லீலாவதியைத் திருப்பி அனுப்புவது எப்படி?

“உனக்கு லீலாவதியைத் தெரியுமா?” என்று ப்ரொஃபஸர் கேட்டார்.

“சதி லீலாவதி சினிமா தெரியும் , அதுலகூட லீலாவதின்னு காரக்டர் வந்ததா தெரியலயே! ஒரு வேளை ரமேஷ் அரவிந்த் மனைவியா நடிக்கறவரின் கதாபாத்திரத்தின் பேரு அதுவோ?” வருண்  சந்தேகமாகக் கேட்டான்.

ப்ரொஃபஸர் “அட அது இல்லப்பா! பாஸ்கராச்சார்யா கேள்விப்பட்டுருக்கயா?”என்றார்.

“கோபால் ஆச்சாரின்னுட்டு அல்சூர்ல நகை வேலை செய்யறாரே, அவருக்கு உறவா?”

ப்ரொஃபஸர் ”இல்லப்பா , கணக்குல பெரிய மேதை, பல புத்தகங்கள் எழுதியிருக்கார். கி.பி 1100கள்ள வாழ்ந்தவர். அல்ஜீப்ரா,  தசம கணிதம், கால்குலஸ், ட்ரிக்னொமெட்ரி இதுல எல்லாம் புஸ்தகம் எழுதி இருக்கார்.

 அப்புறம் பெல் ஈக்வேஷன்தெரியுமா? X2 =1+PY2.   அதை சால்வ் பண்ணியிருக்கார். இருபடி சமன்பாடுன்னு சொல்லப்படற க்வாடராடிக் ஈக்வேஷன்ல எத்தனையோ பண்ணியிருக்கார். π மதிப்பைக் கண்டிபிடிச்சுருக்கார். அவரோட சித்தாந்த சிரோமணிங்கிற மஹாபெரிய புத்தகத்தில  நாலு பாகங்களான பீஜ கணிதம், க்ரஹ கணிதம், கோலத்யாயா, லீலாவதி இதெல்லாம் ரொம்ப புகழ் பெற்றவை. பல மொழிகள்ல மொழி பெயர்ந்திருங்காங்க,” கொஞ்சம் மூக்சு விட்டார். தலை கலைந்து, கண்ணாடிக்குப் பின்னால் கண் பெரிதாக இருந்தார்.

 கொட்டாவியை அடக்கிக்கொண்டு “ஓ லீலாவதிங்கறது புத்தகமா? அடச் சே! என்னவோன்னு நினைச்சேன்!” என்றான் வருண்.

“இல்லப்பா! லீலாவதில ஒரு கணக்கு சொல்றேன் கேளு. அவர் கேக்கறார், “ஓ! மான் போல விழி கொண்டவளே! இதற்கு பதில் சொல்லு. ஒரு தேனீக்கூட்டத்தில்  ஐந்தில் ஒரு பகுதி தேனீக்கள் தாமரை மலரிடம் சென்றன, மூன்றில் ஒரு பகுதி வாழை மரத்தை நோக்கி. அவை இரண்டின் வித்யாசத்தின் மூன்று மடங்கு தேனீக்கள் கடக மரத்தை நோக்கிச் சென்றன. முடிவெடுக்க முடியாத ஒரு தேனீ மட்டும் மல்லிகையா வேறு செடியா என்று திண்டாடிக் கொண்டிருந்தது. அப்படியானால் மொத்தம்  எத்தனை தேனீக்கள்?” இதைச் சொல்லிவிட்டு அவர் அவனை ஆவலான எதிர்பார்ப்போடு பார்த்தார்.

அவர் தன்னிடம் இந்தக் கேள்விக்கு பதில்  எதிர்பார்க்கிறார் என்பதை அவன் பயத்துடன் உணர்ந்து அவசர அவசரமாக ”சரி சார்! யார் அந்த மான் மாதிரி விழி கொண்டவள்?” என்று ஒரு கூக்லி போட்டான்.

