கொல்வதற்கு உரிமம்

“கோட்,” அவர் சொன்னார். “அதில்லை, ப்ளீஸ், சிவப்பாயிருக்கே அது.”
அந்த இளம் பெண் சிவப்பு மேலங்கியை எடுத்தாள், அதோடு அங்கே நின்றாள்.
“ப்ளீஸ், ஸ்கார்ஃபும். சாம்பல் நிற ஸ்கார்ஃப்.”
“சாமான் பட்டியல்!” என்றாள் அந்தப் பெண். முந்திக் கொண்டு சொன்னதில், கொஞ்சம் வெற்றி பெற்றவளாக.
“வெண்ணை வேணும்னு எழுது. நான் மறந்துட்டேன். அப்புறம் மேஜை துடைக்கிற துணிகள் வேணும்.” அவர் எண்பத்தி ஆறு வயதான மூதாட்டி, நிறைய மறக்கிறார். புத்தி சல்லடை போல இருக்கிறது, சிலது தங்குகின்றன, மற்றதெல்லாம் நிற்பதில்லை.
இளம்பெண் எழுதினாள். அதோடு மீசையுள்ள பூனை ஒன்றை, பின் புறத்திலிருந்து பார்ப்பது போல வரைந்தாள். மேலும் ஒரு ஸ்மைலியயும். அவளுக்கு பதினெட்டு வயது. அந்த ஆஸி ஷாம்பூவை பயன்படுத்திப் பார்க்கலாமா. வார இறுதியில் ஆக்ஸ்ஃபோர்ட் தெருவுக்கு2 லிண்டியோடு போகலாமா.
அவர்கள் முன் வாசல் வழியே வெளியேறினார்கள். கேலி சொன்னாள், ‘மோர்டிஸ் பூட்டை நான் பூட்டட்டுமா, பொலைன்?’
“ஆ- செய்.” அந்த நிறுவனம், அவரிடம் கேட்டிருந்தது, அவர் தன்னை மிஸ் என்று அழைப்பதை ஒருக்கால் விரும்புவாரோ. அவர் இல்லை என்று சொல்லியிருந்தார். இப்போதெல்லாம், மருத்துவ மனைகளும் அப்படி அழைப்பதில்லை என்பதை கவனித்திருப்போமே. இப்படியுமில்லை, அப்படியுமில்லை, அவரைப் பொறுத்தவரை, நாம் யாரென்பதை அவர்கள் அறிந்திருந்தால் அது போதும்.
படிக்கட்டுகளில் மெதுவாகவும், கவனமாகவும், அவருக்காக. கேலி கடைசி மூன்று படிகளைத் தாண்டிக் குதித்தாள், கீழே நின்று தன் அலைபேசியைச் சோதித்தாள், வேலை பார்க்கும்போது அவள் அப்படிச் செய்யக் கூடாதென்பதை நினைவு கூர்ந்தாள், பைக்குள் அதைத் திணித்துக் கொண்டாள். அவள் கேட்டாள், ‘மார்க்ஸ் (கடையில்) சாமான்கள் வாங்கும்போது, நாம் ஒரு காஃபி குடிக்கப் போகிறோமா?’
பொலைன் யோசித்தார். காஃபி, …இந்த சாமான் வாங்கும் வேலை முடியுமுன் ஒரு தடவை லூவிற்கும் (கழிப்பறை) போக வேண்டி இருக்கும். அப்புறம் வங்கி, மேலும் ’பூட்ஸ்’ (மருந்துக் கடை) போகணும்.
‘ம்ம்ன்.. பார்ப்போமே.”  தினமும் திட்டம் போட வேண்டி இருக்கிறது. கீழே குப்புற விழுந்த நிலை. வாழ்வை அளந்து பார்க்க வேண்டி இருக்கிறது… காஃபி கரண்டிகளால் இல்லை- மாத்திரைகளால். அவற்றை காலைச் சிற்றுண்டியோடு, மதிய உணவோடு, பிறகு இரவுச் சாப்பாட்டோடு வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மச்சகன்னிகளாவது, மலர்ந்திருக்கிற லைலாக் புதர்களாவது? அந்த இளைஞனுக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை. அவனுக்கு என்ன வயதிருந்திருக்கும் அப்போது, இருபதுகளில் இருந்தானா?3 இப்போது எல்லாம் மாத்திரைகள்தான், நான் அறுவை சிகிச்சைத் தலத்துக்கு தொலைபேசியில் பேசி விட்டேனா, எரிவாயுக்குக் கட்டணத்தைக் கட்டினேனா, என்னிடம் வங்கிச் செலவு அட்டை இருக்கிறதா?
வச்சிருக்கேனா?
அவர் தன் பைக்குள் துழாவினார். ஆ- இங்கே இருக்கு. நான் ஒரு பீச் பழம் சாப்பிடட்டுமா?
“பீச் பழங்கள்,” அவர் கேலியிடம் சொன்னார். “பட்டியலில் அதையும் போடு.”
“அதெல்லாம் பழுக்கறதே இல்லைன்னு சொன்னீங்களே, போன தடவை.”
“நான் விடாம வச்சிருந்து பார்க்கறேன். துணியணும். இன்னக்கி காஃபி கூடக் குடிக்கலாம் போல இருக்கு.”
வங்கியில், பணம் கொடுக்கிற எந்திரத்தில் கேலிதான் கணக்கு எண்ணை அவருக்காகப் பதிய வேண்டி இருந்தது. அந்தத் திரையைப் பார்ப்பது சுலபமாக இல்லை, இப்போதெல்லாம்.
