பருவநிலை மாற்றத்துக்கு இந்தியா அளிக்கக்கூடிய விலை

செப்டம்பர் 27 ‘தி ஹிந்து’ பத்திரிகையில் வந்த இந்தச் செய்தி பரவலாக கவனிக்கப்படவில்லை.
இது ஹிந்துவின் கட்டுரையல்ல, பிடிஐ பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த குறிப்பு. இதே குறிப்பு வார்த்தை மாறாமல் அவுட்லுக் போன்ற பத்திரிகைகள் சிலவற்றிலும் வந்திருக்கிறது. வளிமண்டத்தில் அதிக அளவில் பரவி வரும் கார்பன் டை ஆக்சைடு காரணமாய் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 210 பில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்திக்கிறது என்கிறது இக்குறிப்பு (இன்றைய டாலர் மதிப்பில், ரூ.1,52,28,15,00,00,000). ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு பெரிய தொகையை இந்தியா இழக்க வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் அமெரிக்க பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர் காத்தரீன் ரிக் இதைச் சொல்கிறார்.
செப்டம்பர் மாத இறுதியில் நேச்சர் என்ற மதிப்புமிக்க ஆய்விதழில் இவர் மற்றும் சகாக்களின் ஆய்வறிக்கை பதிப்பிக்கப்பட்டுள்ளது). இது போக, புவி வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்பது இவரது கணிப்பு.

கார்பனின் சமூக விலை (Social Cost of Carbon, SCC) என்ற கருத்தாக்கம் 1981ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. கூடுதலாக ஒரு டன் கார்பன் டை ஆக்சைட் வளிமண்டலத்தில் கூடுவதால் எழக்கூடிய விளைவுகளின் சமூக விலை என்னவென்பதன் கணிப்பு இது. தட்பவெப்ப மாற்றத்தின் தாக்கங்களைக் கணக்கிட உதவும் கருவிகளில் இதுவும் ஒன்று. இந்தக் கணிப்பு, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு பணமதிப்பு அளிக்க உதவுகிறது. இதன்படி புவியளவில் கூடுதலாக அதிகரிக்கும் ஒவ்வொரு டன்னுக்கும் 2050ஆம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 31 டாலர் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது கணக்கு, பணவீக்கத்தைப் பொருட்படுத்தினால் மூன்று சதவிகிதம். இதற்கு இணையாக கார்பன் வரி என்று ஒன்று வசூலிப்பது கார்பன் டை ஆக்சைட் உமிழ்பவர்களுக்கு தடையாக இருக்கும், தொழிற்துறை மாற்று வழி தேடத் தூண்டுவதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. ஆனால் இதில் உள்ள சிக்கல், பருவநிலை மாற்றத்தை துல்லியமாய் கணிப்பது சுலபமல்ல, அவை பொருளாதாரத்தின் மீதும் பிறவற்றின் மீதும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்துக்கு ஒரு எண் அளிப்பதும் சுலபமல்ல. எனவே கார்பனின் சமூக விலை குறித்து ஒருமித்த கருத்து இதுவரை உருவாகவில்லை- உமிழப்படும் ஒரு டன் கார்பனுக்கு ஒரு டாலர் முதல் ஆயிரத்து ஐநூறு டாலர்கள் வரை விலை சொல்கிறார்கள். இது அபத்தமாக இருக்கிறது, இப்படிப்பட்ட கணக்கு முறையின் நம்பகத்தன்மைக்கே கேடு செய்கிறது, ஆம். ஆனால் பொதுவாக ஆண்டொன்றுக்கு 2-4 சதவிகிதம் அதிகரிக்கும் என்று சொல்வது ஓரளவு சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.
