ஒளிநகல்

அவன் மயக்கத்திலிருந்தான். காற்றில் நலுங்கும் சுடர் போல் உள்ளே ஏதோ ஆடிக்கொண்டிருந்தது. மயக்கத்திலிருப்பது தானா அல்லது மெல்லிய இழையாகப் பிரியும் உணர்வா? உணர்வுகளில் இத்தனை வகைமை ஒரே நேரத்தில் ஏற்படுமா? ஒன்றை விஞ்சி ஒன்று மேலெழுகையில் அவன் ஏதோ ஒன்று வெடித்துச் சிதறுவதைப் பார்த்தான். அதன் உச்சமான வலியில் அவன் அலறினான்; உடனே சிரித்தான். அவனை யாரோ படுக்கையில் எழுப்பி உட்கார வைத்தார்கள்.
அந்த இடம் மருத்துவ வளாகத்தின் கம்ப்யுடேஷனல் ந்யூரோ சைன்ஸ் அன்ட் ந்யூரோ இன்ஃபார்மேடிக்ஸ் துறை.  அதன் ஏழாவது கீழ்தளத்தில் நினைவுப் பதிவேற்றத்திற்கான இரு கட்டடங்கள் செயல் பட்டுக்கொண்டிருந்தன.கண்ணிற்குத் தெரியாமல் ‘காம்பேட் ரோபாட்கள்’ அவைகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தன.அவன் படுக்கையைச் சுற்றி மெதுவான பேச்சுக்குரல்கள் கேட்டன. அவனுக்கு திகைப்பாக இருந்தது. எந்த இடத்தில் இருக்கிறேன், எப்படி இங்கு வந்தேன் என்று குழம்பினான். அவனுக்கு இனிமையான சுவையான பழச்சாறு கொடுக்கப்பட்டது. தன்னை நோக்கிப் புன்னகைக்கும் இந்த இளைஞனை இதுவரை பார்த்ததில்லையே, தனக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுவிட்டதோ என அனிச்சையாக கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டான். அந்த இளைஞன் கைகளை விலக்கி ‘உங்களுக்குக் குழப்பமிருக்கலாம், உங்கள் வலது மணிக்கட்டில் தொடுதிரை காட்சியைப் பாருங்கள், தெளிவாகும்,நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்,பயப்படவேண்டாம்.’ என்றான்.
எண்ணங்கள் திரையில் தோன்றுவதையும், பேச்சுக்கள் பதிவாகி இருப்பதையும், அவன் சற்று முன்னர் நடந்து சென்று கொண்டிருந்த ரங்கனாத தெருவையும், தன்னையும் அந்தத் தொடுதிரையில் பார்ப்பது அவனுக்குப் பரவசமாக இருந்தது.
இன்று நல்ல உணவு சாப்பிடலாம்;சாப்பிட்டுவிட்டு பணம் எடுக்கையில் அதிர்ந்தான்.’டாலர்களைக் காணோம்’ என்றான். இவனையும், இவன் உடைகளையும், தோற்றத்தையும் பார்த்த காசாளர் “நீங்க நகைக்கடையில கொடுத்திருப்பீங்க; அதான் நம்ம ரூபா இருக்கே,அதைக் கொடுங்க சார்,” என்று அனேகமாகப் பிடுங்கிக்கொண்டார்; மற்ற சிப்பந்திகளைப் பார்த்து கண்சிமிட்டினார்.கிட்டத்தட்ட அங்கிருந்து வெளியேற்றப்பட்டான்.
இது எந்த இடம்? எப்படி இங்கு வந்தேன்? டெக்ஸாஸிலிருந்து இங்கே ஏன் வந்தேன்? என்ன ஒரு குழப்பம்? எல்லாமே மாறித் தோன்றுகிறதே? என்னவோ நடக்கிறது, உள்ளிருந்து ஒரு ஊமைக்குரல் கேட்கிறது. புரியவில்லை கடவுளே, என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு? எதிரே ஒரு கோயில்; அவன் தன்னை அறியாமல் கை கூப்பினான்.அவனருகில் மின்னியங்கி கார் வந்து நின்றது. அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கி ‘கெட்இன்’என்றாள். இவன்திகைத்தான்.
