மித்ரா பேருந்தின் மூடியிருந்த கண்ணாடி சன்னலை இழுத்துவிட்டுக் கொண்டு அமர்ந்தாள். நெல்லங்காடு நீண்டு சென்ற பாதையின் வளைவில், ஆதவன் மேகங்களை கங்குகளாக்கிக் கொண்டிருந்தான். பேருந்தில் விக்னவிநாயகா…. என்று பாடல் ஒலிக்கத்துவங்கிய நேரத்தில், கள்ளுக்கடை முடக்கில் பேருந்து நின்றது. ஔி படர்ந்த பச்சை வயல்களில் இருந்து கண்களைத்திருப்பிய மித்ரா தன்னையறியாமல் புன்னகைத்தாள்.
ஆனந்தா நீலத்தில் மென்பழுப்பு நிற பூக்கள் நிறைந்த சேலையில் மேனகா! மித்ரா மேனகாவை பார்த்து ஆண்டுகளாகின்றன. ‘தொலைவு என்பது இடமோ நேரமோ மட்டும் தானா?’ என்று மித்ரா நினைத்தாள். மேனகா இடதுகையால் சேலைத்தலைப்பைப் பிடித்திருந்தாள். அதைப் பார்க்கையில் தான் அவள் கர்ப்பிணி என்பது மித்ராவுக்குத் தெரிந்தது. மித்ராவின் முன்னிருக்கையில் அமர்ந்தாள்.
மித்ரா அழைக்க எத்தனித்த நேரத்தில் நடத்துநர் வந்து மேனகாவிடம் பேசத்தொடங்கினார்.
“மச்சான் இப்ப எப்படி இருக்கார்?”
“ம். . அப்படியேதாண்ணா,”
“துறையூருக்கு தனியாவாம்மா…” என்று பேசியபடி சீட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் அவளருகில் செல்ல மித்ரா நினைத்திருக்கையில் கல்லூரிப்பெண்கள் தடதடவென்று அமர்ந்தார்கள்.
மித்ரா தோளில் மெல்லக் கைவைத்ததும் மேனகா திரும்பினாள். திரும்பியவள் கொஞ்சநேரம் மித்ராவைப் பார்த்தபடி இருந்தாள்.
“நல்லாயிருக்கியா மேனகா?”
“ம்”
வேறதுவும் பேசவில்லை. திரும்பிக்கொண்டாள். இவளுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேச எதுவும் இல்லை.
முகத்திலறைந்து பின்சென்றது காற்று. குன்றுகள், வயல்கள், இரண்டு ஆலமரங்களுக்கு அடுத்து மதலேனாள் தேவாலயம் பின் சென்றது.
இந்தமாதிரியே அமலமாதாவின் சிலையின் எதிரே, மைதானத்தில் வேம்பின் அடியில், மேலே நட்சத்திரங்களைப்பார்த்துக் கொண்டு, வரிசையாக விடுதிமாணவிகள் அமர்ந்திருந்தார்கள்.
உணவுக்கான பிராத்தனைக்குப் பின் சிஸ்டர், “பழைய ஹாஸ்டல் பிள்ளைகள் புதுசா வந்தப் பிள்ளைகளுக்கு உதவியா இருக்கனும். எதுவும் சொல்லித்தரனும். இப்ப எல்லாரும் போய் சாப்பிடுங்க,” என்றபடி சென்றார்.
ரசம்சாதத்தையும், பீட்ரூட் பொரியலையும் சாப்பிடமுடியாமல் புதுப்பிள்ளைகள் தடுமாறினார்கள்.
“சாப்பாடக் கீழ கொட்டக்கூடாது,” என்றபடி பனிரெண்டாம் வகுப்பு அக்கா கைகழுவத் தண்ணீர் ஊற்றும் தொட்டியின் பக்கத்தில் காவலாக நின்றிருந்தாள். இன்னொருத்தி பாவாடையை சுருட்டிக் கொண்டு தொட்டியின் மீது குத்துகாலில் அமர்ந்து அளவாக தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
சாப்பாட்டு நேரத்திற்குப்பிறகு ஹாஸ்டலுக்கு வெளியே சிமெண்ட் ஓட்டத்தில் புளிச்சக் கீரைக்கட்டுகள் கொண்டுவந்து போடப்பட்டன.