 அதை எதிர்பாராத அவர் ஒரு நிமிஷம் முழித்துவிட்டு “அது அவரோட பெண்ணோட பேரு, அதைத்தான் புத்தகத்திற்கு வச்சுருக்கார்”.

“இப்போ கொஞ்சம் சுவாரசியம் வருது,சொல்லுங்க”

 இதைப் பற்றி எதையும் கவலைப்படாமல் பால்கனி வராந்தாவுக்கு வெளியே பங்களூர் இந்திரா நகர் நூறு அடி ரோடில் வியாபாரம் பணக்கார இளைஞர்களையும், இளைஞிகளையும் குறி வைத்து நடந்து கொண்டிருந்தது. ப்ரொஃபஸர் வீடு அந்த ரோடின் அசுர வேக வணிகமயமாக்கலுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, இரண்டு பிருமாண்டமான கடைகளுக்கு நடுவே அம்மா, அப்பா கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் குழந்தை மாதிரி பாவம் போல நின்றுகொண்டிருந்தது.

“அந்தப் பெண் இங்க இருக்கா” என்றார்.

“என்னது?” வருண் எழுந்து நின்ற வேகத்தில் டீபாயிலிருந்த புத்தகங்கள் விழுந்தன.

“இருப்பா, கொஞ்சம்ம்… பொறுமை!! பொறுமை” என்றார்.

“என்ன அர்த்தம் சார் இதுக்கு? ஒண்ணும் புரியலையே” ப்ரொஃபஸரின் புத்திசுவாதீனத்தில் கொஞ்சம் சந்தேகம் வந்தது. கண்களைப் பார்த்தால்  தேவைக்கு மீறிய ஒளியோடு  மின்னிக்கொண்டிருந்தது வேறு அவன் சந்தேகத்தை அதிகமாக்கியது.

“நான் வெகு சில சந்தர்ப்பங்களில் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யறதுக்கு ஒரு விதமான கால, இட பிரயாணங்களை மேற்கொள்வது வழக்கம்”

வருண் கண்களை பல முறை கொட்டிக்கொண்டு “கம் அகைன்!” என்றான். “என்ன கால, இட?”

“அதாவது நாம பொதுவா பயணம் போகும் பொழுது ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்கு போகிறோம் இல்லையா? நான் அதோட சேர்த்து ஒரு காலத்திலிருந்து இன்னோரு காலத்திற்கும் செல்வது வழக்கம்”

காலையில் எழுந்ததும் காலை நடைக்குப் போவேன் என்பதுபோல சாவகாசமாக சொல்லிக்கொண்டிருந்தார்.

வருண் வாயைத் திறந்து திறந்து மூடினான், சத்தம் வர மறுத்தது. மிகுந்த முயற்சிக்குப் பின்னர் பலவீனமாக, “என்ன சார்?’ என்றான்.

“கால யந்திரம் மாதிரி அவ்வளவு பெரிசு இல்லாம ஒரு சின்ன யந்திரம். அதனுடன் நம்முடைய எண்ண அலைகளையும் சிங்க் பண்ண வச்சு , யாரைப் பார்க்கணும்னு நினைக்கறோமோ, அவர்களைப் போய் அடையறா மாதிரின்னு  வடிவமைச்சுருக்கேன்னு சிம்பிளா சொல்லலாம். அஃப்கோர்ஸ் அதுக்குண்டான போர்டலும் தேவை!”

“சரி….”

“ஒரு கணக்குல சந்தேகம்னு பாஸ்கராச்சார்யாவைப் பார்க்கப் போனப்ப இவளைப் பார்த்தேன். இவளும் கணக்குல புலி. சந்தேகத்தைக் கேட்டுட்டு என் போர்டல் கிட்ட வந்துட்டேன். இங்க  திருப்பி வரணும்கிற எண்ணத்திற்கான செயலாக்கமும் ஆரம்பிச்சாச்சு. அப்ப இவ வந்து கையைக்காட்டி , இதோ பாருங்களேன்னு சொன்னா , கையைப் பிடிச்சேன்…”

“என்ன கையை ….. பிடிச்சீங்களா?”அதிர்ச்சியில் அலறினான்.

