ஜனநாயகத்தின் வழிகள்

இன்று தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலம். 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் 20,450 கண்டன ஆர்ப்பாட்டங்களும் அடுத்தபடியாக பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் முறையே 13,059 மற்றும் 10,477 ஆர்ப்பாட்டங்களும் நடந்ததாக தி ஹிந்து தெரிவிக்கிறது-. இவற்றில் கணிசமான அளவிலான போராட்டங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்தே இங்கு நடத்தப்படுகின்றன. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்களை கேட்காமலேயே திட்டங்களை அமல்படுத்திடுகின்றன என்றும், அவை தமிழக நலன்களுக்கு எதிரானவை என்றும் ஒரு பார்வை வலுப்பெற்று வருவதாகவும் தோன்றுகிறது. உதாரணமாக, இப்போது எட்டுவழிச் சாலை, கோவையின் குடிநீர் விநியோகம் தனியார்ப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல், மக்களுக்கே தெரியாமல் கொண்டு வரப்படுகின்றன என்றும், இதற்கு முன்கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் குழாய்கள் பதிக்கும் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத் திட்டம், நீட் நுழைவுத் தேர்வு முதலிய பிற திட்டங்களும் அப்படிப்பட்டவையே என்றும் கருதப்படுகின்றன. ஆனால், பின்னால் சொன்ன அத்தனை திட்டங்களுக்கும் அன்று ஆளும் மத்திய அரசில் அங்கமாயிருந்த அன்றைய தமிழக ஆளும் கட்சியான திமுகவின் முழு அறிதலோடுதான் முடிவாயின என்பதும் அப்போது ஆதரித்துவிட்டு இப்போது அவர்கள் அதை எதிர்க்கிறார்கள்,என்பதும் வேறு விஷயம்.. இன்றைய அரசியலில் இது சகஜம்தான் என்றாகிவிட்டது. இதில், மக்களைக் கேட்காமல், மக்கள் சம்மதம் இல்லாமல், திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்ற அரசுகளுக்கு இந்த ஜனநாயக யுகத்தில் அதிகாரம் உண்டா என்பதே விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி.
அதைச் சற்று விரிவாக பார்க்கலாம். உண்மையில் மக்களைக் கேட்காமல், மக்களுக்கே தெரியாமல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சரியா, அப்படித்தான் நடக்கிறதா, நடக்க வேண்டுமா என்றும் சற்று பேசலாம்.
ஒரு அரசின் திட்டங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
முதல் வகை: ஒரு நீண்ட நாள் மக்கள் கோரிக்கை, அரசியல் கட்சிகளால் ஏற்கப்பட்டு, தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, அதில் ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், திட்டமாக மாறி, அமல்படுத்தப்படுவது. உதாரணமாக, இப்போது அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கும் அத்திக்கடவு-அவிநாசி குடிநீர்த் திட்டம் போன்றவை. இவை கொள்கையளவில் எதிர்ப்பைச் சந்திப்பதில்லை. நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில், சில பிரச்னைகளையும் எதிர்ப்புகளையும் சந்திக்கின்றன.