கேலி சொன்னாள், “வங்கிக்காரர் என்னை முறைக்கிறார். உங்களோட சங்கேத எண்ணை நான் போடறதால, ஏதோ தில்லுமுல்லு செய்யறேன்னு நினைக்கிறார் போல இருக்கு.”
“நான் அவரைப் பார்த்து சிரிச்சு வைக்கிறதுதான் தேவலை. இப்ப பாரு, அவருக்கு சுவாரசியம் இல்லாமப் போயிடுத்து. என்னை யாரும் கட்டாயப்படுத்தல்லைன்னு புரிஞ்சிருக்கும்.”
“யோசிக்க வேணாமா,” என்றாள் கேலி. “ஒர்த்தரோட வங்கி அட்டையைத் திருடிக்கிட்டு அவங்களை வங்கிக்கு இழுத்துக்கிட்டும் போனா, அவங்க சும்மா நின்னுகிட்டு பார்த்துகிட்டா இருப்பாங்க.”
“ஒருவேளை  அவங்களுக்குப் புத்தி குழம்பியிருந்தா அப்படி இருக்கலாமில்லையா, அவர் அப்படித்தான் யோசிச்சிருக்கணும்.”
“மூணு இருபதுகளும், ரெண்டு பத்துகளும். அதை எல்லாம் பர்ஸில வச்சிருக்கேன். அட்டையையும் வச்சிருக்கேன். இங்க இருக்கு. … அடுத்தது என்ன பூட்ஸா?”
அவர் மருந்துக்கான சீட்டை எல்லாம் பார்க்கையில நான் ஷாம்பூக்களை எல்லாம் பார்க்கலாம், அவர் கண்டுக்க மாட்டார். இந்த வேலைல அதுதான் – ஏதோ, அப்பப்ப சும்மா இருக்க முடியும். சுலபமாவும் இருக்கும், ஒண்ணும் செய்யாம இருக்க நேரம் கிடைக்கும், அதுவும் இந்த பொலைன் சௌகரியமானவர், ப்ரன்ஸ்விக் தோட்டத் தெருவுல இருக்கறவர் மாதிரி இல்லை – இதைப் பண்ணு, அதைப் பண்ணுன்னு, அந்த ஆளு ஒரு தடவை கூட தேங்க்ஸ்னு சொல்றதும் இல்லை. தொண்ணூத்தி அஞ்சு வயசு, அவருக்கு. ஒரு ஆளுக்கு தொண்ணூத்தி அஞ்சு வயசுக்கு எப்படி இருக்க முடியறது?
அவர்கள் பொலைனுக்கு ஒரு நாற்காலியைப் பிடித்தார்கள், மருந்துச் சீட்டு வாங்கிக் கொள்ளும் இடத்தருகே.
“சரி – நீ போய் நோட்டம் விட்டுட்டு வா. நான் இங்கே கொஞ்ச நேரம் இருக்க வேண்டி வரும்னு தெரியறது.”
இப்ப நேரம்ங்கிறது சாரமே இல்லை. அது மூட்டையாக் கிடக்கு, தூக்கிப் போடக் கூடியது, அதைச் சேமிக்க வேண்டாம், இதுக்கு அதுக்குன்னு திட்டம் போட்டுப் பிரிக்க வேண்டாம். சொல்லப் போனா, அது சட்டத்துல ஒரு சொல் கூட, இல்லியா. சாரத்துலே -ங்கறது. ஒப்பந்தங்கள்ல வரும். வாழ்க்கைல சட்டத்தோட சம்பந்தப்படாத இடத்துல, அந்த வார்த்தையை நாம முக்கியமில்லை, நெருக்கடி இல்லைங்கற மாதிரி உபயோகிக்கிறோம்.
நான் ரொம்ப அவசரப்பட்டிருக்கேன், அவர் நினைத்தார். நான் அவசரப்படுத்தப்பட்டிருக்கேன். இப்ப, நான் அவசரப்படறதே இல்லை. நாட்களெல்லாம் விஸ்தாரமா இருக்கு, ஓய்வா கழிச்சு முடிக்கிற மாதிரி. சிகரெட்டோட கடைசித் துணுக்கு மாதிரி, என் வாழ்க்கையில இது. ஓ, இதென்னது, அதையெல்லாம் பத்தி யோசிச்சது போதும். புத்தியில தேங்கிக் கிடக்கிறது எல்லாம் – அதை எல்லாம் எப்பவோ வாசிச்சுத் தீர்த்தாச்சு. எப்படிக் குவிஞ்சு போயிருக்கு, ஆச்சரியம்தான். நாம என்ன செய்தோம்ங்கிறது நமக்கு அப்படி ஒண்ணும் தெளிவா தெரியறது இல்லை. எடுத்தோம் பிடிச்சோம்னு ஏதோ தாறுமாறாச் சேர்ந்திருக்கு.
மாத்திரைகள் வந்தன. ஒரு பை நிறைய. சாப்பாட்டுக்கு முன்னால எடுத்துக்க வேண்டியவை, அப்புறம் சாப்பிட வேண்டியவை, சாப்பாட்டோட சேர்த்து எடுத்துக்க வேண்டியவை. மருந்துக் கடைக்காரர் அந்தக் கலவையைச் சோதித்தார். “இதெல்லாம் உங்களுக்குப் பழக்கமானதுன்னு நினைக்கிறேன், சரிதானா?”
“சலிச்சுப் போற அளவுக்குப் பழகினதுதான்.”
அந்த ஃபார்மஸிக்காரர் இளம் பெண், ஆசியர், அழகு. மென்மையான சிறு கைகள் அந்தப் பையை மூடின, பொலைனிடம் கொடுத்தன. அருமையான புன்சிரிப்பு.
“நன்றி.”
