கோடை ஈசல் – பீட்டர் வாட்ஸ் & டெரில் மர்ஃபி

நான் உங்களை வெறுக்கறேன்.”

ஒரு நான்கு வயதுப் பெண். கண்ணாடி மீன் கிண்ணம் போல வெறுமையாக இருந்த அறை.

“நான் உங்களை வெறுக்கறேன்.

சிறு கை முட்டிகள், இறுக்கியவை: காமெராக்களில் ஒன்று, அசைவைப் பதிக்கும்படி பணிக்கப்பட்டது, தன்னிச்சையாக அவர்களின் உருக்களைப் பெருக்கிக் கவனித்தது. வேறு இருவர் அந்த வளர்ந்தவர்களை, அம்மாவை, அப்பாவை, அறையின் இரு எதிரெதிர் பக்கங்களிலிருந்து கவனித்தனர். எந்திரங்கள் எல்லாரையும் கவனித்தன: அரை உலகுக்கு அப்பாலிருந்து ஸ்டாவ்ரோஸ் எந்திரங்களைக் கவனித்திருந்தார்.

“நான் உங்களை வெறுக்கறேன், வெறுக்கறேன், உங்களை வெறுக்கறேன்!”

அந்தப் பெண் இப்போது கதறிக் கொண்டிருந்தாள், கோபத்தாலும், வேதனையாலும் அவளுடைய முகம் குலைந்து இருந்தது. அவள் கண் கோடிகளில் கண்ணீர்த் துளிகள் இருந்தன, ஆனால் அவை அங்கேயே தங்கி இருந்தன, ஒரு சிறிதும் உதிரவில்லை. அவளுடைய பெற்றோர் பதட்டப்பட்ட மிருகங்களைப் போல இடம் மாறி நகர்ந்தனர், அவள் கோபத்தைக் கண்டு அச்சப்பட்டிருந்தனர், அந்த மாதிரி வெடிப்புகளுக்குப் பழக்கப் பட்டிருந்தாலும், அவற்றைத் துன்பமாகவே உணர்ந்தனர்.

ஏதோ இந்த முறை அவள் சொற்களையாவது பயன்படுத்தினாள். வழக்கமாக அவள் வெறுமனே ஓலமிடுவதை மட்டுமே செய்வாள்.

அவள் வெறுமையானதாக ஆக்கப்பட்டிருந்த ஜன்னல் மீது சாய்ந்தபடி கைகளால் அதைக் குத்தி இடித்துக் கொண்டிருந்தாள். அந்த ஜன்னல் கடினமான தடித்த ரப்பரைப் போல அவளுடைய தாக்குதலை ஏற்றுக் கொண்டு, இலேசாகப் பள்ளமாகித் திரும்பி எழுந்தது. அவள் தாக்கி அடித்தபோது எழுந்து திரும்பிய சிலவற்றில் அது ஒன்று; உடையக் கூடியவற்றில் அது சேரவில்லை.

“ஜீனீ, போதும், நிறுத்து….” அவள் அம்மா ஒரு கையை நீட்டினாள். அவள் அப்பா, எப்போதும் போல, பின்னால் தள்ளி நின்றார், அவர் முகத்தில் கோபமும், வெறுப்பும் குழப்பமுமான கலவை.

ஸ்டாவ்ரோஸ் முகம் சுளித்தார். செயலற்ற தூண்தான், இந்த ஆள்.

அத்துடன்: இந்தப் பெண்ணுக்கான தகுதி இவர்களுக்கு இல்லை.

வீறிட்டுக் கொண்டிருந்த குழந்தை திரும்பக் கூட இல்லை, கிம்மையும், ஆண்ட்ரூ கோரவெக்கையும் எதிர்த்து வீசப்பட்ட ஓர் அறை போல அவள் முதுகு இருந்தது. ஸ்டாவ்ரோஸுக்கு அதை விட மேலான காட்சி கிட்டியது: தென்கிழக்கில் இருந்த காட்சிப் பிடிப்பு ஜீனியின் முகத்திலிருந்து சில சென்டிமீட்டர்களே தள்ளி இருந்தது.  மிக்க துன்பத்தைச் சுட்டினபோதும், நான்கு சிறு வருடங்களே கடந்திருந்த ஜீனியின் வாழ்வில் அவள் உணர்ந்த அத்தனை துன்பத்துக்கும் சுட்டி அவை என்ற போதும், கீழே சொட்டாத அந்தச் சில சிறு கண்ணீர்த் துளிகள்தான் இத்தனை நாட்களில் அவள் அழும் நிலைக்கு மிக அருகில் வந்திருப்பதன் முதல் அறிகுறிகள்.

கோபத்திலிருந்து எரிச்சல் கொண்ட நிலைக்குத் திடீரென்று மாறியவள், “இதன் வழியே பார்க்கும்படி ஆக்கு,” என்று கேட்டாள்.

