வசந்திக்கு தன் கணவன் மேலிருந்து வந்த வித்தியாசமான வாசனையால் குமட்டிக்கொண்டு வந்தது. ஆனால் வாயெடுத்து சொல்லவில்லை. தன் கணவனை விட்டுத் தள்ளிப்போய் நின்றுகொண்டாள். திருப்பிப் பார்த்த அவன் அவள் தள்ளிப்போய் நின்றிருந்ததைக் கண்டு “இன்னா” என்றான். அவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். அவள் கணவன் சட்டையைக் கழட்டி ஏற்கனவே காலெண்டர் மாட்டியிருந்த ஆணியில் மாட்டினான். வெளியே சிலு சிலுவென காற்றடித்தது. இரவு பத்து மணி ஆகிவிட்டதால் அந்த காம்பவுண்டில் மத்த வீடுகளில் கதவடைத்துவிட்டார்கள். மற்றநாள் என்றால் இவன் சற்று வெளியில் அமர்ந்திருப்பான். ஆனால் இன்று அவன் வேறு கனவுகளுடன் வந்துள்ளதால் விரைவாக விளக்கணைத்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே இருவருக்கும் போடப்பட்டிருந்த இரண்டுப் பாயின் இடையில் சிறு இடைவெளி இருந்தது. அவன் அவளுக்கு மாதவிலக்கோ என்று நினைத்தான். ஆனால் அவள் தலையில் கொத்தாக மல்லிகைப் பூவை வைத்திருந்தாள். இவன் அமைதியாகச் சென்று இரண்டு பாயையும் ஒட்டிப் போட்டு விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டான். சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் மெல்ல அவளை நெருங்கி இருட்டில் பொதுவாக அவள் மேல் கைவைத்தான். அவள் இதற்காகவே காத்திருந்தது போல் அவனிடம்,
“குளிச்சிட்டு என் பக்கத்துல வரதுனா வா, இல்லாடி போய் கம்முனு படு” என்றாள் கோவமாக.
உடனே அவனுக்கு கோவம் மண்டைக்கு ஏறியது, வெடுக்கென எழுந்து அமர்ந்து கொண்டு அவளிடம்,
“ஏன்… இப்ப எதுக்கு போய் குளிக்க சொல்ற, வேலைக்கு போறவன்னா வேர்வ நாத்தம் வரும் தான். ஏன் உன்னால் அதக்கூட பொறுத்துக்க முடியாதா” என்றான்.
“வேர்வ நாத்தம் வந்த பரவாயில்ல. கொடல பொறட்டற நாத்தம்ல வருது. அத என்னனு சொல்றது. அதவும் அந்த ஹோட்டல தின்னுட்டு வந்து ராத்திரில நீ வுடறதுல மனிசன் இருக்க முடிதா இங்க” என்றாள்.
அவன் வெடுக்கென்று எழுந்து இருட்டில் தடவி விளக்கைப் போட்டான். அவள் எதிர்ப்புறம் திரும்பிப் படுத்திருந்தாள். சற்று நேரம் நின்றபடி அவளை முறைத்துக்கொண்டிருந்தான். அவள் மெல்ல தலையைத் திருப்பி ஓரக்கண்ணால் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். அவன் நிற்பது தெரிந்ததும் உடனே தலை திருப்பிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள். தளர்ந்திருந்த கைலியை சரி செய்துக் கொண்டு விளக்கை அணைத்துவிட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று அமர்ந்தான். தன் கையைத் தூக்கி ஒருமுறை தன்னையே நுகர்ந்து பார்த்துக்கொண்டான். அவனுக்குப் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. அவன் அப்போது தான் கவனித்தான் காற்று அடிப்பது நின்றிருந்தது.
