- பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
- ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை
- அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
- ஒற்றன் – அசோகமித்திரன்
- நிறமாலை
- ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
- லஜ்ஜா: அவமானம்
- துருவன் மகன்
- கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை
- பாகீரதியின் மதியம் – விமர்சனம்
- புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி
- களியோடை
- தத்வமஸி: புத்தக அறிமுகம்
- பாமாவின் கருக்கு
- பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
- கண்ணனை அழைத்தல்
- பாரதியின் இறுதிக்காலம்
- குவெம்புவின் படைப்புலகம்
- தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்
- “இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
- புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
- இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
- ஆகாரசமிதை
- உயர்ந்த உள்ளம்
- எல்லைகள் அற்ற வெளி
- மிருத்யுஞ்சய்
- ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
- தப்பித்தல் நிமித்தம்
- ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
- ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை
- சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி
- பசு, பால், பெண்
- தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
- வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
- திருவரங்கன் உலா
- ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’
- அஃகம் சுருக்கேல்
- அறுபடலின் துயரம் – பூக்குழி
- ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
- தீப்பொறியின் கனவு
- புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
- மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்
- தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
- இரா. முருகனின் நளபாகம்
- பின்கட்டு
- யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
- நீர்ப்பறவைகளின் தியானம்
- ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
படைப்பிலக்கியத்தில் கவிதைக்குத் தனிச் சிறப்புண்டு. புனைகதை, நாடகம், கட்டுரை இவற்றுக்குக் கிடைக்காதச் சிறப்பு அது. சிற்பக்கலை, ஒவியக்கலை வரிசையில் மொழிக்கலை என்ற சொல்லாடலைச் சேர்த்தால் அதன்பொருண்மையே கவிதை. கவிதைக்குள் கொண்டுவரும் சொற்கள் கூடுதல் கவனத்திற்குரியவை : ஒழுங்கு, இணக்கம், துல்லியம், நுட்பம்,அடர்த்தி, ஆழம் முதலான குணங்களை வேண்டுவன. இவற்றோடு, முடிவுறா காட்சிகள், பல்வேறு உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்றிருக்கும் கவிதைகள் மானுட த்தின் அகவாழ்வு புற்றுக்குள் புகுந்து வெளிப்படுபவை. அதிலும் தமிழ்க் கவிதைக்கு நீண்ட பாரம்பர்யமுண்டு. இன்றைக்கு உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் மொழிகள் சொற்களற்ற ஓசையாக, மூங்கைகளின் மொழியாக கைகால்களை உதறிக்கொண்டிருந்தபோது முழுமை பெற்ற மனிதனின் அக புற வாழ்க்கையை சொல்லோவியமாக தீட்டி, வீதியில் உலாவந்த பெருமைக்குரிய மரபு தமிழிலக்கிய மரபு. இதனோடு, உலகில் பெண்கவிஞர்கள் பாரம்பரியத்தை, தமிழளவிற்கு வேறுமொழிகள் பெற்றதில்லை என்ற பெருமையையும் சேர்த்துக்கொள்ளலாம்.
‘இறை’யென வைக்கப்பட்டவர்களை பாடி அலுத்த கவிதையுகம் ஒன்றுண்டு. இன்றைக்குத் தன்னை, சகமனிதனை, தான் சார்ந்த சமூகத்தைப் பாடும் காலம். ப. கல்பனாவின் குரல் அதில் ஒன்று என்றாலும் அவற்றில் ஒன்றல்ல. நூலாசிரியரைப்போல தமிழ்க்கவிதையையும் இன்றைக்கு வாழ்ந்துசரிந்த குடும்பத்தின் வாரிசு என்கிறபோதும் கல்பனா போன்றவர்கள் இழந்தபெருமையை மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேவேளை ஒரு படைப்பின் தராதரத்தை சமயம், சாதி, பாலினம், வர்க்கமென்ற இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அணுகுவது நியாயமா என்ற கேள்வி எழுகிறது. நெசவாளியைவிட நெசவுப்பொருளின் நேர்த்தியும், மிருதுவும், இசைவான இழைசேர்க்கையும், உறுத்தாத வண்ணத்தேர்வும், முக்கியம், இவற்றைத் தெரிவுசெய்த நெசவாளியின் பூர்வீகம் காஞ்சிபுரமா, ஆரணியா என்ற கேள்வி அடுத்தது தான், எனக்கு இந்த வரிசைதான் நியாயம்.
படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைந்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது. பாக்குமர மிளகுபோல , அகத்திச் செடி வெத்திலைபோல பிறர் சார்ந்து வாழினும் அவற்றைப்போலவே தங்கள் தனித்தன்மையை அமைதியாக உறுதிசெய்யும் இனம், பெண்ணினம்.
ப. கல்பனாவின் கவிதைகளும் தமது தனித்தன்மைய வலியுறுத்த தவறுவதில்லை. இவர் தாயைத் தொலைத்த குழந்தையா, குழந்தையைத் தொலைத்த தாயா ? கவிதைத் தொகுப்பை வாசித்தபோது என்னுள்அரும்பிய கேள்வி. நெஞ்சம், ஆன்மா, உணர்வு என்ற முக்கூடலில் முங்கி முத்துக்களை எடுத்திருக்கிறார், தவறுதலாக சில நேரங்களில் முத்தற்ற சிப்பியுடன் வரினும், பரவாயில்லையென தேற்றிக்கொள்கிறோம்.
பெண்ணியக் கவிதையென சாவல் விடாமல், தோழமையுடன் பெண்ணினத்தின் வலிகளை நினைவூட்டுகிறார், சமகால வாழ்க்கையில் தன் இனம் சந்திக்கும் அவதிகளை எழுதுகிறார். நீங்களும் நானும் நித்தம் நித்தம் பேசவும் கேட்கவும் செய்த சொற்களைக்கொண்டு நேர்த்தியாக கவிதைப் படைத்திருக்கிறார். கண்டேன் எழுதுகிறேன், கேட்டேன் படைக்கிறேன் என்பதைக்காட்டிலும் கண்டதும் கேட்டதும் எத்தகைய அனுபவத்தை தந்தன என்பது கவிதை. உணர்வுகளை மொழிப்படுத்தும் கவிதைக்கான அழகியலில் தோய்ந்து நவீன தமிழை நன்றாக உள்வாங்கி எழுதியிருக்கிறார். சுவைத்து மகிழ எண்ணற்ற வரிகள் :

« விரல் படிந்த வண்ணத் துகள்கள்
அதன் ஆன்ம உதிர்வு » (பறத்தல் அதன் சுதந்திரம்)
« என் கண்ணீரை
அன்று எல்லோரும் உண்டனர். » ( நான் ஒன்றும் ஆடு இல்லை )
« தளிராய் வரமுயன்றும்
கிளகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது
உள்ளிருக்கும் பசுமை » (கரங்கள் இல்லாத வீனஸ் )
« இனிப்போ பொம்மையோ
தூங்க வைக்கவில்லை என்மகளை
இந்த வருடல்தான் » (உவர்க்களம்)
« கொடுக்காமல் எடுத்துவந்த
அந்தக் கடிகாரத்தை நினைக்கயில்
இப்போது உணர்கிறேன்
தோளில் பதிந்த ஸ்பரிசத்தை. » (ஸ்பரிசம்)
போன்ற வரிகளைப் படிக்கிறபோது, குளத்தில் இறங்கிய சிறுவன் கரையேற விருப்பமற்று, நீச்சலடித்து மகிழ்வதுபோன்ற கிளர்ச்சியில் திளைக்கிறோம்.
