கிழவர் காலையிலேயே தன் ஆடுகளை அங்கு ஓட்டிவந்துவிட்டார். அவர் எப்போதும் தன் ஆடுகளை அங்கு தான் மேய்ப்பார். ஊர் எல்லையிலிருந்து பிரிந்து போகும் ஒரு கிளை சாலையின் வழியே ஒரு மையில் தூரம் உள்ளே சென்றால் அது கடைசியாக சென்று ஒரு சிறிய மேட்டை அடையும். அதன் மீது ஏறி நின்று பார்த்தால் ஒரு சறுவலும் அதனைத் தொடர்ந்து பரந்துவிரிந்த முழுக்க முட்புதர்களால் ஆன ஒரு இடம் கண்முன் விரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதுதான் இருக்கும். சில இடங்களில் சமவெளியாகவும், சில இடங்களில் முட்புதராகவும் விட்டுவிட்டு இருக்கும். தரை முழுக்க காய்ந்த புற்களால் நிரம்பி வழியும். அவர் தன் ஆடுகளை எப்போது அங்கு தான் மேயவிடுவார். சறுவலில் இறங்கியதும் கொஞ்ச தூரம் முட்புதரோ அல்லது வளர்ந்த புல்லோ இருக்காது. அது கிரிகெட் விளையாடும் இடம். பையன்கள் கால்மிதி பட்டு அந்த இடம் அப்படியே ஒரே மட்டமாக மாறியிருந்தது.
கிழவர் தினமும் தன் ஆடுகளை அங்கே மேயவிட்டுவிட்டு நிழலாக இருக்கும் ஒரு புதரின் அடியில் சென்று அமர்ந்து கொள்வார். மேல்சட்டை எதுவும் போடமாட்டார். பழுப்பேறிய ஒரு வேட்டியும், கனகாம்பர நிறத்தில் ஒரு துண்டும் தான் அவர் உடை. அந்தத் துண்டு சில சமயம் தோல்மீதும், பல சமயம் தலையில் முண்டாசாகவும் இருக்கும். கையில் மெலிதான, நீளமான ஒரு குச்சியை வைத்திருப்பார். கருமையான அவர் உடல் நன்றாகச் சுருங்கியிருந்தது. சற்றே கூன்விழத்துவங்கியிருந்தது. வெற்றிலை கரையேறிய வாயில் இடைவெளி விட்டு சில பற்களைக் காணாமல் போயிருந்தது. வயது எண்பதை நெருங்குவதால் அவரால் முன்பு போல் வேகமாக நடக்க முடியவில்லை. மதியம், கொண்டுவந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு அங்கேயே அமர்ந்திருப்பார். முன் மாலை நேரம் அவர் பையனோ, பேரனோ, அல்லது மருமகளோ யாராவது வந்து அவரையும் ஆட்டையும் கணக்குப் பார்த்து கூட்டிச்செல்வார்கள். முன்பு போல் அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. சனி, ஞாயிறுகளில் விளையாட வருபவர்களே அவருக்குப் பேச்சுத்துணை, பொழுதுபோக்கு எல்லாம். சில சமயம் அவரே சிலரை வம்புக்கும் இழுப்பார். மற்ற நாட்களில் வெற்றிலை போடுவதும், தூங்குவதும், சில சமயம் ஆடுகளுடன் பழங்கதை பேசுவதும் தான் அவர் பொழுதுபோக்கு. தப்பித்தவறி யாராவது வந்தால் பீடிக்கு காசுக் கேட்பார். எதுவும் பேசாமல் இவரிடம் காசைக் கொடுத்துவிட்டு நேராக இவர் மருமகளிடம் சென்று, “உன் மாமனாரு போம்போது வரும்போதுலாம் பீடிக்கு துட்டுக்குடுனு உசுர எடுக்கறாரு. பெரிய ரோதனயாப்போச்சு” என கொளுத்திப் போட்டுவிடுவார்கள். அன்று இரவு அவர் நினைப்பு முழுக்க “ஏன் இன்னும் தனக்கு சாவு வரல” என்று தான் இருக்கும். அவர் ஆட்டை மேயவிட்டுவிட்டு இரண்டு விஷயங்களுக்காகத் தான் காத்திருந்தார். ஒன்று சாவுக்கு மற்றொன்று சனி, ஞாயிறுக்கு.
