தேரோடும் வீதி…


வடம் போக்கித் தெரு…! கெட்டித்து போன கால உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு தெரு…தெரு என்றாகி, அதற்கொரு பெயர் சூடி  சில‌ நூறாண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் அதன் கீழிருக்கும் மண்? மலையத்துவஜனும் காஞ்சனமாலையும் சுந்தரவல்லியை  பெண்ணாய் பெறும் வேள்வியை செய்யக் கடந்து போயிருக்கக் கூடிய தெரு…அச்சுந்தரவல்லி, மும்முலை அரசியாய் கயிலை நோக்கி படைதிரட்டி சென்றிருக்கக் கூடிய தெரு…அங்கு நாயகனை கண்ட நாணத்தில் ஒரு முலை மறைந்து இருமுலை குமரியாய் திரும்பியிருக்கக் கூடிய தெரு…”மனமகிழ் துங்குநர் பாய்புடன் ஆடச் சுனைமலர்த் தாதுதும் வண்டுதல் எய்தா” பரங்குன்றம் நோக்கி பலர் சென்றிருக்கக்கூடிய தெரு…”பொன்தொழில் சிலம்பொன்று ஏந்திய கையள்” சினத்துடன் விரைந்திருக்கக்கூடிய தெரு…”கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்” என்று “விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்” திருகி வீசி விழுந்த கொங்கையில் எரிந்த மாநகரின் ஒரு பகுதியாய் இருந்திருக்கக் கூடிய தெரு… தான் கட்டிய அன்னச்சத்திரத்தை தினமும் பார்வையிட தமுக்கம் அரண்மனையிலிருந்து ராணி மங்கம்மாள் தன் பரிவாரங்களுடன் கடந்து போயிருக்கக் கூடிய தெரு…சேதுபதி பள்ளியிலிருந்து மாலை நேர நடையொன்றில் புதியதொரு கவி புனைந்தபடி பாரதி நடந்து போயிருக்கக் கூடிய தெரு…மேலாடை துறக்கும் சிந்தனையுடன் காந்தி கடந்து போயிருக்கக் கூடிய தெரு…கக்கனும் தேவரும் கர்ஜனை செய்திருக்கக் கூடிய தெரு…மேல வடம்போக்கித் தெரு!

உயிர்கள் பிறவி பெருங்கடல் நீந்தி கரைசேர “வீடு” அடிப்படை அல்லவா? முன்வினையோ தற்செயலோ, வடம்போக்கித் தெருவில் எங்கள் வீடு அமைந்தது வரம். வீடு வரமென்றால் மொட்டை மாடி உடைய வீடு பெருவரம். என்பதுகளில் துவங்கிய என் பதின் வயதுகளில், வின்மீண்கள் பார்த்தபடி விழிமூடிய இரவுகளுக்கு பிந்தைய புலரிகளில், இளங்கதிரின் வருடலில் துயில் நீங்கி எழுந்து நின்றால் எதிரே தெரிவதுண்டு எட்டு வகை கோபுரங்கள்…கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தருமா என்ற சந்தேகம் கொண்ட வயதுகளிலும் சரி கோபுர தரிசனத்தை விட கோடி புண்ணியம் தரும் செயல்கள் வையத்தில் உண்டு என்றுணர்ந்த வயதுகளிலும் சரி, ஒன்று மட்டும் எனக்குத் தெளிவானது – கோபுர தரிசனம் கோடி பரவசம் என்பதே அது. பரிதி படரத்துவங்கும் காலையில் அதன் கிரணங்கள் கரங்களாய் நீண்டு, மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள் ஒவ்வொன்றின் மீதும் மெல்லப் படர்ந்து, அதனை இருளில் இருந்து சற்றே நகர்ந்துகிறதோ என்று சிலிர்க்கும் வகையில் வெளிச்சம் பாய்ச்சும் எழில் தரும் ஒரிரு நிமிடங்களும் கோடி பரவசமே! அன்று நான் பார்த்துக் கொண்டிருந்த‌ கோபுரங்கள் அங்கு எழத் துவங்கி 800 ஆண்டுகள் ஆகி விட்டன. அதனுள் விரிந்து நிற்கும் ஆலயமோ குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளாய், எத்தனை முறை சிதைந்தாலும் மீண்டும் மீண்டும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்ட அதிசய தொன்மம். அந்த ஆலயத்தினுள் அமர்ந்திருக்கும் அங்கயற்கண்ணியோ அனாதி அனாதி காலம் தொட்டு அங்கிருக்கிறாள். இதே பரிதி அந்த அனாதி காலத்திலும் தன் கரங்களால் அவளை தொழுதிருக்கக் கூடும். ஒருவேளை அதனால் தான் அனுதினமும் இந்த கோபுரங்களை சற்றே முன்னகர்த்தி அவளருகில் செல்ல முயன்று கொண்டிருக்கிறதோ?  இந்த அற்பப் பதர் அன்று கண்டு கொண்டிருந்தது அனாதி காலத்திலிருந்து இன்னும் வழிந்து கொண்டிருக்கும் தொன்மத்தின் பெருந்துளி அல்லவா? 

