சீனாவின் அடாவடிகளும் இந்தியாவின் சுணங்கலும் (குளக்கரை)


சமூகப் பொதுவெளி மறுக்கப்படும் ஆஃப்கானியப் பெண்கள்

பெண்களுக்கு இந்தச் சில மாதங்கள் அத்தனை போதாத காலங்கள் என்று ஒரு புறம் தோன்றுகிறது. இன்னொரு புறம் இப்போதுதான் அவர்களின் குரல் உலகெங்கும் கேட்கத் தொடங்கி இருக்கிறது, அது மேலும் எழுந்து கூட்டுக் குரலாக ஒலித்தால் ஒரு வேளை உலகம் பூராவும் ஒரு நிஜமான மனமாற்றம் ஏற்படலாம் என்றும் தோன்றுகிறது.  இதைக் கொண்டு பார்த்தால் இது பெண்களுக்கு வளர்ச்சிக் காலம் என்று சொல்லலாம் போலவும் தெரிகிறது. எப்படியுமே இன்றைய ஜனத்தொகைக் கணக்கை வைத்துப் பார்த்தால் உலகில் பெரும்பான்மை பெண்களாகத்தான் இருக்கும்.  இருந்தும் அவர்களுக்கு எந்த நாட்டிலும் சம அதிகாரம் அல்லது வாய்ப்புகள் இல்லை என்பது நெடு நாள் நீடிக்கக் கூடிய ஒரு நிலை அல்ல.  இதை மாற்றப் பெண்களிடையே மனமொற்றுமையாவது எழ வேண்டும்.

அப்படி ஒரு உலக ஒருங்கிணைப்பை பெணகளிடையே கொணர்ந்திருக்கிற #மீ டூ இயக்கம் பற்றி மூன்று பதிவுகள் இந்த இதழில் வெளியாகின்றன.
அது உண்மையில் இன்னமும் உலகளாவிய ஒருங்கிணைப்பு இல்லை. அனேகமாக மாநகர, படித்த அல்லது ஓரளவு பிரகாசமான ஒளியில் உலவும் மக்கள் நடுவே உள்ள பெண்களைத்தான் இந்த இயக்கம் ஒருங்கிணைத்திருக்கிறது. கிராமங்கள், சிறு நகரங்கள் போன்ற நிலப்பரப்புகளில் வாழும் பல நூறு கோடி பெண்கள் உள்ள உலகம் ஒன்று உள்ளது. அங்கு பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறை, ஆக்கிரமிப்பு, அடக்கு முறை போன்றன இன்னும் வெளிப்படவில்லை என்பதே உண்மை நிலை.
உலகில் மொத்த வாழ்வே இப்படியா என்றால் இல்லை. இந்த நிலப்பரப்புகளிலும் பெண்களும் ஆண்களும் இணக்கமான நல்லுறவுகளோடு வாழ்வதும் நடக்கிறது. அதுவே, பொதுவில் பெரும்பான்மையினர் என்று கூட இல்லை, அனேகமாக எல்லாருடைய வாழ்விலும் இப்படி நல்ல விதமாக அமைவதே மனிதர் நாகரீகப்படுவது என்று நாம் கருத வேண்டும்.
மீ டூ என்றில்லை, இருபாலரும் நல்லுறவுடன் உலகெங்கும் வாழ இருபாலருக்கும் சமூகத்தில் சம பங்களிப்போடு சம அந்தஸ்தும், உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்கப் பட வேண்டும். இதொரு பொது ஒப்பந்தமாக உலகெங்கும் அத்தனை நாடுகளிலும் நிலப்பரப்புகளிலும் நிலவும் கருத்தொற்றுமையாக ஆனால் மனித நாகரீகம் அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும், மேம்பட்டிருக்கும், பரிணாம வளர்ச்சியாகக் கூட அதிருக்கும்.  பரிணாம வளர்ச்சி என்பது ‘புரட்சியால்’தான் வர வேண்டும் என்றில்லை. படிப்படியாக வரலாம், அப்படித்தான் அனேகமாக வந்திருக்கிறது.
உதிரி முயற்சிகளாக உலகில் ஆங்காங்கு நடந்த தனிப் பெண்களின் எதிர்ப்புகளுக்கு ஒரு முகம், ஒரு உரு, ஒரு பாணி, ஒரு அமைப்பைக் கொடுத்த #மீ டூ இயக்கம் இதுவரை மேல்தட்டுப் பெண்களுக்கானதாக இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். இதன் அடுத்த கட்டத்தில் இந்த இயக்கம் பெரும்பாலான பெண்களுக்கு நகர வாய்ப்பு அதிகம். அதிகமாக்க நாம் முயல்வதும் அவசியம். இந்த அவசியம் கருதி இந்த இதழில், மூன்று நீண்ட குறிப்புகளைப் பதித்திருக்கிறோம்.
அப்படியான செய்திகளை மகரந்தத்தில் போடுவதா, குளக்கரையில் போடுவதா என்று ஐயமும், குழப்பமும் இருந்தன. காரணம் மகரந்தம் பகுதியில் கூடியமட்டில் ஆக்க பூர்வமான செய்திகளைப் பற்றி எழுத முயல்கிறோம். குளக்கரைப் பகுதியில் ஓரளவு விமர்சனம் பெற வேண்டிய அல்லது நாசகரச் செய்திகளைப் பற்றி எழுதுகிறோம். பெண்கள் மீது வன்முறை பிரயோகிக்கப் பட்டிருக்கிறது என்ற செய்தியை நாசகரமானதாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கெதிராகப் பெண்கள் எழுச்சி பெற்று இத்தனை நாட்களாக அவர்கள் வழக்கமாக இருந்த மௌனத்தில் துன்பப்படுவது என்ற நிலையைக் கைவிட்டு அவர்கள் தம் துன்பங்கள் பற்றிப் பொதுவில் பேசத் துவங்கி இருப்பது ஒரு பெரும் ஆக்க பூர்வமான செயல்.  எனவே இந்தச் செய்திகள் மகரந்தத்தில் வெளியாவது சரி என்று தோன்றியது.
அவற்றை மகரந்தம் என்றே பிரசுரிக்கிறோம். ஆனால் விஷயத்தின் முக்கியம் கருதி நீண்ட பகுதிகளாக வெளி வருகின்றன.
இங்கே உள்ளது ஆஃப்கானிஸ்தான் பற்றிய செய்தி. இது நல்ல செய்தியாக இருக்க வாய்ப்பு குறைவு என்பது உடனே உங்களுக்குத் தெரியும். தவிர இது குளக்கரைப் பகுதியில் வெளியாகிறது என்பதும் இன்னொரு சுட்டி.
இது, பெண்களுக்கு நேரும் வன்முறைகளில் இன்னொரு விதம் பற்றியது. இதில் ஆக்கம் இல்லை, தேக்கம் அதிகம், அதையும் விட நாசம் என்பதே அதிகம்.