மொத்தம் இரண்டே அறைதான் வீடு. அவர்கள் இருவருக்கும் அது போதுமானதாக இருந்தது. அந்த காம்பவுண்டில் இருந்த மத்த வீடுகளும் அதே மாதிரி தான் இருக்கும். ஆனால் அதே இடத்தில் அங்கு ஆறு பேர் வாழும் குடும்பமும் இருந்தது. காம்பவுண்ட்க்கு என்று பொது கழிப்பிடம். தண்ணீர் பிடிக்க ஒரு பொதுக் குழாய். காலை ஐந்து மணிமுதல் ஒன்பது வரையும், மதியம் பனிரெண்டு முதல் இரண்டு வரையும், மீண்டும் மாலை ஐந்து மணிமுதல் ஒன்பது வரையும் தண்ணீர் வரும். காலையில் இருக்கும் கூட்டம் மாலையில் இருக்காது. ஒன்பது குடித்தனம் இருப்பதால் பொழுதுபோக்குக்கு பஞ்சம் இருக்காது. எப்படியும் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று பெரும் சண்டையும், அவ்வப்போது சிறு சிறு சண்டையும் எனக் கலகலப்பாகவே நேரம் ஓடும். இதுவரை அவள் யாரிடமும் சண்டையிட்டதில்லை. சண்டை வரும் சூழல் வந்தாலும் ‘அக்கா… அக்கா’ எனப் பேசி மழுப்பிவிடுவாள்.
வசந்தியும் அவள் கணவனும் அந்த காம்பவுண்டுக்கு குடித்தனம் வந்து எட்டு மாதம் ஆகிறது. அதாவது திருமணம் ஆகியும். முப்பத்தி ஏழாவது வயதில் பலரின் முயற்சியில் அவனுக்கு இந்த திருமணம் நடந்தது. அவள் கணவன் ஹோட்டலில் மாஸ்டராக இருந்தான். முன்பு பரோட்டோ மாஸ்டராக இருந்தவன், திருமணம் ஆனதும், வேலையிலிருந்து இரவில் வெகு நேரம் கழித்து வரவேண்டியிருந்தைத் தவிர்க்க, பகலில் மட்டும் போகும் மாதிரி ஒரு இடமாகப் பார்த்து பாண்டி பெரிய ஆஸ்பத்திரி எதிரில் இருந்த ஒரு ஹோட்டலில் சேர்ந்துகொண்டான். அதிலிருந்து தான் வசந்திக்கு இந்த வாசனைப் பிரச்சனைத் துவங்கியது. காலை முதல் இரவு வரை நடக்கும் ஹோட்டல் அது. பலவிதமான பலகாரங்கள் காலை முதல் இரவு வரை செய்யப்படும். இந்த வாசனை முதலில் அவன் ஆடைகளில் மட்டுமே இருந்தது. பிறகு மெல்ல மெல்ல அது அவன் உடலுக்கு நிரந்தரமாக மாறத்துவங்கியது. இரண்டு மூன்று நாள் அவன் வேலைக்குப் போகாமல் இருந்தாலும் அவன் மேல் இந்த வாசனை இருப்பதாகவே வசந்திக்கு தோன்றியது. இது மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்க அவளால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் இரவுகளில் அந்த சில நிமிடங்கள் அவளுக்கு மூச்சுத்திணறியது.
அவள் மெல்ல அவனிடம் இரவு வந்ததும் குளிக்கவிட்டு வரும்படி சொல்ல ஆரம்பித்தாள். அவன் அவள் சொல்வதைக் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. இவன் மேல் வரும் வாசனை தெரியாமல் இருக்கவே இவள் அதிகமாக பவுடர் போடவும், பூச்சூடவும் ஆரம்பித்தால். திடீரென இவள் இப்படி மாலை வேளைகளில் சிங்காரித்துக் கொள்வதைக் கண்டு அக்கம்பக்கத்தில் சில பேச்சுக்கள் எழத்தான் செய்தன. இரவுகளில் இவன் வரும் சமயம் அவள் புதிதாகச் சிங்காரித்துக் கொண்டு இருந்தது அவனுக்கு அவள் மேல் மேலும் ஆசையைத் தூண்டியது. களைப்பாக வந்தாலும் அவனுக்கு புதுத் தெம்பை அவள் தோற்றம் அளித்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வசந்தி இன்று அவனிடம் கூறிவிட்டாள்.
மறுநாள் காலை அவன் விரைவாக எழுந்து குளித்துமுடித்து வேலைக்கு கிளம்பினான். சட்டையைப் போடும் போது ஒருமுறை மீண்டும் தன்னை நுகர்ந்துகொண்டான். இவன் செய்கை அனைத்தையும் அவள் அவனுக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். இவன் அவளிடம் எதுவும் சொல்லாமல் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சைக்கிள் பெடலின் ஒவ்வொரு மிதியும், ஒவ்வொரு சுற்றும் அவனுக்கு ஒவ்வொரு மாதிரி சிந்தனை மண்டைக்குள் ஓடியது. எதிரில் என்ன வருகிறது, இவன் எங்கே போக வேண்டும் என்று மூளை அதன் வேலையை செய்து கொண்டு இருக்க, இவன் மனம் முழுக்க வசந்தியைப் பற்றியதாகவே இருந்தது. அன்று முழுக்க அவனுக்கு வேலையே ஓடவில்லை. ஒன்றில் உப்பு கூடவும், ஒன்றில் காரம் கூடவும் என அன்றைய சமையல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. அன்றுப் பார்த்து முதலாளி கடையில் இருக்க இது பெரும் விவகாரமாக மாறியது. அவர் சமையல் கூடத்திற்கு வந்து இவனைப் பிடித்து சத்தம்போட ஆரம்பித்தார்.
