கடந்த வருடம் மார்ச் மாதம், எனது பத்திரிகை பணியை முடித்துக்கொண்டு நான் வேறொரு மாகாணத்திலிருந்து என் வீட்டிற்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன்.
என் எதிரிலிருந்த இரண்டு நடுத்தரவயது விவசாயிகள் எதுபற்றியோ ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் ஜியென் பகுதியில் இறங்கப் போவதையும்,அங்கிருந்து நீண்ட தொலைவிலிருக்கும் ஜியானுக்கு அன்றே பஸ்சில் போகமுடியுமா என்பது பற்றியும் பேசிக் கொண் டிருந்தனர் என்பதை உணர்ந்தேன்.
திடீரென்று ஜன்னல் பகுதியிலிருந்துஒரு தெளிவான குரல் குறுக்கிட்டது; ”கவலைப்படவேண்டாம்!பஸ் இரண்டு மணிக்குத்தான் புறப்படும். நீங்கள் அதைப் பிடித்துவிட இன்னும் நிறைய நேரமிருக்கிறது.”
நாங்கள் அனைவரும் பேசியவர் இருந்த திசையைப் பார்த்தோம், இருபத்தி ஐந்துவயது மதிக்கத்தக்க ஓர் இளம்பெண் மின்னுகின்ற கண்களுடன், எளி மையான ஆடையில் இருந்தாள்.அவள் அமைதியாகப் படித்துக் கொண்டிருக்க யாரும் அவளை கவனித்ததாகத் தெரியவில்லை.
அவள் மிக உறுதியாக அதைச் சொன்னபோது “இன்று மதியம் தொலை தூரத் திலான ஜியாயனுக்கு பஸ் இருக்கிறதா ?உங்களுக்குத் தெரியுமா?” என்று அந்த பயணி கேட் டார்.
“ஆமாம்,மூன்று மணிக்கு ஒரு பஸ் இருக்கிறது”அந்தப் பெண் பதிலளித்தாள்.
“அதற்கு முன்னால் செல்ல வேண்டிய பஸ் ?”
“ஆமாம், ஆனால்.. அவள் தயங்கினாள்.”நீங்கள் அந்த பஸ்சைப் பிடிக்க இய லாது என்று தோன்றுகிறது.”
“அது எத்தனை மணிக்குப் புறப்படும்?”
“ஒரு மணிக்கு,இந்த ரயில் ஜியானுக்கு பன்னிரண்டு மணிக்குப் போக வேண் டும். நான் உங்களுக்கு ஒரு வரைபடம் காட்டுகிறேன்.நீங்கள் ஸ்டேஷனை அடைந்தபிறகு, எட்டாம் எண் பஸ்நிலையம் வரை அந்த நீண்ட சாலையில் நடக்கவேண்டும்.பிறகு அங்கிருந்து பஸ் நிலையத்திற்குப் போகவேண்டும். நீங்கள் வேகமாகப் போனால் ஒரு வேளை பிடித்து விடலாம்”என்று ஒரு நிமிடம் யோசித்துச் சொல்லிவிட்டு வழியை ஒரு தாளில் வரைந்து அவர் கையில் கொடுத்தாள்.
“மிக்க நன்றி தோழரே,”அவர் அந்த வரைபடத்தை நன்றியோடு பார்த்துக் கொண்டே சொன்னார். ”நீங்கள் அந்த நெடுந்தொலைவு பஸ்சில் அடிக்கடி பயணம் செய்வீர்களா?”
“இல்லை,பயணம் செய்ததேயில்லை”அவள் சிரித்தபடி தலையை ஆட்டியபடி சொன்னாள்.
“ஓ, அப்படியானால் அங்கே வசிக்கிறீர்களா?”
மீண்டும் அவள் தலையை ஆட்டினாள்.
அந்த மனிதன் குழம்பி “அப்படியானால் அடிக்கடி அங்கே போவீர்களா?’என்று அடக்க முடியாமல் கேட்டார்.
“அடிக்கடி இல்லை,”
அதற்குள் அங்கிருந்த எல்லோருக்கும் ஒருவித ஆர்வம் ஏற்பட ஒருவர்” அப் படியானால் அந்த இடத்தைப் பற்றி உங்களுக்கு எப்படி நன்றாகத் தெரியும்?” என்று வேகமாகக் கேட்டார்.
இது அவள் முகத்தைச் செம்மைக்குள்ளாக்கியது.”நான்..எனக்குத் தெரியும் ,அவ்வளவு தான்” வெட்கத்தோடு சிரித்தபடி முணுமுணுப்பாகச் சொன்னாள்.
ஒவ்வொருவரின் ஆர்வமும் அதிகமாக, அவளாக இன்னும் சொல்வாள் என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம்,ஆனால் அவள் ரயிலிலிருந்து இறங்கும் முப்பதுநிமிடம் வரை அமைதியாக இருந்தாள்.

நான் பத்திரிகைப் பணிக்குத் திரும்பிய பிறகு,வெகு ஜனத்திற்கு உதவும் வகையிலான ஒரு நிகழ்வுக்கு எங்களை வரும்படி மாகாண ரயில்வே அமைப்பு அழைத்திருந்தது.திறமையான ஊழியர்களை வைத்து வெவ்வேறு முறைகளில் அவர்களின் வேலைகளை காட்சி விளக்கமாகக் காட்டும் ஒரு திறப்புவிழா நிகழ்ச்சியை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
நானும்,உடன்பணிபுரியும் ஸிகியும் அந்த காட்சி விளக்க நிகழ்ச்சிக்குப் போன போது அந்த ஹாலே நிரம்பிவழிந்தது.செயலாக்கமானவர்களின் சாதனையைக் கைதட்டியும்,புகழ்ந்தும் ரசிகர்கள் பாராட்டினார்கள்.ரயில்வேயில் பணிபுரியும் பத்தாயிரம் ஊழியர்களுக்கிடையிலான போட்டியில் அவர்கள் வெற்றி பெற்ற வர்கள். சிலர் வயதானவர்கள்,பலர் நடுத்தர வயதினர்,கடைசியாக அறிமுகம் செய்யப்பட்டவள் அந்தப் பெண், அன்று ரயிலில் சந்தித்தவள்.
அவள் பக்கத்து ஸ்டேஷனில் பணிபுரியும் கிளார்க் என்றாலும் கூட நாட்டில் இருக்கும் எல்லா முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையிலான தொலைவு, பயணக் கட்டணம் ஆகியவற்றை அவளால் சொல்ல முடிந்தது.
ஓர் இளைஞன் அவளைச் சற்று சாதாரணமாகப் பார்த்தபடி”உங்கள் ஸ்டேஷ னிலிருந்து யின்சுகன் ஸ்டேஷனுக்கு எவ்வளவுகட்டணம்?” என்று கேட்டான்
சிறுதயக்கம் கூட இல்லாமல் அவள்”1460 கி.மீ 25 யுஆன் 80ஃபென்” என்றாள்.
அவளது வேகத்தால் கவரப்பட்டவனாக கையிலிருந்த ரயில்வே வரைபடத் தைப் பார்த்தபடி “ ழுழு நிலையம்? ” என்றான்
“1,900 கி.மீ “கட்டணம் 29 யுஆன் 30 ஃபென்”
பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.பல வருடங்களாக புக்கிங் கிளார்க் காக இருந்த ஒரு முதியவர் எழுந்து முன்னேவந்தார்.”உங்களுக்கு எல்லா முக்கிய ரயில் நிலயங்கள் பற்றியும் தெரிகிறது., ஆனால் கிளை நிலையங் கள் பற்றி ? “என்று ஆர்வமாகக் கேட்டார்.
“தெரியவில்லை, முயற்சி செய்கிறேன்”என்று வெட்கத்தோடு பதிலளித்தாள்.
ஜிகெகௌவுக்கும் யிங்டன் ஜியாமென்னுக்கும் இடையில் எவ்வளவு தொலைவு, கட்டணம் ?”
“1692 கி.மீ கட்டணம் 28 யுஆன் 30 ஃபென் “
“கியாங்—குலின் பாதயில் ரஞ்சியாலுக்கு?”
“1,100 கி.மீ “கட்டணம் 23 யுஆன் 6 ஃபென்”
சந்தோஷமாகத் தலையாட்டிய முதியவர் “உன் பெயரென்ன?”
“ஹன் யுனான்,”
“எவ்வளவு வருடமாக வேலை செய்கிறாய்?”
“மூன்று வருடங்கள்”
’நல்லது,மூன்று வருடங்களில் இத்தனையா! “ வியந்தபடி அந்தக் குழுவைப் பார்க்க அவர்கள் அதை உறுதி செய்தனர்.”ஆச்சர்யம் !என் வாழ்க்கையில் முதல்முறையாக எனக்குச் சவால் விட்டவரைச் சந்தித்தேன் “என்று பார்வை யாளர்களைப் பார்த்துக் கையை ஆட்டியபடி மகிழ்ச்சியாகச் சொன்னார்.
பார்வையாளர்கள் கைதட்டுவதற்கு முன்னால் இயக்குநர் ”தோழர் ஹென் னால் ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் முதல்தர , இரண்டாம் தர நிலையங்களின் ரயில்கள் வருகை, புறப்பாடு நேரம் குறித்தும் சொல்ல முடியும். இப்போது அதை நாம்பார்க்கலாம் “என்று அறிவித்தார்.
அடுத்தகட்ட ஆரவாரம் எழுந்தது.
