
உங்களுடன் இத்தொடர் வழியே பேசப்போகும் நான் ஒரு வெற்றிகரமான விற்பனையாளராகவோ அல்லது ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளராகவோ என்னை நிறுத்திக்கொள்ளவில்லை. உங்களில் பலரும் இன்றிருக்கும் இடத்தில் சில காலத்திற்கு முன்பிருந்தேன் என்பதையும், இன்று வேறோர் நிலைக்கு வர முடிந்திருக்கிறது என்பதையும் மட்டுமே என் தகுதியாகக் கொண்டு என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
2004 ஆம் ஆண்டின் ஒரு மதியப்பொழுதில் இருந்து மாலை வரை 6 விதமான மரணங்கள் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நிகழ்ந்திருந்தாலும் அனைத்து மரணங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது நான் என் குடும்பத்தை ஒவ்வொரு மரணத்திலும் ஆதரவின்றி நிறுத்தியிருந்ததுதான். ஆறு முறை மரணித்த பின் அன்றிரவு உறங்கப் போகையில் என் மரணத்திற்குப் பின் என் மனைவி, குழந்தைகளின் நிலைமையினை எண்ணி இன்னும் திருமணம் ஆகியிராத நான் கண்ணீர் சிந்தும்படி ஆனது.
நண்பர்கள் என் ஆறு மரணங்கள் குறித்து குழப்பமடைய வேண்டாம். இங்கிருந்துதான் நம் உரையாடல் துவக்கம். 2004ஆம் ஆண்டில் எனது முதுநிலை மேலாண்மை படிப்பை முடித்து வெளிவருகையிலேயே நான் ஒரு பயிற்றுநராக இருக்கும் முடிவு எனக்குள் தெளிவாகவே இருந்தது. துவக்கத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன். பின் ஒரு ஆண்டில் பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக சேர்ந்தேன். அங்கிருந்து வெளியேறி வேறு எங்கு செல்வது என்ற யோசனையில் இருந்தபோதுதான் ஒரு நண்பர் மூலம் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பயிற்சியாளர் வேலைக்கு அனுப்பப்பட்டேன். நேர்முகத் தேர்வில் ஆயுள் காப்பீடு குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்படவில்லை. அப்படியே கேட்கப்பட்டிருந்தாலும் என்னால் விடை அளித்திருக்க முடியாது என்பதே அன்றைய நிஜம். ஏனெனில் அன்று எனக்கு காப்பீடு குறித்த எந்த அடிப்படைப் புரிதலும் கிடையாது என்பதே உண்மை. நண்பர்களும், உறவினர்களும் காப்பீட்டு வேலை என்பதில் தயக்கம் காட்டினார்கள். அப்பணியில் சேரும் என் முடிவினை மாற்றி யோசிக்கும்படியும் சொன்னார்கள். ஆனால் நான் அப்பணியை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொன்னால் காப்பீட்டுப் பணியின் ஊதியம் என்னை மறுக்க முடியாதபடி செய்தது. விரைவில் வேறு நல்ல வேலை தேடிக்கொள்ளும் சமாதான முடிவை என் ஐயப்படும் மனதிற்கு அளித்துவிட்டு ஆசைப்படும் மனதின் கோரிக்கைக்கு ஏற்ப காப்பீட்டுப் பணியில் சேர்ந்தேன்.
நான் பணியில் சேர்ந்த காப்பீட்டு நிறுவனம் தனியார் காப்பீட்டு நிறுவனம். இந்தியாவில் அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களே தொடக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 12 காப்பீட்டு நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்குள் தொடக்கப்பட்ட நிலையில் அத்துறையில் வேலைவாய்ப்பு என்பது மிக எளிதான ஒன்றாக இருந்தது. எனக்கு வேலை எவ்வளவு எளிதாகக் கிடைத்தது என இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
தனிப்பட்ட சட்டத்தாலும், தனி அதிகாரம் கொண்ட கட்டுப்பாட்டு ஆணையத்தாலும் காப்பீட்டுத் துறை வழிநடத்தப்படுகிறது என்பதால் அதன் சட்ட திட்டங்கள் பல நிலைகளில் கடுமையாகவே பின்பற்றப்பட்டன. காப்பீட்டு முகவர் பணிக்கான பயிற்சி அளிப்பதே என் பணி. அப்பயிற்சி முறைகளும், தேர்வும் காப்பீட்டு ஆணையத்தின் ஒழுங்குமுறை விதிகளின்படி நடத்தப்படுபவை. அதன் அடிப்படையில் பயிற்சியாளனாக பணியில் சேர்ந்த நான் பணியினைத் துவக்குமுன் அதே பயிற்சியை முடித்து அத்தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகள் மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் முகவர் தேர்வு பயிற்சியை அளிக்கும் பயிற்சியாளர் அத்தேர்வின் இரு படிநிலைகளுக்கு மேலுள்ள தேர்வை முடித்தவராக இருப்பது கட்டாயம். தனியாருக்கு முற்றிலும் புதிய துறை என்பதால் அன்று இத்தேர்வை முடித்தோர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஓய்வு பெற்றோர் மட்டுமே பிற நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்க இயலும் என்பதால் எனக்கு பயிற்சி அளிக்க வந்தவரும் ஓய்வு பெற்ற காப்பீட்டு ஊழியரே.