இந்த விக்கிப்பீடியா தகவல்கள் எதற்கென்றால் ரிக் அளிக்கும் புள்ளி விவரங்கள் அவ்வளவு துல்லியமானவையல்ல என்பது உண்மையாக இருக்கக்கூடும் என்றாலும் அவர் சுட்டும் செல்திசை சரியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் புவி மொத்தத்திலும் ஏற்படக்கூடிய தாக்கத்தையே கணித்தன, ஆனால் ரிக் மற்றும் சகாக்களின் ஆய்வு கிட்டத்தட்ட இருநூறு தேசங்களில் ஒவ்வொரு தேசமும் எவ்வளவு கார்பன் உமிழ்கிறது, உலகளாவிய கார்பன் மாசுக்கு தனிப்பட்ட அளவில் என்ன விலை தருகிறது என்பது குறித்து ஒரு கணக்கு சொல்கிறது. உலகளாவிய சராசரி டன்னுக்கு 31 டாலர் என்றால், இந்தியா 86 டாலர் விலை கொடுக்க வேண்டியிருக்கும் (அமெரிக்கா கொடுக்கக்கூடிய விலை 50 டாலர்கள்). ஏன் இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு என்றால், விவசாய மகசூல், கிருமிகளால் பரவும் நோய்கள், வெப்பம் காரணமாய் ஏற்படக்கூடிய உற்பத்தி இழப்பு, பெருமழைகளால் நிகழும் பேரழிவு, என்று பல கூறுகள் தேசத்துக்கு தேசம் மாறுபடுகின்றன, என்கிறார் ரிக். இவை கூடும்போது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன, அவற்றால் ஒவ்வொரு தேசமும் வெவ்வேறளவு இழப்பை எதிர்கொள்கிறது. “கார்பன் டை ஆக்சைட் உமிழப்படும்போது அது உலகெங்கும் உள்ள மக்கள் மற்றும் உயிரிமண்டலங்களை பாதிக்கிறது,” என்கிறார் இவர், ஆனால் சந்தை விலையில் இது எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதால் இவற்றைப் பயன்படுத்துபவர்கள் அதன் உண்மை விலையை அறிவதில்லை, செலுத்துவதுமில்லை என்கிறார்.
கார்பனால் பயன் ஒருவருக்கு, பாதிப்பு வேறொருவருக்கு என்ற ஒரு சமநிலையின்மையை இவர்களது ஆய்வு வெவ்வேறு தேசங்களில் ஏற்படும் தாக்கத்தைக் கொண்டு புலப்படுத்தியிருக்கிறது. இதன் நிகர லாப நட்டத் தொகையில் ஏற்படக்கூடிய ஐயம் நியாயமானதே, ஆனால் இவர் சுட்டும் திசை சரியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நேச்சர் தளத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள “Country-level social cost of carbon” என்ற ஆய்வறிக்கை எழுதியவர்களில் காத்தரீன் ரிக், கென் கால்டிரா இருவரும் அமெரிக்கர்கள், லாரன் ட்ரோட் மற்றும் மஸ்ஸிமோ தவோனி இருவரும் இத்தாலியர்கள். அதன் நுண்விபரங்கள் ஆய்வாளர்களுக்கானது, அதில் இந்த ஒரு வரைபடம் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியது:
இங்கு கிடைமட்டக் கோடு, 2013ஆம் ஆண்டு கணக்கின்படி, உலகளாவிய கார்பன் உமிழ்வில் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள பங்கைக் குறிக்கிறது; செங்குத்துக் கோடு, இதன் விளைவாய் எழும் கார்பன் சமூகவிலை எந்த நாட்டுக்கு எவ்வளவு என்பதைக் குறிக்கிறது; சாய்வுக்கோடுகள் உமிழ்வுக்கும் பாதிப்புக்கும் உள்ள விகிதத் தொடர்பை குறிக்கிறது. இதன்படி, பிரேசில் கிட்டத்தட்ட ஒன்றரை சதவிகிதம் உமிழ்கிறது, ஆறு சதவிகித விலை கொடுக்கிறது. இதே சாய்வுக் கோட்டில் மேலே போனால் சவுதி அரேபியா மூன்று சதவிகிதம் உமிழ்ந்து பன்னிரண்டு சதவிகித விலை கொடுக்கிறது. உச்சத்தில் இந்தியா ஐந்தரை சதவிகிதம் உமிழ்ந்து இருபத்து இரண்டு சதவிகித விலை கொடுக்கிறது – இவையெல்லாம் உலகளாவிய உமிழ்வு மற்றும் சமூகவிலையின் சதவிகிதங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, உலகளாவிய உமிழ்வில் இருபதில் ஒரு பங்கு இந்தியாவின் அளிப்பு; ஆனால் உலகளாவிய சமூக தாக்கத்தில் ஐந்து முதல் நான்கில் ஒரு பங்கு இந்தியாவின்மீது விழப் போகிறது.

