
அந்த அறை பொன்னொளியால் நிறைந்திருந்தது. கதவினைத் திறந்ததும் தப்பி வந்த ஒளி அதன் வெளிப்புற வாயிலிலேயே தங்கச் செவ்வகக் கட்டியெனத் தயங்கியது. அந்த நீண்ட நடைபாதையில் வேறெந்த அறைகளும் புலப்படவில்லை. சுவற்றோடு அதன் நுழைவாயில்கள் இருக்கலாம்; அல்லது கதவுகளற்ற வழியில் உள்புகும், வெளிவரும் நேனோ விந்தைகள் இருக்கலாம். இந்தக் கட்டிடத்தின் அமைப்பே மாறுபட்டு இருந்தது. தரையுடன் எந்த தொடர்புமில்லாது எழும்பி நிற்கிறது. வானைத் தொட முயலும் அதன் வடிவம் பரவசத்தையும், பயத்தையும் ஒருங்கே தருகிறது. தரைக்கும் கட்டிடத்தின் அடிப்பகுதிக்கும் இடையில் மின்காந்த அலைகள் இயங்கி, அதன் எடையைத் தாங்கிக் கொண்டு வெற்றிடத்தில் அதை நிறுத்தியுள்ளன. புவியின் ஈர்ப்புவிசைக்கு எதிராக செயல்படும் விதமாக கட்டிடம் போலவே வட்டத் தட்டுக்களாக மூன்று தளங்கள்; அவைகளின் வட்ட வெளி விளிம்புகளில் கவிழ்ந்த முக்கோணங்களின் வடிவிலும், நிமிர்ந்த செங்கோணங்களின் வடிவிலும் கண்ணாடிப் பதிப்புகள் காணப்பட்டன. நிலைத்த குழாயிடையே அமைத்த தட்டுக்கள் போல் தோற்றமளித்தாலும் அவற்றின் மையங்கள் இணைக்கப்பட்டு ஒத்த அமைப்பாக இருந்தது அந்த ஆய்வு நிலையம். இப்படி ஒரு அமைப்பு எப்படி சாத்தியமாயிற்று என்பதே புரியவில்லை.
ஆனால், அதற்கு ஒரு தேவை இருந்திருக்க வேண்டுமெனத் தேன்மொழி நினைத்தாள். இங்கு வருவதற்குத் தொடங்கிய பயணங்கள் ஆச்சர்யத்துடன்தான் ஆரம்பித்தன. ‘எம் ஐ’என்ற நிலையத்திற்கு வருமாறு அவளுக்குச் செய்தி வந்தது. வந்தவுடன் ஒரு கருவியை அவள் உடம்பில் பொருத்தியது ரோபோ. உடல் சற்று தடுமாறுவது போல் இருந்தது. அப்பொழுதுதான் அவள் உணர்ந்தாள் தான் பயணப்பட்டுக் கொண்டிருப்பதை. எந்தவொரு வாகனமுமில்லை. பூமியின் மேலே ஓரடி உயரத்தில் அவள் உடல் சீரான விரைவு ஓட்டத்தில் சென்று கொண்டிருந்தது. பூமியில் கால்கள் படாமல் ஒரு ஓட்டமா? ஏதேனும் கனவா இது? தன் உடல் சிறிதும் நடுக்கமற்று சீராகப் பறப்பதைப் பார்ப்பதில் அவள் மகிழ்வின் உச்சத்திற்கே சென்றாள். கனவாகவே இருந்தாலும், எத்தனை இனிமை இது என நினைக்கையிலேயே வேகம் மிதப்பட்டு, குறைந்து அவள் ‘எம் ஐ’யை அடைந்தாள். அந்தப் பகுதிக்குள் வந்ததும் அந்தக் கட்டிடதைப் பார்த்து மலைத்தவள் காணா ஒலியின் வழி காட்டுதலின் படி அந்தப் பொன்னொளி அறையை அடைந்தாள்.