அவளுடைய செயல்பாடு சாதாரண மனிதர்களை மட்டுமில்லாமல் ரயில்வே பணியாளர்களையும் வியக்க வைத்தது.அவளுடைய அறிவு வேலையை மீறி யதாக இருந்தது. ஆயிரக்கணக்கான அந்த சுவையற்ற எண்களைக் கற்றிருக்க அவள் எவ்வளவு மணிநேரங்கள் அவள் செலவழித்திருக்க வேண்டும் என்று ஒவ்வொருவராலும் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.அவளால் எப்படி அதைச் செய்ய முடிந்தது, ஜியனிலுள்ள அந்த தொலை தூர பஸ்கள் அவள் வேலைக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியிருக்குமா என்று நாங்கள் ஆச்சர்யமடைந்தோம்.
அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை அதிகமாக, நானும் ஸீயும் அலுவலகம் திரும்பினோம்.எங்கள் உதவி ஆசிரியரிடம் இதுபற்றி விரிவாக எங்கள் திட்டம் பற்றி விவாதித்தோம்.அவருடைய அனுமதிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ,நாங்கள் ஹென்னைச் சந்தித்தோம்.
நிலைய கட்சி கமிட்டியின் செயலாளரான வயதான லீ எங்களை அன்போடு வரவேற்று கிளார்க்குகள் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்திற்கு அழைத்துப் போனார்.
இளம் பெண்ணான ஹென் மிக வேகமாக வித்தியாசமான முறையில் பயணச் சீட்டுகளை விற்பதை உணரமுடிந்தது.சாதாரணமான கேள்விகளுக்கு பதில் சொல்வதுபோக, பயணிகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் கையில் அட் டையையும் பிடித்திருந்தாள்.ஒரு தடவை ஒரு பயணிக்குப் புரியும் வகையில் அவருடைய மொழியிலேயே பேசினாள்.அது எங்களுக்குப் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது.
ஒரு மணிநேரம் கழித்து இடைவேளைக்காக அவள் தன்ஜன்னலை மூடி னாள்.நாங்கள் பத்திரிகை அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் ’ரிப்போர்ட்டர்கள் ’என்று தெரிந்ததும் வெட்கப்பட்டாள்.அவள் சம்மதமில்லாமல் எதையும் வெளியிடமாட்டோம் என்று பல முறை உறுதியளித்த பிறகு அவள் எங்களு டன் பேசினாள்.
அவள் ஆரம்பித்தாள்;
“1974 வருடம் நான் இந்த வேலைக்கு வந்தேன்.இது நல்ல வேலை என்று பலர் நினைத்தாலும் எனக்கு இதில் திருப்தியில்லை.செய்ய வேண்டிய வேலைகள் சின்னச்சின்னதாக நிறைய இருந்தன.ஒவ்வொரு நாளும் பெரிய அளவு பணம் கைமாறும் வகையிலான வேலை என்பதால், தவறுகளேற்படும் வாய்ப்பு இருப்பதால் மிக பயந்தேன். எப்படியானாலும் அதுதான் வேலை. நான் சிறிது பயந்து மெதுவாகவேலை செய்தால் பயணிகள் வெறுப்படைவார் கள்.நாட்டின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் ரயில்களும்,பயணிகளும் வந்து இந்த இடத்தைக் கடப்பார்கள் என்பதால் இரவு வரும்போது உங்களுக்குப் பேசியே தொண்டை கட்டிவிடும்.ஆனால் இதுவரை பயணமே செய்திராத சில பயணிகள் நம்மைப் பைத்தியமாக்கி விடுவார்கள்.விரைவு ரயில்கள் சிறு ஸ்டேஷன்களில் நிற்காதென்று சொன்னால் அதற்கான காரணத்தைக் கேட் பார்கள்.ஒரு முறை ஒருமுதியவர், ரயில் எண் 83 அன்று 19.00 மணிநேரம் தாமதமாக வரும் என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டு தான் அப்போதுதான் வாங்கியிருந்த பயணச் சீட்டைத் திருப்பிக் கொடுக்க வந்தார்.ஒரு மணி நேரத்தில் வண்டி வந்துவிடுமென்று நான் சொன்னபோது கோபமடைந்து கத்தினார்; நீங்கள் பொது மக்களுக்காக வேலை செய்யவேண்டும், இருந்தும் என்னை ஏமாற்றுகிறீர்கள்.ரயில் பத்தொன்பது மணிநேரம் தாமதமாக வரு மென்று அந்த அறிவிப்பாளர் சொன்னார்! ” என்றார்.
இந்த மாதிரியான சம்பவங்கள் எல்லாம் அடிக்கடி நடக்க, எனக்கு பயணிக ளின் மேல் வெறுப்பு வளர ஆரம்பித்தது.நாளாக நாளாக அவர்கள் மேலான என் எண்ணமும் மோசமானது.
அந்த வருடத்தின் கோடையில் ,ஒரு நடுத்தர மனிதர் வந்து ஹுக்சியனுக்கு ஒரு சீட்டு வேண்டுமென்றார். ரயில்எண்54 அங்கு நிற்காதென்று சொன்னேன்.
“ஹும்?”என்று ஒரு காதுகேளாதவனைப் போலச் சொன்னார்.
நான் அதே செய்தியை திரும்பிச் சொன்னேன்,ஆனால் அவருடைய பாவனை அதே மாதிரியாக இருந்தது.நான்கைந்து தடவைகளுக்குப் பிறகு”உங்களுக்கு என்ன பிரச்னை? தயவு செய்து இந்த இடத்தை விட்டு விலகுங்கள்.’
அவர் திடுக்கிட்டுப் பின் வாங்குவதற்கு பதிலாகப் பணத்தைக் கொடுத்து” ஹுக்சிகனுக்கு ஒரு டிக்கெட் வேண்டும் “என்றார்.
நான் என் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்தாலும் , மற்ற பயணிகள் வரிசையாக நிற்பதைப் பார்த்து தலையையாட்டி “ஹும்” என்றேன்.
“ஹுக்சியனுக்கு ஒரு டிக்கெட் ,”
“ஹும்?”
எல்லோரும் சிரிக்கத் தொடங்கி விட்டனர்.
கோபமடைந்த அந்த மனிதர் “என்ன ஒரு மோசமான குணம் ?”என்று புகார் சொன்னார்.
“நான்சென்ஸ் ,என்னுடைய குணம் சரிதான்” நான் உறுமினேன்.”நீங்கள் பல முறை அப்படிப் கேட்டாலும் ,நான் இரண்டு முறைதான் சொன்னேன்,இருப் பினும் எவ்வளவு பொறுமையற்றுப் போகிறீர்கள்!”சொல்லிவிட்டு ஜன்னலை மூடிவிட்டுப் போய்விட்டேன்.
அவர் மேல் தவறு என்று உண்மையாக நினைத்து ஜன்னலின் பின்னால் உட்கார்ந்து விட்டேன்.
மூன்று நாட்களுக்குப் பிறகு சிசுகனுக்குப் போகிற ஒரு பயணியோடு ஒரு தர்க்கம் ,அவர் கர்சீப்பில் சில்லறைக் காசுகளாக டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்தார். அருகிலுள்ள கடைக்குப் போய் நோட்டுகள் வாங்கி வரும்படி நான் சொல்ல,அவர் மறுத்து விட்டார். நான் டிக்கெட் தரவில்லை.
கடுமையான சண்டை தொடர்ந்தது.
அடுத்த நாள் வசந்தகால விழா .என் நண்பன் லூ என் வீட்டிற்குவர இருந் தான்.
அவன் முழுப் பெயர் லூ பிங்ஜியாங்.அவன் உதவி என்ஜின்டிரைவர் .நாங்கள் இருவரும் ஆறுமாதங்களாக நெருங்கிப் பழகிவந்தாலும் எங்கள் வீட்டில் அதைச் சொல்ல தயக்கமாக இருந்தது. அதனால் விடுமுறையின் முதல் நாளன்று அவன் என் வீட்டுக்கு வருவது, நான் அடுத்த விடுமுறையில் அவன் வீட்டுக்குப் போவது என்று முடிவு செய்தோம்.
அன்று விடியற்காலையில் எழுந்த எனக்கு மகிழ்ச்சி,பயம் என்று இரு வித உணர்வுகளும் எழ ,நான் அம்மாவிடம் லூவின் வரவு பற்றிச் சொன்னேன். நான் முன்பே சொல்லியிருக்க வேண்டுமென்று அவள் கோபித்துக் கொண்டா லும் லூவைப் பார்த்த பிறகு அவள் இயல்பாகி உணவு தயாரித்தாள்.சமைக் கும் போது சோயாசாஸ் வீட்டில் இல்லை என்று தெரியவர என்னைக் கடைக்குப் போய்வரும்படி சொன்னாள்.
அவசரமாகத் தேவைபட்டதால் நான் வேகமாகக் கடைக்குப் போனேன் . கடைக்காரப் பெண் யாருடனோ அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.நான் சில நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன்.அவள் பேசாமலிருக்கவும் “தோழரே !எனக்கு சோயாசாஸ் வேண்டும் கிடைக்குமா?”என்றேன்.
அவள் நான் இருக்கும் திசையைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
நான் திரும்பவும் சொன்னேன் ”எனக்கு சோயாசாஸ் வேண்டும்..”
