சுவாரசியமான புத்தகங்களை அறிமுகப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவற்றை நமது வீட்டிற்கே அனுப்பி வைக்கும் நண்பர்கள் இருப்பது ஒரு வரப்பிரசாதம். இந்தியாவில் வசிக்கும்/பணிபுரியும் எனது முப்பது வருடத்து நண்பன் அமித், தான் படித்தபின் எனக்கும் சுவைக்கும் என்று தோன்றியதால், டெல்லியிலிருந்து அமெசானில் ஒரு ஆர்டர் போடவும், இந்தப் புத்தகம் அமெரிக்காவில் எங்கள் வீட்டு வாசலில் வந்து விழுந்தது. பல்கலை வருடங்களில் அமித்தும் நானும் ஒரே அபார்ட்மெண்டில் பல வருடங்கள் வாழ்ந்து, முனைவர் பட்டத்தை துரத்திக்கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் நாட்கணக்கில் இந்த மாதிரியான புத்தகங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள், உலகின் போக்கு என்று எல்லா விஷயங்களையும் உருட்டிக்கொண்டிருப்போம். அந்தத் தொட்டில் பழக்கம் விட்டகுறை தொட்டகுறையாக இன்னும் தொடர்கிறது.
பொருளாதார முடிவுகளில் மனித நடத்தையின் பங்கைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, விளைவுகளை அலசி ஆயும் துறைதான் பிஹேவியரல் எகானமிக்ஸ் (இனி நடத்தைப் பொருளாதாரம்). இத்துறையின் துவக்கத்தையும் வளர்ச்சியையும் சுவையான கதைகள், நிகழ்வுகள், பரிசோதனைகள் மற்றும் தனி மனித அனுபவங்களைக் கொண்டு Misbehaving: The Making of Behavioral Economics என்ற இந்தப் புத்தகம் விவரிக்கிறது. நூலாசிரியர் ரிச்சர்ட் தேலர் 2017ஆம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு பெற்றவர். நடத்தைப் பொருளாதாரம் குறித்த புரிதலை உருவாக்கியதற்காகவே அவருக்கு இந்த நோபல் வழங்கப்பட்டது. எனவே இவரது பார்வையில் இத்துறையின் பிறப்பு/வளர்ச்சி பற்றிய கதையைக் கேட்பது சுவையான அனுபவமாக இருக்கிறது. வழமையாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்த பொருளாதார மாடல்களில் சில குறைகள் இருப்பதை அவரும் வேறு சில பொருளாதாரத் துறையினரும் கண்டு, தம் கருத்தை கவனப்படுத்தவே பல்வகைப்பட்ட மாற்று மாடல்களை 70களில் முன்வைத்தனர். ஒரு சிறிய துவக்கமாய் இருந்த இத்துறை இப்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இது குறித்து ரொம்பவும் டெக்னிகலாகவோ சிக்கலாகவோ எதுவும் சொல்வதைத் தவிர்த்து புத்தகத்தை அவர் எழுதிஇருப்பதால், மொழியும் உள்ளடக்கமும் படிக்க மிகவும் எளிதாகவே இருக்கின்றன.
பாரம்பரிய பொருளாதாரப் பாடநூல்களில் தனி மனிதர்களை முழுக்க முழுக்க தர்க்கத்துக்குட்பட்ட முடிவுகள் எடுப்பவர்களாக (Rational Decision Makers) கருதுவது வழக்கம். உணர்ச்சிகள், புற அழுத்தங்கள், சமூக மற்றும் சூழலின் தாக்கங்கள் எல்லாம் மனிதர்களை பல்வேறு விதமாக முடிவுகள் எடுக்கத்தூண்டும் என்பது தெரிந்திருந்தாலும், அப்படிப்பட்ட தாக்கங்களை கணக்கில் எடுத்துக்கொள்வது, ஆய்வுகளை சுத்தமான விதத்தில் செய்யவிடாமல் குழப்பியது. இந்தப்பிரச்சினையை சமாளிக்க எப்போதோ எடுக்கப்பட்ட ஒரு தப்பிக்கும் தேர்வு மனிதர்களை அப்படிப்பட்ட தாக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று முத்திரை குத்திவிடுவது! எனவே பாரம்பரிய பொருளாதார கட்டுரைகளுக்குள்ளும், புத்தகங்களுக்குள்ளும் வாழும் மனிதர்களைப் பொறுத்தவரை, இத்தகைய தாக்கல்கள் ஒரு சிறிதும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் முடிவுகளுக்கு காரணமாக இருப்பதில்லை.
ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் இது எவ்வளவு பெரிய தவறு என்பதை எளிதாக உணர்த்துகிறார் தேலர். நீங்கள் ஒரு டோஸ்டர் வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். அதன் விலை 1200 ரூபாய். நாளை ஒரு சிறப்பு தள்ளுபடி துவங்குகிறது, இதே டோஸ்டர் நாளைக்கு அறுநூறு ரூபாய்க்கு கிடைக்கும் என்று அங்கே வேலை செய்பவர் சொல்கிறார். அதைக்கேட்டவுடன் நம்மில் பலர் சரி, நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம், என்று திரும்பி வந்து விடுவோம். நமக்கு அறுநூறு ரூபாய் மிச்சமாகும். ஆனால் அதே கடைக்கு 35000 ரூபாய் கொடுத்து ஒரு டிவி வாங்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நாளைக்கு இதே டிவி, 34400 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கடைக்காரர் சொன்னால் நாம் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் அன்றைக்கே டிவி வாங்கி விடுவோம். ஏனென்றால், மனித மனம் அங்கே ஒரு கணக்கு போடுகிறது. 1200 ரூபாய் சாமான் ஒன்று அறுநூறு ரூபாய்க்கு கிடைக்கும்போது பெரிய தொகை ஒன்று தள்ளுபடியாவதுபோல் தோன்றுகிறது. (பாதிக்குப் பாதி மிச்சம் செய்கிறோம்). ஆனால் 35000 ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும்போது ஒப்பீட்டளவில் அதே அறுநூறு ரூபாய் நமக்கு அவ்வளவு பெரிய தள்ளுபடியாய் தெரிவதில்லை. என்றைக்கு இருந்தாலும் என்ன வாங்கினாலும் அறுநூறு ரூபாயின் மதிப்பு அறுநூறு ரூபாய்தானே? ஆனால் நடைமுறையில் மனித மனம் அப்படி யோசிப்பதில்லை.
பொதுவாக நாம் எல்லோரும் இப்படிதான் நடந்து கொள்வோம் என்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனவே தேலருக்கும் 70களிலேயே இது புரிகிறது. ஆனால் பாடப்புத்தக பொருளாதாரம் எப்போதும் மனிதன் ஒரே மாதிரிதான் நடந்து கொள்வான்- எதை வாங்கினாலும் அறுநூறு ரூபாய் தள்ளுபடியை ஒரே மாதிரி நினைத்து, டிவியோ, டோஸ்டரோ எந்தப்பொருளையும் மறு நாள் வந்து வாங்குவான், அல்லது, இரண்டையும் அன்றைக்கே வாங்குவான் என்று சொல்கிறது. நியாயமாக பார்த்தால் நாம் வாங்கப் போகும் பொருளின் விலைக்கேற்ப அறுநூறு ரூபாயின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் நாம் யாரும் ஸ்டார் ட்ரெக் சீரியலில் வரும் ஸ்பாக் மாதிரி எப்போதும் தர்க்கரீதியாக யோசித்து இயந்திரத்தனமாக நடந்து கொள்வதில்லை. சுற்றுப்புறத்தில் நிகழும்/நிலவும் நிறைய விஷயங்கள் நம் முடிவை தீர்மானிக்கின்றன. தேலர் இதை சுட்டிக்காட்ட முயன்றபோது, மரபார்ந்த பொருளாதார நிபுணர்கள் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்தார்கள். அதற்கு விளக்கமாக இது போன்ற வாதங்களை முன்வைத்தனர்-
- விலைமதிப்புமிக்க வர்த்தகங்களில் மக்கள் இது போல் நடந்து கொள்ள மாட்டார்கள்
- தனி மனிதர்கள் நடத்தை அனைத்தையும் கூட்டிக்கழித்து பார்க்கும்போது எல்லாம் சரியாகி தர்க்கரீதியாக சரியான முடிவாக அமைந்துவிடும்.
- ஒரே ஒரு பொருளை வாங்கும் அனுபவத்தை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வர முடியாது. தனி மனிதர்களில் எல்லா செயல்பாடுகளையும் பார்க்கும்போதுதான் அவர்கள் தர்க்கப்பூர்வமாக நடந்து கொள்வது தெரியும்.