அசோக் தன் சைக்கிளை சறுவலில் இறக்கினான். சைக்கிள் சட்டென வேகமெடுத்ததும் அவனுள் ஒரு பரவசம் உண்டானது. காற்று வேகமாக அவன் சட்டைக்குள்ளும், கால்சட்டைக்குள்ளும் சென்றது. ஒன்றறை மையில் சைக்கிள் ஓட்டிவந்தில் வேற்றிருந்த உடலுக்கு இதமாக இருந்தது. சைக்கிள் அதுவாக சென்று நிற்கும் வரை அவன் பெடலை மிதிக்கவேயில்லை. அது சரியாக சென்று வழக்கமாக அவன் நிறுத்தும் இடத்தில் நின்றது. சைக்கிளைவிட்டு இறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டுச் சுற்றி ஒருமுறை பார்த்தான். பிட்சின் அருகே சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. பிட்சின் நடுவே ஆங்காங்கே ஆடுகள் புழுக்கை போட்டிருந்தன. அவன் எரிச்சலுடன் சுற்றிப்பார்த்தான். கிழவர் தூரத்தில் வெற்றிலை மடித்துக்கொண்டிருந்தார். இவன் இங்கிருந்து, “யோவ் பெருசு……………..” என்று குரல் கொடுத்தான்.
அவர் சாவகாசமாக பதிலுக்கு, “பெருசுதாண்டா, பாக்கறியா” என்று பதில் குரல் கொடுத்தார்.
இவன் அவனுக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்தபடி திரும்பி தன் சைக்கிள் அருகே வந்து கேரியரில் இருந்த ஸ்டெம்ப் மற்றும் பேட்டை எடுத்துக் கொண்டு பிட்ச் அருகே சென்று ஒவ்வொன்றாக நட ஆரம்பித்தான். இவன் எதாவது பதிலுக்கு வருவான் என்று கிழவர் அவனையேப் பார்த்துக்கொண்டிடுந்தார். நேராகச் சைக்கிள் அருகே வந்த அவன் கேரியரில் இருந்த மூன்று ஸ்டெம்ப் மற்றும் முனை மழுங்கிப்போன ஒரு பேட்டை எடுத்துக்கொண்டு பிட்ச் அருகே சென்று ஒவ்வொரு ஸ்டெம்ப்பாக அடிக்கத் துவங்கினான். மூன்று ஸ்டெம்ப்பையும் அடித்து முடித்துவிட்டுப் பாதி பிட்ச் வரை சென்று மூன்றும் நேராக இருக்கிறதா என்று ஒரு முறைப்பார்த்துவிட்டு மீண்டும் ஸ்டெம்ப் அருகே வந்து ஒன்றறை பேட் அளவு வைத்து பேட்டால் ஒரு கோடுப்போட்டான். அதை ஒரு முறை சுற்றி சுற்றிப் பார்த்து திருப்தி அடைந்தவனாய் ஸ்டெம்ப் முன்னால் நின்று இரண்டு மூன்று ஷாட்டுகளை ஆடிப்பார்த்தான். கிழவர் இவன் செய்வதையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவன் வந்து நீண்ட நேரம் ஆகியும் மற்றவர்கள் யாரும் வரவில்லை. அவன்கள் இப்போதைக்கு வரமாட்டான்கள் என்று கிழவருக்கு தெரியும். வாராவாரம் அவர் இந்த கூத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். இவனை மட்டும் காலை ஏழு, ஏழரைக்கே அனுப்பிவிடுவான்கள். ஆனால் மற்றவர்கள் மட்டும் சாவகாசமாக எட்டரை, ஒன்பது மணிக்குத் தான் வருவான்கள். வந்ததும் இவனை சேத்துப்பானுங்களான்னா அதுவும் இல்ல. பாதி நாள் சும்மாவே உக்கார சொல்லுவானுங்க. எவனா வரலனா இவன தூரமா எங்கனா நிக்க வெச்சு சுத்தி சுத்தி ஓடவிடுவானுங்க. கிழவருக்கு அவனைப்பார்த்தால் பாவமாக இருந்தது. அவன் நின்றபடியே வந்த வழியையே பார்த்துக்கொண்டிருந்தான். கிழவர் அவனை நோக்கி குரல் கொடுத்தார்,
“ஓய்…சின்ன பையா….”
அவன் திரும்பிப்பார்த்து “இன்னா” என்றான்.