நான் முடிக்கும் முன்பாக அவள் என்புறம் திரும்பி ”பாட்டிலின் மூடியைக் கூடத் திறக்கவில்லை என்றால் நான் எப்படி நிரப்ப முடியும்? ”
அவளுடைய தொனியைக் கேட்டு“இங்கே பாருங்கள்.,நான் உங்களுடன் சண்டை போடுவதற்காக இங்கே வரவில்லை…”
“அப்படியானால் நான் சண்டைபோடுகிறேனா?”
“என்ன சொல்கிறீர்கள்?இது என்ன வகையான குணம்?”
“என் குணம் சரியில்லை என்றால் ,உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டுமா?”
“ஏன் நீங்கள்!.. நீங்கள்…”எனக்கு வார்த்தைகள் வரவில்லை. பிறகு விவாதமேற் பட்டது.
அடுத்த நாள் வேலைக்குப் போன பிறகு இந்தக் கதையை சக பணியாளர்க ளிடம் சொன்னேன். நான் மோசமாக நடத்தப்பட்டதாக எல்லோரும் சொன் னார்கள்.நான் பேசிக் கொண்டிருக்கும் போது செயலாளர் லீ வந்ததால் அவரி டமும் அந்தச் சம்பவம் பற்றிச் சொன்னேன்.
நான் முடித்தபிறகு அவர் என்னைக் கூர்மையாகப் பார்த்து விட்டுச் சொன் னார்;”ஹென், இந்த வகையான குணம் உனக்குப் பிடிக்கவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.அந்தக் கடைப் பெண், நீ இருவரும் பொது மக்களுக்காக வேலை செய்பவர்கள்.கண்ணாடி எப்போதும் மற்றவர்களின் செயல்களை மட்டும் பிரதிபலிப்பதோடு நின்றுவிடாமல், நம் சொந்தமுகத்தையும் பிரதி பலிக்கிறது”என்று சொல்லி விட்டுத் தன் சட்டைப் பையிலிருந்துஒரு கடி தத்தை எடுத்து என்னிடம் தந்து படிக்கச்சொன்னார். குழப்பத்தோடு அதை நான் வாங்கினேன்.அது லுயாங் இரும்பு எஃகு தொழிற் சாலையைச் சேர்ந்த ஒரு பணியாளரின் கடிதம் .அது இவ்வாறிருந்தது;
…இந்த வருடத்தில் மார்ச் மாதத் தொடக்கத்தில் என் மனைவி ஒரு குழந்தை யைப் பெற்றெடுத்தாள்.எங்களுக்கு வந்து உதவி செய்யும்படி நான் என் அம்மா வுக்குச் செய்தி அனுப்பினேன்.இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் புறப்பட்டு விட்டதாக எனக்கு ஒரு தந்தி வந்தது.
ஒரு வாரம் கடந்து விட்டது,ஆனால் அவள் வந்து சேரவில்லை.பிறகு இன் னொரு வாரம்..கவலையுடன் என்ன ஆயிற்று என்று விசாரித்து இன்னொரு தந்தி அனுப்பினேன்.அவள் புறப்பட்டு விட்டதாகவும்,ஒரு வாரத்திற்கு முன்பே இங்கு வந்திருக்க வேண்டும் என பதில் வந்தது.அவளுக்கு என்ன ஆயிருக்கும் என்று கலங்கினேன்.
என் அம்மா இதுவரை ரயிலில் பயணம் செய்ததேயில்லை அதனால் வழி தவறி ,தவறான ரயிலில் போய்விடக் கூடாது என்பதால் என் அண்ணன் ஒரு சிறிய காகிதத்தில் அவள் போக வேண்டிய இடத்தை எழுதிக் கொடுத்திருந் தான்.அவள் உங்கள் ஸ்டேஷனில் இறங்கிய பிறகு டிக்கெட் வாங்குவதற்காக புக்கிங் அலுவலகத்திற்குப் போயிருக்கிறாள்.ஜன்னல் 2 ல் இரட்டைப் பின்னல் போட்டிருந்த இளம்பெண்ணான ஒரு கிளார்க் ,அம்மாவிடம் எங்கே போக வேண்டுமென்று கேட்டிருக்கிறாள். லியோங் போக வேண்டுமென்று அம்மா சொல்ல அந்தப் பெண் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.பணத்தை வாங்கிக் கொண்டு லியோங் டிக்கெட்டை கொடுத்து விட்டாள்.என் அம்மா விற்கு அந்தக் காகிதம் நினைவுக்கு வர, அதை அந்தப் பெண்ணிடம் காட்ட முயன்ற போது அந்தப் பெண் ஜன்னலை அடைத்து விட்டாள்.அம்மா சில முறை ஜன்னலைத் தட்டியும்,அந்தப்பெண் அவளை லட்சியம் செய்ய வில்லை.
விளைவாக என் அம்மா லியோங்கிற்கு எதிர் திசையிலான ரயிலில் நீண்ட பயணம் செய்தாள்.நாள் முழுவதும் காத்திருந்த பிறகு தான் தவறான இடத் திற்கு வந்திருப்பது அவளுக்குத் தெரிந்தது.திரும்பவும் இன்னும் ஐந்நூறு கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்பதைக் கேட்டவுடன் வயதான, இரத்த அழுத்த நோயுடைய அவள் களைப்பிலும்,கவலையிலும் மயங்கி விழுந்துவிட்டாள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவள் ஆபத்தான நிலையில் பன்னிரண்டு நாட்கள் கோமாவிலிருந்திருக்கிறாள்.
ஆஸ்பத்திரியிலிருந்து எங்களைத் தொடர்பு கொண்ட பிறகுதான் என்ன நடந்த தென்று எங்களுக்கு புரிந்தது.பிறகு நான் லூயாங் போய்….
இந்தச் சம்பவம் எங்கள் குடும்பத்தை ஆழமான வேதனைக்குள்ளாக்கி,என்னை தீவிரமாக யோசிக்க வைத்தது.நான் அடிக்கடி என் வேலையில் கவனக் குறை வாகவும் ,பொறுப்பில்லாமலும் இருந்திருக்கிறேன்.இப்போது நான் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று உணர்கிறேன். நாட்டிற்காக ,என்ன வேலை செய்தாலும் ,அதை மக்களுக்காகச் செய்கிறோம்.நம் செயல்கள் வெகுஜனத் தைத்தான் பாதிக்கின்றன.இதை மிகச் சிறியஅளவு மனிதர்கள் மட்டும் உணர்ந் திருப்பது வேதனைக்குரியது.அந்தப் பெண் யாரென்று எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை.யாரைக் குற்றவாளியாக்குவது? அவள் ஒரு வகையில் மட்டும்தான் பொறுப்பாளி.கடந்த காலங்களில் ஏன் நம்மு டைய தரமும்,ஒழுக்கமும் இந்த அளவிற்கு கீழிறங்கிப் போனது என்று வருத் தமாக இருக்கிறது.ஏன் பல நல்லதோழர்கள் பாதிக்கப்பட வேண்டும்?இந்தக் கேள்விகளை நான் எனக்குள் பலமுறை கேட்டுக் கொள்கிறேன்.ஸ்டேஷன் அதிகாரிகள் அந்தப் பெண்ணை அதிகம் விமர்சிக்க மாட்டார்களென்று நம்பு கிறேன்.பதிலாக,இயலுமெனில் அந்தப் பெண் இந்தக் கடிதத்தைப் படிக்கட் டும்.ஒரு புக்கிங் கிளார்க்காக தன் பொறுப்பு என்பதை அந்தப் பெண் அறிய இது துணை செய்யலாம்….
கடிதத்தைத் தொடர முடியாமல், முகத்தை என் கைகளால் புதைத்துக் கொண்டு மேஜையில் சாய்ந்து அழுதேன்.அந்தத் தோழர் என்னைத் திட்டியி ருந்தால் என் மனம் அமைதிப்பட்டிருக்கும். குற்றம் சொல்வதற்கு பதிலாக , அவர் மன்னிக்க முயன்றது என்னை வெட்கத்திற்குள்ளாக்கியது.இந்தக் கடி தத்தின் மூலமாக அவர் ஆழ்ந்த சிந்தனையாளர், என்பதையும்,உயர்ந்த அரசியல் மனசாட்சி உடையவர் என்பதையும் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.பிறகு நான் என்னைப் பற்றியும்,நான் செய்த முட்டாள்தனமான செயல்களையும் நினைக்க..
பிறகு என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு தலையை நிமிர்த்தி “என் செயலுக் காக வருந்துகிறேன். அது மிகப் பெரிய தவறு சார்” என்று சொன்னேன்.
என் உண்மையான வருத்தத்தைப் புரிந்து கொண்டவராக “சொல் ஹென்,நீ என்ன தவறு செய்தாய்?” என்று மிக மென்மையாகக் கேட்டார்.
“நான் பயணிகளிடம் ஒருபோதும் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது.”
“வேறு ஏதாவது?”
நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று முயற்சித்தேன்,ஆனால் முடிய வில்லை.