இரண்டாம் வகை: ஒரு அரசு, தானாகவே, இந்த சமயத்தில் மக்களுக்கு, நாட்டுக்கு, இதைச் செய்வது பயனளிக்கும் என்று எண்ணி, திட்டமிட்டு செயல்படுத்தும் திட்டங்கள்.. இவற்றிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று, மக்கள் நலத் திட்டங்கள்- மதிய உணவு (சத்துணவு) திட்டம்,, இலவச சைக்கிள்,பாடப்புத்தகங்கள், கணினி தாலிக்குத் தங்கம், காலணி வழங்கும் திட்டங்கள் போன்றவை. இரண்டாவது, உள்கட்டமைப்பு முன்னேற்றம் சம்பந்தப்பட்டவை. இந்த இரண்டு வகைகளுக்கும் பொதுவான அம்சம், இவை பெரும்பாலும், மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளாக இருப்பதில்லை என்பதே. சத்துணவு திட்டத்தை எடுத்துக் கொள்வோம். அதன் துவக்கத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காணலாம். பின் தமிழகத்தில் காமராஜர், ஒரு சுற்றுப்பயணத்தின்போது ஒரு ஏழைத் தாயிடம், “உங்க பிள்ளையை ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை?” என்று கேட்டு, “சோறில்லை,” என்ற பதிலால் தூண்டப்பட்டு, “சோறு போட்டா அனுப்புவியா?” என்று கேட்ட கணத்தில் மதிய உணவு திட்டம் உதயமானது என்று சொல்லப்படுகிறது. இது கதையாகவே இருந்தாலும், அதில்கூட,அந்தத் தாய் பள்ளியில் சோறு போடுங்கள் என்று கேட்கவில்லை என்பதைப் பார்க்க வேண்டும். பெரும்பாலும், இவ்வகை திட்டங்கள் மக்களால் வரவேற்கப்படுகின்றன என்பதையும் எதிர்க்கப்படுவதில்லை என்பதையும் பார்க்கலாம். இங்கே, “மக்களிடம் கேட்காமல், மக்களுக்குத் தெரியாமல், ஏன் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தாய்?” என்று யாரும் கேட்பதில்லை. மேலும், எம்ஜியார் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தபோது எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி இது ஒரு பிச்சைக்காரத் திட்டம் என்றார். பின், தான் ஆட்சிக்கு வந்ததும், சத்துணவில், முட்டையைச் சேர்த்தார். இம்மாதிரியான திட்டங்கள்,தோலை நோக்கில்,வறுமை ஒழிப்பில்,குறிப்பிடத்தகுந்த பங்காற்றினாலும்,தேர்தலில் வாக்கு அறுவடைக்கு பயன்படுகின்றன என்பதும்  உண்மை.
இரண்டாவது வகை திட்டங்கள் உடனடியாக பலன் தராதவை, நீண்ட கால நோக்கில் பலன் தரலாம் என்ற எண்ணத்தில் இன்று எடுக்கப்படுபவை. அவற்றின் சாதகமான பலன்கள் இப்போது உடனடியாக தெரிவதில்லை. ஆனால், அவற்றின் பாதகமான பலன்கள் உடனடியாக தெரிகின்றன. அதனால், அவை உடனடியாக எதிர்க்கப்படுகின்றன. “யாரிடம் கேட்டார்கள்? மக்களைக் கேட்டார்களா?” என்ற கேள்விகள் எழுகின்றன. இங்கே மக்கள் என்பது யார்? ஒரு திட்டத்தை இந்த நாட்டின் / மாநிலத்தின் மொத்த மக்களிடம் சென்று கருத்து கேட்டு அறிந்து அதன் பிறகே செயல்படுத்துவது என்பது முடிகிற காரியமா? ஒரு திட்டத்தால் யார் பாதிப்படைவார்களோ அவர்களை நேரடியாகக் கண்டு விளக்க வேண்டும். அது சாத்தியம், அதிலும் நூற்றுக்கு நூறு சதவீத சாத்தியமில்லை. அதனால், திட்டங்கள் மக்களால் முடிவு செய்யப்படுவதில்லை, மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள், என்ற குரல்கள் இங்கே, இப்போது உரத்து ஒலிக்கின்றன.

இந்த இடத்தில்தான் நாம் நம் ஜனநாயகத்தின் தன்மை என்ன என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நமது ஜனநாயகம் பிரதிநிதித்துவ ஜனநாயகம் (Representative Democracy). இந்த வகைமையில், மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் அனுப்புகிறார்கள். மக்களுக்கான முடிவுகளை இந்தப் பிரதிநிதிகள் எடுக்கிறார்கள். எனவே இந்தப் பிரதிநிதிகள், அதாவது, பெரும்பான்மை பெற்றுவிட்ட ஒரு அரசாங்கத்தின் அங்கமான இந்த மக்கள் பிரதிநிதிகள், அவர்கள் தேர்ந்தெடுத்த அமைச்சரவை, எடுக்கும் முடிவுகள் மக்களின் முடிவு என்றுதான் நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுதான் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் சாரம், நடைமுறை. ஒவ்வொரு முடிவையும், இங்கு எல்லா மக்களையும் கலந்தாலோசித்து செய்ய முடியாது. மக்கள் சார்பாக, மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் முடிவைச் செயல்படுத்த, அந்த பெரும்பான்மை பலம் பொருந்திய அரசுக்கு ஒப்புதல் (Mandate) அளிக்கப்பட்டிருக்கிறது. அது எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதாகவோ, பெரும்பான்மை மக்களின் ஒப்புதல் பெற்றதாகவோ இருக்க முடியாது என்ற நிலையும் இருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் இருக்கக்கூடிய நடைமுறையில் (‘First past the pole’ system) பதிவான வாக்குகளில், அதிக வாக்குக்கள் பெற்று , பாதிக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்ற கட்சிதான் ஆட்சி அமைக்கிறதே தவிர, பதிவாகும் வாக்குகளில் பாதிக்கும் அதிகமான சதவீதத்துக்கு மேல் பெற்ற கட்சி, அரசு அமைப்பதில்லை. எனவே, நடைமுறையில் 50.1%  என்பது 49.9%-ஐவிடபல மடங்குகள் அதிகமாகி, முழு அதிகாரமும் 50.1% சதவீதம் பெற்ற கட்சியிடமே குவிந்துவிடுகிறது. 49.9% சதவீத வாக்குகள் பெற்ற கட்சிக்கு எந்த அதிகாரமும் இருப்பதில்லை. இதுதான் பிரிதிநிதித்துவ ஜனநாயகத்தின் குறை.
