய இவர் 2017-இல் வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் பெண் இயக்குனர் என்ற பெருமைக்குரியவரானார்.

இவரது திரைப்படங்கள் மிக அருமையானவை- இன்றும் அவற்றின் அருமையை உணராமல் இருக்க முடியவில்லை-, உள்ளத்தை இளக்கும் தன்மை கொண்டவை. ஆனால் இன்று, அவரது மகோன்னதம் என் அற்ப வாழ்வைத் தொட்ட வண்ணம், என் எண்ணங்களைக் கிளர்த்தி அவரை நினைத்தென்னை நெகிழச் செய்கிறது. நான் சினிமா குறித்து எழுதிய முதல் கட்டுரை சொல்வனத்தில் பதிப்பிக்கப்பட்டது (என் முதல் முயற்சிகளுக்கான துணிவும் நான் அங்குதான் பெற்றேன்). அவரது முதல் படமான La Pointe Courte குறித்த கட்டுரை அது. அத்திரைப்படம் வெளிவந்து சில மாதங்கள் ஆனபின் என் நண்பர் ஒருவரிடமிருந்து மின் அஞ்சல் ஒன்று பெற்றேன். அவரது நண்பர் ஒருவர் அவருக்கு அனுப்பியிருந்த செய்தியை அவர் தெரிவித்திருந்தார்:

“நம்பி அவர்களுக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும். என்னுடைய நண்பர் ஒருவர் என் சார்பாக ஆனியெஸ் வர்தாவை பாரிஸில் சந்தித்துப் பேசினார். நான் நம்பி அவர்களின் கட்டுரையின் மொழியாக்கப் பிரதி ஒன்றையும் அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்ததாக நண்பர் தெரிவித்தார். ‘தமிழ் என்று ஒரு மொழி இருப்பது கூடத் தெரியாமல் போனதை நினைத்து மிகவும் வெட்கமாக ஒருக்கிறது, ஆனால் மற்றொரு கலாசாரத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ளும் வயதைத் தாண்டி விட்டேன் என்று நினைக்கிறேன். பல கலாசாரஙகள் தாண்டி இப்படி உரையாட முடிவதை நினைத்து மிகவும் வியப்பாகவும், நன்றியாகவும் உணர்கிறேன்,” என்று சொன்னதாக எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இது நடந்து பல மாதங்களாகிவிட்டன. “

இங்கு நான் இக்கணம் அந்த தேர்ந்த மேதையின் பரந்த உள்ளத்தை நன்றியுடன் நினைவு கூர்கிறேன் (நண்பரின் நற்செயலையும்). சொர்க்கத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இடமிருக்குமா தெரியவில்லை.

4 Replies to “அஞ்சலி: ஆனியெஸ் வர்தா”

  1. இந்த இணைப்புகளுக்கு மிகவும் நன்றி; நம்பி அவர்களும் இரு வரிகள் எழுதி தன் இரங்கலைத் தெரிவித்திருந்தார்; மிகவும் நெகழ்ச்சியாக உணர்ந்தேன். கட்டுரை முகப்பில் ஒரே ஒரு திருத்தம்: வர்தா அவர்களுக்கு நம்பிஜியின் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பின் காகித நகலைத் தான் அனுப்பியிருந்தேன். எனக்கு ஃப்ரென்சு மொழிப் பரிச்சயம் கிடையாது; சுற்றுலாப் பயணத்திற்கு எவ்வளவு போதுமோ அவ்வளவே பரிச்சயம். மிக மிக கம்பீரமான, சிக்கலான பேசுபொருளையும் சிலிர்க்க வைக்கும் எளிமையோடும் நகைச்சுவையோடும் கையாண்ட ஒரு நிகரற்ற படைப்பாளி வர்தா. அவருக்குத் தகுந்த சன்மானத்தை சொல்வனத்தில் காண்பது மிகவும் பெருமையாகவும் உருக்கமாகவும் இருக்கிறது – தங்களுக்கும் நம்பிஜிக்கும் நன்றிகள். நிஜ வாழ்விலும் அவரது மானுடம் பெரிய எடுத்துக்காட்டாகவே இருந்து வந்துள்ளது; நண்பர்கள், கணவர், பிள்ளைகள், என்னைபோன்ற நச்சரிக்கும் விசிறிகள், அனைவரையும் அனாயாசமாக அரவணைத்து, அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் அழகிய ஆளுமை, மறக்க முடியாது. அவர் நினைத்த அளவு பெரிய படங்களை எடுக்க நிதி கிடைக்காமல் போனது நமது இழப்பே. ஆனால் அதை அவர் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை, குறை சொன்னதில்லை; புது இயக்குநர்களைப் போல கோரிக்கைகளை எழுதிக்கொண்டே, வரிசையில் நின்றுகொண்டே, இயன்ற நிதியில் சிறிய படங்களைத் தயாரித்துக் கொண்டே தான் இருந்தார். நிதி சிறிதேயாயினும், நோக்கம் மிகப் பெரிது, டேவிடின் கவணைப் போல சிறிய படங்களின் வீச்சால் மாபெரும் சவால்களை எதிர்கொண்டார். என் சொந்த வாழ்விலே உள்ளமுடைமைக்கு ஒரு மகத்தான உதாரணம் அவர் தான்.
    சி.சு

  2. ஆனியெஸ் வர்தாவிற்கு மிகச் சிறந்த அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்.அவரைப் பற்றி ஒன்றுமே அறியாத நான், செய்தித்தாள்களில் ஒரு குறிப்பென அவரின் இறப்பை அறிந்த நான்,115-வது இதழில் திரு நம்பி எழுதியுள்ள காட்சி-கட்டுரை வழியே ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டுமென்று புரிந்து கொண்டேன்.புது அலைகளுக்கு அவர் கூறும் பல்வேறு காரணிகள் அருமை.திரு சி.சு குறிப்பிட்டது போல் ‘உள்ளமுடையவர்’ எனப் புரிந்து கொண்டேன். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.