காகித முகங்கள்

முதலில் தன் இடைமேல் பூச்சிகள் இரண்டு ஊர்வதைப் போலத்தான் அவள் உணர்ந்தாள். இரண்டு அல்ல; கூட்டம் கூட்டமாக பூச்சிகள் அவளின் இடையைச்சுற்றி வளைத்து மேலேறி மார்பை நோக்கிச் சென்றன. அவை பூச்சிக்கூட்டம் அல்ல பெரிய தடித்த நீளமான விரல்களைக் கொண்ட அகன்ற கைகள் என்று புரிந்தபோது, அவை அவளது மார்புகளை அழுந்தப் பற்றியிருந்தன. அவளது மார்பின் அத்தனை நுட்பங்களையும் கண்டறியும் வேட்கையிலும் வெறியிலும் அந்தக் கைகள் வேகமாக இயங்கின. உடம்பின் உணர்வு நரம்புகள் முடிந்து திரண்ட புள்ளியில் அக்கைகள் பற்றிப்படர்ந்தன. அவற்றின் கோரப்பிடியிலிருந்து தன்னை விடுவிடுத்துக்கொள்ள அக்கைகளை இறுக்கிப்பிடித்து விலக்க முயன்றாள். அவை மண்பற்றிய வேர்போல நகர மறுத்தன. பாதி வெட்டியும் வெட்டாமலும் இருந்த நகக்கண்களால் அந்தக் கைகளைக் கீறினாள். அவை, வெட்டி வைத்த பெரிய பெரிய மாமிசத்துண்டுகளைப் போல் மதர்ப்பாக இருந்தன. கூர்மையான நகம் கீறிப் பீறிட்ட இரத்தம் மார்பிலிருந்து வழிந்து முதுகை நனைத்தது. 

வியர்வையின் ஈரத்தில் விழிப்புத்தட்டி எழுந்தவள், தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். பக்கத்தில் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அறையில் ஒளிர்ந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில் படுக்கையறையின் கதவு சாத்தப்பட்டு மேலே தாளிடப்பட்டு இருப்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள். மனது படபடவென்று அடித்துக் கொண்டது. பயத்திலும் வெக்கையிலும் துளிர்த்திருந்த வியர்வையை கட்டிலின் மீது தொங்கவிடப்பட்டிருந்த துண்டை எடுத்து துடைத்து எடுத்தாள். குழந்தையின் முன் நெற்றியிலும் ஒரு முறை துண்டால் ஒற்றி எடுத்தாள். கனவுதான் என்பது சற்று ஆறுதலைத் தந்தது. இருந்தாலும் மனதிலிருந்து அச்சம் முழுவதுமாய் விலகியிருக்கவில்லை. நடுவில் அணைத்து வைத்திருந்த ஏ.சி.யை மறுபடியும் ரிமோட் வைத்து முடுக்கிவிட்டாள். கட்டிலுக்கு கீழே இருந்த பாட்டில் நீரை எடுத்து அருந்திவிட்டு படுத்துக்கொண்டாள். மார்பு வலித்தது. வாய்விட்டு அழுதால் கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கும் என்று பட்டது.

O

கண்களைச் சுருக்கி சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த கருமாரியம்மன் படக் காலண்டர் அட்டைக்கு மேலே மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். போதையில் தளும்பிய கண்களால் அவனால் சரியாகப் பார்க்க இயலவில்லை. தோராயமாக மணி இரவு ஒன்றைத் தொட்டிருக்கும் என்று யூகித்துக் கொண்டான். அவனுடன் அறையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் பாண்டியன் தன் குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக இரண்டு நாட்கள் முன்பு சொந்த ஊருக்குக் கிளம்பிப் போயிருந்தான். இருவருக்கும் ஒரே ஊர் – குலசேகரமங்கலம். இருவருமே சங்கரன் கோவிலிலிருந்த ‘நயினார் டிராவல்ஸி’ல் கார் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் 407 ரக வேனும், இவன் மஹிந்திரா வேனும் ஓட்டுவார்கள். முதலில் பாண்டியன்தான் சென்னைக்கு வந்திருந்தான். ஃபைனான்ஸில் ‘இண்டிகா’ வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தான். ஊர் முழுவதும் பாண்டியன் கார் வாங்கி முதலாளி ஆகிவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். பாண்டியனின் குழந்தைக்கு மொட்டை போட்டு கறிவிருந்து கொடுக்க, இவன்தான் ஐயாயிரம் கைமாற்றாகக் கொடுத்திருந்தான். அது அந்த மாத டியூவுக்காக ஒதுக்கி வைத்திருந்த பணம்.