சிவப்பு பாவாடை சட்டை போட்டவள், “எல்லாரும் நாலுகழி எடுத்து பறிச்சுப் போட்டுட்டு ரெக்ரியேசனுக்குப் போகலாம்,” என்றாள்.
சுற்றிலும் சிரிப்புச் சத்தம், கிண்டல் கேலிகள். பதினொன்றாம் வகுப்புப்பிள்ளைகள் மட்டும் பட்டியில் புதுஆடுகள் மாதிரி மிரண்டு நின்றார்கள்.
“இது வேறயா? எங்க வீட்ல இதெல்லாம் தொட்டது கூட இல்லை,” என்றபடி மேனகா கழிகளை மைதானத்து சிமெண்ட் மேடையில் போட்டாள்.
சத்யா, “நல்லா திங்கத் தெரியுமா?” என்றாள். மேனகா, “போடி…” என்றபடி சத்யாவை அடிக்க, இவளை அவள் அடிக்க, மேனகா வீசிய கழி பக்கத்திலிருந்த மித்ரா மீது விழுந்தில் அவள் கண்ணாடி தூரமாகப் போய் விழுந்தது.
“ஐயோ சாரிடா. . தெரியாம விழுந்துருச்சி. சாரிடா…” என்றபடி ஓடிச் சென்று கண்ணாடியை எடுத்துத் துடைத்துக் கொடுத்தாள்.
மித்ரா புன்னகைத்தபடி, “பரவயில்லீங்க…. தெரியாம தானே,” என்று புன்னகைத்தாள்.
மேனகா, “என்னது பரவால்லீங்களாவா?” என்று சுபாஷினியை பார்த்துக் கண்ணடித்து சிரித்தாள்.
சுபாஷினி, “மித்ரா…இவங்களும் மேத்ஸ்குரூப் ப்ளஸ் ஒன் பிள்ளைங்கதான். வா, போன்னு பேசு,” என்றாள்.
“நீ என்ன குரூப் மித்ரா?”
“ப்யூர் சயின்ஸ்.”
புளிச்சக் கீரையை ஆய்ந்துவிட்டு பிள்ளைகள் விளையாடத் தொடங்கியிருந்தார்கள்.
அடுத்தநாள் பள்ளி முடிந்து தொட்டியில் தண்ணீர் எடுத்து, முன்மதிலின் பின்னால் தோட்டத்தில் முகம் கழுவுகையில் மேனகா, “முகத்துக்கு என்ன போடற,” என்றாள்.
“மஞ்சள்.”
“அதுமட்டுந்தானா!”
“ம்!”
“இங்கெல்லாம் மஞ்சள் உரசாத. அழுக்கு இருக்கும். குளிக்கற இடத்தில இருக்கற கல்ல நல்லா கழுவிட்டு உரசணும்.”
திரும்பி வரும்போது, “ஏன் பவுடர் போடறதில்ல…” என்ற அவளுடன் பேசிக்கொண்டு வந்தாள்.
அம்மா வீட்டில் எடுத்துவிட்ட வாக்கிலேயே இரண்டுநாட்களாக ஜடை பின்னிக்காண்டிருந்த மித்ராவிடம், “வாக்கு எடுத்து ரெட்டஜடை போடத் தெரியாதா?” என்றபடி வந்து தலைசீவி விட்டாள்.
விடுதியின் முன்மதிலின் பின்னால் இருந்த மைதானத்தில் இரண்டு புளியமரங்களுக்கு இடையிலிருந்த இடத்தில்தான் அவர்கள் ஜடைபின்னி, பொட்டுவைத்து தயாராக வேண்டும்.
சுபாஷினி, “என்ன…ரொம்ப அக்கறையா இருக்கே,” என்றாள்.
மேனகா, “வீட்ல இருந்தா வர்றாளாம்…பாவம் வாக்குஎடுத்து சீவத்தெரியல,” என்றாள்.
மித்ரா, “இங்க தலைசீவறது நல்லாருக்கு. எங்க வீட்ல நடுமுற்றத்தில இப்படி நின்னுதான் அம்மா ஜடபின்னிவிடுவாங்க,” என்றாள்.
“ம்க்கூம்…வெயில்ல பவுடர் உடனே கலஞ்சிடுது,” என்று சத்யா சலித்துக்கொண்டாள்.