“இருப்பா , கையைப் பிடிச்சேனா, போர்டல்ல வேற இருந்தேன், எங்கூடவே இங்க வந்துட்டாப்பா”

அங்கும் இங்கும் சந்தேகப் பார்வை பார்த்துக்கொண்டு  “மாமி எங்கே?” என்றான் ரகசிய சதிக்குரலில்.

“மாமி ஊருக்குப் போயிருக்கா!”

“என்ன மாமியை ஊருக்கு அனுப்பிச்சுட்டீங்களா?”  திரும்ப அலறினான்.

“இதை பாரப்பா , நீ ஒவ்வொரு சந்தேகத்துக்கும் இப்படி அலறினா, எனக்கு கை கால்லாம் படபடன்னு வருதுப்பா,”என்றார் கெஞ்சுகிறாற்போல்.

“மாமியை நான் ஊருக்கு அனுப்பி வக்கலைப்பா, அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்னு போயிருக்கா.”

“கும்பாபிஷேகமா?”

“கும்பாபிஷேகத்துக்கு எதுக்குப்பா அலறல்?”

“இல்ல  சார் , பழக்க தோஷத்துல… அப்புறம் மேல?”

அவர் வாயைத் திறப்பதற்குள் கண்களைக் குறுக்கிக் கொண்டு ஒரு விசாரணைத் தோரணையில் ”சார் ! ஒரு சின்ன சந்தேகம். உங்க கணக்கு சந்தேகத்தை நீங்க ஏன் பாஸ்கராச்சார்யா கிட்ட கேக்கலை?” கேட்டுவிட்டு லேசாக வில்லச்சிரிப்பு சிரித்தான்.

“அது ஒரு  உயர் அரசாங்க உச்சபட்ச ரகசியம். நான் போனப்ப ஐ ஐ டி கரக்பூர் ஃப்ரொபசர் ஒத்தர் வந்து பாஸ்கராச்சார்யாவையும் , அவர் பையனையும் கூட்டிண்டு போனார்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழத்தின் தலைவர், பிரதமர் அலுவலக தலைமை செயலர் அவங்களோட எல்லாம் மீட்டிங்க். அதனாலதான் நான் இவளை…”

“சரி! இப்ப பிரச்னை என்ன? அவளைத் திருப்பி அனுப்ப வேண்டியதுதானே?”

“அதான் முடியலை! என்னோட கால இயந்திரத்தில் சின்ன பழுது. அதை சரி பண்ணணும். இவ இங்க இருந்தா பல சந்தேகங்களைக் கேட்டுண்டே இருக்கா! அதனால வேலையில கவனம் செலுத்திப் பண்ண முடியல! போதும் போதாதற்கு இந்த வேலைக்காரி சாக்கம்மா வேறு ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு ‘ஒடுகி யாரு? எல்லிந்து பந்தளு?’ ன்னு நச்சரிக்கறா. என் அண்ணா பொண்ணுன்னு சொல்லிவச்சேன்”

“அதுக்கு?”

“நீ அவளை வெளியில் கூட்டிண்டு போய்ட்டு ஒரு இரண்டு மணி நேரம் கழிச்சு வாயேன்.”

“என்ன சார் நினைச்சுக்கிட்டு இருங்கீங்க, அதெல்லாம் போக…” சலங்க் சலங்கென்று அவள் உள்ளே இருந்து வந்தாள்.  “லாமே சார்” என்றான்.

அவனுடன் படித்தவர்களில் நன்றாக கணக்குப்போடும் பெண்கள் யாரும் இவ்வளவு அழகாக இருந்ததில்லையே என நினைத்துக்கொண்டான். ஆனால் உடை கொஞ்சம் வினோதமாக இருந்தது.

