பதினேழு புத்தகங்கள் எழுதியிருந்தாலும், ஆங்கில மொழியின் முதன்மை பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதுபவராக இருந்தாலும், ரெபெக்கா சொல்னிட் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல. “எழுத்தென்பது அடிப்படையில் கூடுகையுடன் தொடர்புடையது,” என்று தான் சொல்வதற்கேற்ப, ஃபேஸ்புக்கில் முனைப்புடன் செயல்படும் இவரை ஒன்றேகால் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்கிறார்கள், அவர்களுடன் சொல்னிட் தொடர்ந்து உரையாடுகிறார். மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை, முதலிய வெவ்வேறு நோக்கங்கள் கொண்ட இயக்கங்களில் பங்கெடுத்து, அவை குறித்து எழுதிய இவர் இன்றைய சமூக ஊடக உலகிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார்.
கட்டுரை எழுதும் கலை குறித்து ரெபெக்கா சொல்னிட்டிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வெறுமே சொற்களை நிறைப்பதில்லை, தர்க்கப்பூர்வமாக அடுத்தடுத்த எண்ணங்களாக அடுக்கிச் செல்வதில்லை, ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லும்போதும் அது தொடர்பான பிற சுட்டுதல்களை அளிக்கிறார், இவை மேற்கோள்களாக இருக்கலாம், அல்லது, செய்திக் குறிப்புகள், நிகழ்வுகளாக இருக்கலாம். இப்படி அவர் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது தொடர்பான பிற விஷயங்களை நினைத்துப் பார்க்கச் செய்கிறார். இது அவர் கட்டுரைகளுக்கு ஒரு விரிவான பின்புலம் சேர்க்கிறது, அவரது உழைப்பு குறித்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இன்னொன்று நம் தரப்பு பிறர் தரப்பு என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் ஒருவர் பார்வையை எழுதும்போது அதற்கு அணுக்கமான வகையில் அதன் நிறைகளைச் சொல்கிறார், குறைகளைப் பேசவும் தவறுவதில்லை. அதற்காக, ஒரே நடுநிலையாக இல்லாமல் தான் யாரை நிராகரிக்கிறோம், யாரை ஆதரிக்கிறோம் என்பதையெல்லாம் தெளிவாகவே சொல்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரது மொழி மிகத் தெளிவாக, அலங்காரமில்லாமல் இருக்கிறது.
நியூ ரிபப்ளிக் என்ற தளத்தில் அவர் மூன்று பெண்ணிய நூல்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் –“All the Rage- What a literature that embraces female anger can achieve”. பெண்களின் சீற்றத்தைப் பேசும் அந்த அமெரிக்க நூல்கள் இவை – ‘Good and Mad: The Revolutionary Power of Women’s Anger’ – Rebecca Traister, ‘Rage Becomes Her: The Power of Women’s Anger’ – Soraya Chemaly, ‘Rage: A Black Feminist Discovers Her Superpower’ – Brittney Cooper. இவற்றைப் பேசும்போது இந்தக் கோபத்தின் காரணங்கள், நியாயங்கள், வெளிப்படும் சூழல் முதலியவற்றைச் சரியாகவே எடுத்துரைக்கிறார். பொதுமக்களுக்கு ஆபத்தாகவும், அரசியலிலும் சமூக இயக்கங்களிலும் மோசமான வகையில் வெளிப்படுவதாகவும் உள்ள ஆண்களின் கோபம் பற்றி பெரிய அளவில் கோட்பாடுகள் எதுவும் உருவாகாத நிலையில் இப்போதுதான் வெளிப்படத் துவங்கியிருக்கும் பெண் கோபத்தின் பொது வெளிப்பாடு பற்றி நிறைய கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். பெண்கள் ஆண்களின் கோபத்தைத் தாங்கிக்கொண்டு சமாளிப்பவர்களாக இல்லாமல் அவர்களே கோபப்படுவதை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை என்கிறார் சொல்னிட். ஆனாலும் இன்று பெண்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்திருப்பது ஒரு காரணமாக இருக்கலாம், இன்னொன்று பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எது ஏற்றுக்கொள்ளத் தக்க நடத்தை என்பது குறித்த எதிர்பார்ப்புகளை பெண்ணியர்கள் மறுவரையறை செய்வதில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.
