தப்பித்தல் நிமித்தம்

This entry is part 28 of 48 in the series நூறு நூல்கள்

கார்த்திகைப் பாண்டியனின் ‘மரநிறப்பட்டாம்பூச்சிகள்’ சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் குறிப்பு – கார்த்திகைப் பாண்டியன் இணையத்திலும் அச்சு ஊடகங்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர். சிறந்த மொழிபெயர்ப்பு தொகுப்புக்காக (எருது) விகடன் விருதும், சமீபத்தில் 2018ஆம் ஆண்டுக்கான ஆத்மாநாம் விருதும் பெற்றவர்.  இவரது “மர நிறப்பட்டாம்பூச்சிகள்” சிறுகதைத்தொகுப்பு வாசகசாலை 2015க்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பு பரிசை வென்றது. வலசை எனும் சிற்றிதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

*

கார்த்திகைப் பாண்டியனின் முதல் சிறுகதைத் தொகுப்பான “மரநிறப்பட்டாம்பூச்சிகள்” சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்தபோது போதிய கவனத்தைப் பெற்றது. எஸ்.ராமகிருஷ்ணனை ஆதர்சமாக அறிவித்துக்கொண்டு எழுத வந்த பல இளம் எழுத்தாளர்களில் தொடர்ந்து மொழியாக்கங்கள், சிறுகதைகள், வலசை எனும் சிறுபத்திரிக்கையின் துணை ஆசிரியர் என பல முகங்களோடு இயங்கி வருகிறார். எஸ்.ராமகிருஷ்ணனை ஆதர்சமாக அறிவித்துக்கொண்டாலும் இவரது எழுத்துகளில் அதற்கான முத்திரைகளை நாம் கண்டடைய முடியவில்லை என்பதும் அதற்கான முயற்சிகளில் இயங்காததும் இவரது எழுத்துப் பயணம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது எனலாம்.

நிழலாட்டம் – காலில் கல் பட்டதும் அற மூர்த்தியானின் பாதம் தொட்டு வணங்கி எழுந்த அகலிகை சுட்டி நிற்கும் பாப புண்ணிய தரிசனத்தின் மறு எல்லையில் சுழலும் கதை. இங்கும் கதை சொல்லியின் காலில் படும் கல்லில் கவனம் குவியும்போது அவனது நிழல்கள் விலகிச் சென்று வாழ்வின் புரியமுடியாத அபத்தங்களை கண்டு திரும்புகின்றன. முன் இருக்கையில் உர்கார்ந்திருக்கும் இளம் பெண்ணின் ஸ்பரிச தொடுதலில் சுகம் காணும் ஒருவன் தான் தொட்டுணர்வது அவளது பத்து வயதுச் சிறுமி எனும் போது உடனடியாக அடையும் குற்ற உணர்ச்சி ஓட்டச்செய்யாது அவளுக்கு சாக்லெட் வாங்கிக்கொடுக்கச் செய்வதன் குரூரம். கண்ணு தெரியாதவன் கேட்கும் கேள்விகளுக்கு சக ரயில் பிரயாணியின் மனசாட்சியற்ற பதில் கூட நம்மை திகைக்கச் செய்வதில்லை மாறாக அதிகாரத்துக்கு மட்டுமே அடங்கியவனின் இழிநிலையும் கூட நம்மை இம்சிக்கிறத. நிழலாட்டம் கதை நம் விரல் நுனியிலிருந்து தொடங்குவதுதான் என்றாலும் முழுவதுமாக நம்மை ஒப்புகொடுத்துவிட்ட இழிநிலையின் வாக்குமூலமும் கூட.