செய்தியில் சொல்லப்படுவதன் சாரம்: ஆஃப்கானிஸ்தானீல் நெடுங்காலமாக பெண்களுக்கு அவர்கள் கன்னிமையை இழக்காதிருக்கிறார்களா என்ற சோதனை செய்யப்பட்டு வந்தது. இது குறிப்பாக வீட்டை விட்டோ, தம் குடும்பத்தை விட்டோ நீங்கிச் செல்ல முயலும் பெண்கள் எங்காவது காவல் துறையால் பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு சோதனை.
இந்தச் சோதனையில் அவர்கள் கன்னிப் பெண்களாக இல்லாத பட்சத்தில் அவர்கள் கைதாகி, நீதி மன்றங்களில் அவர்களுக்குச் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டு அவர்கள் கொலைகாரர்கள், வன்முறையாளர்கள்  அடைக்கப்படும் சிறைகளிலேயே கூட அடைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.
சில ஆண்டுகள் முன்பு ஆஃப்கானிஸ்தானில் இஸ்லாமியத் தீவிர வாதிகளான தாலிபானின் கொடுங்கோல் ஆட்சி ஒழிக்கப்பட்ட பின் ஆட்சிக்கு வந்த ஓரளவு ஜனநாயக ஆட்சியினர், கொணர்ந்த சில சட்ட மாறுதல்களில் ஒன்று- இந்த வகைச் சோதனை நீக்கப்பட்டது, இது சட்ட விரோதமானது இப்போது. ஆனால் த கார்டியன் செய்தி அறிக்கை சொல்வது என்னவென்றால், சட்டத்தளவில் இந்தச் சோதனை நீக்கப்பட்டு விட்டாலும் காவல் துறையினர் இன்னமும் இந்தச் சோதனைகளைப் பெண்களுக்குச் செய்து, அவர்களைச் சிறையில் அடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்களாம்.
சட்டத்துக்கு மாறாக இந்த நடவடிக்கை எப்படிச் சாத்தியம் என்பது அறிக்கையின் ஒரு கேள்வி.
அதைத் தவிர என்னென்ன குரூரமான மதிப்பீடுகள் பெண்களை ஆஃப்கானிஸ்தானில் கொடுமைப்படுத்துகின்றன என்றும் கட்டுரை பட்டியலிடுகிறது. திருமணத்துக்குப் பிறகு முதல் முறை உடலுறவில் பெண்ணுக்கு ரத்தக் கறை ஏற்படவில்லை என்றால் அப்பெண் கன்னி இல்லை என்றும், மோசமான நடத்தை உள்ளவள் என்றும் பழி சாட்டி அவளை பிறந்த வீட்டுக்குத் திருப்பி அனுப்பி விட்டு, திருமணத்தை ரத்து செய்வது ஒரு வழக்கம் என்று தெரிகிறது.
திருமணமாகும் பெண்கள் இதனால் பெரும் அச்சத்தோடு திருமண உறவில் ஈடுபடுகின்றனர்.  தெருக்களில் போகும் பெண்கள், அவர்களுடைய உறவினர்கள் அல்லாத ஆண்களோடு இருப்பதாகக் காவல் துறையினர் கருதினால் அப்பெண்கள் கைது செய்யப்பட்டு கன்னிமைச் சோதனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அதில் ‘தேறாத’ பெண்கள் சோரம் போனதாகக் கருதப்பட்டு, கடுங்காவல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு சிறைக்கைதியின் கதையில் இந்தச் செய்தி துவங்குகிறது.
எங்கோ ஒரு சில மாவட்டங்களில் துணிகரமான காவல் துறை மேலாளர்கள் இந்த நடைமுறையைத் தடை செய்திருக்கின்றனராம். தாலிபான்கள் கையில் ஆஃப்கானிஸ்தான் மறுபடி சிக்கினால் இஸ்லாமியத்தின் கொடூரமான முகமான வஹ்ஹாபியம் மறுபடி பெண்கள் வாழ்வைக் கருக்கும் என்று தோன்றுகிறது. ஆட்சி செய்யும் ஆஃப்கானிய அரசோ ஊழல், செயல் திறனின்மை மேலும் தொலை நோக்கின்மை ஆகியவற்றோடு மக்களின் அபிமானத்தையும் பெறத் தவறிக் கொண்டிருப்பதால் தாலிபான்கள் படிப்படியாக நாட்டைக் கைப்பற்றி விடும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆஃப்கானியப் பெண்களின் எதிர்காலம் இருளாமல் இருக்க வேண்டும்.


https://www.theguardian.com/global-development/2018/oct/09/afghan-women-still-jailed-alongside-murderers-for-failing-virginity-test


சீனாவின் அடாவடிகளும் இந்தியாவின் சுணங்கலும்

 
சீனா உலக அபிப்பிராயங்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. சீனா என்கையில் அதன் ஆட்சியாளர்களின் கூட்டம் என்று புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நாடுகளுமே கருத்துருக்களும், ஓரளவு எல்லைகளால் உருக் கொடுக்கப்பட்ட தூல வடிவும் சேர்ந்தவைதான். ஆனால் இரண்டு அம்சங்களும் உயிரற்றவை, அதாவது குரல் இல்லாதவை. குரலாக, நடவடிக்கையாக, உலகரங்கில் இருப்பாக நாடுகளை ஆக்குபவர்கள் ஆளும் கூட்டங்கள்தானே. சீனாவை தற்போது ஆளும் கூட்டம் பொதுவுடைமை என்ற முகமூடியணிந்தாலும், துவக்கத்திலிருந்தே மக்களைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும் ஒரு சிறு கூட்டம்தான். சிறு என்கையில், ஏதோ பத்துப் பதினைந்து பேர்கள் இல்லை, எண்ணிக்கையில் சில லட்சங்கள் இருக்கக் கூடும் நபர்களின் கூட்டம்.
ஆனால் மொத்த ஜனத் தொகையில் இது வாளித் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி நீர் போலக் கூட இராத கூட்டம்.
இது சீனாவுக்கு மட்டுமல்ல, அனேகமாக உலகெங்கும் உள்ள எல்லா வகை அரசியல் அமைப்புகளுக்கும் பொதுக் குணம்தான். சில நாடுகளில் மக்களை அத்தனை அலட்சியமாகக் கருதுவதோ, நடத்துவதோ இல்லை. சில நாடுகளில் மக்கள் ஒரு பொருட்டுமே இல்லை. சில நாடுகளில் மக்கள் மந்தைகளாகக் கருதப்பட்டு ‘வழி நடத்தப்படுவார்கள்’ (வட கொரியா?) வேறு சில நாடுகளில் மக்கள் பண்பாட்டு மயக்கங்களால் தொடர்ந்து சுய நலம் பற்றிய கவனமின்றி வைக்கப்படுவார்கள் (அமெரிக்கா) . அதாவது ஆள்வோருக்கு வேண்டுகிற இலக்குகளுக்காக மக்கள் உழைத்துக் கொண்டிருப்பர், மீண்டும் வருவார் மேய்ப்பர் என்று நம்பி ஆயிரக்கணக்கான வருடங்களாக ஏமாறும் கூட்டத்தை ஒத்த நடத்தை இது. தமக்கும் பொற்காலம் கிட்டும் என்று உழைக்க மக்களுக்கு ஏதோ கனவுகள் தேவை, அந்தக் கனவுகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் திறன் அனேக நாடுகளிலும் உள்ள ஆளும் கும்பல்களுக்கு இருக்கிறது.
