ஒருவரை தத்துவவாதியாக ஆக்குவது எது?

இக்கட்டுரை ‘what makes a philosopher’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் வரும் சில கருத்துக்களுக்கும், கலைச்சொற்களுக்கும் கூடுதல் வரையறையும் அறிமுகமும் வேண்டுமென்று கருதியதால் அவை கட்டுரைக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தத்துவவாதியாக ஆக்குவது எது? இது மிக அடிப்படையான கேள்வியாக இருப்பினும் இதன் பதில் நாம் நினைப்பதை விடச் சிக்கலானது. ஆக எது ஒருவரை தத்துவவாதியாக ஆக்குகிறது? ஒருவர் எவ்வாறு தத்துவவாதியாக ஆகிறார்?

ஃபிலாஸஃபி என்ற வார்த்தை கிரேக்கத்திலிருந்து ’ஞானத்தின் மேலான காதல்’ என்ற அர்த்தம் கொண்டு வருவதால், நாம் ஞானத்தின் மேல் காதல் கொண்ட எவரையும் தத்துவவாதி என்று சொல்லிவிடலாம். ஆனால் நாம் வரலாற்றில் ‘தத்துவவாதி’ என்று பட்டம் சூட்டப்பட்டவர்களைப் பார்த்தால் அவர்களை எது  சாமானிய ஞானத்தின் காதலரிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது?

மேற்கத்திய தத்துவவாதிகளின் வரிசையில் ஆவணக்குறிப்புகள் உடைய முதல் தத்துவவாதி மிலேத்துஸின் தேலீஸ் – Thales of Miletus (c.624-545 BC). அக்குறிப்பிலிருக்கும் ஒரு கதையின் படி தேலீஸ் நட்சத்திரங்களை ஆழ்ந்து நோக்கி கொண்டு நடக்கும் போது கிணற்றில் தவறி விழுந்துவிடுகிறார். (முரண்நகையாக, தேலீஸின் தத்துவமும் தண்ணீரை சுற்றியே). இக்கதை முதலில் பிளாட்டோவினால் தனது தியேடீடஸில் – Theaetetus (c.369 BC) பதிவு செய்யப்பட்டு அன்றிலிருந்து தத்துவம் குறித்த ஒரு பிரபலமான கதையாகத் திகழ்ந்து வருகிறது. இக்கதை பொருள்மய உலகினை காட்டிலும் கருத்துக்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தைத் காட்டுவது மட்டுமல்லாமல் லௌகீக முட்டாள் தனத்தையும் காட்டுகிறது. கதையில் தேலீஸை மீட்பவர், ஒருவன் கண்களைத் தரையில் வைக்கவேண்டும் வானத்தில் அல்ல என்று அதைக் கேலியாக சொல்கிறார்.

பிற விமர்சகர்களும் இதே போன்று கிண்டல் செய்துள்ளனர், சாமர்செட் மாவ்மின்(Somerset Maugham) Human Bondage என்ற நாவலை விமர்சித்தவர் அதன் மைய கதாப்பாத்திரமான ஃபிலிப் கேரியை பற்றி, “நிலவுக்காக ஏங்குவதிலேயே மும்மரமாக இருந்ததால் அவன் காலடியில் இருந்த ஆறு காசுகளைப் பார்க்கவேயில்லை” என்கிறார். இவ்விமர்சனம் அவரது பிந்தைய நாவலுக்கு ‘நிலவும் ஆறுகாசும்’ என்று பெயர் வைக்கத்தூண்டியது.

ஆகத் தத்துவவாதி என்பவர் உள்ளத்தளவில் ஒரு கருத்து முதல் வாதி. எங்கு ஞானம் உண்டோ, அங்கு முட்டாள்தனமும் உண்டு. ஆனால் முட்டாள்தனம் புலப்படாத இடத்தில், ஞானமும் இருக்கமுடியாது.