பாண்டியன் இல்லாததால் தனிமையில் அமர்ந்து குடிக்கும்படி ஆகிவிட்டது. அதுகுறித்து அவனுக்குப் பெரிய வருத்தமொன்றுமில்லை. மனவேதனையின் பொருட்டு குடிப்பதானால் புலம்புவதைக் கேட்க யாரேனும் ஒருவராவது இருக்க வேண்டும். இன்று, அவன் மகிழ்வின் எக்களிப்பில் இருக்கிறான். வெற்றிக்களிப்பில் இப்போதுதான் மனம் சற்று ஆறியது போல இருந்தது. அந்தச் சம்பவத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டான். தன் இடது கையை உயர்த்தி உள்ளங்கையில் அழுத்தி முத்தமிட்டுக் கொண்டான். வாங்கி வைத்திருந்த பிராந்தி முழுவதும் தீர்ந்துவிட்டிருந்தது. பாட்டிலை தன் கண்ணுக்கு நேராக உயர்த்தி காலியாக இருந்த டம்ளரில் கவிழ்த்தான். சரியாக மூன்று பிராந்திச் சொட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன.

O

அதன்பின் அன்றைக்கு அவளுக்குத் தூக்கம் கூடவில்லை. காலையில், அலாரம் அடித்தபோது இன்னும் கொஞ்சம் தூங்கச் சொல்லி கண்கள் இறைஞ்சின. தன் மார்பின் மேல் இருந்த குழந்தையின் கையை மெதுவாக விலக்கிவிட்டாள். முந்தின நாள் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் உட்கண்ணில் விரிய, பயத்தில் அவளுக்கு மனது அடித்துக் கொண்டது. ராகவிடம் சொன்னால் ஒரு வேளை ஆறுதல் கிடைக்கலாம். ஆனால் கடைசியில் எல்லாவற்றுக்கும் இவள் வேலைக்குப் போவதுதான் காரணம் என்பதில்தான் வந்து அது முடியும். மேலும், தொலைப்பேசியில் இது போன்ற விசயங்களை பகிர்வது அத்தனை உசிதமாக இருக்காது. பணியின் நிமித்தம் பாலைவனத்தில் காய்ந்து கொண்டிருப்பவன் இதை எப்படிப் புரிந்து கொள்வான் என்று சொல்வதற்கில்லை. எனவே அந்த யோசனையை அப்போதைக்கு ஒத்திப்  போட்டாள்.

தலையை இருகையால் தாங்கிப் பிடித்தபடி படுக்கையிலேயே அமர்ந்திருந்தாள். கதவு மெதுவாக இரண்டுமுறை தட்டப்பட்டது. அத்தைதான் தட்டியிருப்பாள். குழந்தையின் தூக்கம் கலைந்துவிடாமல் கவனமாக எழுந்து, சத்தமின்றி தாள் நீக்கி வெளியேறினாள். ஹாலில் இருந்த சாப்பாட்டு மேசையில் காபி கலந்து வைக்கப்பட்டிருந்தது. பல் துலக்கி வந்த போதும் சூடு குறையாமல் இருந்தது. படிந்திருந்த ஆடையை இழுத்துப் போட்டுவிட்டு காபியை உறிஞ்சினாள். மாமா வெளி முற்றத்தில் நாற்காலியைப் போட்டு தமிழ் இந்துவை விரித்து வைத்துக் கொண்டிருந்தார். அடுக்களையிலிருந்து இட்லிகள் வேகும் வாசனையுடன் பூஜை அலமாரியில் சொருகப்பட்டிருந்த பத்தியின் வாசனையும் கலந்து வந்தது. மூன்று மாதங்களாக மாறாத அதே காட்சிகள்; அதே வாசனைகள். காபியை கையில் எடுத்துக் கொண்டு, மிகவும் இயல்பாக செய்வது போல் ஹாலிலிருந்து ஒரு முறை வாசலையும் தெருவையும் எட்டிப் பார்த்தாள்.