அந்த பயிற்சி வகுப்பின் மூன்றாம் நாள்தான் எனக்கு ஆறு மரணங்கள் நிகழ்ந்த தினம். அப்பயிற்சியின் முதல்நாளில் ஆர்வமாக கலந்துகொண்டதால் முதல் வரிசையில் அவருக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்தேன். என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் ஒவ்வொரு காப்பீட்டு பலன்களுக்கான சூழலை விவரிக்க என்னையே உதாரணமாகக் காட்ட ஆரம்பித்தார். மூன்றாம் நாள் பயிற்சி இறப்புக்கான காப்பீட்டு பலன்கள் குறித்தது. அதனால்தான் அன்று மட்டும் அவரால் ஆறுமுறை மரணங்களை விதம் விதமாக சந்தித்தேன். மாலை வகுப்பு முடிந்ததும் இருக்கையிலிருந்து எழுந்தது நானா, என் ஆன்மாவா என ஐயம் கொண்டேன்.
மறுநாள் விபத்து மற்றும் ஆபத்தான நோய்களுக்கான காப்பீட்டு பலன்கள் குறித்த வகுப்பு. அன்றைய வகுப்பின் முடிவில் எனக்கு எல்லா வியாதிகளும் வந்து, அனைத்து வித விபத்துகளையும் சந்தித்திருந்தேன். ஐந்தாம் நாள் என் மேலாளரைச் சந்தித்தேன்.
“ராஜீவ், என்னால் வகுப்பில் உட்கார முடியவில்லை. மிக அலுப்பாக இருக்கிறது.”
அவர் வியப்பும், ஐயமும் கலந்த குரலில் கேட்டார் – “ஏன்?”
“எனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றைத்தான் வகுப்பில் சொல்கிறார்கள். பாலிஸி பற்றி சொல்லவேயில்லை.“
“முழு வகுப்பில் அமராமல் எப்படி பாலிசிக்களைத் தெரிந்து கொள்வாய்?”
“நான் கையேடுகளை முழுமையாக வாசித்து விட்டேன். நீங்கள் எந்த பாலிஸி குறித்தும் தகவல்களையும் கேளுங்கள். நான் சொல்கிறேன்.”– அப்போது என்னில் தெரிந்திருக்கும் தன்னம்பிக்கையை நினைத்து இப்போது சிரித்துக் கொள்கிறேன்.
அவர் சற்று யோசனையும், சிறு குறும்பும் கொண்ட முகபாவத்தோடு சொன்னார் – “சரி, நீ இப்போது வகுப்புக்கு போ. நான் உனக்கு வேறோர் ஏற்பாடு செய்கிறேன்.”
நான் சற்று லேசாகி பயிற்சிக்குச் சென்றேன். உணவு இடைவேளையில் மேலாளர் என்னை அழைத்தார். அவருடன் நிறுவனத்தின் ஒரு விற்பனைப் பிரதிநிதி இருந்தார். அவருக்கு என்னை அறிமுகப்படுத்தி மேலாளர் சொன்னார் – “இவர் நம் நிறுவனத்தின் பயிற்சியாளர். நம் நிறுவனத்தின் பாலிசிகள் குறித்த தகவல்கள் இவருக்குத் தெரியும். உன் வாடிக்கையாளரிடம் இவரை அழைத்துப் போவது உனக்கு உதவக்கூடும்.“ என்றார்.
விற்பனையாளர் எவ்வித உணர்வுமின்றி என்னைப் பார்த்தார். மேலாளர் என்னிடம் “இவர் ஒரு வாடிக்கையாளரை நேரில் சந்திக்கப்போகிறார். அவர் நம் நிறுவன பாலிசிகள் குறித்து நிறைய கேட்க விரும்புகிறார் என்பதால் உன்னை அனுப்புகிறேன். நீ கையேடுகளை தெளிவாகப் படித்து விட்டாய் அல்லவா?”