நேரமும் (தீய மனச்சாட்சியாக)இருத்தலும்:

சைமன் கிரிச்லே வக்கீல்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் இடையே உள்ள சாராம்சமான வித்தியாசத்தை அவதானித்து முன்வைக்கிறார். அவர் வக்கீல் ‘நேரம் இல்லாதவர், அல்லது நேரத்தை காசாகக் கருதுபவர்’, ஆனால் தத்துவவாதி ‘நேரத்தை எடுத்துக்கொள்பவர்’. ‘தத்துவவாதியின் சுதந்திரமானது ஒரு விஷயத்தில் இருந்து மற்றொன்றுக்கு விருப்பத்திற்கேற்ப நகர்வதில் அல்லது ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப வருடக்கணக்காகக் குழப்பத்தாலும், ஆர்வத்தாலும் அணுகுவதிலும் உள்ளது’ எனக் கிரிச்லே வாதிடுகிறார்.

தத்துவவாதி என்பவர் நேரம் உடையவர். சிந்திப்பதற்கு மட்டுமல்ல, அவதானிப்பதற்கும் சேர்ந்து. பெருவாரியான தத்துவவாதிகள் ­ஏன் ஒதுங்கியிருந்தார்கள் என்பதற்கு ஒருவேளை இது காரணமாக இருக்கலாம், அவர்களின் தனிமையில் சமூக நிகழ்வுகளை மீறி அவர்கள் தேடலுக்கு உண்டான நேரமிருந்தது.

நேரமிருந்ததற்கு மேலாகத் தத்துவவாதிகள் பெரும்பாலும் நியாயமான வகையில் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு எதிராக இருந்திருக்கிறார்கள். இங்கு நியாயமான என்று சொல்வதன் காரணம், சவால் விட வேண்டும் என்பதற்காகவே சவால் விட்ட சிலரும் இருந்திருக்கிறார்கள்.

ப்ரெட்ரிக் நீட்சே எழுதுகிறார், ஒரு நல்ல தத்துவவாதி என்பவன் “நாளைய மற்றும் நாளை மறுநாளுடைய மனிதன். அவனது எதிரிகள் இன்றின் வழக்கங்களே”. நீட்சேவிற்கு, தத்துவவாதியின் வேலை “அக்காலத்தின் தீய மனச்சாட்சியாக இருப்பது”. இந்த வகையில், ஸ்பினொஸா, மார்க்ஸ் மற்றும் நீட்சேவும் அடங்குவர்.

ரிச்சர்ட் கில்மோர் குறிப்பிடுவது போல “தத்துவவாதி என்பவர் சமூகத்துக்கு வெளியே நிற்பவர், இருப்பினும் அவர் அதைச் செய்வது சமூகத்துக்காகவே”. “ஒரு சமூகத்தில் உள்ளவர்களின் மேலேறி இயக்கும் விசைகளை அறிந்துக்கொள்வதற்குத்  தத்துவவாதியானவர் சமூகத்தின் வெளியே நின்று நோக்குவது அவசியம். உள்ளிருந்து கொண்டு நாம் அதைப் பார்ப்பதில்லை; நாம் ஒத்துசெல்கிறோம், வழிநடக்கிறோம். வெளியிருந்து மட்டுமே ஒருவர் ஒத்துசெல்லவும் வழிநடக்கவும் செய்யும் விசைகளைக் கண்டுகொள்ள முடியும்”. அதனால் ஒரு தத்துவவாதி, தான் ஒரு ’விவரமறிந்த வெளியாள்’ என நின்று ஆராய  நினைத்தால் எப்போதும் தான் பேசும் சமூகத்திலிருந்து விலகிநிற்பது அவசியம்.