இத்தகைய வருணிப்பை நம்பிக்கையற்றவரின் வருணனை என்று வாசகர்களில் சிலர் கருதக் கூடும். ஆனால் எதார்த்தம் என்பதை அனேக மக்கள் ஏற்பதில்லை என்பதும் உலக மக்களில் பெருமளவு காணப்படும் நிலைதான். அதனால் இந்த வருணிப்பை ஏற்காதவர்களைப் பற்றிக் குறை சொல்லத் தேவை இல்லை. அவரவர்க்கு விருப்பமான விஷம், அல்லது தாடிக்கார ‘மேதாவி’யின் சொல்லில் விருப்பமான அபின்.  [அபின் என்பது என்னவென்று தெரிந்தவர்கள் மக்கள் திரளில் எத்தனை பேர் இருக்கும்?] அந்த வகை புறந்தள்ளலே ஆளும் கூட்டத்தில் இருக்க முடியும் திறன் கொண்டவரின் சைகைதான் என்று ஒரு ‘எதார்த்த வாதி’ சொல்லக் கூடும்.
ஆக, சீன ஆளும் கூட்டத்தினர் சீனாவை உலகத்தின் மைய நாடாகவும், பெரும் சக்தியாகவும் ஆக்கத் திட்டமிட்டு பல பத்தாண்டுகளாக அதற்கான தந்திரங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இது இந்திய ஆளும் கூட்டத்தின் செயல்பாட்டுக்கு நேர் எதிர். இந்திய ஆளும் கூட்டங்கள் இந்தியாவை எப்படி உடைத்துச் சிதிலமாக்கி, மக்களை மறுபடி செமிதிய மதங்களின் அடிமைகளாகவோ, அல்லது உலக நாடுகளில் எதெல்லாம் அழிப்புக்கும் வன்முறைக்கும் தயங்காதவையோ அவற்றின் காலனியாக ஆக்கலாம் என்பதைத் திட்டமிடவே பல பத்தாண்டுகளாக மிகவுமே முனைந்து செயல்பட்டிருக்கிறார்கள்.
மக்களைக் கொள்ளை அடிப்பதைத் தவிர வேறெதிலும் செயல்திறன் அற்றவர்கள் இந்த ஆள்வோர் கும்பல் என்பதால் இந்தியா இன்னமும் ஏதோ ஒரு ‘நாடு’ என்ற பெயரில் உலவிக் கொண்டிருக்கிறது. தவிர இந்திய ஆளும் கும்பலில் பல கும்பல்கள் உள்ளன என்பதால் ஒன்றோடொன்று இடித்து மோதிக் கொண்டு இந்தியாவை அழிக்கும் முழு உரிமை தமக்கே உண்டு என்ற நிலையை அடையவே அவை எல்லாம் முயல்வதில் ஓரளவு அழிப்பு முயற்சி தேங்கி இருக்கிறது. ஆனால் கரையான் வீட்டையே அரிப்பது போலப் பல பத்தாண்டுகளாக இந்தக் கும்பல்கள் அரித்துக் கொண்டே வருகின்றன.
இதில் இடது உன்னதம் என்றோ, வலது புனிதம் என்றோ நம்பி தினம் ஆவேசப்படுகிறவராக நீங்கள் இருந்தால் பரிதாபத்துக்குள்ளாக வேண்டியவர் நீங்கள்தான். நிஜ நிலை தெரிந்தவர்கள் வலது என்றோ இடது என்றோ ஏதோ ஒரு முகமூடியைப் போட்டுக் கொண்டு பெரும் கொள்ளையில் தமக்கும் ஏதாவது கிட்டாதா என்று இடித்து மோதி அலைபாய்கிறார்கள். மக்கள் எப்போதும்போல சாராயம், சினிமா, பாலுறவு, அடையாள அரசியலில் பாதசாரி ஊழியராக இருப்பது என்ற முற்றிலும் பயனற்ற செயல்களோடு, அன்றாடப் பாட்டையும், ரேஷன் கடைக் காத்திருப்புமாக காலத்தைக் கழிக்கிறார்கள்.
சீனாவிலும் காட்டையும், வீட்டையும், இரும்பையும், உலோகத்தையும், சிலிகானையும், மண்ணையும், மலையையும், ஏன் கடலையும், காற்றையுமே அரிக்கும் கரையான்/ கிருமிக் கும்பல்கள் உண்டு. எந்த ஆளும் கும்பலுக்கும் எடுபிடியாக இருக்க இன்னொரு கூட்டம் இருக்கும். சீன ஆளும் கும்பலுக்கு எடுபிடியாக இருக்கும் கூட்டத்தினர் ஆளும் கூட்டத்தின் ஒரு பகுதி. இவர்கள் மைய அரசியல் அதிகாரத்திற்குத் தக்கவர்கள் அல்ல, அதாவது மையத்தை எட்டி விட்ட கூட்டத்தினர் அளவுக்கு அக்கிரமங்களுக்குத் துணியாதவர்களாகவோ, வாய்ப்புக் கிட்டாதவர்களாகவோ இருக்கக் கூடும். அதனால், மைய அரசியல் அதிகாரத்தைக் கொண்டவர்கள் கொடுக்கும் இலக்குகளை அடையச் செயல் திட்டம் தீட்டி அவற்றை நிறைவேற்றும் இரண்டாம் நிலைக் கூட்டம். நிபுணர்கள், அதிகாரிகள், படையாட்கள், காவல்துறையினர், பல்கலையாளர் என்ற நடுத்தர மாந்தர் கூட்டம்.
சீனாவின் தொழில் துறையும், அறிவுத் துறைகளும், நிர்வாகத் துறைகளும், ராணுவமும் போன்ற செயலோடு சம்பந்தப்பட்ட எல்லாம் இந்த இரண்டாம் நிலைக் கும்பலின் கையில். இவர்களில் கணிசமானவர்கள் புறங்கையை நக்குகிறேன் என்று தேன் கூட்டிலிருந்து எடுக்கும் தேனில் கருதப்படக் கூடிய அளவு தேனைத் தம்முடையது என்று ஒதுக்கி வெளிநாடுகளில் பதுக்குகிறவர்கள். ஆளும் கும்பலுக்குத் தெரியாமல் இது நடக்க முடியாது, ஆனால் இந்த பதுக்கலின் அளவைத் துல்லியமாக அறிய ஆளும் கும்பலுக்கு வழியிராது. தகவலைச் சேகரிப்பதும், தொகுத்துக் கொடுப்பதுமே இரண்டாம் நிலைக் கும்பல் என்பதால் ஆளும் கும்பல் தமக்குக் கிட்டும் தகவல் தொகுப்பை நம்பியே செயல்பட வேண்டிய நிலை.