சென்ற நூற்றாண்டு வரை மதுரையில் பிறந்த பெண்களுக்கு இடப்பட்ட பெயர்கள் பெரும்பாலும் மீனாட்சிக்கு பாத்தியமானதே…”மீனா”வை கண்டிராத, கொண்டாடி வளர்த்திராத‌ குடும்பங்கள் மதுரையில் அரிது. எனக்கும் மீனாட்சிக்கும் சிறுவயது சண்டைகள் ஏராளம்…மொட்டை மாடியிலிருந்தே அவளுக்கு வின்வழியே வேண்டுதல்கள் அனுப்புவது என் பால்யகால பழக்கம். விசித்திரமான வேண்டுதல்களின் கலவை அவை. சேட்டன் சர்மா வீசிய கடைசி பந்தில் சிக்ஸர், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் என என் “பல்வகை இறைஞ்சுதல்களுக்கு” அவள் பெரும்பாலும் செவி சாய்த்ததில்லை. மெல்ல மெல்ல வயதை வருடம் கவ்வ, வயது வாழ்வை கவ்வ, காலம், கடவுள் பற்றிய வினாக்களை விடைகளையும் என்னுள் விதைத்த பின் அவளும் நானும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. எனினும், உலகாளும் உமை அவள். மாயை சூழ் மானுடன் நான். இதில் இருவருக்குமே ஐய்யம் இல்லை. எனவே தான், அம்மாவின் கைப்பிடித்தபடி பார்த்த கயல்விழியின் அதே கருணை தோய்ந்த கண்கள் இன்றும் மாற்றமின்றி என்னை நோக்குகின்றன. ஆலவாயின் அன்னை ஆயிற்றே அவள்!

நிற்க.

நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது அவள் உலா போகும் வழியெங்கும் தெறிக்கும் திருவிழா கொண்டாட்டங்கள். அதில் எனக்கு உவப்பானது சித்திரைத் தேரோட்டம். மதுரையில் வளர்ந்த எவருமே சித்திரை திருவிழாவில் ஒரு முறையேனும் தேர் இழுக்காமல் இருந்திருக்க முடியாது. அத்தகைய வாய்ப்பற்றோர், தொன்மத்தை தொட்டிழுக்கும் அரிய பேற்றை தவற விட்டவர்களாவர். திருவிழா பற்றிய வரலாறு அறிய இலக்கியத்தின் துணை அவசியம். அதன் கைப்பிடித்தபடி இன்றைய இரைச்சல் மிகு மதுரையிலிருந்து முதலில் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “மதுரைச் சொக்கநாத உலா”வுக்குள் இறங்க வேண்டும். இந்த உலா நூலின் கரு, சொக்கன் மதுரை வீதிகளில் ஏழு நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவதே! அதில் முதல் நாள் தேர் பவனி…இதில் பாடப்படும் அனைத்து வாகனங்களும் இன்றளவும் திருவிழாவில் உண்டு. மதுரையின் வயதுக்கு முன் நானூறு ஆண்டுகள் என்பது தூசு எனில், இதில் வியப்பதற்கேதுமில்லை என்பதால் வாயு வேகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி பறந்து எனக்குப் பிடித்தமான “மதுரைக் காஞ்சி”யில் தேடலாம்…நகரின் இயல்பு குறித்த பாடல்களின் நடுவே, “கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி யாடுதுவன்று விழவி னாடார்த் தன்றே மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூட” என்ற வரிகள் உண்டு. நச்சினார்க்கினியருக்கும் உ.வே.சாவுக்கும் இதன் பொருள் குறித்த பேதமிருப்பினும், இரண்டும் இனிதே பொருத்தமானது. முன்னவர், ஏழாம் நாள் விழா முடிவில் நீராடி மகிழ்வர் என்கிறார். பின்னவர் ஏழு நாட்களும் விழாவின் மாலையில் கொண்டாட்டம் நிகழ்ந்தது என்கிறார். எப்படியோ…”ஏழு நாள் விழா” மதுரையில் இரண்டாயிரம் ஆண்டுகளாய் தொடர்கிறது என்பதை அறியும் பொழுது ஏற்படுவது காலத்தின் மீது விரல்கள் நகர்த்தும் போது ஏற்படும் புல்லரிப்பு! பெருமிதத்துடன் பீடுநடை போட்டு சங்கத்திலிருந்து மீண்டும் திருமலை நாயக்கர் காலத்துக்கு திரும்பி வந்தால், அவர் இத்திருவிழாவில் செய்த குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிய வரும். முதல் நாள் தேர், மீனாட்சி திருமணத்திற்கு பிந்தையதாக்கியதும், தேனூரில் வைகையில் இறங்கி வந்த அழகரை நகருக்குள் அழைத்து வந்ததும் அவற்றில் முக்கியமானது. இன்றைய சித்திரை திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் அவர் கட்டமைத்ததாகும். இதன்படி திருவிழாவின் பதினோராம் நாள் காலை நிகழ்வது தேரோட்டம்.

