வாய்ப்புகள் என்னவாக இருக்கும்?


நானூறு கோடி வருடங்களுக்கு முன்பு, பருப்பொருளுக்கு மேன்மேலும் பல்கூட்டாக ஆகும் தன்மை இயல்பாக உள்ளதால், அணைந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம் விடுவித்த அமினோ அமிலங்களின் அணுத் திரள்கள் ஒன்று திரண்டு பெருமூலக்கூறுகளாக ஆயின. அதை யார் இப்படி ஆகச் சொல்லிக் கேட்டார்கள்? அடுத்த 50 கோடி வருடங்களில், பெரும் அணுத்திரள்கள் பரிணமித்து உயிருள்ள அணுக்களாக மாறின, முதலில் மையக் கரு இல்லாமலும், பிறகு தம்மை மறுபிரதி எடுக்கக் கூடிய உயிரணுக்களாகவும் மாறின. ஒரு நிமிடம் ஒன்று பருப்பொருளாக இருக்கிறது, அடுத்த நிமிடம், ஊஷ்ஷ்ஷ், அதற்கு உயிர் வந்தாச்சு! இது உங்களுக்கு எப்போதாவது நேர்ந்திருக்கிறதா? உங்களுக்கு வடிசாறு சரியான சூட்டில் வேண்டும், உங்களுடைய பாட்டிக்கு அது தெரிந்திருக்கும், ஆனால் உங்கள் பாட்டி இன்னும் பரிணமித்து எழவில்லை. அதெல்லாம் இருட்டில் நடக்கும் ஊகங்களே, மும்முரமான, காதல் வயப்படுதல் என்பதான இருட்டு. இந்த உயிரணுக்கள் இனக்கீற்று அமிலத்தை (டிஎன்ஏ) உருவாக்கின, அது ஒரு உயிரினம் பிழைத்திருப்பதற்குத் தேவையான எல்லாத் தகவல்களையும் குறிமுறைப்படுத்துகிறது. பிறகு அவை ஒரு அதிவேகப் பெருக்கத்தில் இறங்குகின்றன. மறுப்பை அவை ஏற்பதில்லை. தொலைபேசியில் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும் முந்நாள் காதலன் போலவோ, அல்லது ப்ளே மிஸ்டி ஃபார் மீ திரைப்படத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பாத்திரத்தோடு ஜோடி சேர முதல் முயற்சியாக ஒரு தடவை சந்தித்து விட்டு, பிறகு அவருடைய காதலியைக் கொல்ல முயலும் ஜெஸ்ஸிகா வால்டேர்ஸ் பாத்திரம் போன்றனவோ அல்ல. இந்த உயிரணுக்கள் பணத்தை அச்சடிக்கும் எந்திரங்கள் போலத் தம்மைப் பிரதி எடுக்கின்றன. அவை தம்மைத் தெருவில் நின்று இலவசமாக விநியோகிக்கின்றன, “என்னை எடுத்துக்கிடுங்க, பிடியுங்க,” என்று சொல்கின்றன. கொல்லப்பட்ட இரையைச் சுற்றிப் பம்மும் ஓநாய்களைப் போல சுயநலம் பீடித்தவை இவை. நாஜிகளின் தோல்விக்குப் பிறகு வெகுநாள் பிரிவுக்கப்புறம் மறுபடி சந்திக்கும் காதலர்களைப் போல தலைதெறிக்க ஓடி வருபவை. காஸப்ளாங்கா திரைப்படத்தில் தன் இரவுக் கேளிக்கை விடுதியில் இங்க்ரிட் பெர்க்மானைக் கண்டதும், ஹம்ஃப்ரி போகார்ட் பியானோ வாசிக்கும் டூலி வில்ஸனிடம் சொல்வது நினைவிருக்கிறதா, “உலகம் பூரா இருக்கிற நகரங்களில் எல்லாம் உள்ள ஜின் வியாபார விடுதிகளை எல்லாம் விட்டு விட்டு, இவளுக்கு உள்ளே நுழைய என் விடுதிதான் கிடைச்சுதா?” அவை மிகத் துர்லபமான வாய்ப்புகள்தாம், ஆனால் அந்த விடுதி (ரிக்ஸ் ப்ளேஸ்) காலமே வளைகிறதான ஓர் இடம், ஒரு அண்டத் துளை. கடைசியில், இன்க்ரிடை அவளுடைய கணவனிடமே திருப்பி அனுப்பும்போது அவன் சொல்கிறான், எல்லாப் பொருட்களுக்குமான பேரமைப்பில், “இருவர் காதலிக்கிறார்கள் என்பது கவைக்குதவாத விஷயம்.” அவன் சொல்வதன் பொருள், அவர்கள் பொருட்படுத்தப்பட வேண்டியவர்கள். காதலுக்காகத்தான் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், நாம் போகியோடு [1] வாதாட முடியாது, ஏனெனில் நாம் அதை நேராகப் பார்த்தால், காதல் என்பது மொத்தத்தின் ஒரு இயல்பு. உயிருள்ள ஒவ்வொரு ஜீவராசியும் தம்மளவில் உயிரில்லாத அணுத்திரள்களால் ஆனவைதான், ஆனால் கூட்டாக அவை ஒரு உயிரினத்தைப் படைக்கின்றன. ஒவ்வொரு ஜீவராசியும், தொற்று நோய் போலாகி விட்டிருக்கிற காதல்தான்.
