லொரான் பினேவின் ‘தி செவன்த் ஃபங்க்சன் ஆஃப் லாங்க்வேஜ்’ அல்லது ஷெர்லாக் ஹோம்ஸ் போல் துப்பறிகிறார் பார்த்.

மீபத்தில்தான் மரணமடைந்திருக்கும் உம்பெர்த்தோ எக்கோவின் ஆவி, நீத்தார் உலகின் செமியோட்டிக் சாத்திய குறைவுகளால் சலிப்படைந்து ஒரு நாவல் எழுதத் தீர்மானிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நாவல் நாஜி தலைவர் ரைன்ஹார்ட் ஹெய்ட்ரிச்சின் படுகொலை குறித்து இதற்கு முன்னர் ‘HHhH’ என்ற நாவலை எழுதிய திரு லொரான் பினேவால் எழுதப்பட்டுள்ளதாய்ச் சொல்லப்படும், ‘தி செவன்த் ஃபங்க்சன் ஆஃப் லாங்குவேஜ்’ ஆகத்தான் இருக்கும் (இந்த நாவலில் எக்கோவும் ஒரு பாத்திரமாக இருக்கிறார்).
எண்பதுகளின் பிரெஞ்சு அறிவுப்புலச் சூழலை கேலிக்கிடமாகும் இந்த நாவலில் எக்கோவின் ‘நேம் ஆஃப் தி ரோஸ்’ கிங்ஸ்லி ஆமிஸின் ‘லக்கி ஜிம்’மைச் சந்திக்கிறது. மாபெரும் இலக்கிய கோட்பாட்டாளரும் செமியாலஜிஸ்ட்டுமாகிய ரொலான் பார்த் (நாவலில் அவரது ‘மிதாலஜிஸ்’ ஒருவகையில் துப்பறியும் கையேடாக பயன்படுத்தப்படுகிறது), பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளராக பிரான்சுவா மிட்டிரான் போட்டியிட்ட ஆண்டான 1980ன் பிப்ரவரி மாதம் ஒரு வேன் மோதி தூக்கி வீசப்படுகிறார். உண்மையில் அப்போது பார்த் எதிர்கால பிரெஞ்சு அதிபருடன் மதிய உணவு உட்கொண்டபின் தன் காமூவிய விதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இந்த விபத்தை விசாரிக்கும் பொறுப்பு பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரி ஜாக் பெயாவிற்கு அளிக்கப்படுகிறது. தான் இப்போது விசாரித்தாக வேண்டிய பிரெஞ்சு இலக்கியப்  புலத்தை மனமாற வெறுக்கும் ஜாக், அதன் கலைச்சொற்கள் பிடிபடாததால் செமியாலஜி விரிவுரையாளராக பணியாற்றும் சிமோன் ஹெர்ஸாக்கை வலுக்கட்டாயமாய் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொள்கிறார் (ஜாக் தேடி வரும்போது அவர் வகுப்பறையில் தன் மாணவர்களுக்காக ஜேம்ஸ் பாண்டின் ‘தொன்மத்தை’ கட்டுடைத்துக் கொண்டிருக்கிறார்).  கேலிக்கூத்தாக மாறும் இந்த இருவரின் புலன் விசாரணையின்போது, பிரெஞ்சு தேர்தல், பார்த்தின் மரணம்,  மற்றும் மரணமடையும்போது பார்த்தின் கைவசம் இருந்த மர்ம ஆவணம் ஆகிய மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கலாம் என்ற தன் ஊகத்தை வெளிப்படுத்துகிறார் சிமோன்.
ருஷ்ய மொழியியலாளர் ரொமன் யேகப்ஸன் ஏற்கனவே விவரித்துள்ள ஆறு செயற்பாடுகள் போக இரகசியமான ஏழாவது மொழிச் ‘செயற்பாடு’ குறித்து அந்த ஆவணம் விவரிப்பதாக நம்பப்படுகிறது. எவரொருவர் அதில் மேதமை பெறுகிறாரோ, அவருக்கு ‘வலியுறுத்தல்’ ஆற்றல்களை அளிக்கவல்ல செயற்பாடு அது என்பதால் பல சிந்தனையாளர்களும் பிரெஞ்சு அரசியல் வட்டத்தின் சக்திவாய்ந்த உறுப்பினர்களும் அதைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக, எண்பதுகளில் நிலவிய பிரெஞ்சு இலக்கியச் சூழலிற்குள்  விளையாட்டுத்தனம் கலந்த அரைத் தீவிர பயணம் துவங்குகிறது (பார்த், ஃபூக்கோ, சொலேர்ஸ், ஜூலியா கிரெய்சிஸ்தெவா, தெரீதா, லகான் என்று பிரெஞ்சு விமரிசன மரபின் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த நாவலின் பாத்திரங்களாய் இடம் பெறுகின்றனர்). இதன் தொடர்ச்சியாய் துப்பறிவாளர்- செமியாலஜிஸ்ட் ஜோடி, கார்னல் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது (அங்கு சோம்ஸ்கி, காமிலே பக்லியா, ஜான் சியர்ல் முதலியோர் சிறப்பு பாத்திரங்களாய்த் தோன்றுகின்றனர்),  தோற்றுப் போனவர்கள் தங்கள் உடல் உறுப்புகளில் ஒன்றை இழக்கும் (அன்டோனியோனி ஒரு விரலை இழக்கிறார், சொலேர்ஸ் விரைகளை இழக்கிறார்) புத்திசாலிகளுக்கும் சக்தி- வாய்ந்தவர்களுக்குமிடையிலான ஒற்றைக்கு ஒற்றை விவாத மோதல் போட்டியை நிகழ்த்தும் லோகோஸ் கிளப்பின் மர்மச்  செயல்பாடுகளை (காந்தியும், இந்திரா காந்தியும் இதன் உறுப்பினர்களாய் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது) உளவறியும் முயற்சியின் தொடர்ச்சியாக போலோனா மற்றும் வெனிஸிற்கும் செல்கின்றனர். எந்த தயக்கமுமில்லாமல் ‘சிந்தனையாளர்களுக்கான’ நாவல் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் இந்நாவல் இவ்விவாதங்களை கொண்டாட்டம் போல் விவரிக்கின்றது.