எனக்கு மகிழ்ச்சி. எப்படியோ பயிற்சியில் இருந்து தற்காலிக விடுதலை. உடனே கிளம்பினோம். என் முதல் வாடிக்கையாளர் சந்திப்பு. ஆனால் அந்த வாடிக்கையாளர் சந்திப்பே எனக்கு பெரும் பாடத்தை கற்றுத்தரப் போகிறது என்பதை நான் அப்போது உணரவில்லை.

2
என்னை அந்த விற்பனையாளர் அழைத்துச் சென்றது ஒரு விமானப்படையில் பணியாற்றி பணிக்காலம் முடித்து வேறோர் தொழிலில் இருக்கும் முன்னாள் விமானப்படை அதிகாரியிடம். நகரத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் அவரது வீட்டை நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே சென்று சேர்ந்தோம். வழக்கமாக ஒரு விற்பனை சந்திப்பு எனில் நாம் பெரும்பாலும் செய்வது என்ன? குறித்த நேரத்துக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே சென்று நம் வாடிக்கையாளரை கவர முயற்சிப்போம். அதே எண்ணத்தில்தான் நாங்களும் குறித்த நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே சென்று அவர் வீட்டு அழைப்புமணியை அழுத்தினோம். திறந்தார். புன்னகையுடன் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று சொன்னோம். அவர் உணர்வுகளற்ற முகத்துடன் கேட்டார் – நீங்கள் இன்னும் பதினைந்து நிமிடங்கள் தாண்டி வருவதாக அல்லவா பேச்சு? தயவு செய்து சரியான நேரத்துக்கு வருகிறீர்களா? – கதவு மூடப்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். வேறு வழியில்லை. சாலையின் ஓரத்திலிருக்கும் தேநீர் கடையில் தஞ்சமடைந்து நேரத்தைப் போக்கிவிட்டு சரியான நேரத்தில் கதவைத் தட்டினோம். இம்முறை அவர் புன்னகையுடன் கதவைத் திறந்தார் – “கனவான்களே, உள்ளே வருக , நல்வரவு”என பெருங்குரலில் வரவேற்று அமரச் செய்தார்.
அமர்ந்தவுடன் என்னுடன் வந்த விற்பனையாளர் தனக்கு ஒரு அலுவல் ரீதியான கைப்பேசி சந்திப்பு இருப்பதால் பத்து நிமிடங்களில் தான் வந்துவிடுவதாகவும், அதுவரை வாடிக்கையாளர் என்னிடம் அவரது சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டு அறைக்கு வெளியே சென்றார்.
வாடிக்கையாளர் கேட்கத்தொடங்கினார். முதல் இரு நிமிடங்கள் அவரது கேள்விகளுக்கு அருமையான பதில்களை துல்லியமாகச் சொன்னேன். உங்கள் பெயரென்ன, பணி என்ன, எந்த கிளையிலிருந்து வருகிறீர்கள் போன்ற கேள்விகள். பிறகு ஆரம்பித்தவற்றுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை.
-”உங்கள் நிறுவனத்தில் நான் இடும் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது?”
-“அதை யார் கண்காணிக்கிறார்கள்? எவ்வாறான கண்காணிப்பு முறை கையாளப்படுகிறது?”
-”சந்தையின் போக்கை நிர்ணயிக்க நீங்கள் கடைப்பிடிக்கும் யுக்திகள் என்னென்ன? நான் கட்டும் பணத்திற்கு உங்கள் நிறுவனம் அளிக்கும் உறுதியை நான் எப்படி ஒரு செயல்பாடாக பார்க்க முடியும்?”–
இன்னும் அமெரிக்க டாலருக்கும், யூரோ டாலருக்குமான மோதல் இந்திய பங்குச் சந்தையில் எப்படி எதிரொலிக்கும், பி-நோட் வழியே வரும் அந்நிய முதலீடுகளின் பங்களிப்பு சந்தையை எப்படி பாதிக்கும்……..நான் அயர்ந்து போனேன். அவர் இக்கேள்விகளில் ஒன்றிரண்டைக் கேட்டதும் நான் விடைகளை மறுநாள் சொல்வதாகச் சொல்லி விட்டு “எங்கள் பாலிசியில் ஆறாம் ஆண்டிலிருந்து உங்களுக்கு …”என்று கையேட்டை நீட்டிக் கொண்டு ஆரம்பிப்பேன். அவர் இடைமறித்து மீண்டும் மேற்சொன்னவற்றில் ஒன்றைக் கேட்பார். நானும் பிறகு விளக்குவதாகக் கூறிவிட்டு “எங்கள் பாலிசியில் …..”என்று தொடங்குவேன். ஒரு கட்டத்தில் என்னிடமிருந்த கையேட்டை மேசையோடு சேர்த்து ஓசை எழ அடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டார் – “இளையவனே, நீ சொல்பவை இக் கையேட்டில் உண்டு. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு அறிவும், படிப்பும் எனக்குண்டு என்றால் நீ மறுக்க மாட்டாய் என நினைக்கிறேன். இதில் சொல்லப்படாதவற்றை தெரிந்து கொள்ளவே உங்களை அழைத்தேன். அவற்றைப் பேச உனக்கு முடியுமானால் நாம் பேச்சை மேலே தொடர்வதில் பொருள் உண்டு “
நான் நல்ல உறக்கத்தில் முகத்தில் குளிர்நீர் கொட்டப்பட்டதைப் போல மலங்க விழித்து அமர்ந்திருந்தேன். ஆபத்துதவியாக விற்பனையாளர் உள்ளே வந்தார். – “மன்னிக்கவும். தவிர்க்க இயலாத தொலைபேசி சந்திப்பு. உங்கள் ஐயங்கள் இவரால் தெளிவாக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் “
நான் பதில் சொல்லுமுன் வாடிக்கையாளர் சொன்னார் – “இல்லை, இன்னும் முழுமையாக எனக்கு பதில் கிடைக்கவில்லை. நீங்கள் சொல்லுங்கள்….”