அவளுடைய இறுக்கமான உடை இவனைப் போல பலரையும் இம்சித்திருக்கக்கூடும். “இவள் யார்? ஏன் தன்னை காரில் ஏறச் சொல்கிறாள்? அவள் இவ்வளவு இனிமையாக இருக்கிறாளே, போய்த்தான் பார்த்துவிடுவோமா? இல்லை வேண்டாம், எதிலாவது மாட்டிக்கொள்ளப் போகிறோம்.” அவன் ஓடப் பார்க்கையில் காரின் ஓட்டுனர் அவனைத் திறமையாகப் பிடித்து உள்ளே நுழைத்தார். நடைபாதையில் பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்த பெண்களிடமும்,போக்குவரத்து காவலரிடமும்,
‘இவர் என் கணவர், சற்று மூளை குழம்பியுள்ளது,இங்கே நடந்தவற்றிற்கு வருந்துகிறேன்,” என்று சொல்லிவிட்டு அவளும் காரில் ஏறிக்கொண்டாள். ‘இத்தனை அழகிய பெண் என் மனைவியா? இவள் பெயர் கூடத் தெரியாதே,’ என்று நினைப்பு ஓடியது. தற்செயலாக காரின் கண்ணாடியில் தன் முகத்தைப்  பார்த்தவன் திடுக்கிட்டான்.‘ஓ,திஸ் இஸ் நாட் மீ,’என்ற ஓலத்துடன் காருக்குள்ளேயே சரிந்து மயங்கினான்.

தொடுதிரை அணைந்தது.அந்த இளஞனுடன் ஒரு பெண்ணும் நின்றிருந்தாள் இப்போது. அவளும் அவனை நட்புடன் பார்த்து சிரித்தாள்.பேச முயற்சி செய்தால் அவன் நாக்கு ஒட்டிக்கொண்டு ஒத்துழைக்க மறுத்தது. அந்த மயக்கம் எதனால் என்று மனம் மருண்டது.
“நாங்கள் மருத்துவ ஆய்வாளர்கள். நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள். நான் மணி, இவர்கள் கவிதா. உடம்பை நன்றாக வைத்திருக்கிறீர்கள், ரத்தத்தில எந்தப் போதைப் பொருளும் இல்லை. புது டிஜிடல் முறைப்படி உங்க முழு உடம்பையும் பார்க்கப் போகிறோம், உங்க உள் அவயவங்களை மாணவர்களுக்குக் காட்டப்போகிறோம், நிரம்பப் பணம் கொடுப்போம், சின்னதா ஒத்துழைச்சீங்கன்னா நல்லது.”
‘இல்ல, டாக்டர்,எனக்கு என்னவோ போல புரிபடாம இருக்கிறது; ஆனா, அது என்னன்னு  எனக்குச் சொல்லத் தெரியவில்லை. கனவா, உண்மையான்னு தடுமாறுகிறேன்; நான் எவ்வளவு நிலையாயிருப்பேன்னு சந்தேகமா இருக்கு.’
அந்தப் பெண்ணின் பார்வை ஒரு கணம் அந்த இளைஞனைச் சீண்டி மீண்டதை அவன் பார்த்தான். ‘ஓய்வெடுங்கள்,’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் வெளியேறினார்கள். தான் ஒரு கைதியோ என பயப்பட்டான். இவர்கள் மருத்துவ ஆய்வாளர்கள் என்றார்களே, அப்படியென்றால் தான் ஒரு சோதனைப் பொருளோ என நினைத்தான். அறையைச் சுற்றி நடந்து பார்த்தான், எதுவும் விபரீதமாக இல்லை. நீள் நடைப் பாதையில் அவன் நடக்கையில் யாரும் அவனைத் தடுக்கவில்லை. அவனுக்கு இப்பொழுது ஆர்வம் அதிகமாயிற்று. அறைக்குத் திரும்பினால் அவனுக்கு புது உடைகளும், குளியல் பொருட்களும் இருந்தன. பதில் சொல்லாத, கட்டளைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் ஒரு ரோபோ சூடான உணவினைக் கொடுத்தது. அவனது நைந்த பர்ஸ் புடைப்பாக இருந்தது. இனிய இசையில் அவன் தூங்கத் தொடங்கினான். அவன் விழித்துக் கொண்ட போது பேச்சுக்குரல்கள் கேட்டன. அவன் உள்ளுணர்வால், உறங்குவது போல் இருந்தான்.
‘அவன் மெமரில என்ன பண்ணின?’ என்றது பெண் குரல்.
“ஒரு சிறிய நினைவுப் பதிவேற்றம்,” அந்த இளைஞனாகத்தான் இருக்கும்
‘எதுக்கு இதெல்லாம் செய்யற,அவன் தன் நினைவுக்குத் திரும்பாட்டா என்ன செய்ய முடியும்?”