கரையான்/ கிருமி/ அமில அரிப்பைத் தாண்டியும், சீனாவின் பலம் கூடி வரக் காரணம் உலகரங்கில் இயங்கும் நாடுகளில் பலவற்றிடையே கூட்டணிகள் எல்லாம் இருந்தாலும் உலகை ஆளும் நோக்கத்தை அத்தனை திறமையோடு செயல்படுத்துவோர் அவற்றிடம் இல்லாதிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.  சீனாவில் தற்போது ஆளும் கூட்டத்திடம் தமக்குள் ஒருங்குபட்ட செயல் முறையோடு, மக்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தும் மனோபலமும் அந்தச் செயல் முறை குறித்த கருத்தொற்றுமையும் கொண்ட அரசியலாளர்களும் இருப்பதுதான் என்று சொல்ல முடியும். தவிர சீன மக்களும் வெகு காலம் கழித்து இப்படி முனைப்பும், கட்டுப்பாடும் கொண்டு ஒரு ஆட்சியாளக் கும்பல் இயங்குவது குறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பதோடு, ஆளும் கும்பலின் பிரச்சாரமான ‘நாம் உலகை ஆள்வோம்’ என்ற கருத்தியலை நிஜமாக எடுத்துக் கொண்டு, ஏதோ தாமே உலகை ஆளப் போவதாக எண்ணிக் கொண்டு இட்ட கட்டளைகளைச் சிரமேற்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது கட்டுப்பாட்டுத் தளைகளை எதிர்த்து அதிகம் முரண்டாது, ஏரில் கட்டப்பட்ட மாடுகளாக இயங்குகிறார்கள். சீனாவிலும் நூற்றுக் கணக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆங்காங்கே உண்டு. அவை சுலபமாக அடக்கப்படுகின்றன என்பது சீன ஆட்சியாளர்களின் செயல் திறனைக் காட்டுகிறது.
முரண்டாத மக்களைக் கொண்ட ஆளும் கும்பல்களுக்கு அதுவே பெரும்பலம். உலகரங்கில் ஏகாதிபத்திய நோக்கம் கொண்டு இயங்கும் இதர நாட்டு ஆளும் கும்பல்களுடன் இழுபறியில் நிற்க இந்த வகைப் பலம் அவசியம். இது இல்லாத இந்திய ஆளும் கும்பல்கள் உலகரங்கில் பஞ்சையாகத் தெரிவதில் ஆச்சரியம் இல்லை. உலகரங்கில் சீனா இன்று பிற நாடுகளின் ஆக்ஞைகள், எதிர்பார்ப்புகளை லட்சியம் செய்யத் தேவை இல்லாத நிலையில் வந்து சேர்ந்திருக்கிறது. இன்னும் ஏக அதிபத்திய நிலைக்கு வர இயலவில்லை என்றாலும் சில அதிபத்திய நாடுகளோடு உலக வளங்களைக் கைக்கொள்ளும் உலகக் கொள்ளை முயற்சியில் சீனாவுக்கு இன்று கணிசமான பங்கு கிட்டி இருக்கிறது. இதை எல்லாம் சீனா அனேகமாக உலகரங்கில் பெரும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளாது சாதித்திருப்பது அதன் தனியான சாதனை எனலாம். இருப்பினும் அண்டை நாடுகளை அடிமையாக்க அது தொடர்ந்து முயல்கிறது, அவற்றை நிலை குலையச் செய்யவோ, கடனாளிகளாக ஆக்கவோ அதன் பிடிவாத முயற்சிக்கு அளவோ, தடையோ இல்லை என்பதையும் நாம் கவனிக்கலாம். படிப்படியாக உலகின் குரல்வளையில் தன் பிடியை இறுக்கிக் கொண்டு வருவதைச் சீனா ஒரு கலையாகப் பயின்றிருக்கிறது.
மாறாக படிப்படியாகத் தன் நிலப்பரப்பையே இழப்பதை இந்தியா ஒரு கலையாகப் பயின்று வந்திருப்பதால், ஆயிரம் ஆண்டுகளாக காலனிய அடிமையாக இருந்தும் எதையும் கற்காத மக்களும், எதையும் கற்காத ஆளும் கும்பல்களோடும் உலவுகிறது. இதில் அகம்பாவத்தில் இந்திய ஆளும் கும்பல்களுக்குச் சற்றும் குறைவில்லை என்பதால் உலகரங்கின் கோமாளியாக இந்தியா இருப்பதாகக் கூட நாம் கருதலாம். ஒரு காட்டு, இந்தியாவை உடைக்கச் சதி செய்த நாகாலாந்து, மிஸோராம், பஞ்சாப் போன்ற பகுதிகளின் பயங்கரவாதிகள் பல பத்தாண்டுகளாக மேலை நாடுகளில் இருந்து கொண்டு சிறிதும் அச்சமின்றி இந்தியாவுக்குள் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று நிகழ்த்திக் கொண்டிருந்தனர். உலகரங்கில் இந்தியா அவ்வப்போது தன் அவலத்தைச் சொல்லிப் புலம்பியதே தவிர ஒரு மேலை நாடும் இந்தியாவின் கோரிக்கைகளை லட்சியம் செய்ததில்லை. துக்கிணியூண்டு மக்கள் தொகை கொண்ட கனடா இந்தியாவை முழுதாக அலட்சியம் செய்து பயங்கரவாதிகளை சுதந்திரமாகத் தன் நாட்டில் உலவ விட்டிருந்தது.
