‘வட திசை எல்லை இமயம் ஆக!’

திருப்பெருந்துறையில் மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணத்தில் இரண்டாவது அடி, ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’ என்று போற்றுகிறது. இமை தட்டுகிற, இமை கொட்டுகிற, இமை அடிக்கிற, இமைக்கிற நேரம். இமைப் பொழுதும் கூட, என் நெஞ்சத்தில் இருந்து நீங்காமல், நிரந்தரமாக உறைபவனின் திருவடிகள் போற்றி என்பது பொருள். இமைத்தல் என்றாலும் இமை கொட்டுதலே.

திருக்குறளின் எழுபத்தெட்டாவது அதிகாரம், படைச்செருக்கு. அதன் ஐந்தாவது குறள் வெண்பா:

விழித்த கண் வேல் கொண்டெறிய அழித்திமைப்பின்

ஏட்டன்றோ வன் கணவர்க்கு’

என்பது. புரியும் படியாகப் பிரித்து எழுதினால்

‘விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் ஏட்டு அன்றோ வன் கணவர்க்கு’

என்று வரும். எதிரி எறிந்த வேல் அபாயகரமான வேகத்தோடு நெருங்கி வரும்போது கண்ணிமை தட்டினாலும் வீரனுக்கு அது வீழ்ச்சியே ஆகும் என்பது பொருள். இமைப்பின் என்ற சொல்லுக்குக் கண்ணிமைத்தல் என்பது பொருள்.

மற்றுமொரு குறள், பெண் வழிச் சேறல் அதிகாரத்தில் ஆறாவது:

‘இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார் தோள் அஞ்சு பவர்’

மூங்கிலை ஒத்த, பசிய அல்லது பழுப்பு வெண்மை நிறமுடைய மினுமினுக்கின்ற, வழவழப்பான, உறுதியான தோள்களைத் தழுவ அஞ்சுகின்றவன், அனைத்துப் பேறுகளும் பெற்றுத் தேவர் போல வாழ்ந்தாலும், பேருமையாகப் பேச இயலாது என்பது பொருள். இங்கு இமையார் எனில் கண் இமைக்காதவர், இமையா நாட்டம் உடையவர் தேவர் என்று பொருள். தேவர்கள் கண் இமைத்துப் பார்க்கும் பார்வை இல்லாதவர்கள். எனவே இமையவர்கள். இமயவர்கள் அல்ல.

சிலப்பதிகாரத்தில், மதுரைக் காண்டத்தில், ஆய்ச்சியர் குரவையில், இளங்கோவடிகள் பாடுகிறார்:

‘பெரியவனை, மாயவனை; பேர் உலகம் எல்லாம்

விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,

திருவடியும், கையும், திருவாயும், செய்ய

கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?

கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?’

என்று. இங்கு நாம் அடிக்கோடிட்டுச் சொல்ல விழையும் விடயம், ‘கண்ணிமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?’ எனும் வரி. இறைவனின் அழகைக் கண் கொட்டாமல் காண வேண்டும். இமைத்துக் காண்பவர் கண்கள் பேறற்றவை என்பது பொருள்.

இமைத்தல் எனும் சொல் தரும் அர்த்தங்கள்- to glitter, twinkle, shine என்பன முதன்மையானவை. ஒளி விடுதல் என்கிறது திவாகர நிகண்டு. இரண்டாவது பொருள்: to diminish, shrink என்பன. சுருங்குதல் எனலாம்.

இமையவர் என்றால் தேவர் என்று பொருள் சொன்னோம். தேவர் அனையர் கயவர் எனும் திருக்குறள் அடி நினைவுக்கு வரலாம். திருவள்ளுவர் குறிப்பிடும் தேவர், கள்ள, மறவர் கனத்த அகமுடையார் அல்ல.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தொண்டைமான் இளந்திரையனை, கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகிறார், பெரும் பாணாற்றுப் படையில். அதில், ‘இமையவர் உறையும் சினமயச் செவ்வரை’ என்றொரு வரி. தேவர்கள் வாழும் உயரமான இமயமலை என்பது பொருள்.

