மிருத்யுஞ்சய்

This entry is part 26 of 48 in the series நூறு நூல்கள்

‘மிருத்யுஞ்சய்’ என்ற பி.கே. பட்டாச்சாரியாவின் அஸ்ஸாமிய நாவலின் களம் 1942ஆம் ஆண்டு காலகட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் களமாய்க் கொண்டது. நாவல் புரட்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவைப் பற்றியது. அவர்கள் பிரிட்டிஷ் ராணுவ ரயிலொன்றைக் கவிழ்க்கச் சதி செய்கின்றனர். இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுகின்றனர், அதற்கு அவர்கள் தரும் மானுட விலை என்ன என்பதுதான் நாவலின் மையக் கரு. மகத்தான நாவல்கள் அனைத்தையும் போலவே இந்த நாவல் அதன் கதைக் கருவைப் பற்றியதல்ல. இது எழுப்பும் கேள்விகளும் உணர்வுகளும் கதைக்கருவுக்கு அப்பால் நீண்டு ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்தை நமக்கு அளிக்கிறது.

ஒரு நிகழ்வின் விவரணையாக இருந்திருக்கக்கூடிய கதைக்கு ஒரு காவியத் தன்மை அளிக்கிறார் என்பதுதான் பி.கே. பட்டாச்சாரியாவின் சிறப்பு. அவர் கதைக்களத்தை விரித்தெடுக்கிறார். சுதந்திரப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி அதன் பல்வகைப்பட்ட சிக்கல்களை எடுத்துரைப்பதில் வெற்றி பெறுகிறார். நமக்கு இதில் கிடைக்கும் சித்திரம் அசாமுக்கு அப்பால் விரிகிறது. இந்தியா நெடுகிலும் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்தைத் துல்லியமாக வரைகிறது. சுதந்திரம் என்னும் இலட்சியத்தை அடைய இந்திய தேசமெங்கும் வாழ்ந்த மக்கள் செய்த தியாகத்தைக் கூர்மையாகச் சித்தரிக்கிறது.

தன்பூர் தலைமையில் புரட்சியாளர்கள் கோசைனைச் சந்திக்கச் செல்வதில் நாவல் துவங்குகிறது. கோசைன் அசாமிய மதத் தலைவர். சாத்வீகமாக கோசைன் உட்பட பலரும் வன்முறை ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்ட மோசமான நிலை. இப்போது ராணுவ ரயிலைக் கவிழ்ப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இங்கு நான் புரட்சியாளர்கள் என்ற சொல்லை அதன் கறாரான பொருளில் பயன்படுத்தவில்லை. இவர்கள் எடுத்த காரியத்தை முடிக்க நினைக்கிறார்களே தவிர ஒவ்வொருவருக்கும் அவரவர் சந்தேகங்கள் இருக்கின்றன. தன்பூர் மட்டுமே அச்சு அசலான புரட்சியாளனாகச் சித்தரிக்கிரப்படுகிறான். அவனுக்கு மட்டுமே தன் இலக்கு குறித்த தெளிவு இருக்கிறது. மற்ற அனைவர்க்கும் தாங்கள் மேற்கொண்டுள்ள வன்முறைப் போராட்டம் குறித்த ஐயங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

மக்கள் ஏன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்கான காரணம் அருமையாக நிறுவப்படுகிறது. ராணுவ வீரர்கள் சுபத்ராவை வன்புணர்வு கொள்வது விவரிக்கப்படும் விதம் எந்த வாசகர் உள்ளத்தையும் அசைத்து விடும். அவர்களுக்கு பழி வாங்க வேண்டும் என்ற வெஞ்சினம் புரிந்து கொள்ளப்படக் கூடியதாகவே இருக்கும். பிரிட்டிஷ் போலீஸ், ராணுவம், அவற்றிலுள்ள இந்தியர்கள், என்று அனைவரின் கொடூரமும் மிகத் தெளிவாக விவரிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு இறுக்கமான கட்டுக்காவல் கொண்ட அமைப்பில் வாழும் உணர்வை நாமே அடைகிறோம். அக்காலகட்டத்தின் சூழலை உணர்வது, அதைப் புரிந்து கொள்வது பட்டாச்சாரியா போன்ற ஒரு தேர்ந்த எழுத்தாளரால் மட்டுமே முடியும். அவரது எழுத்தாற்றல் கொடூரங்களை முழுமையாகவே கைப்பற்றுகிறது.

