வெய்யிலின் மொழி

சென்னைக்குக் கிளம்ப வேண்டும் என்ற நினைப்பே சசியை சுற்றிச்சுற்றி வந்தது. இது எப்பவும் இப்படித்தான். இங்கு வரும் நாளைத் தவிர அடுத்த காலையிலிருந்து அவ்வப்போது நாட்களை மணிக்கணக்காகப் போட்டு உருட்டிக்கொண்டிருக்கும் மனம்.

சசி சமையலறைக்கு வெளியிலிருந்த தாழ்வாரத்திலிருந்து படுக்கையறையை எட்டிப்பார்த்தாள். சீரான மூச்சுடன் கங்கா படுத்திருந்தான். முன்பிருந்ததைவிட உடல் இளைத்திருக்கிறான். நிறம்கூட மாறியிருக்கிறது. இவன் யார் என்ற எண்ணம் மனதில் தோன்றியதும் துணுக்குற்று பார்வையை மாற்றினாள்.

“எட்டி…எட்டி பாத்துக்கிட்ருக்காம சாப்பிடு சசி,”

“நீங்களும் மாமாவும் காட்டுப்பெருமாள் கோயிலுக்கு போகனுன்னு சொன்னீங்க…போயிட்டு வாங்க,” என்றாள்.

“பரவாயில்ல…பாத்துக்கலாம்.”

“நான் அடுத்தவாரம் வரமுடியுமான்னு தெரியல…நீங்க கெளம்புங்க,” என்றபடி எழுந்தாள்.

மாமா, “பத்து நாளுக்கு முன்ன விரல அசச்சான். அப்பப்ப அசக்கிறான்…நம்ம பேசறத கேட்டுதான் விரல அசக்கிறான்னு டாக்டர் சொன்னார்…இப்ப என்னாச்சுன்னு தெரியல,” என்றபடி முற்றத்தைக்கடந்தார்.

அவர்கள் கோயிலுக்குச் சென்றதும் சசி தன்பையை எடுத்துவைத்துவிட்டு, நைட்டியை மாற்றி ஜீன்ஸ், சாண்டல் டாப்புடன் வந்து படுக்கையில் கங்காவின் அருகில் ஒருகால்மடித்து அமர்ந்தாள்.

 ஜன்னல்வழி வந்த காற்று அவன் கைமுடிகளை அசைத்துச் சென்றது . மீசை சிறியதாகியிருந்தது. அத்தையிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். கங்காவின் வலதுகையைத் தொட்டாள். மூடியிருந்த விழிகளில் இருந்து கங்கா எட்டிப்பார்த்து விடும் நேரம் இது என்பது போல பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

அம்மா சசியை மருத்துவமனைக்குஅழைத்துச் சென்ற அன்று காத்திருப்பவர்களைப் பார்த்த சசி மூச்சை இழுத்துவிட்டபடி குனிந்து அமர்ந்திருந்தாள். சொல்லத் தெரியாத ஒன்று உள்ளுக்குள் புரண்டு கொண்டிருந்தது.

“சும்மாதான் சசி. . . மனசில உள்ளத பேசு…”

சசி தலையாட்டினாள். எங்கோ ஒருகுரல் அல்லது ஒரு நினைப்பு அல்லது ஒரு சொல் தன்னை மையத்திலிருந்து ஓரத்திற்கு நகர்த்துகிறது என்ற நினைப்பு அவள் அகத்தைப் படபடக்கச் செய்தது. தான் நார்மல் இல்லையா என்று மனம் கேட்டபடியே இருந்தது. எத்தனை முறை மருத்துவமனையில் இது போல அமர்ந்திருக்கிறேன், இன்று அந்த மருந்தகத்தின் பெண்ணை நிமிர்ந்து பார்க்க,பெயர் சொல்லி அழைக்கும் அந்தப் பையனை நேர்கொண்டு புன்னகைக்க தயக்கமாக இருப்பதை நினைத்தபடி நகத்தைக் கடித்தாள்.

மருத்துவரிடம் வணக்கம் சொல்லும் போதும் அதே போல் ஏதோ ஒன்று அவள் புன்னகையை மலரவிடாமல் இழுத்துப்பிடித்தது.  மருத்துவர் ஏதோ பாடக்குறிப்பெடுப்பதைப்போல் மனிதர்களைக் கட்டங்களாக்கி கல்வியாலும், வேலையாலும், வயதாலும், திருமணத்தாலும் கட்டத்தைச்சுற்றி அம்புகளை நாணேற்றிவிட்டது போல கோடுகள் வரைந்தபடி, சசியிடம் பேசினார். என்றுமில்லாத ஒரு துடிப்பு உள்ளிருந்து அவளை பதற்றத்திடம் தள்ளியது.