இமையோர் என்றால் இமைகளை உடையவர் என்பதல்ல பொருள். இமையவர் என்றே பொருள் கொள்ள வேண்டும். அகநானூறு ‘இமையார்’ எனும் சொல்லை ஆள்கிறது. ஔவையார் ‘இமையான்’ என்று கண்களை இமைக்காமல் வீரத்துடன் போரிட்டு மாண்ட வீரனைப் பாடுகிறார்.

அதிகம் விரிப்பானேன்? இமை, இமைக்கும், இமைத்தோர், இமைப்ப, இமைப்பது, இமைப்பின், இமைப்பு, இமைய, இமையத்து, இமையவர், இமையா, இமையாது, இமையார், இமையான் எனும் சொற்களை, பத்துப் பாட்டு- எட்டுத் தொகை நூல்கள் ஆள்கின்றன. அனைத்து இடங்களிலும் இமை அல்லது கண்ணிமை எனும் பொருளில் மாத்திரமே!

கண்கொட்டுதல், இமையாடுதல் என்றோம். இமையாடாமல், கண் சிமிட்டாமல், கண் கொட்டாமல், கண்ணிமைக்காமல் பார்த்தான், அல்லது பார்த்தாள் என்கிறோம். இமைப்பொழுது என்றால் கணம் அல்லது குறுகிய கால அளவு. உறங்கிப் போதலை, இமை பொருந்துதல் என்றோம். கண் இதழ்கள் சேர்தலே இமை கொட்டுதல். இமைப்பளவு என்றாலும் கண்ணிமைப் பொழுதே! சீவக சிந்தாமணி, இமைப்பளவைக் குறிக்க, ‘இமைப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. இமைப்பு எனும் சொல்லுக்கு dazziling, brilliance, விளக்கம் ஆகிய அர்த்தங்களும் உண்டு.

கண்ணிமைகளில் வரும் சின்னஞ்சிறு கட்டியை இமைக்குரு என்பார்கள். எங்களூரில் கக்கட்டி என்பர். கண்கட்டி என்பதன் மரூஉ. மயிர்க்காலில் வரும் சிறுகட்டியை மயிர்க்குரு என்பர். நாங்கள் மைக்குரு என்போம். குரு எனில் சின்னஞ்சிறுகட்டி. குரு வேறு, குறு வேறு. குரு மிளகு எனல் வேண்டும். குறு என்று சொல்கிறார்கள். குறு மிளகு என்றும் சொல்கிறார்கள். வியர்க்குரு எனும் சொல்லும் உண்டுதானே!

இமை எனும் சொல்லுக்கு, கண் இமை எனும் பொருள் நீங்கலாக, கரடி என்றும் மயில் என்றும் அகராதி நிகண்டு பொருள் தருகிறது. தமிழ் சினிமா நடிகரில் ஒருவருக்கு சாம்பார் எனப் பட்டப் பெயருண்டு. அது போல இருவருக்குக் கரடி என்றும், மதிப்பாக ஆர் விகுதி சேர்த்து கரடியார் என்று வரும். அதனை இனிமேல் இமையார் எனலாம். பருந்து எனும் பறவையைத்தான் கருடன் என்போம். கௌரவமாக கருடாழ்வார் என்பதுண்டு. செந்தலைக் கருடன் எனச் சிறப்பிக்கும் இலக்கியங்கள். கம்பன், கலுழன் என்று குறிப்பார். காய் சினப் பறவை என்போரும் உளர். தென்னாட்டில் திருப்புளிங்குடி என்றொரு வைணவத் தலம். அத்தலத்தின் பெருமான், காய் சின வேந்தன். தாயார், மலர் மகள் நாச்சியார். காய்சினப் பறவை என்றால் கருடன். காய்சின வேந்தப் பெருமானை, நம்மாழ்வார் மட்டுமே, பன்னிரு ஆழ்வார்களில், பாடியுள்ளார். பன்னிரண்டு பாடல்கள். கீழே நான் மேற்கோள் காட்டும் பாடல், ‘பண்டை நாராயே’ என்று தொடங்கும் பகுதி. எழுசீர்க் கழில் நெடிலடி ஆசிரிய விருத்தம். பண்- புற நீர்மை, தாளம்- ஒன்பதொத்து (இராகம் துவஜாவந்தி, தாளம் ஆதி). பாடல்:

காய் சினப் பறவை ஊர்ந்து, பொன்மலையின்

மீமிசைக் கார்முகில் போல்,

மாசினமாலி மாலி மானென்று,

அங்கு அவர் படக் கனன்று முன் நின்ற,

காய் சின வேந்தே! கதிர் முடியானே!

கலி வயல் திருப்புளிங்குடியாய்,

காய் சின ஆழி சங்கு வாள் வில்

தண்டு ஏந்தி, எம் இடர் கடிவானே!

இந்தப் பாடலில் காய் சினப் பறவை எனில் கருடன். காய் சின வேந்தே என்றால் கருடன் மேலமர்ந்து உலகில் ஊர்ந்து வரும் திருமால். ‘எம் இடர் கடிவான்’ என்பது திருப்புளிங்குடி திருத்தலத்தின் உற்சவ மூர்த்தியின் பெயர் என்பார் கோவைத் தொழிலதிபர், D.B என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் திரு. D. பால சுந்தரம். இந்தப் பாடலின் இறுதி வரி, ‘காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு’ என்கிறது. காய்சின ஆழி எனில் சினந்து அழிக்கும் சக்கரம். சங்கு, பாஞ்ச ஜன்யம். வில், சார்ங்கம் எனப் பெயரிய வில். சாரங்கம் என்போம் தமிழில். கும்பகோணத்துப் பெருமாள் சாரங்கபாணி, சாரங்கம் எனும் வில்லை ஏந்தியவர். ஆண்டாள் திருப்பாவை நான்காவது பாடலில் ‘தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்’ என்கிறது. அர்ச்சுனன் வில் காண்டீபம் என்றறிவோம். சிவனின் வில் பினாகம். எனவே சிவன் பினாக பாணி. பினாகம் என்ற வில்லைக் கைக் கொண்டவன், தரித்தவன் என்பது பொருள்.

பாடலின் பொருள்: பொன் மலையின் மீது கார்முகில் தங்குவது போல, கருடன் மேல் அமர்ந்து ஊர்பவனே! சினங் கொண்ட மாலி, சுமாலி ஆகியோர் பட்டு அழியும் படியாகக் கனன்று முன் நின்றவனே! காய் சின வேந்தே! கதிர் ஒளி வீசும் திருமுடியானே! செழித்த வயற்காடுகள் சூழ்ந்த திருப்புளிங்குடி எனும் தலத்தில் உறைபவனஏ! தீமையைச் சினந்து அழிக்கும் சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு ஆகியன தாங்கி எமது இடர் களைபவனே! என்பது. ஆழி எனில் சக்கரம். பெருமான் சங்கின் பெயர், பாஞ்ச ஜன்யம். வில்லின் பெயர் சார்ங்கம். வானின் பெயர் நந்திகம், தண்டின் பெயர் கௌமோதகி என்பது கூடுதல் தகவல்.

எனது நண்பர் ஒருவரின் பெயர் காசினி வேந்தன். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர், R. நல்லகண்ணு அவர்களின் அண்ணன் மகன். காசினி வேந்தன் எனில் உலகுக்கு அரசன் என்று பொருள். அவர்தான் எனக்குச் சொன்னார், திருப் புளிங்குடிப் பெருமாள் பெயரின் மரூஉ அல்லது திரிபு அது என. அதாவது நம்மாழ்வார் பாடிய காய்சின வேந்தன் எனும் பெருமானின் நாமம், காசினி வேந்தன் என மருவியுள்ளது. நான் பிறந்த ஊர் வீர நாராயண மங்கலம், வீராண மங்கலம் எனக் குறுகியதைப் போல.

