விடுதலை

ஒவ்வொருமுறை 
வீடு மாறும்போதும் 
பரண்மேலோ படுக்கையினடியிலோ
தூசு படிந்து ஒளிந்திருக்கும் 
அப்பத்தாவின் தகரப்பெட்டி 
கண்ணில் தட்டுப்பட்டு 
மனதை உலுக்கும்

இளமையின் மமதையில் ,
எட்டவேண்டிய இலக்குகளாக நான் குறித்துவைத்த குறிப்பேடு 
அப்பெட்டிக்குள்தான் போடப்பட்டது

போடும்போது தெரிந்த 
எந்தையின் பெயர் தாங்கிய 
வெளுப்பான குறிப்பேட்டினடியில் 
தாத்தாவின் ஓலைச்சுவடி 
சிதைந்து கிடந்திருக்கக்கூடும் ..

மனதாழத்தில் அழுத்தப்பட்ட 
கனவின் எலும்புக்குவை 
பேருருக்கொண்டு 
நினைவிலெழும்போது 
அதன் பேரெடை தாளாது 
புதைகிறேன் விடுபட முடியாத 
இயலாமையின் இருட்குகையில்