இந்தியாவைவிட அதிக அளவு கார்பன் உமிழும் தேசங்கள் யுனைட்டட் ஸ்டேட்ஸ் மற்றும் சீனா. அமெரிக்காவைப் பொறுத்தவரை உமிழ்வும் பாதிப்பும் கிட்டத்தட்ட சரியாக இருக்கின்றன, ஆனால் சீனாவோ உலகளாவிய உமிழ்வில் முப்பத்திரண்டு சதவிகிதத்துக்கு காரணமாக இருந்து, ஏழு சதவிகிதம்தான் பாதிப்படைகிறது. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா அடையக்கூடிய பாதுகாப்பு கார்பன் உமிழும் சீனாவுக்கும் இல்லை, பெட்ரோல் தேசங்களான யுனைட்டட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, சவூதி அரேபியா ஆகியவற்றுக்கும் இல்லை! (சொல்லப்போனால் அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு ரஷ்யா கொடுக்கும் கார்பன் சமூகவிலையை குறைக்கவே செய்கிறது, பாதிக்குப் பாதி குறைகிறது என்றே சொல்லலாம்- இந்த வினோதமான விளைவு ஏன் என்று தெரியவில்லை).
இந்த ஆய்வு குறித்த விவாத பகுதியில் (‘Discussion’) கட்டுரையாளர்கள் அளிக்கும் பரிந்துரைகள் சிக்கலானவை- ஒவ்வொரு தேசமும் தன் கார்பன் உமிழ்வுகளின் மீது தன் கார்பன் சமூகவிலையைச் சுமத்தினால் (கார்பன் வரி என்று சொல்லலாம்), பயன் ஓரிடம் பாதிப்பு ஓரிடம் என்ற நிலையில் 5% மாற்றம்தான் ஏற்படும் என்கிறார்கள் (இந்தியாவின் கார்பன் சமூகவிலை 22% என்பதற்காக அது 22% கார்பன் வரி போட்டு பயனில்லை, அதன் உமிழ்வு கிட்டத்தட்ட 5% மட்டுமே. ஆனால் அதே சமயம் 30%க்கு மேல் கார்பன் உமிழும் சீனா 7% மட்டுமே கார்பன் சமூகவிலையும் கார்பன் வரியும் போட வேண்டியிருக்கும், இதனால் பயனில்லை).
புவி வெப்பம் 1.5-2 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்ற பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றச் சிறந்த வழி, உலகளாவிய கார்பன் சமூகவிலைக்கேற்ற அளவில் எல்லா தேசங்களும் தன் கார்பன் வரிச் சுமையை ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வருகிறார்கள்- “Fully internalizing the CO2 externality (that is, pricing carbon at the GSCC) would allow the Paris Agreement goal to be met, and beyond”. இது அவ்வளவு சரியானதாக தெரியவில்லை, தன் உமிழ்வுக்கேற்ற வரியை அமெரிக்கா சுமத்தும், சீனா தன் உமிழ்வில் நான்கில் ஒரு பங்குக்கும்கீழ் வரியாய்ச் சுமத்தும், ஆனால் இந்தியாவோ தன் உமிழ்வைக் காட்டிலும் நான்கு மடங்கு கார்பன் வரி சுமத்த வேண்டியிருக்கும்!