நான் இதுதான் தகுந்த சமயம் என்று அங்கிருந்து தப்பிக்க நினைத்தேன். விற்பனையாளர் முன் மீண்டும் ஒருமுறை அவமானப்படும் காட்சியைத் தவிர்க்க நினைத்து என் கைப்பேசியை எடுத்துக் கொண்டேன். “மன்னிக்கவும். ஒரு முக்கிய அழைப்பு. ஐந்து நிமிடங்களில் வருகிறேன்”என்று சொன்னபடி எழுந்தேன். வாடிக்கையாளர் முகத்தில் எந்த மாற்றமுமில்லை. விற்பனையாளர் முகத்தில் ஒரு சிறு வியப்பு எரிகல் வீழ்வதைப் பார்க்க முடிந்த நொடியளவுக்கு மின்னிச் சென்றது.
நான் வெளியே சென்று அந்த அறைவாயிலை மூடும்போது ஒரு மயிரிழை இடைவெளி இருக்கையில் அதைக் கேட்டேன். இந்த நொடி வரை அது அறியாமல் சொல்லப்பட்டதா, வேண்டுமென்றே சொல்லப்பட்டதா என என்னால் தீர்மானிக்க இயலவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் காதுகளில் தெளிவாக இன்றும் ஒலிக்கின்றன. வாடிக்கையாளர் விற்பனையாளரிடம் சொன்னார் – “அடுத்த முறை வரும்போது விபரம் தெரிந்த அறிவாளி யாரையாவது அழைத்து வாருங்கள்”
மூடப்பட்ட கதவின் மறுபுறத்தில் நான் நொறுங்கிக் கொண்டிருந்தேன். என்னவாகி விட்டிருக்கிறேன் நான்? எல்லா விற்பனைச் சந்திப்புகளும் விற்பனையில் முடிவதில்லை என்பது பொது விதிதான். ஆனால் வாடிக்கையாளரின் ஐயங்கள் தீர்க்கப்படவில்லை என்பது ஒரு பயிற்சியாளனாக எவ்வளவு அவமானம்? ஒவ்வொரு விற்பனையாளரும் வாடிக்கையாளரின் ஐயங்களுக்கு விடை தேடி முதலில் அணுகுவது பயிற்சியாளரைத்தான் எனும்போது நான் நின்றிருக்கும் இடம் எத்துணை பெரிய தோல்வி… கிளம்பி அலுவலகம் வந்து சேரும்வரை நிகழ்ந்தவை எதுவும் மனதில் பதியவில்லை.
மறுநாளிலிருந்து வகுப்புகளுக்கு வரும் முதல் ஆளும், முடித்துச் செல்லும் கடைசி ஆளும் நான்தான். வாங்கிய நாளிலிருந்து வாசிக்கப்படாமல் அலமாரிகளில் வீற்றிருந்த துறைசார் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று வாசித்துத் தீர்த்தேன். நான்கு மாத காலங்கள் முடிந்தபோது பயிற்சி வகுப்பின் ஒவ்வொரு ஒளித்திரைத் துணுக்கும் எனக்கு மனதில் இருந்தது. என் வகுப்புகளில் அமர்ந்தவர்கள் என்னை துறை சார் அறிவாளிகளில் ஒருவர் என புகழ ஆரம்பித்தனர். திரையைப் பார்க்காமலேயே அடுத்தடுத்த திரைத்துணுக்கினை பேசும் என் பயிற்சிமுறை பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பயிற்சி வகுப்புகளில் நான் தரும் தொழில் சார் கூடுதல் தகவல்கள் பாராட்டப்பட்டன. ஆனால் இந்த ஒளி சூழ் மேக நடை அடுத்த ஆறு மாதங்களில் உடையப்போவது குறித்த சிறு முன்னறிவிப்பையும் என்னால் அப்போது உணர முடியவில்லை.