தினமும் குளிக்க, சாப்பிட, விளையாட என்று இருவரும் சேர்ந்தே திரிந்தார்கள். மேனகாவின் சிரிப்பு மித்ராவிடம் ஒட்டிக்கொண்டது.
அந்த ஞாற்றுக்கிழமையில் காவிரிக்கு குளிக்கச் சென்றார்கள். காவிரி நிதானமாக நடந்தது. முதலில் காவிரியைப் பார்த்தவர்கள் கொஞ்சநேரம் கரையிலேயே நின்றார்கள். மணல்திட்டுகளில் காக்கை, நாரைகள் எழுந்து பறந்து அமர்ந்தன. ஒரு பெரிய சேலை காற்றில் வந்து நீண்டுவளைந்து விழுந்தது போல காவிரியின் பாதி அகலத்திற்கு தண்ணீர் இருந்தது.
கரையோரமாக துணிகளைத் துவைத்துவிட்டு மித்ரா குளித்துக்கொண்டிருந்தாள். நடுஆறு வரை நீந்திப்போவதும் வருவதுமாக மேனகா, சத்யா, சுபாஷினி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
“வா…மித்ரா. . ”
“நீச்சம் தெரியாது…” என்றதும், “குளிச்சாச்சு தானே… இந்த இடிஞ்சப் படியிலயே ஒக்காந்திரு,” என்றபடி நீந்தத் தொடங்கினார்கள். கிளைசாய்ந்து வளர்ந்திருந்த பூங்கையின் சிறிய வெண்பூக்கள் நடுவில் அரக்குநிற மகரந்தத்தோடு படிகளில் உதிர்ந்து ஆற்றில் நழுவிக்கொண்டிருந்தன.
மேனகா கையை நீட்டி, “மித்ரா என்னோட கையப்பிடிச்சுக்க. அப்படியே பயப்படாம வா,” என்றாள்.
“வேணாம் …” என்று படியிலேயே உடலைக்குறுக்கி மித்ரா அமர்ந்திருந்தாள்.
பெட்டிக்கோட்டை இழுத்துவிட்டபடி ஏறிவந்த மேனகா, “வான்னா…” என்று இழுத்தாள்.
அவள் கையைப் பிடித்தபடி மெதுவாகக் கழுத்தளவு தண்ணீருக்கு வந்தாள்.
“ஹய்யா…நல்லாருக்கு மேனகா,” என்று சிரித்தாள். ஒரு கையால் தண்ணீரை அடித்தாள். மேனகா கையை விட்டு, “ரெண்டு கையாலயும் தண்ணிய தள்ளு. நான் பக்கத்திலேயே இருக்கேன்,” என்றாள்.
சத்யா தினமும், “பத்துவருஷமா இருந்த எங்களவிட மித்ரா என்னடி உனக்குப் பெரிய ப்ரண்டு,” என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள்.
அடுத்த வாரம் ஞாயிறு விடுதியிலேயே குளிக்கச் சொல்லிவிட்டார்கள். நிதானமாகக் குளிக்கலாம். பெரிய தொட்டியைச் சுற்றியிருந்த துவைக்கும் கல்களுக்கு இடையிலிருந்த இடைவெளியில், வாளிகளில் தண்ணீரை மொண்டு குளித்துக் கொண்டிருந்தார்கள்.
மேனகா மித்ராவின் மீது தண்ணீரை ஊற்றிவிட்டு ஓடினாள். இவள் பின்னால் துரத்திக்கொண்டே ஓடினாள். அடுத்தவள்…அடுத்தவள் என்று விளையாட்டு வேகமெடுத்த நேரத்தில் சிஸ்டர் வந்து, “பொம்பளப் பிள்ளைகளா நீங்கள்…குளிக்கற எடத்தில இந்த ஆட்டமா …” என்று கத்தினார்.
முன்பக்கம் விளையாடியவர்கள் அமைதியாக, பின்னால் இவர்கள் எதையும் உணராமல் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
“அந்த ரெண்டு குமரியும் இங்க வா.”
“அப்படியே போய் க்ரௌண்டில் முட்டிப் போடு.” என்றார்.