“நெறய சினிமா பாப்பீங்களா சசி?”

“ம். . ”

“என்ன பண்றீங்க…” என்று கேட்டு குடும்பத்தைப் பற்றிய அனைத்தையும் கேட்டார். மீண்டும் ,“ஆக்சிடெண்ட்ஸ் இப்பெல்லாம் டெய்லி இன்சிடெண்ட்ஸ். ஒருத்தரோட ஆக்ஸிடெண்ட் , இன்னொருத்தர வாழ்க்கையில பெராலைஸ் பண்றதுங்கறது  சரியில்லதானே. . ”என்றார்.

“நம்மளோட இருக்கற மனுஷருக்கு எதாவதுன்னா விட்டுட்டு போகவேண்டியதுதானேன்னு சொல்றீங்களா?”

“நோ…நோ. . அவங்களப் பாத்துக்க அப்பா, அம்மா இருக்காங்களே. . ”

“ம். ஆனா நானும் ஒருவகையில விக்டிம் தானே?”

“அதனாலதான் பேசறோம்.”

“எனக்கான நியாயம் அவனோட இருக்கறது.”

“இல்லம்மா. . பழைய கதைகளை உங்க மனசில இருந்து எடுங்க.”

“கதையில்ல டாக்டர். சசியோட தனியான வாழ்க்க.”

“உன்னால இந்த பந்தத்தை நீ நெனச்சா சட்டுன்னு அறுத்துக்கமுடியும். உனக்கு அந்தப் பவர் இயற்கையிலேயே உண்டு,”என்று மருத்துவர் அவள் கண்களைப் பார்த்தார். அவள் அவரின் கண்களை சிறிது நேரம் பார்த்துவிட்டு புன்னகைத்தாள்.

அடுத்து வந்த நாட்களில் மருத்துவர் சொல்வது சரி என்று தோன்றியது. எல்லாரும் சொல்றமாதிரி தலைமுழுகிட்டு திரும்பிப்பாக்காம முன்ன போகமுடியும். பழுத்து இந்தக் காத்துக்கு உதிராத இலைபோல அல்லது இந்த ஊரில் கோயில்ல இருந்து பீடத்தோட பெருவெள்ளத்தில் ஆத்தோட வந்து  செருகி தலைமுறைகணக்கா நிக்கற நட்டாத்து லிங்கத்தைத் தடுக்கற மாதிரி ஏதோ ஒன்று அவளுக்குள் நின்று அலைகழித்தது. வெளியில் சிட்டுகளின் ஓசையைக் கேட்டு எழுந்து சலைனை நிறுத்தினாள். கீழே குனிந்து படுக்கைக்கு அடியில் பார்த்துவிட்டு மீண்டும் அவனருகில் அமர்ந்தாள்.

 “கங்கா. . நான் பேசறது கேக்குதா?. .  கேக்குதா. . ” என்றபடி நெற்றியில் கைவைத்து தலைமுடியை பின்னால் தள்ளினாள். கடிகார ஓசை மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது. வெளியில் முற்றத்தில் சிட்டுகளின் சத்தம் கேட்டது. அவன் கையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த அறையிலிருந்து வெளியில் வந்ததும் ஏதோ ஒரு விடுதலை. அவளை உணர்ந்த சிட்டுகள் தலையை வெடுக்கென்று திருப்பி மீண்டும் தத்தித்தத்திக் குதித்தன. வெயில் நான்குபக்கமும் திறந்திருந்த முற்றத்தில் பொழிந்து கொண்டிருந்தது.

மெல்லிய கானலை உணர்ந்தபடி மேற்குப் பக்கம் மரத்தூணில் சாய்ந்து கால்களை நீட்டினாள். செவ்வகமான தாழ்வாரத்தை அவள் கண்கள் சுற்றிச்சுற்றி வந்தன. எதிரே கிழக்குத் தாழ்வாரத்தில் இவன் அமர்ந்து புன்னகையுடன் பார்ப்பதைப் போல நினைத்துக்கொண்டாள். வாயில் மூச்சை இழுத்துவிட்டபடி எழுந்தாள்.