Truth Lies at the Bottom of the Well by F. MacDonald (c.1912-1915)

கருத்துப்பாத்திரம் – Conceptual persona:

எது ஒருவரை தத்துவவாதியாக ஆக்குகிறது என்பதைக் குறித்துப் பிரெஞ்சு தத்துவவாதியான ஃஜீல்ஸ் டெல்லூஸ் சில புள்ளிகளை முன் வைத்திருக்கிறார். தத்துவவாதியானவர் புதிய கருத்துக்களை உருவாக்கவேண்டும். “தத்துவவாதி என்பவன் கருத்தின் நண்பன். அவன் கருத்தாலானவன். அதாவது, தத்துவம் என்பது எளிய வடிவமைத்தலோ, கண்டுபிடித்தலோ, உற்பத்தியோ அல்ல. ஏனெனில் கருத்துக்கள் என்பது வடிவமோ, கண்டடைதலோ, உற்பத்திப்பொருளோ அல்ல. கவனமாக நோக்கினால் தத்துவத்துறையானது கருத்துக்களை உண்டாக்கும் தன்மைக்கொண்டது.”

’எந்தச் சொந்த கருத்தையுமே படைத்திடாத  ஒரு தத்துவவாதியின் மதிப்பு என்ன’ என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார் டெல்லூஸ் தனது புத்தகத்தில்.

உண்மையில் ஒவ்வொரு பெரும் தத்துவவாதியும் அவருக்கே உடைய பெரும் கருத்துக்களை உடையவரே. பிளாட்டோ தனது வடிவ கோட்பாட்டையும், குகை உருவகத்தையும் கொண்டவர். காண்ட் ‘அதாகவே உள்ளது’ (thing-in-itself)மற்றும் திட்டவட்டமான கட்டளை (categorical imperative) போன்ற கருத்துக்களை முன் வைத்தார். நீட்சே Übermensch  (மீமனிதன் – superman) கோட்பாட்டை முன்வைத்தார். ஆனால் டெல்லூஸ் கூறும் தத்துவவாதிக்கும் கருத்துக்கும் இடையேயான தொடர்பானது இன்னும் ஆழமானது, ‘தத்துவவாதி தனது கருத்துப்பாத்திரத்தின் விநோத தனித்தன்மை. தத்துவவாதியின் விதியென்பது அவரது கருத்துப்பாத்திரமாகவே ஆவது.’ வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், பிளாட்டோவே தனது குகையின் நிழல், அல்லது டெல்லூஸ் சொல்வது போல, பிளாட்டோவின் சாக்ரடிஸ் அல்லது நீட்சேவின் டயானிஸஸ் போன்றவை கருத்துப்பாத்திரங்களுக்கு எடுத்துக்காட்டு. மொத்தத்தில் தத்துவத்தில் ஈடுபடுவதால் மட்டுமே ஒருவர் தத்துவவாதி ஆவதில்லை. உண்மையான தத்துவவாதி என்பவர் தனது தத்துவத்தைக் கொண்டும் அதற்காகவும் வாழவேண்டும். ஒருவேளை அவர்கள் தங்கள் தத்துவத்திற்கு எதிராக நடக்க நேர்ந்தாலும் அத்தத்துவம் அவர்கள் எண்ணத்தில் இடைவெளியின்றித் தோன்றிக்கொண்டிருக்கவேண்டும்.

அவசியமான வைரஸாகத் தத்துவம்:

Urban dictionary என்ற பேச்சுவழக்கு ரீதியில் வார்த்தைகளுக்கு வரையறை தரும் இணையத் தளத்தில் தத்துவவாதி என்ற வார்த்தைக்கு எளிமையான ஆனால் தேவைக்கேற்ற அர்த்தம் ஒன்று கிடைக்கிறது. ‘Gottlob Frege’ என்ற பயனர் எழுதியிருக்கும் அந்த அர்த்தமானது தத்துவவாதியை “சிறந்த வகையான மனிதர். எதையொன்றை பற்றியும் சிந்திக்கக் கூடியவர். அச்சிந்தனையின் வழியாகப் பிறர்களை செயலாற்ற செய்பவர்.”