அறிவியலில் முதல் வகுப்பாயிருக்கும். பட்டமும் வாங்கியிருப்பாள்னு நினைக்கிறேன். உலகத்துக்கு ஃபார்மஸிக்காரர்கள் எப்பவுமே தேவையாயிருக்கும். புத்தியுள்ள பெண். என்னை மாதிரி ஆட்கள் பெருகி வர்ற காலம் இப்ப, மருந்துக் கடைக்காரர்களுக்கு மேலும் மேலும் தேவை பெருகத்தான் போறது. மாத்திரைகளைக் கொடுப்பதோ, இல்லை தயாரிப்பதோ- அது பெரிய வியாபாரமாகப் போகிறது, இறங்க வேண்டிய துறை.
கேலி திரும்பி விட்டாள், ஒரு பூட்ஸ் கடைப் பையோடு.
“பிடிச்சிருந்ததா?” பொலைன் கேட்டார்.
“நா ஒரு புது ஷாம்பூவை சோதிக்கப் போறேன்.” அதோட கருப்பு நகச் சாயமும், ஆனால் அவர் அதை விரும்ப மாட்டார்.
மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் கடைதான் ரொம்பவே சவாலாக இருந்தது. பொலைனின் மளிகை சாமான்கள். அவர்கள் ஒவ்வொரு அடுக்கு வரிசைகளாகத் தேடிப் போனார்கள். மெதுவாகத்தான் போயிற்று. பொலைன் பொருள் வாங்குவதில் தேர்ச்சியுள்ளவர். அவர் உற்றுப் பார்ப்பார், யோசிப்பார்.
கேலி கை வண்டியைத் தள்ளிக் கொண்டு போனாள். தலைக்குள்ளே மிதந்து அலைந்தாள், இதர ஜனங்களைப் பார்த்தபடி இருந்தாள், அலைபேசியைத் தேடி எடுத்தாள், நினைவு கூர்ந்து, திருப்பி வைத்து விட்டாள். அவளுக்கு லிண்டிக்கும், அம்மாவுக்கும் டெக்ஸ்ட் செய்தி அனுப்பணும் போல இருந்தது- அதெல்லாம் காத்திருக்கட்டும். அருமை- அந்தப் பெண்ணின் மேல் அங்கி. ஜாராவா?4 கோரம், அந்தப் பயலோட மூக்கு ஒழுகறது. எனக்குக் குழந்தைகள் பிறந்தால்…
கற்பனை கூட செய்ய முடியாத அந்தக் குழந்தைகளைப் பற்றி அவள் சிறிது நேரமே யோசித்தாள். ரொம்ப தூரத்தில் இருக்கிறது அதெல்லாம். குறைஞ்சது எங்கேயோ இருக்கு, இப்போதைக்கு யோசிக்க அவசியமொண்ணும் இல்லை.
சனிக்கிழமை ராத்திரி? எதுவும் இன்னும் ஏற்பாடாகல்லை. லிண்டியோடவா? இல்லை அந்த டானோடவா? அவர்கள் காய்கறிகள் பகுதிக்கு வந்திருந்தனர். “இந்த பீன்ஸ் எங்கேயிருந்து வந்தது?” பொலைன் கேட்டார்.
“கென்யா.”
“ஆ, நிறைய கரிப்பொருள் அடிச்சுவடு உள்ளது. இருந்தாலும், எனக்குக் கொஞ்சம் வேணும்.”
கென்யா. மொம்பாஸாவில் ஒரு காலத்தில் கொஞ்சம் தொல்லை ஏற்பட்டது ஒருத்திக்கு. தெரிஞ்ச தந்திரத்தை எல்லாம் பயன்படுத்த வேண்டி வந்தது. அவனை இப்பவும் எனக்குத் தெரியும்- முகத்தை. பெயரையும்தான். ஆனால் போன வாரம் பார்த்த அந்தப் பெண்ணை எனக்கு அடையாளம் தெரிய மாட்டேனென்கிறது. “கடுகுக் கூழ் வேணும்,” அவர் கேலியிடம் சொன்னார். “நான் அதை மறந்து போய்ட்டேன்.”
“ஓ.கே. நாம அங்கே போகலாம். உங்களுக்கு இன்னும் உருளைக்கிழங்கு, சாலட் எல்லாம் வாங்கணும்.”
“சரி. நாம காஃபி குடிக்கறச்சே நீ ஃபோன்ல செய்ய வேண்டியதைச் செய்துக்கலாம். எனக்கு அது பிரச்சினை இல்ல.”
“ஓ,” கேலி சொன்னாள். “அது தேவை இல்லை. நான்..”
“உனக்கு அதைச் செய்யணும்னு இருக்கு, நான் கவனிச்சேன், பொண்ணே!” பொலைன் சொன்னாள். “டீ இடைவேளை வரப் போகிறது.”
சங்கடப்பட்டுப் போன கேலி, லெட்டுஸ் இலைகள் மீது கவனிப்போடு இருந்தாள். நிறைய வகை லெட்டுஸ்கள்.
“உங்களுக்கு இளசான இலைகளோட கலவை வேணுமா?”
“வேணாம். அந்தச் சின்ன அருமைகளை வாங்கலாம். அபத்தமான பெயர். சின்ன லெட்டுஸ்கள்தான் அதெல்லாம்.”
“என் அப்பா அதையெல்லாம் பயிரிடறார்னு நினைக்கறேன். தோட்டம் போடறது அவரோட பொழுதுபோக்கு. அவருக்கு உதவறத்துக்கு எனக்குப் பிடிச்சிருந்தது, இப்பல்லாம் எனக்கு அது பிடிக்கலை. புழுக்களும் மத்ததும்.. எனக்கு வீட்டுக்கு உள்ளே இருக்கத்தான் பிடிக்கறது.”