பச்சை நிறக் கண்களும், பூந்துகில் போன்ற பொன் இறகுகளும் கொண்ட வண்டு ஒன்று அவள் தோளில் வந்தமர்ந்தது; அவளே பொன்மயமாவதை,யுவதியான தோற்றம் கொள்வதை அறைக்குள்ளிருந்த ஆடி காட்டியது. தன்னுடைய இந்தத் தோற்றம் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று அவள் உடனடியாக விரும்பினாள். ஆனால், மனிதர்களே இல்லையே, ஏதும் விபரீதத்தில் மாட்டிக் கொண்டுள்ளோமோ எனவும் சங்கடம் எழுந்தது. இத்தகைய மாய விளையாட்டுக்களினிடையேயும் தன் உணர்வும், உயிரிச்சையும் தன்னை விட்டு விலகவில்லை என்பதில் நிம்மதி அடைந்தாள்.
பொன்னொளி மறைந்தது, அந்த வண்டும் சென்ற இடம் தெரியவில்லை.”வெல்கம், தேன்மொழி, உங்கள் வருகை நம்மை வரலாற்றில் நிலை நிறுத்தப் போகிறது. நான் விமலன், இவர் ஜான்சன். சந்தோஷி சிறிது நேரத்தில் நம்முடன் இணைவார்.”என்று வரவேற்றவர் இளையவராக இருந்தார். கண்களில் அதிக கவர்ச்சி இருந்தது. ஷேவ் செய்த கன்னங்கள் பச்சையாக இருந்தன. ஜான்சன் சற்று வயதானவராகத் தெரிந்தார். விரிந்த நெற்றியில் அவர் அறிவின் ஆற்றல் தெரிந்தது. விமலனை விடக் குள்ளமாக இருந்தார். சந்தோஷி அப்பொழுதுதான் அறையினுள் நுழைந்தார். கூர்மையான கண்களும், நாசியும், சிவந்த கன்னங்களும், உதடுகளும், நீள் கழுத்தும், சிறிய மார்பகங்களும், வளையும் இடையும், உறுதியான கால்களும் கொண்டு அப்பழுக்கற்ற படைப்பாகத் தெரிந்தார். இவர் மட்டும் நடிக்க வந்தால் எல்லோர் வாய்ப்புக்களும் பறிபோய்விடும் எனத் தேன்மொழி நினைத்தாள். கைகளைப் பற்றிக் குலுக்கும் போது விமலன், ஜான்சன் இருவருமே மனிதர்கள் என்று உணர்ந்தாள். ஆனால், சந்தோஷி அப்படியில்லை என்பது மட்டும் புரிந்தது. சந்தோஷி செயற்கை உயிரி, மிகுந்த செயலாற்றல் மிக்கவள் என அவர்கள் சொன்னார்கள்.
அவர்களின் அறையில் நான்கு பரிமாணங்களில் ஜீன்களின் நகல் படங்கள் சுற்றி வந்தன. தேன்மொழி ஏறிட்டுப் பார்த்தாள். சந்தோஷிதான் இவளின் மரபணுக்களை வகைப்படுத்தி அதன் உள்ளீட்டு விவரங்களை ‘ஸீகொன்ஸ்’ செய்து கொண்டிருந்தாள். தனக்கே தெரியாமல் தான் பரிசோதிக்கப்படுவதை விமலன் சொன்னவுடன் தான் அவள் புரிந்து கொண்டாள்; அவன் கண்களின் கவர்ச்சியும், சிரிப்பும் அவளுக்கு நம்பிக்கை அளித்தது. ஜான்சன் தொடர்ந்து அவள் டி என் ஏ. வின் வால் போன்ற பகுதிகளின் நீளத்தை அளப்பது போலிருந்தது. சந்தோஷியை மிதமாகச் செல்லுமாறும், விரைவாகச் செல்லுமாறும், குறிப்பிட்ட இடத்தில் நிற்குமாறும், ரிவர்ஸ்ஸில் காட்டுமாறும் அவர் ஆணைகள் சொல்லிக் கொண்டேயிருந்தார். தான் எதற்கு இவர்களிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கினோம், இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், தான் செலுத்திய முன்பணத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டுமே என்று செயல்படுகிறார்களா, இரையைத் தக்க வைத்துக் கொள்ளும் விலங்கின் தன்மையா, தான் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எலியா, இவர்கள், அரசின் முழு அனுமதி பெறாத ஆய்வாளர்கள் என்றும், ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதென்றும் இவர்களே தங்கள் வலைத் தளத்தில் சொன்னதை நேர்மையென நம்பி வந்தது முட்டாள்தனமோ என்றே அவள் நினைத்தாள்.