இவ்வரையறையில் ஏதோ இருக்கிறது. ஒரு தத்துவவாதியின் கண்டடைதல் பிற துறைகளுக்கு அடிப்படை சிந்தனையாக அமைகிறது. ஒரு தத்துவார்த்த அடித்தளமின்றி, பிற பல துறைகள் தங்களின் நோக்கத்தையும் பிடிமானத்தையும் இழக்க நேரிடும். உதாரணத்திற்கு ஒரு மருத்துவர் உயிர்களைக் காக்கக்கூடியவர். ஆனால் ஏன் உயிர்களைக் காக்கவேண்டும்? நோயாளியின் உயிர் பணயம் வைக்கப்படும் சிகிச்சை முடிவுகளை எடுக்கும் தருவாயில் என்ன செய்வது? மனித உயிரின் மதிப்பு குறித்து வரலாற்றில் இருக்கும் அறச்சான்றோர்களின்(ethicists) வாதங்கள் சிக்கலான முடிவுகளை எடுக்கவேண்டிய மருத்துவர்களுக்கு உதவலாம். தத்துவத்தை அவ்வப்போது அண்டி நிற்கும் பிற துறையினராக, உளவியலாளர்கள், செயற்கையறிவு ஆராய்ச்சியாளர்கள், அரசியல்வாதிகள், கணிதவல்லுனர்கள், புள்ளிவிவரவல்லுனர்கள், ஒப்பனையாளர்கள் இருக்கின்றார்கள். சரி, ஒப்பனையாளர்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால், ஏன் கூடாது? அழகு குறித்து ஆராயும் அழகியல் துறையானது தத்துவத்தின் பிரதான துறைகளில் ஒன்றுதானே.

தத்துவவாதி என்பதற்கான வரையறையைத் தன்னையே குறிக்கும் வகையில் தத்துவத்திற்கே உபயோகித்துப் பார்த்தால் தத்துவவாதி என்பவரின் கண்டடைதல்கள் பிற தத்துவங்களை மேலும் அடைய தன்னைப் பயனுக்களிக்கிறது. அந்தக் கண்டடைதல்கள் நன்றாக அமையுமெனில் அவை பிற தத்துவவாதிகளின் மேம்படுத்தலுக்கும் விமர்சனத்துக்கும் அல்லது பதிலுக்கும் வேண்டி நிற்கிறது.  தத்துவம் என்பது வெறுமே பிற தத்துவத்தின் தழுவல் மட்டுமல்ல, இருப்பினும் அது தனிப்பட்ட ஒன்றும் அல்ல. அது அதையே பரப்பிக் கொள்கிறது. இந்த வகையில் தத்துவமானது ஒருவகையான வைரஸாக, பிறருக்கு ஆக்கபூர்வமான காய்ச்சல் தரக்கூடிய, அவர்களை வெறுமே பிழைத்திருப்பதோடு விட்டுவிடாமல் மேலே செயலாற்றவும் வற்புறுத்துகிறது.

அது மக்கள் மனதிற்கு சமாதானம் கூறுவதற்காக இல்லை. அது இருப்பின் அமைதியின்மையே தூண்டுவதற்கே இருக்கிறது. அதனால் ஒரு தத்துவவாதி மேலும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் உருவாக்கக்கூடிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் உருவாக்கவேண்டும். ஒரு சிறந்த தத்துவவாதி அனைத்தையும் படிப்பவன் – மேன்மையானவை, மலிவானவை, மற்றவை என அவர்கள் வாழும் உலகை பற்றிய பார்வையைத் துலக்கமாக்கி கொள்வதற்காக. ஜோஷுவா குருக் வாதிட்டதைப் போல, நிபுணத்துவம் என்பது குறுகிய திறமைகளையும் சிந்தனைகளையுமே உண்டுசெய்திருக்கிறது ‘புதுச் சிந்தனைகளிலும் படைப்பாற்றலிலும் ஒரு மந்தத் தன்மையை உண்டு செய்திருக்கிறது.’

