நட்பு

காலையில் அம்மா வீட்டில் இல்லை. எல்லா அம்மாக்களும் அகமத் வீட்டில் இருந்தார்கள். அப்பா தான் எனக்குக் காப்பி எல்லாம் கொடுத்து ஸ்கூலுக்கு ரெடியாக்கினார்.

அவர் ஆம்லட் போடத் திணறுவதைப் பார்த்து, “அம்மா எங்க?” என்று கேட்டேன். அவர் எதுவும் பதில் சொல்லவில்லை.

என் அண்ணன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். “அகமத் அம்மாவுக்குப் பேய் பிடிச்சிருக்கு,” என்றான்.

சும்மா இரு,” என்றார் அப்பா. “டேய், அந்தப் பையன் உன் கிளாசாமே? ப்ரெண்டா?”

அதெல்லாம் இல்ல. அப்பப்பஹாய், பைஅவ்ளோ தான்,” என்றேன்.

அவன் கூட இன்னைக்குச் சேர்ந்து ஸ்கூலுக்குப் போ.”

அம்மா திடீரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். எரிந்து போன ஆம்லெட்டை வருத்தத்துடன் பார்த்து விட்டு, “நான் ஹாஸ்பிடல் போகணும்,” என்று அறிவித்தாள்.

என்ன ப்ராப்ளம்?” என்று கேட்டார் அப்பா.

தெரியல. நடு ராத்திரியில எழுந்து உட்கார்ந்தாளாம். அப்புறம் தூங்கல. கட்டில்ல கால ஆட்டிக்கிட்டே இன்னமும் உறுமிக்கிட்டிருக்கா,” என்றாள் அம்மா.

எனக்கு லேசாக உதறியது. என் அண்ணன் நக்கல் சிரிப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

~oOo~

அம்மா கிளம்பும் போது நான் கதவை ஒட்டிக் கொண்டு பார்த்தேன். அகமத் அம்மாவை நாலு பேராக தாஜா செய்து நடக்க வைத்திருந்தார்கள். தலைவிரிகோலம். திடீரென்று அகமத் அப்பாவைப் பார்த்து, “எருமை மாடே,” என்று அடிக்குரலில் கத்தினாள். எனக்கு பாத்ரூம் வந்து விட்டது.

எல்லோரும் இந்த கர்ஜனைக்குப் பிறகு ஒரு வேளை சரியாகி விடுமோ என்று ஆவலுடன் அகமத் அம்மாவைப் பார்த்தார்கள். ஆனால் உறுமல் நிற்கவில்லை. வேறு வழியின்றி ஆட்டோவில் ஏற்றினார்கள். முன்னும் பின்னுமாக மூன்று ஆட்டோக்கள் கிளம்பிச் சென்றன.

ஓரத்தில் அகமத் அழுது கொண்டு ஸ்கூல் பையுடன் நின்று கொண்டிருந்தான்.

~oOo~

அப்பா என்னைத் தனியாகக் கூப்பிட்டு அட்வைஸ் சொல்லியிருந்தார். “நீ பாட்டுல பேசு. அவன் கவனிக்கிறானோ இல்லையோ, ஏதாவது பேசு,” என்று யோசனை சொன்னார்.

பெரியவர்கள் தங்களுக்குச் சற்றும் பொருந்தாத அறிவுரைகளை சிறியவர்களிடம் தள்ளி விடுவது ஏனோ தெரியவில்லை.

சும்மா பேசு,” என்று அப்பா மறுபடிச் சொன்னார். நான் தலையை நன்றாக ஆட்டி விட்டுஇது வேலைக்காகாது,’ என்று நினைத்துக் கொண்டேன்.

அகமத் மூக்கு சிந்திக் கொண்டிருந்தான். பிறகு அவன் அம்மா கொடுத்த பூ போட்ட கர்சீப்பைப் பார்த்து இன்னும் அழுதான். எனக்கு ஸ்கூலுக்குச் செல்லும் நேரம் வந்து விட்டது.

சற்று முன்னால் வாசல் பக்கம் போய் நின்று கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் முன்னால் வந்தான்.

இருவரும் இப்படியே நான் முன்னும் அவன் நாலு அடி பின்னுமாக ஸ்கூல் வரை போய் விட்டோம். வழியில் பலர் நின்று அகமத் அழுவதைப் பார்த்து விட்டு என்னை முறைத்தார்கள்.