“ஹென், நான் சொல்லப்போவது சரியாக இல்லாமலிருக்கலாம்,ஆனால் உண்மையான சிக்கல் எதுவெனில் ஒரு புக்கிங் கிளார்க்கின் பணியென்ன என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் .நீ இயல்பான பெண் என்ற வகையைச் சேர்ந்தவளாக இருக்கும் போது ஏன் பயணிகளிடம் பொறுமை யில்லாதவளாக இருக்கிறாய்?நம்முடைய பயணிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தம் குடும்பங்களோடு சேரப் போகிறவர்கள் அல்லது நாட்டை உயர் நிலைக்குக் கொண்டு வர உதவுபவர்கள்.வரிசையாக உன் ஜன்னலின் முன்பு நிற்பவர்களுக்கு என்ன விதமான நம்பிக்கைகளும்,கனவுகளும் இருக்கும் என்று சிறிது கற்பனை செய்துபார். உன்னைப் போன்ற புக்கிங்கிளார்க்குகள் செய்யும் வேலைகள் இந்த நாட்டின் வளர்ச்சியோடும்,மக்களின் வாழ்க்கை யோடும் தொடர்புடையது.” என்று சொல்லிவிட்டு நிறுத்தி,பின் தொடர்ந்தார் ”மலைப் பகுதிகளில் வாழும் விவசாயிகளை எடுத்துக் கொள்வோம்.அதிகம் பயணம் செய்திராத அவர்கள் உன்னிடம் பல கேள்விகள் கேட்கும் போது நீ எரிச்சலடைவாய்,ஆனால் முன்னாளைய மனிதர்கள் ரயிலில் பயணம் செய்த தேயில்லை என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறாயா?இன்று அவர்களால் அது முடியும். அவர்கள் நம்மால் சொல்லமுடியாத, மாற்றங்களுக்குள்ளாகியி ருக்கின்றனர்.நம் வேலை மூலமாக அவர்களுக்கு நாம் அன்பு காட்டலாம். கட்சியும் அதன் தலைவருமான மாவ் அவர்களிடம் காட்டிய பரிவை நாம் காட்டலாம்.நாம் தவறாக வேலை செய்தால் அவர்களின் உணர்வுகளைப் பாதித்தவர்களாவோம்.சொல் ஹென்,நீ அவர்களுக்காக என்ன செய்திருக் கிறாய்?”
அவர் மிக மென்மையான தொனியில் பேசியபோதும்,நான் மிக வெட்கி னேன்.அவர் பேச்சைக் கேட்டபிறகு என் கண்களில் நீர் நிறைந்தது.
மனவுளைச்சலால் அந்த இரவில் என்னால் தூங்கமுடியவில்லை.
அதற்குப் பிறகு வேலை குறித்த என் எண்ணம் ,போக்கு மாறியது.அடுத்த நாள்,ஒரு மனிதர் டாலியனுக்கு டிக்கெட் கேட்டார்.” 29 யுயான் ,9 ஃபென் “ என்று சொன்னேன். பணத்தைக் கொடுப்பதற்கு பதிலாக அவர் தலையைச் சாய்த்து தன் கேள்வியைத் திரும்பக் கேட்டார்.நான் திரும்பவும் சொல்ல, அவரால அதை புரிந்து கொள்ள முடியவில்லை. மூன்றாவது முறையாக மீண்டும் கேட்க உரக்கச் சொன்னேன்,ஆனால் அவர் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு நின்றார்.
அது முந்தைய நாள் போன்றது என்றிந்தால் நான் கத்தியிருப்பேன்.ஆனால் இப்போது எத்தனைமுறை அவர் கேட்டாலும் பொறுமையை இழக்கக் கூடாது என்று நான் முடிவு செய்து விட்டேன்.கடைசியில் தொகையை ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் காண்பித்தேன். உடனே அவர் பணம் கொடுத்து விட்டார்.
டிக்கெட்டை வாங்கிக் கொண்ட பிறகும் அவர் போகாமல் தயங்கி நின்றார்.
“தோழரே ! நான் ஏதாவது உதவ வேண்டுமா?” என்று கேட்டேன்.
திடீரென்று அவர் ஜன்னலில் தலையை நுழைத்துக் கொண்டு “தோழரே! நீங்கள் மிக மென்மையானவர் !எனக்கு காதில் தொந்தரவு இருக்கிறது. அதனால் சரியாகக் கேட்காது. மற்றவர்கள் பொறுமையிழந்து விடுவார்கள். உங்களுக்கு மிக்க நன்றி”என்று தன் காதைக் காட்டி விளக்கினார்.
தன் பையைத் திறந்து அதிலிருந்த ஒரு பெரிய சிவப்பு ஆப்பிளை எடுத்து எனக்குக் கொடுத்தார். மற்ற பயணிகள் அவரை ஊக்கப்படுத்தினார்கள்.
நான் வேலையைத் தொடங்கிய முதல் நாளிலிருந்து இதுவரை எந்தப் பயணி யும் என்னிடம் இத்தனை நட்பாக இருந்ததில்லை.நான் நன்றி சொல்லிவிட்டு ஆப்பிளைத் திரும்பத் தந்தேன்.என் கண்களில் கண்ணீர் திரண்டது.
அதற்குப் பிறகு நான் எனக்கு மிக கடுமையானவளாகி விட்டேன்.சில பயணி களுக்கு காது கேளாத குறையிருப்பதை அறிந்தேன்.அதைத் தெரிந்து கொள் வதற்கு நானொரு பயணி போல புக்கிங்ஹாலுக்குப் போனேன். அந்த ஹால் பெரிய இரைச்சலான இடமாக இருந்தது,ஜன்னலுக்குப் பின்னால் இருப்பவர்க ளுக்கு பயணிகள் பேசுவது கேட்டாலும், அவர்களால் பதிலைத் தெளிவாக கேட்கமுடியாது.
உண்மையில் இது என்னை வேதனைக்குள்ளாக்கியது,பல பயணிகள் வேண்டு மென்றே நான் பேசவது கேட்கவில்லை என்று நடிக்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.உண்மையிலேயே அவர்களுக்கு கேட்கவில்லை. நானாகவே முடிவு செய்து கொண்டு செயல்பட்டது பெரிய சிக்கல்களை எல்லாம் கொண்டு வந்துவிட்டது.
என் வேலையின் அணுகுமுறையை நான் மாற்றிக் கொண்டு விட்ட பிறகு பயணிகளுக்கு சிறந்த வகையில் எப்படி உதவுவது என்பது குறித்துப் பல திட்டங்கள் எனக்குள் எழுந்தன. உதாரணமாக,சில ஸ்டேஷன்களின் பெயர்கள் ஒரே மாதியான ஒலி உச்சரிப்பிலிருக்க, அவைகளை அட்டைகளில் எழுதி அதைப் பயணிகளுக்குக் காட்டுவேன். ஜியாங் டன்,மற்றும் ஜியாங்பென் அல்லது ஜியான் மற்றும் ஜினான் இடையில் உள்ள வேற்றுமை அவர்க ளுக்குப் புரியாத போது அட்டைகளைக் காட்டுவேன்.நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வரும் பயணிகள் ஸ்டேஷன்களின் பெயர்களைப் பல விதங்களில் உச்சரிப்பார்கள்.பலவித சொல் வழக்குகளை பேசவும்,புரிந்து கொள்ளவும் முயன்றேன்.
உடன் வேலை செய்யும் ழூ என்னும் இளம்பெண்ணும் அவளாக வந்து எனக்கு உதவினாள்.மிக இளையவளான அவள் உற்சாகமானவளும், இலக் கியம் மற்றும் கலைக் குழுவிலும் இருந்தவள்.சஹங்காய் மற்றும் குணாழு வழக்குகளை அவளால் பேச முடியும். அதனால் தினமும் அவள் எனக்குக் கற்றுத் தந்தாள்.
ஓய்வு நேரங்களில் அபாக்கஸ் பயிற்சி,ரயில்வே வரைபடம் வரைதல், முக்கி யமான ஸ்டேஷன்களின் தூரம்,கட்டணம் ஆகியவற்றை லேபிளில் எழுது தல், என்று கழித்தோம். இவற்றை அலுவலகத்தைச் சுற்றி ஒட்டினோம், ஓய்வு நேரத்தில் மனப்பாடம் செய்தோம்.படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதோ,படுக்கைக்குப் போகும் போதோ விருப்பத்தோடு நான் இதைப் பயிற்சி செய்தேன்,பஸ்சுக்குப் போகும் போதும், வேலையிலிருந்து திரும்பும் போதும்.
வார ஓய்வு நாளில் இதற்கு முன்னால் நானும் லூவும் சினிமாவுக்குப் போவோம் அல்லது வீசுட் ஆறு வழியாக நடந்து கொண்டிருப்போம்.இப்போது இந்த எண்களை நான் மனப் பாடம் செய்ய உதவி செய்யவும்,கேள்விகள் கேட்கவும் சொல்லி அவனிடம் கெஞ்சினேன்.”உனக்கு கிறுக்கு பிடித்து விட்டதா பெண்ணே ?எப்போது இப்படியே நேரமும், கிலோ மீட்டரும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் எப்படி ஓய்வெடுப்பாய்?” என்று அம்மா கோபித்தாள்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு என் வேலை சுலபமானது.அந்த வருட இறுதி யில் நான் ஒரு தவறும் செய்யாமல் 20,000 டிக்கெட்டுகளவிற்றிருந்தேன்.ஒரு நாள் செயலாளர் லீ வந்து “ஹென், உனக்கு வந்திருக்கும் கடிதங்கள்” என்று ஒரு கட்டைக் காட்டினார்.என் இதயத் துடிப்பு அதிகமானது.என் கவனக் குறை வால் மீண்டும் தவறு ஏதாவது நடந்திருக்க வேண்டும்.ஆனால் எல்லாக் கடிதங்களும் புகழ் மொழிகளாக இருந்தன.
“ஹென், பெரிதாகப் பெருமைபபட்டுக் கொள்ளத் தொடங்கி விடாதே .”என்று சிரிப்போடு சொன்னார்.