கிம் கோரவெக் தலையை அசைத்து மறுத்தாள். “செல்லம், வெளிப்பக்கத்தை உனக்குக் காட்ட எங்களுக்கும் விருப்பம்தான். முன்னே அதெல்லாம் உனக்கு எத்தனை பிடிச்சதுன்னு உனக்கு நினைவிருக்கா? ஆனால் அதைப் பார்த்து எப்பப் பார்த்தாலும் கூச்சல் போடாம இருப்பேன்னு நீ ஒத்துக்கணும். செல்லம், நீ முன்ன அப்படிக் கத்தாம இருந்தே, நீ-”

“இப்பவே!” மறுபடி சீற்றம், சுத்தமான, சிறு குழந்தையின் வெண்-வெப்பமான கோபம்.

சுவற்றின் மாடத்தில் இருந்த சிறு மெத்தைகள், தன் பிசுக்கான விரல்களால் ஜீனி தானே அவற்றைப் பயன்படுத்தத் திரும்பத் திரும்ப முயன்றதால் எண்ணெய்ப் பசையோடு தெரிந்தன. ஆண்ட்ரூ தன் மனைவிக்கு, கெஞ்சும் பார்வை ஒன்றை வீசினார்: தயவு செய், அவள் கேட்பதை அவளுக்குக் கொடுத்து விடுவோமே.

அவருடைய மனைவி அவரை விட மன உறுதியோடு இருந்தார். “ஜீனீ, எங்களுக்குத் தெரியும், இது உனக்கு ரொம்பக் கஷ்டமா –”

ஜீனீ தன் எதிரியைப் பார்க்கத் திரும்பினாள். வடக்குக் கருவிகள் எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டன: வலது கை வாயைப் பார்க்க உயர்ந்ததை, சுட்டு விரல் உள்ளே போவதை. அடங்க மறுக்கும் பார்வை அந்த மின்னும், கூர்த்த குவிநோக்குள்ள கண்களில் இருந்தது.

கிம் ஒரு அடி பின்னே போனாள். “ஜீன், செல்லம், கூடாது!”

அவை பால் பற்கள்தாம், இருந்தாலும் கூர்மையானவை. அம்மா தொடும் தூரத்துக்கு வருவதற்குள்ளேயே அவை எலும்பு வரை கடித்திருந்தன. ஜீனியின் வாயில் சிவப்புக் கறை மலர்ந்து விரிந்தது, கைகுழந்தையாக அவளிருந்த போது அவளுடைய தாடை வழியே வழியும் ஏதோ ஒன்றின் வக்கிரமான வடிவு போல வழிந்தது, அவளுடைய முகத்தின் கீழ் பாகத்தை ஒரு க்ஷணத்தில் முழுதும் நிறைத்தது. அந்த கொடூரத்தின் மேல், ஆத்திரம் நிறைந்து பளிச்சிட்ட விழிகள், மாட்டினீங்களா என்றன.

ஒலி ஏதுமில்லாமல் ஜீனி குலைந்து விழுந்தாள், குப்புறக் கவிழ்ந்து விழுகையில் அவள் கண்கள் இமைக்கு மேலே செருகிக் கொண்டன. அவள் தலை தரையில் இடிக்கும் முன், கிம் அவளைப் பிடித்துக் கொண்டாள். “ஐயோ கடவுளே, ஆன்டி, அவள் மயங்கி விட்டாள், அவளுக்கு அதிர்ச்சி, அவள்- “

ஆண்ட்ரூ நகரவேயில்லை. அவருடைய மேலங்கியின் ஒரு பைக்குள் அவரது கை புதைந்திருந்தது, அவர் எதையோ திருகிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது.

ஸ்டாவ்ரோஸ் தன் வாய் துடித்ததை உணர்ந்தார். உன் பையில் உள்ளது ஒரு ரிமோட் கண்ட்ரோலா அல்லது நீ இப்படி ஆனதற்கு மகிழ்ச்சி-

கிம் திரவத் தோல் இருந்த குழலை எடுத்து இருந்தாள், குழந்தையின் தலையைத் தன் மடியில் வைத்தபடி, ஜீனியின் கை மீது அந்தத் திரவத்தைப் பீய்ச்சிப் பரப்பினாள். ரத்தம் ஒழுகுவது மெதுவானது. ஒரு கணத்துக்குப் பிறகு கிம், சுவற்றின் மீது சாய்ந்தபடி உதவிக்கு வராமல், அசைவற்று இருக்கிற தன் கணவரைத் திரும்பிப் பார்த்தாள்.

“நீங்க அவளை அணைச்சுட்டீங்களா,” குரலை உயர்த்தி, கிம் கேட்டாள். “அத்தனை தூரம் பேசி, நாம ஒத்துக்கிட்டோம், அப்படி எல்லாம் இருந்தாலும் அவளை இப்படி அணைச்சுப் போட்டிங்களா?”

