மரணபரியந்தம்

மரணபரியந்தம்

கைளை உயர்த்தாதே என்றார்கள்

கைகளைக் கட்டி நின்றேன்..

கைகளே கைகளை சிறைப்பிடித்தது.

கால்களை மடக்கி வை என்றார்கள்.

தரையில் மண்டியிட்டேன்.

பாதைகள் இருந்தும்

பயணம் முடிவுக்கு வந்தது.

கண்களை மூடு என்றார்கள்

இறுக்கி மூடிக்கொண்டேன்.

சூழ்ந்தது இருள்.

காதுகளை மூடு என்றார்கள்.

அதற்கும்   காது கொடுத்தேன்.

சப்தநாடியும் ஒடுங்கியது.

நாவை அடக்கு என்றால்

பேச்சை அடக்கி மௌனியானேன்.

மனதுக்குள் மன்றாடியது குரல்.

தலையை உயர்த்தாதே என்றார்கள்.

தலை கவிழ்ந்து

தாள் பணிந்து சரணடைந்தேன்.

மூளையைத் தூங்க வை என்றார்கள்.

சம்மதித்தேன்.

மூளை சுருண்டு படுத்தது.

மூக்கைக் குறி பார்த்து

மூச்சை அடக்கு என்றார்கள்.

அடங்கினேன்.

நான்விட்ட இறுதி மூச்சு

என்னை மீண்டும்

கண்டுபிடிக்க முடியாமல்

தேடித் திணறி

காற்றில் கலந்ததும்

எரிப்பதா, புதைப்பதா

என்று கேட்டது உடல்.

எரிக்கவோ, புதைக்கவோ

இது வழியில்லை

என்று வழிமறித்தது கும்பல்.

ஏழு கடல் தாண்டி

ஏழு மலை தாண்டி

யாரும் எட்ட முடியாத 

ஒரு குகைக்குள் இருக்கும்

கூண்டுக்கிளிக்குள்

வைக்க முடியுமா உயிரை?

யாருக்கும் தெரியாமல்

காற்றில்

கரைந்து போக முடியுமா பேயாக?

**

மயானகாண்டம்

எல்லோரும் பொய் என்று சொல்கிறார்கள்

என்கிறார்கள்.

உண்மைக்குப் புறம்பானது 

என்கிறேன் நான்.

மூன்றடியால்

உலகளந்த பெருமாளும்

பொய்யை

அளக்க முடியாமல் தவித்தார்.

படிக்கல்லால்

எடை போட முடியவில்லை

படியாலும்

அளக்க முடியவில்லை.

கையாலும்

முழம் போட முடியவில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்து

குத்துமதிப்பாகவும்

எதுவும் பிடிபடவில்லை.

பொய் சொன்னவர்களை

தேடிப்பிடிக்க வந்தது சதுக்க பூதம்.

அதன் பிறகு,

இறந்தவர்களின் பிணங்களை

எரிக்க அரிச்சந்திரன் தேவைப்படவில்லை.

**

குற்றம்தன்கடமையைச்செய்யும்

ஓருவர் செய்தால் கடமை

இன்னொருவர் செய்தால் அத்துமீறல்

சட்டம் கொண்டு வரும்போதே

குற்றமும் பிறந்து விடுகிறது.

பிடிபடும்போதுதான்

வெளியாகிறது குற்றம்.

குற்றம் எதுவும் இல்லை

பிடிபடாவிட்டால்.

சாட்சிகள் இல்லை என்றால்

சந்தேகத்தின் பலன்

குற்றம்சாட்டப்பட்டவருக்கு.

சட்டங்களை ஒழித்துவிட்டால்

எதுவும் குற்றமில்லை.

~oOo~