“இந்த ட்ரெஸோட போனா  ஏதோ  ஃபான்சி டிரஸ் போட்டியிலேந்து அப்படியே வந்தமாதிரி இருக்குமே?  ஏற்கனவே  எங்க போனாலும் நாய் துரத்துது.”

“இல்ல ! ஷைலுவோட டிரஸ் எதாவது போட்டுக்கச் சொல்றேன்,” அவளிடம்  சொன்னார்.

அவள் வருணைப் பார்த்து சிரித்துவிட்டு உள்ளே போனாள்.

“எப்படி சார் நீங்க தமிழ்ல பேசினது புரியறது?”

“சிம்பிள்! எங்கிட்டயும் அவகிட்டயும் இந்த மொழிபெயர்ப்புக் கருவி இருக்கு.  இது கிட்டத்தட்ட ஏழாயிரம் மொழிகள் மற்றும் பேச்சுவழக்கு வகைகளை மொழி பெயர்த்து தரும்”   ஜேம்ஸ் பாண்ட் படத்துல வர மாதிரி ஒரு சின்ன உலோக பட்டன் மாதிரி சமாசாரத்தைக் காண்பித்தார்.

“இது இல்லாட்டாலும் நீ சமாளிச்சுப்பே இல்லயா?, நீதான் சமஸ்கிருத பாரதில சமஸ்கிருதம் படிச்சுருக்கியே”

“ஐய்யோ! அதெல்லாம், சஹ கச்சதி, அஹம் கச்சாமி லெவல்தான் சார், எதாவது எக்குத் தப்பா புரிஞ்சுகிட்டு எசகு பிசகாஆயிடப் போறது. எனக்கும் ஒண்ணு இது மாதிரி குடுங்க சார்.”

அவனிடம் அந்த பட்டனைக் கொடுத்துக்கொண்டே

“இந்த பொண்ணோட கதை கொஞ்சம் சோகம்தான் பாவம்,” என்றார்.

உடனே தோளில்  அவளை சாய்த்துக்கொண்டு  முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்துவது போல ஒரு பிம்பம் தோன்றி “சொல்லுங்க சார்” என்றான் ஆர்வமாக.

“இந்த பொண்ணு ஜாதகப்படி கல்யாணமே ஆகாது, அப்படியே எதோ லக்ஷத்துல ஒண்ணுங்கற ப்ராபபிலிட்டில நடந்தாலும் குழந்தை கிடையாதுன்னு இருந்தது. அவ அப்பா வான சாஸ்திரத்திலும் பெரிய நிபுணர் இல்லையா? அதுனாலே என்னென்னெல்லாமோ கணக்கு போட்டு,  ஒரு குறிப்பிட்ட நாள்ல ஒரு குறிப்பிட்ட முஹூர்த்தத்தில நடந்தா மட்டும் அந்த விதியையே மாத்திடலாம்னு  கணித்தார். கல்யாணத்து அன்னிக்கு அதிகாலையிலே ஒரு பாத்திரத்தில தண்ணி நிரப்பி அதுக்குள்ள சின்ன துளை உள்ள இன்னொரு சின்ன மெல்லிய பாத்திரத்தை மிதக்க விட்டார். எப்ப அந்த சின்ன பாத்திரம் மூழ்குதோ அதுதான் திருமணத்திற்கு சரியான நேரம் என்று கணக்கிட்டு, எல்லா ஏற்பாடும் செய்தார். குழந்தை லீலா கிட்ட சொன்னார், அது கிட்டயே போகக்கூடாதுன்னு; யாரும் அந்த  அமைப்பை குலைக்கக்கூடாதுன்னு. சின்ன குழந்தைதானே, ஆசையா என்னதுன்னு எட்டிப்பாத்திருக்கா. கல்யாண உடையிலிருந்த முத்து அந்த சின்ன பாத்திரத்தில விழுந்து மூழ்கிவிட்டது. சரியான நேரத்தைக் கணிக்க முடியாததனால அந்தக் கல்யாணம் நின்னு போச்சு. அப்புறம்தான் அவளை கணக்குல பெரிய நிபுணி ஆக்கி கால காலத்துக்கும் அவ பேரைச் சொல்றா மாதிரி அவ பேரையே தன் புத்தகத்துக்கு வைத்தார்.”