நாவல் ஒரே சமயத்தில் பல திரிகளைத் தொடர்கிறது. ஒரு பக்கம், சதித்திட்டத்தின் நுண்விபரங்கள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன- திடீரென்று சாலையில் சோதனைத் தடைகள் எழுப்பப்படுவது, அவற்றைக் கடந்து செல்வது, திட்டத்தை நிறைவேற்றும் இறுதி கட்டத்தை அடைவது என்று அருமையான விவரணைகள் தொடர்கின்றன. மற்றொரு திரியில் சதிகாரர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொள்வது வெளிப்படுகிறது. வன்முறையைத் தேர்ந்தெடுத்தது குறித்து அனைவருக்கும் இடையே ஒருமித்த கருத்தில்லை. வன்முறை நிரந்தர தீர்வு அளிக்குமா? அவர்கள் செல்வது சரியான பாதைதானா? இவர்களில் பலர் காந்தியின் தொண்டர்கள். எனவே காந்தி இவர்களின் விவாதங்களில் தொடர்ந்து நினவுபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார். காந்திய உணர்வுகளுக்கு செவி சாய்க்க தன்பூர் மறுத்து விடுகிறான். ஆனால் கோசைனும் அகினா கொன்வாரும் மீண்டும் மீண்டும் தமக்குள் கேள்விகள் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றனர். இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் காந்திய சிந்தனைகள் துளைத்திருந்ததை நம்மால் உணர முடிகிறது. ஒவ்வொருவரும் காந்தியின் கேள்விக்கு தமக்கே உரிய வகையில் பதிலளிக்க முயற்சி செய்கின்றனர். இன்னொரு தீவிர புரட்சியாளனான ரூபநாராயண், வன்முறை போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவன். அவனது பொறுமையை இந்த விவாதங்கள் சோதிக்கின்றன. “எல்லாரும் காந்தி போல் இருக்க முடியுமா?” என்று கேட்கிறான்.

இந்தியச் சூழமைவில் சமயவுணர்வைப் பேசாமல் இருக்க முடியாது. இதை காந்தி நன்றாகவே அறிந்திருந்தார். இந்தக் கதையில் சமயத்துக்கும் இடமுண்டு. பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் வாழ்வில் சமயவுணர்வு நுட்பமாக பின்னிப் பிணைந்திருக்கிறது. கோசைன் சமயாசாரியர் என்பதை அறிவோம். அகினா கொன்வாரும் சமய நம்பிக்கை கொண்டவன். சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுகிறான், பக்திப் பாடல்கள் பாடுகிறான். தன்பூர் பகுத்தறிவின் மொத்த உருவம். அவன் அத்தனை மத நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறான். நவீன கல்வி முறையை விரும்புகிறான். நவீனத்துவமும் மரபார்ந்த நம்பிக்கைகளும் ஒன்றுடனொன்று மோதிக் கொள்வது நாவல் நெடுக ஓடும் திரிகளில் மற்றுமொன்று.