இந்த ஆய்வு முடிவுகள் இறுதியானவையோ துல்லியமானவையோ அல்ல, பருவநிலை மாற்றம் குறித்த கொள்கையைத் தீர்மானிக்கும் ஆவணமும் அல்ல என்பதை இதன் ஆய்வாளர்கள் தெளிவாய்க் கூறினாலும் இது போன்ற ஆய்வுகள் அலட்சியப்படுத்தப்படக் கூடியவையல்ல. இரு காரணங்கள்:
ஒன்று, Exxon Mobil, BP, Royal Dutch Shell, Total SA ஆகிய எண்ணை உற்பத்தி பெருநிறுவனங்கள் கார்பன் வரி விதிப்பதை ஆதரிக்கின்றன, இது குறித்த விரிவான சித்திரத்தை இங்கு காணலாம். இதன் உள்ளரசியல் எதுவாக இருந்தாலும், யார் எவ்வளவு கார்பன் வரி விதிப்பது என்ற கேள்வி எழும்போது இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். அதன் நிலை தனித்தன்மை வாய்ந்தது.
இரண்டாவது, இதிலெல்லாம் எவ்வளவு உண்மை இருக்கிறது என்ற கேள்விகளுக்கு அப்பால், குறிப்பாய் யாருக்கு எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்ற கேள்விகளுக்கும் அப்பால், பிற எந்த பகுதியையும்விட இந்திய துணைக்கண்டமே மிகப்பெரிய அளவில் தட்பவெப்ப மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளப்போவது உறுதி. இந்த விஷயத்தில் தலைமை தாங்கக்கூடிய அற உயர்நிலை (அல்லது தார்மீக உரிமை), இந்தியாவுக்கே உள்ளது. இந்தப் பொறுப்பைப் போராடியேனும் பெற இந்தியா தாமதிக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் ஐயப்பாடுகள் மற்றும் தாமதத்தின் ஆபத்துக்கள் பிற எவரையும் விட இந்தியாவுக்கே அதிகமாக இருக்கும் என்பதால் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளிலும் இந்திய துணைக்கண்டத்தில் அதன் பாதிப்புகள் குறித்து தரவுகள் திரட்டுவதிலும் இந்தியா முனைப்பு காட்ட வேண்டிய தேவை வேறெப்போதையும்விட இப்போது உடனடி அவசியம் கொண்டதாகவும் இருக்கிறது. வேறெந்த பிரச்சினையும்விட இதுவே இன்று இந்தியாவின் ஜீவாதார பிரச்சினை என்று சொன்னாலும் தவறில்லை.
நியூ யார்க் மாகசின் என்ற இதழில் ‘The Uninhabitable Earth’ (வாழ்வதற்கில்லாத புவி) என்ற சர்ச்சைக்குரிய கட்டுரையை எழுதிய டேவிட் வாலஸ்-வேல்ஸ், “உலகின் மிகவும் ஏழை மக்கள் புவி வெப்பமயமாதலால் எந்த அளவு நசிக்கப்படுவார்கள் என்பதை இந்த ஆய்வு சித்தரிக்கிறது, இந்தியா கொடுக்கக்கூடிய விலை பேரழிவாக இருக்கக்கூடும்” என்று சொல்வது மிகையாய் இருந்தாலும் அது சிறிதளவும் மெய்ப்பட வேண்டியதில்லை.
பின்குறிப்பு: புவி வெப்பம் உலகம் தொழில்மயமாவதற்கு முன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்த நிலையைக் காட்டிலும் 1.5 செல்சியஸ் டிகிரிக்கு மேல் உயராத வகையில் (பாரன்ஹீட் கணக்கில் 2.7 டிகிரி) செயல்பட 2015 ஆம் ஆண்டு உலக தேசங்கள் அனைத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன, நீண்ட கால இலக்கு 2 டிகிரி. 1.5 டிகிரி இலக்கை அடைவது மாற்றங்களை நடைமுறைப்படுத்த போதுமான அவகாசம் அளிக்கும் என்பது இதன் பின்னணி. ஒவ்வொரு தேசமும் தன் தேவைகளுக்கேற்ற வகையில் கார்பன் உமிழ்வைக் குறைத்துக் கொள்ளலாம் என்பது ஒப்பந்தம். ஆனால், 8.10.2018 அன்று ஐபிசிசி என்று அழைக்கப்படும் Intergovernmental Panel on Climate Change ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது.