தொகுப்பின் முக்கியமான கதையான கன்னியாகுமரி, மனிதனின் ஆழ்மனதுக்கும் மேல்மனத்துக்கு இடையிலான போராட்டத்தை இயல்பு மீறாவண்ணம் காட்டுகிறது. காமமும் மரணமும் தொடர்ந்து ஒன்றை ஒன்று நிரப்பும் இரு வேறு விசைகளாக மனித மனதை அலைக்கழிக்க வைத்தாலும் ஒன்று திரும்பவியலா நிகழ்தகவைக் கொண்டது என்பதால் மற்றொன்றின் அலைகழிப்பு மனிதனின் கீழ்நிலையின் முடிவுறா ஆழத்தைக் காட்டும் படிமமமாக என்றும் அமைந்துவிடுகிறது. மெல்லிய குளிர் காற்று, தனிமை, பார்வைக்குப் பரவசமூட்டும் முகமறியா உடல்கள் போதும் உடல் எத்தனை தடைகளையும் கடந்து காமத்தை அடையத் துடிக்கும். அத்தடைகள் உளத்தடைகளாகவும் இருக்கலாம், சமூகம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் அற நிலைப்பாடாகவும் இருக்கலாம். உளமறியா தவிப்பை எதிர்கொள்ள முடியாது விவேகானந்தரும் கதை பாத்திரமான ராமநாதனும் கன்னியாகுமரியில் அன்னையின் அரவணைப்பை எதிர்பார்த்துச் செல்பவர்கள். ஒருவர் அமரராகிறார்; மற்றொருவர் மேலும் படுகுழியில் விழும்படியான இழிநிலைக்கு ஒப்புக்கொடுக்கிறார். தனது பெண்ணின் நினைவிலிருந்து தப்பித்து செல்லும் ராமநாதன் மாட்டிக்கொள்வதோ தனிமையிடம்.  தனித்திருக்கப்பிடிக்காது இணையைத் தேடவிடும் தவிப்புக்கு ஆளாகிறார். கிடைத்ததோ சிறு பெண்; மகளை ஒத்தவள். கலவிக்குப் பின் அவளுக்கு இது முதல் முறை என உதிரத்தடம் மூலம் அறியவருபவர் சுழற்பாதையெனும் குற்ற உணர்ச்சியில் ஆட்கொள்கிறார். இங்குதான் ஆழ்மனதின் அலைச்சல்கள் மேல்மனதின் எச்சரிக்கை உணர்வை சந்திக்கிறது. தன்னை கண்டடையமுடியாதபடி தொடர்பு எண்ணின் கடைசி இரண்டு எண்களை மாற்றித் தந்து எதற்கும் பொறுப்பேற்காத மற்றொரு இழி நிலையை அடைகிறார் . காமம் கடும் புனல்; ஜுரம். காமத்தின் மறுமுனையான மரணத்தில் தஞ்சம் கொள்கிறார். செயல்வினை இட்டுச்செல்லும் முடிவிலா சுழற்சியில் மரணம் நிலை என்பது மீட்பு மட்டுமல்ல;  விடுதலையும் கூட. இந்த விடுதலையை அடையாத விவேகானந்தர் மீது கரிசனம் மட்டுமே நமக்கு உண்டாகிறது.

கலைடியாஸ்கோப் மனிதர்கள் – மனிதர்கள் ஒளிந்துகொள்ளும் பாவனைகளுக்கு அளவில்லை. அடிப்படைப் பண்புகளின் மீதான எதிர்பார்ப்பு பலமுனை கொள்ளும் காலம் இது.  நம் அடிப்படையான உணர்ச்சிகள் உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்தினால் இன்றைய விழுமியத்தின்படி மிருகமென நம்மை சொல்லிவிடக்கூடும். வேஷம் கட்டும்போது போடும் ஒப்பனைகளில் பல தற்கவசமே ஆகும். தனது அற நிலைப்பாடுகளை இதமாகத் தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்தும் முயற்சிகள் மட்டுமே.  எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் படைப்புகளில் தெரியும் சின்ன விஷயங்களின் அற்பத்தனங்களும் மனித மனதின் விளையாட்டுகளும் இந்த கதையிலும் தெரிகின்றன.வெளிப்புறத்தில் தனது கொள்கைக்காக எதையும் விடுக்கொடுக்க முடியாத முதன்மைப்பாத்திரமாகத் தெரிந்தாலும், அடிப்படையில் அவன் ஒரு சந்தர்ப்பவாதி மட்டுமே. லலிதா எனப்பெயர் வைத்தபெண் மீதான தனது எதிர்பார்ப்பு எத்தனை அதிகார துஷ்பிரயோகம் என்பதை உணர முடியாதவன் அவள் யேசுவே எனச் சொன்னதற்காக அவள் மீதான மெல்லிய ஈர்ப்பையும் துறந்து விலகுகிறான். கடவுளின் வழியை மாற்றிக்கொள்ள மனிதனுக்கு உரிமையில்லை எனும் ஒரு அசட்டுத்தனமான காரணத்தைச் சொல்லிக் கொண்டு தனது குற்ற உணர்ச்சியை மூடிக்கொள்கிறான். அடுத்தவருக்கு உதவுவது எனும் அற நிலைப்பாட்டில் தவறிழைக்காது அறியாத நபரை வண்டியில் ஏற்றிக்கொள்கிறான். ஆனால் உடனடியாக உள்ளுணர்வின் எச்சரிக்கையில் பேண்ட் பேக்கட்டில் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா எனவும் பார்த்துக்கொள்கிறான். ஒரு பாலிம்ஸெஸ்ட் அமைப்பு போல மனிதன் என்பவன் எண்ணிலடங்கா போலி பிம்பங்களால் மூடப்பட்டிருக்கிறான்.