சரி! மீண்டும் காய்சினப் பறவை எனும் நம் தாவனத்துக்குத் திரும்பினால்- கருடன், கலூழன், செந்தலைக் கருடன், கிருஷ்ணப் பருந்து, கள்ளப் பருந்து, பருந்து, காய்சினம் எனும் சொற்சேகரத்தின் இன்னொரு சொல், இமையிலி. இமையிலி எனில் கருடன்.

இத்தனை விரிவாக இமை பற்றிப் பேசுவதற்கு இது என்ன முகூர்த்தம்- அல்லது தூய தமிழாளர் சொல்வது போல என்ன முழுத்தம்- என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றைத் தெளிவாக்குவதற்குத் தான். இமை என்பது ஒவ்வொன்றும் கண்ணிமையைக் குறிப்பது. ‘இம’ எனும் சொல்லின் தளம் வேறு. இமயமலையைக் குறிப்பதற்கு இமயம் என்று எழுதுவதே நேர்.

பேராசிரியர் அருளி அவர்களின் அயற்சொல் அகராதி, ‘ஹிம’ (hima) எனும் வடமொழிச் சொல்லின் தமிழ்ப் பிறப்பு ‘இம’ என்கிறது. இமம் எனும் சொல்லைச் சம்ஸ்கிருதம் என்று கூறி, அதற்குப் பனி என்று பொருள் தருகிறார். இமாசலம் எனில் பனி நீர். இமகிரி எனில் இமயமலை. கர்நாடக இசையில் ‘ஹிமகிரி தனயே ஹேமலதே’ என்ற கீர்த்தனை ஒன்று கேட்டிருக்கலாம். கீர்த்தனை யாத்தவர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர். சுத்த தன்யாசி ராகம். இமயமலையின் மகளே என்று பொருள். ஹிமகிரி தனயே என்றார்.

இமவந்தம், இமவான் என்றாலும் இமயம்தான். பார்வதி அன்னையை இமவான் புத்திரி என்பார்கள், சிவசமயத்தார். இமாசலம் என்று சொல்வதுண்டு இமயமலையைக் குறிக்க. சலம் எனில் நீர், அசலம் எனில் மலை. அண்ணாமலையைத்தான் அருணாச்சலம் என்றோம். இமாசலத்தைத் தமிழ் இமாலயம் என்னும். இமாசலப் பிரதேசம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்று. அருளி ஐயா, இமாசலப் பிரதேசம் என்பதை, இமயப் பேரகம், இமயப் பேரிடம், இமயப் பெருந்தேயம் என்று தமிழ்ப் படுத்துகிறார். இமாசலை என்ற சொல் வடமொழியும், தமிழும் கலந்த கலப்புச் சொல். மலைமகள் என்றும், சிவை என்றும் பொருள் தருகிறார். அது போன்றே, இமகரன், இமகிரண் போன்ற கலப்புச் சொற்களுக்கு நிலவு அல்லது மதி என்றும் பொருள் தருகிறார்.

இமாம் எனும் சொல்லை, இமயம் எனும் சொல்லுடன் குழப்பிக் கொள்ளலாகாது. இமாம் என்பது அரபிச் சொல். தொழுகை நடத்துபவர் என்று பொருள். இன்று ஆன்மீகக் குருக்கள் பலரையும், அவர் எச்சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும், இமாம் என்று சொல்லலாம். சற்குரு, ஜகத்குரு எல்லாரும் இமாம்களே!

சென்னைப் பல்கலைக் கழகத்துப் பேரகராதி, ‘இம’ சார்ந்த மேலும் சில சொற்களைத் தருகிறது.

இமயம் என்பதோர் குயமலை என்கிறது பதிற்றுப் பத்து. ஐந்தாம் பத்துப் பாடிய பரணர், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடுகிறார்.

கடவுள் நிலைய கல் ஓங்கு நெடுவரை

வடதிசை எல்லை இமயம் ஆக.