முற்றத்துச் சூட்டில் நடந்து சென்று அந்த இடத்தில் அமர்ந்தாள். நேராக அவன் படுத்திருப்பது தெரிந்தது. பின் ஏனென்று தெரியாமல் அங்கிருந்த சிறுதுடைப்பத்தை எடுத்துத் தட்டி சிட்டுகளை விரட்டினாள். அவை எழுந்து பறந்து தெற்கு மூலையில்  மீண்டும் கிச்கிச் என்று சத்தமிடத்தொடங்கின. கானல் கொஞ்சம் அதிகமாக இருக்கவும் பின்நகர்ந்து சுவரில்சாய்ந்து கொண்டாள்.  

அலைபேசியில் அம்மா, “கிளம்பிட்டியா?” என்றாள்.  “ம். . ”என்றதும் வைத்துவிட்டாள். அம்மா வீட்டின் வெளியே நடைபாதைச் செடிகளின் கட்டையில் அமர்ந்திருப்பாள் என்று சசிக்குத் தோன்றியது.

கல்லூரி முடித்த நாட்களில் அங்கு அமர்ந்து கணினியைப் பார்த்து கொண்டிருந்த சசியை, “ரங்கர் மாமா இருக்காறாங்க?” என்ற கங்காவின் குரல் நிமிரவைத்தது. உள்ளே கைகாட்டிவிட்டுக் குனிந்து கணினியைப் பார்த்தாள்.

வெளியில் வந்தமர்ந்த அப்பா, “இந்தப் பையன் கங்காதரன். பி. டெக் முடிச்சிருக்காரு சசி,” என்றார்.

“ம்,” என்று அவள் வேலையைப் பார்த்தாள். அவன் ரோஜாச்செடி நீண்டு, தொட்ட கட்டையில் அமர்ந்திருந்தான்.

அப்பா,“பூர்வீகமா நமக்கு அங்க கொஞ்சம் நிலம் உண்டுப்பா…சரியான ரெக்கார்டு இல்ல. தாலூக்காபீஸில ஆளப்பிடிச்சு அலஞ்சு வாங்கனும். அப்பதான் எவ்வளவு நிலமிருக்கு …. . நம்ம பங்கு எவ்வளவுன்னு தெரியும். அதுக்குப் பின்னாடியில்ல விக்கறதப் பத்தி யோசிக்கலாம். . ” என்றார்.

“ஒருமாதிரி அதெல்லாம் யோசிச்சுதான் மாமா வந்திருக்கேன். இதுல உங்க மனசு என்னன்னு தெரியனும்ன்னு தான் வந்தேன்,”என்றான்.

“நான் தடை சொல்லல. ஆனா என்னால அலையமுடியாது. செலவ ஏத்துக்கறேன்,”என்றார்.

அவன் நிலம் தொடர்பாக வந்துபோய் கொண்டிருந்தான்.   பணத்தட்டுப்பாடு காரணமாகத்தான் இந்தநில விவகாரம் என்று அவளுக்குப் புரிந்தது. ஒருநாள் அம்மா மதியம் அவனை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தாள்.

“இதுக்கே அலஞ்சா எப்படி கங்கா? ஜோலி எந்தா? இந்தக் குட்டி என்ன ட்ரை பண்றா அறியுமோ? கிளாஸ் போறா. . ஏது க்ளாஸ் சசி?” என்றதும் சசியைப் பார்த்து புன்னகைத்தான். சசிக்கும் அம்மாவின் குழம்பிய மொழி புன்னகையை உண்டாக்கியது.

“நானும் போறேன் அத்த,” என்றான். அம்மா அவன் வரும்போது எதாவது வேலை வைத்து, பின் சாப்பிட வைத்து அனுப்பினாள். சசி மனதில் அவனைக் கீழேயே வைத்திருந்தாள். அவனை நடத்துவதில் ஒரு அலட்சியம் காட்டினாள். அவன் வேலைக்கான விண்ணப்பம் ஒன்றைச் சேர்த்து அனுப்ப நேர்ந்த அன்று தான் சான்றிதழ்கள் அவன் படிப்பில் எத்தனை கெட்டி என்று அவளுக்குக் காட்டின.