மேலும், கட்சி அரசியலும் இங்கே பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர், குறிப்பிட்ட தொகுதியில் ஒரு கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அதில் வென்று மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டதும் அவர் ஒரு இரட்டை நிலையை அடைகிறார். அவர் அந்தத் தொகுதி மக்களின் பிரதிநிதி. கூடவே அவர் சார்ந்த கட்சியின் பிரதிநிதியும்கூட. அவர் தொகுதியில், ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்போது, அதற்காக மக்களின் நிலங்கள்  அரசுக்கு தேவையாயிருந்தால், அதை அரசு கையகப்படுத்துவதை மக்கள் எதிர்த்தால் அவர் யார் பக்கம் பேசுவது? இங்கே இப்போது அவர் அரசு, கட்சி, அந்தத் தொகுதியின் மக்கள், இவர்களில் யாருடைய பிரதிநிதி?மிகப்பெரும்பாலும், அவர் தன் கட்சி மற்றும் அரசின் பிரதிநிதியாகத்தான் ஆகிறார். அவர், மக்களின் உணர்வுகளை மதித்து அரசின் திட்டத்தை எதிர்த்தால், அந்த அரசில், கட்சியில், தொடர முடியாது. எனவே கட்சியின் கட்டளையை மீறி, கட்சியிலிருந்து வெளிவந்து, மக்களோடு நின்று போராடுவோம் என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தன் மக்கள் பிரதிநிதி பதவியை கட்சித் தாவல் தடை சட்டத்தின் மூலம் இழக்க வேண்டும். இங்கேதான், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் போதாமை வெளிப்படுகிறது. இதற்கு இந்த அமைப்பில் உடனடியாக பரிகாரம் ஏதுமில்லை. இந்திய ஜனநாயக அமைப்பில், referendum எனும் ஒரு குறிப்பிட்ட பிரச்னையைமட்டும் முன்வைத்து, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கருத்துக் கணிப்பு நிகழ்த்த சட்டத்தில் இடமில்லை (இதே பிரதிநிதித்துவ ஜனநாயகம் நிலவும் இங்கிலாந்தில் ப்ரெக்ஸிட் குறித்த ரெஃபரண்டம் நடந்தது. ஆனால், அங்கும்கூட 72.2 சதவிகிதத்தினர் பங்கேற்ற வாக்கெடுப்பில், அவர்களில் கிட்டத்தட்ட 52% ஆதரவாகவும், பாதிக்கும் சற்று கீழே, கிட்டத்தட்ட 48% எதிர்த்தும் வாக்களித்த காரணத்தால் ப்ரெக்ஸிட் முடிவு கடும் எதிர்ப்புகளை இன்றும் சந்திக்கிறது, இங்கிலாந்து அரசு இந்த விஷயத்தில் செயல்படாத அரசு என்ற நிலையை எட்டிவிட்டது).