குழந்தைப்பேற்றுக்குப் பின்னர் வேலைக்கு திரும்ப முடிவெடுத்த போது, துணைக்கு அவள் அம்மாவோ அப்பாவோ அவளுடன் வந்து தங்கவியலாத சூழ்நிலை. அத்தையும் மாமாவும் வந்தார்கள். அவளுக்காக இல்லாவிட்டாலும் குழந்தைக்காக வந்தார்கள். அவர்கள் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தால் மட்டும் இவளது அம்மாவோ அப்பாவோ அல்லது இருவருமோ அவர்களுக்குக் கிடைக்கும் விடுமுறைக்கு ஏற்ப வந்துவிட்டுப் போவார்கள்.

குளித்துக் கிளம்பி மதியச்சாப்பாட்டினைக் கட்டி எடுத்து வெளியே வந்தபோது மறுபடியும் அவளை அச்சம் தொற்றிக்கொண்டது. விடுப்பு எடுத்து வீட்டிலேயே தங்கிவிடலாம் என்றால், அவளுக்கு விடுப்பேதும் மிச்சம் இருக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. இருந்த விடுப்பை எல்லாம் குழந்தைப்பேறோடு சேர்த்து எடுத்தாகிவிட்டது. அடுத்து ராகவ் ஊருக்கு வரும்போது வேறு எடுக்க வேண்டியிருக்கும். அப்போதும் கூட சம்பளபிடிப்புடன் கூடிய விடுப்பே கிடைக்கும் சூழல். ஒரு வேளை விடுப்பே எடுத்தாலும் ‘ஏன் எதற்கு’ என்று துளைக்கப்படும் அத்தையின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக வேலையில் அமிழ்ந்து தன்னை கரைத்துக் கொள்வதுதான் தன்னைப் பீடித்திருக்கும் பயத்திலிருந்து வெளியேற இப்போதைக்கு அவளுக்கிருக்கும் ஒரே வழி.

மாமாவிடம் சொல்லிவிட்டு வெளியேறியவள், வீட்டின் கிரில் கதவினைச் சாத்தும் போது கீழே மண்ணைப் பார்த்தாள். எறும்புகள் கூட்டமாய் மொய்த்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள். தெருவில் இறங்கியவள் ஒருமுறை தெருவின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை எட்டிப் பார்த்தாள். திங்கட்கிழமையாதலால், வேலைக்கும் பள்ளிக்கும் கிளம்பியவர்களாலும் கிளப்பியவர்களாலும் தெருவே பரபரப்படைந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை மதியப் பொழுதுகளில் இவர்கள் எல்லாம் எங்கே போய் தொலைகிறார்கள்? அவளுக்கு தெருவிலிருக்கும் ஒவ்வொருவர் மீதும் எரிச்சல் வந்தது. அப்போது, தன் பக்கத்தில் வந்து ஒலித்த ‘ஹார்ன்’ சத்தம் கேட்டுத் துள்ளி ஒதுங்கினாள். படபடத்தாள். வேகமாய் மூச்சு வாங்கினாள். பெரியவர் ஒருவர் தன் பேரப்பிள்ளையை வண்டியில் வைத்து பள்ளிக்கு அழைத்துப் போய்க்கொண்டிருந்தார். படபடப்பு குறையவே இல்லை. கழுத்துப் புடதியிலிருந்து தொடங்கி முன் நெற்றியின் இரு ஓரப்பொட்டுகள் வரை வலி பரவ ஆரம்பித்தது.