மழை பெய்த சாயுங்காலத்தில் முகப்புத் தாழ்வாரத்தில் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்கள்கள். சசி இரும்புக்கதவின் அசைவு கண்டு வாசலைப்பார்த்தாள். தோட்டத்து நடைபாதையில் மழையில் கங்கா வருவது தெரிந்தது. மழையில் நனைந்தபடி விரைந்த நடையுடன் வந்தான். மாநிற முகத்தில் ஈரம் படர்ந்திருக்க அசட்டுச் சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தபடி வந்தான்.

“ச்ச். . நனஞ்சுக்கிட்டே. எங்கயாச்சும் நின்னு வரலமில்லடா,”என்றார்.

அவரைப் பார்த்தபடி செருப்பைக் உதறிக்கழற்றினான். நனைந்த கால்கள். நகங்கள் இளஞ்சிவப்பு கலந்த வெண்மை. அளவாக நகத்தை வெட்டியிருந்தான். ஒழுங்காகத் தேய்த்துக் கழுவாததால் நீர் உப்புப் படிந்த நகங்கள். உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.

“சசி…. சசி…” என்ற அம்மாவின் குரலால் கலைந்து விழித்தாள். அப்பாவின் டீசர்ட்,கேசுவல் பேண்டில் அவன் நடைப்பாதையில் அமர்ந்தான்.

“அந்த சேர்ல உட்கார்,” என்றார். அவளின் பார்வையின் பொருள் தெரியாமல்  எழுந்து அமர்ந்தான்.

அப்பா, “திருப்பெயரில உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களா?” என்றார்.

“ம்.. நம்ம பழைய சொந்தக்காரங்க இருக்காங்க மாமா. எதுக்கு கேக்கறீங்க?”

“சசிக்கு வரன் வந்திருக்கு. விசாரிக்கலான்னுதான்,”

அவன் பதில் சொல்ல வாயெடுக்கும் நேரத்தில், “அப்பா. . எனக்கு கங்காவை பிடிக்குதுப்பா. . ” என்றாள். மழை நின்றிருந்தது.

அம்மா, “என்னடி சொல்ற…கங்கா என்னடா இதெல்லாம்,”என்றாள்.

கங்கா எதையும் கேளாதவனாக சசியை ஒருமுறை பார்த்த பின் திரும்பி மழைநீர் நிறைத்த தோட்டத்தைப் பார்த்தபடியிருந்தான். சசி, அப்பா புன்னகைப்பதைப் பார்த்த பின் எழுந்து சென்றாள்.

எதுவும் சொல்லாமல் கங்கா எழுந்து செல்வதை சசி சன்னல் வழியே பார்த்தாள். ஈரக்காற்று மெலிதாக வீசிக்கொண்டிருந்தது.

வெளியே அம்மா கோபமாக பேசுவது தெளிவில்லாமல் கேட்டது.  அப்பா, “உனக்கு என்னாச்சு? உலகத்தில நீ மட்டும் தான் காதலிச்சு கல்யாணம் முடிக்கனுமா?”என்று வேகமாகக் கேட்டார்.

அம்மா தெளிவாக, “நான் பிரேமிச்சது டாக்டரை,” என்றாள். அம்மாவின் இந்த நேரடி பதிலால் அப்பா அமைதியானார்.

ஓடுகளில் காகம் ஒன்று தவறவிட்ட தேங்காய் மூடியின் அதிர்வில் சசி கண்களைத் திறந்தாள். தலையை உயர்த்த வெள்ளை வெயிலால் கண்கள் நிறைந்து வழிந்தது.

எழுந்து பின்பக்கவாயிலில் சாய்ந்து நின்றாள். சற்றுதூரத்தில் வயல்மேட்டில் சாய்ந்திருந்த பெரிய புளியமரம் சசியின் கண்களில் பட்டது. கண்களை நகர்த்தினாள். விழுந்த பின் எஞ்சியிருந்த அடித்தண்டிலிருந்து ஒருமுழம் தளிர் வளர்ந்திருந்தது. எதுக்கு இந்தப் போராட்டம் என்று தோன்றியதும் திரும்பிக்கொண்டாள்.

திருமணம் முடிவான நாட்களில் கங்காவிலிருந்து இன்னொருவன் எழுந்து வந்திருந்தான். அவனை  வெவ்வேறாக ஆணிஅடித்திருந்த சசி ஒவ்வொரு ஆணியாக பிடுங்கி எறிய வேண்டியிருந்தது. அவன் சென்னையில் வேலையில் சேர்ந்தும் சசியின் அம்மாதான் மனம் நிறையாமலிருந்தாள்.