இன்று நாம் தமிழகத்தில் பார்க்கும் பெருந்தேர்கள் அனைத்துமே “கட்டுத்தேர்” வகைகளே. அதாவது, பீடம் வரையிலான கீழ்பகுதி நிரந்தரமானது. திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ந்த பின் மேற்பகுதி வெவ்வேறு அலங்காரங்களால் நிரப்பப்படும். மதுரைத் தேரும் அத்தகையதே. சொக்கனும் மீனாளும் பவனி வர இரு தேர்கள் உண்டு. ஸ்வாமி தேர், அம்மன் தேர் என்றோ பெரிய தேர், சிறிய தேர் என்றோ சொல்வது ஊர் வழக்கம். ஸ்வாமி தேரில் சொக்கனும் பிரியாவிடையும் வருவர். அம்மன் தேர் மீனாட்சிக்கு மட்டுமே உரியது. தேரின் அடிச்சுற்று முழுவதும் 64 விளையாடல்களும் சிற்பங்களாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்போது இருக்கும் இரு தேர்களும் மங்கம்மாளின் பேரன் விஜயரங்க நாயக்கரால் செய்யப்பட்டவை. விஜயநகரத்து சாம்ராஜ்ஜியத்தின் கலை மதுரைக்குள் எப்படி வந்தது? இன்றிருக்கும் ஸ்வாமி மற்றும் அம்மன் தேர்களை வடிவமைத்தது விஜயரங்க சொக்கநாத நாயக்கர். இவர் ராணி மங்கம்மாளின் பேரன். திருமலை நாயக்கரின் மருமகளே மங்கம்மாள். திருமலை நாயக்கரின் தாத்தா விசுவநாத நாயக்கர். இவர் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரிடம் நேரடியாக பணிபுரிந்தவர். இவரின் திறமை பார்த்த கிருஷ்ணதேவராயர் மதுரை ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார். இப்படியாக மதுரைக்குள் கானூன்றியது தான் விஜயநகரத்தின் கரங்களும் கலைகளும் கட்டுமானங்களும்…

எனக்கு அம்மன் தேர் மீதே அவா. தேர் இழுக்க அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அம்மன் சன்னதி முனையில் இருக்கும் தேர்முட்டி பக்கம் இருத்தல் அவசியம். அங்கு, அந்த நாளுக்காய் காத்திருப்பது போலவே காதுகளை வீசியபடி காத்திருப்பாள் இன்னொரு மீனாட்சி. நான் கோயிலுக்கு அடிக்கடி செல்ல முக்கிய காரணம் அவளே. ’47ல் கோயிலுக்கு வந்தவளின் தும்பிக்கையின் முன்பகுதி, எண்பதுகளில் பின்பகுதியில் பழுப்பு நிறமாய் மாறத்துவங்கியது. அந்த பழுப்பை வருடும் பொழுது ஜிகர்தண்டாவில் மிதக்கும் கடல்பாசியை தொடுவது போலிருப்பதுண்டு. அவளது தும்பிக்கையின் சுற்றளவை ஒத்தது அம்மன் தேரின் வடம். இருமருங்கிலும் மனிதத்தலைகள் கடலென அசைய, ஆயிரம் கரங்கள் வடம் இழுக்க,மெல்ல நகரும் தேரின் மேலிருப்பவர் மைக்கில் “மீனாட்சி சுந்தரர் மகாதேவா” என்று தனக்கே உரிய தாளக் கட்டில் கூற, லட்சக்கணக்கில் கூடியிருக்கும் மானுடம் தன்னை மறந்து அதை திரும்பக் கூறுகையில் பிடிபடும் “ஊர் கூடி தேர் இழுத்தல்” என்பதன் பொருள். மதியம் வீடு திரும்பியபின் “என்னடா கையெல்லாம் இப்படி காய்ச்சிருக்கு” என்று சொல்லும்பொழுதுதான் உடல் பற்றிய உணர்வு திரும்பும் என்பது தேரோட்டம் தரும் கொண்டாட்ட மனோபாவத்திற்கு ஒரு பதம்.