மாறாகப் புதிய யோசனைகள், “நிபுணர்களிடமிருந்து வருவதில்லை, பொதுமைப்படுத்துபவர்கள் இடமிருந்தே”. “தத்துவவாதி என்பவர் அன்னியனின் வாதத்திறன்கள் மட்டும் கொண்டவனாக அல்லாமல் பிளாட்டோ போலப் பல்வேறு வகையான திறன்களை உடையவனாகவும் இருப்பவர்” என்று பிளாட்டோவின் வசனங்களைப் பகுத்தாய்ந்த மார்க் ஆண்டர்ஸன் கூறுகிறார்.

The Gyri of the Thinker’s Brain… by B. Sanderson (1997) Wellcome Collection. cc by 4.0

எதுவும் அறியாமை:

தத்துவத்தின் மற்றும் தத்துவவாதிகளின் சில வரையறைகள் அல்லது வழிமுறைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதில்லை. பிக்ரம பஹுகுணா ‘தத்துவம் என்பது உண்மைக்கான தேடல் எனில் உண்மைக்கான தேடலிலேயே மும்முரமாக ஈடுபட்டிருப்பவரே தத்துவவாதி’ என்று வாதிடுகிறார். தத்துவத்தையும் உண்மையையும் தொடர்புபடுத்துவது பொதுவான அணுகுமுறை, ஆனால்  என்னைப் பொறுத்தவரை தத்துவம் என்பது உண்மைக்கான தேடல் என்பதை விடச் சாத்தியங்களுடனான ஈடுபாடு, இருப்பவை மற்றும் இருக்கப்போவன பற்றியது. தத்துவம் என்பது உள்ளபடியே உள்ளவைகளையும் மற்றும் வேறெப்படியோ இருக்கப்போகும் மற்றும் இருக்கவேண்டியவைகளையும் பற்றியது.

அதனால் ஒரு தத்துவவாதி தான் எல்லாம் அறிந்தவர் என்று சொல்லி கொள்பவர் அல்ல. தத்துவம் அதிகப்படியான அறிவு சார்ந்தது அல்ல, மாறாக அறிவின் மேலான மதிப்பு மற்றும் அறிவின் எல்லைகளை அறிந்திருத்தல் சார்ந்தது. தான் எதுவும் தெரியாதவன் என்று அறிந்திருப்பது மட்டுமே தன்னை ஒரு வகையில் பிறரை விடப் புத்திசாலியாக ஆக்குகிறது என்பது சாக்ரடீஸின் பிரபல கூற்று. நாம் நேற்றை விட இன்று அதிகமாக அறிந்திருந்த போதிலும் நாளை அறிவதை விட இன்று குறைவாக அறிந்திருக்கிறோம். மேலும் அனைத்தையும் என்றுமே நாம் அறியப்போவதில்லை. தத்துவம் தத்துவவாதிகளை(பன்மைப்பதம்) சார்ந்திருக்கிறது, அதனாலேயே அது ஒரு வைரஸை போல் தோற்றமளிக்கிறது. அதனால் தத்துவவாதி என்பவர் பிற தத்துவவாதிகளின் கண்டடைதல்களைப் பயன்படுத்திக் கொள்பவராகவும், தனது கண்டடைதல்களைப் பிறர் பயன்படுத்திக் கொள்ளுமாறும் செய்யவேண்டும்.

அதனால் நீங்கள் முட்டாள்தனமாக, கருத்துமுதல்வாதியாக, புதுக் கருத்துகளை உருவாக்குபவராக, உங்கள் காலத்துக்கு எதிராக நிற்பவராக, இருந்தும் நேரம் உடையவராக, உங்கள் அறியாமையைப் பற்றி அறிந்தவராக இருந்தால் நீங்கள் உங்களைத் தத்துவவாதி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் மகத்தான தத்துவவாதிகள் தத்துவம் செய்வது தங்களைத் தத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்வதற்காக அல்ல. அவர்கள் தத்துவத்தில் ஈடுபடுவது தத்துவம் செய்யவேண்டும் என்ற விருப்பத்தினாலேயே.