“அங்கயே எம்புட்டு நேரம் காவகாப்ப, இப்படி கொஞ்சம் வாடா” என்றார்.
கிழவன் பீடிக்கு காசுக் கேட்கத்தான் கூப்பிடுகிறான் என்று இவன் நினைத்தான். ஆனாலும் இப்படியே சும்மா நின்று கொண்டிருப்பது அவனுக்குக் கடுப்பாகவும் இருந்ததால் பேட்டைத் தோலில் அனுமார் மாதிரி தூக்கிக்கொண்டு அவரை நோக்கிச் சென்றான். அவரை நெருங்கும் வரை யாராவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான். இல்லை, யாரும் வரும் அறிகுறியே இல்லை. கிழவரை அடைந்ததும் முதலில் இவனே சொல்லிவிட்டான்,
“ஏங்கிட்ட காசுலாம் இல்ல”
“நீ பத்துபிசாக்கு பிரயோசனம் இல்லனு எனக்குத் தெரியும், எம்புட்டு நேரம் காஞ்சிகினு நிப்ப, இப்படிக் குந்து” என்றார்.
அவன் தன் ரப்பர் செருப்பை கழட்டி இரண்டையும் ஒன்றாக வைத்து அதன் மேல் அமர்ந்துகொண்டான். நிழல் கொஞ்சம் இதமாக இருந்தது. சிறிது அமைதிக்குப் பிறகு கிழவரே தொடர்ந்தார்,
“ஏண்டா இவனுங்க தான் சேத்துக்கவே மாட்றானுங்களே, இவனுகளுக்கு ஏண்டா இப்படி சுத்தற. உன் வயசு பசங்க சினேகிதகாரங்க உனக்கு இல்லியா” என்றார்.
அவன் அமைதியாக இருந்தான். பிறகு எங்கோ பார்த்தவாறே
“எனக்கு கிரிகெட் தான் புடிக்கும்” என்றான்.
“ஊர்ல வேற விளாட்டே இல்லியா, எப்பப்பத்தாலும் ஒரு மட்டையா தூக்கினு சுத்தினு இருக்கானுங்க” என்றார் வெறுப்பாக.
கிரிக்கெட்டைப் பற்றிக் குறை சொன்னதும் அவனுக்கு ரோசம் பொத்திக்கொண்டு வந்தது. கிழவனை மடக்கியே ஆக வேண்டும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அவனுக்குக் கிழவனை மடக்கச் சட்டென ஒரு கேள்வி தோன்றியது.
“ஆமா, நீயெல்லாம் என் வயசுல இன்னா பன்னுவா. விளாடவே மாட்டியா” என்றான். அவரை எதிர்க் கேள்வி கேட்டு மடக்கிவிட்டதாக அவனுக்குள் ஒரு மிதப்பு தோன்றியது. அவர் அமைதியாகச் சொன்னார். “நீச்சலடிப்பேன்” என்று.
“சும்மா கதவுடாத. காலுகழுவவே தண்ணி இல்ல, இவரு நீச்சலடிப்பாராம். எங்க மோட்ரு கொட்டாலயா” என்றான் குசும்பாக.
“ஏண்டா திமிறா, இன்னாமோ எல்லா தெரிஞ்ச புழுத்தி மாதிரி பேசற. இங்க எவ்ளோ பெரிய ஏரி இருந்துச்சுனு தெரியுமா உனுக்கு. காத்தாலேயே தண்ணில இறங்கனோன்னா சூரியன் உச்சிக்கு வரவரிக்கும் நீச்சலடிப்போம். ஏண்டா இப்போ இருக்கிற எத்திணி பேருக்குடா ஒழுங்கா நீச்சலடிக்க தெரியும். கிளம்பிட்டானுங்க மட்டையை எடுத்துகினு.” என்று சொல்லிவிட்டு தூரமாக இவன் நட்டுவைத்துவிட்டு வந்த ஸ்டெம்பையே பார்த்துக்கொண்டிருந்தார்.