“அப்ப நீண்ட நாள் திட்டமா மனசுல என்ன வச்சிருக்கே? இப்படி முடிவே இல்லாமக் கிழவிகள் சொல்றத்தைக் கேட்டு ஆடிக்கிட்டே இருக்கப் போறதில்லை, இல்லையா?”
“ஓ, இல்லே,” கேலி சொன்னாள். “நான் என்ன சொல்றேன்னா… சரி, எனக்கு இது பிடிச்சிருக்குன்னு சொல்றேன். நிசம்மாதான். ஆனா…”
“ஆனா, எந்த வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காம. ரொம்ப சரி.”
அவள் வயசுல நான் இருந்த போது, பொலைன் நினைத்தாள், இருக்கற தேர்வுகளெல்லாம் குழப்படியா இருந்தன. ஆனால், அவை எப்போதுமே அப்படித்தான் இருக்கின்றன. யார் இளைஞர்களாக இருப்பார்கள்? எல்லாம் திறந்து கிடக்கும், அப்படின்னா எதெல்லாம் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ அதெல்லாம் ஒதுக்கப்பட்டிருக்கும். குப்பையில் போடப்பட்டிருக்கும். நான் குப்பையில் போட்ட வேலைகள், போலிஸ்காரி, வீட்டு அலங்கார அமைப்பாளி, வீடு வியாபாரத் தரகர், உயர்நீதி மன்ற நீதிபதி, உள்நாட்டு விவகார அமைச்சர்.
“நர்ஸ் ஆகலாமா என்று நான் கொஞ்சம் யோசிக்கிறேன்.” என்றாள் கேலி.
“கொஞ்சம்தானா?”
“எனக்கு ரத்தத்தைப் பற்றி உறுதியாகத் தெரியவில்லை. அதை நான் அத்தனை நல்லபடியாகக் கையாண்டதில்லை.”
“நாளாவட்டத்தில் உனக்கு அது பழகிப் போயுடும்னு என் கற்பனை சொல்றது,” என்றாள் பொலைன். “ஆனாக்க, சந்தேகம் இருக்குன்னா, ஒருவேளை வேறெதையாவது பார்க்கலாம்.”
“எனக்குச் சமைக்கப் பிடிக்கும். என் அம்மா ஒரு வேளை கேடரிங் படிப்புல இறங்கலாம்னு சொல்றாங்க. நகரமும், கூட்டுறவுச் சங்கங்களும் நடத்தற வகுப்புகள் இருக்கு.5 அதுல விருந்துபசாரமும், சாப்பாடு தயாரிப்பும் சேர்ந்த படிப்பு.”
“நல்ல யோசனை. தெளிவான பாதை. இங்கே, உருளைக் கிழங்கு எங்கே இருக்கு?”
“அதோ இருக்கு. அடுமணையில் வாட்டற வகை வேணுமா உங்களுக்கு?”
“ஜெர்ஸி ராயல் வகை. இப்ப நாம் இருக்கறது அதுக்கு வாகில்லாத பருவமோ?”
ஆமாம், வசந்தம்தான் அது கிட்டற காலம். இப்பவோ, இலையுதிர் காலம். கொஞ்ச நேரம் நான் கட்டவிழ்ந்து போயிருந்தேன். காலத்தில் மிதந்திருந்திருக்கிறேன். பயப்பட வேண்டியது அது. ஆனால் இப்போது மறுபடியும் அக்டோபர் மாதத்தில் ஒரு செவ்வாய்க் கிழமையுடன் இணைக்கப்பட்டிருக்கிறேன், எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை இப்போது. “நாம் அந்த காஃபிக் கடையைப் பார்க்கப் போகலாம்,” என்றார் அவர். “என்னோட முட்டிக்கால் புகார் செய்கிறது. சின்ன உருளைக் கிழங்குப் பை ஒண்ணை எடுத்துக்கோ, நாம் உட்கார ஒரு இடத்தைக் கண்டு பிடிப்போம்.”
கேலி ஒரு மேஜையை ஏற்பாடு செய்தாள், இரண்டு காஃபிகளுக்கு வரிசையில் நின்றாள், பொலைனோடு மறுபடி அமர்ந்தாள்.
“நல்லது. இதுக்கு வேணப்பட்ட அளவு உழைச்சிருக்கோம்.” பொலைன் காஃபியை ஒரு வாய் உறிஞ்சினார்.
“சூடு. ஒரு நிமிஷம் இதை விட்டு வைக்கணும். நீ உன்னோட டெக்ஸ்டிங்கை இப்ப செஞ்சுக்கோயேன் – ஓய்வு நேரம் இது.”
அகப்பட்டுக் கொண்ட மாதிரி கொஞ்சம் உணர்ந்த கேலி, தான் ஆல்பர்ட் தெரு பெண்மணியோடு, மார்க்ஸ் கடையில் இருப்பதாக, தன் அம்மாவுக்குத் தெரிவித்தாள். அந்தப் பெண்மணி சரியானவர்தான், இன்னும் சொன்னால் நல்ல மாதிரி, நான் இன்றைக்கு மாலை, ஞாயிறு அன்று என்ன செய்யப் போகிறேன் என்று சொல்கிறேன் என்று மேலும் சொன்னாள். லிண்டியோடு சனிக்கிழமைக்கு ஏற்பாடு செய்தாள். டானைக் கொஞ்சம் உசுப்பினாள். தன் காஃபியைக் குடித்தாள்.