1 டிகிரி உயர்வை இப்போதே எட்டிவிட்ட நிலையில், உலக வெப்பம் இதே வேகத்தில் அதிகரித்தால் 1.5 டிகிரி எல்லை இன்னும் 12 ஆண்டுகளில், 2030-2052 ஆண்டுகளுக்குள் அடையப்படும் என்று அது கூறுகிறது. இந்த நூற்றாண்டின் முடிவில் 3 முதல் 4 டிகிரிகள் உயர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது. 1.5 டிகிரிக்கு நிறுத்துவது என்பதே பெரிய விஷயம் – 12 ஆண்டுகளில் புவி வெப்பமய உமிழ்வுகளை பாதிக்குப் பாதி குறைத்து, 2050 ஆண்டுக்குள் முழுமையாக நிறுத்தியாக வேண்டும். அதற்கு மேல் உயரும் ஒவ்வொரு அரை டிகிரியும் பெரும் சேதம் ஏற்படுத்தக்கூடியது.
முதற்கட்டமாய், 1.5 டிகிரிக்கும் 2 டிகிரிக்கும் உள்ள வேறுபாடே மிகப் பெரியது. தெற்காசியா என்றழைக்கப்படும் இந்திய துணைக்கண்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், மேற்கூறிய தளம் அனுமானிக்கும் விளைவுகளில் சில:

1.5 2.0
ஆசியப் பனிமலைகளின் கிளேசியர்கள் நிறை குறைதல் 36% 36%
சராசரி வெப்பம் (டிகிரிகளில்) 1.2 1.7
கோடை (கூடுதலாக) 28 நாட்கள் 55 நாட்கள்
நிலப்பகுதியில் உச்ச வெப்பம் (அடிக்கடி நிகழும் வாய்ப்பு) 160% கூடுகிறது 438% கூடுகிறது
நிலப்பகுதியில் உச்ச குளிர் (அடிக்கடி நிகழும் வாய்ப்பு) 54% குறைகிறது 81% குறைகிறது
இந்தியாவில் உச்ச அனல்காற்று வீசும் காலகட்டம்- 2050 2100 2050 2100
எண்ணிக்கை அதிகரிப்பு 5 மடங்கு 8 மடங்கு 9 மடங்கு 32 மடங்கு
காலகட்ட அதிகரிப்பு 2 மடங்கு 3 மடங்கு 3 மடங்கு 5 மடங்கு
பாதிக்கப்படும் மக்கள் தொகை அதிகரிப்பு 9 மடங்கு 19 மடங்கு’ 15 மடங்கு 93 மடங்கு
மிகையளவு பருவமழை (இந்தியாவில்) 20% 25%
வறட்சிக் காலம் 1 மாதம் கூடுதல் 2 மாதம் கூடுதல்
இந்தியாவில் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் தொகை 326% கூடுதல் 546% கூடுதல்
ஆற்று வெள்ளத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு 358% கூடுதல் 546% கூடுதல்

இந்நிலையில் 3 டிகிரி 4 டிகிரி வெப்பம் உயர்வது என்பதை எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. ஆனால்  உலக யுத்தத்துக்கு இணையான மிகப் பெரிய பேரழிவு நிகழ்ந்து உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் முழுமையாக உடைந்தாலொழிய இன்றுள்ள நிலையில் இதுவே நடைமுறை சாத்தியம். நம் தேர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறினால் உயிரினங்கள் பேரழிவை எதிர்கொள்வது உறுதி: “Disastrous Effects Of Climate Change Are Happening Now, Report Says,” என்பது NPR தலைப்பு, “Final call to save the world from ‘climate catastrophe’”- இது பிபிசி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.