சிறுகதை: மைதானத்துமரங்கள்
ஆசிரியர்: கந்தர்வன்
பொங்கலுக்கு அடுக்கும்போது மட்டும் என்னால் எடுக்கப்படும் புத்தகங்களில் மனதிற்கு இனியவை, என் மேல்நிலை வகுப்புகளின் ‘சிறுகதை செல்வங்கள்’ என்று பெயரிடப்பட்ட இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்.
அந்தக்கதைகளை எத்தனையோ முறைகள் வாசித்தாயிற்று என்றாலும் அந்தப்புத்தகங்களை யாரிடமும் கொடுக்க மனம் துணிவதில்லை. அட்டையில் தாமரை போன்ற மலர் வரைந்த அந்தப்புத்தகங்கள், பள்ளி துவங்கிய முதல்வாரத்தில் தலைமையாசிரியரால் கொடுக்கப்படும் பொழுதே கதைப்புத்தகம் என்று தனித்த மகிழ்ச்சியை தந்தவை. அன்று அவை எனக்கு என் முன்னோடிகளின் முதல்அறிமுகம் என்ற புரிதலின்றி, விடுதியின் வேம்புகளில் ஒன்றின் அடிமரத்தில் ஆனமட்டும் சாய்ந்தபடி புத்தகங்களுக்கு அட்டை போட்ட பிறகான நேரத்தில், நம்மால் ஆசிரியரின்றி வாசிக்கமுடியும் என்று கையிலெடுக்கப்பட்ட புத்தகங்கள் அவை.
புதுமைப்பித்தன், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன், கு. அழகிரிசாமி, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நீல. பத்மநாபன், சுஜாதா, தோப்பில் முஹம்மது மீரான், வண்ணதாசன், வண்ணநிலவன் என்று இன்று அன்றாடம் நினைக்கும் பெயர்களை அன்று கவனித்ததே இல்லை. கதையின் தலைப்புக்கூட அடுத்தது தான். நேராகக் கதை. அப்படி வாசித்த கதைகளில் ஏனென்ற காரணம் தெரியாது, இன்று வாசிக்கும் வரை இனிய ஏக்கநினைவாக எஞ்சும் கதை ‘மைதானத்து மரங்கள்’. பின்னாளில் நூலகத்தில் புத்தகங்கள் தேடுகையில் இவர்களின் புத்தகங்களுக்கு முகவரிகளாக இருந்தவை அந்தக் கதைகள்.

என் பதின்வயது வாசிப்பில் ‘மைதானத்து மரங்கள்’ மிக முக்கியமான கதை. இவன் வீட்டைவிட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம் என்று முக்கியக் கதாபாத்திரத்தின் தொடக்கப்பள்ளி நாட்களில் தொடங்கும் இந்தக்கதை அவனின் நடுவயதில் முடிகிறது. அவன் வீட்டின் அடையாளமாக இருக்கிறது அந்த மைதானம். மைதானத்து ஓரத்து வீடு.
இந்தக் கதையில் மைதானத்துமரங்களின் கடைசிஓரத்து மரத்தின் விவரிப்பு… இன்றைய வாசிப்பில் கந்தர்வனின் அரசியல் நிலைப்பாட்டை கொண்டுவந்து நிறுத்துகிறது என் மனம். ஆனால் அவரைப்பற்றி எதுவுமே தெரியாத அன்று, அது அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த இடம் என்று மட்டும் தோன்றிய சிறுபிள்ளைத்தனமான வாசிப்பு காலத்தால், வயதால் நிகழ்வது. பதின்வயதில் உலகத்தைப் பார்த்தல், புரிந்து கொள்ளுதல் என்பதும், அந்த வயதின் மனநிலைகளை கொஞ்சம் நம்முள் காப்பாற்றி வைத்தபடி வாழ்வைப்பார்ப்பது என்பது, சுவையானது அல்லது அழகானது என்பது என் வாழ்பனுபவம்.
என்வரையில் கல்லூரிக் காலத்தில் கூட மேல்நிலைப்பள்ளி நாட்களையே கொண்டாட்டம் என்று பேசித்திரிந்தவர்கள்தான் அதிகம். அது ஏன் அப்படி? என்ற கேள்விக்குப் பதில் அந்த வயது என்பது மட்டுமே. நான் எப்போதும் சொல்வது போல உடலை, சிந்தனையை, வாழ்வை, இருப்பை, இயற்கையை, மனிதரை, வானத்தை, மரத்தை என்று அனைத்தையும் எந்தக்காரணமும் இன்றி மகிழ்வோடும் துயரோடும் அணுகச்செய்யும் பதின்மை காரணமான ஹார்மோன்கள்.