“ஆமாம்,” என்றார் பொலைன். “இந்த கேடரிங் படிப்பைப் பத்தி நீ ஏன் விசாரிக்கக் கூடாது? என்னென்னவோ விஷயங்களுக்கெல்லாம் அது இட்டுப் போகும். நாம போகாத பாதைங்கிறது இருக்கே – அது என்னவொரு தூண்டுதல். உனக்கு இந்தக் கவிதை தெரியுமா?  ‘காட்டில் பிரிந்தன இரண்டு பாதைகள், நானோ, புழக்கம் குறைந்த பாதையில் நான் போனேன்’. இந்த நாள்ல இது ஒரு சல்லிசான கருத்துதான், ஆனால், அவர் சொல்றதுல அர்த்தம் இருக்கு.”
“நீங்க ஒரு ஆசிரியரா இருந்திருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கிறேன், பொலைன் அது சரியா?” என்று பிரியத்தோடு கேட்டாள் கேலி.
பொலைன் தன் காஃபியை முடித்தார். “இல்லை கண்ணே, நான் ஒரு உளவாளி.” அவர் தன் பையை, தன் கைக்கோலை எடுத்துக் கொண்டார். “நல்லது, நாம கிளம்பணும், இல்லையா?”
அவர்கள் எழுந்தார்கள். கேலி பொலைனின் பின்னால் போனாள். அவர் முன்பு இருந்த மாதிரியேதான் இருப்பதாகத் தெரிந்தார். நிஜமாகவே ரொம்ப வயதானவர். அந்த தடி மூக்குக் கண்ணாடி. அந்தக் கைக் குச்சி. ஆனால்… ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அவர், பொலைன், கோழிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். கோழியோடு டாரகானும், எலுமிச்சம்பழமும் எப்படிச் சேர்த்து அவர் வதக்குவார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கேலி கொழிகளின் உடல்களை உற்று நோக்கினாள். “கொல்வதற்கு உரிமம் உண்டா?” என்று சிறிது குடைந்து கேட்டாள்.
“சரிதான், ஆமாம். ஆனால் அதுக்கு அப்படிப் பெயர் இல்லை. அப்ப ஒரு மாற்றுப் பெயர் இருந்தது. எனக்கு சின்ன அளவுள்ளதா ஒண்ணு எடுக்கறியா- நடு அளவுள்ளதை என்னால தீர்க்க முடியறதில்லை.”
“நீங்க அப்ப…” கேலி தொடர்ந்தாள். “நீங்க மட்டும் தனியா இருந்து உளவு பார்த்தீங்களா?”
“இல்லை இல்லை. அது ஒரு அமைப்போட இயக்கம். எம்15 மேலும் எம் 16ன்னு நீ கேள்விப்பட்டிருக்கியா?”
கேலி தான் கேட்டிருப்பதாகச் சொன்னாள்.
“அப்ப சரி. ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் அதில நீ நெனக்கிறதை விடக் குறைவாத்தான் உண்டு. ஓரளவுக்கு, ஆஃபிஸ் வேலைதான்.” பொலைன் தனக்குக் காட்டப்பட்ட கோழியை சோதித்துப் பார்த்தார். “அது அருமையாக இருக்கும்.”
ஆஃபிஸ், அப்புறம் இடத்தைக் காலி செய்ற நேரங்கள்னு அதை எல்லாம் அழைக்கலாம். அதுல அனேகமும் இன்னும் முழுக்கத் தெளிவாகவே நினைவிருக்கு. கால வரிசைப்படி இல்லை, பல நபர்களால வளமா நிரப்பப்பட்ட நினைவுகள். ஓ, மனுசங்கதான் எல்லாத்தையும் விட மேல் – முகங்களாலேயே ஒரு கோப்புகளுக்கான அலமாரியை நிரப்ப முடியும். ஆனா அத்தனை முகங்களைத் தவறில்லாம சேமிக்கிறதுலதான் எத்தனை திறமை! (எனக்கு)
அவர்கள் எண்ணெயும், சாலட் மீது தெளிக்கும் கூழ்களும் இருக்கும் வரிசைகளை அடைந்திருந்தார்கள். “எந்த கடுகுக் கூழ்?” கேலி கேட்டாள். “அப்பறம் நமக்கு ஆலிவ் எண்ணெயும் வேணும்.”
வெங்காயத்தைப் போல, அவள் நினைத்தாள். ஒரு மனிதர் அது போல. அடுக்கடுக்காக இருக்கிறார். உனக்கு அது பற்றிக் கொஞ்சம் கூடத் துப்பு இல்லை. நீ மேல் பரப்பை மட்டும் பார்க்கிறே. கிழமான ஒருத்தரைப் பற்றி அவர் என்ன கிழம்தானேன்னு நீ நெனக்கிறே. எவருமே அப்படித்தான்னு நினெக்கிறே. அங்கே சகிக்க முடியாதபடியான இளஞ்சிவப்பு நிறத்துல, அவருக்கு ரொம்பவே குட்டையாத் தெரியற ஸ்கர்ட் போட்டுகிட்டு இருக்காரே, என்னோட அம்மா வயசு அவருக்கு. அப்புறம் அந்த ஆள், திரித்திரியா முடிச்சு போட்ட தலை முடியோட.
அவள் சொன்னாள், “நீங்க உளவுக்கு…. போய் உளவு பார்க்க… நிறைய ஊர்களுக்குப் போனீங்களா?”
“ஒரு நல்ல இதாலியன் எண்ணெய், எனக்கு அது பிடிக்கும்,” பொலைன் சொன்னார். “அப்புறம் எலுமிச்சை வாசனை உள்ள ஒண்ணு.”
கிம்பொராஸோ, கோடோபாக்ஸி…அந்த இரண்டு இடத்துக்குமே போக முடியல்லே. போபோகாடெபெட்லுக்கும் போகல்லே. ஆனால் மொகடிஷு… வேண்டாம், இந்தப் பெண்ணுக்கு மொகடிஷுவைப் பத்தித் தெரியத் தேவையில்லை. கின்ஷாஸா பத்தியும் வேணாம்.