ஸ்டேஷன் மாஸ்டர் கொடி போல உள்ள நிலப்பகுதியே கொண்ட அரபு நாடுகளில் சில இன்னமும் இந்திய பயங்கரவாதிகளுக்கும், இந்தியாவின் கொள்ளையருக்கும் புகலிடம் கொடுத்து வைத்திருப்பதோடு அவர்கள் அங்கிருந்து தொடர்ந்து இந்தியாவுக்குள் அழிப்புத் திட்டங்களை நடத்தவும் அனுமதிக்கின்றன. சமீபத்தில் பல பெருங்கொள்ளையர் இந்தியாவிலிருந்து சுலபமாகத் தப்பி யூரோப்பின் பல நாடுகளில் பெரும் செல்வந்தர்களாக உலவுகிறார்கள். இந்தியக் காவல் துறைக்கு உலக நீதி மன்றத்திலோ, அரசியல் களத்திலோ போதுமான திறமையோடு செயல்பட்டு அவர்களை இந்தியாவுக்குக் கொணர்ந்து நீதிக்கு உட்படுத்திச் சிறையில் தள்ள இன்னமும் இயலவில்லை. ஆளும் அரசியலாளர்கள் தப்பித் தவறி அப்படி ஏதும் திறமையைக் காட்டுவோராக இருந்தால், உதவியாளர்களாக இருக்கும் புல்லுருவிக் கூட்டம், அதிகாரிகளில் கணிசமானவர்கள், இந்த அரசியலாளர்களை எப்படி ஓரம் கட்டுவது என்று யோசித்து நேர்த்தியான முறைகளில் ஊடகங்களின் துணையோடு அதைச் சாதித்து விடுவர். சமீபத்தில் சுப்ரமணியம் சுவாமி கொடுத்த பேட்டியில் இந்திய நிதி அமைச்சகம் எப்படி பெரும் கொள்ளையர்களைத் தப்பித்துப் போக விட்டதோடு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விடாமல் மந்திரிகளைத் தடுக்கிறது என்றும் சொல்கிறார்.
ஆனால் சீனா தன் ‘குற்றவாளிகளை’ உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் வெற்றிகரமாகச் சீனாவுக்குத் திரும்பச் செய்ய முடிகிறது.  உலகில் தன் பிம்பம் குலையாமல் இருக்க அவ்வப்போது அடாவடியாக ஏதும் நடவடிக்கைகள் எடுக்கவும் துணியும் நாடு அது.
காட்டாக, தொடர்ந்து இந்தியாவின் எல்லையில் அருணாசலப் பிரதேசத்தைத் தன்னுடையது என்று நிறுவும் வகையில் ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும் நாடு சீனா. அதாவது எதிரியாகவே இந்தியாவைப் பார்த்தபடி இருக்கையில், தான் ஒரு நேச நாடு என்று இந்தியாவிடம் புகை மூட்ட அரசியல் செய்ய அதற்கு இயலும்.  இந்திய மக்களின் புத்தியைக் குழப்ப அதால் பல இந்திய மொழிகளில் வானொலி ஒலிபரப்புகளைக் கூடச் செய்ய முடிகிறது. (சீனாவின் தமிழ் ஒலிபரப்பைக் கேட்க தமிழ் நாட்டில் கணிசமான எண்ணிக்கையினர் உண்டு.)
பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்துக் கொடுத்து இந்தியாவைத் தொடர்ந்து தற்காப்பு நிலையில் வைக்கும் ‘மதியூகமும்’ அதற்கு இயல்பு நிலை. பர்மா, இலங்கை, வங்க தேசம், நேபாள், மாரிஷியஸ் என்று இந்தியாவைக் குரல் வளையில் நெருக்க சீனா பல பத்தாண்டுகளாக முயன்று இந்தப் பத்தாண்டுகளில் கணிசமான வெற்றியும் பெற்றிருக்கிறது. சீனாவின் கடற்படை இப்போது இந்தியாவின்  இரு  பெரும் கடல்களிலும் தனக்கான துறைமுகங்களைப் பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
மாறாக இந்தியா உள்ளும் புறமும் தொடர்ந்து மெலிவையே சாதித்து வருகிறது. இத்தகைய வலுவற்ற ஆளும் கும்பலை பெரும் வன்முறைக் கும்பல், ஃபாசிச ஆட்சியாளர்கள் என்று தொடர்ந்து இந்தியக் கருத்தரங்கிலும், உலகரங்கிலும் சித்திரித்து பிரச்சாரம் செய்ய என்று பெரும் கைக்கூலிக் கும்பல்கள் இந்தியாவிலும் உலகளவிலும் செயல்படுகிறார்கள் என்பது இந்தியாவின் சாதனை. இந்தக் கைக்கூலிகள் பெரும்பாலும் உலகச் சக்திகளின் கைப்பாவைகள் என்றாலும், இவர்களில் தாம் இந்தியாவின் நலனைக் காக்கும் போராளிகள் என்ற மனமயக்கத்தோடு செயல்படும் அரசியல் அண்ணாவிகளும் இந்தியாவெங்கும் உண்டு. இவர்களில் பலர் இந்திய கல்விக் கூடங்களிலும் ஊடகங்களிலும் ‘நட்சத்திரங்கள்’ வேறு.
இந்தியக் கொள்ளையர் (தொழிலதிபர்கள் என்று இவர்களுக்குப் பெயர் உண்டு) இந்தியாவில் பெரும் கடன் தொகைகளை வங்கிகளுக்குக் கட்டாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விடுவதைச் சர்வ அலட்சியமாகச் சாதிக்க முடிகிறது என்றால் இந்திய அரசியலமைப்பும், நிர்வாக அமைப்பும் எத்தனை ஓட்டைகள் கொண்டவை என்பது உடனே புரியலாம். இந்திய அதிகாரிக் கூட்டம் இந்தியக் கொள்ளையர்களின் கைப் பொம்மைகள் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டி வருகிறது. நேரடியாக கையூட்டு என்று எல்லா இடங்களிலும் வாங்குவது போதாதென்று தொழிலதிபர்களிடம் இருந்தும், கொள்ளையர்களிடமிருந்தும் தமக்கான வெட்டுகளைப் பெறுகிறார்களா இவர்கள்? அல்லது வங்கிகள், வரி அலுவலகர்கள், மாநில அரசின் காவல் துறை, மத்திய அரசின் கண்காணிப்புத் துறை, மத்திய அரசின் நிதி அமைச்சக அதிகாரிகள் என்று ஆயிரக்கணக்கானோர் இருக்கும் ஒரு நாட்டில் மிகவும் பரபரப்பாகச் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பெயர் கொண்ட தொழிலதிபர்கள் அலட்சியமாக வெளிநாடுகளுக்கு ஓடிப் போவதும், சொத்துக்களை அங்கேயே பதுக்கி இருப்பதும் எப்படிச் சாத்தியமாகும்?
ஒப்பீட்டில் சீனா உலகின் பல நாடுகளிலிருந்தும் தன் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அறிவியலாளர்கள் என்று பலரையும் தன் நாட்டுக்குத் திரும்ப இழுக்க முடிகிறது. கடும் கண்காணிப்பும், அடக்குமுறையும் கொண்ட நாடு சீனா என்று உலகெங்கும் பிரபலமாகி இருக்கிறது என்பது சீனாவின் செயல்திறனையோ, சுயப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வையோ சிறிதும் மெலிவாக்கவில்லை. இந்தியாவோ ஜெர்மனியில் பத்திரிகைகளில் சிறிது காய்ச்சினால் இங்கே நம் அரசியல்வாதிகளுக்குக் குளிர் ஜுரம் வந்து விடுகிறது. தெருமுனைகளில் மனித உரிமைப் பாதுகாப்பு என்ற பெயரில் கொடும் வன்முறை மதங்களின் தீவிரவாதிகளும், துப்பாக்கியிலேயே அதிகாரம் பிறக்கிறது என்று 21ஆம் நூற்றாண்டில் இன்னும் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் அற்பர்களும் ‘அறப் போராட்டம்’ நடத்துகிறார்கள்.  இந்திய அரசு வழக்கம்போல தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அத்தனை செயல் திறன். ஆனால் உலக அரங்குகளில்,, பல்கலை ஆய்வாளர்கள் நடுவே இந்தியா கொடும் வன்முறையும், ஃபாசிசமும் தலைவிரித்தாடும் நாடு என்ற பிரச்சாரம் மட்டும் ஓயவில்லை.