நான் வெட்கமாகச் சிரித்தேன்.
என்னைக் கிள்ளி ழூவும் சிரித்தாள்.
2
ஹென் பேச்சை சிறிதுநிறுத்தினாள். அவள் மேஜையிலிருந்த கப்பைப் பார்த்து நான் அதில் தண்ணீரை நிரப்பினேன்.
“அதற்குப் பிறகு உங்களுக்குப் பிரசனைகளே இல்லாமல் போனது?” ஷீ கேட்டார்.ஒரு நிமிடம் பேசாதிருந்து விட்டு அவள் தொடர்ந்தாள்.
1976 வருடம் மார்ச் மாதம் அது. கேங் ஆஃப் ஃபோர் என்னும் அமைப்பின் தாக்கத்தனால் எல்லாம் குழப்பமானது. சரியான விஷயங்கள் தப்பாகின.செய லாளர் லீயை முதலாளித்துவ மனிதர் என்று சிலர் விமர்சித்து ஸ்டேஷனில் போஸ்டர்கள் ஒட்டினர். நான் அதை ஒப்புக் கொள்ளாததால் சிலர் என்னைத் தாக்கவும் ஆரம்பித்தனர்.
முக்கியமான தாக்குதல் எதுவெனில் இளைஞர் லீக்கில் உறுப்பினருக்கான என் மனு மீது. அது புக்கிங் அலுவலகத்தால் ஏற்கப்பட்டு தலைமை அலுவ லக விவாதத்திற்காக அனுப்பப்பட்டது ஸ்டேஷனின் இளைஞர் லீக் கமிட்டி யின் செயலாளர் சிலருடன் சேர்ந்து கொண்டு என்னைத் தாக்கத் திட்டமிட்டி ருந்தனர்.நான் சந்தோஷமாக அவர்கள் சொல்லும் கருத்துக்களை எழுதுவ தற்காக ஒரு நோட்டையும் எடுத்துக் கொண்டு கூட்டத்திற்குக் கிளம்பிப் போனேன்.கூட்டம் ஆரம்பித்து பத்து நிமிடங்களுக்குள் என்னால் அதையும் எழுத முடியாமல்போனது.நான் அதிகமாக அரசியலில் கவனம் செலுத்த வில்லை என்றும், வேலையில் என்னைச் சிறப்பாளராக்கிக் கொள்ளும் முயற்சியில் மட்டும் இருக்கின்றேன் என்று ஒருவர் விமர்சித்தார். இன்னொ ருவர் அதற்கும் மேலே போய்விட்டார்.செயலாளர் லீ இரும்பு எஃகுத் தொழிற் சாலையின் ஊழியர் ஒருவருடைய கடிதத்தை எனக்குக் காட்டினாரா என்று கேட்டார்.கடந்த வருடங்களில் எங்கள் தரம் குறைந்து விட்டது என்று சொல் லும் அவதூறான,புரட்சிக்கு எதிரான கடிதம் அது.அந்த காலகட்டத்தின் புரட்சியை ஏற்காதவர்கள்தான் அப்படிப் பேசுவார்கள் என்றும் லீ அந்தக் கடி தத்தை எனக்குக் காட்டி புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொன்னதோடு நானும் முதலாளித்துவ சார்பாளர் என்று குற்றம் சாட்டினார்.
அந்த முழுக்கூட்டமும் எதிர்ப்பைக் காட்டத்தான் என்று வெளிப்படையாகத் தெரிந்தது. நான் கோபத்தில் நடுங்கினேன்.இந்த்த் தாக்குதலை ஏற்காத சில லீக் உறுப்பினர்கள் என் சார்பில் பேசினார்கள்.”நீங்கள் சகோதரி ஹென்னைப் பார்த்துப் பொறாமைபடுகிறீர்கள். அதனால்தான் இப்படித் தாக்குகிறீர்கள். எல் லாப் பயணிகளும் அவளைப் புகழ்வதையும் ,உங்களை ஒதுக்குவதையும் உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் நீங்கள் வெறுக்கிறீர்கள்”என்று ழூ சொன்னாள். ஆனால் மேலே பேசமுடியாமல் தொண்டை அடைத்து அவளுக்கு அழுகை வந்துவிட்டது.
அடுத்த நாள் விடியற்காலையில் என்னையும் ழூவையும் தாக்கி சில சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்ததைப் பார்த்தேன்.ஒரு பிரம்மச்சாரி மனிதர் எங்களை அடக்கியாள்வதாக ஒரு சுவரொட்டி இருந்தது.குட்டை பின்னல்கள் போட்டது போல ஒரு சிறிய பெண்ணின் படத்தைக் கார்ட்டுன் போலப் போட்டு ,தலையைத் தூக்கிக் கொண்டு ஒரு பட்டியலைப் படிப்பதாக இன் னொரு சுவரொட்டி ,தன் தலையை பெரிய பாறாங்கல்லில் மோதிக் கொண் டதால் அவள் தலையில் பெரியகட்டி ஒன்றிருப்பதாக ஒரு சுவரொட்டி.அதில் ’தவறான வழி”! என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண்ணிற்குப் பின்னால் ,பெரிய பின்னலுடன் இன்னொரு பெண் அவளைத் தூண்டுகிறாள் “தவறில்லை. மீண்டும் மோது என்பதாக”
என்னால் அந்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை.என் தவறுகள் பலவாக இருந்தாலும், மக்களுக்குச் சேவை செய்ய முயற்சிப்பது தவறென்று எனக்குத் தெரியவில்லை.யாரையும் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அலுவ லகத்திற்குள் வந்து சுவற்றிலிருந்த ஸ்டேஷனின் பெயர்கள் தாங்கிய லேபிள் களைக் கிழித்து தரையில் எறிந்து அவற்றை மிதித்தேன். நான் முடிக்கும் தருவாயிலிருந்த போது செயலாளர் லீ உள்ளே வந்தார்.
முகத்தில் வழிந்த கண்ணீரை நிறுத்த முடியாமல் போனது.”இதுதான் கடைசி முறை .இது போன்ற முட்டாள்தனத்தை இனி செய்ய மாட்டேன்.இரவுபக லாக வேலை பார்த்தேன்…அதற்கு என்ன கிடைத்தது?எதுவுமில்லை. வெறும் விமர்சனம்! தொல்லையை வரவேற்பதுதான் இது.நான் ஒவ்வொரு முறையும் ஏன் பலிகடா ஆக வேண்டும்? “
நான் அமைதியாகும் வரை செயலாளர் புகைத்துக் கொண்டே ஆழ்ந்த சிந்த னையிலிருந்தார்.பின் தலையை உயர்த்திப் பார்த்துச் சொன்னார். ”ஹென்,நீ நல்ல வேலை செய்கிறாய் என்பதற்காக ஒவ்வொருவரும் கை தட்டி ,பாடி உன்னைப் புகழ வேண்டும் என்று நினைக்கிறாயா?”
அவர் பேச்சு என்னை அதிரவைத்தது.
“நீ அப்படித்தான் நினைக்கிறாயென்றால் உன் சிந்தனை தவறானது” என்று அதே தொனியில் சொன்னார்.
பிறகு ஒவ்வொரு லேபிளாக எடுத்து, தூசு தட்டிக் கொண்டே “இன்னொரு முறை பலிகடா ஆகி முட்டாள்தனம் செய்யமாட்டேன் என்று சொல்கி றாய்,சரி,ஒரு கதை சொல்கிறேன் ,கேள்..
“சுதந்திரத்திற்கு முன்னால் ,மக்களை சுதந்திரப்படுத்துவதற்காக தன் சக்தி அனைத்தையும் கொடுத்த ஒரு சிறந்த புரட்சி போராளி இருந்தார்.அவர் பனி போர்த்திய மலைகளைக் கடந்து, சதுப்பு நிலங்களைத் தாண்டி நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளை அனுபவித்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு அவர் இரவு பகலாக தன் வாழ்க்கையை மக்களுக்காக செலவழித்தார்.அவர் அலுவலகத்தில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டி ருக்கும் எனவும், அவருக்குப் போதிய ஓய்வு இல்லை என்றும் எல்லோரும் சொன்னார்கள். அவர் தன் உடல் நலத்தைப் பேணிக்கொள்ள வேண்டும், ஓய்வு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக அவருடைய அலு வலகப் பணியாளர்கள் கூடி பெரிய சுவரொட்டி ஒன்றைத் தயாரித்தனர். அவர்களுடைய அபிப்பிராயங்களை ஏற்றுக் கொண்டாரெனினும் தனக்கு வயதாகும் போது ,கட்சிக்காக நிறைய உழைக்க வேண்டும் என்றார்.
“தான் மக்களின் எருது என்றும், அந்த வகையில்தான் வாழ்க்கை முழுவதும் தான் உழைத்ததாகவும் அவர் சொன்னார்.எவ்விதப் புகாரும் இல்லாமல் ,முழு மனதோடு பல ஆண்டுகளாக கடினமான வேலைகளைத் தோளில் சுமந்தும், கனமான பொருட்களைத் தூக்கியும், வாழ்ந்தார். உழும் கருவியை ஆழமாக்கி மக்களின் ,மகிழ்ச்சி என்னும் விதையைத் பயிரிட்டு……
கடைசியில் அதிக வேலையால் உடல் நலம் குன்றிப் போனார்.அவருடைய உடல்நலம் பற்றிய செய்திகள் வதந்தியாகப் பரவ,சில காலத்திற்குப் பிறகு அவர் குணமடைவார் என்று மக்கள் நினைத்தார்கள்.ஹென், வெகுஜனம் அவரை நேசித்தது, அவர் தேறிவிடுவார் என நம்பி…
செயலாளரின் குரலிலிருந்த நடுக்கம் என்னை அசையவைத்தது.