ஏதோ இனம் தெரியாத ஒன்று என்று சொல்வதில் இருக்கும் சுவை, அந்த ஏதோ ஒன்று என்பது…. நம் சூழலுக்கு, மனநிலைக்கு நம் உடல்புரியும் எதிர்வினை என்று உணர்ந்து புன்னகைக்கவோ, கண்ணீர் சிந்தவோ செய்தால் என்ன?
அந்த வயதில் வாசிக்க நேர்ந்த இவர்களின் கதைகள் ஆழத்தில் இன்றும் சுவையாக ஒரு வெதுவெதுப்பான நீர்ச் சுனை போல மனத்தின் பள்ளத்தில் தேங்கித் தித்திக்கின்றன.
வாழ்க்கைக்கு துணையாக ஒருமரம் போதும் என்று அடிக்கடித் தோன்றும். முதுகை சாய்த்துக்கொள்ள, அப்படியே கால்நீட்டி கிட்டத்தட்ட படுத்துக்கொள்ள, இலைகளின் சலசலப்புச் சத்தத்தில் அப்படியே உறங்கிப்போக, வெயிலில் நடக்கையில் பின்புறமிருந்து தலைக்கு மேல் விரியும் அம்மாச்சியின் முந்தானையைப்போல நிழல் கவிய நின்றிருக்கும் ஒற்றை மரம் போதும் என்ற ஆசுவாசத்தை, ஒருவரை இன்னொருவரில் கண்டுகொள்ள, பதின்வயதின் புரிந்து கொள்ளமுடியாத பாழ்தனிமையில் விடுதிவாழ்வில் இத்தகைய வெளிச்சத்தை இலக்கியமன்றி எனக்கு எதுவும் தந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்படியே அடித்துக் காலுன்றித் தனித்து நிற்கும் சக்தி கொண்ட திடம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இலக்கியமோ அதன் மூலம் ஒரு மரமோ தேவையாக இருப்பது ஒன்றும் பலமற்றதன்மை என்பதில்லை. அது ஒரு நிலை அவ்வளவே.
கதையில் முக்கியக் கதாபாத்திரம் வாழ்வின் முதல் அவமானத்தின் பொழுதில், அவன் தந்தை தாயை அணுகமுடியாத மதியநேரத்தில் மரத்தடியில் சாய்ந்தமர்கிறான். மைதானத்திலேயே ஆடிக்களித்திருந்த சிறுவன் அவ்வப்போது மரப்பாதங்களில் சரணடைகிறான். அந்தஇடத்தில் ‘மரப்பாதங்கள்’என்ற சொல் அடையும் உச்சம் அவரவர் மனங்களுக்குரியது.
கந்தர்வன் மைதானத்து மரங்களை விவரிக்கும் விவரிப்பிலேயே அந்த ஊரின் வயசாளிகள், வெள்ளைச் சட்டைக்காரர்கள், இரண்டு தலைமுறை இளைஞர்களின் வாழ்வு பற்றியும், அவர்களின் மனநிலைகள் பற்றியும், மைதானத்து நடுவே ஆடிக்களிக்கும் சிறுவர்கள் பற்றியும் எழுதி ஊரின் மொத்த ஆண்கள் பற்றிய புறவடிவைத் தருகிறார். குடும்ப அமைப்பில் எந்த அதிகாரமும் இல்லாத அம்மா, மனைவி என்று இரண்டு பெண்கள் அந்த ஊரின் பெண்களின் பிரதிநிதிகளாக வருகிறார்கள்.
இதில் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் கதையின் நடுவில் வருகிறது. அவன் பள்ளிக்கு பணம் செலுத்தாதற்காக வகுப்பில் “முத்து முத்து…”என்று அழைக்கப்படுகிறான். இரண்டு இடங்களில் மனிதனின் பெயர் மிகமுக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று புகழில், இன்னொன்று அவனின் அவமானத்தில். அந்த இடத்தில் அவன் பெயர் சொல்லி அழைக்கப்படுகையில், பதின்வயதிலிருந்த நானும் அவ்வாறே வகுப்பில் நிற்பதாய் உணர்ந்து கதைவாசிப்பதை நிறுத்தியிருக்கிறேன். இதிலென்ன என்று தோன்றுவது ஒருவயது…ஒவ்வொன்றிலும் ஒன்றை காணும் வயது ஒன்று.

