ஜனவரியில் வெளிவரவுள்ள ‘ இறந்த காலம்’ நாவலிலிருந்து… ஒர் அத்தியாயம்

சைகோன், கொஷன்ஷீன் (இந்தோ சீனா) – ஸ்ரீமுக வருடம் தை மாதம் 21ந்தேதி (1934ம் வருடம், ஜனவரிமாதம் 15 ந்தேதி)
சிரஞ்சீவித் தம்பி சதாசிவத்திற்கு, தமக்கை வேதவல்லி எழுதிக்கொண்டது. இவ்விடம் என் கணவரும், பிள்ளைகளும் ஷேமம். அங்கு உன்னுடைய ஷேமத்தையும், உன் மனைவி தகப்பனார், தாய் ஷேமத்தையும், ஆலப்பாக்கம் மாமா குடும்பத்தையும் பிற உறவினர்கள் ஷேமத்தையும் கேட்டதாகச் சொல்லவும்.
விளையாட்டைப்போல இங்குவந்து நான்காண்டுகள் ஓடிவிட்டன. பிரான்சு தேசத்திலிருந்து வெள்ளைக்காரர்களுக்கு சைகோன் தூரதேசமாக இருப்பதால் எல்லா உத்தியோகங்களுக்கும் ஆள் தேவைப்படுகிறதாம், பலரும் போகிறார்கள் நாமும் போகலாம் என்று உன் மாமன் என்னிடம் ஒரு நாள் சொன்னார். அதை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஒரு நாள் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் முறைப்படி ‘ரெனோன்சாசியோன் எடுத்துக்கப் போகிறேன்’ என்று கூறி இருக்கிறார். அதன் விதிப்படி ஃபெலிக்ஸ் என்று பெயரையும் மாற்றிக்கொண்டார். வீட்டிற்குத் திரும்பி நடந்தகதையைத் தெரிவித்தார். நான் இந்தியதேசம் இந்தியர்களால் ஆளப்படவேண்டும் எனப் புலம்பிக்கொண்டிருந்தவள். நீ உட்பட நம் வீட்டில் அனைவரும் ஏளனத்துடன் அதை விமர்சித்திருக்கிறீர்கள். இந்தியாவின் பிறபகுதிகளில் எப்படியோ, புதுச்சேரியைப் பொறுத்தவரை பரங்கியர்களை எதிர்க்கின்றவர்களும் சரி ஆதரிப்பவர்களும் சரி இருதரப்பினரின் நோக்கமும் உள்ளூர் அரசியலில் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதன்றி வேறென்ன? ஆக அவர் முடிவும் தப்பில்லை என்று தோன்றினாலும், என்னிடம் அவர் ஒருவார்த்தை இதுபற்றி முன்னதாகப் பேசவில்லை என்ற கோபத்தில், என் கதியென்ன? எனக் கேட்டேன். நான் இந்திய அடையாளத்தைத் துறந்துவிட்டு எப்பொழுது ரெனோன்சான் எடுத்துக்கொண்டேனோ, அக்கணமே நீயும், நமக்குப் புத்திரர்கள் இருந்தால் அவர்களும் அந்த விதியின் கீழ் ஒருவகையில் பிரெஞ்சுக் குடிமகன்கள். நான் மட்டுமல்ல நீயும் பிள்ளைகளுங்கூட ஒருபோதும் அதிலிருந்து வெளிவரமுடியாது, என்பது அவர் பதில். கணவன் எடுத்த முடிவுக்கு அவன் பெண்டாட்டியும் பிள்ளைகளும் கட்டுப்படவேண்டும், என்பதுதான் இவ்விஷயத்தில் பிரான்சு தேசத்து சமத்துவ நீதி. உன் மாமாவிடம் உங்களிடமும், தாய் தந்தையரிடமும் சொல்லிக்கொண்டு புறப்படலாம் என்றேன். நீங்கள் ஏதாவது காரணத்தைக்கூறி பயணத்தைத் தடுத்துவிடுவீர்கள், வீண் பிரச்சினைகள் வரும், என்றதோடு, அங்குபோய் உங்களுக்கெல்லாம கடிதம் எழுதலாமென எனது வாயை அடக்கினார். அதன் பின்பு, பெண்பிள்ளை நான் என்ன செய்ய முடியும்.