“நான் போனேன்னுதான் சொல்லணும். அது உலகளாவிய வேலையாத்தான் இருக்கும். ஆனால் பெர்மூடாவுலெ கடல்லெ விசைப்படகுகளையும், சிங்கப்பூர்ல கார்களில துரத்தறதையும் நினச்சுக்காதே. அதிகமா என்னன்னா, ரயில் நிலையங்கள்லெ காத்துகிட்டு இருக்கறதும், சாதாரணமா நாம பார்க்காம இருக்கவே விரும்பக் கூடிய நபர்களைச் சந்திக்கறதும்தான் வேலை.”
“எனக்கு பிரயாணம் போகணும்னு இருக்கு.”
“புத்தியை விசாலமாக்கும்னு சொல்லப்படறது. ஆனால் அப்படி ஒரு புத்தி அப்ப என்ன நிலைல இருந்ததுங்கறதைப் பொறுத்ததுதான் அதெல்லாம். நிறைய பயணம் போயிருக்கிற சில பேரை எனக்குத் தெரியும், அவங்களோட புத்தியெல்லாம் க்ஷீணிச்சுத்தான் போயிருந்தது. இப்ப பார்ப்போம்- அந்தப் பட்டியல் எப்படி இருக்கு? அடுத்தது எங்கே நாம போகணும்?”
“மார்மலேட். அப்புறம் ஜே-துணிகள்.6 நான் அல்ஹார்வுக்குப் போயிருக்கிறேன்,” என்றாள் கேலி. “நான் கொஞ்சம் போர்ச்சுகீஸைக் கற்றுக்க முயற்சி செய்தேன். தயவு செய்து, நன்றி- அதெல்லாமாவது சொல்லலாமேன்னுதான்.”
ஆனால் பொலைன் இப்படி தாம்ஸன் விடுமுறைகளில்7 போனதில்லை, என அவள் நினைத்தாள். அவர் என்ன செய்தார்ன்னு எனக்குத் தெரியாது, அல்லது முன்னே என்ன மாதிரி மனுஷியா அவர் இருந்தாரோ அவர் என்ன செய்தார்னு தெரியாது, ஆனால் அது, எப்போது பார்த்தாலும் கடற்கரையில் படுத்துக் கிடந்து விட்டு, நல்ல டாபெர்னா8 எங்கே இருக்குன்னு தேடற வேலை இல்லைன்னு நிச்சயமாத் தெரியறது. கொல்வதற்கு உரிமம் (லைசென்ஸ்) இருந்தால் அப்படிப் போயிருக்க முடியாது. அவள் பொலைனின் முதுகை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். தடித்த கம்பளி ஆடை (ட்வீட்) அணிந்தவர், கொஞ்சம் கூன் விழுந்தவர், எளிதில் புரிந்து கொள்ளப்பட முடியாதவர்.
பொலைன் டொக்டொக்கென்று முன்னே போனார், முகங்களைப் பற்றி மறுபடியும் யோசித்திருந்தார். தலைக்குள் ஒரு கண்காட்சி போல இருந்தன அவை. (எதிரே)பம்ப்ளிமாஸ் பழங்களின் குவியலிலிருந்து, ஒரு குறிப்பிட்ட முகத்தின் படம் முன்னேறி வந்தது. சரி, சரி, என்றார் அவர். உன்னை எனக்கு நினைவிருக்கிறது, சொல்கையில் ஆனால் துளியும் உற்சாகமில்லை.
பயிற்சிதான், வேறென்ன. ஒரு முக்கியமான உத்தி அது. நமக்கு என்ன தெரியாது அப்போது என்றால், இந்தப் பயிற்சியை நாம் என்றென்றைக்குமாக புத்தியில் வைத்திருப்பொம் என்பதுதான்.
அவகாடோ பழங்களின் நடுவேயும் இன்னொரு தெரிந்த முகம் தென்பட்டது- வேண்டாததாக இல்லை, ஆனால் இப்போது, தேவைப்படாதது. போய்த் தொலை, என்றார் அவர், அவனிடம். நான் அதையெல்லாம் தாண்டி வந்தாயிற்று, நீயும்தான் தாண்டிப் போயிருப்பே, நீ எங்கே இருந்தாலும்.
“நாம் தப்பான வழியில போகிறோம், பாருங்க,” என்றாள் கேலி. “நாம அங்கே போகணும்.”
“என்னை மார்மலேடுக்குக் குறிவைச்சுத் திருப்பு, பார்ப்போம்.”
ஒரு காலத்தில், திசைகள், வழிகளெல்லாம் பிசகின்றித் தெரிந்திருந்தன. சில சமயம், அது உதவிக்கு வந்தது. நிஜமாகவே, ஒரு தடவை, நிலைமையைக் காப்பாற்றியது. மார்ரகேஷில், விசித்திரமான விதத்தில் மோசமாயிருந்த ஓர் இடம்.
அவள் நின்றாள். “தடியாக வெட்டினது. தங்க நிறச் செதுக்கல். எலுமிச்சையா அது, அடக் கடவுளே? யாருக்கு இதெல்லாம் வேண்டி இருக்கு? எங்கே சாதாரண ஆக்ஸ்ஃபோர்ட் வகை? ஓ, சரி. வேறென்ன?”
“நான் அங்கே போய் ஜே-துணிகளைப் பார்த்து விட்டு வரேன்,” என்றாள் கேலி. “அதோட நாம முடிச்சாச்சு.”