3
ஒரு பயிற்சியாளனாக என்னை நான் வெற்றிகரமாக நிறுவிக்கொண்டுவிட்டதாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். பயிற்சி வகுப்புகளின் உள்ளடக்கம் மற்றும் ஒளித்திரை விளக்கங்கள் எங்களுக்கு தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும். ஒவ்வொரு புதிய பாலிஸி அறிமுகத்தின்போது மட்டுமன்றி புதுப்பிக்கப்பட்ட விற்பனைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் உள்ளடக்கங்களும் அனுப்பப்படும். ஒவ்வொரு புதிய பயிற்சிக்கான உள்ளடக்கம் வந்தவுடன் ஆர்வத்துடன் சென்று படிப்பேன். கிட்டத்தட்ட மனப்பாடம் செய்வதுதான். பின் பலகாலம் பழகிய பாங்கில் அதை வகுப்புகளில் கையாளுவேன். பயிற்சி புதிது என்று தெரிந்திருந்தாலும் நான் சொல்லும் விதத்தால் அது எனக்கு முன்பே தெரிந்த ஒன்று என்பது போல ஆகிவிடும். என் பயிற்சி வகுப்புகளுக்கு வருவோர் என் அறிவுத்திறனை பாராட்டி விட்டு செல்வார்கள். ஒரு கட்டத்தில் என்னை விட சிறந்த பயிற்சியாளர் இருக்க முடியாது என நானே நம்பினேன். காப்பீட்டின் அனைத்து சிக்கல்களையும் பயிற்சி வகுப்புகளின் வழியே தீர்த்து விட முடியும் என உறுதியாக நம்பினேன். இதன் தொடர்ச்சியாக இன்னும் பெரிய நிறுவனம் ஒன்றுக்கு பணி மாறினேன். புதிய நிறுவனத்தில் என் பயிற்சி வகுப்புகள் புகழ் பெறத் துவங்கின. என் பயிற்சி வகுப்புகள் குறித்த புகழ்மொழிகள் எனக்கே திகட்டும் அளவுக்கு ஆயின. ஆனால் என் கைம்மண் உலக உருண்டையை சந்திக்கும் தருணம் விரைவிலேயே வந்தது.
ஆசிரியராக, பயிற்சியாளராக இருக்கும் ஒவ்வொருவரும் உணரும் ஒன்று உண்டு. பயிற்சியில், வகுப்பில் ஒரு சில மாணவர்களை நம்மை அறியாமல் நாமே இயல்பாக மனதில் குறித்து வைத்திருப்போம். அவர்கள் சிறப்பாக வருங்காலத்தில் செயல்படப்போகிறார்கள் , விரைவிலேயே வெற்றிகரமாக அடுத்தடுத்த கட்டங்களை வெல்வார்கள் என நமக்கே தோன்றும். அவர்களை சற்று கூடுதலாக கவனத்தில் வைத்திருப்போம். அவ்வாறுதான் எனக்கு இந்த நண்பர் அறிமுகமானார். ஒரு வசதிக்கு ரவி என்ற பெயரை வைத்துக் கொள்வோம். புதிய விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாமை நடத்துகையில் அதில் அறிமுகமானவர்தான் ரவி. மிக ஆர்வத்துடன் பயிற்சிகளில் பங்கேற்றார். வகுப்புகளின் இடைவேளைகளில் கூட அவருக்கு என்னிடம் கேட்க கேள்விகளும், ஐயங்களும் இருந்தன. எட்டு நாட்கள் நீடிக்கும் பயிற்சி என்பதால் ஒவ்வொருவரையும் நன்கு கவனிக்க முடியும். ஆகவே ரவி மீது என் கூடுதல் கவனம் விழுந்தது. ரவி விரைவிலேயே வெற்றிகரமான விற்பனையாளராக சாதித்து மேலாளராக பதவி உயர்வு பெறுவார் என உறுதியாக நம்பினேன், அவரிடம் அதைச் சொல்லவில்லை என்றாலும்கூட.