விடுதலைக்கான குறியீடாக பறத்தலும் பறவையும் அமைந்திருப்பதைப் போல தர்க்கமற்ற மனப்போக்கின் அலைச்சல் குறித்த ஒரு சொல்லாக அந்தரமீனைச் சொல்லலாம். ஒரு நொடியில் அறுந்துவிழும்படியான மெல்லிய சமநிலையால் கட்டப்பட்ட நமது உள்ளத்தின் கனவுகள் மீதான பரிகாசம் அது. சூளைக் கற்கள் போல தனக்குள் வெந்தபடி ஒடுங்கும் இயல்பினளின் அழிவுச்சித்திரம் அந்தரமீன் கதை. அவள் விரும்பி ஏற்றதல்ல என்றாலும் தங்கமீன் எனும் கனவிலிருந்து மீள முடியாமல் தொலைந்தவள் எழ விரும்புவதும் இல்லை. ஏதோ ஒரு அன்பை எதிர்பார்த்து நிராகரிக்கப்பட்டவள் சட்டென யாரும் எதிர்பாரா வண்ணம் தனக்குள் இருந்த சூறாவளிக்குள் சிக்கிக்கொள்கிறாள். அண்ணனின் நண்பனுக்குத் திருமணம் என்றதும் ஏதோ ஒரு இழை உடைந்து முழுவதுமாக நீரில் மூழ்கியவள் ஆகிறாள். அதன் பின் அவள் மீளும் வழியில்லை. மிகவும் கனத்த திரையால் மூடப்பட்ட சீலைக்குப் பின்னால் அசங்கும் உருவங்கள் போல நல்ல பூடகமான கதை அமைப்பு.

இணைய மும்மூர்த்திகளும் பஜனை மடங்களும் எனும் கதையில் எஸ்.ரா, சாரு, ஜெயமோகன் என இன்று இணையத்தில் தொடர்ச்சியாக தாங்கள் எழுதுவதைப் பதிந்து வரும் எழுத்தாளர்களைப் பகடி செய்கிறார். இதில் ஒன்றை முக்கியமாக கவனிக்க வேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனை ஆதர்ஷமாக மானசீகமாக முன் வைக்கும் எழுத்தாளர் பகடி எனும் பெயரில் யாரையும் இழிவுபடுத்தாது எழுதியிருக்கிறார். மூவரின் எழுத்து முன்வைக்கும் அரசியலைப் பகடி செய்வதோடு மொழிக்கும் அவர்களது கருத்துக்கும் இருக்கும் தொடர்பைக்கொண்டு அலை போல புள்ளியற்ற ஒரு வரியில் முழு கதையையும் எழுதியுள்ளார்.  இது ஒரு சோதனை முயற்சி தான் என்பதை அவரது கட்டற்று எழுதிய பாவனை கொண்டு வாசகன் தெரிந்துகொள்ள முடியும் என்றாலும், இது இன்றைய தமிழ் இலக்கியத்தின் கதிபோக்கையும் விமர்சனம் செய்யும் கதையாகும். இலக்கை நிர்ணயித்துவிட்டு முதல் சொல்லை எழுதத் தொடங்கும் இன்றைய எழுத்துப்போக்கின் மீதான விமர்சனம். சமூக ஊடகங்களின் பொதுப்போக்கை மையமாகக் கொண்டு தன்முனைப்போடு எழுதும் அகலாரீதியான படைப்புகள் மீதான தனது ஏமாற்றம் என்றும் சொல்லலாம். கலை என்பது உண்மையின் உரைகல், இருப்புக்கு அர்த்தம் தேடித் தருவது – கடைசியில் உலகின் அர்த்தத்தைத் தேடி அலைந்தவனின் சென்றடையும் கல்வெட்டின் வாசகம் வெறுமையாக இருப்பதைக் கண்டு நாம் ஆச்சர்யப்படத்தேவையில்லை என நம்மைத் தயார் படுத்தும் கதையாகவும் இது இருக்கிறது.