“அடடா! கேக்கவே கஷ்டமா இருக்கே சார்,” என்று கொஞ்சம் சந்தோஷமாக சொன்னான்.

“ஆனா இந்த கதை உண்மைதானான்னு அவகிட்ட கேக்கணும்னு நினைச்சேன். மறந்து போயிடுத்து!”

அவள் உள்ளேயிருந்து வந்தாள், அழகான ஜீன்ஸ், டீ ஷர்ட்டில். இவள் தொளாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவள் என்று சொன்னால், என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள் என நினைத்துக்கொண்டான். பெண்களுக்கு எத்தனை கால இடைவெளியில் எங்கே போனாலும் நன்றாக பொருத்தமாக அலங்காரம் பண்ணிக்கொள்ளத்தெரிவது என்பது  அவர்கள் மரபணுவில் இருக்கிறதுபோலும்.

 எங்கே போகலாம்னு யோசித்தான். ஃபீனிஃக்ஸ் மால் நல்லாதான் இருக்கும் , இவளை பிரமிக்க வைத்து அசத்தலாம், ஆனால் இந்த ஓல்ட் மெட்ராஸ் ரோட் போக்குவரத்து நெரிசல்ல அங்க போனால், வாழ்க்கை முடியறதுக்குள்ள வீடு திரும்ப முடியுமான்னு தெரியல (அதுக்கெல்லாம் ஒரு தனித்திறமை வேணும்). அப்படி எங்க வாழ்க்கை அங்க முடிஞ்சு போச்சுன்னா, இவள்  திரும்ப தன் காலத்துக்கு திரும்பிப் போக முடியாம சரித்திரத்தின் ஒரு கண்ணி முழுமையா மாறுவதால, இந்த உலக வரலாறே கலைத்துப்போட்டாற்போல மாறிடுமே ! வேண்டாம்! அவ்ளோ பெரிய ரிஸ்க் வேண்டாம்! டிட்டோ, அதே காரணங்களால மந்திரி, ஓரியன் மால் வேண்டாம். சரி ஃபேம் லிடோவோ, 1 எம்.ஜி ரோடோ போதும், அந்த காலத்தில இருந்து வந்தவளுக்கு இங்க இருக்கற எல்லாமே ஆச்சரியத்திற்குரிய விஷயம்தான். தீர்மானித்துவிட்டு அவளைப் பார்த்து “ஓகே போகலாம்” என்றான்.

அவள் சிரித்துக்கொண்டே, “ஓ போகலாமே! ரொம்ப குஷியா இருக்கு வெளியே போவதை நினைத்தால்!” என்றாள்.

 பாஸ்கின் ராபின்ஸின் ஐஸ்க்ரீமை பக்கெட் பக்கெட்டாக சாப்பிட்டாற்போல் இவனுக்கு இருந்தது.

ஓலாவில் போகும் பொழுது,பெங்களூரின் அத்தனை வண்ணங்களையும் , ஓசைகளையும்,காட்சிகளையும் தனக்குள் சேமித்துவைப்பது போல ஆசை ஆசையாகப் பார்த்தாள். எல்லாவற்றைப் பற்றியும் அவளுக்கு கேள்வி இருந்தது. திரும்பிப் போனவுடன் புத்தகம் போட்டுவிடுவாளோ என்று தோன்றியது. அது ஆபத்தல்லவா?

அவள் ஏதோ புரியாத மொழியில் பேசுவதும் , இவன் ஆங்கிலமும் தமிழுமாகப் பேசுவதும் ஓலா டிரைவரை கண்ணாடி வழியாக இவர்களைப் பார்க்க வைத்தது.