ஆனால் எனக்கு இதை விடப் பெரிய கவலை இருந்தது.

~oOo~

ஸ்கூலில் லஞ்ச் நேரத்தில் ரூபேஷும் முனுசும் என்னிடம் வந்தார்கள்.

அகமத் ஏண்டா உன்கூட வந்தான்?”

அப்படியா என்ன?” என்றேன் ஆச்சரியத்துடன்.

அவர்கள் என்னை உற்றுப் பார்த்தார்கள்.

அழுதிட்டு வேற இருந்தான்?”

இல்லையே, நார்மலாத் தான் இருந்தான்.”

சற்றுத் தள்ளி அகமத் பெரிதாக மூக்கை உறிஞ்சி விசும்பினான்.

ரூபேஷும் முனுசும் என்னை சந்தேகத்துடன் பார்த்தார்கள். நான் அப்பா வைத்திருந்த வேகாத கடலைகளை கவனமாகப் பொறுக்கித் தின்றேன்.

~oOo~

மாலையில் அம்மா வீட்டில் இருந்தாள்.

ஹாஸ்பிடல் வாசல்ல எதுக்கோ கல் குவிச்சு வச்சிருந்தான். இந்தப் பொம்பள அதை எடுத்து போற வரவன் மேலெல்லாம் எரிஞ்சா,” என்று சாப்பிடும் போது சொன்னாள்.

பிறகு அப்பாவும் அம்மாவும் என்னைக் கவனித்தார்கள். நான் சோகமாக சோற்றை அளைந்து கொண்டிருந்தேன். இருவரும் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சாப்பிட்ட பிறகு அப்பா என் அருகே வந்து அமர்ந்தார்.

கவலைப்படாத,” என்றார். “உங்கம்மாவுக்கு இப்பிடி ஒண்ணும் ஆகாது. கொஞ்சம் பைத்தியம் மாதிரி கத்துவா, அவ்ளோ தான்,” என்றார்.

தெரியும்பா,” என்றேன்.

~oOo~

மறு நாள் அகமத் அழுவதை நிறுத்தியிருந்தான். எனவே எப்படியாவது தப்பி விடலாம் என்று நினைத்தேன்.

பி.டி பீரியடில் எல்லாரையும் புட்பால் விளையாடச் சொன்னார்கள். நான் வரப் போகும் ஆபத்து தெரியாமல் ஓரமாக ஓய்வெடுத்தேன்.

அகமத் குட்டியாக இருந்தான். எல்லார் பின்னாலும் ஓடினான். ஒரு நிலையில் பந்து அவனிடம் வந்த போது என்ன செய்வது தெரியாமல் முழித்தான். எல்லாரும் அவனைப் பார்த்துக் கத்தினார்கள்.

இரண்டு நாட்களில் முதல் முறையாக அவன் சிரித்துப் பார்த்தேன்.

ஆனால் ரூபேஷ், சப்இன்ஸ்பெக்டர் போல தொடைகள் கொண்டவன். அவன் அகமதைத் துரத்துவது எங்கள் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தது. பி.டி மாஸ்டர் வேறு எங்கோ  பார்த்துக் கொண்டிருந்த போது அவன்  அகமதை நெருங்கி ஒரு இடி இடித்தான்.

இரண்டு மூன்று இடி வாங்கியும் அகமத் கம்மென்று இருந்தான். பிறகு ஓரமாக வந்து நின்று கொண்டான்.

~oOo~

அகமத் அம்மா குணமாகி வருவதாக என் அம்மா சொன்னாள். ஹாஸ்பிடலில் டாக்டர்களைக் கடிக்கும் முயற்சியை நிறுத்தியிருந்தாள்.

ஏன் இன்னும் சோகமா இருக்க?” என்று கேட்டார் அப்பா, என்னிடம்.

நான், “நாளையில இருந்து நான் ஸ்கூல் போகல,” என்றேன். “அகமத் அம்மா குணமாகி வரும் வரைக்கும் வீட்லயே உக்காந்து ப்ரே பண்றேன்.”

அகமதே ஸ்கூலுக்குப் போறான். உனக்கு என்ன?” என்றாள் அம்மா.