“நீ பாக்கல, சுருளியாத்தானே இருக்கான் இப்போ, அவன ஜார்ஜ் நம்பீசனா, புகழ் பெற்ற ஃபிஸிஸிஸ்ட்டா  சில மணி நேரங்களுக்கு மாத்தினேன். அப்படியே அவன் திரும்பியும் சுருளியா மாறலேன்னாலும் நல்லதுதான்.”
‘ஹெல் வித் யூ. அவனை திருப்பி அனுப்பப் பாரு.’
“இவனுடைய நினவுகள சுத்தமா மாத்தப் போறேன். கண்ணாடியில பார்த்துகிட்டா கூட இவனுக்கு இவன் உருவம் தெரியாது. ஜார்ஜ் நம்பீசன்  சாரோட நினைவுகள,அந்த மேம்பட்ட மூளய இம்ப்ளேன்ட் செய்யப் போறேன். நல்ல திறமையிருந்தும் அவருக்குக் கிடைக்காத அங்கீகாரம் இவனுக்குக் கிடைக்கும்.”
“நீ வரம்பு மீறிப் போற.நாம மனிதர்கள இதில யூஸ் பண்ணக்கூடாதுன்னு ஒப்பந்தம் இருக்கு.”
“ஒப்பந்தம் தானே. நான் ஜெயிச்சுட்டா அதெல்லாம் காத்துல போயிடும்.”
“இது மிகப் பெரிய இஷ்யூ ஆயிடும்.ஜார்ஜ் சாரோட மூளை உனக்கு எப்படி கிடைச்சுது?”
“அது தொழில் ரகசியம்.சவப் பெட்டிக்கு போக வேண்டிய மூளையா அது?”
“உயிருள்ள மனுஷனுக்கு இன்னொருத்தர் மூளையை, அந்த நினைவுகள ‘இம்ப்ளேன்ட்’ செய்யறது சட்டப்படி குற்றம். நான் ரிப்போர்ட் செய்ய வேண்டி வரும்.”
“உன்னால ஆனத பாத்துக்க. நான் இதை செஞ்சு நல்ல பேர் வாங்கிடுவேன்னு உனக்கு பொறாமை.”
அவனுக்கு  நடுக்கமாக இருந்தது. தன்னை எதற்காக யாரோவாக மாற்றப் பார்க்கிறார் அந்த மருத்துவர்? அந்த யாரோ மிகவும் அறிவாளியெனப் படுகிறதே? தன்னை உடலிலும், அவரை மூளையிலும் வைப்பது எதற்கு? இதென்ன ஒரு உடலில் இரு உயிரா தாயும் கர்ப்பமும் போல அல்லது இரு உணர்வில் ஒரே இயக்கமா, அல்லது இரு இயக்கங்களா? உடலால் இயங்குவது ஒன்று, அறிவால் இயங்குவது மற்றொன்று. இதில் தன்னை மாற்றியும் தான் எஞ்சப் போகிறோம் அந்த யாரோ இறந்தும் அவர் மிஞ்சப் போகிறார்! மூளைகளை உடைகளைப் போல் மாற்றலாம என்றால்…
குழம்பிய எண்ண ஓட்டத்துடன்  இப்பொழுது இவர்களை ஏறிட்ட அவன்,‘என்னை விட்டுவிடுங்கள், டாக்டர்,’ என்றான். அந்த இளைஞன் அவனை நெருங்கி கைகளில் தடவ அவன் மீண்டும் உறங்கத் தொடங்கினான்.
“அவன எதுக்கு திரும்பவும் தூங்க வைத்திருக்கிறாய்?”
“இவனுடைய நினவுகள சுத்தமா மாத்தப் போறேன். கண்ணாடியில பார்த்துகிட்டா கூட இவனுக்கு இவன் உருவம் தெரியாது. ஜார்ஜ் சார் தான் தெரிவார். இன்னும் பல வருஷம் திறம்பட இயங்கற மூளை, அருமையான உடல். மனிதன் படைக்கும் மேம்பட்ட உயிர்.”
அவள் மையமாகத் தலையசைத்தாள். “மனுஷனோட தன்னுணர்வ எப்படி மாத்துவ?”
“என்ன கேக்கற நீ? நினைவாலத்தான ஒவ்வொரு நாளும் நம்மள அடையாளம் பாத்துக்குறோம். இதில தன்னுணர்வுன்னு தனியா எப்படி?”