இந்தக் கோபம் வெறும் வெளிப்பாடாக வடிந்து அதன் காரணங்களை சரி செய்யத் தவறலாம் என்பது சொல்னிட்டின் கருத்து. “இந்தப் புத்தகங்களின் பேசப்படும் கோபத்தில் பலவும் தடுக்கப்படுவதன் விளைவு – மரியாதை மற்றும் சமநிலை பெற இயலாமை, தன் உடல் மற்றும் எதிர்காலம் மீது உரிமையின்மை, பிற பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது.” இதனால் விளையும் கோபம் நியாயமானதுதான் என்றாலும் ஆத்திரத்தை வெளிப்படுத்துவது வேறு, அதிகாரத்தை அடைவது வேறு. கோபத்தை ஆதர்ச நிலைக்கு உயர்த்தி அதை நிரந்தரமாக்கக்கூடாது என்கிற அதே சமயம் உணர்ச்சிவசப்படவும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குள்ள அளவு உரிமை மற்றவர்களுக்கும் கிட்டும் நிலையை எப்படி உருவாக்குவது என்பதுதான் சிக்கல் என்கிறார் அவர்.
இது தொடர்பாக ஒரு ஜென் கதை சொல்கிறார். சமுராய் ஒருவன் ஞானி ஒருவரிடம் சொர்க்கம் என்றால் என்ன, நரகம் என்றால் என்னவென்று விளக்கச் சொல்கிறான். உன்னைப் போன்ற முட்டாளுக்கு எல்லாம் அதை ஏன் நான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும், என்று கேட்கிறார் ஞானி. இதனால் ஆத்திரமடையும் சமுராய் கத்தியை எடுத்துக் கொண்டு அவரைக் கொல்லப் பாய்கிறான். “இதுதான் நரகம்,” என்கிறார் ஞானி. சமுராய் ஒரு கணம் தாமதிக்கிறான், உண்மை உறைக்கிறது. “இதுதான் சொர்க்கம்,” என்கிறார் ஞானி. கோபம் என்பது அவலம், அறியாமை, ஞானம் அதன் எதிரிடை. மேலும், ஆத்திரப்படுபவன் சுலபமாய் சூத்திரதாரிகளின் கைப்பாவையாவான். இதெல்லாம் யாருக்கும் தெரிந்த விஷயங்கள். சொல்னிட் இதற்கப்பால் உட்கருத்துகள் சிலவற்றை முன்வைக்கிறார்- இந்தக் கதை கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது பற்றி மட்டுமல்ல, அதிகாரத்தையும் பேசுகிறது. ஞானியிடம் ஒரு கத்தி இருந்திருந்தால் சமுராய் அவ்வளவு சீக்கிரம் சண்டைக்குப் போயிருப்பானா? ஒரு வேளை, பதிலுக்கு அவனும் ஒரு வசவோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். அல்லது, ஒரு பெண் இதே கேள்வியைக் கேட்டு, ஞானி, “நீ ஒரு முட்டாள். பெண்களுக்கெல்லாம் ஞானம் சித்திக்காது,” என்று சொல்லியிருந்தால்? அவள் கோபப்பட்டால் அதுவே அவளை மட்டம் தட்ட வாய்ப்பளிக்கும். அல்லது அவர் சொல்வதை அவள் ஏற்றுக் கொள்ளலாம், கோபப்படுவதற்கு மாறாக தன் தாழ்நிலை குறித்து வருத்தப்படுவதோடு நிறுத்திக் கொள்ளலாம். இந்த அவலம் வேறு வகை நரகம்.
யாருடைய கோபம் அனுமதிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு அது பயனளிக்கிறது. மிரட்டுவது, பணிய வைப்பது இதெல்லாம் வெற்றி தருகிறது, கூட்டாளிகளுக்கு அவசியம் இல்லாமல் போட்டியாளர்கள் மட்டும் இருக்கும்போது கோபம் ஒரு கருவி. இத்தகைய சூழலை உருவாக்கும் அமைப்புகள் கோபக்காரனுக்கு சாதகமானவை. தீங்கிழைத்து, அவமானப்படுத்தி, அடிமைப்படுத்தி வைத்திருக்க ஆண்கள் பலர் விரும்பும் உலகில் வாழும் பெண்கள் எப்படிப்பட்ட எதிர்வினையாற்றினாலும் அதற்கு அவள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்கிறார் சொல்னிட். அவள் கோபப்பட்டால், பெண் இலக்கணத்தை மீறுகிறாள். அவளைத் தவிர்க்கிறார்கள், அவள் கோபக்காரி, சீக்கிரம் சண்டைக்கு வருவாள், அவளுக்கு திறமை போதாது, அவளோடு விரும்பிப் பழக முடியாது என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். பெண்கள் இனிமையானவர்களாகவும் சொன்ன பேச்சு கேட்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ள சமூகத்தில் பெண்ணின் கோபமே அதன் ஆதார காரணங்களின் மீது நம்பிக்கையிழக்கச் செய்கிறது. எனில், எது தீர்வு?