சீனாவின் சமீபத்திய நடவடிக்கை ஒன்றைப் பார்த்தால் ஒரு புறம் நகைக்கத் தோன்றும் நமக்கு, இன்னொரு புறம் உலக நாடுகளின் இயலாமையை சீனா எத்தனை எளிதாகக் காட்டி விட்டது என்பதும் நமக்குத் தெரியும்.
உலகக் காவல் துறையினரின் கூட்டமைப்பாக ஒரு காவல் அமைப்பு இருக்கிறது. இது இண்டர்போல் (https://en.wikipedia.org/wiki/Interpol ). இது பல நாட்டு காவல் துறையினரின் நோக்கங்களை ஒருங்கிணைப்பதற்காக மட்டுமே செயல்படும் அமைப்பு. அனேகமாகத் தகவல் இணைப்பும், எல்லை தாண்டிய குற்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகளிடையே தொடர்பேற்படுத்திக் கொடுத்து உலக அளவில் குற்றத்தைக் கட்டுப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.
இதன் தலைமை தேர்தல் முறையில் பல நாடுகளிடையே சுழன்று வருகிறது. இதன் சமீபத்துத் தலைவராக சீனாவைச் சேர்ந்த மெங் ஹாங்வெய் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனாவின் ஆட்சியாளர்களான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரிகள்/ அரசியலாளர்களில் இவர் ஒருவராக இருந்தார்.. 2016 இல் இண்டர்போல் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மெங் ஹாங்வெய் 2020 வரை பதவியில் இருப்பதாகத் திட்டம். ஆனால் சமீபத்தில் செப்டம்பர் மாதம் சீனாவுக்குப் பயணித்த மெங் இண்டர்போல் அமைப்பின் தலைமையகம் உள்ள ஃப்ரான்ஸுக்குத் திரும்பவில்லை.
சில வாரங்கள் இண்டர்போல் இவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத நிலையில் இருந்தது. அட,அட, நிச்சயம் உயர்ந்த செயல் திறன் உள்ள அமைப்புதான் என்பீர்கள், ஆனால் இப்படிச் சிரிப்பது எளிது. இண்டர்போலுக்கு எந்த நாட்டுக்குள்ளும் செயல்பட அதிகாரம் கிடையாது. அது பன்னாட்டுக் கூட்டுறவு அமைப்புதானே அன்றி திரைப்படக் கதைகளில் வருவது போல அதன் அதிகாரிகளால் எந்த நாட்டிலும் யாரையும் கைது செய்யவோ, சிறைப்படுத்தவோ இயலாது. அந்தந்த நாடுகள் ஒத்துழைத்தாலன்றி இண்டர்போலுக்க்குத் தகவலும் கிட்டாது. சீனாவோ ஒரு மூடப்பட்ட இரும்பு அறை. அங்கு என்ன நடக்கிறது என்பதை அதன் தணிக்கையாளர்களின் பிடியிலிருந்து கசியும் தகவல்களால் மட்டுமே நாம் ஊகிக்க முடியும்.
மெங் ஹாங்வெய்யின் மனைவி ஃப்ரெஞ்சு அதிகாரிகளையும், இண்டர்போல் அமைப்பையும் அணுகி மெங் ஹாங்வெய் சீனாவில் காணாமல் அடிக்கப்பட்டார் என்பதைச் சொல்லத் துவங்கிய பின் சீனா தன் மௌனத்தைக் குலைத்து, மெங் ஊழல் செய்த குற்றத்துக்கான விசாரணைக்காக சீனாவில் காவலில் இருப்பதைத் தெரிவித்தது. அதாவது மெங் ஹாங்வெய் பன்னாட்டு அமைப்பில் உயர் பதவியில் இருப்பதும், அதுவும் பன்னாட்டுக் குற்றங்களை விசாரிக்கும் ஒரு காவல் அமைப்பில் இருப்பதும் சீனாவுக்குத் தெரியும், ஆனால் அதெல்லாம் சீனாவுக்கு ஒரு பொருட்டே அல்ல. தன் பிரஜை, தான் செய்ய நினைப்பதை அதனால் செய்ய முடியும். தகவல் கூடத் தெரிவிக்கத் தேவை இல்லை என்பது சீனாவின் நிலைப்பாடு.
இந்திய அதிகாரிகள் இந்தியாவின் பெருங்கொள்ளையரைக் கைது செய்ய உதவுமாறு இண்டர்போலை அணுகிய போது இண்டர்போல் அந்த கோரிக்கைகளை அலசிப் பார்த்து அவற்றில் குறை உள்ளது என்றும் தன் அதிகாரிகளால் அந்தக் கோரிக்கைகளை ஏற்கவியலாது என்றும் தெரிவித்ததாகச் சில மாதங்கள் முன்பு செய்திகள் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். சில கொள்ளையர்கள் இந்திய அதிகாரிகள், அரசியலாளர்களின் உதவியால் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இன்று வரை எந்தக் குற்றவாளியையும் இந்தியா திருப்பிக் கொண்டு வந்ததில்லை.
சீனாவின் செயல்களுக்கும் இந்தியாவின் கையறு நிலைக்கும் என்னவொரு வேறுபாடு?
சீனாதான் இப்படிச் செயல்படுகிறதா என்றால் இல்லை. ரஷ்யா,  துருக்கி, கஸக்கிஸ்தான், பேலாருஸ், துனீசியா, இரான் போன்ற நாடுகள் இப்படித் தான்தோன்றி நடவடிக்கைகள் எடுக்கின்றன, இண்டர்போல் அமைப்பையே பயன்படுத்தி ஆளும் கூட்டத்தின் அரசியலை எதிர்ப்பவர்களைத் தாக்குகின்றன என்று குற்றச் சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ரஷ்யா தொடர்ந்து மறுத்தாலும், புடினை எதிர்க்கும் பல அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாம் பல நாடுகளில் கொல்லப்பட்டு வருவதை நாம் அறிவோம். அதே போல இரானும் தன் எதிர்ப்பாளர்களை ஆங்காங்கே ஒழிக்கிறது. சமீபத்தில் சௌதி அரேபியா இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கி இருக்கிறது.  ஜமால் காஷோகி என்ற செய்தியாளர் சௌதி அரசின் விமர்சகர்களில் ஒருவர். இவர் துருக்கியில் வசிக்கிறார். சமீபத்தில் துருக்கியில் உள்ள சௌதி தூதரகத்திலிருந்து ஒரு ஆவணத்தைப் பெறச் சென்றவர் திரும்பவில்லை. அவர் அங்கே தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருப்பார் என்று துருக்கி அதிகாரிகள் சொல்கிறார்கள். சௌதி அரசு இதை மறுக்கிறது. ஆனால் சௌதி அரசு இப்படி நபர்களைக் காணாமல் அடிப்பதில் வல்லமை கொண்ட அரசு என்று ஏற்கனவே பல முறை நிரூபித்திருக்கிறது. துருக்கியுமே இத்தகைய அடாத செயல்களில் வல்ல ஆட்சியாளர்கள் கொண்ட நாடுதான்.