தேலர், டேனியல் கானெமென் போன்றவர்கள் இப்படிப்பட்ட மரபுக்கருத்துகள் தவறு என்பதை ஆய்வுகளைக் கொண்டு மீண்டும் மீண்டும் நிறுவியிருக்கிறார்கள். இவையனைத்தும் காலவரிசைப்படி விவரிக்கப்படுவதால் புத்தகம் 1970-80களின் ஆரம்பகால ஆய்வுகளுடன் துவங்குகிறது. Endowment effect போன்ற விஷயங்கள் முதலில் பேசப்படுகின்றன. அதன்பின், conceptualization of acquisition பற்றி பேசுகிறார். ஒரு பொருளை வாங்கும்போது அதிலிருந்து நாம் அடையும் மதிப்பு Acquisition utility என்று அழைக்கப்படுகிறது. இதற்கு புத்தகம் தரும் ஒரு உதாரணம்: நீங்கள் பதினைந்து ரூபாய் கொடுத்து ஒரு மினரல் வாட்டர் பாட்டில் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உண்மையாகவே உங்களுக்கு தாகமாக இருக்கும்போது, அடடா, எவ்வளவு சுத்தமான குளிர்ந்த தண்ணீர், தாகத்தைப் போக்கிற்று என்று நினைத்துக் கொள்வீர்கள். வழக்கமான பொருளாதார மாடல்கள் இதை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் transaction utility என்பதையும் மனிதர்கள் கவனிக்கிறார்கள். ஒரு விலையுயர்ந்த ஹோட்டலில் இதே தண்ணீர் பாட்டிலை பதினைந்து ரூபாய்க்கு வாங்கும்போது மலிவான விலையில் வாங்கி விட்டோம் என்று சந்தோஷப்படுகிறார்கள். அதே பாட்டிலை சாலையோரக் கடையில் வாங்கும்போது, “தண்ணீருக்கு இவ்வளவு விலையா?” என்று தோன்றும். இப்படி மாற்றி மாற்றி யோசிப்பது தர்க்கரீதியாக பார்க்கும்போது தவறு என்று நாம் சொல்லலாம், ஆனால் உலகம் இப்படிதான் இயங்குகிறது. அடுத்து வரும் அத்தியாயங்களில் இது போல் sunk costs, mental accounting (பணம் பரிமாற்றப் பொருள் என்றாலும் அதற்கு என்று தனி மதிப்பு இருப்பதாக நாம் நடந்து கொள்கிறோம்), marshmallow experiments, quasi hyperbolic discounting போன்ற விஷயங்கள் பேசப்படுகின்றன. சமயம் கிடைக்கும்போது இந்தப் பதங்கள் ஒவ்வொன்றை பற்றியும் கூகிளாண்டவரிடம் கேட்டு விடுங்கள். அவை ஒவ்வொன்றும் சுவாரசியமான விஷயங்கள்.
புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் நிஜ வாழ்வு நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் பல சுவையான வகையில் விவரிக்கப்படுகின்றன. தொழில் நிறுவனங்கள் அல்லது மக்கள் நடத்தையை மேம்படுத்த நடத்தைப் பொருளாதாரச் சிந்தனைகள் பயன்பட்டதைச் சொல்கிறார் தேலர். உதாரணமாக, கடன் அட்டைகள் (Credit Card) அறிமுகப்படுத்தப்பட்டபோது அவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் அந்த வசதிக்காக கூடுதல் கட்டணம் வாங்க வேண்டுமென்று வர்த்தகர்கள் விரும்பினார்கள். ஆனால் இது கடன் அட்டை வழங்கும் நிறுவனங்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. காரணம், கடன் அட்டை பயன்படுத்தக் கூடியவர்கள் தேவையில்லாமல் கூடுதல் கட்டணம் செலுத்துவதாக உணர்வார்கள். எனவே வழக்கமான விலைக்குள் கடன் அட்டை கட்டணத்தை ஒளித்து வைக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். வர்த்தகர்களுக்கு இந்த அணுகுமுறை பிடிக்கவில்லை. இருந்தாலும் கடன் அட்டைகளை உபயோகிக்க வழிசெய்தால் வியாபாரம் நிச்சயம் பெருகும் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால், எல்லோரும் சேர்ந்து ஒரு சமாதான வழியை தேடினர். இறுதியில் கடன் அட்டை வைத்திருப்பவர்களிடம், அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும் என்று சொல்லாமல், அவர்கள் கொடுக்க வேண்டிய மொத்தக்கட்டணத்தை ‘சாதாரண விலை’ என்று போட்டுவிட்டு, ரொக்கமாக பணம் கொடுப்பவர்களுக்கு அந்தத் தொகையில் ‘தள்ளுபடி’ அளிப்பது என்றும் முடிவு செய்தார்கள். வாடிக்கையாளர்கள் தள்ளுபடியை விரும்பினார்கள், கடன் அட்டை கொடுத்து பொருள் வாங்கும்போது ‘உரிய’ தொகையை மகிழ்ச்சியுடன் அளித்தனர். மொத்தத்தில் தர்கரீதியாக பார்த்தால், இது வெறும் வார்த்தைஜாலமே