“டேய் கோபி… இன்னாட எல்லாம் மயிறு மாதிரி செஞ்சி வச்சிகிற” என்றார்.
அவன் தனக்கு உடம்பு சரியில்லையென சொல்ல முதலாளி இறங்கிவந்து அவனுக்கு அன்றைய முழு சம்பளத்தையும் தந்து அனுப்பிவைத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களின் முகம் மாறியது. ஒரு சப்ளையர் கேட்கும்படியே கூறினான்,
“செய்யறதுனா எல்லாருக்கும் செய்யனும். மத்தவங்க இன்னா அவ்ளோ இளக்காரமா” என்றான். ஆனால் முதலாளி அதைக் காதில் விழுந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. அவருக்கும் தெரியும், சப்ளையர் கிடைப்பான், சமையல்காரன் கிடைக்கமாட்டான் என்று.
கோபி தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு செஞ்சி சாலையைப் பிடித்து ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்த ஒரு பாருக்குச் சென்று மட்டமான சரக்காக ஒரு க்வார்ட்டர் வாங்கிக்கொண்டான். உள்ளே சென்று மேஜைகளை ஒருமுறை ஆராய்ந்தான். மூலையாகச் சென்று அமர்ந்து சைட் டிஷ் இல்லாமல் குறைவான அளவில் தண்ணீர் சேர்த்து கடகடவென குவார்ட்டரை முடித்தான். வந்த வேகத்தில் மீண்டும் வெளியே வந்து தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு உப்பளம் சாலையை பிடித்துக் கொண்டு வேகமாக பெடலை மிதித்தான். அவனுக்குத் தான் வேகமாகப் போவது போலவே தோன்றியது. ஆனால் அவன் மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தான். எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடக் கூடிய நிலையில் தன் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான்.
தட்டுத்தடுமாறி தன் காம்பவுண்ட் வாசலில் சைக்கிளை விட்டுவிட்டுத் திண்ணையில் அமர்ந்தான். திண்ணை ஒட்டிய சந்தில் சென்று தான் காம்பவுண்ட் உள்ளே நுழைய முடியும். அவன் கண்களைப் பாதி மூடியவாறு அமர்ந்திருந்தான். தலை லேசாக ஆடிக்கொண்டிருந்தது. அப்போது ஏதோ பேச்சுக் குரல் கேட்க மெல்ல தன் தலை திருப்பி உள்ளேப் பார்த்தான். வாட்ட சாட்டமான ஒரு இளைஞன் வந்துகொண்டிருந்தான். அவன் இவனைத் தாண்டும் போது அவன் மீதிருந்து ஒரு அற்புதமான வாசனை வந்தது. அது அவன் போட்டிருந்த செண்ட் வாசனை. அதை நுகர்ந்ததும் இவன் மண்டைக்குள் ஏதோ வெடிப்பது போல் ஒரு வலி ஏற்படக் கோபி வெறிபிடித்தவன் போல் ஆனான். திண்ணையில் இருந்து இறங்கி அவனை நோக்கித் தள்ளாடியவாறு போனான். வேகமாக அவனை அடைந்து அவன் தோளைப் பிடித்து திருப்பி,
“ஓத்தா… நீதான் என் பொண்டாட்டியை மயக்கினியா” என அவன் முகத்தில் ஓங்கி அறைந்தான். எதிரில் இருந்தவனுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. ஆனால் முகத்தில் விழுந்த அடி அவன் கோவத்தை கிளப்ப,
“குடிகார பட்ட” எனத் திட்டிக்கொண்டே இவன் கோபியை சரமாரியாக தாக்கினான். கோபியால் இவனைச் சமாளிக்க முடியவில்லை. அடிதாங்க முடியாமல் கீழே விழுந்தான். ஆனாலும் கோபி அந்த இளைஞனை வசைபாடிக் கொண்டே இருந்தான். இவன் பேசப் பேச இளைஞனுக்கு கோவம் ஏறிக்கொண்டேப் போனது. தொடர்ந்து எட்டி உதைத்துக்கொண்டே இருந்தான். ஆனாலும் அந்த இளைஞனுக்கும் வெறி அடங்க வில்லை. அழுக்கு உடையணிந்த ஒரு குடிகாரன் தன்னைத் தாக்கிவிட்டது அவன் தனமானத்திற்கு பெரும் இழுக்காகக் கருதினான். கோபி கீழே கிடந்தபின்னும் அவன் தாக்க துவங்க அதற்குள் அந்த வழியாக வந்த அவன் நண்பர்கள் அவனைத் தடுத்து நிறுத்தினார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் கோபியின் மனைவியிடம் சொல்ல ஒரு காம்பவுண்ட் உள்ளே ஓடினாள். வசந்தி வருவதற்குள் கோபியை சிலர் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தனர்.