கிழவர் கதைவிடுகிறார் என்றே அவனுக்குத் தோன்றியது. மேலும் கிழவரை கிளர முடிவெடுத்தான். அதற்குள் அவர் வெற்றிலையை மெல்லத் துவங்கியிருந்தார். இவன் ஏதோ கேட்க வந்ததைப் புரிந்துகொண்ட அவர் “சற்று பொறு” என்று சைகை செய்தார். சற்று நேரம் வெற்றிலையை மென்று அதன் சாரை இடது புறமாக திரும்பி தூரமாக துப்பிவிட்டு அவரே பேசத் துவங்கினார்,
“மாரியப்பன்னு எனக்கு ஒரு சினேகிதகாரன் இருந்தான். அவன் தான் எனக்கு நீச்சலடிக்க கத்துக்குடுத்தான். அவனமாரிலாம் நீச்சலடிச்ச பயங்கள நான் பாத்ததேயில்ல. ரொம்பதூரம் போய்ட்டு வருவான். இன்னாப் பன்றது. எவன் எதுல ஜித்தோ அதுலயே தான் சாவுறான்” என்றார் ஏதோ நினைத்தபடி.
“ஏன், இன்னா ஆச்சி” என்றான் இவன்.
பெருமூச்சொன்றை விட்டபடி கிழவர் தொடர்ந்தார். ஒரு நாளுக்கு ஏரில பசங்களாம் குளிக்கறப்ப நல்லா மழைப்புடிச்சிகிச்சி. பசங்கலாம் கரையேறி வந்துட்டோம். இவன் மட்டும் விடாம சுத்தி சுத்தி நீந்திக்கிட்டே இருந்தான். பசங்க குடுத்த கொரலு எதுவும் அவன் காதுல உழவேயில்ல. நல்லா மழை தண்ணிபாட்டுக்கு ஏறிக்கினே இருந்துச்சு. திடிர்னு அவனுக்கு இன்ன ஆச்சினே தெரில மூழ்வ ஆரம்பிச்சிட்டான். பாதி பசங்க வூட்டுக்கு போய்ட்டானுங்க. தீடிர்னு கானோம். அதுக்குள்ள பசங்க ஊருக்குள்ள ஓடிப்போய் ஆளுங்கள கூட்டிகுனு வந்து தேட ஆரம்பிச்சோம். மழையெல்லாம் வுட்டு தான் அவன் கிடச்சான். நல்லா ஆழாத்துல போய் சிக்கிட்டானு சொன்னாங்க. ம்… அதுக்கப்பறம் ஏது ஏரி, குளம், நீச்சலு எல்லாம்” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.
அவன் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஊர் முழுக்க சுற்றிவந்திருக்கிறான். ஊரின் இருபுறங்களில் இருக்கும் ஊர்கள் கூட அவனுக்கு அத்துபடி. கிழவர் சொல்வது போல் எந்த ஏரியும் இங்கு இருப்பதாய் அவனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை வேறு எங்கோ நடந்ததை வந்து இவனிடம் சொல்கிறாரோ என்று நினைத்தான். கிழவரிடம் தோற்றுப்போக அவன் விரும்பவில்லை. கிழவன்கள் என்றாலே அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது தான் எப்போது பொடியன்களின் நினைப்பு. அவன் அவரிடம்,
“அதெல்லாம் சரிதான். உங்கூருல ஏரி இருந்திருக்கும். நீ நீச்சலடிச்சிருப்ப. இங்க இல்லனா நான் இன்னா பன்றது. இருக்கறத தான் செய்ய முடியும்.” என்றான்.
அவன் தன் தோல்வியை ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்று கிழவருக்குத் தோன்றியது. அவரும் வீம்பாகத் தொடர்ந்தார்,
“நான் பொறந்ததுலருந்து இதாண்டா என் ஊரு. ஆசுபத்திரிக்கி கூட நான் ஊரத்தாண்டனதுல்ல பாத்துக்க” என்றார்.
“அப்ப ஆளு மூழ்வுற அவளவுக்கு ஒசரமா நம்ம ஊருல எங்க இருக்குது ஏரி” என்றான்.
அவர் கோவமாக சொன்னார் “அதோ மூணுக் குச்சிய நட்டு வச்சிக்கிறியே அங்க தான் மாரியப்பன் மூழ்கிச் செத்தான். அவன் சாபம் தான் போல ஒரு சொட்டு தண்ணீக்கூட இல்லாம போச்சி” என்று சொல்லிவிட்டு மீண்டும் வெற்றிலையை மடிக்கத்துவங்கினார்.
இவன் திரும்பி தான் நட்டுவைத்த ஸ்டெம்பையே பார்த்துக்கொண்டிருந்தான். அதற்குப் பின்னால் பலர் மைதானத்தை நோக்கி சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர்.