ஆண்ட்ரூ தன் அசக்தியை வெளிப்படுத்தும் விதமாக உடலைக் குலுக்கினார், “கிம்…..”

கிம் அவரைப் பார்க்கவே இல்லை. அவள் முன்னும் பின்னும் ஆடினாள், சுருதியற்ற மூச்சு அவளுடைய பற்களூடே ஊதல் காற்றாக வெளிப்பட்டது.

கிம்மும், ஆண்ட்ரூ கோரவெக்கும், அவர்களுக்குக் குதூகலம் தரவேண்டிய அந்தச் சிறு மூட்டையும்.

அங்கிருந்த தகவல் வழங்கும் அளிப்பான் கருவியோடு ஜீனியின் தலையை இணைத்த கேபிள், தரையில் தகராறுக்குக் காரணமான எல்லைக் கோடு போல அவர்களிடையே அதிர்ந்து கொண்டிருந்தது.

ஸ்டாவ்ரோஸுக்குள் ஒரு பிம்பம் அவளுடைய உவமை போல இருந்தது: காற்றில்லாத இருட்டில், பல டன்கள் மண்ணால் நசுக்கப்பட்டு, உயிரோடு புதைக்கப்பட்ட ஜீன் கோரவெக் – இறுதியாக விடுதலை அடைகிறாள். ஜீன் கோரவெக் காற்றைச் சுவாசிக்க மேலெழுந்து வருகிறாள்.

இன்னொரு உரு, இந்த முறை அவருடையதேதான்: அவளுக்கு, இனிமையானதும் நிஜம் போன்றதுமான காற்றுடன், கட்டுத்தளைகள் அற்ற ஓர் உலகை அனுபவிக்கக் கொடுத்த விடுதலை நாயகர், ஸ்டாவ்ரோஸ் மிகலாய்ட்ஸ். அது எத்தனை குறைந்த நாட்களே கிட்டியிருந்தது என்றால்தான் என்ன? அந்த அற்புதத்தில், நிச்சயமாக வேறு சிலரும் பங்கேற்றிருந்தனர் –தொழில் நுட்பப் பிரிவிலிருந்த ஒரு டஜன் தலைகள், அதைப் போல இரண்டு மடங்கு வழக்கறிஞர்கள்- ஆனால் அவர்களெல்லாம், (சோதனையின்) கோட்பாடு நிரூபணமான பின்னரோ, அல்லது (விளைவுகளுக்கான) பொறுப்பிலிருந்து விடுவிக்கும் கடைசி பத்திரம் கையெழுத்தான பின்னரோ, நாளாவட்டத்தில் காணாமல் போயிருந்தனர். ஏற்பட்ட சேதங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன, அந்தச் செயல் திட்டம், நிலையாகத் தொடரும் கட்டத்தில் இருந்தது, தானாகச் சீராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு செயல் திட்டத்தில் இனிமேல் டெர்ராகான் நிறுவனத்திலிருந்து ஒரு ஊழியரைக் கூட கூடுதலாக அமர்த்திச் செலவை உயர்த்தத் தேவை இல்லாத நிலை. அதனால் ஸ்டாவ்ரோஸ் மட்டுமே எஞ்சி இருந்தார்- ஸ்டாவ்ரோஸுக்கோ ஜீனி ஒரு போதும் வெறும் “சோதனை முயற்சி” யாக இருக்கவில்லை. அவள் கோரவெக் தம்பதியற்கு எத்தனை சொந்தமானவளோ அதே அளவு அவருக்கும் சொந்தம்தான். ஒரு வேளை அவருக்குக் கூடுதலான பாத்தியதை இருக் கலாம்.

ஆனால் அதெல்லாம் அவளுக்கு எப்படி இருந்தன என்பது இன்னமும் ஸ்டாவ்ரோஸுக்குக் கூடத் தெரிந்திருக்கவில்லை. ஜீன் கோரவெக் தன்னுடைய உடல் வாழ்க்கை என்னும் கட்டுத்தளையை உதறிய போது, அவள் விழித்த வெளியில் இயற்பியலின் விதிகள் காலாவதி ஆகி இருந்தன.