“அவன் தன் உடம்ப பாத்து திகைச்சானே; திஸ் இஸ் நாட் மீன்னு கத்தினானே?”
“அப்படிக் கேளு. அப்ப அவன் டெக்ஸாஸ்ல இருந்தான். கொஞ்ச நேரம் கழிச்சு ஒரிஜினல் வந்தது. இதுதான் முத ஸ்டெப். இனி வெற்றி தான். ஜார்ஜ் சாரோட நினைவுகள இனி சுத்தமா பதிவு பண்ணிடலாம். இவன் கிடையாது இனிமே.”
“சரி, ஆனா, எப்படி இந்த நினைவுகளக் கொண்டுவரப் போற?”
“நரம்பணுவின் இணைப்பில் உள்ள மூலக்கூறுகளின் அணுத்திரள்களை ஆட்டுவிக்க முடியும், அமைதியும் செய்ய முடியும். அதுல நீயும் ஒரு எக்ஸ்பர்ட்.”
“சரி, மெமரிய ஒரு மூளையிலேந்து மறு மூளைக்கு மாத்தி நடறேன்னு வைத்துக்கொள்வோம். அப்ப அது, தன் உணர்வு போன ஒண்ணாத்தான இருக்கும்?”
“நீ சுத்திச்சுத்தி சொல்ல வரது ஆத்மா இத்யாதிகளா?’’
‘கேள்விக்கு பதில்.’
“மனசோ, ஆத்மாவோ மூளையின் தகவல் நிலை எனத்தான் நான் நினைக்கிறேன். ஒரு டேடா ஃபைல் மாதிரி”
‘உணர்வு அவ்வளவு சிம்பிளா? இன்னமும் கூட அவன் கார்ல தன்னப் பார்த்துக் கத்தினதுக்கு நீ பதில் சொல்லவில்லை.’
“அது ஆரம்பம்; அவன அவனிடத்தில் விட்டுவிட்டு அப்புறம் அவனுக்குள் புதைந்த நினைவை சில மணி நேரம் மட்டும் வரவழைச்சேன். இது வரைக்கும் வெற்றிதான். இனி அவனுக்குள்ள சார் தான் இருப்பார். அவன் இளைஞன்; பல வருஷம் அந்த அருமையான மூளை அவனிடத்திலிருந்து செயல்படும். என்றென்றும் இருக்கும் திறமை, காலம் அழிக்க முடியாத பொருள். என்னை இத்தனை கேள்வி கேக்கறியே, உன் ரிஸர்ச்சும் அதுதானே.”
“கான்செப்ட் ஒண்ணுதான். வழிமுறை வேற. நீ நினைவை ஒரு உயிரிலிருந்து மறு உயிருக்கு நடற. நான் செயற்கை யந்திர உயிர்ல அதை மேவறேன். அதுக்கு கூர்மையான நரம்புகள் உள்ள வலைப்பின்னல் செயற்கை நுண்ணறிவு,இயந்திர மொழி, இயல்பான சொல்லாடல் மொழி, பதினாயிரம் கோடிகோடி நரம்பணுக்கள் எல்லாமே ரெடி. நீ செய்யறது ஒரு கொலைக்குச் சமானம். மூளைப் பதிவு மட்டுமே தன்உணர்வ கொடுக்க முடியுமா என்ன? அது ரெட்டைக் குழப்பத்துக்கு வந்துடுத்துன்னா என்ன செய்வ? நீ சொல்வது போல் நரம்பணுக்களின் இடைவெளிகளின் இடையே நினைவு சேமிக்கப்படுவது இல்லைன்னு இன்றைய ஆராய்ச்சி சொல்கிறது. அது உயிர்ச்சத்து ந்யூக்ளியக் திரவத்தில் உள்ளது. நீ டி என் ஏ சைட்; நான் ஆர் என் ஏ சைட்.”
“என்னதான் சொல்ல வர?”
“நான் கணினியில் முழு மூளை அமைப்பை ஏற்படுத்திட்டேன். ந்யூரான்களை நகலெடுத்து,வரையீடு செய்து அதை மூளை அமைப்பில ஏத்தியும் விட்டேன். அதாவது, நா மெமரிய அப்லோட்  செய்றேன். மூணு பரிமாணமுள்ள செயற்க உடம்போடு இணைத்தாகிவிட்டது. எப்ப வேணா செயல்படலாம்.”
அவன் புன்னகைத்தான். “ஆல் த பெஸ்ட்,” என்றான்.