பயிற்சி முடிந்ததும் ரவி வழக்கமான பணிக்குத் திரும்பினார். தற்செயலாகவே அவரது விற்பனைப் பிரிவு நான் அமரும் அதே அலுவகலகத்தில் அமைந்திருந்தது. ஆகவே அடிக்கடி அவரை சந்திக்க முடிந்தது. அவ்வப்போது சிறு நல விசாரிப்புகளுடன் எங்கள் சந்திப்பு தொடர்ந்தது.
ஒருநாள் அலுவலகத்திற்கு அருகிலுள்ள தேநீர்க் கடையில் நுழைகையில் ரவி உள்ளே இருந்தார். என்னைக் கண்டதும் வந்து “சார், இன்றைக்கு தேநீர் என் செலவு. நீங்கள் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் “என்றார்.
“என்ன விசேஷம் ரவி? ஏதாவது பெரிய விற்பனையா , பதவி உயர்வா?”
“இல்லை சார்…. நீங்க குடிங்க. அப்புறம் சொல்றேன் ..”
கடையிலிருந்து வெளியே வரும்போது ரவியின் வலக்கை கிரிக்கெட்டில் நான்கு ஓட்டங்களுக்கு நடுவர் கையசைப்பது போல் அசைந்தது. அந்த அசைவோடு சேர்ந்து ரவி சொன்னார் – “அவ்ளோதான் சார் .. முடிஞ்சது”
நான் அதிர்ச்சியானேன். “என்னாச்சு ரவி? என்ன சிக்கல்?”
“ஒண்ணுமில்லை சார், எனக்கு இந்த தொழில் பொருந்தல்லை . அதான் இன்னைக்கு பேப்பர் போட்டுட்டேன்.”
எனக்கு குழப்பமானது – “ரவி, என்ன சிக்கல்? மேனேஜர் ஏதாவது கோபமா சொன்னாரா? நான் பேசறேன் அவர்ட்ட … “
“அதெல்லாம் இல்லை சார், அவரும் அவசரப்படாதேன்னுதான் சொல்றார். ஆனா சரியா வராது சார்… எங்க போனாலும் இழுத்தடிக்கறாங்க சார்… “
நமக்கு எப்போதும் தீர்வுகள் நம் அறிவுக்கு உட்பட்டவையே என நினைப்பு உண்டு. நான் என் அறிவுக்கு உட்பட்டு சொன்னேன் –“ரவி, இப்ப விற்பனையை முடிக்கறதுதான் சிக்கலா? சரி, வாங்க அதுக்கு ஒரு ட்ரெய்னிங் மாட்யூல் இருக்கே, அதை உங்களுக்கு எடுக்கறேன். அப்புறம் என்ன?”
பேசிக்கொண்டே வந்து மின்தூக்கிக்கு காத்திருந்தோம். ரவி எதுவும் பேசவில்லை. மின்தூக்கிக்குள் நுழைந்தோம். நாங்கள் இருவர் மட்டுமே. கீழேயே வெறித்துக் கொண்டிருந்த ரவி சட்டென சொன்னார் –”சார், தப்பா நினைக்காதீங்க, நீங்க நல்லா ட்ரெய்னிங் எடுக்கறீங்க. கிளாஸ்லாம் சுவாரசியமா போகுது. நீங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. கேக்கறதுக்கும் நல்லா இருக்கு. ஆனா … இது எதுவுமே ஃபீல்ட்ல வேலைக்கு ஆகறதில்லை சார். தயவு செய்து தப்பா நினைக்காதீங்க…”
அவர் தளம் வந்து கதவு திறந்தது. அவர் தளர்ந்திருந்த என் கையைப் பற்றி குலுக்கி விடைபெற்றார். அதற்கு மேல் தளம் நான் போகவேண்டியது. மின்தூக்கியின் உள்ளே நான் உறைந்திருந்தேன். வெளியே வந்து என் இருக்கைக்குப் போய் அமர்ந்தது எதுவுமே மனதில் பதியவில்லை. மதிய உணவுக்கு நண்பர்கள் அழைத்தபோது கூட நான் எழவில்லை.