எங்கள் கப்பலில் பெரும்பாலும் வெள்ளாழ கிறிஸ்துவர்கள்தான். அவர்களும் புதுச்சேரிகாரர்களாக இருந்தார்கள். ரெட்டியார் பாளையம் நெல்லித்தோப்பிலிருந்து வந்தவர்களில் நம்ம சாதி சனங்களைப் பார்த்தேன். கடல் கடந்து போகிறோம் என்பதால் எல்லோரும் பிற பயணிகளிடம் சகஜமாக பேசிப்பழகினார்கள். கப்பலில் இருந்து இறங்கியபோது, அரசாங்க மனிதர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்று விடுதியொன்றில் தங்க வைத்தார். அதன் பின்னர், மாமாவுக்குச் சிப்பாய் வேலை குதிர்ந்ததும், வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியதும் மளமளவென்று நடந்துமுடிந்தன. முதல் நாள் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவு என்ன தெரியுமா, பன்றிக்கறியுடன் கூடிய சேமியா சூப். இங்கு அதை நூடில்ஸ் என்கிறார்கள். மாமா சாப்பிடத் தயங்கினார். சுப்புராயன் ஃபெலிஃஸ் சுப்புராயனாக அவதாரம் எடுத்து நாமும் பரங்கியரும் ஒன்றென ஆனபிறகு பின்வாங்கலாமா எனக் கேட்ட தும், மனிதர் வீம்பாக உட்கார்ந்து அதைச் சாப்பிட்டார். அன்றையதினம் அவற்றையெல்லாம் தொடவில்லையே தவிர அதன் பிறகு எல்லாவற்றையும் முகம் சுளிக்காமல் உண்ண நானும் பழகிக்கொண்டேன்.
எங்களுக்கு கிடைத்த வாழ்க்கை. கூடப்பிறந்த உங்களுக்கோ, நெல்லித் தோப்பில் வாழ்ந்த எங்கள் அண்டைவீட்டாருக்கோ, பள்ளியில் என்னுடன் படித்த சினேகிதிகளுக்கோ எளிதில் கிடைக்காத வாழ்க்கையென்று, எவ்வளவு கர்வம் மனதில் இருந்தது தெரியுமா? இதுபோன்றதொரு வாழ்க்கை அமைந்ததற்கு நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று உன் மாமாவுக்கும் மகிழ்ச்சி. இட்ட உறவு எட்டு நாளைக்கு என்பதுபோல, எல்லாமே கொஞ்ச நாட்கள்தான்.
சரி இப்போது எப்படி? சொல்லவேண்டுமில்லையா. எங்களுக்கு வயிற்றுக்குத் தீனி கிடைக்கிறது, ஆனால் மனதைப் பட்டினிப் போட்டுக்கொண்டிருக்கிறோம். பசிக்கு உணவுகிடைக்கிறது, ருசிக்கு ஏங்குகிறோம். புதிய உறவுகளை நெருங்கி, பழைய உறவுகளிடமிருந்து விலகியிருக்கிறோம்.காடுகளும், மலைகளும், நதியும் கடலுமான பூமி என்கிறார்கள். ஆனால் வறட்சியும் வெப்பமும் என் மனதைத் தகிக்கிறது. உறியடி வாழ்க்கை. கைகளில் கம்பும், கண்களில் மறைப்பும், கால்களில் தடுமாற்றமுமாக இலக்கின்றி வீசும் கம்பு காற்றில் அலைகிறது. உன் மாமன் எடுத்த முடிவை காலில் விழுந்தேனும் தடுத்திருக்கலாமோ என தற்போது நினைக்கிறேன். ‘வுங் டோ’ கடற்கரைக்குச் சென்றிருந்தேன். தென் சீனக் கடலின் அலைகள் என்னைகண்டதும் வா வா புதுச்சேரிக்கு அழைத்துபோகிறேன் என்பது காதில் விழுந்தது. நீரில் இறங்கினேன். விவரம் புரியாமல்கணவர் உட்பட அங்கிருந்த பலரும் தற்கொலை முயற்சி என்றார்கள். இறப்பு தவிர்க்கமுடியாதது என்கிறபோது எப்போது இறந்தாலென்ன. சொந்தமண்ணைப் பிரிந்து வாழும் வாழ்க்கையும் தற்கொலையும் ஒன்றுதான். நினைவுகளும் ஏக்கமும் நெஞ்சை இறுக்க, அவற்றின் கைகளை விலக்க விருப்பமின்றி, காலவிரயத்துடன் கூடிய புதியவகைத் தற்கொலையை நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கிறேன்.