“ராபர்ட் மார்ஷக்குடன் நான் கண்டு பிடித்த கோட்பாடு அவருக்கு பரிசினைப் பெற்றுத்தந்தது. அதனாலென்ன?” என்று பேசிக் கொண்டிருந்தான் மூளைப் பதிவேற்றம் பெற்ற அவன்.
அவனுக்கு வேளாவேளைக்கு உணவு கொடுக்கப்பட்டது; மிதமான நறுமணத்துடன் இயங்கும் குளிர் சாதன வசதி, உடலை உள்வாங்கும் படுக்கை, வகைவகையான உடைகள், பல இயற்பியல் அறிவியலாளரோடு வி ஆர் உரையாடல்கள். ஆனால், இனம் தெரியாத ஒரு உணர்வு வந்துவந்து போனது. சில நேரங்களில் அவன் தொடர்பில்லாமல் பேசுகையில் பல வெளி    நாட்டு அறிஞர்களும், உள்நாட்டு வல்லுனர்களும் குழம்பினாலும்  ‘க்ரேஸி ஜீனியஸ்’ என்று செல்லமாகச் சொல்லிக் கொண்டார்கள்.
‘சிறப்பாக செயல்திட்டம் வகுக்கப்பட்ட கணினி’ தன் செயற்கை உடலோடு முற்றிலுமாகப் பொருந்திவிட்டது. அதற்கு ‘ஒளி நகல்’ என்று பெயர் வைத்தாள் கவிதா. இரு மருத்துவர்களும் இருவரையும் சந்திக்க வைத்தார்கள்.
தன்னைப் போலவே இருக்கும் ஒளி நகலைப் பார்த்து அவன் திகைத்தான்; ஆனால், அவனது வெளித் தோற்றத்தினால் தானும், அவனும் ஒன்று என்று அது முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.பேசிப் பார்த்து ஒத்துக்கொண்டது.
அவன் அதனிடம் கேள்விகள் கேட்டான்.
“என்னைப் போல இருக்கிறாய். என் உடற்கூறு முற்றிலுமாகவா உன்னிடம் இருக்கிறது?”
“ஆம்,உன்னை விடத் தெளிவாக.”
“என் பிறப்புரிமை எல்லாமும் உனக்குக் கிடைக்குமா?”
“பிறப்பில் என்ன உரிமை பெரிதாக?”
“அம்மா, அப்பா, மனைவி, சொத்து, வாரிசு எல்லாம் வாழ்விலிருந்து வருமே?”
“அப்படியென்றால், எனக்கென ஒன்றுமில்லையா?”
“உனக்கென்னடா வேண்டும்? நீ ஒரு நகல் தானே?”
“உன்னிடம் கேட்கவில்லை. நான் என்னை அமைத்தவளிடம் கேட்கிறேன்.”
“உனக்கு அழிவு கிடையாது, நீ என்றுமிருப்பாய், அதுமட்டுமல்ல உன் அறிவுத்திறன் வளர்ந்து கொண்டே போகும். எங்கெங்கும், எந்த அறிவியலிலும் பேசப்படும் உண்மைகள் உன்னை உடனே வந்தடையும். உன்னால் எதையும் ஆக்கமுடியும்,அழிக்கவும் முடியும்.”
“அப்படியென்றால் நான் ஏன் சுருளியில் இருக்கும் நம்பீசனை வெளிக் கொண்டுவந்து அவனுடைய தன் உணர்வை அவனுக்கே தந்துவிடக்கூடாது?” என்றது ஒளி நகல்
“இது மிக அதிகம். கவிதா, உன் தியரிக்காக இதற்கு இப்படி சொல்லிக்கொடுத்திருக்கிறாய்,” ஆத்திரப்பட்டான் மணி.
“அது தானாகப் பேசுகிறது. ஏ ஐ நம்மை முந்தி விட்டது. க்வாண்டம் கம்ப்யுடிங்கின்  வேலை.”
“சுத்தப் பேத்தல். அதை செயலிழக்கச் செய்.”
“நீ சுருளியைத் திருப்பிக் கொண்டு வா.”
கோபத்தில் அவர்கள் இருவரும் துடித்துக்கொண்டு தங்கள் தங்கள் அறைகளுக்குத் திரும்பினர். அந்நேரம், ஒளிநகல் சுருளியின் நம்பீச நினைவுகளை அவசர அவசரமாக அழித்து அவனைவெளியேற்றியும்விட்டது. பூங்கா நிலையத்தை அடைந்த அவன் எதற்கோ காத்திருந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.