பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா

This entry is part 15 of 48 in the series நூறு நூல்கள்

தமிழறிஞர். பன்மொழிப் புலமையாளர்.மொழி பெயர்ப்பாளர்.எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.அறிவியல் தமிழின் முன்னோடிகளில் ஒருவர் என அநேக பெருமைகளைக் கொண்டவர் வெ.சாமிநாத சர்மா.

1939ல் துவங்கிய இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்து, 1941ன் பிற்பகுதியில் ஜப்பானிய படைகள் பர்மாவை நெருங்கிக் கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில் ரங்கூனில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்த “ஜோதி” எனும் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியராக இருந்தார் சாமிநாத சர்மா. 1941 டிசம்பர் மாதக் கடைசியில் ஜப்பானிய விமானங்கள் ரங்கூன் மீது தாக்குதல் நடத்தத் துவங்கின. கொத்துக்கொத்தாய் மக்கள் கொல்லப்பட்டனர். என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாத மக்கள் உயிருக்குப் பயந்து உடமைகளை கைவிட்டு ரங்கூன் நகரை விட்டு வெளியேறத் துவங்கினர்.  பர்மியர்கள் நாட்டின் வடக்குப் பகுதிக்கும், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் இந்தியா நோக்கியும் புறப்பட்டனர்.

இனியும் பத்திரிக்கையை நடத்துவதோ, வெளியிடுவதோ சாத்தியமில்லை என்கிற கட்டத்தில் சாமிநாத சர்மா ரங்கூனை விட்டு வெளியேறத் தீர்மானிக்கிறார். தன்னுடைய நூல்கள், குறிப்புகள், உடமைகள் என தனக்குப் பிரியமான அத்தனையையும் அங்கேயே விட்டுவிட்டு வெகு சில பொருட்களுடன்  பிப்ரவரி 12, 1942ல் ரங்கூனை விட்டு கிளம்பியது முதல் சென்னை வந்து சேர்ந்தது வரையிலான தன்னுடைய அனுபவங்களை, உணர்வுகளை குறிப்பெடுத்துவைத்து பின்னாளில் “அமுதசுரபி”யில் எழுதிய தொடரின் தொகுப்புதான் “பர்மா வழிநடைப் பயணம்”.

அவர் காலத்திற்குப் பிறகு நூலாக தொகுக்கப்பட்டது. பயணக் கட்டுரைகள் என்பவை பெரும்பாலும் அதை எழுதியவரின் சுயசரிதையைப் போலத்தான் எழுதப்பட்டிருக்கும். வெகு சிலரே அதைத் தாண்டிய வெளியில் பயணங்களை அது தரும் அனுபவங்களை, தரிசனங்களை அணுகி எழுதுகின்றனர். அத்தகைய நூல்களே காலங்கடந்தும் பேசப்படுகின்றன. பிற்காலத்தில் அவை வரலாற்றுக் குறிப்புகளாகவும் அறியப்படுகின்றன. அந்தத் தரத்திலானது இந்த நூல். பயண இலக்கியம் என்று கூடச் சொல்லலாம்.

இந்தப் பயணம் அவர் விரும்பிய ஒன்றல்ல. நெருக்கடிகளுக்கு மத்தியில் உயிர் பிழைக்கும் பொருட்டு தன் உடமைகளை எல்லாம் கைவிட்டுக் கிளம்பும் துயர மனோநிலையுடன் துவங்குகிறது. இந்தியாவிற்குப் போக வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கு. ஆனால் எப்படி போவது என யாருக்கும் தெரியாது. பயண வசதி இல்லாத காலம் என்பதால் இந்தியாவை நோக்கி நடக்கத் துவங்கியவர்கள்தான் அதிகம். நல்ல வேளையாக சாமிநாதசர்மா மற்றவர்களை விட குறைவான தூரமே நடக்கிறார். டோலி, புகைவண்டி, கப்பல் என மாற்றி மாற்றி பயணிக்கிறார். வரும் வழியில் உள்ள அகதி முகாம்களில் தங்குகிறார்.