மௌனமாகவும் சமாதானமாகப் போகுபவளாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கவிழ்த்து பெண்கள் மாற்றத்தைக் கொண்டு வந்த கணங்களை Traister பதிவு செய்வதைச் சுட்டுகிறார் சொல்னிட். இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் எதிர்த்து நிற்கக் காரணம் கோபம்தான், அவர்கள் எதைச் செய்தார்களோ, அதைச் செய்யும் சக்தியை அவர்கள் சினந்திருந்தே பெற்றுக் கொண்டார்கள். ஆனால் ஆத்திரம் மட்டுமே மாற்றத்தைத் தூண்ட வேண்டியதில்லை- கருணையும் அதன் உந்துவிசையாகலாம். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முதல் கறுப்பர் பெண்மணி Shirley Chisolm, பொதுவெளியில் கோபமாக இருக்கும்போதும்கூட அலட்டிக்கொள்ளாமல் பேசுவார், அவரது முகமும் குரலும் உறுதியாய் எதிரொலிக்கும், “ஆனால் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்? அவர் கவசத்தைக் கழற்றி வைத்துவிட்டு வேதனையை வெளிப்படுத்துவார்,” என்று Traister எழுதுவதைச் சுட்டுவது நெகிழ வைக்கிறது. அவரே தன் புத்தகத்தில் Black Lives Matter நிறுவனர்களில் ஒருவரான Garza, “என் கோபத்தின் பின்னிருப்பது ஆழமான துயரம்,” என்றும் “Shirley Chisolm போன்ற ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண் அழுது கொண்டிருப்பாள் என்பதைக் கேட்கும்போது,” என் இதயம் நொறுங்குகிறது, என்று சொல்வதையும் பதிவு செய்கிறார்.
“நம் முன் உள்ள கேள்வி இதுவே: கோபத்தைக் கடந்து வேலை செய்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளும் முதல் இயக்கம் வரலாற்றில் நாமாக இருப்போம், இதற்கு முயற்சி செய்யத் தயாராக இருக்கிறோமா? கோபத்தை தொலைத்துக் கட்ட வேண்டியதில்லை, அதை அடக்கி வைத்துக்கொள்ள வேண்டியதில்லை, மறுபுறத்தில் என்ன இருக்கிறதோ அதற்காக நாமனைவருமாய் இணைந்து அதைக் கடந்து செல்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள முடியுமா?” என்ற கேள்வியையும் Garzaவே எழுப்புகிறார். அன்பு அதற்கு உதவலாம், தேர்ந்தெடுத்த கணத்தில் தேர்ந்தெடுத்த வகையில் அந்தக் கோபத்தை வெளிப்படுத்தக் காத்திருப்பது உதவலாம்.
கோபம் குறித்து ஒரு விஷயத்தை சொல்னிட் தெளிவுபடுத்துவது சிறப்பாக இருக்கிறது- தீங்கிழைத்தவர்களுக்கு எதிரானதாக மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான உணர்ச்சிகளும் கோபமாக வெளிப்படலாம். கோப உணர்ச்சிகள் வாழ்நாள் முழுதும் நீடிக்கலாம். கோபப்படும்போது உடலின் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, நாடித் துடிப்பு வேகம் பிடிக்கிறது, சக்தி கூடுகிறது. ஆபத்துக்கு எதிராய் உடல் மேற்கொள்ளும் நடவடிக்கை இது. உண்மையில் நம்மை யாராவது தாக்க வரும்போது இது பயனுள்ளதாய் இருக்கலாம், ஆனால் எப்போதும் இந்த நிலையில் ஒருவர் இருக்கும்போது, உடல் தனக்கு எதிராகவே திரும்புகிறது, அதன் தாக்கம் மிக மோசமானதாக, சில சமயம் கோபப்படுபவரின் உயிரையே குடிப்பதாக இருக்கலாம். கோபப்பட்டாக வேண்டும் என்பதில்லை, அதற்கு மாற்றுகள் உள்ளன.