“ஆனால் நிலைமை மோசமாக, தான் வாழ மாட்டோம் என்று தெரிந்த பிறகு அவர் இன்னும் கடுமையாக வேலை செய்தார்.அவரால் பேச முடியாமல் போனபோதும் அவர் மனம் மக்களைப் பற்றியே இருந்தது. அவர் சமூக நலத்தையே எண்ணினார்.அவருடைய வலி அதிகமான போது நர்ஸிடம் ”நீங்கள் தயவு செய்து மற்ற நோயாளிகளை கவனியுங்கள். இங்கு செய்வ தற்கு எதுவுமில்லை!” என்று சொன்னார்.பிறகு..பிறகு அவருடைய மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதிலுமான கோடிக்கணக்கான சீன மக்கள் ஒருங்காக அழுதார்கள்..அவர்கள் அனைவரும் சொன்னது.” இந்த மாதிரியான மனிதர் ஒருபோதும் இறப்பதில்லை..’ என்று
’அது பிரதமர் ழோ! நம் அன்பு பிரதமர் ழோ “என்று எழுந்து நான் கூவினேன்.
செயலாளர் லீ மேலே பேச விரும்பினாலும் கண்கள் குளமானதால் ,கைக ளால் முகத்தை மூடிக் கொண்டு வெகுநேரம் அமைதியாக இருந்தார்.பிறகு தொடர்ந்தார்”ஹென்,பல விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு நீ இன்னமும் சிறியவள்தான். நான் முப்பது வருடங்களாக கட்சி உறுப்பினராக இருந்து வருகிறேன்,ஆனால் நான் எப்போது பிரதமர் ழோவை நினைத்தாலும்,அதற்கு இன்னும் நான் தகுதி பெறவில்லை என்பதாகவே உணர்கிறேன்” என்றார்.
கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டு ,நான் பதில் சொல்லத் தொடங்கிய போது செயலாளர் லீயை யாரோ வெளியிலிருந்து அழைப்பது கேட்டது.ழூவாக இருக்க வேண்டும்.எங்கள் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். வேகமாக அறைக்குள் வந்தவள் லீயின் கையைப் பற்றிக் கொள்ள கன்னங் களில் தாரைதாரையாக நீர் வழிந்தது.பிறகு என் பக்கம் திரும்பி “ஹென், நானும் மக்களுக்காக எருதாக விரும்புகிறேன்”. என்று கூறினாள்.
ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு அழுதோம்.
அந்த நாள் என்னை மாற்றியது.குறைவாகப் பேசத் தொடங்கினேன். பக்குவ மானவளாக உணர்ந்தேன்.எல்லோரும் அதை கவனித்தார்கள்.எப்போதும் சிரித்துப் ,பாடிக் கொண்டுமிருந்த ழூவும் அமைதியாகிப்போனாள்.தன் உள் பலத்தை அவள் திரட்டிக் கொள்வது எனக்குப் புரிந்தது.அது எங்கள் வாழ் வுக்கு ஆழமான அர்த்தம் சேர்த்தது.பயணிகளுக்கு உதவும் அதிகமாக உதவும் இயல்பு கொண்டவர்கள் ரகசியமாக ஒன்று சேர்ந்தோம். பயணிகளின் தேவை கள் குறித்து கவனமாக ஆராய்ந்ததில் மூன்று முக்கிய தொல்லைகள் அவர்க ளுக்கிருப்பதை கண்டறிந்தோம்.தங்களுடைய அடுத்த பயண இடத்தை வசதி யற்ற ஒரு நேரத்தில் அடைய வேண்டியிருப்பது அவர்களின் முதல் கவலை யாகும்.அடுத்து தங்களுடைய தொடர்புரயிலை விட்டு விட்டால் என்ன செய் வது என்பது இரண்டாவது கவலை. அப்படியான சமயத்தில் தங்களுக்கு தங்கு வதற்கு அறையோ அல்லது ஹோட்டலோ கிடைப்பதில்லை என்பது மூன்றா வது,கடைசி கவலையாகும்.எங்களால் தரப்பட்ட ரயில்களின் நேரப் பட்டியல் மட்டுமின்றி ,பஸ்களின் நேரம் குறித்த பட்டியலும் மாகாண பெரிய நகரங்க ளில் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தோம்.பிறகு பீஜிங், சஹங்காய், ஜியன் ஆகிய இடங்களில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிகள், தொழிற்சாலைகள், கல் லூரிகள்,ஆகியவற்றிற்கான வழிகள் பற்றி அறிந்தோம்.அது எங்களுடைய வேலையை மீறியதாக இல்லை. பயணிகளுக்காக,எல்லா வகையான செய்திகளையும் கற்க விரும்பினேன்.
மே தினத்தன்று நா லூவின் வீட்டிற்குப் போக முடிவு செய்தேன். என்னைப் பார்க்க அவன் ஏப்ரல் இருபத்தியெட்டு வந்தான்.என் அறைக்குள் வந்தவன் நேரப் பட்டியலை நான் மனனம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, அவன் முகம் இருண்டது.
“என்ன ஆயிற்று உனக்கு ?” கேட்டேன்.
சோர்வாக உட்கார்ந்தவனிடம் வற்புறுத்திக் கேட்க “ யுனான், தயவு செய்து இந்த முட்டாள்தனத்தை எல்லாம் நிறுத்திவிடு.”பதில் தந்தான்.
“ஏன்?”
“நடிப்பதை நிறுத்து,உன்னை விமர்சனம் செய்து அவர்கள் பெரிய சுவரொட்டி களைப் போட்டிருக்கின்றனர்.ஆமாம்,நீ பெரிய அளவு முயற்சி செய்கிறாய், ஆனால் உன்னை முதலாளித்துவ பிரதிநிதி என்று கடைசியில் அடையாளப் படுத்தி விடுவார்கள். துன்பங்களை வரவழைத்துக் கொள்ளாதே “என்று எரிச்சலாகச் சொன்னான்.
“ஆனால் லூ..”
அவன் தடை செய்தான்:” நடந்த கூட்டத்தில், உன் நடவடிக்கைகள் அரசியல் சூழலுக்கு எதிராக இளைஞர்களைப் செயல்படத் தூண்டுவதாகச் சொல்லி இளைஞர் அணி செயலாளர் உனக்கு எதிராகப் பேசினார்.அது எல்லா இடங் களிலும் பரவிவிட்டது. எதுவும் தெரியாமல் நீ இன்னமும் இருட்டில்தான் இருக்கி றாய்”
“ஆனால் லூ,மற்றவர்கள் என்ன சொன்னாலும், நான் சரியான வழியில் போவதுதான் முக்கியமானது இல்லையா?”என்று அவனது கோபம் கண்டு ஆச்சர்யமடைந்தவளாகக் கேட்டேன்.
:அது நல்லதற்கில்லை.எல்லாப் பத்திரிகைகளும்,செய்தித்தாள்களும் இந்த விஷயத்தைத்தான் பேசுகின்றன” என்று சொல்லித் தலையாட்டினான்.
“ஆனால் அவர்கள் சொல்வது சரியா?”
“யாருக்கென்ன?நீ இப்படியே நடந்து கொண்டால் பெரும் தொல்லைக்கு ஆளாவாய்.” என்று திடீரென்று வெடித்தான்.
அவன் கோபக்காரன் என்றாலும் இதற்கு முன்னால் என்னிடம் அவன் இப்படிக் கோபப்பட்டதில்லை.எனக்கு வருத்தமாக இருந்த்து.”லூ ,நான் உனக்கும் துன்பம் தந்து விட்டேன்”
“எனக்கா ? எனக்கு யாரைப் பற்றியும் பயமில்லை.!என்னைப் பார் , நான் கடினமானவன்.அவர்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் ளட்டும்.ஆனால்,அவர்கள் உன்னைத் தாக்குவதை நான் விரும்பவில்லை” என்று முழங்கையை மேஜையில் குத்தி எழுந்தான்.பிற்கு ஒரு வட்டமடித்து கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறி னான்.
அமைதியான வீஸூ ஆறு என் வீட்டருகிலுள்ளது.அதன் கரைகள் அகல மானவை.அன்று மதியம் நான் அங்கே தனியாகப் போனேன். அங்கிருக்கும் கூழாங்கற்கள் நானும் லூவும் விளையாட்டாக தண்ணீரில் கல்லெறிந்து காலங்களை நினைவூட்டின.அந்த மரத்தினடியில் பயணிகளுடன் எனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை,பொறுக்க முடியாத சிலவற்றை நான் அவனிடம் அன்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அவன் எதுவும் சொல்லாமல் சிரித்தான்.இந்த நினைவுகள் எல்லாம் என்னைச் சோகப்படுத்தியது.அவற்றை நான் விலக்கமுயன்று இலக்கின்றி அலைந்து கொண்டிருந்தேன்.தலையை உயர்த்திப் பார்த்த போது தூரத்தில் குவின்லிங் மலைப்பகுதி நீலப் பின்னணி யில் தெரிந்தது. கண்ணுக் கெட்டிய தூரம் வரை வீஸூ மிக வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. சூரிய வெளிச்சம் தண்ணீரில் மின்னிக் கொண்டிருந் தது. கழுகுகள் மிக மேலாக தொடுவானத்தில் பறந்து கொண்டிருந்தன.அது மிக அழகான காட்சி.