எங்கு தவறினேன்? எப்படி நிகழ்ந்தது இது? ஒரு முறை பாடம் கற்றுக்கொண்டுவிட்டதாக நினைத்ததுதான் தவறா? மீண்டும் மீண்டும் பாடமா? என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
தளத்தின் ஓய்வறைக் கதவு விரியத் திறந்தது. அலுவலக நிர்வாகம் பார்க்கும் ஃபெரோஸ், குழாய் பழுது நீக்கும் ஒருவருடன் உள்ளிருந்து வெளியே வந்தார். வந்தவர் ஃபெரோஸிடம் சொல்லிக்கொண்டு போனார் – “நீங்க மேல தொட்டிக்குள்ளே மட்டுமே பார்த்துட்டீங்க. அங்கே சிக்கல் சரியானாலும் கீழே குழாயோட T ஜங்க்ஷன்லையும் பார்த்துருக்கனும்ல.. அதான் மேல அடைப்பு சரி பண்ணியும் கீழே தண்ணி வரல்ல.“
இருவரும் வெளியே செல்ல தளத்தின் கதவைத் திறந்த கணத்தில் எனக்குள் சட்டென விளக்கெரிந்தது.
அப்படியானால் நான் இதுவரை கற்றுக்கொண்டதென்ன? ஒரு விற்பனையாளனைத் தயாரிக்கும் பணியை மாத்திரமே. விற்பனைக்கு செல்லும் ஒருவர் தன்னை எப்படியெல்லாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் , எவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும், எவற்றையெல்லாம் கையில் வைத்திருக்க வேண்டும், எவ்வாறெல்லாம் பேச வேண்டும், இன்ன பிறவற்றையெல்லாம்தான் கற்றுக்கொள்கிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் விற்பனையாளர் ஒரு விற்பனையில் தான் செய்யவேண்டியவை குறித்து மட்டுமே கற்றுக்கொள்கிறார். மேலும் மேலும் தன்னை அவர் செழுமைப்படுத்திக்கொள்வது இதே அலைவரிசையில்தான். அவருக்குத் தரப்படும் பயிற்சிமுறைகளும் அதையேதான் அழுத்திச் சொல்கின்றன. குழப்பம் என்ன என்பது தெளிவான மகிழ்ச்சியில் என் தோளை நானே தட்டிக்கொண்டேன். அடுத்த ஆறுமாதங்கள் என் தொழில்சார் வாழ்வை சுவாரசியமாக ஆக்கவும், என் பயிற்சி வகுப்புகளை வேறோர் தளத்திற்கு இட்டுச்செல்லப்போவதுமான காலமாக இருக்கப்போகிறது என அந்தக் கணத்தில் நான் நினைக்கவில்லை. ஆனாலும் அந்த நாட்களே இன்றுவரை என்னுடன் ஒரு கைவிளக்காக வந்துகொண்டிருப்பவை. நான் இன்றுவரை ரவிக்கு நன்றி உடையவன்.
(பயில்வோம்)
well collated incidents.. and a perfect title.
அற்புதம். 15 வருடங்களுக்கு முன்பு நானும் தங்களைப் போன்றே ஒரு பயிற்சியாளராக வாழ்க்கையை ஆரம்பித்தேன். படிக்கும்பொழுது என்னையே திரும்பிப் பார்ப்பது போன்று இருந்தது.
உண்மையில் 6 மரணங்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை பார்த்தபிறகு பாலிஸி சிக்கல்குறித்த கட்டுரையோ என துணுக்குற்றேன். ஆர்மி ஆசாமி முதல் அடைப்பெடுக்க வந்தவர் வரை, அடுத்தடுத்து ரசனையான எழுத்துநடையில் சுவாரஸ்யமாய் சொல்லும் எழுத்துநடை.
//
விரைவில் வேறு நல்ல வேலை தேடிக்கொள்ளும் சமாதான முடிவை என் ஐயப்படும் மனதிற்கு அளித்துவிட்டு ஆசைப்படும் மனதின் கோரிக்கைக்கு ஏற்ப காப்பீட்டுப் பணியில் சேர்ந்தேன்.
//
மனப்போராட்ட்த்தை ரெண்டு வார்த்தை கள் மூலம் அழகாய் கையாண்டிருக்கிறீர்கள்.
அனுபவங்களை சுவாரசியமாக சொல்லிச் செல்கிறார்.பலருக்கும் பயன்படும் வகையான நிகழ்ஙுகள்.அடுத்த பகுதியை எதிர்பார்க்க வைக்கிறது சரளமான நடை.
Very interesting narration.Its another mile Stone from Jaja.I enjoyed the write up when he wrote a article related to policies in JM web site .Congrats Jaja.Keep going.waiting for your next release.
சிறப்பு.தங்கள் பணிசார்ந்த அனுபங்களை உங்களுக்கே உரித்தான பகடியுடன் அழகாக முன்வைத்திருக்கிறீர்கள்.வாசிக்க சுவாரஸ்யமான கட்டுரை.
சுவாரஸ்யமான மொழிபு ஜாஜா.