ரொம்ப ரகளையான, ஆனால் ஆனந்தமான இரண்டு  மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் வீடு திரும்பினர். வீட்டுக்குள் பல பேர் ஒரே நேரத்தில் பேசுகிற சத்தம்! ஆஹா! மாமி ஊரிலிருந்து சொந்தக்கார்களுடன் வந்துவிட்டாளோ? ப்ரொஃபஸர் நிலைமையை நினைத்தால் கவலையாக இருந்தது .

கதவைத் திறந்தால்………….. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ…… அதைச் சொல்வதற்கு பாட்டி சொல்வதுபோல் ஆயிரம் நாவுடைய ஆதிசேஷனாலும் முடியாது. அந்த சின்ன அறை முழுக்க வித விதமான வண்ணங்களில் , வித விதமான உடை அலங்காரங்களில் தலை அலங்காரங்களில்  பல மனிதர்கள்!

ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர்  இடுப்பில் பட்டு வேஷ்டியும் , நெற்றியில் நீற்றுப் பட்டையும் , கையில் ஓலைச்சுவடியுமாக இருந்தவர், சோஃபாவில் சம்மணம் கட்டி அமர்ந்திருந்தவர் வருணைப் பார்த்து  ரொம்ப சந்தோஷமாக “நீவிர்…?” என்று ஏதோ ஆரம்பிக்க, எகிப்திய பிரமிட்களில் வரைந்திருக்கும் ஓவியம் ஒன்று உயிர் பெற்று வந்தது போல ஒரு கட்டுமஸ்தான இளைஞன், வருணையும் , லீலாவதியையும் பார்த்து சீற்றத்துடன் ஏதோ சொல்வது போன்றிருந்தது. சீன யாத்ரிகர் மாதிரி தோற்றம் அளித்த ஒருவர் சிங்க், சாங்க் க்விங்க் என்று பாடல் போல ஏதோ  ப்ரொஃபஸரைக் கேட்டார்.

 உள்ளறையிலிருந்து, வந்தது யார்?……….. வருணுக்கு நெஞ்சை அடைத்து மயக்கம்  வந்தது. க்ளியோபாட்ரா அவளின் அத்தனை அழகுடன்!!! அவன் ஏன் இத்தனை நாட்கள் உயிருடன் இருந்திருக்கிறான் என்பதற்கான விடை  அவனுக்குக் கிடைத்தது.  ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் க்ளியோபாட்ராவின் புகழ் பெற்ற குளியல் பாட்டு “க்ளியோபாட்ரா லவ்லி க்வீன்” லால! லால! லல லலலா!   அவன் காதுகளில் ஒலிக்க அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான். இவளின் மூக்கு ஒரு மில்லி மீடெர் சிறிதோ, பெரிதோ, வளைந்தோ இருந்தால் உலக சரித்திரமே மாறியிருக்கும் என்பார்களே என்று அவள் முகத்தைப்பார்த்தவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான், முகம் கண்டார், முகமே கண்டார் என்பதாக. அவள் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் பொழுது வந்திருப்பாள் போலிருக்கிறது. உடலை ஒட்டிய ட்யூப் போன்ற லினென் ஆடை அபாயகரமான வளைவுகளில் தொக்கி நின்றது. உடம்போடயே வைத்து தைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் வருணுக்கு.

இவர்கள் பேசுவது ஏன் புரியவில்லை? நெஞ்சில் கை வைத்துப் பார்த்தான், அந்த உலோக பட்டனைக் காணோம். கடவுளே! ப்ரொஃபஸரைக் கேட்கும் நிலையில் அவர் இல்லை! தாடிக்கார தமிழ்க் கிழவருக்கும், எகிப்திய கட்டுமஸ்து இளைஞனுக்கும் ஏதோ பஞ்சாயத்துப் பண்ணிக்கொண்டிருந்தார்.