O

நெற்றிப்பொட்டு இரண்டையும் அழுந்திப் பிடித்தவாறே அவன் எழுந்தான். தலை பாராமாகி அழுத்தியது. பாண்டியன், பக்கத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். டேபிள் ஃபேனினின் ஓடும் இறக்கைகளுக்கு இடையே காகிதத்தை நுழைக்கும் போது எழுவது போன்ற ஒலியில் குறட்டை விட்டபடியிருந்தான். இவன் தூங்கிப் போகும் வரையில் அவன் அறையை வந்து சேர்ந்திருக்கவில்லை. இரவுப் பேருந்தைப் பிடித்து காலையில் வந்திருப்பானாயிருக்கும். வாந்தி எடுத்து வந்ததும் தலைபாரம் கொஞ்சம் குறைந்திருந்தது போல் தெரிந்தது. ஆனால் கொடூரமாக பசித்தது. தூங்கிக் கொண்டிருந்தவன் கொண்டு வந்திருந்த பையைத் துழாவினான். சம்படத்தில் பாதியாக உடைத்து வைக்கப்பட்டிருந்த மாவிளக்கு இருந்தது. பிட்டுத் தின்றான். மீதி வயிற்றை தண்ணீரால் நிரப்பினான். எழுந்து வேலைக்குச் செல்ல வளையவில்லை. இன்று, கணக்கைத் துவங்க வேண்டும். அடுத்த நான்கு நாட்களில் பம்பரமாய் சுழன்று கார் ஓட்டினால் தான் நாற்பது ‘டிரிப்கள்’ என்ற இலக்கை அடைய முடியும். இல்லாது போனால் நேற்று விட்டது போல் அடுத்தும் எண்ணிக்கையை அடைய முடியாமல் போகக் கூடும். நாற்பது ட்ரிப்களை எட்டினால் மட்டுமே அவன் இணைந்திருக்கும் வாடகை வண்டி நிறுவனம் அளிக்கும் அந்த வாரத்துக்கான ஊக்கத்தொகை கிடைக்கும். அதுவும் கிடைக்காது போனால், நாளுக்கு பத்து மணி நேரம் முதுகு ஒடிய, நிற்க நகர நேரம் இல்லாமல் வண்டி ஓட்டும் உழைப்பெல்லாம் வீணாய்ப்போகும். ஊக்கத்தொகை இல்லாமல் கிடைக்கும் பணம் பெட்ரோலுக்கும் உணவுக்குமே சரியாக இருக்கும். டியூவுக்கு பைசா நிற்காது.

இதைப்பற்றி யோசிக்கும் போதே சனிக்கிழமையின் இறுதிச் சவாரியில் நடந்ததும், ஞாயிறு முழுவதும் பைக்கில் தெருத் தெருவாய் சுற்றியலைந்ததும் மண்டைக்குள் ஓடியது. ஒரே நேரத்தில் அவமானமும் ஆத்திரமும் மகிழ்ச்சியும் பின்னிப்பின்னி வந்துபோனது. படுக்கையில் போய் சாய்ந்து கொண்டான்.

O

ஓ.எம்.ஆரில் இருந்த சரவணா ஸ்டோர்ஸில் சவாரியை இறக்கி முடிக்கும் முன்னரே அடுத்த சவாரி சோழிங்கநல்லூர் ‘எல்காட்’டில் வந்து விழுந்தது. ‘எல்காட்’டிலிருந்து நங்கநல்லூர் சென்று இறக்க வேண்டியிருந்தது. ஆவின் சிக்னலில் ட்ராபிக் நெறித்தது. மூத்திரம் வேறு முட்டிக் கொண்டு வந்தது. மூத்திரப்பை அழுத்தி அடிவயிறு பாரமாகியது. ஒதுங்கிப் போவதற்கு இயலாத சூழல். உடன் வருபவர் ஆணாக இருந்தாலாவது எங்காவது ஒதுக்கி, சொல்லிவிட்டுப் போய் வரலாம். பெயரைப் பார்த்தான். அடக்கிக் கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. அதற்குள் இரண்டு முறை அழைப்புகள் வந்தன. எடுத்து டிராஃபிக்கில் மாட்டி நிற்பதைச் சொல்லி வைத்தான். அடுத்த இரண்டு நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு அழைப்புகள்; அதே எண்கள்.