நா ன் 19 வயதானவளாக இருக்கையில் ஒரு பூனைக்குட்டியைப் பராமரித்தேன். தோழி ஒருத்தியின் பூனை குட்டிகள் போட்டது, அந்த்க் குட்டிகளில் ஒன்றை அவள் என்னிடம் கொடுத்தாள். அவன் நான்கு வாரம் ஆனவன், இன்னும் தடுப்பூசி போடுமளவு வயதாகவில்லை. அவனுக்கு ஆறு விரல்கள் இருந்தன, ஆரஞ்சு நிறத்தவன், வரிகளோடிய உடல், அத்தனை உயிர்த்துடிப்போடு இருந்தான், அவனை நான் முழு நேரமும் பார்த்தபடி இருந்தேன். அவன் என்னை மஞ்சள் விழிகளால் திரும்பப் பார்த்தான். அவன் சோஃபாவின் மீதேறி என்னருகில் இடுங்கிக் கொள்ள உதவும் என்று, அவனுக்கு ஒரு சாய்ந்த பலகையைத் தயாரித்தேன். அவனுடைய ரோமம் நிறைந்த முக்கோணக் காதுகள் உயரே நோக்கி நிமிர்ந்திருப்பதில் தெரிந்த நம்பிக்கையை இன்னும் நினைவு வைத்திருக்கிறேன். அவனை என் அடுக்ககம் பூராவும் தூக்கித் திரிந்தேன். அவனுடைய நகங்கள் கூர்மையானவை, என் ஆடைகளில் மாட்டிக் கொண்டு இழுத்தன. எனக்கு மீதமிருந்த வாழ்வு பூராவும் அவனுடைய பெயரைத் தணிந்த குரலில் சொல்லியபடி, அவனுடைய பாதங்களில் முத்தமிட்டிருப்பேன். ஒரு வாரம் கழித்து அவன் சோர்வடைந்தான், உண்டபிறகு வாந்தி எடுத்தான். அவனை ஒரு நீலத் துண்டில் சுற்றி, விலங்கு மருத்துவரிடம் எடுத்துப் போனேன். அந்த மருத்துவருக்கு கனிவான, ஆனால் வாழ்க்கையால் களைப்புற்ற கண்கள், அவர் சொன்னார், “அவனுக்கு நச்சுயிரிக் காய்ச்சலாக இருக்கலாம். அது வந்திருந்தால், நாம் செய்வதற்கு ஏதும் இல்லை.” என் இதயமே நொந்து போனது. தீவிர அன்புக்கு அவகாசமே தேவையில்லை. அந்தப் பூனைக்கு நான் பொறுப்பு என்று உணர்ந்தேன், இதிலிருந்து தோற்ற உணர்வு என்னிடம் பல வருடங்கள் என் மீது கவிந்திருந்தது.