கடவுள் நிலை பெற்று, ஓங்கி நிற்கும் கற்களை உடைய, நீண்ட மலையான வடக்குத் திசையில் உள்ள இமயமலை எல்லையாக என்பது பொருள். இமயம் என்றால் மந்தர மலை என்கிறது சீவக சிந்தாமணி.

கலித்தொகையின் குறிஞ்சிக் கலி 29 பாடல்களையும் பாடிய கபிலர், இரண்டாவது பாடலில்,

இமய வில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமையமர்ந்து உயர்மலை இருந்தனனாக.

என்று குறிக்கிறார். இமயமலையில் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்த, கங்கையினால் எப்போதும் ஈரம் கொண்டதாகிய சடையை உடைய இறைவன், இறைவியுடன் பொருந்தி, உயரிய கயிலை மலையில் இருந்தான் என்பது பொருள்.

இமயம் என்ற சொல்லுக்குப் பொன் என்றும் பொருள் சொல்கிறார்கள். கனகம், இரணியம், சொர்ணம், தங்கம், பொன், இமயம் யாவுமே Gold தான். இமயவதி எனில் பார்வதி என்று பொருள் தருகிறது பிங்கல நிகண்டு. இமய வரம்பன் என்று சேர மன்னன் ஒருவனுக்குப் பெயர் இருந்திருக்கிறது. பதிற்றுப் பத்தில் இருந்து இச் செய்தி நமக்குக் கிட்டுகிறது. இமயவில்லி என்றால் சிவன் என்றும், இமய வல்லி எனில் பார்வதி என்றும் திவாகர நிகண்டு அறிவிக்கிறது.

இமவந்தம் என்றாலும் இமயமே. பெரியாழ்வாரின் திவ்யப் பிரபந்தப் பாசுரம், ‘இமையவர் இறுமாந்திருந்த’ என்று தொடங்கும் பாடலில், இமவந்தம் எனும் சொல் ஆள்கிறார். இமவந்தம் என்றாலும் இமயம். இமாசலம், இமாலயம் இரண்டும் இமயமே. ஆனால் இமாசலை என்றால் பார்வதி.

இமய, இமயத்து, இமயம் எனும் சொற்களை அகநானூறு, பரிபாடல், சிறுபாணாற்றுப் படை, நற்றிணை, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப் பத்து யாவும் பயன்படுத்துகின்றன. பதிற்றுப் பத்தில் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடும் குமட்டூர் கண்ணனார்,

‘ஆரியர் துவன்றிய, பேர் இசை இமயம்

தென் அம் குமரியொடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே’

என்கிறார். ஆரிய முனிவர் தவம் செய நிறைந்திருக்கும் புகழ் மிக்க இதயத்துக்கும், தென் குமரிக்கும் இடையே வாழும் மன்னருள், செருக்கித் திரிந்த அரசர்களின் வீரம் அழியுமாறு வென்று நின்றான், நெடுஞ்சேரலாதன் என்பது பொருள்.

புறநானூற்றில் முரிஞ்சியூர் முடி நாகராயர், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்திப் பாடுகிறார்.

‘அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீ விளக்கின் துஞ்சும்

பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே!’

என்பதாக. மாலை நேரத்தில் அந்தணர் தம் அருங்கடன் செய்யும் போது வளர்க்கும் வேள்வித்தீ வெளிச்சத்தில் உறங்குகின்ற பொன் போல் ஒளிரும் இமயமும் பொதிகை மலையும் போன்று நீ வாழ்க என்பது பொருள். இமயம் எனும் மலைக்கும் சொல்லுக்கும் இணையாகப் பொதியம் என்றொரு சொல்லைப் புலவர் பயன்படுத்துவதை அறிக! அந்தி அருங்கடன் என்ற சொற்பிரயோகத்தை சந்தியா வந்தனம் எனும் பொருளில் புரிந்து கொள்ளலாம். கடன் எனில் இங்கு கடமை. நீர்க்கடன் என்கிறோம். காலைக் கடன் என்பது ஆய் போவதும், பல் தீற்றுவதும் மட்டும் அல்ல என்பதையும் அறிக. ’நம் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது அப்பர்.