‘அடேய் தம்பிகளா கேளுங்கள்…’ என்ற தொனியைத் தவிரத்து இளையவர்களுக்கான அறிவுரைகளை தனக்கானதாக ஆக்கிக் கொண்டது அருமையான உத்தி. நன்றாக எடுபட்டிருக்கிறது.
சில உரையாடல்கள் வலிந்து செந்தமிழில் எழுதப்பட்டது போலுள்ளது. வெண்முரசின் தாக்கத்திலிருந்து மீழ்வது அவ்வளவு சுலபமில்லைதான்😉… உதாரணம்
//இளையவனே, நீ சொல்பவை இக் கையேட்டில் உண்டு. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு அறிவும், படிப்பும் எனக்குண்டு என்றால் நீ மறுக்க மாட்டாய் என நினைக்கிறேன். இதில் சொல்லப்படாதவற்றை தெரிந்து கொள்ளவே உங்களை அழைத்தேன். அவற்றைப் பேச உனக்கு முடியுமானால் நாம் பேச்சை மேலே தொடர்வதில் பொருள் உண்டு “//
ராஜகோபாலன் சார், சிறப்பான தொடக்கம். உங்கள் நேர் பேச்சை போலவே மிக சுவாரஸ்யமாக எங்களை உள்ளே கொண்டு செல்கின்றீர்கள்.. அடுத்த அடுத்த பதிவுகளை எதிர்பார்த்து இருக்கிறோம்.
தங்கு தடையற்ற ஒழுக்கில் சிறந்த பயிற்றுனருக்கே உரிய மொழிபு. இயல்பான நகையுடன் மிகைகளற்ற சொற்கள். தொடருங்கள் ராஜகோபாலன்….
சிறந்த பயிற்றுனருக்கே உரிய தங்கு தடையற்ற மொழிபு. இயல்பான நகையும் மிகையற்ற சொற்களும் சிறப்பு. தொடருங்கள் ராஜகோபாலன், நன்றி
திரு .ராஜகோபால் விற்பனையாளர் வெற்றிகரமாக ஆக விற்பனை செய்யும் பொருளை பற்றிய அறிவு மட்டுமே போதாது விற்பனை யுக்திகள் மிக முக்கியம் என்பதை எளிதில் விளக்கியது அருமை. பல சுவாரஸ்யமான தகவல்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
எல்லாரும் சந்திக்கும் பிரச்சினை, ராஜகோபாலனின் கதை சொல்லும் நடை மிக நன்றாக இருக்கிறது. அடுத்த பகுதிகளை எதிர்பார்க்கிறேன்
Interesting to read. I myself worked in Life insurance industry and heard lot of stories on meeting clients from agents/officers. But here Rajagopalan has positively approached those incidents and nicely written how he expanded his horizon from those incidents.
ஒரு விண்வெளி வீரரோ அல்லது விஞ்ஞானியோ எழுதும் வரலாற்றைப் படிப்பது சுவாரஸ்யமானது. அவற்றைப் படிப்பது நாமெல்லாம் எதிர்கால விண்வெளி வீரர்கள் ஆகவிருக்கிறோம் என்பதற்காக அல்ல; சிறு படிகளாகத் தொடங்கி வெற்றியைத் தொடும் கதைகள் நம்மை எப்போதும் இன்ஸ்பையர் செய்யக்கூடியவை என்பதனால் தான்.
காப்பீடுத் துறையில் சிறிய நெருக்கடியிலும் தோல்வியிலும் மற்றும் அவமானங்களிலும் தொடங்கும் இக்கதை வெற்றியை நோக்கிச் செல்வதை படிப்பது உற்சாகமாக இருக்கிறது. ஒவ்வொரு சம்பவங்களின் மூலம் நடக்கும் திருப்பங்களும் திறப்புக்களும் மிக இதை மிக அணுக்கமாக உணரச் செய்கிறது. இந்தத் தொடர் காப்பீடுத் துறையை நமக்கு அறிமுகப் படுத்துகிறது என்பது உண்மைதான் என்றாலும் அதைவிட வெற்றிகரமாக ஒரு நிபுணத்துவத்தை நோக்கி செல்லும் உத்தியை அறிமுகப்படுத்துகிறது.
இந்தத் தொடருக்காக வாழ்த்துகளும் நன்றிகளும்.
தங்களின் எழுத்து நடை சுவாரஸ்யமாக உள்ளது. தங்களின் பதிவு படிக்க ஆர்வமாக உள்ளேன்
Interesting narration. Seems like the author progressively moving towards to explain common skills set required (and how to develop) for Sales profession or any profession required to handle people. Waiting for the upcoming chapters as I’m also a Sales Rep.
மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.. அடுத்த பதிவை படிக்க ஆர்வம்..