மாசி வீதிக‌ள் முழுவதும் மாடி வீடுகள் நிரம்பி, உப்பரிகையை நினைப்பில் கொண்டு வரும் பலகணி வழியே பார்க்கும் அரிவை ஒருத்தியின் விழி தன் மேல் வீழாதா என்ற எண்ணத்துடன் தேர் இழுக்க வரும் இளைஞர் கூட்டமும் உண்டு. அப்படி சந்தித்துக் கொள்ளும் கண்களை கூட்டம் கண்டு கொண்டால் ஏற்படும் உற்சாக கூச்சலை மீனாட்சியும் ரசிக்கக் கூடும்…சட்டென்று வீட்டுக்குள் ஓடும் அரிவை, தேர் அங்கிருந்து நகரும் வரை மீண்டும் “உப்பரிகை” வந்ததில்லை என்பது தேரோட்டங்களின் உபகதை. 

தெற்கு மாசி வீதியிலிருந்து மேல மாசி வீதி துவங்கும் எங்கள் தெரு முனை, தேரோட்டத்தின் முக்கியமானதொரு அம்சம். இறக்கமும் வளைவும் அதீதமாய் இணைந்த திருப்பம் அது. தேரிழுக்கும் இளைஞர் பட்டாளம் சற்றே கவனம் பிசகினாலும் பெரும்பிழை காத்திருக்கும் முனை. சில வருடங்கள் சிறு தவற்றால் பல மணிநேரம் தேர் அங்கேயே நின்றதுண்டு. எனவே, சிட்டி சினிமா தாண்டியவுடனேயே “இறக்கம் இறக்கம்” என்று அறிவுறுத்தியபடியே தான் தேர் நகரும். வடங்கள் மூன்று தொகுப்புகளாய் பிரிக்கப்பட்டு மூன்று தெருக்களுக்குள் இழுக்கப்படும். அந்தப் பிரித்தலும், ஒரு வடமும் எங்கள் தெருவுக்குள் வந்து போவதால், வடம் போக்கித் தெரு! இந்த வடத்தொகுப்பின் முறைப்படுத்தப்பட்ட பிரயோகமே தேருக்கு ஸ்டியரிங் ஆகவும் பிரேக் ஆகவும் மாறி அதை திருப்பும். இது சுபமாய் முடிந்து தேர் மேலமாசி வீதியில் செல்லத் துவங்கும் வரை, “கட்டை போடுபவர்கள்” பதைபதைப்புடன் இருப்பர். தேர் நிலைக்குத் திரும்ப சில சமயங்களில் மதியத்தை தாண்டி விடும். எங்கேனும் ஏதோ ஒரு தடை ஏற்பட்டு தேர் நகர்தல் தாமதமானால், அச்செய்தி காட்டுத் தீ போல் நகரம் முழுவதும் பரவும். “இன்னும் தேர் சாந்தி தியேட்டர்* தாண்டி திரும்ப முடியலையாம்” “மெட்ராஸ் ஓட்டல்* பக்கம் ஒரு மணி நேரமா நிக்குது” போன்ற தகவல்கள் வீடுகளில் உரையாடல் பொருளாய் ஆகும். நேரமாக நேரமாக அது கவலையாக மாறும். மக்கள் பெருந்திரளாய் அத்தகைய இடம் நோக்கி விரைவர். மதுரையின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அவள் வாசம் செய்கிறாள் என்பதற்கு இவையே ஆதாரம். இவையெல்லாம் தொண்ணூறூகள் வரை நான் பார்த்த தேரோட்டம்…