புற நானூற்றில், சோழன் குளமுத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடும் மாறோக்கத்து நப்பசலையார்,

‘பொன்படு நெடுங்கோட்டு

இமயம் சூட்டிய ஏம விற்பொறி’

என்று, பொன்னிறமான உயர்ந்த மலையான இமயத்தில் சேரன் தனது வில்பொறி கட்டிய செய்தி பேசுகிறார்.

குறுந்தொகையில், ஔவையார் பாடலில், ‘பேர் இசை இமயமும் துளக்கும் பண்பினை’ என்று மழையைப் பேசுகிறார். பெரும்புகழ் இமயத்தையே துளைக்கும் பண்புடைய மாமழை என்று பொருள். மாமழை என்பதற்கு ஔவை பயன்படுத்தும் அடைமொழி ‘கமஞ் சூல்’ என்பது. கமஞ் சூல் எனில் நிறை சூல் என்பது பொருள்.

அக நானூற்றில், மாமூலனார் பாடல், ‘இமயச் செவ்வரை மானும் கொல்லோ?’ என்று கேட்கிறார். ‘செம்மையான, நீண்ட, உயர்ந்த இமயமலையைப் பார்க்கிலும் உயர்ந்ததா’ என்பதே கேள்வி.

ஒய்மா நாட்டு நல்லியக் கோடனை, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப் படை,

‘வடபுல இமயத்து, வாங்கு வில் பொறித்த

எழு ஊழ் திணிதோள் இயல் தேர்க் குட்டுவன்’

என்கிறது. புறநானூறு பேசிய செய்திதான். நற்றிணையில், பரணர் பாடல், ‘பொன் படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி’ என்று குறிப்பிடுகிறது.

ஆக, நாம் வந்து சேரும் இடம், இமய மலையைக் குறிக்க, இமயம் என்று எழுதுவதே நேர். இமை எனில் கண்ணிமையைக் குறிப்பதாகி விடும். எனினும் இலக்கண வழு அமைதி எனும் மாபெரும் சலுகையைத் தமிழிலக்கணம் வழங்குகிறது. நாம் முன்பு பேசிய குறிஞ்சிக் கலியில், கபிலர், ‘இமைய வில்’ என்று பயன்படுத்துவதாக ஒரு பாடபேதமும் உண்டு என்கிறார் சி.வை. தாமோதரம் பிள்ளை. இரண்டாவது, மூவாயிரம் ஆண்டுத் தொன்மை உடைய சங்க இலக்கியப் பாடல்களில், நெடுங்கோடு, வடகோடு, பொன்வரை, பனிவரை, செவ்வரை என்று பல சொற்களால் இமயமலை குறிக்கப் பெற்றுள்ளது. மகாகவி பாரதி, ‘மன்னும் இமய மலை எங்கள் மலையே’ என்பார். ’தென்திசைக் குமரி ஆடி’ என்று வடக்கில் வாழ்பவரும் பேசுவார்கள். அதுவே தேசியம். இதை முதலில் தேசியம் பேசும் அரசியல் உணர வேண்டும்.

தேசப் பிரிவினையின் போது, மகாத்மா காந்தி, அதனை ‘Himalayan blunder’ என்று குறிப்பிட்டதாக நாம் செவிப்பட்டதுண்டு. மாபெரும் பிழை என்பது பொருள். நாமதைத் தமிழாக்கி இமாலயத் தவறு என்று இன்றளவும் பயன்படுத்துகிறோம். இன்றைய இந்திய நாட்டு அரசியல் செயல்பாடுகளைக் கவனித்தால் மக்களாட்சி என்பதே இமாலயத் தவறோ என்று எண்ணத் தோன்றும்.

