சுருண்டிருக்கும் உயிர்

காடுகளில் சுற்றித்திரியும் ஆனைகளின்
காலடியில் முட்டிமோதும் குட்டியைப்போல்
கழிந்திருக்கிறது சிறுபிராயம்…
பழகாத துடுப்பால் சுழலும் ஓடமாய்
பள்ளி நாட்கள் சுழன்றிருக்கின்றன
கல்வி நீரோட்டத்தில் …
சகமாணவரின் சூட்டிகை அறைகூவல்களும்
வர்க்கத்தின் பாரபட்ச பரிகாசங்களும்
உடைந்துபோன மனக்கிளையில் துளிர்த்த
அறிவு தளிர்களை வளர்ந்தெழாமலே செய்திருக்கின்றன…
வேர்க்கும் வினாக்களை அதிகாரம் எழுப்புகையில்
தலை தாழும் துக்க பொழுதுகளில்
வேகத்தை கூட்டிக்கொண்டு துடித்திருக்கிறது இதயம்…
கோழைத்தனத்தை தாங்கிக்கொண்டு
மூச்சிரைக்க ஓடிய வாழ்க்கையை
காலத்தின் சந்தர்ப்ப வாய்ப்புகள் ஒரு முட்டு சந்து
வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறது…
சமுதாய அவலங்களின் நாற்றத்தில்
புரண்டும் புழங்கியும் சமரசம் செய்தும்
நீர்பறவையின் கால்பிடி நழுவி
நீரின் மேலேயே விழுந்த மீனாய்
வீட்டின் பாதுகாப்பு பாறையின் இடுக்குக்குள்
அடங்கி ஒடுங்கி சுருண்டிருக்கிறது உயிர்
உடலை தூக்கிகொண்டு வெளிக்கு வராமலே….

One Reply to “சுருண்டிருக்கும் உயிர்”

  1. உடைக்கப்பட்ட கண்ணாடியில்
    சமூகத்தின் நரகல் பீம்பங்கள்
    போக மறுக்கும் உயிரும்
    வாழ மறுக்கும் உடலுமாக
    வாழ்வு தன்னை வாழும் வரிகள்

Comments are closed.