எதுவும் இந்தியாவுக்கு நிகர் இல்லை, செயல் திறன் இல்லாது உலகரங்கில் உலவுவதில் இந்திய ஆளும் கூட்டங்கள் பெருமை கூடக் கொள்கிறார்களோ என்று நாம் ஐயப்பட வேண்டி இருக்கிறது. இது ஏதோ பாஜக அரசை விமர்சிப்பது என்று கருத வேண்டாம். இந்தியாவின் கடந்த 70 ஆண்டு செயல்பாடுமே இதே போல வீசும் காற்றுக்கு வளையும் புல்லளவே வலுக் கொண்ட செயல்பாடுதான்.
ஆனால் இந்திய இடது சாரிகளின் தொடர்ந்த பிரச்சாரத்தைப் பார்த்தால் இந்தியா கடும் வன்முறை கொண்ட அரக்கர்களான ஃபாசிஸ்டுகள் ஆளும் நாடு.
பாம்பைப் பழுதை என்றும் (ஸ்டாலினும், மாஓவும் அதிநாயகப் புரட்சிக் கொழுந்துகள்,  ஜனநாயகமே செயல்முறையாகக் கொண்ட பாட்டாளி வர்க்கக் காவலர்) பழுதையைப் பாம்பு (இந்து சமுதாயம் பெரும் கொடுமையாளர்களின் கூட்டம்) என்றும் வருணிப்பதில் அத்தனை சொல் திறன் கொண்ட மேதைகள் இவர்கள்.
இந்திய இடது சாரிகளின் மனோ வக்கிரங்கள் அவர்களின் அபிமான இலக்கியமான லத்தீன் அமெரிக்க மாயாஜால இலக்கியம் போன்ற வண்ண ஜாலங்கள் கொண்டவை.
https://www.theguardian.com/world/2018/oct/07/china-admits-missing-interpol-chief-meng-hongwei-is-under-monitoring
https://www.bbc.com/news/world-asia-china-45777681
https://www.bbc.com/news/world-europe-45775819


உளுத்து வரும் ஸ்வீடனின் சோசலிச ஜனநாயகம்

முதலிரண்டு குறிப்புகளும் ஆசிய நாடுகளைப் பற்றியன, ஆனால் இரண்டுக்கும் எத்தனை வேறுபாடுகள்.

ஒன்று ஏழாம் நூற்றாண்டில் உலகைப் பீடித்த ஒரு விஷ ஜுரக் கருத்தியலுக்குத் தான் அடிமையானதோடு, பற்பல யூரோப்பியக் கிருஸ்தவ ஆக்கிரமிப்பு முயற்சிகள், ரஷ்யக் கருத்தியல் தாக்கல் போன்றவற்றை எல்லாம் முறியடித்து இன்னமும் ஏழாம் நூற்றாண்டுக் கருத்தியலையே பிடிவாதமாகக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு கோரமான அம்சமான பெண்ணடிமைத்தனத்தை இன்னமும் தன் மையக் கொள்கையாகக் கொண்டிருப்பதோடு அதை அண்டை நாடுகளிலும் பரப்ப முயலும் பயங்கரவாதிகளிடம் பாதி நாட்டை இழந்து நிற்கிறது. அது ஆஃப்கானிஸ்தானில் நூற்றாண்டுகளாக நிலவும் அவலம்.
இன்னொன்றும் ஆசிய நாடுதான். அது உலக மையத்தில் தான் என்ற மமதையைப் பன்னெடுங்காலமாகத் தன்னுள் வளர்த்த நாடு. ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் பல ஏகாதிபத்திய சக்திகளிடம் சில பகுதிகளை இழந்து திண்டாடிய நாடு. கடைசியில் ஒரு யூரோப்பியக் கருத்தியலிடம், தன்னை இழந்து விட்டு நோய்ப்பட்டிருந்து, பல பத்து லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கி அல்லல்பட்டு, பிறகு உலக முதலியத்திடம் தன் மக்களை அடகு வைத்து தொழில் துறையில் முன்னேற்றம் பெற்று இன்று மறுபடி உலகை ஆளும் எண்ணத்தோடு உலவுகிறது. இது சீனா. இரண்டும் ஆசிய நாடுகளே, ஆனால் எத்தனை வேறுபாடுகள் இவற்றிடையே.
அடுத்த குறிப்பு இன்னொரு கண்டம், இன்னொரு நாட்டைப் பற்றியது. யூரோப்பில் உள்ள ஸ்வீடனைப் பற்றியது.
சீனாவைப் பீடித்த நோய்க் கருத்தியலை தன் மக்களிடம் அதிகம் பரவ விடாமல் தடுப்பதில் வெற்றி பெற்ற சில உலக ஜனநாயக நாடுகளில் ஸ்வீடன் ஒன்று. ஸ்காண்டிநேவியன் பொருளாதார மாயம் என்று ஒரு சொல்லாக்கம் உண்டு. அது ஸ்காண்டிநேவிய நாடுகளில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட ஒரு அசாதாரண பொருளாதார முன்னேற்றத்தையும், அந்த முன்னேற்றத்தின் மூலம் கிட்டிய வளங்களை ஓரளவு நிதானப்படுத்திச் சேமித்து மக்கள் திரளிடம் நிறையப் பகிர்ந்து கொடுத்தமையையும் ஒரு சேரப் பார்த்துச் சுட்டும் சொல். பல அரசியல் சமூகக் கருத்தாக்கங்களைப் போல இதில் பகுதி உண்மையும் பகுதி மாயாஜால நம்பிக்கைகளும் கலந்த சொல்லாக்கம் அது. ஒப்பீட்டில் ஸ்காண்டிநேவியாவில் பெரும் முன்னெடுப்பு நடந்திருக்கிறது. ஆனால் அது அப்படி ஒன்றும் கலப்படம் இல்லாத சொக்கத் தங்கமான முன்னெடுப்பு இல்லை.