அவனுக்கு நல்லதுக்குத் தான் இது எல்லாம் பண்றேன்,” என்றேன் நான் கண்ணை முட்டும் நீருடன்.

~oOo~

ஒரு மாதத்திற்கு முன்னால் கோக்கோ விளையாடும் போது கிளாஸ் பெரிய மனிதனான ரூபேஷும் அவன் ஆளான முனுசும் அகமதை அடிக்கப் போய் பெரிய ரகளையான கதையை விளக்கிச் சொன்னேன். அம்மா, அப்பா, அண்ணன் மூவரும் கன்னத்தில் கை வைத்தபடி ஆர்வத்துடன் கேட்டார்கள்.

அகமத் ஸ்கூலுக்குப் புதுசு. நாங்கள் எல்லாம் ரூபேஷிடம் பல முறை வாங்கியவர்கள். எங்களைப் போல இல்லாமல் நேராக மாஸ்டரிடம் போய்ச் சொல்லி ரூபேஷ் செமையாக வீட்டில் மிதிபட்டான்.

அகமத், ரூபேஷ பாத்து லூசுன்னு சொன்னான்,” என்றேன் நான்.

ஆஹா,” என்றபடி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தொடர்ந்து அன்று பி.டி பீரியடில் நடந்ததையும் சொன்னேன்.

இதுக்காக எல்லாம் கவலப்படாத,” என்றார் அப்பா, என் கவலையைப்  புரிந்து கொள்ளாமல். “நீ தான் இவங்க எல்லாரையும் திருப்பி ஒண்ணாச் சேக்கணும். வேணுன்னா நம்ம வீட்டுக்கு எல்லாரையும் கூப்பிடேன்?”

இவர்களிடம் போய்ச் சொன்னோமே என்று நொந்து கொண்டேன்.

~oOo~

எல்லோரும் அடித்துப் பிடித்து என்னை வெள்ளிக்கிழமை  ஸ்கூலுக்கு அனுப்பி விட்டார்கள். அன்று ஒரு நாள் தாங்கி விட்டால் லீவ் வந்து விடும் என்று நம்பினேன்.

ஆனால் எதிர்பாராமல், “நாளைக்கு உன் வீட்டுல விளையாட வரோம்,” என்று ரூபேஷ் லஞ்ச் டயத்தில் அறிவித்தான். நான் அதிர்ந்து போனேன்.

மாலை வீட்டுக்குக் கிளம்பும் போது, “விளையாட எங்க வீடு போர்டா,” என்றேன் அவனிடம். “அழுக்கா இருக்கும். அம்மா நல்ல சமைக்கவும் மாட்டாங்க.”

அப்பன்னா இங்கயே சொல்லு. அகமதுக்கு என்ன பிராப்ளம்?” என்றான் ரூபேஷ்.

ஒண்ணும் இல்லையே,” என்றேன்.

ரூபேஷ் வில்லன் போலச் சிரித்தான். “நான் ஏன் அகமதை புட்பால் போது இடிச்சேன் சொல்லு?”

பிறகு அவனே, “அன்னைக்கு என்னைய மாஸ்டர் கிட்ட போட்டுக் கொடுத்தான்ல? ஏன் நேத்து போட்டு கொடுக்கல? அப்போ அவனுக்கு ஏதோ பெர்சனல் ப்ராப்ளம்னு தான அர்த்தம்?”

இந்த அறிவை கணக்கில் காட்டி இருந்தால் முட்டை மார்க் வாங்கியிருக்க மாட்டான்.

எனக்கு உடம்பு சரியில்லை,” என்று மறுபடி இரவு போன் பண்ணி ரூபேஷிடம் சொன்னேன்.

பரவாயில்ல. வெந்நீர் கொண்டு வரேன்,” என்றான்.

~oOo~

அன்று இரவே அகமத் அம்மா வீட்டிற்கு வந்து விட்டாள். எல்லோரையும் களைப்புடன் பார்த்தாள். உள்ளே போய் படுத்துக் கொண்டாள்.

நீங்க எல்லாரும் கொஞ்சம் தள்ளியே படுங்க,” என்று டாக்டர் உறவினர்களிடம் அறிவுரை கூறிச் சென்றார்.

இரவு பனிரெண்டு மணி அடிக்கும் போது எல்லோரும் விழித்திருந்து அகமத் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் அன்று பேய் கிளம்பவில்லை.