ஜான்சன் விரலசைக்க சந்தோஷி வண்டென உருமாறினாள், அறை பொன்னொளியால் நிறைந்தது. அவள் வெளியேறியவுடன் மீண்டும் இயல்பான வெளிச்சத்திற்கு வந்தது. விமலன் மூவருக்கும் காஃபி வரவழைத்தான்.
“சொல்லுங்கள்,” என்றான் அமைதியாக.
‘என்ன சொல்ல வேண்டும்?’
“உங்களுக்கு என்ன தேவையோ அதைப் பற்றிச் சொல்லுங்கள்.”
‘நான் யார் என உங்களுக்குத் தெரியும் தானே?’
“உலக சினிமாவில் தமிழ் நாட்டின் ஒரே தாரகை. அறிவும், அழகுமான கலவை.”
‘அது உண்மை. ஆனால், என் இளமை விடை பெறப் பார்க்கிறது. என் வீழ்ச்சியை நான் தாங்க மாட்டேன். அதற்காகத்தான் உங்களைத் தேடி வந்தேன். ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று புரியவில்லை.’
“சொல்கிறேன். நீங்கள் உள்ளே வருகையில் பொன் வண்ணத்தில் இளமையாக ஜொலித்தீர்களே, உங்களுக்குப் பிடித்திருந்ததா?”
‘அது தோற்ற மயக்கம் தானே? ஆனாலும் என்ன ஒரு விந்தை!’
“அது சாத்தியம், தேன். நீங்கள் பார்த்தீர்களே சந்தோஷி, அவளை வைத்து நாங்கள் செய்த சோதனை வெற்றி.”
‘அவள் மனிதரில்லையே! ’
“ஆமாம், ஆனால் பல உயிரிகளின் அடக்கம். மீன் முதல் முதலை வரை, காகம் முதல் யானை வரை, அறிவாளி முதல் அறிவற்றவர் வரை, பெண் முதல் ஆண் வரை.”
‘என்ன சொல்கிறீர்கள்? தலை சுற்றுகிறது. எனக்குத் தண்ணீர் வேண்டும்.’
“ரிலாக்ஸ், ப்ளீஸ். அத்தனையும் ஜெனடிக் வரைவாக மட்டுமே அவளிடம் இருக்கின்றன. அதில் எலியின் டி என் ஏ.வை தொகுத்தெடுத்து உயிருள்ள எலியில் சில முக்கியமான எடிடிங் செய்து உட்செலுத்தினோம். இந்த உயிர்ச்சுருள் நூறு சதவீதம் அப்படியே செயல்பட்டது. இவ்வளவு பர்ஃபெக்ட்டான மைஸ், நம் தொடர்ந்த ஆய்வுகளுக்குத் தேவையென ஜான்சன் சொன்னார். அதன் ஆயுளையும்,இளமையையும் நீட்டிக்க வழி தேட ஆரம்பித்தோம்.”
இப்பொழுது ஜான்சன் பேசத்தொடங்கினார்.
“தேன்மொழி, முதுமையின் காரணங்களைக் கண்டறிந்தால், அதைத் தவிர்த்துவிடலாமல்லவா? தவிர்ப்பதில் வெற்றி வந்தால், இளமை மட்டுமல்ல, வாழ்வும் நிரந்தரமல்லவா?”
‘நீங்கள் சொல்வது நோயற்ற உடல், முதுமையற்ற வாழ்வா?’
“அதேதான்”
‘விபத்துக்கள் நடந்தால்?’
“நாங்கள் மரணமில்லை எனச் சொல்லவில்லை.”