அதைத்தான் ஷ்டீய்க் லார்ஷொன் போன்ற நாவலாசிரியர்கள் (இதரரில் ஹென்னிங் மான்கெல் ஒருவர், பல துப்பறியும் கதை எழுத்தாளர்களும் இதே போன்ற கருத்தையே தம் நாவல்களில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்) ஸ்வீடனின் ‘அற்புதம்’ என்பதன் பின்னே இருண்ட நிழல்கள் உண்டு. அவற்றில் நாஜியிசம், இனவெறி, பெண்ணெதிர்ப்பு நோக்குகள் போன்றன இருக்கின்றன. அவை இன்னமும் சமூகம், அரசியல், பொருளாதாரம், தொழில் துறை, பண்பாடு என்று பற்பல இடங்களிலும் நிலவுவதோடு அரசியல் அமைப்பில் கணிசமான ஆதிக்கம் பெற்றும் இருக்கின்றன என்று கசப்போடு நாவல்களில் வெளிப்படுத்துகிறார். அந்த நாவல்கள் ஸ்வீடனிலும் பிரபலம், பல யூரோப்பிய நாடுகளிலும் வணிக ரீதியாகப் பிரமாதமான வெற்றி பெற்றிருக்கின்றன. இதை ஜனநாயக அமைப்பின் வெற்றியாகவும் கொள்ளலாம், அல்லது ஜனநாயக அமைப்புகள் இப்படி அவ்வப்போது கசப்பு, ஆற்றாமை, ஆத்திரம் ஆகியவற்றை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்து அவற்றைப் பாராட்டவும் செய்வதன் மூலம் நிஜமான அரசியல்/ பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை மாற்ற வேண்டிய அழுத்தத்தைக் குறைத்து விடுகின்றன என்றும் பார்க்கலாம்.
அரைக் குடுவை நிரம்பியது, அரைக் குடுவை காலி என்று வாதிடும் இரு பக்க நிலை இது.  ஆனால் நாவல்களில் எழுதப்படுவதாலேயே நிஜ நிலை அப்படித்தான் இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு நாம் பொருளாதார அரசியல் ஆய்வுகளைத்தான் தேட வேண்டும்.
இங்கு கொடுக்கப்படும் ஒரு கட்டுரை சுருக்கமாக ஸ்வீடனின் சமீப காலத்து மாறுதல்களைப் பேசுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஸ்வீடன் கடந்த நூற்றாண்டாக ஓரளவு நிதானமான முன்னேற்றப் பாதையில் இருந்தது, இப்போது கொஞ்சம் சரிவைச் சந்திக்கிறது.  ஓலாஃப் பாலிம,  80களில் பிரதமராக இருந்தவர் புலம் பெயர்ந்து வருவோருக்கும், அகதிகளுக்கும் ஸ்வீடனின் கதவைத் திறந்திருந்தார். அவர் ஒரு வலுவான சமூக ஜனநாயகவாதி- அதாவது ஜனநாயக சோஷலிசத்தை நம்பும் பிரதம மந்திரி. அவருமே தன் கட்சியின் தீவிர இடதுசாரிகளாலும், ஸ்வீடனின் தீவிர இடது சாரிகளாலும் விமர்சிக்கப்பட்டவர். ஆனால் தன் கொள்கையில் உறுதியாக இருந்த பாலிம, மார்க்சியக் கருத்தியலையும், வலதுசாரி இனவெறிக் கொள்கைகளையும் உறுதியாக எதிர்த்து, மக்களிடம் பிரபலமாகவும் இருந்தார். அவரைத் தெருவில் சுட்டுக் கொன்றான் ஒருவன். அதற்குப் பிறகு சமூக ஜனநாயகக் கட்சி மெதுவாகத் தன் வலுவை இழந்து வருகிறது. 90களிலும், 00களிலும் உலகெங்கும் நடந்த பல வட்டாரப் போர்களும், ஆஃப்ரிக்காவில் ஏற்பட்டு வரும் பெரும் சமூக மாறுதல்களும் யூரோப்புக்குப் பல லட்சம் மக்களைப் புகலிடம் தேடி ஓடிவரச் செய்கின்றன.
இதே காலகட்டத்தில் யூரோப்பியப் பொருளாதாரம் வளர்ச்சியற்ற தேக்க நிலையில் இருக்கிறபடியால், இத்தனை வெள்ளமான அகதிகளை யூரோப் ஏற்க முடியாமல் தடுமாறுகிறது. அரசுகள் விரும்பினாலும் மக்கள் எதிர்க்கின்றனர். மக்கள் நடுவே யூரோப்பிய இனவாதம் வலுப்பெற்றிருக்கிறது. இதனால் யூரோப்பில் பல நாடுகளிலும் வெள்ளையர் இனப் பாதுகாப்பை மையக் கொள்கையாக வைக்கும் பாசிச, நாஜியிச மேலும் தீவிர வலது சாரிக் கட்சிகள் இப்போது தேர்தல்களில் வெல்லத் தொடங்கி உள்ளன.
இந்த மாற்றம் ஸ்வீடனிலும் ஏற்பட்டிருப்பது உலக இடது சாரிகள் நடுவே இருள் சூழ்கிறது என்ற எண்ணத்தைப் பரப்பி இருக்கிறது. இந்தக் கட்டுரை ஸ்வீடனுக்கு இப்போது தேவை இன்னொரு பாலிமெ என்ற அங்கலாய்ப்புடன் கட்டுரையை முடிக்கிறது.
பாலிம உறுதியாக நம்பிய ஒரு திட்டத்தை இந்தக் கட்டுரை சிறிது பேசுகிறது. அது அரசு எல்லா முதலிய நிறுவனங்களையும் எடுத்து நடத்தும் படுமோசமான தீவிர இடது சாரிக் கொள்கையை மறுத்து, அதே நேரம் முதலியத்தை கேட்பாரில்லாமல் ஆள விடும் வலது சாரிக் கருத்தியலின் அற்பத்தனத்தையும் எதிர்க்கும் கொள்கை. உழைப்பாளருக்கு எல்லா தொழில் நிறுவனங்களிலும் பங்குகளை ஊதியத்தின் ஒரு பகுதியாகக் கொடுத்து அவர்களைப் படிப்படியாக நிறுவனத்தின் சொந்தக்காரர்களாக மாற்றுவதே இந்தத் திட்டம். இதை கெஸ்டா ரீயன், ருடால்ஃப் மைட்னர் ஆகிய இரு பொருளாதார வல்லுநர்கள்  வகுத்தனர். இந்த ரீயன் – மைட்னர் திட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு நிறுவனங்களில் பங்கு வருடந்தோறும் வழங்கப்படும். அமேஸான் நிறுவனம் கூட இத்தகைய ஒரு கொள்கையைக் கொஞ்சம் கடைப்பிடித்து வந்திருக்கிறது. சமீபத்தில்தான் அதை நிறுத்தப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. இதைப் பற்றித் தெரிந்து கொண்டு அடுத்த இதழில் எழுத முயற்சிக்கிறோம்.

http://blog.lareviewofbooks.org/essays/whats-matter-sweden/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.