இருவரும் பெட்டிக்கோட்டோடு முட்டிப்போட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
“இப்பவும் சிரிப்பா…நல்லா ஆடுங்க …” என்றபடி சுபாஷினி சென்றாள். அன்று அனைவரின் வீட்டிலிருந்தும் அம்மா, அப்பா பார்க்கவரும் நாள்.
இரவு வேப்பம் இலைகளின் இடையில் நிலா தெரிய, விடுதியின் முன்பிருந்த ஒற்றை விளக்கு எரிய, வீட்டிலிருந்து வந்த உணவை எடுத்து வைத்தபடி சிறுசிறு வட்டங்களாக அமர்ந்திருந்தார்கள்.
புரியாத ஒரு இழப்புணர்வு. மனதால் காண இயலாத ஒன்றின் ஏக்கம். அவர்களின் மனம் அம்மா, அப்பாவுடன் வீட்டுக்கு சென்று அமர்ந்திருந்தது. மற்ற வகுப்புப் பிள்ளைகள் சிரித்துப் பேசி உணவுஉண்ட பின் படுக்கவோ, விளையாடவோ கலைந்த நேரம் இவர்கள் உணவை அப்படியே வைத்திருந்தார்கள்.
சிஸ்டர், “எல்லாரும் டின்னர் சாப்பிட்டிருக்கனும். முடிச்சப்பிறகு விளையாடுங்க. படிக்கத்தானே…ம்…உங்க ஊரில் உங்கக்கூட படிச்ச பிள்ளைகளில் எத்தனபேரு இப்படி நிம்மதியா படிக்கறாங்கன்னு யோசிங்க,” என்றபடி கொஞ்சநேரம் அவர்கள் அருகில் சுற்றிவந்துவிட்டு சென்றார்.
“மித்ரா கண்ண மூடு,” என்றபடி மேனகா அவள் வாயில் உணவை வைத்தாள். இருமுறை வாயை அசைத்த பின் மித்ரா வாயில் கைவைத்தபடி ஓடிச்சென்று துப்பிவிட்டு வாயை கொப்பளித்துக் கொண்டேயிருந்தாள்.
அவள் வந்து அமர்ந்ததும் சத்யா, “கறி சாப்பிடமாட்டியா?” என்று கேட்டாள்.
கண்ணில் நீரோடு, “ம். சின்னவயசில சாப்பிட்டது,” என்றாள். மேனகாவின் முகம் கூம்பியிருக்க குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
அடுத்தநாள் காலையில் புதிய சேர்க்கையாக வந்திருந்த பெண்ணிடமும், அவளின் அப்பாவுடனும் மேனகா பேசிக் கொண்டிருந்தாள். ராஜேஸ்வரி நல்ல சிரிப்போடும், நீண்ட ஜடையோடும் இருந்தாள்.
“மித்ரா…இவ ராஜீ. ஹாஸ்டல்ல பெட்டிய வச்சிட்டு வர்றோம்,” என்றாள்.
சாயுங்காலம் மைதானத்தில் அமர்ந்திருக்கும் நேரம் மேனகா ராஜீயுடன் வந்தாள்.
“இவளும் நானும் ஒன்னாவது படிக்கறப்ப இருந்து ஒன்னா படிக்கறோம். எனக்கு சொந்தக்காரங்க …” என்றாள்.
மித்ரா கண்களை விரித்து, “சத்யா, சுபா மாதிரியா? நீ ஏன் லேட்டா வந்த …” என்று கேட்டாள்.
ராஜீ, “அப்பா மேத்ஸ் குரூப்க்காக வேற ஸ்கூல் தேடினார். நான் பிடிவாதமா இவப் படிக்கற ஸ்கூல் வேணுன்னு அடம் பண்ணி சேந்தேன்,” என்றாள்.
மித்ரா, “நம்மக்கூட இன்னொரு ப்ரண்ட்,” என்று சிரித்தாள்.
சத்யாவும், சுபாஷினியும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
ராஜீ, “அவ பிருந்தா…நம்ம தாத்தா ஊரு,” என்ற அவளை நோக்கி கையசைத்தாள். நல்ல உயரமாக உயரத்துக்கேத்த உடலுடன், குட்டிக்கண்களுடன், குண்டுக்கன்னங்கள் மின்ன சிரித்தபடி வந்தமர்ந்தாள். குரலும் கூட வித்தியாசமானது என்று மித்ரா நினைத்தாள்.