அவள் திரும்பியபோது, பொலைன் வாங்கவிருக்கிற பொருட்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
“இங்கே இவ்வளவு அதிகமா இருக்கே. இதை எல்லாம் நம்மால எடுத்துப் போக முடியுமா?”
“ஓ, தாராளமா. உங்க ட்ராலின்னு ஒண்ணு இருக்கே. அது ஏராளமா கொள்ளும்.”
“அப்ப சரி. அப்ப, இதை எல்லாம் முடிக்கலாமா?”
எல்லா செக் அவுட் கௌண்டர்களிலும் கூட்டம் நின்றது. “இங்கே பரவாயில்லை,” என்றார் பொலைன். முன்னால் நின்ற பெண் தனியாக வாழ்கிறவள், பூனை ஒன்று வைத்திருக்கிறாள், மில்க் சாக்லேட் விரும்புபவள், வைன் அருந்துவதை விரும்புகிறாள், தன்னுடைய அடுமனையைச் சுத்தம் செய்ய முடிவு செய்திருக்கிறாள், வெள்ளியில் எதையோ பாலிஷ் செய்யப் போகிறாள் என்று பொலைன் கவனித்தார். அவர் நினைத்தார், இது இருக்கே, எல்லாத்தையும் கூர்மையாக் கவனிச்சு, அடையாளம் காணற பழக்கம், லேசுல போகிறதில்லை. இந்தக் காலத்தில, இது ஒரு சோர்வூட்டுகிற பழக்கம். இந்தப் பெண்ணோட வீட்டு வாழ்க்கையைப் பத்தி இத்தனை தெரிஞ்சுக்க எனக்கு என்ன அவதி?
“நினைவுல வச்சுக்கோ,” அவர் கேலியிடம் சொன்னார், “நீ தொழிலாக எந்த வேலையைத் தேர்வு செய்தாலும், நாளாவட்டத்துல, அது வாழ்நாளைக்குமான பழக்கங்களைக் கொடுத்துடும்.”
“நான் உபசரிப்பும், கேடரிங்கும்னு பயிற்சி எடுத்தா, அதால, மீன்முட்டைக் கூழ் தடவின ப்ரெட்டையும், கப்கேக்கையும் வாழ்க்கை பூரா நினைச்சுகிட்டு இருப்பேங்கிறீங்களா?”
“நிலத்தைப் பொறுத்துத்தான் விளைச்சல்னு நான் நினைக்கிறேன். நான் எப்பவும் தோண்டித் துருவிப் பார்க்கிறதை விட மாட்டேன், விவரத்தை வைச்சுகிட்டு ஊகமுடிவுக்கு வர்றதும் என்னால விட முடியாது. இன்னிக்கு என்னவோ நான் ஒரு மோசமான முடிவெடுத்திருக்கேன். தப்பான வரிசைல இருக்கோம் நாம.”
இரண்டு வாடிக்கையாளர்கள்தான் இவர்களுக்கு முன்னே வரிசையில் நின்றார்கள், ஆனால் ஏதோ தகராறு வந்து விட்டது. ஒரு ஆள் தன் முட்டைப் பெட்டியில் ஒரு முட்டை உடைந்திருக்கிறது என்று உரக்கக் குறை சொன்னான். (“முன்னாடியே அவர் சோதிச்சிருக்கணும், இல்லையா?” என்றாள் கேலி.) மாற்றாக ஒரு பெட்டிக்குச் சொல்லி இருந்தார்கள், ஆனால் இப்போது அந்த ஆள், மிக்ஸ் அண்ட் மாட்ச் என்ற சலுகை விளம்பரத்தில், சிக்கன் குருமா சேர்ந்திருக்கிறதா இல்லையா என்று பணம் வாங்குபவரிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்திருந்தார்.
“அதுல சொல்லி இருந்தது. எனக்குத் தெளிவா தெரியும்.”
“இங்க பாருங்க, அதுக்கு அர்த்தம்…”
“அதுல அப்படித்தான் சொல்லி இருந்தது. எனக்குப் படிக்கத் தெரியாதுன்னு சொல்றீங்களா நீங்க?”
அந்த வாதம் புகைந்தது. வரிசையில் நின்றவர்கள் சலித்துக் கொள்ளத் துவங்கினார்கள். பொலைன் பழச்சுவை கொண்ட சூயிங்கம்களை விளம்பரம் செய்த அலமாரியின் மீது சாய்ந்து நின்றார்.
“ரொம்ப முன்னாலே, என் பயிற்சி காலத்துல,” அவர் சொன்னார், “நான் போயிருந்த ஒரு வகுப்புல, வெறும் கையால ஒரு ஆள் கழுத்தை எப்படி நெறிக்கறதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அந்தத் திறமையை நான், இரண்டாவது தடவையா, இப்பத்தான் பயன்படுத்தப் போகிறேன்னு நினைக்கிறேன்.”
கேலி அவரைப் பார்த்தாள். கண்ணைக் கொட்டிக் கொண்டாள். வேறு பக்கம் பார்வையைச் செலுத்தினாள். திரும்பி அவரைப் பார்த்தாள், போலைன் தன் பர்ஸில் வங்கிச் செலவு அட்டைக்குத் துழாவிக் கொண்டிருந்தார்: பார்க்க மிகச் சாதாரணமாகவும், நரைத்த தலைமுடியோடும், கைப்புறமெல்லாம் நைந்து போயிருக்கிற மேலங்கி அணிந்தவராகவும் தெரிந்தார். அவர்தான் அதைச் சொன்னார். ஆமாம், அவர் அதைச் சொன்னார்.
முன்னால் ஏதோ சமரசம் ஏற்பட்டிருந்தது. அந்த ஆள் தன் பைகளை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.