தவிர வேறோன்றுமில்லை! ஆனால் இது அனைவரும் ஏற்கத்தக்க முடிவாக இருந்தது. மரபுப்பொருளாதார நிபுணர்கள் இத்தகைய உத்தி வெற்றி பெறாது, ஏனெனில் வாடிக்கையாளர்கள் இங்கே என்ன நடக்கிறது என்று எளிதில் புரிந்துகொண்டு விடுவார்கள் என்று கருதினார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் பார்வையின்படி, பொதுமக்கள் எல்லோரும்தான் மிகவும் தர்கரீதியாக செயல்படுபவர்கள் ஆயிற்றே! இதைவிட விரிவாக வேறொரு திட்டம் விவரிக்கப்படுகிறது. பனிச்சறுக்கு விடுமுறையகம் (Skiing Resort) ஒன்று நஷ்டத்தில் இருக்கும்போது தேலர் இதே மாதிரியான ஒரு சில பரிந்துரைகளால் அதை வெற்றிகரமாக நடத்தப்படும் ஒரு நிறுவனமாக மாற்றுகிறார். ஆனால், NFL, ஜெனரல் மோட்டார்ஸ், ஊபர் போன்ற நிறுவனங்களுடன் அவரது அனுபவம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. இவரது பரிந்துரைகளை அவர்கள் கேட்டு வாங்கிக் கொண்டார்கள், ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் அவர்களுக்குதான் இழப்பு என்கிறார் தேலர். அதே போல் தனது சிந்தனைகளை நிராகரித்து தோல்வியடைந்த கல்வியியலாளர்கள் சிலரையும் பெயர் குறிப்பிட்டு விமரிசிக்கிறார். இவர் குறிப்பிடும் அந்த பேராசிரியர்கள் சொல்லும் கதை வேறு மாதிரி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தொண்ணூறுகளில் ஆய்வரங்குகளிலும் கூடுகைகளிலும் ஆராய்ச்சி முடிவுகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டபோது இத்துறை மேன்மேலும் கவனம் பெறத் துவங்கியது. தேலருடன் எப்போதும் ஒரு மாணவர் கூட்டம் இணைந்து பணியாற்றுவது அப்போது வழக்கமானது. இதையடுத்து வரும் காலகட்டத்தில் நிதிநிலை மற்றும் பங்குச் சந்தை குறித்து தேலர் விவாதிக்கும் அத்தியாயம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. சிகாகோ பல்கலையில் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பேராசிரியர்களாக இருந்த அவரது சகாக்கள் புதிதாய் குடி புகுந்த கட்டிடத்தில் தமக்கான அலுவலக அறைகளைத் தேர்ந்தெடுத்ததை விவரிக்கும் முழு அத்தியாயம் சிரிக்கச் செய்கிறது. யாருக்கு எந்த அறையை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது என்று பல்கலை பேராசிரியர்கள் மோசமாக சண்டை போட்டுக் கொண்டார்கள், ஒருவரோடுவர் தீவிரமாக போட்டியிட்டுக் கொண்டனர். ஒரு பெரிய திட்டம் தீட்டி யார் எந்த வரிசையில் அறைகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று முறை வைத்து அறைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஆனால் கடைசியில் பார்க்கும்போது, ஒரு நல்ல அலுவலக அறைக்கான தகுதிகளை வெவ்வேறு அறைகளை ஒப்பிடும்போது பலரும் தவற விட்டிருப்பது தெரிந்தது. மாறாய், அவ்வளவு முக்கியமாய் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தியிருந்தனர். உதாரணமாக ஒரு அறை மற்ற அறையைவிட ஒரு பத்து சதுர அடி பெரியதாக இருப்பதை நடைமுறையில் புழங்கும்போது யாரும் கவனிக்கப் போவதில்லை, ஆனால் அறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அதற்காக அடித்துக் கொண்டார்கள். ஆனால் அறையிலிருந்து ஜன்னல் வழியே வெளியே பார்க்கும்போது என்ன தெரிகிறது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது நடைமுறையில் முக்கியம். வரைபடங்களை பார்த்து தேர்வுகளை செய்த பேராசிரியர்கள் அதைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை. எனவே வரிசையில் பின்னால் இருந்து கடைசியில் அறையை தேர்வு செய்ய வேண்டியிருந்த யாரோ ஒரு இளம் பேராசிரியருக்கு நல்ல அறை கிடைத்தது! என்எஃப்எல் விளையாட்டு வீரர்களின் சம்பளம், டிவி கேம் ஷோ குறித்த விரிவான விவாதம் முதலியவை மிகவும் சுவையாக அமைந்து நடத்தைப் பொருளாதாரச் சிந்தனைகள் எங்கெல்லாம் பயன்படக்கூடும் என்பதை அழகாகச் சித்தரிக்க உதவுகின்றன.