அடுத்துவந்த நாட்களில் மித்ரா ஓடிச்சென்று மேனகாவிடம் ஜடை பின்னிவிடக் கேட்டாள். சாயங்காலம் அவர்களைத்தேடிச் சென்று அமர்ந்தாள்.
ஒருநாள் மித்ரா புளியமரத்தின் வேரில் அமர்ந்து காத்திருக்கையில் சத்யா நான் பின்னி விடறேன் என்று அழைத்தாள். சாயுங்காலம் மைதானத்து மேடையில் சுபாஷினி முறுக்கை கடித்தபடி மித்ராவிடம், “நீ ஏன் அவங்களத் தேடித்தேடி போற..” என்று கேட்டாள்.
“நம்ம ப்ரண்ட்ஸ் தானே,” என்றபடி கால்களை எட்டி தரையில் கிடந்த இலைகளை எத்தினாள்.
“அந்தப்பிள்ளங்க உன்ன கண்டுக்கல மக்கு.” என்றபடி தரைக்கு எட்டாத கால்களை அந்தரத்தில் ஆட்டிக்கொண்டிருந்தாள்.
மித்ரா அமைதியாகத் தலையாட்டினாள்.
இவளாகவே ஜடைபின்னிச் சாப்பிடக் கிளம்பிய அன்று, சாப்பாட்டு அறையில் அருகில் வந்த மேனகா கடலை உருண்டையை மித்ராவிடம் கொடுத்தாள். சிரித்தபடி வாங்கிய மித்ரா, “எங்க ராஜீ, பிருந்தா,” என்று கேட்டாள்.
“அதுங்க குளிச்சிட்டு வரல. அந்தப் பிள்ளங்க இருக்கும் போது ரொம்ப பேச வேணாம்.”
“ஏன்? நம்ம ப்ரண்ட்ஸ் தானே.”
“இல்ல…அவங்க ரெண்டு பேரும்தான் எனக்கு பெஸ்ட் ப்ரண்டா இருக்கனுன்னு அவங்க சொல்றாங்க,”
“ஏன்? நானில்லயா!”
“நீதான் என்னோட க்ளோஸ் ப்ரண்ட். ஆனா அவங்க முன்னாடி காட்டிக்காத.”
“ஏன் நாம ஆறு பேரும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ் இல்லயா? அந்தப் பிள்ளங்க எப்பவும் போலத்தானே உங்கூடபேசறாங்க?”
“ஐயோ அவளுங்க வர்றாளுக…நீ இதச் சாப்பிடு. சாயங்காலம் பேசலாம்,”
“நில்லு… அதுமாதிரி பேசனுன்னா இனிமே பேசவே வேணாம்,” என்றபடி கடலை உருண்டையைத் தூக்கிவிசினாள். வீடுவிட்டு வந்தநாளில் அய்யா, “மத்தவங்களத் தொந்தரவு பண்ணக்கூடாது,” என்று சொல்லியது மித்ரா நினைவுக்கு வந்தது.
மேனகா தங்கை வயதுக்கு வந்த விழாவிற்கு சென்றுவந்த அன்று அவளும், ராஜீயும், பிருந்தாவும் அனைவருக்கும் தின்னக் கொடுத்தார்கள்.
தேர்வுக்காக வரிசையாக அமர்ந்து குனிந்து படித்துக்கொண்டிருந்தவர்கள், தங்களுக்கு வீட்டில் செய்த பலகாரங்களைப் பற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
மித்ரா கையில் இனிப்புஉளுத்தம்வடையை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஏனோ அதிகாலைகளில் குடிக்கவைக்கப்பட்ட விளக்கெண்ணெய், நாட்டுக்கோழி முட்டைகளின் நினைவுவந்தது.
“பரீட்சை பயமிருக்கா…படிங்க. . படிங்க,” என்று சிஸ்டரின் குரல் கேட்டது.
சுபாஷினி, “மித்ரா…ஏய்…அதத் தின்னுட்டு படிக்கற வேலயப்பாரு,”என்றாள்.