வரி ஏய்ப்புச் செய்கிற, ஒழுக்கங் கெட்ட, அறம் பிறழ்ந்த, அரசியல் தலைவர்களை, நடிகரைப் புகழ, ‘நீ நடந்தால் இமயமலை குலுங்கும்’ என்றும், ‘நீ குனிந்தால் இமயமலை உனைக் கால் தொட்டு வணங்கும்’ என்று வெட்கம் கெட்டுப் போய் பேனர் வைக்கிறார்கள். கூலிக்குப் பாட்டெழுதுகிறார்கள். ஓட்டலில் சாப்பிட்ட சட்னி சரியில்லை என்றால், ‘இங்கு வந்தது, இமாலயத் தவறு’ என்கிறார்கள்.

இமாலயத் தவறு என்ற சொல்லை விட உயர்ந்ததாக, ‘வான் பிழை’ என்றொரு சொல்லைக் கம்பன் ஆண்டதாகப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் சொன்னார். அவருக்கு யார் சொன்னார்களோ? புளகாங்கிதம் கொண்டு அச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ள பாடலைத் தேடத் துவங்கினேன். வானளாவிய தவறு என்ற பொருள் புரிந்தது. ஆனால் இன்னும் பாடல் கிட்டவில்லை. முழுப் பாடலையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான். காண்டம், படலம், பாடல் முதலடி தெரிந்தவர் சொல்லுங்கள். உளதா, இலதா என்பதும் உறுதியில்லை. பேராசிரியரும் தலைமறைவாகி விட்டார்.

***

5 Replies to “‘வட திசை எல்லை இமயம் ஆக!’”

 1. இமயம்…… இமயமென …. நீண்ட விளக்கம்…. இமைக்கா நொடிகள் கொண்ட, இமையவர்கள்…… தொட்டுத் தொட்டு , விரியும் , தொடர்ச்சியான , விளக்கங்கள்…… மணற்கேணியனையது , … இதிலிருந்து, ஒரு சொல்…இமாலயத் தவறு.. என்பதினை, கம்பர் , “ வான் பிழை” என , எடுத்தாண்டுள்ளார் , என , ஒரு , பேராசிரியர், சொல்லக் கேட்ட, நாஞ்சிலார்- மன்னிக்க- அந்த மந்திரக்கோல் மைனர் அல்ல, இவர்- நம் , கோவை வாழ் – நாஞ்சில் நாடன் அவர்கள் – கம்பன் எடுத்தாண்ட ,இடம் எங்கே என , வினவ, ஓடிய, அப்பேராசிரியப் பெருந்தகையை , நாமும் , தேடுவோம்… நிற்க…. சரி. கம்பன் , எங்கே அந்த சொல்லை , பயன்படுத்தியிருப்பார், என , நாமும் , நம், சிற்றறிவுக்கு , சற்றே , வேலை கொடுப்போம் என எண்ணி, தமிழ் இணையக் கல்விக் கழகம் அதின், உதவி நாடித்தேடினேன். வான் பிழை என்ற சொல், எங்கேயும் , கிடைக்கப் பெறவில்லை … மேலும் , தேடவேண்டி, “ வான்” என்ற சொல்லைத் தேடுதல் பொறியில் , இட்டுத்தேட, ஆஹா… என்ன அருமை… வான்பிழை என்ற சொல் , இல்லை என்பதினை, உணர்ந்தேன். ஆனாலும் , வான் என்று முடியும் அல்லது தொடங்கும் , பல சொற்களைக் கண்ணுறும் , பெரும் பேறு, பெற்றேன்.. அதை ஒட்டி, மேலும் பல, பிலிற்றல், மடங்கல், போன்ற சொற்களின் , வேறு வேறு, பொருள் , அறிந்து, இன்புற்றேன். இத்தேடலை, உடனே, நாஞ்சிலார்க்கு , அவரின், கட்செவி – வாட்ஸப்பில் [ சரியான ஒன்றா , நானறியேன் ] எண்ணில் , பதிவிட்டும் அவரின் , பொன்னான நேரத்தை, வீணடித்துள்ளேன்.