மூன்றாவது முறையும் அழைப்பு வந்தபோது எடுத்து, “மேடம் முன்னாடி இருக்கிற கார் நவுந்தாதானே நான் வர முடியும். ஆவின்கிட்ட அவ்ளோ ட்ராஃபிக்” என்று சொல்லி எதிரே இருந்தவள் பதில் சொல்லும் முன்னரே ஃபோனை வைத்தான். போனை வைத்ததும் அந்தச் சவாரிக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சிக்னல் பச்சையாகி திருப்பி வளைந்ததும் மறுபடியும் எல்காட் பகுதியிலேயே சவாரி விழுந்தது. வார நாட்களில் பரபரப்பாக இருக்கும் எல்காட் பகுதி சனிக்கிழமை அன்று அதிக ஆள் நடமாட்டமின்றி இருந்தது. டோலில் இருந்து உள்ளே நுழையவும் அழைப்பு வந்தது. மீண்டும் அதே எண்; அதே குரல்; அவசரம்.

வண்டியின் எண்ணைப் பார்த்து, அவள் கைகாட்டவும் வண்டியை அவள் ஏறுவதற்குத் தோதாக முன்னால் சென்று நிறுத்தினான். முன் இருக்கையின் பக்கமிருந்த கதவைத் திறந்து முதலில் உட்காரப் போனவள், ஒரு முறை நிதானித்துவிட்டு அதைமூடி, பின்பக்கக் கதவைத் திறந்து பின்னிருக்கையில் சென்று அமர்ந்தாள். கதவை அழுத்திச் சாத்திவிட்டு, ‘சைல்ட் லாக்’ போடப் பட்டுள்ளதா என்று மறுபடி ஒருமுறை திறந்து மூடி சரிபார்த்துக் கொண்டாள்.

அவன் கண்ணாடியில் அம்மைத் தழும்பேறிய தன் முகத்தை ஒரு முறைப் பார்த்துக் கொண்டான். தொடர்ச்சியாக கார் ஓட்டியதன் களைப்பும், நான்கைந்து நாட்களாக மழிக்காத தாடியும் அவனை மேலும் சோர்வுடையவனாகக் காட்டியது.

“நங்கநல்லூர். கொஞ்சம் சீக்கிரம் போங்க” என்று அவசரப்படுத்தினாள். அவள் உள்ளே ஏறியதும் காய்ந்த ரோஜாப்பூ மாலைகளிலிருந்து வரும் வாசனை எழுந்து வந்தது.

அன்று அவளுக்கு விடுமுறைதான். ஆனால், திங்கட் கிழமை காலையில் ‘லைவ்’ செல்ல வேண்டிய ‘கோட்’ முழுவதும் இவளது ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மறுசோதனை செய்து ஒப்புதல் தர வேண்டியிருந்தது. ஒரு மணி நேர வேலை என்று சொல்லித்தான் சனியன்றும் வரச்செய்தார்கள் ஆனால் அவள் அதை முடித்துக் கிளம்பும் போது மணி மாலை ஐந்தைத் தாண்டியிருந்தது. வெள்ளிக்கிழமையும் இதன் பொருட்டு வீடு சென்று சேரும்போது மணி இரவு ஒன்பதைத் தொட்டிருந்தது. மாமாவும் அத்தையும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், இவளுக்குத்தான் குற்ற உணர்வு பிடுங்கித் தின்றது. இவள் வீட்டை அடைந்த போது குழந்தை தூங்கிப் போயிருந்தாள். பொதுவாக, சாயுங்காலம் நேரத்துக்கு வந்து, இவள் தான் சமைப்பாள். சனி, ஞாயிறு சமையலும் இவளுடையது. வெள்ளியன்று அத்தையே சமையல் முடித்து, பாத்திரம் முதற்கொண்டு துலக்கி வைத்திருந்தாள். சனியும்  நாள் முழுதும் இவள் சமைக்க முடியாதபடி ஆகிவிட்டிருந்தது. ஆறு மணிக்குள் போகாவிட்டால் இரவு சமையலையும் அத்தையே செய்து முடித்து வைத்துவிடுவாள்.