நா ன் தான், உயர்நிலைப்பள்ளியில் என் வகுப்பு மாணவர்களில், பாலுறவு கொள்வதில் கடைசிப் பெண்.  என் முதல் தடவைக்குப் பிறகு நான் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன், மாறுதல் தெரிந்தது. ஆனால் ஒரு மாறுதலும் இல்லை. தெருவில் போகும் மனிதர்களைப் பார்த்து ஆசைப்பட்டேன். சுரங்க ரயிலில் நான் பார்த்த ஒரு ஆணின் வாய், நான் சந்தித்த நபர்கள், நான் சந்திக்காதவர்கள், நான் இன்னும் நினைக்கிற மனிதர்கள். நான் ஒருத்தரை விரும்பி அவருடன் பாலுறவு கொண்டால், அவரை நான் காதலிக்கிறேன் என்று நினைத்தேன். ஒருவேளை அதுவும் ஒரு வகையான காதலோ என்னவோ. நான் ஒரு முறை ஒரு பையனைச் சந்தித்தேன், அவனுக்கு 22 வயது. எனக்கு 44 வயதாகி இருந்தது. அவனுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. அவனுடைய வயதில் அவனுக்குத் தெரிந்ததில் பாதி கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவன் ஒரு தாள வாத்தியக்காரன் (ட்ரம்மர்) எனக்குப் பிடிக்கிற அளவை விடக் கூடுதலாகப் பருமனாக இருந்தான். இருவரில் யாராவது ஒருவர் நெருப்புக் குச்சி அணைவது போல அணையும் வரை, அவனை என்னால் முத்தமிட்டுக் கொண்டே இருந்திருக்க முடியும். ஒரு தடவை, சுதந்திரம் இல்லாத ஒரு மனிதன் மீது நான் ஆசை கொண்டேன். நான் அவருடன் பாலுறவு கொள்ள முடியாதென்று சொன்னேன், என் காரணம், உறவு கொண்டால் மூன்று நாட்கள் தொடர்ந்து பாலுறவு கொள்ள விரும்புவேன், அவருக்கு அத்தனை நாட்கள் கிட்டாது. அதனால் நாங்கள் பாலுறவு கொள்ளவில்லை. மூடுபனியில் நடந்து திரிந்தோம், பல சண்டைகள் போட்டோம். எங்கள் உடுப்புகளைக் களைந்தோம். எனக்குக் கட்டுப்பாடு கொஞ்சமும் இல்லை. அது பற்றி நான் மோசமாக உணர்ந்தேன். அவர் மோசமாக உணர்ந்தார். இந்த வகையில் ஜீவனோடு இருந்தது பற்றி நாங்கள் மகிழ்ந்திருந்தோம். அவர் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்தார், நான் வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம் அவருடைய ஜன்னல்களை மேல் நோக்கிப் பார்ப்பேன். சில சமயம் அவர் எனக்கு கையசைப்பார். இது பல வருடங்கள் நடந்தது. அவர் மிக அழகாக இருந்தார். நாங்கள் ஒரு தடவை மடோன்னா பற்றி சண்டை போட்டோம். பிறகு அவர் என்னிடம் சொன்னார், அவர் நிஜத்தில் மடோன்னா பற்றி என்னுடன் மாறுபடவில்லை, ஆனால் நான் வாதாடுவதைப் பார்ப்பது அவருக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம். என்னை விட இளைஞரான அவர், சாமர்த்தியமும், உயர்ந்தெழும் ஆர்வமும் கொண்டிருந்தார். எனக்கு அந்த உயர்ந்தெழுவதிலிருந்த ஆர்வம் பிடிபடவில்லை, ஆனால் அது வேலை செய்தது. அவர் ஒரு புகழ் பெற்ற நடிகரானார்.
ன் சகோதரனும் நானும் லேக் மாவட்டத்துக்குச் சில நாட்களுக்குப் போயிருந்தோம். அவன் ஒரு சிற்பி, டென்மார்க்கில் வசித்து வந்தான். அவனுடைய தாடை வட்டமாக இருந்ததைப் பார்த்தேன், மறுமலர்ச்சி காலத்து ஓவியங்களில் காணப்படும் குழந்தைத் தேவதைகளின் தாடை. எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரி தாடைதான். அவன் ஒல்லியாகவும், தசைப்பற்று அதிகம் இல்லாமல் பையனைப் போல இருந்தான். க்ராஸ்மீயரில் ஒரு மதுக்கடையில் இருந்தோம், ஜின்னும் டானிக்கும் கலந்த