இயற்கை வர்ணனைகள் மற்றும் காட்சிகளை உருவாக்கும் வகையில் பட்டாச்சார்யாவின் திறமை பளீரிடுகிறது. இரவுக் காட்சிகள், குறிப்பாய் நிலவொளியில் தன்பூர் திமியுடன் உரையாடுவது, அதிக சிரமமில்லாமல் திரைக்காட்சியாக மாற்றப்படக் கூடியவை. வன்முறைக்கு இடையே திகைக்க வைக்கும் மென்மைக்கு அவர் இடம் கொடுக்கிறார். சூழ்நிலையை உருவாக்கும் விதத்தில் நாவலின் காதல் காட்சிகள் நினைவில் நிற்கின்றன. ஒரு சிறுவனாக தன்பூர் திமியைச் சந்திப்பது, பின்னர் சுபத்ராவுக்கு உதவி செய்யும் முயற்சியில் பங்கேற்பது, தன்பூர் மீது திமிக்கு உள்ள காதல், தன்பூரின் இறுதி கட்டங்கள், ஆர்த்தியும் ரூபநாராயனும் இறுதியில் பிரிவது- இந்தக் காட்சிகள் அவ்வளவு சீக்கிரம் நம் மனதை விட்டு நீங்காதவை. அதே போல் பிபிராம் வருகைக்காக இருளில் தன்பூரும் அகினா கொன்வாரும் காத்திருக்கும் காட்சி, ரயில் தடம் புரளும் காட்சி மற்றும் இன்னும் பல காட்சிகளும் மறக்க முடியாதவை. கதை நெடுக இது போன்ற நினைவுக்குரிய காட்சிகள் நிகழ்வதால் நாவலில் எங்கும் நம் ஆர்வத்தில் தொய்வு ஏற்படுவதில்லை.

நாவல் சுதந்திரப் போராட்ட இயக்கத்தைக் கருவாய்க் கொண்டது. அதன் பல்வறு சரடுகளை நாம் புரிந்து கொள்கிறோம். ஒரு புறம், தலைவர்கள் அனைவரும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றுச் சிறைப்பட்டிருக்கின்றனர். மக்களை வழிநடத்தத் தக்க தலைமை இல்லை. கதையில் வரும் ஒரு பாத்திரமும்கூட இப்படிச் சொல்கிறது, “காந்தி மட்டுமாவது சிறை செல்லாமல் இருந்திருக்க வேண்டும். நமக்கு தலைவர் என்று ஒருவர் இருந்திருப்பார்.” பர்மாவிலிருந்து ஜப்பானியர்கள் இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். விரைவில் அசாம் ஜப்பானியர் கையில் விழும் என்ற அச்சம் நிலவுகிறது. ஜப்பானியர்களும் பிரிட்டிஷ்காரர்களைப் போன்றவர்களாக இருப்பர்கள் என்பதில் எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ரூபனாராயன் சொல்வது போல், சுதந்திரமும் சுயாட்சியுமே தீர்வுகள். காங்கிரசோ அகிம்சைப் போராட்டத்தை தொடர்கிறது. சுபாஷ் போஸின் ஐஎன்ஏ பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிராக ஜப்பானியர்களுடன் இணைந்து போரிடுகிறது. ‘மிருத்யுவாகினி’ என்ற பெயரில் பிற அசாமியர்களுடனும் இணைந்து பிரிட்டிஷ் துருப்புகளுக்கு எதிராக ஆயுதம் தாங்குகிறார் சுபாஷ். விடுதலைப் போராட்டம் எவ்வளவு சிக்கலானது, ஒவ்வொருவரும் தம்மாலான வகையில் இதில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் என்பதைப் பேசுவதுதான் இந்த நாவல். அதன் முக்கிய பேசுபொருள் சித்தாந்தங்களுக்கு இடையே உள்ள மோதல். அது போக, சுதந்திர இயக்கத்தை உள்ளிருந்தே காட்டிக் கொடுப்பவர்கள் பற்றியும் பேசுகிறது.