“மேடம்.. நீங்கதானே.. மொத தடவ கேப் போட்டு அப்பறம் கட் பண்ணி விட்டீக?”

“ஆமா.. கேப் வரவேயில்ல. எனக்கு சீக்கிரமா போணும்”

“இங்கன ரோடு ஃபுல்லா டிராஃபிக்கி. நான் மட்டும் என்ன செய்ய முடியும் சொல்லுங்க?  நீங்க எத்தன தடவ கட் பண்ணி கட் பண்ணி போட்டாலும், பக்கத்துல வேற வண்டி எதுவும் இல்லன்னா திரும்பப் திரும்ப  ஒரே வண்டிக்குத்தான் டிரிப் வந்து விழும் கேட்டியளா? நீங்க மொதல்ல கட் பண்ணிவுட்டதும் என்னியத்தான். நீங்க கட் பண்ணின்னா பிரச்சனை இல்ல. இதுவே நான் பண்ணா கம்பெனிக்காரன் என்னையப் போட்டுச் சவுட்டுவான்” என்று சொல்லிவிட்டு திரும்பி அவளை ஒருமுறைப் பார்த்துக் கொண்டான்.

“ஓ.. சாரி!”

சோழிங்கநல்லூரிலிருந்து பெரும்பாக்கம் வழியே மேடவாக்கம் கூட்டு ரோட்டினை அடையும் வரை ட்ராஃபிக் இருப்பதாக மேப்பில் காட்டியது. “மேடம்.. இந்த ரூட் ஃபுல்லா ட்ராஃபிக்கா இருக்கு. வண்டிக யெல்லாம் பையத்தான் போவுது. சர்ச்சுக்கிட்ட ஒடிச்சு பள்ளிக்கரணை ரூட்ல விடவா.. கொஞ்சம் சுத்து. ஆனா டயதுக்குப் போய்க்கிடலாம்”

“எதுல வேகமாக போவுமோ அதுலயேப் போங்க” என்றவள், மொபைலை எடுத்து தான் கிளம்பி வந்து கொண்டிருப்பதாக மாமாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

பள்ளிக்கரணையில் திரும்பினான். காமாட்சி ஹாஸ்பிட்டல் வழியே கீழ்க்கட்டளையை அடையும் வழியும் கூட்டம் நிரம்பியிருந்ததால் அதையும் கடந்து, ஆதம்பாக்கம் வழியேச் சுற்றி  நங்கநல்லூரை வந்தடைந்தார்கள். வண்டியை கட் செய்து இறங்கும் போதுதான் கவனித்தாள். எழுநூற்றுச் சொச்ச ரூபாய் காட்டியது.

“என்னங்க எழு நூத்து சொச்சம் காட்டுது. நான் புக் பண்ணும் போது வெறும் முந்நூறு தான் காட்டுச்சு. இப்போ அப்படியே டபுளா காட்டுது.”

“மேடம்.. நாமதான் சுத்திட்டு வந்தோமே.. அதுக்கும் மேலே பீக் சார்ஜ் வேற விழுந்திருக்கு.. அதான் இம்பூட்டு”

“இல்ல எனக்கு புக் பண்ணும் போது என்ன காட்டுச்சோ.. அதான் தருவேன். அதுக்கு மேல தரமாட்டேன்” இதைச் சொல்லும் போது அவள் முகம் முற்றிலும் மாறியிருந்தது. எதிரெ இருப்பவனை கூசிப் போகச் செய்யும் பாவம் அவள் கண்களில் தெரிந்தது.