நீண்ட இடைவெளிக்குப் பின் சமீபத்திய வருடமொன்றில் மீண்டும் தேரோட்டம் பார்க்கும் பேறு கிடைத்தது. இம்முறை என்னால் தேர் வடத்தின் அருகில் கூட செல்ல இயலவில்லை. அல்லது நான் முயலவில்லை. புதிது புதிதாய் கலைக் குழுக்கள் தேர் முன் ஆடியும் பாடியும் ஆனந்தத்தை நகரமெங்கும் பரப்பியபடி நகர்ந்து கொண்டிருந்தது. தேர் இழுப்பவர்கள், கட்டை போடுபவர்களுக்கு சீருடை வழங்கியிருப்பார்கள் போலும்…தேர் மேல் இருக்கும் அறிவிப்பாளரும் காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றங்கள் செய்து, சில மசாலாத் தனங்களையும் தன் பேச்சில் சேர்த்து இளைஞர்களை உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தார். சுருளிராஜன் குரலை சற்றே பட்டி டிங்கரிங் செய்தால் வரும் குரல் போல் இருப்பது இந்த அறிவிப்பாளரிகளிடம் அன்று முதல் இருந்து வரும் ஸ்பெஷாலிட்டி. முன்பெல்லாம் மக்கள் பெருக்கு தலைக்கு மேல் இருகை கூப்பியபடி மெய்மறந்து நிற்கும். இப்போதும் கைகள் தலைக்கு மேல்தான் இருக்கின்றன. ஆனால் கை கூப்புவதற்குரிய இடைவெளியில் பக்திக்கு பதில் செல்போன்கள்…இத்தகைய மாற்றங்கள் அனைத்தையும் ஈயை புறந்தள்ளும் யானை போல, சிறிதும் சட்டை செய்யாமல், தொன்மத்தின் தடத்தை காலத்தின் வடத்தால் ஆண்டு தோறும் இழுத்து வருகிறது மதுரை தேர்த் திருவிழா.

அம்மன் தேர் கடந்தவுடன் மெல்லக் கலையத் துவங்கிய கூட்டத்தின் நடுவில் தலையில் தட்டைத் தூக்கியபடி நகர்ந்து கொண்டிருந்த ஜவ்வு மிட்டாய் காரர்களில் ஒருவரை நிறுத்தினேன். எனக்கு எப்போதும் ரோஸ் நிற ஜவ்வு மிட்டாய் தான் பிடித்தமானது. நான்கைந்தை வாங்கி ஒவ்வொன்றாய் வாயில் மென்றபடி “வீடு” நோக்கி நகர்ந்தேன். காலத்தை மெல்லும் போது அது நாவில் தடவிச் செல்லும் நினைவின் சுவை அலாதியானது. மொட்டை மாடிக்குச் சென்று கோபுரங்களை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. மூன்று மூன்று படிகளாய் தாவியேறிய மாடியை ஒவ்வொன்றாய் ஏறச் சொல்லும் வயதுக்கு வந்து விட்ட நான் நீண்ட வருடங்களுக்குப் பின் கோபுர திசையை பார்த்தபடி நின்றேன். எனக்கும் கோபுரங்களுக்கும் குறுக்கீடாய் தங்க நங்கை ஒருத்தி ஜாய் அலூக்காஸில் நகை வாங்குவதன் லாபம் குறித்து கைகுவித்து தெரிவித்தபடி இருந்தாள். முப்பது வருடங்களுக்கு முன்னால் நினைத்த போதெல்லாம் கண்ட பரவசமிகு காட்சியை, அனாதி அனாதியான காலம் தொட்டு அமர்ந்திருக்கும் அங்கயற்கன்னியை தன் நீண்ட கரங்களால் செங்கதிர் தொழும் சிலிர்ப்பை, இனி என் அகக் கண்ணால் மட்டுமே காண முடியும் என்பது புரிந்தது. உஷை தன் கதிர் கரங்களால் உமையை தொழும் காரியம் தான் விடியல் என்பதா? அல்லது அதன் பொருட்டு நிகழ்வதே யுகங்கள் தோறும் அனுதினம் தோன்றும் உலகின் விடியலா? என்ற யோசனை தோன்றியபோது ஒரு பெண் குரல் என் மிக அருகில் “இன்னும் உனக்கு நம்பிக்கை வரலையோ” என்று சொல்வது போன்ற பிரமை. அத்தனை பெருங்கருணை ததும்பும் குரல் மானுடத்தில் சாத்தியமில்லை. அது அவளாக இருக்கக் கூடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.