பானங்களை அருந்தினோம். அவனுடைய முழங்கையின் உள்புறத்தை நான் தொட்டேன், “நாம் பொய் சொல்வதில் தேர்ந்திருந்தோம்,” என்றேன். நாங்கள் குழந்தைகளாக இருந்த போது ஒருவரை ஒருவர் தொடுவது பற்றிய குறிப்பு அது. நான் சாய்ந்து அவனிடம் கேட்டேன், “என் தலையை உன் மீது சாய்த்து ஓய்வெடுக்கலாமா?” என்றேன். அவன், “அதுக்கென்ன, வா,” என்கிறான். நான் என் தலையை அவன் தோள்களில் பதிக்கிறேன், என் கன்னத்தின் கீழ் எலும்பாகத் தெரிகிறது அது. அன்று காலையில் நாங்கள் டோவ் குடில்களைச் சுற்றி வந்தபோது, அடைசலான, குளிர்கிற அறைகள் கொண்ட அவற்றில் வோர்ட்ஸ்வொர்த் தன் சகோதரி டாரதியோடு வாழ்ந்திருந்திருந்தார், ஒருக்கால் அவர்கள் இருவரும் பரஸ்பரம் காதலித்திருக்கக் கூடும். நான் தங்கும் விடுதியில் என் சாவியைப் பெற்றுக் கொண்டு, அவனிடம் சொல்கிறேன், “உள்ளே வா.” படுக்கையில் படுக்கு முன் நான் விளக்கைப் போடவில்லை, படுக்கையின் மேல் விரிப்பை நான் தட்டுகிறேன். அவன் நாற்காலி மீது தன் மேலங்கியை அணிவிக்கிறான், அந்த அறையைச் சுத்தம் செய்ய விரும்புபவன் போல நோட்டம் விடுகிறான். அவன் படுக்கையில் படுத்துக் கொண்டு என் கையைப் பிடித்துக் கொள்கிறான். அவனுடைய தலை முடியை படியத் தடவியபடி நான் கேட்கிறேன், “உனக்குப் பயமாக இருக்கிறதா?” அவன் சொல்கிறான், “எந்நேரமும்.” வாழ்க்கையில் ஏதோ ஒரு அளவுக்குதான் மழை இருக்கிறது, ஏதோ ஒரு அளவுதான் அன்பும் கிட்டுகிறது.
ரு கேளிக்கை விருந்தில் எனக்குச் சிறிதளவே தெரிந்த ஒரு பெண்ணுடன் நான் பேசினேன். கிழக்கு யூரோப்பிய பெண்களைப் பற்றி ஆய்வறிவு கொண்டிருந்த அவர் நாற்பது வருடங்களாக பேராசிரியராக இருந்தவர். நான் சொன்னேன், “கொய்னுக்குப் [2] போகலாம் என்றிருக்கிறேன்.” அவர் கேட்டார், “எதற்கு?” அவர் மெலிந்த உடல் கொண்டவர், உயரமான பூட்ஸ் அணிந்தவர். அவருடைய அடர்த்தியான முடியை எனக்குப் பிடித்தது. நான், “நூற்றுக் கணக்கான பெண்கள் புத்தாண்டுக்கு முந்தைய இரவில் அங்கு தாக்கப்பட்டனர், அரசாங்கத்தில் இருந்த பெண்கள் தாக்கியவர்களைக் கைது செய்ய முயலவேண்டாம் என்று காவல் துறையிடம் கட்டளையிட்டனர், ஏனெனில் அந்த ஆண்கள் முஸ்லிம்கள். நான்கு நாட்களுக்கு செய்தியறிக்கைகள் இந்த சம்பவத்தைப் பற்றி ஏதும் வெளியிடாமல் தடுக்கப்பட்டன. கொய்ன் நகரத் தலைவர், ஒரு பெண், பெண்களிடம் தெருக்களில் போகையில் எச்சரிக்கையுடன் செல்லவும், ஆண்களிடமிருந்து விலகி இருக்குமாறும் புத்திமதி சொன்னார்,” என்றேன். அந்த மெலிந்த பெண் கேட்டார், “நீங்கள் ஜெர்மன் மொழி பேசுவீர்களா?” நான் சொன்னேன், “இல்லை.” அவர் சொன்னார், “என் முதல் கேள்வி, அந்த ஆண்கள் யார் என்று கண்டு பிடிக்கத்தான் இருக்கும்.” நான் சொன்னேன், “அந்த ஆண்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டனர். சிலர் சிரியாவிலிருந்தும், இராக்கிலிருந்தும் சமீபத்தில் குடியேறியவர்கள். சிலர் வட ஆஃப்ரிக்காவிலிருந்து வந்து ஜெர்மனியில் கூடுதலான காலம் வசித்திருக்கிறவர்கள். இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. நான்கு