ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்

ராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தது கூடுதல் ஆச்சரியம் (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும்  ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை  நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.

சில நாட்களுக்குப்பின் வேறொரு நண்பரைச் சந்தித்த போது எதிர்பாராமல் தமிழ் பிரதி பரிசாகக் கிடைத்தது. அந்த நண்பர் வேறு யாரும் இல்லை. இதே புத்தகத்தை தமிழாக்கம் செய்திருந்த பேராசிரியர் பி. வாஞ்சிநாதனேதான். ராமானுஜன் பிறந்து 130 ஆண்டுகள் ஆனதையொட்டி நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம், இந்தியாவில் பல மொழிகளில் இந்தப் புத்தகத்தை  மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதி புத்தகத்தின் இந்தத் தமிழ் வடிவம். வாஞ்சியாரின் தமிழ் தலைப்பு கனகச்சிதம். ‘அனந்தத்தை அறிந்தவன்’ என்ற சொற்றொடர் The Man Who Knew Infinity என்ற ஆங்கில தலைப்பின் அர்த்தத்தை மிக அழகாகக் கைப்பற்றுகிறது. அது மட்டுமே என்னைக் கவரப் போதுமானதாக இருந்தது. நானும் தமிழில் ஒரு சீரியசான புத்தகத்தை வாசித்து வெகு நாட்கள் ஆகியிருந்தபடியால். உடனே படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலம், தமிழ் இரண்டு நூல்களும் என்னிடம் இருந்ததால் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இரு மொழிகளிலும் வாசித்தேன். ஒரே சமயத்தில் ஒரு புத்தகத்தை இரு மொழிகளில் இதற்கு முன் வாசித்ததில்லை என்பதால் அதுவே ஒரு சுவையான அனுபவமாக இருந்தது.

ராமானுஜன் கதை உண்மையில் சோகமான ஒன்று. ஆனால் புத்தகத்தை படிப்பது என்னவோ பல வகைகளில் ஆனந்தமான அனுபவமாகத்தான் இருந்தது. நான் சரிதைகள் அதிகம் வாசிப்பதில்லை. அபூர்வமாக நான் அப்படி படித்த புத்தகங்களும் இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கணிதவியலாளர்கள் அல்லது இயற்பியலாளர்களின் வாழ்க்கை பற்றியதாகவே இருந்திருக்கிறது. அல்லது, மைக்கலாஞ்சலோ வாழ்க்கையைப் பேசும் ‘Agony and the Ecstacy’ போன்ற புத்தகங்களாய் அமைத்திருந்தது. சில பத்தாண்டுகளுக்கு முன் அந்த மாதிரி புத்தகங்களை வாசித்த காலத்தில் நான் ஐரோப்பா போனதில்லை. எனவே, அது குறித்த விவரணைகளை எல்லாம் கற்பனை செய்துதான் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் ராமனுஜன் விஷயத்தில் அவர் வளர்ந்த தமிழகச் சிற்றூர், அவர் வாழ்ந்த வீடுகள், அவர் வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொண்டவர்களின் பெயர்கள், அவர் படித்த பள்ளிகள், போன கோயில்கள் என்று எல்லாமே எனக்கு மிகவும் பழக்கப்பட்டவையாக இருந்தன. நானும் அதே பகுதியில்தான் வளர்ந்திருந்தேன், குழந்தைப்பருவம் முதல் நான் அறிந்திருந்த என் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பெயர்களும் அதேதான், நான் பேசியதும் அதே மொழி, நான் சாப்பிட்டதும் அதே உணவு. இப்படி எல்லாம் பழக்கப்பட்ட விஷயங்களாக இருந்தது வாசிப்பில் சுவாரசியம் சேர்த்தது.

நான் இந்தப் புத்தகத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டும் வாசித்திருந்தால் பல அறிவியல் சொற்களின் தமிழ் பதங்களைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்காது. (உதாரணத்துக்கு, ‘ஸ்ட்ரிங் தியரி’ என்பதை தமிழில் ‘இழையூக இயற்பியல்’ என்று சொல்கிறார்கள், ஆனால் கூகுள் மொழிபெயர்ப்பில் இது அப்படி வருவதில்லை). இப்படிப்பட்ட பதங்களின் எதுகை மோனையான அழகு இவை பேராசிரியர் பி. வாஞ்சிநாதனின் உருவாக்கமாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கச் செய்கிறது. இப்படிப்பட்ட புத்திசாலித்தனத்தை அவரது பல புதிய சொல்லாக்கங்களில் பார்க்கலாம் (ஒரு வெண்பா அதற்குரிய இலக்கண விதிகளை நிறைவு செய்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய ஒரு பைதான் (Python) ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறார் அவர்). ராமானுஜன் புத்தகத்தில் ஆங்காங்கே உள்ள ஆங்கில கவிதை வரிகளையும்கூட அழகிய தமிழில் இவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