சில சமயங்களில் இயற்கை அற்புதமான காட்சிகளால் புத்துணர்வூட்டி அதை எதிராளியிடம் பிரதிபலிக்கச் செய்கிறது.எனக்கும் அப்படிதான்.ஆனால் அந்தக் கணத்தில் நான் முடிவற்ற வரலாற்றின் பாய்ச்சல், புரட்சிக்கான காரணங்கள், மனிதனின் உன்னதம் ஆகியவற்றை நினைத்தேன்.தொலைவில்தெரிந்த அந்த நீலக் காட்சியை உற்று நோக்கி நின்றேன்.நாட்டின் மலைகள், ஆறுகள், நிலங் கள் ஆகியவற்றின் மேல் இந்த நிலமும் ஆறும் போல பிரதமர் ழோவின் அஸ்தி தூவப்பட்டது.தன் வாழ்க்கையை அவர் மக்களுக்காகவும், எதிர்காலத் தலைமுறைக்காகவும்,கழித்தவர்.அவர் ஆன்மா நம் இதயங்களில் கலந்து வழி காட்டுகிறது.அவருக்கென்று எதுவும் சொந்தமானதில்லை.குழந்தைகளில்லை. தன்னலமற்ற சிந்தனையில் அவர் அஸ்தி பரவியிருக்கிறது. பிரதமர் ழோவை நினைக்கும் போது, என்னால் பிரச்னைகளை,அழுத்தங்களை எப்படி எதிர் கொள்ள முடியாமல் போகும்?
அது என்னை இயல்பு உலகிற்கு இழுத்து வர ,நான் அலுவலகத்திற்கு விரைந் தேன், மக்களுக்கு பணி செய்ய நீங்கள் என்னை அனுமதிக்க மாட்டீர்களா? இல்லை! என் சவத்தின் மீது கூட நான் அதை ஏற்கமாட்டேன். மாட்டேன்.
3
அதற்குப் பிறகு முன்பு மாதிரியே பயணிகளுக்கு என்னால் முடிந்த செயல் களைச் செய்து வந்தேன்.எனக்கு சிறிது ஓய்வு நேரம் கிடைத்தால் நான் முதியவர்களுக்கு உதவுவேன், புகழ்ச்சிக்காக இல்லை அது என் பணி என்ப தற்காக .அதனால் எழுந்த விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு ஞாயிறு நானும்,ழூ வும் ஜியான் நகருக்குச் சென்று நகரின் மையப் பகுதிகளை வரைபடமாக்கி வந்து மனனம் செய்து கொண்டோம்.
ஒரு வேளை அவனைச் சங்கடப்படுத்தியிருந்தால்.. மே தினத்தன்று நான் லூவை பார்க்கவுமில்லை ,அவன் வீட்டிற்குப் போகவுமில்லை. அவனைப் பார்க்கவேண்டும் என்று மனம் ஏங்கினாலும் அதை ஒருபக்கம் தள்ளிவிட்டு வேலையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவேன்.
ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் நான் இரவு பணி செய்து கொண்டிருந் தேன்.அப்போது மழை பெய்ததால் அதிக பயணிகள் ஹாலில் இல்லை. எட்டரை மணிக்கு ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு விவசாயி திடீரென்று வேகமாக ஹாலுக்கு வந்தார்.”தோழரே ! ஜியானுக்குப் போகும் மிக விரைவு ரயில் எது? “என்று கேட்டார்.
அவருடைய வேகத்தைப் பார்த்து நான் எண் 46 விரைவு வண்டி 21.03 மணிக்கு என்று சொன்னேன்.
பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு மற்றவர்களைப் பார்த்து” ரயில் விரைவில் வந்து விடும்.எனவே சாப்பிடுவதற்கு நேரமில்லை”என்றார்.
டிக்கெட்டைக் கொடுக்கும் நேரத்தில் அவரிடம் நான் விஷயத்தைக் கேட் டேன்.அவர்கள் குவின்லிங் மலைப்பகுதியைச் சேர்ந்த பைவ் ஸ்டார் பிரிகேட் உறுப்பினர்கள் என்றார். அவர்கள் பகுதியில் வேலை பார்க்கும் அந்த நகரத் தைச் சேர்ந்த ஒரு மாணவி பூச்சி மருந்து அடிக்கும் போது அது தவறுதலாக அவள் மூச்சில் கலந்து ஆபத்திற்கிடமான நிலையில் இருக்கிறாள்.அவளை ஸ்டெரச்சரில் மாலையே அழைத்து வந்துவிட்டனர்.இப்போது அவர்கள் சிகிச் சைக்காக ஜியான் போகின்றனர் என்று விளக்கினார். அவர்களுடைய கவலை யான முகத்தைப் பார்த்ததும் நான் என்வேலையை ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு ஸ்டெரச்சரை உள்ளே கொண்டு வருவதற்கான பிளாட்பார்மின் கதவின் வாசலைத் திறக்கும் சாவியை எடுக்கப் போனேன்.வண்டி வருவதற்கு முன்பாகவே ஸ்டெரச்சர் அங்கிருக்க வேண்டும்.அந்தப் பெண்ணைப் போர்த் தும் வகையில் ஒரு ஜாக்கெட்டை அணிவித்தேன். அவர்கள் இதற்கு முன் னால் ரயிலில் பயணம் செய்தவர்களில்லை என்பதால் பலமுறை நன்றி கூறினர்.
அந்தப் பெண் உண்மையாகவே கவலைக்கிடமாக இருந்தாள். ஒரு விவசாயி அவள் முகத் தின் போர்வைப் பகுதியை விலக்க, நான் கலங்கிப் போனேன். முகம் மிகத் தெரிந்தது போல இருந்தது,! மீண்டுமொரு முறை பார்த்தபோது அவளைத் தெரியும் என்று தோன்றவில்லை.
ரயில் வந்து விட்டது.நான் கேக்குகள் வாங்கி வர விரைந்தேன்.அதை அவர்க ளிடம் கொடுத்தேன்.”எடுத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் பசியோடு இருக்க வேண் டும்.சாப்பிட்டுக் கொண்டு செல்லுங்கள் “
அவற்றைப் பெற்றுக் கொண்டவர், “நீங்கள் அன்பாக இருக்கிறீர்கள்.நாங்கள் உங்களை மறக்கவே மாட்டோம்”என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.”
“நீங்கள்தான் இந்தப் பெண்ணைக் காப்பாற்ற மிக சிரமம் எடுத்துக் கொண் டுள்ளீர்கள். நான் உங்களை எப்படி மறக்க முடியும்?”என்றேன்.
அவர் மேலே ஏதோ பேசத் தொடங்க ரயில் புறப்படும் மணியடித்தது.நான் அவரை ஏறச்சொன்னேன்.
ரயில் புறப்படும் நேரத்தில் திடீரென்று எனக்கு ஏதோ ஞாபகத்திற்கு வந்தது ரயில் ஜியானுக்கு நள்ளிரவில் போகும். கடைசி பஸ்சும் அந்த நேரத்தில்தான். அவர்கள்ஜியானுக்கு இதுவரை போனதில்லை என்பதால் வழி தேடியே நேரம் வீணாகிவிடும். அந்தநேரம் என்பது அந்தப் பெண்ணின் வாழ்வு. நான் ஒரு சிறியதாளில் படம் வரைந்து கொடுத்தேன்.பிறகு ஜன்னலருகே தலையை வைத்து அவர்கள் எப்படிப் போக வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னேன்.அவர்களுக்குப் புரிந்தது என்று தெரிந்த பிறகு என் கவலை குறைந்தது.
ரயில் கிளம்பத் தொடங்கியதும் நான் ஒதுங்கி விட்டேன். அவர்கள் கண் பார்வையிலிருந்து மறையும் வரை கையசைத்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று லூவின் ஞாபகம் வந்தது.நேரப் பட்டியலும் ,வரைபடமும் ஒரு இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற எந்த அளவிற்கு உதவியது என்று அவனுக்குத் தெரிந்தால் அவன் என்மீது கோபப்படுவானா?அவன் பிடிவா தக்காரன்,ஆனாலும் மென்மையானவன். அவன் இப்போது எப்படி இருக்கி றானோ.
ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த ஊரிலிருந்து பன்னிரண்டிற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாராட்டுக் கடிதங்களோடு ஸ்டேஷனுக்கு வந்து விட்டனர்.அந்த வயதான மனிதர் அன்றிரவு நடந்ததைக் கதை போலச் சொன்ன போது எல்லாப் பயணிகளும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.சுவரொட்டிகள் மூலம் நான் அவமானப்பட்ட செய்தி எப்படியோ மிக வேகமாகப் பரவ அதுபற்றி வருந்திய பல பயணிகள் ஒன்றாகச் சேர்ந்து பெரிய தலைப்பு உள்ள சுவ ரொட்டி ஒன்றைத் தயார் செய்தனர்; ’ மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் தோழர் ஹென்னை தாக்கியது தவறு ’ என்று. அன்று நான் விடுமுறையில் இருந்ததால் அடுத்த நாள் காலை அலுவலகம் வரும் எதுவும் எனக்குத் தெரி யவில்லை.சுவரில் பாராட்டு மொழிகளோடு அது ஒட்டப்பட்டிருந்தது .பலர் தங்களுடைய அபிப்பிரயங்களை இதுபோல எழுதி இருந்தனர்;
“ஹென்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்!”