பெண்கள் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். பலர் அடித்து, பால் வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டனர். எல்லாரிடமிருந்தும் பணமும், அலைபேசிகளும் பறிக்கப்பட்டன, அவர்களோடு சென்ற ஆண்களிடமும் அப்படியே பறிப்பு நடந்தது. எழுநூறு குற்றப் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.” மெலிந்த பெண் சொன்னார், “போகுமுன் உங்களுக்கு இன்னமும் கூடுதலாகத் தகவல் தெரிய வேண்டும்.” அவர் ஜெர்மனியில், ஜெர்மன் ஆண் துணைவர்களுடன் பல காலம் வசித்திருக்கிறார். அவருக்கு இப்போது ஆண் துணைவர் யாரும் இல்லை. நான் சொன்னேன், “உங்களால் எனக்கு ஜெர்மன் பெண்ணியர்களுடன் ஏதும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா என்று நான் யோசித்தேன்.” அவர் கேட்டார், “பெண் தலைவர்கள் ஆண்களைப் பாதுகாத்தார்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள்?” நான், “அவர்கள் குடியேற்றம் பற்றிய அரசுக் கொள்கைகளைத் தடுமாறச் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது என் ஊகம். அவர்கள் இனவெறியைத் தூண்டக் கூடாது என்று நினைத்தால், அதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆண்களுக்குப் பெண்களைப் பிடிக்காதது போலவே அவர்களுக்கும் பெண்களைப் பிடிக்கவில்லை என்றும் நான் நினைக்கிறேன்,” என்றேன். திடீரென்று அவர் தன்னுடைய அடுக்ககத்தில் சென்ற வாரம் தங்கி இருந்த ஒரு ஆணைப் பற்றி என்னிடம் ஒரு கதை சொன்னார். அந்த ஆண் அவரை விட மூத்தவர், பருமனானவர், அவருக்கு அந்த நபரை வெகுகாலமாகத் தெரியும். அந்த நபர் தன்னையோ, வீட்டில் புழங்கிய பாத்திரங்களையோ சுத்தமாக வைத்திருப்பதில் அக்கறை அற்றிருந்தார். இந்தப் பெண் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்ய வேண்டுமென்று எதிர்பார்த்தார், இவரால் அந்த நபரைத் தடுக்க முடியவில்லை. அந்தப் பெண் சொன்னார், “அவர் என் பணவிவகாரங்களைச் சீர் செய்ய உதவினார். அவருக்கு நான் செய்யும் பதில் உதவி இது என்று நான் நினைத்தேன்.” நான் சொன்னேன், “ஆனால் நீங்கள் அவருடைய நடத்தை பற்றி மனத் துன்பம் கொள்கிறீர்களில்லையா?” அவர் சொன்னார், “ஆமாம். ஆனால் அந்த ஆணை மாறும்படி சொல்ல எனக்கு மு?
??ியவில்லை. அதை எப்படிச் செய்வதென்ற வழி எனக்குப் புலப்படவில்லை,” அப்போது அவர் வாய் கோணியது. நான் சொன்னேன், “உங்களுக்கு ஒரு ஆண் குறி இருப்பதாகப் பாவனை செய்து கொள்ளுங்கள், நீங்கள் வீட்டுக்கு அழைத்திருக்கிற ஒரு நபர் தரையில் சாப்பாட்டைக் கொட்டி விடுகிறார், மரப் பொருட்களை இடித்து உருட்டுகிறார். அந்த ஆளிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?”
ன் அம்மாவைப் பற்றி நான் பல காலமாக நினைக்கவேயில்லை, அல்லது அவர் எப்போதும் உடன் இருக்கிறார், நான் கவனிப்பதில்லை. என் அம்மா ஒவ்வொரு நாளும் உடைகள் அணியும்போது, துடிப்பான வாழ்வுக்காக என்பது போல அணிவார். அவர் எங்கே போயிருந்தார்? நேற்று இரவு, நான் நடை போனேன். ஒருவரும் வெளியில் இல்லை, சாயங்காலம், மரங்களில் கரைந்து கொண்டிருந்தது. நான் ஒரு மதுக்கடைக்குள் நுழைந்தேன். அறையின் கூரையிலிருந்து ஃப்ளமிங்கோ பறவை நிறத்தில் ஒரு நியான் விளம்பரம் தொங்கியது. அந்த அறிவிப்பு, ’குழந்தைக்கோட்டைகள்’ (பேபிகாஸல்ஸ்) என்று இருந்தது. எங்கோ ஒரு ஆளற்ற