தீய மனச்சாட்சி – Bad conscience

இது நீட்சேயின் தத்துவத்தில் இருக்கும் ஒரு கருத்து. மனிதனுக்குள் இம்சிக்கும், கொல்லும் குணங்கள் இயற்கையாகவே உண்டு. மிருகங்களுக்கு உள்ள இயல்பான குணங்கள். அச்செயல்களைச் செய்வதில் ஒரு வகைக் கிளர்ச்சி அவனுக்குக் கிடைக்கிறது. ஆனால் மனிதன் பண்பட்டு ஒரு சமூகமாக வாழத்தொடங்கிய பின் அக்குணங்கள் வெளிப்படுவதை அடக்கிக்கொள்ள நேரிட்டது. அக்குணங்களை வெளிக்காட்டினால் அவன் சமூகத்துக்கு ஆபத்து, அதன் மூலம் அவனுக்கும் ஆபத்து. ஆனால் அவனுள் உறையும் மிருக குணங்கள் தங்களை வெளிக்காட்டுவதற்காகப் போராடுகிறது. அதனை அடக்கி மனிதன் போராடுகிறான். இது அவனுக்குள் ஒரு கொந்தளிப்பை உருவாக்குகிறது. தனது சொந்த இச்சைகளுக்கு வஞ்சம் செய்வது தனக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகமாக, தனது விருப்பத்தின்படி நடக்க இயலாதவனாகத் தன்னைப் பற்றிய எண்ணம் மனிதனுக்குத் தோன்றுகிறது. மேலும் மேலும் வலிமை பெறும் மிருக குணங்களின் கொந்தளிப்பு அவனை அமைதியிழக்க செய்கிறது. இந்தப் போராட்டத்தில் இவ்வுணவுர்கள் சில மனிதர்களிடம் அல்லது சில சமூகங்களில் அது மேலும் பண்பட்ட நிலையில் வெளியேற வாய்ப்பு அமைகிறது. ஒருவரை வெறுமே தாக்குவது, வன்முறைக்கு உள்ளாக்குவது என்பது மிருக குணம். ஆனால் அதுவே குத்துச் சண்டை போட்டியில் நிகழும் போது அது அவ்வுணர்வுகளின் பண்பட்ட வெளிப்பாடு. உடல் மட்டுமில்லாமல் சிந்தனை சார்ந்தும் இவ்வுணர்வுகள் பண்படுத்தப்பட்டு வெளிப்படுத்தபடலாம். ஒருவரை ஒரு வாதத்தில் தோல்வியுற செய்யும் போதும் இந்த மிருக குணங்கள் மகிழ்ச்சி அடைகிறது. அதே சமயம் அவ்வுணர்வுகளும் பண்பட்ட நிலையில் வெளிப்படுத்தப்படுகிறது. இதனால் சமூகத்துக்கு ஆபத்தல்ல. மாறாகத் தொலைநோக்கு பார்வையில் நன்மை தான். அதை நீட்சே ‘தத்துவவாதி என்பவன் அக்காலத்தின் தீய மனச்சாட்சியாக இருக்கவேண்டும்’ என்கிறார். அதாவது அக்காலத்தின் விழுமியங்களை, சிந்தனைகளை, வழக்கங்களை எந்தவித தயவுதாட்சன்யமும் இல்லாமல் விமர்சிப்பவனாக, அதன் போதாமைகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி அவைகளை எதிர்ப்பவனாக இருக்கவேண்டும். இதுவும் அவனது சமூகத்தின் மீது அவன் நிகழ்த்தும் மூர்க்கமான ஒரு போர். அந்தச் சமூகத்தின் தீய மனச்சாட்சியாக அவன் திகழ்ந்து அந்தச் சமூகத்தின் குறைகளைத் தோல்வியுற செய்து அதை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்கிறான்.