சிலுவையின் ஏழு வார்த்தைகள் யேசு கடவுளிடம் கூறிய வார்த்தைகள். இன்றைய மனிதன் தனது கூரிய கரங்களால் பிற மனிதனை கிழிக்க முற்படும் தருணங்கள் நிறைந்த இந்த வாழ்வில் காரணம் அறியாது லெளகீக உலகில் குகை மனிதனைப் போல வாழும் ஒருவன் மிருகமாக மாறும் கதை. சுதந்திரத்தைத் தேடி அவன் சிறையை விட்டு வெளியேறிய பொழுதிலிருந்து அவன் சுற்றிலும் துரோகம், நயவஞ்சகம், குரூரம், வன்முறை, அவிசுவாசம் மற்றும் மிருகத்தனம் மட்டுமே பார்க்கிறான். இதனால் இதில் வரும்  கர்ணனிடம் சத்தியம் வாங்கிய தாயின் கதை நவீன மனிதனின் இயல்புக்கு சரித்திர போதத்தையும் தொடர்ச்சியையும் அளிக்கிறது. ஒருவிதத்தில் மனிதன் எனும் உயிரின் கீழ்முகப்பயணத்தின் வரலாறையும் இக்கதை நமக்குச் சொல்கிறது. மேலும் மேலும் கீழ்மகனாக மாறி மிருக நிலைக்குத் தள்ளிவிடும் நிகழ்வுகள் அவனைச் சுற்றி நடக்கின்றன. குறியீடுகள் நிரம்பிய இக்கதையை அலெஹாந்த்ரோ ஹொடொரோவெஸ்கிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் (அவரது புனித மலை எனும் படத்திற்கென ஊகிக்கிறேன். அதில் வரும் தத்துவம் கதைக்கு நெருக்கமானதால் இருக்கலாம்)

பெருத்த மார்புகளையுடைய ஆணின் கதையில் வரும் திருக்குமரன் ஆண்களால் கேலிப்பொருளாக்கப்படும்படியான பெருத்த மார்பை உடையவன். துரதிர்ஷ்டவசமாக பெண்களாலும் துச்சமாக மதிக்கப்படுபவனாக அம்மார்புகள் அவனை ஆக்கியிருந்தன. உண்மையில் இது ஒரு அவல நகைச்சுவைக்கான கச்சிதமான முரண். உளத்திரிபு கொண்டவனாக அவனை மாற்றியதில் வாசகருக்கு ஒருவித ஏமாற்றம் வருவது தடுக்க முடியாது. இது ஒரு கேலிக்குரிய சிடுக்காக இருந்தாலும் காலம் முழுவதும் பெண்களின் அடையாளமாக இருப்பது பொருந்தாத இடத்தில் அமையும்போது அவர்களாலேயே கூட எள்ளிநகையாடும்படியாக இருக்கிறது. இது சமூகத்தின் மீதான மிகக் கூர்மையான விமர்சனம். இதை ஒரு தனிமனித உளப்பிரச்சனையாக மட்டுமே சித்தரித்ததில் கதை குறைவுபட்டுப் போயுள்ளது என்பதே என் எண்ணம். அதையும் தாண்டிச் சென்று எந்த பாலினருடைய சுயத்தை பரிசீலணைச் செய்யும்படி தூண்டுவதற்குத் தவறிவிட்ட கதை.