இதற்கு மாற்றாக, Direct Democracy எனப்படும், நேரடி ஜனநாயகம் அல்லது மக்கள் ஜனநாயகம் என்ற ஒன்று முன்வைக்கப்படுகிறது. முக்கியமாக, தீவிர இடதுசாரிக் குழுக்கள், இதைத்தான் தம் திட்டமாக முன்வைக்கிறார்கள். ஆனால் இதுவரை இது ஒரு வலுவான தரப்பாக இந்தியாவில் திரண்டு வரவில்லை. உலகில் எந்த நாட்டிலும் இது முழுமையாக நடைமுறையில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால், நேரடி அல்லது மக்கள் ஜனநாயகத்தின் சில அம்சங்களான, referendum, பிரதிநிதிகளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை, ஆகியவை  பிரதிநிதித்துவ ஜனநாயகத்துக்குள்ளும் ஏற்கப்பட்டு சில நாடுகளில் (பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து) அமலில் உள்ளது. இந்தியாவிலும் அதை நாம் ஆராய்ந்து பொருத்தமானதை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆட்சியாளர்களின் மீது மிகுந்த ஐயப்பாடுகளும் நம்பிக்கையின்மையும் அதிகமாகியிருக்கும் இந்தச் சூழலில், புதியதான ஒரு ஆளும் முறையை நாம் கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது. அது வரை, அரசாங்கம் கொண்டுவரும் இரண்டாம் வகை திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு அதீத பொறுமையும் ஆற்றலும் தேவைப்படுகிறது. மிக முக்கியமாக, நம்பகத்தன்மை தேவைப்படுகிறது.அண்மையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை,அரசு எதிர்கொண்ட விதம்,மிகக்  கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதையும், அதில் 13 விலைமதிக்க முடியாத உயிர்கள் பலியானதையும், இங்கு நினைவு கூரலாம்.இம்மாதிரியான சூழல்கள் உருவாகாமல் தடுப்பதே அரசின் முதற் கடமையாக இருக்க வேண்டும்,என எதிர்பார்க்கலாம்.தமிழகத்தில் இன்று நாம் பெருமையுடன் சாதனைகளாக நினைத்துக் கொள்ளும் மேட்டூர், பவானிசாகர், சாத்தனுர், பரம்பிக்குளம்-ஆழியார், வைகை, போன்ற அணைக்கட்டுகள் எல்லாமே ஏராளமான இயற்கை வளங்களை அழித்தும், மக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றியும் கட்டப்பட்டவைதாம். ஏராளமான கிராமங்களே அணைக்கட்டுகளின் நீர்ப்பரப்புகளில் முழுகிப் போயிருக்கின்றன. அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த அணைகளின்  கட்டுமானத்தின்போதோ அதன் பிறகோகூட, குடிபெயர்ப்புக்கு ஆளான மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எதுவும் வரவில்லை என்றே தெரிகிறது. ஆனால், அண்மைக் காலத்தில், உத்தரகாந்தின், தேரி அணைக்கட்டு, குஜராத்தின் நர்மதா அணைக்கட்டுகள் விஷயங்களில், எதிர்ப்பும் மிகக் கடுமையாக இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா திட்டங்களும் மிகக் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, திட்டங்களைப் பற்றிய புரிதல்களை விட, அரசின் மீதான நம்பிக்கையின்மைதான் பெரும் காரணமாக எனக்குத் தோன்றுகிறது.
அது ஒருபுறமிருக்க, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் ஏற்படும் இம்மாதிரியான சிக்கல்களை, அதாவது, முக்கியமான கொள்கை முடிவுகளில் மக்களுக்கு இருக்கும் குறைந்த பங்கினை, நிவர்த்தி செய்ய வழி வகைகளைக் காண்பதே நம் ஜனநாயகம் இன்னும் சிறப்பாக செயல்பட வழி வகுக்கும். நம்முன் நிற்கும் பெரும் சவால் அதுவே. ஆனால், வழக்கம் போலவே, எளிதான வழிகள் ஒன்றும் உடனடியாக புலப்படவில்லை.

2 Replies to “ஜனநாயகத்தின் வழிகள்”

  1. மத்திய அரசு தனது பல திட்டங்கள்/கொள்கைகள் குறித்து (எடுத்துக்காட்டாக புதிய கல்விக் கொள்கை) அதன் வரைவை இணையதளத்தில் வெளியிட்டுக் கருத்துக் கேட்கிறது. பிரதிநித்துவ ஜனநாயகத்தின் அடுத்த கட்டத்திற்கு இந்தியா ஏற்கனவே நகர்ந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.