ஒவ்வொரு பாத்திரமும் நுண்ணிய வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. அவர்களது நோக்கங்கள், அக்கறைகள் நமக்கு இதனால் புரிகிறது. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு என்று ஒரு பின்புலம் இருக்கிறது. அது சார்ந்து விழுமியங்களும் இருக்கின்றன. சாதீய வன்முறையையும் பிரிட்டிஷாரின் வன்முறையையும் நேருக்கு நேர் கண்ட தீவிர புரட்சியாளன் தன்பூர். அகினா கொன்வார் ஒரு பிராமணன். புரட்சி இயக்கத்தில் இணைந்து மிக ஆபத்தான இலக்கை நோக்கிச் செல்லும்போதும்கூட சாதீய மேட்டிமையை விட்டுக் கொடுக்க விரும்பாதவன். கோசைன் சாதியுணர்வைக் களையும்போதுதான் வேண்டா வெறுப்பாக அவனும் தன் சாதி உணர்வுகளைக் கைவிடுகிறான் (தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணான திமி டீ போட்டுத் தரும்போது கோசைன் எந்த தயக்கமும் இல்லாமல் அதை அருந்துகிறார். அக்காலத்தில் அதுவே வழக்கமில்லாத செயலாக இருக்கிறது). மடாதிபதியான கோசைன் தன் கடமையைச் செய்கிறார். ஆனால் மனித உயிரைக் கொன்ற பாவத்துக்கு தனக்கு மன்னிப்பு கிடையாது என்று நினைக்கிறார். குற்றம் செய்த கணமே கோசைன் செத்துப் போய் விட்டார் என்று ஒரு பாத்திரம் சொல்வது உண்மை. உடலிலிருந்து உயிர் பிரிவது அதன் பின் இயல்பான விஷயம்தான். எத்தனை வாதங்களை அதற்குச் சாதகமாக சொன்னாலும் பிற மனிதனைக் கொள்வதை கோசைனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கீதை காட்டிய வழியில்தான் அவர் செல்கிறார். அவரும் தன் கடமையைச் செய்கிறார் ஆனால் துரதிருஷ்டவசமாக அது அவரது மனசாட்சிக்கு விரோதமான செயலாக இருக்கிறது. போர்க்களத்தில் அர்ஜுனன் எதிர்கொண்ட நிலை அவரது. கிருஷ்ணரின் போதனைகளைப் பின்பற்றிப் போரிடுகிறான் அர்ஜுனன், ஆனால் அவனால் பெருக்கெடுத்து ஓடும் ரத்த வெள்ளத்தைத் தாள முடியவில்லை. தத்துவம் வறட்சியானது, ஆனால் நடப்பு விவகாரங்களோ ரத்தமும் சதையுமாக முகத்தில் அறைவன. இரண்டையும் சமநிலைப்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல. நாவலில் தீயவர்கள் சில காலமே வருகிறார்கள், ஆனால் அவர்களைப் பற்றிய சித்திரமும் துல்லியமாக இருக்கிறது. அது பொலீஸ்காரனான சைக்கியாவாக இருக்கட்டும், துரோகியான கமலேஷ்வராக இருக்கட்டும், முழுமையான பாத்திரப்படைப்பைப் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட நாவல்கள் பலவற்றில் பெண்கள் இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு குறைவான பங்குதான் இருக்கும். இந்த நாவலில் பெண்கள் மிக முக்கியமான பாத்திரங்களாக கதை நெடுக வருகிறார்கள். சுதந்திர போராட்டக்காரர்களுக்கு பெண்கள் பல வகைகளில் உதவுகிறார்கள். கோசைனின் மனைவி போன்ற பலர் மறைமுகமாக உதவுகிறார்கள். கோலி, திமி போன்றவர்கள் நேரடியாக உதவுகிறார்கள். எப்போதும் பெண்கள் போராட்டக்காரர்களைச் சுற்றி இருந்து கொண்ட இருக்கிறார்கள். அவர்கள் வெறும் காதலிகள், மனைவிகள் என்று ஆண்களின் விழைவு வடிகால்கள் அல்ல. நாவலின் பின்பகுதி பெண்களின் துயரங்களையே பிரதானமாக பேசுகிறது. முதிலில் சுபத்ரா. ராணுவத்தால் கூட்டு வன்புணர்வு செய்யப்படுகிறாள். பின்னர், கோசைன் இறந்ததும் கர்ப்பிணியாய் இருக்கும் அவனது மனைவி பிரசவிக்கிறாள். அவளது சகோதரன், ஒரு காவல் அதிகாரி, பழிக்குப் பழி நடவடிக்கையாய் புரட்சியாளர்களால் கொல்லப்படுகிறான், அவனது மனைவியும் விதவையாகிறாள். கோசைனின் மனைவியும் அவளது சகோதரன் மனைவியும் ஒரே கூரையில் வசிக்க வேண்டியதாகிறது, இருவரும் விடுதலைப் போராட்டக்காரர்களை ஒன்றே போல்தான் எதிர்கொண்டாக வேண்டும். இவர்கள் தவிர திமி முக்கியமான பாத்திரம். தீரமிக்க திமி புரட்சியாளர்கள் திட்டம் வெற்றி பெற உதவுகிறாள். பின்னர் போலீஸ்காரர்கள் குரூரமாக வதைக்கு உள்ளாக்கி விசாரிக்கும்போதும் புரட்சியாளர்கள் பெயர்களைச் சொல்ல மறுத்து விடுகிறாள்.