பரமபதம் கதை காட்டும் சித்திரம் கன்னியாகுமரி கதையின் நீட்சியாகத் தொடர்ந்து மரணத்தை அருகில் சென்று ஆராய்கிறது. சாகக்கிடக்கும் பெரியப்பா மீது பெரிய ஈர்ப்பு இல்லாதவன் சொல்லும் கதை. ஆனால் சந்தர்ப்பவசமாக அவரது முடிவை நிர்ணயிக்கும் கழி அவனிடம் தரப்படுகிறது. அதுவரை அத்துணை நெருக்கமற்ற உறவின் ஜீவ போராட்டத்தைக் காணும்படி நிர்பந்தித்தவனுக்கு மரணம் எனும் மாயையுடன் ஒரு விளையாட்டு ஆடும் சந்தர்ப்பம் கிட்டுகிறது. அவன் எடுக்கும் முடிவினால் மட்டுமே பெரியப்பாவின் உயிர் ஊசலாடுகிறது எனும் அசட்டுத்தனமான எண்ணம் ஒரு புறம், அதே சமயம் விடப்போகும் ஒரு உயிரை இழுத்துப்பிடித்து வைக்க நாம் எந்தளவு துணிவோம் எனும் குழப்பம் மறுபக்கம் இக்கதையில் சாத்தியப்பட்டிருக்கிறது. உள்ளுணர்வு என்பது எத்தனை தூரம் ஒருவனை வழி நடத்தும்? அவனது முடிவு தவறாகிவிட்டால் இந்த ஆட்டத்தின் பயன் என்ன? தவறான முடிவுக்கு அவன் எந்தளவுக்கு சககுற்றவாளி? பிற கதைகள் போல எழுத்தாளரின் திறமையான மொழியாளுமையால் கதையின் சுவாரஸ்யம் குறையாமல் மரணத்தின் பல முகங்கள் அலசப்பட்டுள்ளன.

“போரால் சிதைக்கப்பட்ட கட்டடத்தைப் போல என் மனம் மரணத்தின் நினைவுகளில் சிக்குண்டு கிடந்தது. மரணத்தைக் காட்டிலும் அது நிகழும் விதம் என்னை மேலும் அச்சுறுத்தியது”

கார்த்திகைப்பாண்டியனின் இந்தத் தொகுப்பின் மொழி மிகக் கவனமாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது என்றாலும் இதன் புனைமொழி மிகுந்த இசைத்தன்மையோடு இருக்கிறது. மொழியை மிக அழகாக, கதைக்கு ஏற்றவாறு அவரால் கையாள முடிகிறது. நிகழ்வுகளை அகச்சித்திரங்களோடு அவர் பிணைத்திருப்பது பல இடங்களில் அற்புதமாக அமைந்துள்ளது. நல்ல கதைத் தருணங்களை மொழி ஆளுமை இல்லாது சிதைத்தபடி வெளியாகும் இன்றைய அவசர பிரசுர காலத்தில், தனது கதைமொழியை இயல்பாகவும், ஆழமாகவும் கையாளத்தெரிந்திருப்பது பாராட்டத்தக்கது. அதனாலேயே, நாடக தருணங்களும், புனைவு உச்சங்களும் இல்லாத சில படைப்புகள் கூட சட்டென கவர்ந்திழுக்கும் அழகைக்கொண்டுள்ளது எனலாம்.