பணியாளர்கள் ஓய்வுநல நிதியில் சேமிப்புத் தொகையை அதிகரிக்க இத்தகைய சிந்தனைகள் பயன்படுத்தப்பட்டதை எழுதி புத்தகத்தை முடிக்கிறார் தேலர். ஓய்வுநல நிதிக்காக சேமிக்கும் திட்டத்தில் சேர விருப்பப்பட்டவர்கள் படிவத்தை நிரப்ப வேண்டும் என்பதற்கு பதிலாய் சேர விருப்பமில்லாதவர்கள் படிவத்தை நிரப்ப வேண்டும் என்று மாற்றியது பெரும் பயனளித்து, பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அவர்களை அறியாமல் நிறைய சேமிக்கத் தூண்டியது. இதே உத்திகளை உபயோகித்து இங்கிலாந்து போன்ற நாட்டு அரசுகளுடனும் இணைந்து நிர்வாகத்தை மேம்படுத்த உதவியிருக்கிறார் இவர்.
படித்து முடிக்கையில் இப்புத்தகம் குறித்து எனக்கு இரு வகை குறைகள் தோன்றின. ஒன்று, பல அத்தியாயங்களில் தேலர் தன் சகாக்கள், பட்டக்கல்வி மாணவர்கள், பரிசோதனை செய்வதிலும் ஆய்வறிக்கை அளித்ததிலும் தன்னுடன் பணியாற்றிய பேராசிரியர்கள் போன்றவர்களின் பெயர்களை உதிர்த்துக்கொண்டே செல்கிறார். அவர்கள் எல்லோருக்கும் தம் பெயரைப் புத்தகத்தில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கலாம். ஒரு வேளை புத்தகத்தின் வழியே அவர் தன் நன்றிக்கடனை செலுத்துகிறார் என்பது கூட அதன் காரணமாக இருக்கலாம். (நான் என் நண்பன் அமித்துக்கு முதல் பத்தியில் நன்றி சொன்னதைப் போல என்று நீங்கள் நினைத்தால், கட்டுரையை கவனித்து படித்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு, அமித்துக்கு தமிழ் படிக்க வராது என்பதையும் கூறிக்கொள்வேன். 🙂 ஆனால் ஒரு சில பகுதிகளில் இது போல் பல பெயர்களை அடுத்தடுத்து பார்க்கும்போது, உரைநடையிலிருந்து அவை நம் கவனத்தைக் குலைக்கும் தேவையற்ற தகவல்கள் என்று தோன்றி சலிப்பூட்டுகிறது. இரண்டாவதாக, இதில் வரும் ஆய்வுகள், பரிசோதனைகள், ஆய்வறிக்கைகளைப் பற்றி பல ஆண்டுகளாக பிரபல ஊடகங்களில் நானே படித்திருக்கும் அனுபவம் (ஒரு காப்பிக் கோப்பை வாங்கி ஒரு மணி நேரம் நம் கையில் வைத்திருந்தாலும் கூட, நம்மைப் பொறுத்தவரை அதன் மதிப்பு அதிகரிப்பதை விவரிக்கும் endowment effect போன்றவை) எனக்கு பல பகுதிகளில் நாம் புதிதாக தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை என்று எண்ண வைத்தது. ஆனாலும் நடை எளிமையாகவும் வாசிக்க சுலபமாகவும் இருந்ததால், அவற்றை மீண்டும் வாசிப்பது சுவையாக இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. மொத்தத்தில் படித்துச் சுவைக்க வேண்டிய புத்தகம்தான்.
(தமிழ்நடை உதவி – அ. சதானந்தன்)