அதெல்லாம் அப்படித் துவங்கவில்லைதான். தூசியின் ஒவ்வொரு துகளுக்கும் கூட மிக்க ஆசையோடு உருக் கொடுத்து, வருடக் கணக்காகச் சேகரிக்கப்பட்ட நிஜ உலகின் சாதாரணச் சூழல்களின் சித்திரிப்புகள் அடங்கிய ஏராளமான கோப்புகளின் அடிப்படையில்தான் கணினிகளுக்குள்ளிருந்த அந்த உலகம் உயிரூட்டப்பட்டது. ஆனால், வளர்கிற ஒரு அறிவுத் திறனுடைய தேவைகளுக்கு ஏற்ப அவர்கள் வளைந்து கொடுப்பவர்களாகவும் இருந்தனர். பின்னோக்குகையில், அவர்கள் ஒருவேளை மிகவுமே வளைந்து கொடுத்து விட்டிருந்தனர் என்று தோன்றியது. ஜீன் கோரவெக் தன் சொந்த எதார்த்தத்தை அத்தனை தீவிரமாக இடையிட்டு மாற்றிக் கொண்டிருந்தாள், அவளுடைய செயல்களை ஸ்டாவ்ரோஸுடைய கண்காணிப்பு எந்திரங்கள் புரிந்து கொள்ளக் கூட சிரமப்பட்டன. அந்தச் சிறுமிக்கு தன் ஒரே ஒரு எண்ணத்தால், பசுஞ் சோலை நடுவில் உள்ள புல்வெளி ஒன்றை, ரோம சாம்ராஜ்யத்துடைய ரத்தக் களரியான துவந்த யுத்த அரங்காக மாற்றி விட முடிந்தது. கட்டுத்தளையிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட ஜீன் கோரவெக் எதுவும் நடக்கலாம் என்ற நிலை கொண்ட உலகில் வாழ்ந்தாள்.  

குழந்தைகளை வதைப்பதில் ஒரு சிந்தனைச் சோதனை இது: அப்போதே பிறந்த ஒரு குழந்தையை, நேர்க்கோடுகளே இல்லாத ஒரு சூழலில் கிடத்துவது. அவளுடைய மூளை ஒரு சமன நிலைக்கு வரும்வரை, மூளையின் நரம்புத் தொடர்புகள் எல்லாம் உறுதியாகும் வரை, அங்கேயே இருக்கச் செய்வது.  உருக்களின் அமைப்புகளை ஒன்றோடொன்று பொருத்திக் காட்சிப்படுத்தும் கண் விழித்திரையின் மொத்த இணைப்புகளும், தேவை என்று கேட்கும் தூண்டுதலே இல்லாததால், செயல்படுவதை நிறுத்தி விடும், இனிமேல் அவற்றை மறுபடி செயல்பட வைக்க முடியாது போகும். தொலைபேசிக் கம்பங்கள், மரங்களின் தண்டுகள், வானளாவும் கட்டிடங்களின் செங்குத்து உயரங்கள்- உங்களுக்குப் பலியான அந்தப் பெண், தன் வாழ்நாள் பூராவும் நரம்புகளின் வழியே இவற்றைப் பார்க்க முடியாதவளாகவே ஆகி இருப்பாள்.

ஆனால், செங்குத்துக் கோடுகள் கரைந்து வட்டங்களாக அல்லது பின்னச் சில்லுகளாக அல்லது மிக விரும்பப்படும் பொம்மையாக மனம் போகிறபடி எல்லாம் உருக்கள் மாறக் கூடிய ஓர் உலகில் வளர்க்கப்படும் ஒரு குழந்தைக்கு என்ன ஆகும்?

நாம்தான் வறியவர்கள், ஸ்டாவ்ரோஸ் எண்ணினார். ஜீனோடு ஒப்பிட்டால், நாம் குருடர்கள்.

அவள் எங்கிருந்து துவங்கினாள் என்பதை அவரால் பார்க்க முடிந்தது. அவளுடைய பிடரிப் பகுதி மூளைப் புறணியில் இருந்த உருப்பாங்குகளை, அவருடைய மென்பொருள் படித்தது, அவற்றைப் பிழைகளின்றி பிம்பங்களாக உருப்பெயர்த்து, அவற்றை தொடர்புக்கான அவருடைய விழிவில்லைகளில் ஓட விட்டது. ஆனால் பிம்பங்கள் ‘பார்வை’ அல்ல, அவை வெறும்…. கச்சாப் பொருள். பாதையில் எங்கும் வடிகட்டிகள் உண்டு: உணரும் அணுக்கள், செயலைத் தூண்டும் குறுமட்ட நிலைகள், உருப் பாணிகளில் ஒற்றுமை தேடும் வழி முறைகள் (அல்கரிதம்ஸ்) என்று.  கடந்த காலத்துப் பிம்பங்களின் முடிவற்ற சேமிப்பு, அனுபவங்களின் பிம்பங்கள் கொண்ட ஒரு நூலகம் இவை பயன்படுத்தக் கிட்டின.  பார்க்கும் திறன் என்பதை விட, பார்வை என்பது தன் விருப்பத்தால் நடக்கும் முடிவில்லாத விரிவாக்கங்களும், திரிப்புகளும் கொண்ட ஒரு குழப்பம்.  ஜீனின் பார்வைச் சூழலை புரிந்து கொண்டு விளக்குவதில் ஸ்டாவ்ரோஸ் மிகலாய்ட்ஸை விட மேலானவர் உலகிலேயே யாரும் இருக்க முடியாது, அதிலும் அவர் கூட இந்த உருக்களைப் புரிந்து கொள்ளப் பல வருடங்களாகவே திணறிக் கொண்டுதான் இருக்கிறார்.