“மாத்திப் போகும்போது உங்ககிட்டச் சொல்லிட்டுத்தானே போனேன். அப்புறம் இப்பை வந்து இப்படிச் சொன்னா எப்டி.. மருவாதியா காசைக் கொடுத்துட்டு மறுசோலி பாருங்க” என்று அவளின் முகத்துக்கு நேராக விரலைச் சொடுக்கிப் பேசினான்.

“நீங்க மொதல்ல மரியாதையாப் பிஹேவ் பண்ண கத்துக்கோங்க” இதை அவள் சொல்லும் போதுதான் அதைக் கவனித்தான். அவள் ஒரு முறை கூட இவன் முகத்தைப் பார்த்துப் பேசவேயில்லை. வேண்டுமென்றே தவிர்ப்பது தெரிந்தது. அவமானம் அவனிடத்தில் ஆணிபோல இறங்கியது. 

“காட்டுன காசைத் தந்தா நான் ஏன் பேசப்போறேன். காசை வாங்கிட்டு பொத்திட்டுப் போயிட்டே இருப்பேன்.. ” இந்த முறை வேண்டுமென்றே வார்த்தையைத் தடிக்கவிட்டான்.

அவனுக்கு கேட்காத குரலில் முணுமுணுத்தபடியே தன் கைப்பையைத் திறந்து ரூபாய்களாகப் பொறுக்கி எடுத்து எழுநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தாள். சில்லறைகளையும் பொறுக்கி எடுத்துக் கொடுத்தாள். அப்போதும் அவள் முகம் நெடுஞ்சாலை ஒன்றில் அடிபட்ட பிராணி ஒன்றைப் பார்க்கும் பாவத்துடன் இருந்ததை இவன் கவனிக்கத் தவறவில்லை. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேளையாக அந்தக் கார் கம்பெனியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி நடந்ததையெல்லாம் கொட்டித் தீர்த்தாள். டிரைவரே தன்னை தவறான பாதையில் அழைத்து வந்துவிட்டதாகவும், மேலும் முறையில்லாமல் பேசியதாகவும் புகார் அளித்தாள். அடுத்த அரைமணி நேரத்தில் அவள் அதிகமாய்ச் செலுத்திய பணம் அவள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

முந்திய கால் மணி நேரத்தில் இவனுக்கு கம்பெனியிடமிருந்து அழைப்பு வந்தது. அவன் மீது அளிக்கப்பட்டிருந்த புகாருக்கு விளக்கம் கோரப்பட்டது. அவன் எவ்வளவு சொல்லியும் நம்பாமல் அவனுடைய கணக்கிலிருந்து அந்த நானூறு ரூபாய்கள் கழித்துக் கொள்ளப்பட்டன. மேலும் வாடிக்கையாளர்களிடம் பணிவாக நடந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

ரூபாயை இழந்ததைவிட, தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் அவனைப் போட்டு அழுத்தியது. வண்டி ஓட்டும் போது கம்பெனிக்காரர்கள் அழைத்துத் திட்டியது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. ஆத்திரம் பொங்கிப் பெருகியது. அடுத்தடுத்த சவாரிகளில் வண்டிக்கு எதிரே வந்தவர்கள் போனவர்களையெல்லாம் ஏசிக்கொண்டிருந்தான். வண்டியை செட்டில் போட்டுவிட்டு அறைக்கு வந்தான். தன் மீது தவறே இல்லாத போதும் அவள் கூறிய பொய்ப்புகாரினை நினைத்து நினைத்து வெதும்பினான். ஆத்திரம் தீர்வதாய் இல்லை. உடல் அத்தனை களைத்திருந்தும் துளியும் தூக்கம் பிடிக்கவில்லை. பாண்டியனும் கூட இல்லாததால் தனியனாக உணர்ந்தான். இந்த நகரத்தில் அவனுக்கிருக்கும் ஒரே ஆறுதல்.