கார்த்திகைப் பாண்டியனின் புனைவில் நம்மை உடனடியாகக் கவரும் அம்சங்கள் என்னென்ன? தீவிரமும் கதை சொலல் திறனும் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்து புனைவாக நம்மை வந்தடையும் பிரதி இதன் முதல் கவர்ச்சி. பொதுவாக அதிக அகமுகமாக எழுதும் எழுத்தாளர்கள் “கதை” சொல்வதில் குறை வைப்பார்கள். அதிகம் சுவாரஸ்யமான நிகழ்வுகளை எழுதும் எழுத்தாளர்களுக்கு உள்முகப்பயணம் கைவராது போகும். நம்மைச் சுற்றி இருக்கும் அவலகத்தை புனைவின் எல்லைக்குள் எழுதிவிடத் துடிக்கும் முயற்சியும் இவரது தனிப்பட்ட அடையாளமாகத் தெரிகிறது. அதன் விளைவாக எழுத்தில் அதிக விளையாட்டுகளை இவர் கைகொள்வதில்லை. அதற்கான சாத்தியங்கள் இருந்தாலும், இவரது வாழ்க்கைப்பார்வை முழுவதும் நம்மைச் சுற்றியிருக்கும் விளிம்புகளைச் சுற்றியே அமைந்திருக்கிறது. இதனாலேயே முதல் தொகுதியில் தெரியும் இவரது எழுத்து முதிர்ச்சி நமக்கு அவரது கலை தேடல் மீதான தீவிரத்தை அடையாளம் காட்டுகிறது.  அதே முதிர்ச்சி இவரது பாதகமான அம்சமாகவும் இருக்கிறது. விளையாட்டுத்தனத்துடனும் உள்ளது உள்ளபடியே தம்மைச் சுற்றி நடக்கும் அபத்தங்களை பதிவு செய்யும் வாய்ப்பை தனக்கு அளித்துக்கொள்ள மாட்டாதபடி அவரது மனம் இடைவெட்டியபடி இருக்கிறது. இதனால் தன்போக்கில் எழுதிவிடும் சில படைப்புகள் ஆசிரியர் கூட அறியாமல் சென்று சேரும் இடங்கள் இவரது கதைகளில் காணக்கிடைப்பதில்லை.

மிக நேர்த்தியான கதைகள் அடங்கியுள்ள இத்தொகுப்பு பாசாங்கற்ற மொழியில் வாசகருடன் நம்மைச் சுற்றியிருக்கும் அவல நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறது. பல கதைகளில் சோதனை முயற்சியின் தீவிரம் தெரிந்தாலும் எவ்விதத்தில் அது வாசகரை வெளியே தள்ளி நிற்கச் செய்வதில்லை. பெயர் சொல்ல விரும்பாத பல பின்நவீனத்துவ படைப்புகளால் ஏற்பட்ட அனுபவத்திலிருந்து இத்தொகுப்பு எனக்கு பெரிய விடுதலையை அளித்தது என்றே சொல்ல வேண்டும். நவீன எழுத்தாளன் முன் நிற்கும் சவால்கள் சில உண்டு. நிகழ்வுகளின் தீவிரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஒரு மெய்நிகர் உலகை வாசகருக்காக உருவாக்கும் அதே சமயத்தில் அடிப்படை மானுட உணர்ச்சிகளின் வாசத்தைத் தொடரும் மோப்ப நாயாக வாசகனை மாற்றுவது மிகப் பெரிய சவால். சமீப காலமாக நண்பர்களுடன் நடந்த உரையாடலில் அண்மைக்காலக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுநிலையில் வாசகனை ஒன்ற வைக்காது தள்ளித் துறத்துவதை ஏமாற்றத்தோடு பகிர்ந்து கொண்ட போது கார்த்திகைப்பாண்டியனின் தொகுப்பிலிருந்து அதற்கு நேர்மாறான உதாரணங்களை அளிக்க முடிந்தது பெரும் ஆசுவாசத்தைத் தந்தது.  இத்தொகுப்பைப் படிக்கும்போது அவர் திடமாக தன் முதல் தடத்தை வைத்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து தனக்கு இட்டபாதையில் அவரால் முன் செல்ல முடியும் என்பதற்கான முதல் தடம் இது.

மரநிறப்பட்டாம்பூச்சிகள்
எதிர் வெளியீடு, 2015
இணையத்தில் வாங்க :- https://www.udumalai.com/mara-nirap-pattampoochi.htm

Series Navigation<< ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்குரணங்கள்: ஃ பிர்தவுஸ்  ராஜகுமாரன் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.