மிக எளிமையாகச் சொன்னால் அவள், அளவிடமுடியாதபடி, அவரைத் தாண்டிப் போய் விட்டாள். அவளிடம் அவர் மிக நேசிக்கும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

இப்போது, அவளுடைய அப்பா அந்தக் கட்டுத்தளையை வெட்டிச் சில வினாடிகளிலேயே, ஜீன் கோரவெக் தன் இயல்பான தன்மைக்குள் மேன்மேலும் உயர ஏறிச் செல்வதைப் பார்த்திருந்தார். அவர் கண் முன் பட்டறிவு சார்ந்த படிமுறைகள் (அல்கரிதம்ஸ்) மேம்பட்டன; நரம்பு வலைகள் ட்ரில்லியன் கணக்கில் இருந்த பயனற்ற தொடர்புகளைக் கடுமையாகக் கழித்து, சலித்து எடுத்தன; அறிவுக் கூர்மை மூலமுதல் கடுங்குழப்பத்திலிருந்து வெளிப் புறப்பட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் நாம்ப்கள் (Namps [1]) சாய்ந்தாடு கட்டையின் கனமான பக்கத்தைப் போல உதிர்ந்தன: அந்த விசையின் மறுபக்கத்தில் தகவலை அலசும் சக்தியின் திறன் வானுயரத்திற்கு எழுந்தது.

இப்படி ஆனவள் ஜீன். நீ எத்தனை திறன் உள்ளவள் என்பது பற்றி, ஸ்டாவ்ரோஸ் நினைத்தார், அவர்களுக்கு ஒரு துப்பும் இல்லை.

அவள் அலறிக் கொண்டு விழித்தெழுந்தாள்.

“எல்லாம் சரியாக இருக்கிறது, ஜீன், நான் இங்கேதான் இருக்கிறேன்.” அவர் தன் குரலை அமைதியாக ஆக்கியிருந்தார், அவள் நிதானத்துக்கு வருவதற்கு உதவும் வண்ணம்.

அந்த உள்ளிடுதலைக் கேட்டு, அதை நோக்கி ஜீனுடைய காலக் கணக்கிடும் மூளைப் பகுதி சிறிதே துடித்தது. “ஐயோ, கடவுளே,” அவள் சொன்னாள்.

“இன்னொரு கெட்ட கனவா?”

“ஐயோ, கடவுளே.” மூச்சு அதிக வேகமாக இருந்தது, நாடித் துடிப்பு மிக அதிகம், அட்ரினல் சுரப்பியின் புறப்பட்டைக்கு ஒப்ப இருந்த அளவைகள் [2] சாதாரண அளவுகளை மீறி எகிறி இருந்தன. அது வன்புணர்வு ஒன்றின் தொலைப் பதிவு போல இருந்தது.

அந்த எதிர்வுணர்வுகளைத் துண்டித்து நிறுத்தலாமா என்று யோசித்தார். அரை டஜன் சிறு தூண்டுதல்கள் அவளை மகிழ்வான நிலைக்குக் கொண்டு வந்து விடும். ஆனால் அரை டஜன் தூண்டுதல்கள் அவளை வேறு ஒரு நபராகவும் ஆக்கி விடும். ரசாயனப் பொருளை மீறி ஆளுமை என்று வேறு யாரும் இல்லை- ஜீனுடைய புத்தி புரதங்களால் ஆனதல்ல, எலெக்ட்ரான்களால்தான் ஆனது என்றாலும், ஒப்புமைக்கான விதிகள் இங்கு செயல்பட்டே தீரும்.

“நான் இங்கேதான் இருக்கிறேன், ஜீன்,” அவர் மறுபடி சொன்னார். நல்லதோர் பெற்றவனுக்கு, வளர்ச்சிக்கு எத்தனை துன்பம் அவசியம், எப்போது தலையிட்டு நிறுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கும். “ஒண்ணும் ஆயிடல்லை, ஒண்ணும் ஆயிடல்லை.”

ஒரு வழியாக, அவள் அமைதியானாள்.

“பயங்கரக் கனவு.”  மண்டை ஓட்டு எலும்புப் பிணையை ஒத்த உப நடைமுறை ஒழுங்குகளில் [3] தெறிப்புகள் இருந்தன, அவளுடைய குரலில் சிறு நடுக்கம் இன்னும் தொடர்ந்திருந்தது.  “இதெல்லாம் பொருத்தமாக இல்லை, ஸ்டாவ்ரோஸ். பயங்கரக் கனவு, என்பதுதான் வரையறுப்பு. ஆனால் அது சுட்டுவது வேறொரு வகை உண்டு என்பதை, அது எனக்குக் கிட்டுவதில்லை- நான் சொல்வது, இது ஏன் எப்போதும் இப்படியே இருக்கிறது? இது எப்போதுமே இப்படித்தான் இருந்ததா?”