துணிச்சலான, புதுமையான, அறிவார்ந்த, நகைச்சுவை நிறைந்த இது போன்ற மிகவும் நுட்பமாய் ‘பின்னப்பட்ட’ நாவல்களை படிப்பதற்காக ஒரு காலத்தில் என் கையையே வெட்டித் தந்திருப்பேன். ஆனால் இலக்கிய விமரிசனம், அரசியல், துப்பறியும் நாவல் வகைமை, வரலாறு, கலை, நாவல் வடிவம் என்று பலவற்றை கேலி செய்வதற்கு அப்பால் இந்த நாவலில் எதாவது இருக்கிறதா?
மெய்ம்மையையும் புனைவையும் புத்திசாலித்தனமாக ஒன்று சேர்ப்பதற்கு அப்பால் (பார்த்தின் ‘உண்மையான’ சொற்களைக் கவிழ்த்து, “வாழ்க்கை ஒரு நாவலல்ல,” என்ற பிரகடனத்துடன் இந்த நாவல் துவங்குகிறது, “தொலைந்து போன கைப்பிரதி ஒன்றுக்காக மனிதர்கள் கொல்லப்படுவது பற்றிய கதை” ஒன்றை உன்னிப்பாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறார் எக்கோ) உச்சாடனம் செய்வதன் பொருட்டு உச்சரிக்கப்படுபவை உச்சாடனப் பொருளை நிறைவேற்றும் இயல்பு கொண்ட மொழியின் ‘நிகழ்த்து’ தன்மை குறித்து தீவிரமான அக்கறை வெளிப்படுகிறது. டிவிட்டர் மீம்கள் பகிரப்படுவதாலேயே மெய்ம்மையடையும் சமூக ஊடகங்கள் மற்றும் ‘புனைச் செய்திகளின்’ உலகுக்கு நெருக்கமானது இது. இதுவும் நாவலின் தன்னைச் சுட்டிப் பேசிக்கொள்ளும் இயல்பும்தான், (“நாசமாய்ப் போன நாவலொன்றில் சிக்கிக் கொண்டு இருப்பதாய்” சிமோன் சந்தேகப்படுகிறான்), இதை பகடிக்கு அப்பால் இன்னும் சற்று நுட்பமான உயரத்துக்கு எழுப்புகிறது. 2017ஆம் ஆண்டின் நிதர்சன உண்மைகள் சில சமயங்களில் நமக்கு மோசமான நாவலாசிரியனின் கட்டுக்கதை போல் இருக்கின்றன என்றால், சிமோன் போல் நாமும் கதையோட்டத்தை மாற்ற இப்போதும் நேரமிருக்கிறது என்று நம்பியாக வேண்டும் போலிருக்கிறது. ஒருவேளை இந்த நாவலில் முடிவு அதன் பாத்திரங்களின் கைகளில் இருக்கிறது என்றால் அக்கைகள் ‘நமதாகவும்’ இருக்கலாம். ஏனெனில் “நாக்கு அறுக்கப்படாத” (இதுவரை?)  “சிமோன் ஹெர்ஸாக்குகளாகிய” நாம்தான் “நம் கதைகளின் நாயகர்கள்”.
புக்கர் பரிசுக்கான நீள்பட்டியலில் இந்தப் புத்தகம் இடம் பெற்றிருப்பது ஆச்சரியம்தான். ஆனால் மிகச் சூடான அறிவுப் பாய்ச்சலையும் சுய சுட்டுதலையும் நிகழ்த்தும் இந்த நாவல் மிகவும் பிரெஞ்சுத்தனமானது என்பதால் புக்கர் பரிசு வெல்லும் வாய்ப்பில்லை[i]. எப்படி பார்த்தாலும், மிக வேகமான, நகைச்சுவையான, திருப்தியளிக்கும் வாசிப்பு தரும் நாவல் இது. முன் சொன்ன வாக்கியம், அது illocutionaryயாக இருக்கப் போகிறதா அல்லது perlocutionaryயாக இருக்கப் போகிறதா என்பது (இதைப் புரிந்து கொள்ள நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும்), அன்பு வாசகரே, உங்கள் கைகளில்தான் உள்ளது.
நம்பி கிருஷ்ணன் / மே 2018
——————–
The Seventh Function of Language, Laurent Binet, Translated by Sam Taylor, Farrar, Straus and Giroux, 2017
[i] எதிர்பார்த்தபடியே இப்புத்தகம் புக்கர் குறும்பட்டியலில்கூட இடம் பெறவில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.