சத்யா, “நாங்கல்லாம் மனுச இல்ல…லூசு. அவளப்பாரு என்ன கொண்டாட்டத்துல இருக்கான்னு. அவ லிஸ்ட்ல நீ இல்ல,” என்றபோது ரேடியோவிலிருந்து ‘மொட்டு ஒன்று மலர்ந்திட’ என்று பாடல் ஒலிக்கத்தொடங்கியது. புத்தகங்களை மூடி எடுத்துக்கொண்டு அந்தப்பாடலைப் பாடியபடி பிள்ளைகள் கலைந்தார்கள்.
முகம் கழுவுகையில் மித்ராவின் கண்களில் மதிலில் புதிதாக விரிசல் தெரிந்தது. அவள் மதிலைச் சுற்றிவந்தாள். அந்தமதிலின் உட்புறம் சாய்ந்து படிப்பது, எழுதுவது அவள் வழக்கம். வெளிப்புறம் சாய்ந்து மைதானத்தை வேடிக்கைப்பார்ப்பாள்.
“இந்தவயசில சுவத்தில சாஞ்சுட்டே இருக்காத மித்ரா. . குறுக்கு வலுக்காது. செட்டுக்கு ஒன்னு, ரெண்டு இந்தமாதிரி …” என்று பார்க்கும் நேரத்திலெல்லாம் சிஸ்டர் சத்தம்போடுவார்.
பேருந்து பாலக்கரையில் குலுங்கி நின்றது. கீழிறங்கிய மேனகா மித்ராவைப் பார்த்து புன்னகைத்தாள். “எங்கடா போற?” என்று கேட்டாள்.
“புத்தகம் வாங்கனும்.”
“டெட் எழுதவா? நானும் வாங்கனும்.”
மித்ரா, “இல்ல…இது வேற புத்தகங்கள்,” என்றதும் மேனகா, “உன்னய புரிஞ்சுக்கவே முடியாது. உனக்கு நான் லெட்டர் போட்டதுக்குக்கூட ‘பரவாயில்ல’ ன்னு ஒருவார்த்தையில பதில் போட்டிருந்த,” என்றாள்.
மித்ரா சிரித்தபடி, “எழுத வேற ஒன்னும் இல்ல. …ஹாஸ்பிடலுக்கா?” என்று கேட்டாள்.
“ஆமாண்டா…செக்கப்,” என்றபடி நடந்தார்கள். பாலத்தைக் கடக்கும்போது மேனகா மூக்கை மூடிக்கொண்டு நடந்தாள். என்றாலும் செருமிக் கொண்டிருந்ததில் கண்களில் நீர் நிறைந்திருந்தது.
காவல்நிலைய நிறுத்தத்தில் சீமைக்கொன்றையின் அடியில் நின்றபடி மூச்சு வாங்கிய மேனகாவிடம் மித்ரா தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தாள். சந்து கிடைக்குமா என்றுத் தேடி அலைபாய்ந்த ஆட்டோவின் பின்னால் இலைவண்டியின் காளை சிறுநீர் கழித்தது.
“ஏய்யா…கழுத்தறுக்கறீங்க …” என்று மாட்டுவண்டியைப் பார்த்துக் கத்தியவரிடம் வண்டிக்காரர், “எல்லாருக்கும்தான் ரோடு,” என்றார். உயரமான வெள்ளைக்காளை மையெழுதிய கண்களை மூடித்திறந்து பின் தலையை நுகத்திலிருந்து விடுவிப்பது போல குனிந்து நிமிர்ந்தது.
தற்காலிகக் காவலர்கூண்டின் தகரத்தில் மித்ரா முதுகை சாய்த்தபடி, “ஆட்டோவில போலாமா மேனகா,” என்றாள்.
“வேணாண்டா. நீ எங்க போகணும்?” என்றபடி கையிலிருந்த அலைபேசியை பார்த்துவிட்டுக் கைப்பையில் வைத்தாள்.
“அதோ…பாக்கியலக்ஷ்மி மகால். உங்கூட வர்றேன். அங்க எப்ப வேணாலும் போகலாம்.”
மேனகா மித்ராவின் கையைப் பிடித்தபடி அவளின் முகத்தைப் பார்த்தாள். “கல்யாணம் எப்ப? பத்திரிகை அனுப்புவியா?” என்றாள்.
மித்ரா, “அதப்பத்தி யோசிக்கறதில்ல…” என்று சிரித்தாள்.