தெருவிலிருந்த பழைய பொருள் மறுவிற்பனைக் கடையில் யாரோ இந்த அறிக்கையைக் கண்டெடுத்து, அதை ஒரு இரவு விடுதியின் ஒளியாக மாற்றத் தீர்மானித்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். பலரும் என் சகோதரியின் கைகளைப் பார்த்து அவற்றை நேசிக்கத் துவங்குகிறார்கள். அவளால் ஒரு செங்கல்லை இரண்டாக உடைக்க முடியும். எங்கள் சகோதரனுக்கு 30 வயதாகிற போது, அவன் அவளோடு தங்கி இருக்க வந்தான். தான் மணந்திருத்த பெண்ணை விட்டு விலக அவன் முடிவு செய்திருந்தான், என் சகோதரி வாழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஏரியில் மூழ்கி இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவள் சொன்னாள், “அது முழுக்க உளை சேறாக இருக்கிறது, நீ ரொம்ப தூரம் உள்ளே இறங்கி நடந்தால்தால் ஏதோ கொஞ்சம் ஆழம் கிட்டும், அதில் மூழ்குவது உனக்குப் பெரும் பாடாக இருக்கும்.” எங்கள் சகோதரன் தலையைப் பின்னே சாய்த்துப் பெருஞ்சிரிப்பாகச் சிரித்தான். சென்ற இரவு ஒரு மணிக்கு, ஜீஸஸ் மக்கள் என்னும் கும்பல் பிடித்து வைத்திருக்கிற ஒரு சுரங்கப் பாதை வழியே நடந்து வந்தேன். மதக் காட்சிகளைக் கொண்ட பிரும்மாண்டமான சுவரொட்டிகள் அந்த நடைபாதை பூராவும் இருந்தன. இறுதி மீட்பு பற்றி ஒரு ஆள் ஒலிபெருக்கியில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தான். இசை அந்தக் கல்பதித்த சுவர்களில் மோதி எதிரொலித்தது. நான் தடை ஏதுமில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தேன். நான் மீட்கப்படுவேன் என்று யாரும் நினைக்கவில்லை. நான் ஒரு விடுதிக்குப் போனேன், அங்கே நீர்க் குழாய்கள் அடைபட்டிருந்தன. பழக்கமில்லாத அறைகளில் தூங்கும் சக்தியை நான் இழந்து கொண்டிருக்கிறேனா என்று யோசித்தேன். ஒரு வேளை தூங்காமல் விழித்து இருந்து, உலகைத் திரும்பிப் பார்ப்பது என் வேலையோ என்று யோசித்தேன். என் அப்பா என் அம்மாவின் தோற்றத்தைப் பாராட்டியவர். அவர் அவளுடைய பெயரைச் சொல்லும் விதத்திலேயே அதை நாம் அறிய முடியும், அவர், “நீ என்ன வேண்டுமானாலும் வாங்கிக்கோ,” என்று சொல்லும் விதத்திலேயே அது தெரியும். ஒவ்வொரு வாரமும் அவளுக்கு ஒரு மேலங்கியின் பைகளில் 100 டாலர்களை அவர் விட்டுச் சென்றதிலிருந்தே தெரியும். அவள் அதைச் செலவழித்ததில்லை. அதை எதற்காக அவள் சேமித்து வைத்துக் கொண்டிருந்தாள்?
நான் அரிஸோனாவில் தனியாக இருக்கிறேன், அங்கே நான் அபூர்வமாகத்தான் தனியே இருப்பேன். நான் ஒரு நாளே வாழும் ஈசல் போல என்றும், இந்த ஒரு நாள்தான் என் மொத்த வாழ்க்கை என்றும் பாவனை செய்து கொள்கிறேன். பெருமளவு நீளும் பாலை நிலப்பரப்பில் புழுதி மண்டிய தாவரங்கள் புள்ளிகளாகத் தெரிகின்றன. எல்லாம் அமைதியாய்க் கிடக்கிறது. இங்கு கிடக்கும் சில பாறைகள் பத்து அடி நகர பத்தாயிரம் வருடங்கள் எடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு மணியுமே ஒரு பாறை போல, புலப்படாத வகையில் நகர்கிறது.
ன் சகோதரியோடு சேர்ந்து மின்மினிப் பூச்சிகளைப் பிடித்தது எனக்கு நினைவு வருகிறது. அவற்றை ஒரு ஜாடியில் இட்டோம், மேலே காற்றுக்காக வலைக்கம்பியால் ஒரு மூடி இருந்தது, அடியில் அவற்றின் உணவுக்குப் புற்களைப் போட்டிருந்தோம்.