மிக விரிவான ஆய்வு செய்து இந்தப் புத்தகத்தை எழுதிய ராபர்ட் கனிகல் பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவர். ராமானுஜன் வாழ்க்கையுடன் தொடர்புடைய தென்னிந்திய கிராமங்கள் மற்றும் நகரங்களில் அவர் நிறைய பயணம் செய்திருக்கிறார். கட்டிடக்கலை, அடிப்படை தத்துவம், பயன்பாடு என்று எல்லா வகைகளிலும் மேற்கில் உள்ள வீடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்திய சிற்றூர்களில் உள்ள வீடுகள் நமக்கு நன்றாக தெரியும். அவை குறித்த அவரது விவரணை தனித்துவம் கொண்டதாக நினைவில் நிற்கிறது. அதே போல் இங்கிலாந்தில் ராமனுஜன் இருந்த இடங்களையும் சிறப்பாக விவரிப்பதற்காக முதலாம் யுத்த கால ஆவணங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ராமானுஜனின் வாழ்கை ஹார்டியின் வாழ்க்கையைவிட மிகவும் மாறுபட்டது. அதனை உயிரோட்டத்துடன் சித்தரிக்க ராபர்ட் கனிகல் எடுத்துக் கொண்ட முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் அத்தனை விவரணைகளும் சிறப்பாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்த விவாதங்கள் கணிசமான அளவில் குறிப்பிடப்படுகின்றன. அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மிகுந்த மரியாதைக்குரியவர்களாக இருந்தார்கள், உயர்மட்ட தொடர்பு கொண்டவர்களாக வாழ்ந்தார்கள், ஆய்வு செய்து அது குறித்து எழுதினார்கள், ஐரோப்பா எங்கும் நடக்கும் மாநாடுகளில் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஆண்கள், அவர்களில் பலர் பிரம்மசாரிகள், வேலைக்கு ஆள் வைத்துக் கொண்டிருந்தார்கள், சாதாரண சமையல்கூட செய்யத் தெரியாதவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களை ராமானுஜனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர் தனக்கு பழக்கப்பட்ட இடத்தை விட்டு வெகு தொலைவு வந்தவர். ஆசாரங்களை கடைபிடிக்கும் தமிழ் பிராமணர் என்பதால் அசைவம் சாப்பிட முடியாதவர், தன் உணவை தானவே சமைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தவர், மன அழுத்தத்தால் பீடிக்கப்பட்டவர், தன் சகாக்கள் மற்றும் அண்டை வீட்டில் இருந்தவர்களுடன் நெருங்கிப் பழக முடியாதவர். ஆனால் அதே சமயம் தன் ஆங்கிலேயே சகாக்கள் ஆச்சரியப்படும் வகையில் உயர்நிலை கணிதத்தில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டேயிருக்கக் கூடியவராக இருந்தவர்.

ராமானுஜன் போன்ற தீட்டப்படாத வைரங்கள் எத்தனை எத்தனை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றனவோ, இந்தியா இன்னும் மாறவேயில்லை என்றெல்லாம் பலர் புத்தகங்களில் எழுதுகிறார்கள். நானும் இந்தப் பார்வைக்கு இணக்கமானவன்தான். ஆனால் எதிர்கால ராமானுஜன்களைக் கண்டெடுப்பதற்கு என்னதான் வழி என்பது இந்தப் புலம்பல்களிலிருந்து எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. ராமானுஜன் பரீட்சைகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவரல்ல. எனவே இந்தியாவில் அவர் கல்லூரியில் படிக்கவில்லை. அதனால் முறையான வழிகளில் அடைந்திருக்கக்கூடிய அங்கீகார வாய்ப்பை தவற விட்டவர் அவர். தன் ஆய்வுக்கு உதவி தேடி அவர் பலரை நாடினார். கடைசியில் ஹார்டிதான் அவரது கடிதத்தைப் படித்துவிட்டு உதவி செய்ய முன்வந்தார்.  முதலிலேயே அவர் உதவி கேட்டவர் உதவி செய்திருந்தால் நன்றாகத்தான்  இருந்திருக்கும். ஆனால் திரும்பிப் பார்க்கும்போது (in retrospect) மட்டும்தான் சரி/தவறுகள் தெளிவாகத் தெரிகின்றன. இன்றைக்கும்கூட பல்கலைச் சூழலுக்கு வெளியே சிக்கலான கணித ஆய்வுகளை மேற்கொள்ள ஒருவர் உதவி கேட்டால், அவரது திறமையைக் கண்டெடுப்பது எப்படி? முயற்சி செய்து கேட்பவர்களை எல்லாம் உக்குவிக்க வேண்டும் என்று சொன்னால், அப்படிப்பட்ட ஒரு வைரத்துக்கு இணையாக நிச்சயம்  பல முட்டாள்கள் தம் மேதைமையைப் பறை சாற்றிக் கொள்ள முயன்று குட்டையை குழப்புகிறார்கள். இந்தச் சிக்கலுக்கு என்ன விடை என்பது எனக்கு தெரியவில்லை. உங்களிடம் நல்ல யுக்திகள் இருந்தாலோ அல்லது நடைமுறையில் அவை இருப்பது தெரிந்தாலோ, இக்கட்டுரையின் கீழே பின்னூட்டங்களின் மூலம் தெரியப்படுத்துங்கள்.