அந்த புளியமரங்கள் பற்றிய வர்ணனையில் கந்தர்வன், ஒவ்வொன்றும் ஒரு விருட்சம். தூர் கட்டி வீடுகள் போல நிற்கும் என்கிறார். பெருமரங்கள் எதுவாயினும் அப்படித்தானே?அவற்றைக்காண்பதே பேரின்பம். ஒரு அடிமரத்தின் மடிப்புகளின் இடையில் விஜய்சேதுபதி கைகட்டி உறங்கும் ஒருகாட்சி தொண்ணூற்றாறு திரைப்படத்தில் வரும். அது மிகப்பெரிய ஆசுவாசம். பெண்களுக்கேயான உடல்பிரச்சனைகளில், வலிகளில் விடுதியின் பெருவேம்பின் மடிப்புகளில் அவ்வாறு குறுகி அமர்ந்த நாட்கள் பல. மழை முடிந்த காலைமாலைகள், விடுமுறை நாட்கள், முன்னிரவுகளில் காற்றுவந்து அசைக்க மரத்தினடியில் தோழிகளுடன் நின்று சிரித்த மரத்தடிகள் போல, இதில் முத்துவும் தன் வாழ்வின் இனிய, துயரத்தருணங்களில் மரத்தடிக்கே வருகிறான். மரங்களை உணர்ந்தவர்களுக்கு மரம் என்றும் தேவைப்படுகிறது. இந்தக் கதை இன்றைக்கு மேலும் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கிறது. வெய்யில்நாட்களில் பசபசவென்று பச்சைவிரிக்கும் வேம்புதான் முதலில் வெயில் என்பதை சரியாகச் சொல்லிக்கொடுத்தது. வெயில் குடித்து குளுமையைத் தருவது போல ஏதோ ஒன்றை.
ஏதோ ஒருவகையில் கதைகள் நம்வாழ்வில் ஒரு அனுபவமாகவோ அல்லது உடன்வரும் தோழமையாகவோ அல்லது நம்மைவிடமுதிர்ந்த ஒரு துணையாகவோ உடன்வருகின்றன. இந்தக்கதை பதின் வயதை பாதித்தது என்பதாலேயே ஆழத்தில் கிடந்தாலும் மரங்களை உணர்கையில், ரசிக்கையில் சட்டென்று மேலே வந்துவிடுகிறது. அந்தவயதில் இந்தக்கதை ஒரு நல்வாய்ப்பு. அது மைதானத்து மரங்களை சொல்வதன் வழியே பசுமையை இயற்கையை, பிரபஞ்சத்தை ஏதோ ஒருவகையில் அன்று உணர்வுக்குள் கொண்டுவந்தது.
இளைஞனாக, வேலையில்லாதவனான, சிறுவேலையின் அழுத்தம் காரணமாக, குடும்பப் பாரம் காரணமாக, மனைவி காரணமாக முத்து ஒவ்வொரு முறையும் மரத்தின் பாதங்களில் தன் முதுகைச் சாய்த்துக்கொள்கிறான். ஒருநாள் அந்த மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. அதோடு கதை முடிந்திருக்கலாம். கந்தர்வன் அவர் வாழ்வு முழுதும் நம்பிய அவர் வாழ்க்கைப்பார்வையின் அடிப்படையில் அவரின் சில விவரணைகள் உள்ளன. அவன் மனைவி சொல்வாள்…“ஊரில என்னன்னதுக்கு போராடுறாங்க, போய் இனிமேயாச்சும் பாருங்க”. இறுதியில் அவன் மரங்களில்லாத மைதானத்தைக் கடந்து தன்னைப் போன்ற மனிதர்களைக் காண ஊருக்குள் செல்கிறான் என்று முடியும் கதையிலிருந்து மீண்டும் கதையின் முதல் வரிக்குச் சென்றால் ஓரமாய் ஒதுங்கியிருக்கும் வீடும், ஓரத்து மரங்களும், அதிலும் ஓரத்து மரத்தின் மாடுமேய்ப்பர்களும், சமூகத்தை அஞ்சியோ விலக்கப்பட்டோ ஒதுங்கியிருக்கும் முத்து போன்றவர்களை, வளர்ப்பால் சமூகத்தை விலகியே பார்க்கும் பெண்களை நாம்அடையாளம் கண்டு இந்தக்கதையை பேரனுபவமாக மாற்றிக்கொள்ளலாம். படைப்பு ஒருவாசிப்பில் என்றுமே தன்னைக் காட்டிவிடுவதில்லை.
கதைகள் கதைகள் மட்டுமல்ல. அவை காலையைத் துலங்க வைக்கும் ஆதவனின் கீற்றுகளில் ஒன்றைப்போல வாழ்வின் உதயகாலத்தில் சிறுவெளிச்சமாக மனதில் விழுந்து, நம் வாழ்வில் புதுஔியையோ அல்லது வழியையோ காட்டுகின்றன. அந்தவகையில் கந்தர்வனின் கையைப்பிடித்தபடி மைதானத்துமரங்களில் திரிந்த நாட்கள் மிகஇனியவை. காலத்தில் கரைந்து போனாலும் அவருக்கு என் ப்ரியங்கள்.