~oOo~

மறு நாள் சனிக்கிழமை. ரூபேஷும் முனுசும் வீட்டுக்கு வரும் நாள். காலையில் இருந்து எனக்குப் பரபரவென்றிருந்தது.

அகமத் வீட்டை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். அவன் அம்மா வழக்கம் போல நடமாடிக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் யாரையும் வீட்டில் காணவில்லை. ஒரு வேளை தீர்த்துக் கட்டி விட்டாளோ என்னவோ.

பத்து மணிக்கு ரூபேஷ் சுற்றுமுற்றும் பார்த்தவாறே வந்தான். வீட்டுக் கதவுக்கு வெளியே நின்று அகமத் வீட்டையே உற்றுப் பார்த்தான்.

உள்ள வாடா,” என்றேன்.

சற்று நேரத்தில் முனுசும் வந்த பிறகு கேரம் விளையாடத் தொடங்கினோம். ஆனால் எங்கள் மூவர் மனமும் வெளியே குவிந்திருந்தது.

ரூபேஷ் திடீரென்று, ரூமுக்குள் வந்த என் அண்ணனிடம், “ஹலோ அண்ணா,” என்றான்.

ம்ம்..”

அகமதுக்கு என்னாச்சுண்ணா? ரெண்டு நாளா அழுதிட்டே இருக்கான்?”

என் அண்ணன் திரும்பி என்னைப் பார்த்தான். நான் கேரம்போர்டையே  பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவன் தாத்தா செத்திட்டாரு,” என்றான் அண்ணன்.

~oOo~

டைம் ஆகல? நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போக வேண்டாம்?” என்று கேட்டேன். மணி பகல் பனிரெண்டாகி விட்டது.

ரூபேஷ் வேண்டா வெறுப்பாக எழுந்து செருப்புப் போட்டான்.

நீ என்னமோ மறைக்குற,” என்றான். “அகமத் என் கையில மாட்டாமலா போயிருவான்?”

அப்போது, எங்கள் வீட்டுக்கு வெளியே இருந்து, எல்லா வீடுகளுக்கும் கேட்கும்படியாக மயிர்கூச்செறிய வைக்கும் ஓலம் ஒன்று எழுந்தது.

நாங்கள் மூவரும் உறைந்து போய் நின்றோம். அம்மா உள்ளிருந்து ஓடி வந்தாள். எங்களைத் தள்ளி விட்டு வெளியே போனாள்.

ஓலம் இப்போது பெரும் கர்ஜனையாகக் கேட்டது. பாத்திரங்கள் பறந்தன.

என்ன சத்தம்?” என்றான் ரூபேஷ் நடுங்கும் குரலில்.

தாத்தா போயிட்டாருல்ல, பாட்டி அழறாங்க,” என்றேன் நான், அவசர அவசரமாக. “நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க.”

ஆனால் வெளியே ஒரே களேபரம். அகமத் அம்மாவுக்கு மறுபடி முற்றி விட்டது. எல்லோரும் வீட்டு வாசலில் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆட்டோ பிடிக்க ஆட்கள் ஓடினார்கள்.

என்னடா இது?” என்றான் ரூபேஷ் என்னிடம்.

நான் அவன் முகத்தைப் பார்த்தேன். வெளிறிப் போய் அவன் கை கால்கள் ஆடின. அந்த நிமிடத்தில் நான் பயந்தது வீண் என்று புரிந்து கொண்டேன்.

வா, பக்கத்துல போய்ப் பாக்கலாம்,” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தேன்.

அவனும் முனுசும் கோழிக் குஞ்சைப் போல கதவுக்குப் பின்னால் ஒண்டிக் கொண்டார்கள்.

~oOo~

அகமத் அம்மா பேயாட்டம் ஆடியவாறே வெளியே வந்தாள். பத்து பேர் தேவைப்பட்டது அவளை ஆட்டோவில் ஏற்ற.

அகமத் கொஞ்சம் பழகி விட்டான். எல்லோரும் போன பிறகு அழாமல் வெளியே நின்று கொண்டிருந்தான். ரூபேஷும் முனுசும் அவன் முகத்திலேயே முழிக்காமல் ஓடி விட்டார்கள்.

நான் அவனைப் பார்த்துக் கையாட்டினேன். கேரம் கேம் பாக்கி இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.