திட்டவட்டமான கட்டளை Categorical imperative

காண்ட் முன் வைத்த ஒழுக்கத்திற்கான விதிகள். தர்க்கபூர்வமாக நடத்தையைத் தீர்மானிக்க, அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையிலான சில கட்டளைகள். ஒருவர் தான் செய்யக்கூடிய ஒரு செயலின் நீதிசாரம்(maxim) உலக நீதி ஆவதை ஏற்றுக்கொள்வாரா என்று பார்த்து அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பின் அதைச் செய்யலாம் என்ற முடிவுக்கு வருவது. இதுவே இந்தக் கட்டளையாகும். உதாரணத்திற்கு, என் கையில் காசு இல்லை, எனக்குக் கடும்பசி எடுக்கிறது, அதனால் நான் திருடி உண்ணலாம் என்று நினைப்பேன் என்றால் அச்செயலில் இருக்கும் நீதியை – அவசிய தேவைக்கு இல்லாதவர்கள் இருக்குமிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம் – என்பதை நான் உலக நியதியாக ஏற்பேனா என்று ஆராய்ந்து அச்செயலை செய்ய முடிவு எடுக்கவேண்டும். அவசியமாகப் பணம் தேவைப்படும் ஒருவர் என் வீட்டில் நுழைந்து திருடுவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் எனில் நானும் என் பசிக்குப் பிறரிடம் இருந்து திருடக்கூடாது. காண்டின் இக்கட்டளைகள் நிபந்தனையற்று எல்லாச் சூழலுக்கும் பொருந்துமென அவர் முன் வைக்கிறார். அதனால் இவை திட்டவட்டமான கட்டளை என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

Cave allegory

இது பிளாட்டோ தனது தத்துவத்தில் உபயோகித்த உருவகம். தத்துவ ஞானம் அடையப்பெறாதவர்கள் ஒரு குகைக்குள் இருந்துக்கொண்டு அக்குகைக்குள் தெரியும் நிழல்களையே உண்மையென நம்பி வாழும் நிலையைச் சொல்கிறது. அக்குகையினில் இருந்து வெளிவந்து அந்நிழல்களின் மூலங்களைக் காண்பவரே ஞானம் பெற்றவராகிறார்.

அன்னியன் – stranger

பிளாட்டோவின் வசனங்களில் சாஃபிஸ்ட் – Sophist என்ற படைப்பில் வரும் ஒரு கதாபாத்திரம் அன்னியன்.

கருத்துப்பாத்திரம் –  Conceptual persona

இது ஃஜீல்ஸ் டெல்லூஸ் உருவாக்கிய ஒரு கருத்தாகும். தத்துவவாதி தனது சிந்தனையை நிகழ்த்தும் பொருட்டுத் தான் பூணும் ஒரு பாத்திரமே, கருத்துப்பாத்திரம். டெக்கார்ட் தனது தத்துவத்தின் ஆதாரமான கண்டடைதலை உருவாக்க தான் அறிந்திருந்த எல்லா அறிவு தரப்புகளையும் ஒதுக்கிவிட்டு பிறர் சொன்ன எக்கருத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் தனது சிந்தனையில் இருந்து – நான் எண்ணுகிறேன் அதனால் நான் இருக்கிறேன் என்ற கண்டடைதலை வந்தடைந்தார். மதம், பண்டைய ஞானம் என்றிருந்த அறிவு தரப்புகளை மறுதலித்துத் தான் தன்னிலிருந்தே ஒரு அடிப்படை கண்டடைதலை கண்டடைய வேண்டும் என்ற விருப்பத்தை எதுவுமே அறியாதவன் என்ற நிலையில், என்ற பாத்திரத்தை பாவித்து, நான் எண்ணுகிறேன் அதனால் நான் இருக்கிறேன் என்ற உண்மையை அடைகிறார் டெக்கார்டே.