‘தெளிவாகக் குழப்புகிறீர்கள்.’
அவர்கள் சிரித்தார்கள்.
“தேன், விபத்து, மரணம் எல்லாம் பொதுவில் நடக்கும் நிகழ்வுகள். எங்களால் முதுமை தடுக்கப்பட்ட மனிதருக்கும் அவை நிகழலாம். ஆனாலும், விபத்துக்கள் ஏற்படவில்லையென்றால்,எங்கள் மனிதர் இளமையோடு யயாதியைப் போல் பல காலம் வாழலாம். விரும்பும்போது பீஷ்மரைப் போல் மரணத்தை அழைத்துக் கொள்ளலாம்.”
‘குட் ஹெவன்ஸ்; அத்தகைய மனிதர்கள் சந்தோஷியைப் போல் இயந்திர உயிர்களாக, பல உயிரிகளாக, வண்டின் உரு மாற்றி வாழ வேண்டி வருமே?’
“இல்லை, அது அப்படியில்லை. பல ஜீன்களை ஏற்றி அவற்றிற்குத் தனித்தனியே இயங்கும் இடமமைத்து செயற்கை உயிரியின் செயல்பாடுகளைக் கவனிப்பது போல் மனிதனிடம் செய்ய முடியாது; ஏனெனில் அவன் மனிதனாகவும் இருக்கும் தேவை இருக்கிறது, மனிதனாக வாழும் இன்பம் இருக்கிறது .”
‘பின் அவள் ஏன் வண்டானாள்?’
“இவ்வகை வண்டுகளின் கண்கள் கேமராக்களை விட நுண்மையானவை. அதன் இறகுகள் தோறும் சிலச் சில நேனோ குழாய்களில் பல் உயிர்களின் வரைவுக் குறிப்பு அடங்கிவிடும். அவள் உரோமங்கள் ஒளிக்கலவைகளாலானது. முக்கியமான ஒன்று, இந்த இடத்தில் நாங்கள் செய்து வரும் ஆய்விற்கு அரசின் மறைமுக ஆதரவு தான் உண்டு. எனவே, யார் மூலமும், எதன் மூலமும் நாங்கள் ஆபத்தினை ஊகித்தால் உடனே கிளம்ப இதுதான் வசதி.”
தேன்மொழிக்கு தனக்கு உச்சப் பித்த நிலை என்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் இங்கு வந்தது அவள் அழகின் இரகசியம் ஊருக்குக் கசிந்து விடக் கூடாதென்று. ஆனாலும், குற்றங்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
‘என்னிடம் நிறையக் கேள்விகள் இருக்கின்றன.’
“பதில் சொல்லும் கடமை எங்களுக்கு இருக்கிறது.”
‘முதலில் இந்தக் கட்டிடத்தின் அமைப்பு; அந்தரத்தில் தொங்குவது போல் ஏன் செய்துள்ளீர்கள்?’
“புவியின் பிற அதிர்வுகள் எங்கள் கணக்கீடுகளின் முடிவை 0.000000001 சதவீதம் பாதிக்கும் என்பதால்.”
‘நான் எதற்காகப் பறந்து வந்தேன்? என்னை அப்படி இயக்கத் தேவையென்ன?’
“குட் கொஸ்ச்சின். உங்கள் குடிமகள் எண்ணிலிருந்து உங்களைப் பற்றிய அத்தனை தரவுகளையும் நாங்கள் பெற்றுவிட்டோம். உங்கள் டி என் ஏ முதல் உங்கள் மேல் தோள் மச்சம் வரை. இங்கே சில சோதனைகளுக்கு புவி ஈர்ப்பு விசையை சில மணித்துளிகள் எதிர் நிற்கும் ஆற்றல் தேவை. அது உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிவதற்கும், அதற்கும் மேலாக எங்கள் வழிமுறையில் உங்களுக்கு வியப்பும், அணுக்கமும் ஏற்படவேண்டுமென்பதற்காகவும் சற்று பறக்கச் செய்தோம். சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று முன்னரே சொல்லவில்லை.”