திருமணத்திற்கு முன் மூன்றாம் நாள் தைக்கக் கொடுத்திருந்த துணிகளை வாங்கிவந்து கொடுத்த பின் , “கல்யாணத்தில பார்க்கலாம்,” என்று கொழுவிய கன்னங்கள் விரிய தோட்டத்தில் நடந்து மறைந்தான்.

அதற்கு இரண்டுமணிநேரத்தில் அப்பா அம்மாவுடன் அவசரமாக கிளம்பினார். திருமணத்திற்கு வந்திருந்த மாமாவும் காரில் எங்கோ சென்றார். சித்தி மட்டும் உடனிருந்தாள். அவளும் சரியாகப் பேசவில்லை.

இரவு உணவிற்கும் யாரும் வராததால் இவள் மெதுவாக, வேகமாக, மிரட்டலாக, அழுகையுடன் கேட்ட பின் சித்தி, “கங்கா இங்கவந்துட்டு போனப்ப ஒரு டூவீலர் மோதி விழுந்ததில் தலையில அடியாம்,”என்றாள்.

“சரியாயிடுமில்ல சித்தி. . ”

“சரியாயிடும் தங்கம்…மனசவிட்றாத,” என்று கட்டிப்பிடித்துக்கொண்டாள். அன்று அவள் தோளில் சாய்ந்து நீண்ட அந்தஇரவு அவன் எப்ப வேணுன்னாலும் கண்விழிக்கலாம் என்ற நொடி, இந்தநொடிவரை நீண்டிருக்கிறது.

அடுத்தநாள் காலை அவள் தோட்டத்தில் அமர்ந்து காலை ஒளியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்று அவனிருக்கையில் வேறொன்று தேவையில்லை என்று அவளுக்குத் தோன்றியது. கல்யாண நாளன்று கிளம்பி மருத்துவமனைக்கு சென்றாள்.

அவன் தலையில் கட்டுடன் சலனமற்றிருந்தான். அவளை யாராலும் தடுக்க முடியவில்லை. அவனுடனே இருந்தாள். ஒரு மாதம் சென்று வீட்டிற்கு அனுப்புகையில் அவளும் அவன் வீட்டிற்குச் சென்றாள். மூன்றுமாதங்கள் மீண்டும் அவனுடன்.

மீண்டும் அம்மாவின் அழைப்பு. அடுத்தவாரம் வருவதாகச் சொல்லிவிட்டு ஒளியில் புழுதி நிறைந்திருக்கும் புறத்தைப் பார்த்தபடியிருந்தாள்.

உள்ளே சென்று சிறியதட்டில் மிக்சரை எடுத்து வந்து சிட்டுகள் அலைந்த இடத்தில் விசிறிக்கொட்டினாள். வாசலைப் பார்த்தாள். பையை எடுத்துக் கொண்டு கங்காவிடம் வந்து நின்று , “கிளம்பறேன் கங்கா. . லீவில வரேன்,”என்று சொன்னாள். அவன் விரல் அசையவில்லை. அந்த விரலைத் தொட்டுப் பார்த்தபடி கட்டிலில் அமர்ந்தாள்.

பின்னாலிருந்து, “பெருமாளே நிக்கவும் முடியாம நடக்கவும் முடியாம எங்கள என்ன செய்ய உத்தேசம்,” என்ற அத்தையில் குரல் கேட்டது. சசி அவன் கைகளைப் பிடித்தாள். நாடியிருந்தது. அவன் அம்மா குங்குமத்தை நெற்றியில் வைத்து, “கங்கா…எழுத்திருச்சிடுடா. . ” என்ற போது அந்தவிரலில் அசைவு தெரிந்தது.

அவள்,“கங்கா…கங்கா…. . ” என்று வேகமாக அழைத்தாள். அவன் விரல் அசைக்கவேயில்லை. சசி எழுந்து அவர்களிடம் சொல்லிவிட்டு முற்றத்தைக் கடந்தாள். தெருவில் நடக்கையில் தொடுகையால் சுள்ளென்று அழைத்த வெயிலை உணர்ந்து ஓரத்து மரங்களின் நிழல்களின் பக்கம் பார்த்தாள். நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள். ஒரு நிமிசம்கூட பார்க்க முடியாமல் சட்டென்று குனிந்து நிழலில் நடந்தாள். வெயிலைக் கண்டு கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள். பேருந்து நிறுத்தம் கண்களுக்குத் தெரிந்தது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.