இரவு பத்து மணிக்குக் கோபி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். முகமெல்லாம் வீங்கியிருந்தது. காலில் கட்டுப்போட்டிருந்தான். உடல் முழுவதும் வலி. அவனால் எதுவும் பேசமுடியவில்லை. படுக்க வைத்ததும் அசதியில் உறங்கிவிட்டான். வசந்தியிடம் அக்கம்பக்கத்துப் பெண்கள் இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் யாருக்குமே எதற்குச் சண்டை என முழுவதும் தெரியவில்லை. நிறைய இளைஞர்கள் அவ்வபோது அங்கு வந்து போவதால் யாரென்றும் சரியாக தெரியவில்லை என்றனர். தெரிந்தாலும் சொல்ல மறைக்கிறார்களோ என் வசந்திக்குத் தோன்றியது.
மறுநாள் காலை. கோபி மெல்ல விழித்தான். உடல் வலி குறைந்த பாடில்லை. மெல்ல எழுந்து சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டான். தன் அருகில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை இயக்கினான். டிவி ஓடும் சத்தம் கேட்டு உள்ளே வந்த பார்த்த வசந்தி இவன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் மீண்டும் வெளியே சென்று சில நிமிடங்களில் டீயை எடுத்து வந்து அவன் அருகில் வைத்து அப்படியே நின்றாள். காலையிலேயே குளித்து முடித்து தலை நிறைய பூச்சூடியிருந்தாள். ஆனால் அவன் மேல் பயங்கரமாக மருந்து வாசனை வர மெல்ல நடந்து வெளியே வந்தால். கோபி மெதுவாக டீயை குடித்துக் கொண்டிருந்தான். அப்போது வெளியே ஏதோ பேச்சுக் குரல் கேட்க டிவி சத்தத்தை குறைத்தான். வெளியே ஒரு இளைஞன், “என்னக்கா, நேத்து ஏதோ பிரச்சனையா?” என்றான். வசந்தி பேசுவது இவனுக்குச் சரியாக புரியவில்லை. மீண்டும் ஏதேதோ பேசுவது இவனுக்குக் கேட்டது. கடைசியாக அந்த இளைஞன் ஏதோ சொல்ல வசந்தி பயங்கர சத்தமாகச் சிரித்தாள். வசந்தியின் சிரிப்பு சத்தம் கேட்டதும் இவனுக்கும் மீண்டும் கோவம் தலைக்கேறியது. தன் கையில் வைத்திருந்த டம்ளரை வேகமாக சுவரில் எறிந்தான். அருகில் உருளும் டம்ளர் சத்தத்தை விட வசந்தியின் சிரிப்பு சத்தம் அவனுக்கு அதிகமாகக் கேட்டது. சத்தத்தை கேட்டு வசந்தி உள்ளே வந்தால். அவன் மேலிருந்து வந்த மருந்து வாசனையும், இவள் மேல் இருந்த மல்லிகை வாசனையும் சேர்ந்து அங்கு ஒரு புது விதமான துர்நாற்றத்தை உருவாக்கியது.
நல்லதொரு கதைக்களத்தில் இன்னும் சற்று ஊடாடி நாடகத்தைக் கோர்த்திருந்தால் மேலும் சுவை கூடியிருந்திருக்கும்.கதை சப்பென்று முடிந்ததைப்போல் தோன்றுகிறதே?