பெண்குரல் : பிறப்பால் பெண் என்பதால் பெண்சார்ந்த வலிகளை, கோபத்துடனும், அமைதியாகவும், வருத்தம் தோய்ந்த மொழியில் அவரால் எழுத முடிந்திருக்கிறது. காளியாய் நின்று பலி கேட்பதில்லை, மாரியாய் அமர்ந்து கூழ் கேட்கும் குரல். கல்பனாவின் மொழியில் சொல்வதானால் : « கூடை நிறைய சொற்களுடனும் புன்னகைகளுடனும் ஆவல்களுடனும் மலர்ந்து வரும் இதயம், சூழலைச் சபித்து ஒடுங்கிப் புதையும்தனிமைகளில் வலிக்கும் » குரல்.
« ஒவ்வொரு நேரங்கழித்து வரும் மாலையிலும்
அபத்தமில்லையா, பெண்ணாக இருப்பது ? »
என்கிற இரண்டுவரிகள்போதும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இந்தியப்பெண்களில் பெரும்பான்மையோர் என்ன நிலமையில் உள்ளார்கள் என்பதை விவரிக்க, சொரணயுள்ள நம் சமூகம் புரிந்துகொள்ள.

« குனிந்திருந்த தில்
மாவுடன் கலந்த து
எனது உப்பு நீரும் » (நான் ஒன்றும் ஆடு இல்லை)
« இலைகளின்றி
உதிர்ந்து கிடக்கும் என்னை எண்ணி
நானே நோகிறேன். » (கரங்கள் இல்லாத வீனஸ்)
என சராசரிப்பெண்ணாக ஆற்றாமையில் குமுறினாலும்
« உணர்வோ
சைகையோ
வார்த்தையோ
உறுத்தாத
தான் தோன்றி எருமைகள் » (எருமைகள்)
« எந்தக் கவலையுமற்றுத்
துண்டை உதறித் தோளில்போட்டுப்
போனது போனதுதானே…. » (பகல் தூக்கத்தின் முடிவில்)
« நெற்றி சுருங்கி
பாதங்கள் ஒலி எழுப்ப
பறந்துவந்தன
அறிவுரையும் ஆத்திரமும்
முகத்தில் இரண்டு சாணி உருண்டைகளை
விட்டெறியலாம் போலிருந்த து
ஆனால்
சப்பாத்திமாவு பிசைந்து கொண்டிருந்தேன். » (நான் ஒன்றும் ஆடு இல்லை)
என இயல்பாக கோபத்தை வெளிப்படுத்துகின்றபோதும், கச்சிதமாக சொற்களைத் தேர்வுசெய்து கொப்பளிக்கும் உணர்ச்சியைக் மொழியாக்க கவிஞருக்கு முடிகிறது.
இப்பாராட்டு அவருடைய படைப்பு பொருளுக்காக என்று வைத்துக்கொண்டால், அதைச் சொல்கிற பாணிக்காக, இலக்கிய நயத்திற்காக, அதன் பெறுமானத்திற்காகவும் கவிஞரை நேசிக்கிறோம்.இத்தைகைய நலன்களெல்லாம் நிறைகுட நீராக இருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. சமூக க் கூண்டில் அடைக்கபட்ட மனிதக் கிளிகளுக்குச் சுதந்திரத்தை வேண்டும் பாங்கும் கவனத்திற்கொள்ள தக்கவை.