“தோழர் ஹென் எங்கள் குடும்பத்தில் ஒருத்தி! ”
சில கருத்துக்கள் இன்னும் தெளிவான குறிப்பாக இருந்தன;
“தோழர் ஹென்னை எதிர்ப்பவர்கள் மாவோவின் மக்களுக்குப் பணி செய்யும் கருத்துக்களுக்கு எதிரானவர்கள்!”
“தோழர் ஹென் சரியான வழியில் உதவுகிறார்.இதற்கு எதிராகச் செயல் படுபவர்கள் நல்ல நிலையை அடைய மாட்டார்கள்!”
என்னால் தாங்க முடியாமல் அழுதேன்.இவர்களைப் போல யாரும் இது போன்ற ஆதரவையும்,உற்சாகத்தையும் எனக்கு தந்ததில்லை.மனிதர்களுக்கு உதவுவதென்பது எனக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல் ,அதற்காக நான் வாழ்க் கையில் எதுவும் செய்வேன் .அதுதான் என் லட்சியம் என்று சொல்லிக் கொண்டே..
காலம் உருண்டது.நான் உணர்வதற்குள் ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வந்து விட்டது. ஒரு நாள் நான் விரைவு ரயில் டிக்கெட்டுகளை விற்று முடித்த போது செயலாளர் லீ வந்தார். இரண்டு பயணிகள் வெளியே எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.
ஆச்சர்யமாக , நான் வெளியே வந்த போது அந்த மாணவியும்,அவள் தந் தையும் இருந்தனர்.அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டனர்.
“தோழரே ! நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் “என்று அவள் தந்தை தொடங்கினார்.”உங்கள் உதவி இருந்திரா விட்டால் ஜயோலின் இறந்திருப் பாள்”.
“அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவளை இங்கு கொண்டு வந்த அந்த மனிதர்களுக்குத் தான் நீங்கள்நன்றி சொல்ல வேண்டும்”
’இல்லை,உங்கள் எல்லோருக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். மயிரி ழையில்நான் உயிர் பிழைத்ததாக டாக்டர் சொன்னார்.ஒரு மணிநேரம் தாமத மாகியிருந்தாலும் அது நடந்திருக்கும்.எல்லோரும் சொன்னது முதலில் உங்க ளுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்றுதான். ஆனால் அவர்களால் உங்களது இரண்டு மணிநேரம் போய்விட்டது” அவள் குதூகலம் பொங்கச் சொன்னாள்.
ஒருவித கூச்சமேற்பட ,நான் பேச்சை மாற்றினேன்.அவள் நலமா என்று கேட் டேன்.
’மிக்க நலம். ரயிலை விட்டு இறங்கியவுடன் உங்களை வந்து பார்த்து நன்றி சொல்ல வேண்டுமென்று அப்பா சொன்னார்.என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அக்கா என்று திரும்பத் திரும்பச் சொன்னாள்.உடல் நலம் தேறித் தெளிவாக இருந்தாள். எவ்வளவு அன்பான தங்கையாக இருப் பாள் என்று தோன்றியது.
“உன்னைப் பார்த்தால் மிகவும் பரிச்சயமானவள் போல எனக்குத் தெரிகிறது. உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்றேன்.
“உண்மையாகவா?ஆனால் நான் முதல் முறையாக உங்களைப் பார்க்கிறேன். எங்கே என்னைப் பார்த்திருக்கிறீர்கள்?”
நான் முயற்சித்து விட்டுவிட்டேன்.பிறகு மற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். வேலைக்கு நேரமாகி விட்டதை கவனித்தேன்.
“அப்பா,நீங்கள் முதலில் செல்லுங்கள்.நான் இங்கிருக்கிறேன்,வேலை முடிந் தவுடன் அக்காவை வீட்டுக்கு அழைத்து வருகிறேன்” என்று சொன்னாள் அவள்.
நான் மறுக்க அவள் விடவில்லை.அலுவலகத்திற்குப் போனேன்.
நான் எப்போதும் வெளி மனிதர்களுடன் பழகும் போது மிகக் கூச்சமாக உணர் வேன். ஆனால் இந்தக்குடும்பம் உண்மையாக என்னைக்கூப்பிட்டதால் மறுக்க முடியவில்லை நான் ஒப்புக் கொண்ட போது ஜயோலின் எல்லையில்லாமல் மகிழ்ந்தாள்.என் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
நாங்கள் போனபோது அவள் அம்மா வாசலில் காத்திருந்தார்.என் கைகளைப் பிடித்துக் கொண்டு அறைக்குள் அழைத்துச் சென்று தலையை நீவினார். மேலும் ,கீழும் பார்த்து நன்றி சொல்லிக் கொண்டேயிருந்தார்.நின்று கொண்டி ருந்த எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
ஜயோலின் வெளியே போனாள். பின்பு உள்ளே வரத் தயங்கிய யாரையோ அழைத்துக் கொண்டு வந்தாள்.
“வேகமாக வா! பெரிய அக்காவை வந்து பார். இன்று உனக்கு என்ன ஆயிற்று?”என்று சொல்லியபடி வந்தாள்
அவளுடைய சகோதரன் அறைக்குள் வைத்த காலை இழுத்துக் கொண்டான். ஒரு பார்வையில் நான் ஊமையானேன். அவன் வேறுயாருமில்லை . லூதான்
அவன் தன் காலையே வெறித்தபடி என் முன்னால் நின்றிருந்தான்.என்னைப் பார்க்க விரும்பினாலும் தயங்கினான். அவன் முகம் மிகச் சிவந்திருந்தது.
“என்ன நடந்தது என்று கேட்ட தருணத்திலேயே அது நீயாகத்தானிருக்க வேண்டும் என்று ஊகித்தேன்”என்றான்.
அவன் பெற்றோரும்,சகோதரியும் குழம்பினர்.”அண்ணா, உங்களுக்கு இவர்க ளைத் தெரியுமா?” என்று கேட்டாள்.
அவளுக்கு பதில் சொல்லாமல் .தன் அப்பா பக்கம் திரும்பித் திக்கியபடி ”இவள்… மே தினத்தன்று…. இங்கே வர… நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்”.
புருவத்தை உயர்த்திய ஜயோலினுக்கு உண்மை புரிந்த்து.
என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.”ஐயா.. அக்கா.. அண்ணி! என்று கையைத் தட்டிக் கொண்டு குதித்தாள்.”இப்போது புரிகிறது..இப்போது புரிகிறது!”
குடும்ப நெருக்கம் என்ற உணர்வு அதிகமானது.சிரித்துக் கொண்டிருந்த அம்மா விடம் விருந்தாளிக்கு உணவு தயாரிக்குமாறு கணவன் சொன்னார்.
நான் அவர்களுடன் பதினொரு மணி வரை இருந்தேன். பின்பு லூ என் வீடு வரை வந்தான்.பஸ்சில் போவதற்கு பதிலாக நடக்க முடிவு செய்தோம். ”யுனான்..உனக்குத் தெரியுமா?நான் உன்னைப் பார்க்க பலநாட்களாக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்,ஆனால் எனக்கு பயமாக..”
“பயமா?எதற்காக?” கேட்டேன்.
“உன்னைக் கண்டுதான், நீ என்னைப் புறக்கணிப்பாய் என்று யுனான், இன்ன மும் என் மேல் கோபமாக இருக்கிறாயா? நான் சொல்ல விரும்புவதெல்லாம் நான் செய்தது தவறுதான் ”.
என் மனம் உருகியது.”ஓ..லூ..”மென்மையாகச் சொன்னேன்,என் உணர்வுகளை வெளிப் படுத்துவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் திணறினேன்.அவனைப் பார்த்த போது சிரிக்க விரும்பினாலும் ,ஏனோ கண்கள் நீரால் நிரம்பின.
அன்றிரவு நான் மகிழ்ச்சியாகவும்,உற்சாகமாகவும் வீடு திரும்பினேன்.
ஹென்னின் கன்னங்களில் செம்மை படர அவள் நீண்ட இமைகள் கீழிறங்கின.
தன் கைகடிகாரத்தைப் பார்த்து விட்டு குதியலோடு அவள் எழுந்த போது அவள் கதையில் ஆழ்ந்திருந்த நாங்கள் அதிலிருந்து விடுபட்டு நடப்புலகிற்கு வந்தோம்.”ஐயோ! வேலைக்கு நேரமாகி விட்டது”என்று சொல்லிக் கொண்டே அவள் அறையை விட்டு வெளியேறினாள்.
விடை கொடுக்க நாங்கள் தாமதம் செய்யவில்லை.தன் ஜன்னலைத் திறந்து விட்டு, மன்னிப்பு கேட்பது போலச் சிரித்து விட்டு , நட்பான உணர்வோடு பயணிகளைப் பார்த்தாள்.
நாங்களிருவரும் முகப்பிற்கு வந்து ,ஒரு வித மரியாதையோடு அவள் ஜன்னலை சிறிது நேரம் பார்த்தபடி…..
——————————-
நன்றி : The Vintage Book of Contemporary Chinese Fiction Vintage Books 2001
மூலம் : மோ ஷென் [ Mo Shen ]
ஆங்கிலம் : குவாங் வென்டாங் [ Kuang Wendong ]
தமிழில் : தி.இரா.மீனா