O

ஞாயிறு காலை சவாரிக்கு போவதில்லை என்று முடிவு செய்து கொண்டான். மறுநாள் அதிகமாயிருந்ததே தவிர கனல் தணிந்திருக்கவில்லை. முடிவெடுத்தவனாய் தனது பைக்கைக் கிளப்பினான். அவன் தங்கியிருந்த ராயப்பேட்டையிலிருந்து நங்கநல்லூர் வந்துசேர ஒருமணி நேரத்துக்கும் மேலாகியது. காலையிலிருந்து எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை.

நங்கநல்லூரை அடையும் போது மணி இரண்டாகியிருந்தது. எப்போதும் மேப்பின் உதவியுடனே செல்வதால் எந்தப் பாதையும் அவனுக்கு நினைவில் இருக்கவில்லை. போதாததுக்கு ஒரே மாதிரியாக இருந்த தெருக்கள் அவனை மேலும் குழப்பின. முந்தின நாள் பார்த்த மணிக்கூண்டு கண்ணில் பட்டது. அதை மையமாக வைத்து சுற்றியிருந்த ஒவ்வொரு தெருவாக சென்று திரும்பிக் கொண்டிருந்தான்.

இரண்டு தெருக்கள் ஒரே மாதிரியாக இருந்தன. அதில் ஒன்றுதான் அவளுடையது. ஆனால், அதில் எதுவென்று வித்தியாசம் காண இயலவில்லை. உள்ளே இருந்த வீடுகளில்கூட பெரிய மாற்றமிருக்கவில்லை. இரண்டு தெருவையும் ஒருகோடியிலிருந்து மறுகோடி வரை தனது பைக்கைக் கொண்டு போவதும் வருவதுமாய் இருந்தான். எத்தனை யோசித்தும் எதையும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. அவனுக்கு நினைவில் இருந்ததெல்லாம் கடுகடுவென்று வெடித்த அவள் முகம் மட்டுமே. அதை நினைக்க நினைக்க வெறி கொண்டவனாய் பைக்கை முறுக்கினான்.

மதியம் சாப்பாட்டுக்குப் பின்னர் அத்தை மாமாவுடன் குழந்தையும் தூங்கிப் போயிருந்தாள். அவளுக்கு மதியம் தூங்கிப் பழக்கமில்லை. ஆதலால், தொலைக்காட்சியை ஓடவிட்டு வெறித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த நகத்தைக் களைய நகவெட்டியுடன் வெளியே வந்தாள். முற்றத்துத் தூணுக்கு பின்புறம் போடப்பட்டிருந்த கறுப்பு பட்டியக்கல்லில் அமர்ந்து நகத்தை வெட்ட ஆரம்பித்தாள். அப்போதுதான் பைக் ஒன்று முன்னால் வருவதும் போவதுமாய் இருந்ததைக் கவனித்தாள். தெருவில் ஒரு ஜனமில்லை. யாராவது முகவரி தேடி அலைகிறார்கள் போலும் என்று நினைத்தாள்.

திரும்பத் திரும்ப வண்டி வரவும் போகவும் இருக்கவே, எழுந்து முன்னால் சற்று நகர்ந்து பார்த்தாள். இந்த முறை அவனும் பார்த்துவிட்டான். வண்டியை ஆன் செய்தபடியே ஓரமாய் நிறுத்தினான். உதவும் பொருட்டு அவள் முன்னே வந்தாள். தலையைக் குனிந்து கொண்டே வந்தவன் கிரில்லின் முன்னால் நின்றான். இரண்டு கால்களையும் கொஞ்சமாய் அகட்டினான். அவளின் மார்பைப் பார்த்தபடியே, ஜிப்பை கீழிறக்கி தன் இடது கையால் இயக்கத் தொடங்கினான்.

* * *

பி.கு : கதையின் தலைப்பு பிரமிளின் கவிதை ஒன்றிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

2 Replies to “காகித முகங்கள்”

  1. கதை ஆரம்பம் முதல் இறுதி வரை, ஒரு திரில்லர் படம் பார்த்த விறுவிறுப்பு, அருமையான நடை.. வாழ்த்துக்கள்.. கார்த்திக் பாலசுப்பிரமணியன்.. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.