அதே போல் பிளாட்டோ தன்னைக் குகைக்குள் வாழும் மனிதனாகக் கருதி தன் தத்துவத்தை மேலும் முன்னெடுத்து செல்கிறார். தான் காண்பது உண்மையின் நிழல்கள் அப்போது உண்மையில் என்ன இருக்கிறது என்று ஆராயக் குகைக்குள் அடைக்கப்பட்ட மனிதனாகத் தன்னைப் பாவித்துக்கொள்கிறார்.

மேலே கட்டுரையில் சொன்னது போல், ஃஜீல்ஸ் டெல்லூஸ் இந்தப் பண்பு தத்துவவாதியிடம் முக்கியமானது என்கிறார்.

கருத்து முதல் வாதம் – Idealism

இக்கருத்துத் தமிழ் அறிவுச்சூழலில் பெரும்பாலும் மார்க்ஸிய தத்துவத்துடன் கூடி மார்க்ஸின் பொருள் முதல் வாதத்திற்கு எதிரான ஒரு தத்துவப்பார்வையாக முன் வைக்கப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் நிலவி வந்த கருத்து முதல் வாத கருத்துக்களைச் சார்ந்தது. ஆனால் கருத்து முதல் வாதம் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு தரப்பு. இக்கருத்தின் சாரமானது, நாம் பட்டறியும் இவ்வனைத்தும் உண்மையில் இருப்பவற்றின் ஒருவகைத் தோற்றமே. பட்டறிதலென நான் சொல்வது எல்லா வகைப் புலன்களின் மூலமாக நாம் அறிவதை. பட்டறியும் இவை இப்படியாக நமக்குத் தோற்றமளிப்பதற்கு நம் மனதும் காரணம். நாம் பட்டறிவதில் நம் மனதின் பங்கும் உண்டு, உண்மையாக இருப்பதைப் புலன் வழி கண்டு மனம் அவற்றுள் சில குணங்களை ஏற்றி நமக்கு இவ்வகைக் காட்டுகிறது. கருத்து முதல் வாதத்தில் இந்த நிலையே அடிப்படையானது. நாம் காண்பது அனைத்தும் நம் மனது நம் முன் படைப்பதுவே அதுவன்றி வேறொன்றும் இல்லை என்றும், உண்மையாக நம் மனதுக்கு வெளியே இருப்பதின் குணங்களைத் திரித்தே நம் மனம் நமக்குக் காட்டுகிறது என்றும் இருவகைப் பார்வைகள் இத்தத்துவ நிலைக்குள் உண்டு.

அதாகவே உள்ளது – thing in itself

இது காண்டின் தத்துவத்தில் ஒரு முக்கியக் கருத்து. மேலே சொன்ன கருத்து முதல் வாதத்தின் வரையறையைப் படிக்கும் போது இது சுலபமாகப் புரியலாம். நாம் காண்பவை உள்ளத்தின் மெய்யான வெளிப்பாடு அல்ல. நம் புலன் வழி தோன்றும் உணர்வுகளின் மீது மனம் அதன் உருக்களை ஏற்றுகிறது. நாம் பட்டறியும் அனுபவத்தில் நாம் உணரும் காலம் மற்றும் வெளி போன்ற பண்புகள் நம் மனம் புலன் வழி வரும் உணர்வுகளின் மேலேற்றியவை. அதனால் நாம் பட்டறிபவை உண்மையில் அங்கிருப்பதை அங்கிருப்பதாகவே அறிவதல்ல, அதை மனம் நாம் உணரும் வகையாக மாற்றியமைத்த பின்னரே அங்கிருப்பதை அறிகிறோம். மனம் அப்படி மாற்றாமல் விட்டால் அங்கிருப்பதை உணரும் திறன் நமக்கில்லை. அப்படி எந்த வித மாற்றமும் அடையாமல் அதுவாகவே அங்கிருப்பது என்பதையே காண்ட் ’அதாகவே உள்ளது’ என்கிறார்.

What Makes A Philosopher? | Issue 128 | Philosophy Now: Siobhan Lyons hunts down a philosopher’s essential ingredients.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.