“அதுக்கென்ன? அப்படியெல்லாம் யோசிச்சு வச்சா கல்யாணம் பண்ணுவாங்க, லூசு. ரொம்ப யோசிச்சுப் பண்றதா இருந்தா ஒரு கல்யாணம் கூட நடக்காது,” என்று மேனகா சிரித்தாள்.
மித்ரா சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். காவலர் வரவும் மித்ரா நகர்ந்தாள். “இந்தவயசிலயே சாய்மானம். . என்ன பிள்ளங்களோ …” என்றபடி காவலர் திரும்பி நின்றார்.
சிரித்தபடி மேனகா, “மனுசங்கள அசஸ் பண்றத விட்டுட்டு யூஸ் பண்ணிக்கப்பாரு. சும்மா காரணமில்லாத சென்ட்டிமெண்டல் இடியட்டா இருக்காத. கனவு இல்ல லைஃப். எதுவும் வந்து குதிக்காது,” என்ற போது குரல் மாறியிருந்தது.
மேனகா தெற்கிலிருந்து வரும் வாகனங்களைப் பார்க்கத் தொடங்கினாள். அந்த முச்சந்திப்பில் இயந்திரங்களும், மனிதர்களும் முக்கோணத்தின் பக்கங்களை மாற்றிமாற்றி அழித்து வரைந்து கொண்டிருந்தார்கள்.
“நான் அசஸ் பண்ணல…”
மீண்டும், “நான் தொடங்கி வச்சக் கேள்விதானே?” என்ற மேனகாவைப் பார்த்து மித்ரா புன்னகைத்தாள்.
மினிவண்டியிலிருந்து ஆட்கள் இறங்கவும் நகர்ந்து நின்றார்கள். அதிலிருந்து ராஜீ இறங்கவும் மித்ரா கண்களை விரித்துப் புன்னகைத்தாள்.
அவள் புன்னகைத்தபடி மித்ராவிடம், “அழகாயிட்டியே…நீ எங்க இங்க?” என்றாள்.
மித்ரா, “உன்னவிடவா? எங்க ரெண்டுபேர் ஊருக்கும் தனித்தனி பஸ் உண்டா என்ன?” என்று புருவங்களை உயர்த்தி இறக்கினாள்.
ராஜீ, “ம். நட மேனகா …நேரமாச்சு. கும்பலாயிடும்,” என்றாள்.
அலைபேசியின் அழைப்பிற்காக ராஜீ திரும்பினாள். மேனகா தன் அலைபேசி எண்ணைத் தருவதாகச் சொன்னாள். மித்ரா வேண்டாமெனத் தலையை ஆட்டி செயற்கையாகப் புன்னகைத்தாள்.
அவர்களிருவரும் சாலையைக் கடந்து கொண்டிருந்தார்கள். மித்ரா நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தாள். காவலர் வண்டி வந்து நின்ற புகை கண்களில் கரித்தது. நடக்கத்தொடங்கினாள்.
அவளை முன்னே விடாமலும், வேகமாக நடக்காமலும் வயோதிகர் மறித்து நடந்து கொண்டிருந்தார். அவரை கடந்த நேரத்தில், “ஏங்கண்ணு வெங்கட்ராமு ஆசுபத்திரி எது?” என்றார்.
“போறவழியிலதான் வாங்க தாத்தா,” என்றபடி அவருக்கு வலதுபுறம் நடந்தாள்.
கடைகளின் இடையே நின்ற பழையகாலத்திய, திண்ணைவைத்து செம்மண் எழுதிய வீட்டின் வாசற்படியில் அமர்ந்திருந்த பாட்டி, “ஜோதியை ஏற்று பொன்மணியிசைக் கேட்டு…எந்தன் உயிரே ராமா. . எந்தன் உறவே…” என்று சிக்கிய குரலில் பாடிவிட்டு வெற்றிலை சிவப்புப் ப்டிந்த இதழ்களைத் துடைத்துக் கொண்டபடி மீண்டும் பாடத்தொடங்கினாள்.
அடுத்திருந்த பெரிய வீட்டைக் காட்டி, “தாத்தா. . இதான்,” என்றாள்.
வயோதிகர், “இப்பத்தெரியுதும்மா…எத்தன மட்டம் வந்தாலும் வழித்தடம் புரியமாட்டிக்குது,” என்றார். மித்ரா தலையாட்டியபடி நடந்தாள்.
***