 “எனக்குத் தெரியல்லை.”  இல்லை, இப்படி இருந்ததில்லை.

அவள் நெட்டுயிர்த்தாள். “நான் கற்றுக் கொள்ளும் இந்தச் சொற்கள், இவை எதுவும் எதற்கும் சரியாகப் பொருந்துவதில்லை, உங்களுக்குத் தெரியுமா?”

“அவை வெறும் குறியீடுகள், ஜீன்,” அவர் சிரித்தார். இந்த மாதிரி கணங்களில், இந்தக் கனவுகளின் வேர் மூலம், வளர்ச்சி குன்றிய, வளமற்ற வாழ்வை வாழும், தொலைவில் இருந்த ஒரு சதைப் பிண்டத்தில் சிறைப்பட்ட ஒரு பாதி-சுயம் என்பதை கிட்டத்தட்ட மறந்து விட அவருக்கு முடிந்திருந்தது. ஆண்ட்ரூ கோரவெக்கின் கோழைத்தனமான அந்தச் செயல் அவளை அந்தச் சிறையிலிருந்து, கொஞ்ச நேரத்துக்காவது, விடுவித்தது. தன் முழுத் திறனையும் அடைய விடுவிக்கப்பட்டவளாய், அவள் இப்போது பாய்ந்து உயர்ந்தாள். அவள் இப்போது பொருட்படுத்தப்பட்டவளானாள்.

“குறியீடுகள். கனவுகளே அவைதான் என்று சொல்லப்படுகிறது, ஆனால்… எனக்குத் தெரியவில்லை. கனவுகள் பற்றி நூலகத்தில் பல சுட்டுக் குறிப்புகள் இருக்கின்றன, அவை எதுவும் விழித்திருக்கும் நிலையிலிருந்து அப்படி ஒன்றும் வேறுபட்டதாகத் தெரியவில்லை. நான் உறங்குகிறபோதோ அதெல்லாம் அனேகமாக- கிட்டத்தட்ட அலறல்கள்தான், கொஞ்சம் சத்தம் வேண்டுமானால் குறைக்கப்பட்டிருக்கலாம். உண்மையில் சகதியாக இருக்கு. அதோடு அந்த வடிவங்கள், சிவப்பு வடிவங்கள்.” ஒரு தயங்கல். “தூங்கப் போகிற நேரத்தை நான் வெறுக்கறேன்.”

“சரி, இருக்கட்டும். இப்ப நீ முழிச்சுக்கிட்டே. இன்னக்கி என்னல்லாம் செய்யப் போறே?”

“எனக்கு நிச்சயமா எதுவும் தெரியல்லை. இந்த இடத்திலேர்ந்து நான் போயே ஆகணும்.”

அவள் எந்த இடத்தைச் சொல்கிறாள் என்பது அவருக்குத் தெரியவில்லை. சாதாரணமாக, மாற்றமேதும் இல்லாமல் அவள் வீட்டில்தான் விழிப்பாள், மனித உணர்வுகளுக்கு ஏற்றபடி கட்டமைக்கப்பட்ட, வளர்ந்தவருக்கான ஒரு இல்லம் அது. அங்கு பூங்காக்களும், காடுகளும், கடல்களும் உடனே சென்றடையக் கூடியனவாகவும் இருந்தன. ஆனால் அவள் இப்போது, அவற்றை எல்லாம், அவர் அடையாளம் அறியக் கூடிய நிலைகளைக் கடந்து வெகுவாக மாற்றி விட்டிருந்தாள்.

ஆனால் அவளுடைய பெற்றோர் அவளைத் திரும்பக் கேட்க இன்னும் அதிக நேரமாகாது. அவளுக்கு என்ன வேண்டுமானாலும், ஸ்டாவ்ரோஸ் தனக்கே சொல்லிக் கொண்டார். அவள் இங்கே இருக்கும் வரை, அவள் எதை விரும்பினாலும்.

 “எனக்கு வெளியே போகணும்.”

 அதைத் தவிர. “எனக்குத் தெரியும்.” அவர் பெருமூச்சு விட்டார்.

“ஒருவேளை அப்ப நான் இந்த கெட்ட கனாக்கள் கிட்டேயிருந்து தப்பிக்கலாம்.”

ஸ்டாவ்ரோஸ் தன் கண்களை மூடிக் கொண்டார், அவளோடு இருக்க ஏதாவது வழி இருக்கக் கூடாதா என்று விரும்பினார். அவரை உடலில்லாத ஒரு குரலாக மட்டுமே அறிந்திருக்கும் இந்த அதி அற்புதமான, அனைத்தையும் கடந்து விட்ட ஜீவனோடு, நிஜமாகவே அவளோடு.

“இன்னும் அந்தப் பயங்கரம் உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறதா?”

“பயங்கரமா?”