‘உங்கள் ட்ரீட்மென்ட் முடிந்த பிறகும் பறக்க வேண்டி வருமா?’
“நிச்சயமாக இல்லை.”
‘உங்கள் பரிசோதனைகளின் சக்ஸஸ் ரேட் என்ன?’
“மவுஸில் 90 சதவீதம். மேல்தளத்தில் ஒரு வயதானவரிடம் இம்முயற்சியில் பாதி வரை வந்திருக்கிறோம்; அவர் 40% இதுவரை தேறியுள்ளார். மீதமும் முடிந்தால் நிச்சயமாக 80% வெற்றி கிட்டும். நடுத் தளம் எங்கள் ஆய்வுப் பகுதி. அங்கே நானும், விமலனும் மட்டும் தான் செல்ல முடியும்.”
‘நான் ப்ரொஸீஜரை அறிந்து கொள்ள வேண்டுமே?’
“சொல்கிறோம், ஆனால் செலவுகளைப் பற்றிப் பேசவேண்டும் முதலில். கிட்டத்தட்ட ஆறு கோடியாகும். உங்கள் ஒரு படத்தின் சம்பளத்தில் பாதி இது.”
‘அதைக்கூட அறிந்துள்ளீர்களா?’
“பின்னே? எங்கள் நேரமும், செயல்முறையும் விலை உயர்ந்ததாயிற்றே. சரி, நீங்கள் அடுத்த அறையில் இன்று ஓய்வெடுக்கலாம். நாளை சந்திக்கலாம். இந்த ஃபைலில் நீங்கள் கேட்ட அனைத்திற்கும் விடைகள் இருக்கின்றன. நிதானமாக படித்துப் பாருங்கள்.”
தேன்மொழிக்கு இரு படங்களுக்கிடையேயான நான்கு மாத விடுமுறை. தன் சொந்தத் தீவிற்கு வரச் சொல்லி இம்சை செய்த அனிலை அவள் தவிர்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறாள். உயிர் அபாயம் 10% என்று ஃஃபைல் சொல்கிறது. அவளிடம் மிதமிஞ்சிய பணமிருக்கிறது. ஆஸ்கார் வாங்கும் இலட்சியம் இருக்கிறது. இளமை போனால் எல்லாமும் போய்விடும்; ஏதோ ப்ளாஸ்டிக் சர்ஜரி போலிருக்கும் என்று நினைத்து வந்தால் இவர்கள் ஜீவ அணுக்களில் கை வைக்கிறார்கள்.
‘இறப்பின் இறப்பு’என்று கவிதைத்தனமாக கோப்பிற்கு பெயர். நேனோ தொழில்நுட்பத்தின் பெரும் முன்னோக்கிய பாய்ச்சல் இது. ஜெனடிக் மானிபுலேஷன், ரீ கோடிங், எடிட்டிங், ஸ்டெம் செல்களைக் கொண்டு இறந்த செல்களைக் களையும் வழிகள், சிதிலமடைந்தவற்றை மாற்றும் நடவடிக்கைகள் என விரியும் கட்டுரை ஒரு இடத்தில் திகைக்க வைத்தது.’டீலோமியெர் ’என்ற டி என் ஏ வின் வால்களின் நீளம் குறைகையில் இளமை விடைபெறுகிறது; இவர்கள் வால்களின் நீளத்தை அதிகரித்து இளமையைக் கொண்டுவருகிறார்கள், வாழும் காலத்தை நீட்டிக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு இதன் முழுப்பலனும் கிட்டும் என்றும் சொல்கிறார்கள்.
இளமை, அழகு, புகழ், செல்வம், மரணத்தை வெல்லும் மானுடத்தின் சவால் தரப் போகும் பரிசுகள் இவை அல்லவா? கான்ட்ராக்ட்டில் கையொப்பம் இட்ட பிறகு கேட்டாள், அனைவரின் வாழ் நாளும் இப்படி நீடித்தால், பூமியில் இடம் இருக்குமா என்று. அவர்கள் ஃபால்கன் அமைத்துள்ள விண்ணக வீடுகளைக் காண்பித்தார்கள்.