“யாருக்கெல்லாம் கோபப்பட அதிக காரணங்கள் இருக்கின்றனவோ, அவர்களில் பலர் அதைக் கைவிட்டிருப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். அது அவர்களை அழித்துவிடும் என்பது காரணமாக இருக்கலாம். பொய்க் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள், விவசாயக் கூலிகளைத் திரட்டிப் போராடுபவர்கள், அடங்க மறுக்கும் பூர்வகுடியினர், கருப்பர் தலைவர்கள், இவர்கள் நம் கதையின் சமுராயைவிட ஞானிக்கு நெருக்கமானவர்கள், செய்ய வேண்டியதைச் செய்வதிலும், தங்கள் இலட்சியத்தை நோக்கிச் செல்வதிலும் திறமை வாய்ந்தவர்கள்,” என்று எழுதுகிறார் சொல்னிட்.
1990களின் மத்திய காலத்தில் ஓர் அனுபவம் தன் பார்வையை உருவாக்குவதில் முக்கியமாக இருந்தது என்கிறார் சொல்னிட். 1991 வளைகுடா போரிலும் அமெரிக்க ஆயுதச் சோதனை தளங்களிலும் செறிவு நீக்கப்பட்ட யுரேனிய பயன்பாட்டால் பாதிப்படைந்தவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்த களப்பணியாளர்களில் ஒருவராக அப்போதிருந்தார் அவர். இது குறித்த நிபுணர்கள் இருவரை ஒரு வானொலி நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் சொல்னிட் அங்கு இரு முரண் நோக்கங்களை எதிர்கொள்கிறார். சொல்னிட்டுடன் வந்த நிபுணர்கள் அமெரிக்காவிலும் வளைகுடாவிலும் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் மீதான நேசம் மற்றும் கருணையினால் உந்தப்பட்டவர்களாய் இருந்த காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களையும் அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய தீர்வுகளையும் பேச விரும்பினர். ஆனால் பேட்டி கண்டவரோ, அரசு மீதான வெறுப்பால் உந்தப்பட்டவராய் தெரிந்தார் என்கிறார் சொல்னிட், உரையாடலை அதிகார அமைப்புகளைச் சாடும் திசை நோக்கியே தொடர்ந்து கொண்டு செல்ல முயற்சித்தார்.
சொல்னிட் கட்டுரையை முடிக்கும் இடம் மகத்தானது. “… மாபெரும் களப்பணியார்கள் பலரும் எல்லாவற்றுக்கும் மேல் அன்பால் செலுத்தப்படுபவர்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்றால், எது மக்களுக்கும் தாம் நேசிக்கும் விஷயங்களுக்கும் தீங்கிழைக்கிறதோ, அவற்றைப் பார்த்து கோபப்படுகிறார்கள். ஆனால் அவர்களது முதன்மை உணர்வுகள் அரவணைக்க விழைகின்றன, பழி வாங்குவதற்கல்ல. அன்பே அடிப்படை; வேண்டுமென்றால் கோபத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்”.
பெண்கள் மட்டுமல்ல- கோபப்படும் ஒவ்வொருவரும், பிறிதொருவரைக் குற்றம் சாட்டும் ஒவ்வொருவரும், அநீதிகளுக்கு எதிராக அறச்சீற்றம் பாவித்துப் பொங்கும் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் இது: வஞ்சிக்கப்பட்டவர்களை அரவணைத்து பாதுகாக்கும் நேசம் இல்லாத இடத்தில் வஞ்சகர்கள் மீதான ஆத்திரம் எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், பிறர் நலம் பாராட்டாததால் சுயநலம் கொண்டது, அவசியமற்றது என்பதால் வசதியானது, விளைவுகளைக் கருதாமல் வெளிப்படுவதால் மூர்க்கமானது. அன்பே அற ஆதாரம். அது வெளிப்படாத இடத்தில் சினம் ஓர் உட்பகை. ஆத்திரப்படுவது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பயன்பட்டாலும் அதன் வெற்றி அநீதியைக் களையச் சிறிதும் உதவாது.
மேலும்: All the Rage | The New Republic: What a literature that embraces female anger can achieve
[ரெபெக்கா சோல்னிட் இங்கிலிஷில் எழுதிய ஒரு கட்டுரையைத் தழுவி ச. சமரன் எழுதிய கட்டுரை இது.)