“உங்களுக்குத் தெரியுமே. பணியாளர் படிநிலைக் குழு.”[4]

அவர் தலையாட்டி ஆமோதித்தார், சிரித்தபடியே- பின், நினைவு வந்தவராய் சொன்னார், “ஆமாம், அதே கதைதான் எப்போதும். இன்று போலவே நாளையும்.”

ஜீன் மூச்சைச் சீறலாக விடுவது போல ஒலி செய்தாள். “ அது போல ஒன்று இருக்கிறதென்று எனக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை. உங்களுக்குத் தெரியுமா, நான் அந்தச் சொல்லுக்கு நூலகத்தில் ரொம்பச் செடுக்காய் இல்லாத விளக்கம் ஒன்றைத் தேடினேன், ஆனால் இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால், நீங்களும் அந்த நூலகமும் இரண்டு பேருக்குமே தலையில் ஏதோ கோளாறு.”

அந்த வருணனையைக் கேட்டு அவர் சற்றுக் கூசினார்; அதை அவர் ஒரு போதும் அவளுக்குச் சொல்லித் தந்ததில்லை. “அது எப்படி?”

“ஆமாம், போங்க ஸ்டாவ். இயற்கையின் தேர்வுங்கிறது, தன்னோட குண்டித் துளையில கட்டை விரலை வைத்துக் கொண்டு எதைச் செய்வதிலும் திறமையே இல்லாமல் இருக்கறதையே தன்னோட ஒரே வேலையா வச்சிருக்கிற ஓர் அடை கூடுப் பிறவியைப் படைக்குமாக்கும்.  என் கிட்ட வேற ஏதாவது கதையைச் சொல்லுங்க.”

ஒரு மௌனம், நீள்கிறது. அவளுடைய முன் மூளையின் புறப்பகுதியில் மைக்ரோ மின் ஓட்டங்கள் கசிந்தோடுவதை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

“இங்கே இருக்கீங்களா, ஸ்டாவ்?” கடைசியில் அவள் கேட்டாள்.

“ஆமாம், இங்கேதான் இருக்கேன்.” அவர் வாய் திறவாமல் சிரித்தார், மௌனம் காத்தார். பிறகு, “நான் உன் கிட்டே அன்பு கொண்டவன், உனக்கு அது தெரியுமில்லையா?”

“ஓ, தெரியும்,” அவள் சுலபமாகச் சொன்னாள். “அது என்னதுன்னுதான் தெரியல்லை.”

ஜீனுடைய சூழல் அப்போது மாறியது; யோசிக்கக் கூட இல்லாது ஏற்பட்ட மாறுதல் அவளுக்கு, ஆனால் மூச்சு விடக் கூட முடியாத அளவு மிக வினோதமான எதார்த்தங்களிடையே பிய்த்து இழுத்துப் போகப்பட்ட உணர்வு ஸ்டாவ்ரோஸுக்கு. அவருடைய கண் பார்வையின் கோடியில் புகையுருக்கள் மின்னின, அவர் அவற்றைக் கவனிக்க முயன்றால் மறைந்தன. லட்சக்கணக்கில் தெளிவாகப் பிரித்தறிய முடியாத முகப்புகள் மீது ஒளி வீழ்ந்து தெறித்தது, ஊசிமுனையாய்க் குவிந்த ஏராளமான கற்றைகள் அவ்வப்போது பீறலாய்த் தாளமிட்டன. அங்கு தரையோ, சுவர்களோ, கூரையோ இல்லை. எந்தப் பரிமாணத்திலும் ஒரு தடுப்பும் இல்லை.

ஜீன் காற்றில் ஒரு நிழலை எட்டிப் பிடித்தாள், அதன் மீது அமர்ந்தாள், மிதந்தாள். “நான் த்ரூ அ லுக்கிங் க்ளாஸை மறுபடி படிக்கப் போகிறேன். யாரோ ஒருவராவது நிஜ உலகில் வாழ்கிறார்.”

”இங்கே ஏற்படுகிற மாறுதல்கள் எல்லாம் நீயே செய்கிறவைதான், ஜீன்,” என்றார் ஸ்டாவ்ரோஸ். “ஏதோ கடவுளோ, இல்லை கதையாளரோ செய்கிற தில்லு முல்லு வேலைகளால் நடப்பதில்லை.”