பிள்ளைகள் பிரெஞ்சு பேசுகிறார்கள், வியட்நாம் மொழி பேசுகிறார்கள். என் கணவருக்குத் அவர்கள் தமிழ் கற்க வாய்ப்பில்லை என்பது குறை. சுப்பராயன் ‘ஃபெலிஃஸ்’ என்றும் வேதவல்லி, ‘ஆன்’ என்றும், வேட்டி காற்சட்டை என்றும், சேலை கவுனென்றும் ஆனபிறகு; மாமன் என்றும் அத்தை யென்றும், தாத்தா வென்றும் பாட்டியென்றும் கூப்பிட உறவுகள் இல்லை என்கிறபோது அவர்கள் பேசினாலும் அத் தமிழ் இனிக்குமா என்ற சஞ்சலமும் எங்களுக்கு இருக்கிறது. மேலும் மேலும் ஏதாவது எழுதி, எனது கவலையை உங்களிடம் இறக்கிவைப்பதில் எவ்வித நியாயமுமில்லை. இது நாங்களாகத் தேடிக்கொண்டவாழ்க்கை. சன்னலை மூடிவிட்டு வாழப் பழகிக் கொள்ளவேண்டும். பழகிக்கொண்டிருக்கிறேன்.
சைகோன் பெரிய ஊர். பெரிய நதியொன்று ஓடுகிறது. நெல் சாகுபடி நடக்கிறது. நம்மைப்போல அரிசிச் சோறு சாப்பிடுகிறார்கள், அதை சேமியாபோல செய்தும் சாப்பிடுகிறார்கள். பன்றி, மாட்டிறைச்சி, மீன் நிறைய சாப்பிடுகிறார்கள். இங்கே என்னுடன் கப்பலில் வந்த சனங்கள் மட்டுமின்றி எங்களுக்கு முன்பாக வந்திறங்கிய பெரும்பாலான புதுச்சேரிகாரர்கள், இங்குதான் இருக்கிறார்கள். ஒரு சிலர் கம்போடியாவில் தொன்க்கன் என்ற ஊரில் வசிக்கின்றனர். வேட்டியும் உருமாலையுமாக சில தமிழர்களை சைகோன் தெருக்களில் வந்த புதிதில் பார்த்தேன். அவர்களைப் பார்த்த தும் சில பரங்கியர்கள் ஓடி ஒளிந்தது வியப்பாக இருந்த து. விசாரித்ததில், அவர்கள் மதாராஸ் மாகாணத்தைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டிமாரென்றும் இங்கு லேவாதேவி செய்வதாகவும் கூறினார்கள். உள்ளூர் சனங்களுக்கும் அவர்கள் வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள். காரைக்காலில் இருந்துவந்திருக்கும் மரைக்காயர்கள் துணி வியாபாரம் செய்கிறார்கள், பெரிய பெரிய கடைகளெல்லாம் இங்கிருக்கின்றன. ஒரு நல்ல சேதியை சொல்லவேண்டும். இங்குள்ள தமிழர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். பிரச்சினையென்றால் ஓடி வருகிறார்கள். சாதியை மறந்திருக்கிறார்கள்.
அப்பாவிடமும் அம்மாவிடமும் இக்கடித த்தை வாசித்துக் காட்டுகிறபோது, நான் மன வருத்த த்துடன் எழுதியவற்றைப் படிக்காதே. எனக்கு உங்களையெல்லாம் ஒரு முறை பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. பாகூர் சித்தப்பா குடும்பம் எப்படி இருக்கிறது. சித்தப்பா பெண் வடிவை தென்கோடிபாக்கத்தில் கல்யாணம் முடித்திருந்தார்கள். அவள் வரப்போக இருக்கிறாளா? தவறாமல் எனக்குக் கடிதம் எழுது.
உண்மையுள்ள
வேதவல்லி
‘இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம் | திண்ணை
இறந்த காலம் (நாவல்)
ஆசிரியர் : நாகரத்தினம் கிருஷ்ணா
வெளியீடு : சந்தியா பதிப்பகம்