இவன் சார்! சார்! எனக் கூவினான்.  பலதடவைகளுக்குப் பிறகு அவர்களிடம் கை காட்டிவிட்டு இவனிடம் வந்தார்.  “என்னப்பா! இப்படி ஆயிடுத்தே” என்றார்.

இவன் “என்ன சார்? என்ன ஆச்சு?”

“நீங்க போனப்புறம் நான் கால யந்திரத்தின் தலைப் பகுதியை,  அதாவது ஹெல்மெட் போன்ற பகுதியை ரிபேர் பண்ண உக்காந்தேனா, அப்ப  சாதாரண நாற்காலில உக்காராம   இந்த கால இயந்திரத்தின் சேர் போன்ற பகுதியில் ஞாபகப் பிசகா உக்காந்திருக்கேன் போலிருக்கு. கையில் அதை வச்சு ரிபேர் பண்ணிகிட்டே குருட்டாம்போக்கில ஏதேதோ யோசனை செஞ்சுகிட்டு இருந்தேன். வீட்டை ரிபேர் பண்ணணும்னு மாமி சொல்றாளே எப்ப பண்றது, அப்படீன்னு. உடனே கட்டடக் கலைன்னு மனசு போனது! அப்படியே….  ராஜராஜ சோழன் கட்டிய பெருவுடையார் கோவில், அப்புறம் அந்த கோவிலைக் கட்டிய ஸ்தபதி பத்தி ஒரு புத்தகத்தில  படிச்சது நினைவு வந்தது, உடனே த கிரேட் பிரமிட்ஸ் ஆஃப் கீஸா தெரியுமில்லையா? எகிப்தின் நாலாவது அரச பரம்பரை அதைக் கட்டினார்கள். ஃபாரோ கூஃபூ கிட்டத்தட்ட 4500 வருஷங்களுக்கு முன்னால அதைக்கட்டினான். அதை மேற்பார்வை பார்த்த பல பேர்களில் ஒருத்தனான மெரெர் என்கிறவன் அதைப் பத்தி என்ன எழுதியிருந்தான், அவன் எழுதின குறிப்புகளை வச்சு  பிரமிட் எப்படிக் கட்டியிருப்பார்கள்ங்கிற கருத்து கிடைச்சுருக்கு இல்லையா , இப்படி பலதும் நினைச்சுகிட்டு இருக்கேன்.  இரண்டு பேரும் முன்னாடி வந்து நிக்கறாங்க!! அப்பவும் மனசு டக்னு யோசிக்கறதை விடலை. எகிப்துன்னதும்  நினைப்பு அப்படியே   2000 வருஷம் முன்னாடி போகுது. க்ளியோபாட்ரா! “age cannot wither her ,nor custom stale her infinite variety”  என்கிற ஷேக்ஸ்பியரின் வரிகள். உடனே பால்ல குளிச்சு முடிச்ச கையோட அவளும் வந்து நிக்கறா , நல்ல வேளை டிரஸ் பண்ணிண்டுதான். அப்புறம்……  “

“என்ன சார் திருப்பி அனுப்பறதுலதானே பிரச்னைன்னு சொன்னீங்க! இப்ப என்ன கொத்து கொத்தா வராங்க”

“அதாம்பா . நானும் ஒவ்வொரு சின்ன ஐ சி சிப்ஸ்லேந்து பாத்துண்டுருக்கேன்,

கொஞ்ச நேரம் ஆகும் போல இருக்கு ! நீ வேணா….”

வருண் “சார்! சுஜாதாவை வேணா கூப்பிட்டு கேட்டுப் பாருங்க! நான் அப்புறம் உங்களைப் பார்க்கிறேன்” என வாசலை நோக்கி வேக வேகமாக ஓடினான்.

அவரின் “ஆமா, நல்ல ஐடியாவா இருக்கே! ஆனா……..”என்ற  பாவமான குரலும், “வருண்! வருண்!” என்று லீலாவதி அழைக்கும் குரலும் கேட்டன.

One Reply to “லீலாவதியைத் திருப்பி அனுப்புவது எப்படி?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.