இது நாம் வழக்கமாய் படிக்கும் வடிவமைப்பு கொண்ட நாவல் அல்ல. மையப் பாத்திரம் இல்லாத குழப்பம் இருக்கலாம், அல்லது, கதை சொல்ல பட்டாச்சாரியா புதிய ஒரு வழி கண்டுள்ளது குறித்து வியக்கலாம். நாவலின் மையப் பாத்திரம், அப்படியொன்று தேவைதான் என்றால், சுதந்திர போராட்டம்தான். வெளிச்சம் பாய்ச்சப்படும் மானுட பாத்திங்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். முதலில் நாவல் அது தன்பூர் பற்றியது என்பது போல் துவங்குகிறது, அதன் பின் கோசைனுக்கு திரும்புகிறது, சிறிது காலம் அகினா கொன்வரின்மேல் நிலைக்கிறது, பின் திமியிடம் செல்கிறது, அடுத்து ரூபநாராயன் நாயக நிலை தரிக்கிறான், பின்னர் கோசைனின் மனைவி மற்றும் அவளது சகோதரன் மனைவி கவனப்படுத்தப்படுகிறார்கள். கடைசி வரி பாத்திரங்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள் – திகௌ மற்றும் அவளது சகோதரன் மனைவி என்று அடுத்தடுத்து. இத்தனை இருந்தாலும் நாவலில் ஒருமை கூடி வந்திருக்கிறது. இதுவும் பட்டாச்சார்யாவின் தொழில்நுட்ப தேர்ச்சிக்கு வலிமையான சான்றுதான்.