  இத்தேடலின் பயணாக, நான், இன்று அடைந்த பலன்கள் எண்ணற்றன…. நாஞ்சில் என்ற ஒரு சொல்லுக்கு, [அனுமன், இலங்கையை காணும் ஓரிடத்தில் , ] வரி எண் குறித்து வைக்க மறந்து விட்டேன்..- மதில் மேல் , குருவித்தலை போல், அமைக்கப் பெற்ற ஓர் உறுப்பு எனக் கண்டேன்.. அதன் அருகிலேயே… இந்த சொல் – நாஞ்சில்- சிலப்பதிகாரத்தில்- அடைக்கலக் காதை – 217ல் உள்ளது , எனக் குறிப்பினையும் கண்டு, மீண்டும், சிலப்பதிகார வரிகளைத் தேடினேன்….. அங்கே.. ஞாயில் எனப் படும் ,[ நகர்காக்கும் , கருவி ஒன்றின், விபரங்களைக் கண்டு, கழி பேருவுவகை கொண்டேன்.. ] குருவித்தலைகளும் .. என்ற வரிகள்….. அங்கே, சீவகச் சிந்தாமணியில் , இந்த சொல் – ஞாயில்- எடுத்தாளப் பட்டுள்ள , வரிகளின் , விபரம் அறிந்து, சீவகச் சிந்தாமணியைத் தேடி, அங்கும் கண்டேன்.. இவ்வாறு, தேடத்தேட, எத்தகைய, பெரும் காப்பியங்களின், சுவை உணரா, மரம் போன்ற , என் நிலையை , உணர்ந்து , மனம் வருத்தம் உற்றேன். நாஞ்சில் > ஞாயில் என்ற ஓர் , பொருளின் உண்மைத் தன்மையை, ஆராயுங்கால், நான் பெற்ற இன்பம் – பல்வேறு சொற்களின். கம்பனின் , இளங்கோவின், திருத்தக்கத் தேவரின், தமிழ்ச் சொல் ஆளுமைகளின் வீச்சினை , ஒரு சொட்டு அறிந்ததே, இத்தகைய , கழிபேருவகை என்றால், முழுதும் படித்து, உணர்ந்த , நம் , நாஞ்சிலாரின், மேன்மையை என்னால், உணர முடிகின்றது… வாழ்க , அவர் தம் , சொற்றிறம்……

 2. ‘வான் பிழை’ என்ற சொல்லாட்சியை கம்பன் பயன்படுத்தியதாக தெரியவில்லை. ஆனால் அச்சொல்லாட்சியை கூகிள் தேடுபொறியிடம் அளித்தால், இமைப் பொழுதில் வில்லிபாரதப் பாடல் ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அருச்சுணன் தவநிலைச் சருக்கத்தில் 173வது பாடல்.

  ‘அன்னை நீ அவற்கு ஆயினும், ஆசையின்
  இன்னல் தீர்ப்பது எவர்க்கும் இயல்புஅரோ;
  மன்னன் ஆயினும், வான் பிழை செய்தனன்’
  என்ன நாகர் அவட்கு இதம் கூறியே

  என்று போகிறது.

  பாசுபதம் வேண்டி இமயத்தில் தவமிருந்த பார்த்தன் தேவமங்கையரின் காமநோயை தீர்க்க முற்படாத பெருங்குற்றத்திற்காக ஊர்வசியிடம் பேடியாய்ப் போகும்படி சாபம் பெற, இந்திரன் முதலான இமையோர் ஊர்வசியின் சினத்தைப் போக்க அவளை சமாதானப்படுத்துவதாக உள்ளது.

 3. சென்ற கமெண்ட்டில் சொல்லாமல் விட்டுப் போனது: மிகச் சிறப்பான கட்டுரை. குறுகிய மனமும், வெற்று வெறுப்புக் கூச்சல்களுமே தமிழ் அடையாளமாக முழங்கப்படும் இந்நாட்களில், பண்டைய தமிழனின் மன விசாலத்தையும், உன்னதமானவற்றை அறிந்து அதற்குரிய மரியாதையை அளித்த உயர் குணத்தையும் தொடர்ந்து அடையாளப்படுத்தி வரும் மதிப்பிற்குரிய நாஞ்சில் அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும். மிக அவசியமான கல்வி இது.

Comments are closed.