நாங்கள் இருந்த இடத்தில் வானம் கருமையாக இருந்தது. யூதரினப் படுகொலையிலிருந்து தப்பித்தவர்களின் வாரிசுகள், தம் பெற்றோரின் படுமோசமான அனுபவத்தின் சுவடுகளைத் தம் உயிர் மரபணுவில் சுமக்கிறார்கள் என்று சிலர் நம்புகிறார்கள். இது உண்மையானால், நாம் அனுபவங்களில் கற்ற குணாம்சங்களை மரபுவழியே பெறக் கூடும், அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கடத்தக் கூடும். என் சகோதரி நோய்வாய்ப்பட்டிருந்த போது அவளுடைய பாதங்களை நான் பிடித்து விட்டேன். அவளுடைய தலை முடி மறுபடி வளர்ந்திருந்தது. அவள் இறந்த போது, நான் யாரையும் அறிய முடியாமல் இருந்தேன். பிரமாதமாக இருந்த ஒரு விடுதியின் கற்படிகளில் ஏறி, அங்கு விண்டர்மீயர் ஏரியைப் பார்க்கும்படி போடப்பட்டிருந்த ஒரு சிறு சோஃபாவில் அமர்ந்திருந்தேன். அருகில் இங்கேதான் ஜான் ரஸ்கின், பெண்களுக்கு யோனியில் முடி இருக்கும் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்திருந்தார். கொஞ்ச நேரம் கழித்து நான் பிறரின் பைகளில் இருந்து நழுவி விழுந்திருந்த சில்லறைக் காசுகளின் குவியல் மீது அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். அந்தக் காசுகளைச் சேகரித்து எடுத்துக் கொண்டு வெளியே போய் ஓர் இந்தியச் சாப்பாட்டை உண்டேன். எதுவும் எப்படி முடிகிறதென்பதை அறிய யாருக்கும் அக்கறை இல்லை. கடற்கரையில் ஒரு நாயின் உடல் மேலும் கீழும் ஏறி இறங்கியபடி இருக்கையில் அதை நான் பிடித்துக் கொண்டிருந்தேன். என் கன்னங்கள் சிவப்பாகி இருந்தன. கடல்பாசி பாப்பர்களையும்[3], கடல் அரித்து வழவழப்பான கண்ணாடித் துண்டுகளையும் நான் நினைவு வைத்துள்ளேன். என் கழுத்தெலும்பை நான் தொடுகிறேன், சிமிட்டா அளவு மண்ணைத் தடயமாக்குகிறேன். எலும்புகள் நகர்வதைக் கேட்டேன். அவை வெறும் எலும்புகள் மட்டுமல்ல. மக்கள் டார்வினைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பிழைப்பவர்கள் இரக்கமற்ற தன்னலம் கொண்டவர்கள் அல்ல. சூழ்நிலைக்கேற்ப மாறுபவர்கள்தான்.
மைகள் அனேகமாக எந்த மாறுதலும் இல்லாதே சுமார் 25 கோடி (250 மிலியன்) வருடங்களாக பிழைத்து வந்திருக்கின்றன. ஒரு வகையான ஆமை அனேகமாக அழிந்து விட்டிருக்கிறது. ஒரே ஒரு ஆண் தான் எஞ்சியுள்ளது. அது 80 வயது ஆன ஆமை. மிருகக் காட்சி சாலைகள் அதற்குத் துணை ஒன்றைத் தேடி ஏதும் வெற்றி பெறவில்லை. நாமெல்லாமே கடைசி ஜீவராசிதான்.
W.G.செபால்ட் தன் ‘இசைத் தருணங்கள் (Moments musicaux)’ என்னும் கட்டுரையில் ஃப்ராய்டின் சில கவனிப்புகள் பற்றி எழுதும்போது சொல்கிறார், “இசை …. சித்தப்பிரமையைத் தடுக்க உதவும் ஒரு சைகை. எதார்த்தத்தின் பயங்கரம் நம்மை மூழகடித்து விடாமல் தற்காப்புக்காக நாம் இசையைப் படைக்கிறோம்.” லியொனார்ட் மைக்கெலின் கடைசிக் கட்டுரையான “என் யிட்டிஷ் (மொழி)” என்பதில் அவர் எழுதுகிறார், “இறுதிக் கணக்கில், நான் நம்புவது, அர்த்தம் என்பதற்கு மொழியோடு உள்ள தொடர்பை விட இசையோடுதான் அதிகம், உணர்ச்சிகளின் ஓட்டம் வேறெந்தத் தேர்வும் இல்லாத போதுதான் மொழியாகிறது, …அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான்.”