படித்து முடித்தபின் புத்தகத்தைப் பற்றிய ஒரு ஏமாற்றம் மனதில் உதித்தது.  படித்தபின் யோசித்துப் பார்த்தால் நினைவில் வைத்துக் கொள்வதற்கென்று பெரிய அளவில் புதிதாய் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராங்லர், சீனியர் ராங்லர் என்ற ராங்கிங் (Ranking) விவரங்கள் என்ன என்று தெரிந்து கொண்டேன். ராமானுஜனின் வாழ்க்கையில் எது எப்போது நடந்தது என்ற காலவரிசை மனதில் நிற்கிறது. ஆனால் இறுதியில் எனக்கு எது ஏற்கனவே தெரிந்திருந்ததோ அதற்கு மேல் அதிகம் இந்தப் புத்தகத்தில் கிடைக்கவில்லை- இந்தியாவில் ராமானுஜன் வாழ்ந்த வறிய சூழல், ஜி.எச். ஹார்டியை தொடர்பு கொள்ளுதல், அவருடன் நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தபோதே இங்கிலாந்தில் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள், இந்தியா திரும்புவது, மறைவது.  இவையெல்லாம்தான் கடைசியில் மனதில் நிற்கிறது. திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கணித விஷயங்கள் புத்தகத்தில் கூடுதலாக தெரிய வருகின்றன. இதற்கு நாம் நிச்சயம் நன்றி சொல்லியாக வேண்டும். ஆனால் புதிதாக ஏதாவது ஒன்றை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தபோது இணையம் போய்தான் ராமானுஜனின் டாவ் பங்க்ஷன்பற்றி படிக்க வேண்டியதாக இருந்தது.

ராமானுஜனின் கணிதத்தை முடிந்த அளவு நினைவில் வைத்துக் கொள்வது அவருக்கு நாம் செய்யும் மரியாதை. திரைப்படத்துடன் ஒப்பிட்டால் புத்தகத்தில் கூடுதல் கணித தகவல்கள் இருக்கின்றன. எனவே வாசிக்கத்தக்க புத்தகம். திரைப்படமும் நன்றாகவே இருந்தது, ஆனால் ராமானுஜனாக நடித்த தேவ் படேல் (Dev Patel) தன் பெயரை ஒரு தென்னிந்தியர் போலல்லாமல் அமெரிக்கர் போல் உச்சரித்தது விநோதமாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்தாலும்கூட தன் தமிழ் பிராமண பழக்க வழக்கங்களை ராமானுஜனால் மாற்றிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் திரைப்படத்தில் கரு என்பதைப் பார்க்கும்போது திரைப்பட ராமானுஜன் தன் பெயரை அமெரிக்க பாணியில் உச்சரிப்பதை என்னவென்று சொல்ல!

இத்தகைய புத்தகங்கள் தமிழில் கிட்டுவது அரிது. இந்த முயற்சியைச் செய்திருக்கிறவர்களுக்கு இவற்றை வாங்குவதும், தெரிந்தவர்களுக்கு பரிசாக அளிப்பதும்தான் நாம் தெரிவிக்கும் சரியான பாராட்டாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தை வலை மூலம் வாங்க இங்கு போகலாம்: http://www.nbtindia.gov.in/books_detail__9__national-biography__2733__a-man-who-knew-infinity.nbt


(தமிழ்நடை உதவி – அ. சதானந்தன்)

3 Replies to “ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்”

  1. இப் புத்தகமே ஆங்கிலத்தில் தான் முதலில் எழுதப்பட்டிருக்கிறது. IMSC Chennai , TIFR இதிலெல்லாம் ஆர்வம் காட்டவில்லை போலிருக்கிறது.
    ராமானுஜர்களை அடையாளம் காண்பதற்கு எனக்கு ஒன்று தோன்றுகிறது;IIT,NIT போன்ற கலாசாலைகளில் drop out ஆனவர்கள் பற்றிய விவரங்கள் உதவக்கூடும்- பணச்சிக்கல் என்றால் முடிந்தால் உதவலாம்- ஆனால், ஒளிந்திருக்கும் திறமையை அது திறம்படக் காட்ட உதவாது.Just theory, no practical applications, boring subjects என்று சொல்பவர்களயும் விட்டுவிட்டு, இதில் மழுப்பப்பட்ட கோட்பாடுகள் என்னை வசீகரிக்கவில்லை, இன்னமும் ஏதோ உள்ளது என்ற காரணத்தினால் வெளிவருபவரை அணுகிப் பார்க்கலாம் . வாஞ்சிநாதனுக்கு என் நன்றிகள்.

  2. நீங்கள் சொல்வது எனக்கு சட்டென்று தோன்றாத நல்ல யோசனை!
    நீங்கள் முன்வைத்திருக்கும் filterகளும் நயமானவை.
    உங்கள் பதிவிற்கு நன்றி பானுமதி நடராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.