அப்படி என்றால் மரணமில்லாத இந்த ‘மிருத்யுஞ்சய்’ யார்? புரட்சியாளர்களே மரணமற்றவர்கள் என்பது எளிய வாசிப்பாக இருக்கும். உண்மையில், ஏன் நாம் இதைச் செய்தோம் என்பதை மக்கள் அறிவார்களா, இந்தச் செயலை மனதில் வைத்துக் கொள்வார்களா என்று ரூபநாராயண் கூட சந்தேகிக்கிறான். எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் இறவாமையை நாடுகிறார்கள், அதற்காக உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் அழியாமல் தொடரும் என்றும் இதைப் பார்க்கலாம். காவல்துறை அதிகாரியான சைக்கியா, இப்போதெல்லாம் ஏன் மக்கள் போலீஸ்காரர்களைப் பார்த்து பயப்படுவதில்லை, இத்தனைக்கும் போலீஸ் அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையைக் கையாள்கிறது என்று கேட்டுக் கொள்கிறார். போராட்ட இயக்கம் மிக முக்கியமான கட்டத்தை அடைந்து விட்டது என்பதை எல்லாரும் புரிந்து கொள்கிறார்கள், மக்கள் அனைவரும் மெல்ல மெல்ல அதில் இணையத் துவங்கி விட்டார்கள், விடுதலையடையும் காலம் நெருங்கி விட்டது. அல்லது இதை காந்தி குறித்த நாவலாகவும் அவரது போதனைகள் நிர்ந்தரமானவை என்று சொல்வதாகவும் வாசிக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு புரட்சியாளனும் காந்திக்கே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது, இத்தனைக்கும் காந்தி அவர்களிடம் கேள்விகள் எதுவும் எழுப்புவதில்லை. அகிம்சையைக் கொண்டு வெற்றி பெறலாம் என்ற உண்மையை காந்தி சாதித்துக் காட்டி விட்டார். புரட்சியாளர்களின் வன்முறைக்கு இது எப்போதும் ஒரு பதிலாகவே இருக்கிறது. இந்த விவாதம் இப்போதைக்கு முடியப் போவதில்லை. காந்தியும் மானுடம் குறித்த அவரது தரிசனமும் என்றும் காலாவதியாகப் போவதில்லை. எனவே, காந்தியும் அவரது போதனைகளுமே ‘மிருத்யுஞ்சய்’ என்றும் வாசிக்கலாம். அல்லது, அமைதியான சூழலிலும்கூட கருணையும் குரூரமும் கலந்திருக்கும் மானுட இயல்புதான் சாவற்றதா? நாவலின் முடிவில் கோசைனின் மனைவி கேட்பது போல், “சுதந்திரத்துக்குப் பின் மனிதர்கள் நல்லவர்களாக மாறி விடுவார்களா?” இந்தக் கேள்விக்கு ஆமாம் என்று பதில் சொல்ல முடியாது. சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவில் என்ன நடந்தது என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.

இந்த நாவலை அசாமிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் டி.என். பேஸ்பொருஹா. முடிந்த அளவு மண்வாசனை கெடாமல் மொழியாக்கம் செய்திருக்கிறார். பல இடங்களில் பொருட்சொற்களின் அசாமிய பதத்தை பயன்படுத்துவது சிறப்பாக இருக்கிறது, அது அசாமிய மணத்தை அளிக்கிறது. ஆனால் வேறு சில இடங்களில், அகினா கொன்வார் ஒவ்வொரு வாக்கியத்தையும், “கிருஷ்ணன் ஆணை,” என்று துவங்குவது போன்ற இடங்களில், ஆங்கில மொழியாக்கம் விநோதமாக ஒலிக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பில் சொற்தேர்வு என்பது எப்போதுமே முழு வெற்றி அளிப்பதில்லை. மொத்தத்தில் ஆங்கில மொழியாக்கத்துக்கு பேஸ்பொருஹா நம் நன்றிக்குரியவரே.

இந்த நாவல் பட்டாச்சாரியாவுக்கு ஞானபீட விருது பெற்றுத் தந்திருக்கிறது. தலைசிறந்த இந்திய நாவல்களின் வரிசையில் இதை கநாசு சேர்த்திருக்கிறார். அவர் மூலமாகவே எனக்கு இந்த நாவல் பற்றி அறிய வந்தது. இந்தியரலாதவர்கள் இந்த நாவலில் சில இடங்களைப் புரிந்து கொள்ள முடியாது என்ற வகையில் இது மிகவும் இந்தியத் தன்மை பொருந்திய நாவல். இது ஞானபீட விருதுக்குரிய தகுதி கொண்டது என்பதில் சந்தேகமில்லை. தலைசிறந்த இந்திய நாவல்களின் வரிசையில் இடம்பெறத் தக்கதே.

இந்த நாவலைப் புத்தகக்கடைகளில் பார்ப்பது அரிதாக இருக்கிறது. ஸ்டெர்லிங் பப்ளிஷர்ஸ் பிரசுரம் ஆனால் புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. நான் இதை சாகித்ய அகாதமி நூலகத்தில் எடுத்துப் படித்தேன். நம் மகத்தான புத்தகங்களின் சோக நிலை இது.

Series Navigation<< எல்லைகள் அற்ற வெளிப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு >>

2 Replies to “மிருத்யுஞ்சய்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.