ரு பெண், பால் கவர்ச்சி பற்றி அவ்வளவு நிறைய தெரிந்து கொள்கிறாளா, அது மற்றெல்லா வித அறிவையும் வெளியேற்றி விடுகிறது, அவளோ அது தனக்குத் தேவையில்லாதது என்பதைத் தெரிந்து கொள்கிறாள். ஆசை என்பது மன்னிப்பை விடப் பெரியது. அவள் ஒரு முறை ப்ளாஸா விடுதிக்கு முன்னர் ஒரு ஆணின் சட்டையைக் கிழித்து அகற்றினாள். அவன் அவளை அந்த வார இறுதி நாட்களில் கூப்பிடவில்லை. அவர்கள் ஒரு பூங்காவில் ஒரு குளத்தில் வந்து சேர்ந்த நீரோடை ஒன்றைக் கண்டனர். அதைச் சுற்றிலும் இலைகள் வீழ்ந்திருந்தன, நட்சத்திரப் பாசி தரை விரிப்பு போலப் படர்ந்திருந்தது. அந்த ஆண் தன் கைக்கடிகாரத்தைக் கழற்றி விட்டார், தான் அதை விற்க வேண்டி வரும் என்று எதிர்பார்த்திருந்தார். அவர்கள் தங்கள் உடுப்புகளைக் கழற்றி விட்டு, நீரோடைக்குள் இறங்கினர், கால்களைப் பாசி படர்ந்த கற்களின் மீது வைத்திருந்தனர். வெள்ளி நிறத்தில் மீன்கள் துள்ளிக் கடந்தோடின. நான் ஒரு முள்ளில் என் விரலைக் குத்திக் கொண்டேன், நீ ரத்தத்தைச் சப்பி அகற்றினாய். உன்னை முதல் முறை நான் பார்த்த போது, நீ மதுபான விடுதியில் ஒரு முக்காலியில் அமர்ந்திருந்தாய், எனக்குத் தெரிந்த சிலரிடம் பேசிக் கொண்டிருந்தாய், நான் மெள்ள நகர்ந்து அங்கே வந்தேன். என் பாட்டியின் சிரிப்பே உன்னிடமும் காணப்படும் என்பதற்கான வாய்ப்புகள் என்னவாக இருந்திருக்க முடியும்? மற்றொரு நாள், ஒரு புத்தகக் கடையிலிருந்து, நான் ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தைத் திருடினேன். அன்று குளிராக இருந்தது, என் கையுறைக்குள் அந்த நோட்டுப் புத்தகத்தை நுழைத்துக் கொண்டேன். அது விலை மிகுந்தது, அழகாக இருந்தது, அனேகமாக எனக்குப் பயனில்லாதது. குழந்தையைத் தள்ளும் ஒரு வண்டியோடு ஒரு தம்பதி நுழைந்தனர் என்பதால், வெளியேறும் கதவருகில் நான் நின்றேன். தெருவில் நீ சொன்னாய், “அந்தப் பெண்ணின் முகம் நான் பார்த்ததிலேயே மிகத் துன்பம் நிறைந்த முகம்.” நான் சொன்னேன், “நான் ஒரு நோட்டுப் புத்தகத்தைத் திருடினேன்.” நீ கேட்டாய், “எதற்காக?” சாம்பல் நிற வானில் மெல்லிய மேகங்கள் இருந்தன. நான் சொன்னேன், “அதை எடுக்கும்போது, உன்னிடம் நான் அதைச் சொல்வேன் என்று எனக்குத் தெரியும்.” நீ சொன்னாய், “நீ எதுவும் செய்யாத போதே குற்றம் புரிந்தவள் போலத்தான் இருக்கிறாய்.” உன்னைச் சந்திக்குமுன் நான் பருப்பொருளாக இருந்தேன், உயிர்ப்போடில்லை. நீ சொல்வாய், “விபத்துகள் நிகழ்வனதான்.”

~oOo~

குறிப்புகள்:
[1] போகி என்பது போகார்ட் என்ற பெயரின் சுருக்கம்.
[2] கொய்ன் என்பது Cologne என்ற பெயருள்ள ஒரு ஜெர்மன் நகரம். இங்கு கொடுக்கப்பட்ட உச்சரிப்பு ஜெர்மன் மொழி உச்சரிப்பு.
[3] பாப்பர் (popper) என்பது ஒரு வகைச் சிற்றுண்டி. இங்கு சொல்லப்படுவது கடற்பாசியால் தயாரிக்கப்பட்டது.

~oOo~

இந்தக் கதையின் இங்கிலிஷ் மூலம் n+1 என்னும் பத்திரிகையின் 32 ஆம் இதழில் பிரசுரமானது. (Fall’2018 இதழ்)- Three Stories | Issue 32 | n+1
மூலக்கதையாசிரியர்லாரி ஸ்டோன்
தமிழாக்கம்: மைத்ரேயன்

சென்ற இதழில் வெளியான லாரி ஸ்டோன் கதைகள்:
1. ஏதோ நடக்கிறதே அங்கிருந்து சில தபால் அட்டைகள்
2. நுழைவு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.