ரங்கூனில் கிளம்பி கல்கத்தா வந்தடைவது ஒரு கட்டம். கல்கத்தாவில் இருந்து சென்னை அடுத்த கட்டம் என விரிகிறது இந்த நூல். இந்த பயணத்தில் அவர் மட்டுமில்லை நம்மையும் கூடவே இழுத்துச் செல்வதைப் போலொரு உணர்வு மேலிடுகிறது. ஒவ்வொன்றையும் நமக்கு காட்டுகிறார். விவரிக்கிறார். விவாதிக்கிறார். கேள்விகளை நமக்குள் எழுப்புகிறார். ஓரிடத்திற்குப் பிறகு நாமும் அவர் கூடவே நடக்கிறோம், மலைகளில் ஏறுகிறோம். பள்ளத்தாக்குகளில் ஊர்கிறோம். அகதி முகாம்களில் அவலங்களைக் கண்டு பொருமுகிறோம்.

நாகலாந்து மக்களின் அறியாமையை கிறிஸ்தவ மிசனரிகள் எவ்வாறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை மதமாற்றம் செய்கின்றார்கள் என்பதைப்பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. மணிப்பூர் மக்களின் மனிதாபிமானம், வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை அழகு, அங்கே கொட்டிக்கிடக்கும் வளங்கள். அகதிகளாய் திரும்புகிறவர்களிடம் பிரிவினையைத் தூண்டிய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் செயல்பாடுகள் எல்லாம் நாம் இதுவரை தெரிந்திராத தகவல்கள்.

அடுத்த கணத்தில் என்ன நடக்கும் எனத் தெரியாத பயணத்தில் உண்டான உடல் சோர்வு, மனச்சோர்வு காரணமாய் நம்பிக்கையிழந்த சமயங்களில் மனதை இறை வழிபாட்டிலும் , இயற்கையை ரசித்துக் கொண்டும், பல நாட்கள் உணவே இல்லாமல் பயணப்பட்டாலும் முகமறியா மனிதர்கள் வழியெங்கும் செய்த உதவிகள். பயணத்தை தொடர முடியாத அளவுக்கு உடல் நலிவுற்றவர்கள், மரணித்தவர்கள்,  அத்தனையும் தாண்டி தாய் மண்ணில் கால் வைத்தவுடன் எழுந்த உணர்வுகள் என நூலின் நெடுகே பல இடங்களில் நம்மை நெகிழ வைக்கிறார்.

பண்டித ஜவஹர்லால் நேரு அகதிகள் முகாமிற்கு வருகை தந்து பிரயாணிகளுக்குத் தேவையான வசதிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, மேலும் சிறப்பாக செய்ய யோசனைகளையும் அளித்து விட்டுச் சென்றது களைப்புடனும் திக்குத்தெரியாமல் தவித்த நெஞ்சங்களுக்கு ஆறுதல் அளித்ததையும் குறிப்பிட்டிருந்தது, அன்றைய அரசியல் தலைவர்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், அவர்களின் அக்கறை மீதிருந்த மரியாதையையும் நமக்கு புரிய வைக்கிறார்.

நான்கரை மணிநேரத்தில் படித்து முடிக்க வேண்டியதை நாட் கணக்கில் வாசித்தேன். பல்வேறு காரணங்களினால் தாய் மண்ணை விட்டு விலகி வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களின் மனநிலை, வாழ்வியல் நிதர்சனங்கள்,சொந்தங்களை விட்டு விலகியிருந்துவிட்டு தாய்நாடு திரும்பி  தனக்கான புதிய அடையாளத்தை தேடிக் கொள்வதில் இருக்கும் சிரமம் அதன் வலி என பலவகையிலும் இந்த நூல் எனக்கு நெருக்கமாய் இருந்தது.

வாழ்கையின் விலை என்ன என்பது அகதிகளாக அடுத்தவரை அண்டி வாழ்வதன் அவலங்களை, கொடூரங்களை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். இவற்றை எதிர்கொள்ளாத மற்ற அனைவருமே அதிர்ஷ்டசாலிகள்தான்.

Series Navigation<< பாமாவின் கருக்குகண்ணனை அழைத்தல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.