« …..மூடித் திறந்து
மூடும் கைகளில் கர்வமாய்
என்ன வண்ணம் என்ன வேகம்
நசுக்கி விடுவாளோ
பதப்படுத்தி
குண்டூசி செருகிப் பாதுகாப்பாளோ
பூவருகே விடுவாளோ…
தூசிக்கால்களை ஆட்டிப் பார்த்த து
பரிதாபமாய்
விரல் படிந்த வண்ணத்துகள்
அதன் ஆன்ம உதிர்வு
சிறகை
அசைத்துப் பார்த்த து
பறத்தலுக்கான
கடைசிமுயற்சியாய்
விட்டுவிட்டேன்
அதன் பூவர்கே. » (பறத்தல் அதன் சுதந்திரம்)
பட்டாம்பூச்சியின் ஊடாக சுதந்திரத்தை வற்பூருத்தும் இப்படிமக் கவிதைக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒரு போராளியின் சுதந்திர வேட்கையினும் பார்க்க, கவிஞர்களின் சுதந்திரப் பிரேமை மென்மையானது. அதைச் சொல்ல கவிஞர் பட்டாம் பூச்சியைத் தேர்வு செய்த தும் தற்செயல் அல்ல. இதுபோல நுரையீரல் மணல், வேப்பமரம், கிளிக்கதை, அரும்புகள், கீறல் விழுந்த மாலைக்காலங்கள், என் அறை என் தலையணை, மேய்ச்சல், பார்வையிலிருந்து சொல்லுக்கு என ஒவ்வொரு கவிதையும் இலக்கிய நயத்திற்காகவும், படைப்பு பொருளுக்காகவும் அவற்றின் பெறுமானத்திற்காகவும் , பன்முக உணர்வுகளையும் விளங்கிக்கொள்ள வாசிக்கப்படவேண்டியவை.
இக்கவிதை நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியை பத்மாவதி கண்ணம்மா :
« ……..இக்கவிதையில் மட்டுமல்ல, எல்லா கவிதைகளிலுமே வாழ்வின் நுட்பமான உணர்வுகளை இவரால் சரியாக இன ங் கண்டுகொள்ளமுடிகிறது. கண்டுகொண்ட தை வார்த்தை அலங்காரமாகவோ, கோஷமாகவோ எழுதாமல் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்த்தைகளைக்கொண்டே கவிதையாக்கியிருக்கிறார். » – என்கிறார்.
பேராசிரியர் பாரதிபுத்திரனோ :
« …….இவரது படைப்புத் திறன் பொதுவாக நிறைவாகவே இருக்கிறது. கவிதக்கான விசேஷமான சொற்களைக் தேடிச்செல்லாமையும் வாசகருடன் நேரடியாகப் பேசும் குரலும், கருத்தைவிட மனவுணர்வுகளுக்கே முதன்மை தருவதும் , ஆரவாரமற்ற ஆழ்ந்தவெளிபாட்டில் கவனம் குவிப்பதும், பழகு தமிழ்ச் சொற்களாலான நடையும், இன்றைய தன்மையில் இருப்பதும் இவரின் பலங்கள். » , என்கிறார். இவற்றுக்குமேல் நாம் என்ன சொல்ல இருக்கிறது. புதுகவிதைகளில் இன்று அதிகம் நாம் காணாத உவமைத் தொகை உருவகங்கள், படிமங்களெல்லாம் விரலிடுக்கில் வைத்திருப்பதுபோலகவிதையில்கலந்து மொழிக்கு அழகு சேர்த்திருக்கின்றன.
சிலர் ஏன் எழுதுகிறார்கள் எனக் கேட்கத் தோன்றும். ப. கல்பனா ஏன் அதிகம் எழுதவில்லை எனக்கேட்கத் தோன்றுகிறது. 1998ல் இக்கவிதைத் தொகுப்பு வந்துள்ளது. இன்றைய தேதியில் இவர் கூடுதலாக எழுதியிருக்கவேண்டும். இவரைப் போன்ற பிறவிக் கவிஞர்கள் தொடர்ந்து இயங்கவேண்டும் என்பதே நம் விருப்பம். இவர் தம் கவிதையொன்றில் « எப்படி, என் கரங்களையும் விழிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை. » என அங்கலாய்க்கிறார். அதற்கான காரணத்தை கவிஞர் கண்டறிந்து நிறைய எழுதுவார் என எதிர்பாக்கிறோம்.
பார்வையிலிருந்து சொல்லுக்கு – கவிதைத்தொகுப்பு
ஆசிரியர் : ப. கல்பனா
பரிசல் வெளியீடு,
திருவல்லிக்கேணி, சென்னை 600005
———————————————————————————–