“எனக்குத் தெரியும். ஆனால் ஆலிஸ் என்னை இன்னும் அதிகமாக – சாதாரணமானவளாக- உணர வைக்கிறாள்.” அந்த எதார்த்தம் மறுபடி ஒரு முறை திடீரென்று மாறியது; ஜீன் ஒரு பூங்காவில் இப்போது இருந்தாள், அதாவது, ஸ்டாவ்ரோஸுக்கு அது பூங்காவாகத் தோன்றியது. சில நேரம் அவளுடைய விளக்கமும் அதேதானா என்று கேட்க அவருக்கு அச்சமாக இருக்கும். மேலே, இருண்ட, ஒளியான புள்ளிகள் ஆகாயத்தில் மாறி மாறி நடனமாடிப் போயின. அந்த ஆகாயம் மனதை ஈர்க்கும் விதம் வில்லாக வளைந்து தெரிந்தது, சில வினாடிகல் கழித்து மிக அச்சுறுத்தலாக நெருக்கி அடைவாகத் தெரிந்தது, அதன் நிறம் கூட முடிவில்லாமல் நிலைப்பற்று மாறிக் கொண்டிருந்தது. சிறியதும், பெரியதுமான மிருகங்கள், ஆரஞ்சும், கடும் சிவப்புமான நிறங்களோடு மாறிய வண்ணமிருக்க, வளைவும் சுழிகளுமான கோடுகளும் கொண்ட வட்ட உருவங்களோடு உலவின. மற்ற பொருட்கள், அவை உயிரினங்களின் பிரதிகளாகவோ, இல்லை கணித தேற்றங்களாகவோ – அல்லது இரண்டுமாக இருக்கலாம்- தூரத்தில் மேய்ந்தன.

ஜீனுடைய கண்கள் வழியே பார்ப்பது ஒரு சமயத்திலும் சுலபமாக இருக்கவில்லை. ஆனால் அவள் படிப்பதைப் பார்ப்பதில் கிட்டும் அரிய மகிழ்ச்சிக்கு இந்த கருத்துருவாக்கங்களால் எல்லாம் வரும் குழப்பம், குறைந்த துன்பம்தான்.

என்னுடைய செல்லப் பெண்.

அவளைச் சுற்றிலும் குறியீடுகள் தோன்றின, ஐயத்துக்கிடமின்றி ‘லுக்கிங் க்ளாஸ்’ புத்தகத்தின் பக்கங்களாகத்தான் இருக்கும். ஸ்டாவ்ரோஸுக்கு அது அர்த்தமற்ற உளறல்களாகத் தெரிந்தது. புரிகிற மாதிரி சில எழுத்துகள், எந்த ஒழுங்குமில்லாத மந்திர உச்சாடனங்கள், சூத்திரங்கள். அவை சில நேரம் இடங்களை மாற்றிக் கொண்டன, மூட்டல் பிரிப்பே இல்லாமல் அவை ஒன்றோடொன்று கலந்து, சுற்றியும், ஊடுருவியும், அருகருகேயுமாக ஓடின- நிறைய அடர் நிற வண்ணத்துப் பூச்சிகள் போல அவை காற்றிலும் எழும்பின.

அவர் தன் கண்களைக் கொட்டியபடி, பெருமூச்சு விட்டார். இன்னும் நிறைய நேரம் இந்தச் சூழலில் இருந்தால் அந்த காட்சிகள் அவருக்குத் தலைவலியைக் கொடுக்கும், அந்த வலி போவதற்கு ஒரு நாளாகும். ஒரு உயிர் இந்த அபார கதியில் வாழ்வதைப் பார்ப்பது, அது மிகக் குறுகிய நேரமேதான் என்றாலும், அதற்கு அபராதம் கட்ட வேண்டி வரும்.

“ஜீன், நான் கொஞ்ச நேரம் போய் வர வேண்டும்.”

“கம்பெனி வேலையா?” அவள் கேட்டாள்.

“அப்படிச் சொல்லலாம். நாம் சீக்கிரமே பேசுவோம். நீ சந்தோஷமாகப் படி.”

(முதல் பாகம் முடிவுற்றது. அடுத்த பாகம் அடுத்த இதழில் பிரசுரமாகும்.)

***

குறிப்பு:

இந்தக் கதையின் இங்கிலிஷ் மூலம் ‘க்ளார்க்ஸ்வோர்ல்ட் மாகஸீன்’ என்ற பத்திரிகையின் 144 ஆம் இதழில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாயிற்று. அதற்கு முன் இது ’டெஸ்ஸெராக்ட்ஸ் நைன் – நியூ கனெடியன் ஸ்பெகுலேடிவ் ஃபிக்‌ஷன்’ என்கிற புத்தகத்தில் 2005 ஆம் வருடம் பிரசுரமாகியது.

தமிழ் மொழி பெயர்ப்பு: மைத்ரேயன்

(இதன் மூல ஆசிரியர்களிடமோ, பத்திரிகையிடமோ மொழி பெயர்ப்புக்கான உரிமை பெறவில்லை. மொழி பெயர்ப்பின் நோக்கம் வணிகம் அல்ல. இந்த எழுத்தாளர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதுதான்.)

மொழி பெயர்ப்பாளர் குறிப்புகள்:

1] Namps – ஒரு பெயர்ச்சுருக்கம் அல்லது acronym. விரிவான பெயர்- Narrow band analog mobile phone system or service

2] அட்ரினோகார்டிகல் அனலாக்ஸ்- Adrenocortical Analogs

3] Pareital Subroutines

4] Bureaucracy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.