“எப்படியோ முடிஞ்சது, நல்லது,” என்றார் பொலைன். “அவர் கொஞ்சம் பெரிய உருவாத்தான் இருந்தார். ஆ- என்னோட அட்டை. இப்போ நாம நிஜம்மாவே இதெல்லாத்தையும் வாங்கப் போறோமா?”
பொருட்களுக்கு விலை கொடுத்து வாங்கியாயிற்று, பைகளில் போட்டு எடுத்துக் கொண்டாயிற்று. தெருவில் வந்து விட்டார்கள். பொலைன் அந்தப் பையைத் தன் தோளின் மீது தூக்கிப் போட்டுக் கொள்ளச் சற்று நிதானித்தார். “முடிஞ்சது. உனக்கு நன்றி கண்ணே. திட்டமிட்டபடி வேலையை முடிச்சுட்டோம்.”
நிஜத்தில, அப்படி எல்லாம் நான் சொன்னதே இல்லை. வெறுமனே – அலுவலகத்துக்குத் திரும்பிப் போய், அறிக்கையை எழுதிக் கொடுப்பதோடு சரி. இப்பவோ, நான் என் திருப்திக்காக, அறிக்கையை முடித்துக் கொடுக்கிறேன். இன்று ஏற்கக் கூடியதாக நாள் இருந்தது, என் முட்டிக்கால் அத்தனை படுத்தவில்லை, அந்த வேனில் காலத்து இலைகள் நான் முன்பு பார்த்ததே இராதது போலத் தெரிந்தன, இங்கே பார், இதைப் பார் போதும், அந்த சோர்பஸ் புதரிலிருக்கும் நெல்லிப் பழங்களைப் பார்.
கேலி இலைகளையோ, நெல்லிகளையோ பார்க்கவில்லை. அவள் தெருவையும் கார்களையும், ஜனங்களையும் பார்த்தாள். அதெல்லாம் அரை மணி முன்பிருந்த மாதிரிதான் இருந்தன, ஆனால் ஏதோ விதத்தில் நம்பக் கூடியவையாக இல்லை. ஏதோ விதத்தில், அவள் தனக்கு வயது கூடிவிட்டது போல உணர்ந்தாள். கொஞ்சம் மாறிய நபராகி விட்டதாக, ஏதோ கூடுதலாகத் தெரிந்து கொண்ட நபராக உணர்ந்தாள். தேவைப்படுகிற அளவு சரிக்கட்டிக் கொள்ளத் தயாராக உள்ளவளாக. ஒருவேளை உபசரிப்பும், கேடரிங்கும் வேண்டாம். நான் ஒருக்கால் உபசரிக்கிற, கேடரிங் படிக்கிற நபரில்லையோ என்னவோ. நான் யார் என்பது எனக்குத் தெரியவில்லை, இல்லையா? நான் யாராக ஆகக்கூடும் என்பதும்தான்.

~oOo~

பெனலபி லைவ்லியின் இங்கிலிஷ் மூலக் கதை: License To Kill
(மூல நூல்: The Purple Swamp Hen and Other Stories, 2016, Penguin Random House LLC. )
தமிழாக்கம்: பஞ்சாட்சரம்/ செப்டம்பர்-’18

அடிக்குறிப்புகள்:
1. பெனலபி லைவ்லி ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம் எழுதிப் பரிசுகள் பெற்றவர். நாவல் ஒன்றுக்கு புக்கர் பரிசு பெற்ற பிறகு நிறைய எழுதி இருக்கிறார். இவரது நன்கறியப்பட்ட, இதர நாவல்கள்/ புத்தகங்கள்: மூன் டைகர், த ஃபோடொக்ராஃப், மேலும் ஹௌ இட் ஆல் பிகேன்.
2. ஆக்ஸ்ஃபோர்ட் தெரு – லண்டனின் மிகப் பிரபலமான கடைவீதி. யூரோப்பிலேயே கூட்டம் நிறைந்த வியாபாரத் தலம்.
3. இங்கு சுட்டப்படுவது இங்கிலிஷ் கவிஞரான ஜான் கீட்ஸின் மச்சகன்னிகளைப் பற்றிய கவிதை. கீட்ஸ் அந்தக் கவிதையை எழுதியது 1820 இல். அப்போது அவருக்கு வயது 25 ஆகியிருக்கும். லைலாக் மலர்களைப் பற்றிய சுட்டுதல் வால்ட் விட்மானின் இன்னொரு புகழ்பெற்ற கவிதையைச் சொல்கிறது என்று கருதுகிறேன். (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு).
4. ஜாரா (Zara) என்பது தயாரிப்பு ஆடைகளில் ஒரு பிரபலமான பிராண்ட்.
5. City and Guilds technical education என்பது கல்வித் துறையில் பிரபலமான ஒரு படிப்பு வகை- இங்கிலாந்தில். தொழிற்பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்புக்குத் தயார் செய்யும் படிப்பு இது. இந்தியாவில் உள்ள பாலிடெக்னிக் படிப்பு போல என்று வைத்துக் கொள்ளலாம்.
6. J-clothes என்பவை சமையலறையில் சுத்தம் செய்யப் பயன்படும் துணிகள். நம் நாட்டில் கைப்பிடித் துணி என்று இவற்றைச் சொல்வார்கள்.
7. தாம்ஸன் ஹாலிடேஸ் என்பது ஒரு பிரிட்டிஷ் நிறுவனம். விடுமுறைப் பயணங்களை மலிவான விலைக்கு அளித்துப் பெயர் பெற்ற நிறுவனமாக ஆகியது. பிறகு பல யூரோப்பிய நிறுவனங்கள் ஒன்று ஆக இணைந்து இன்று டியுஐ (ஏஜி) என்ற பெயரில் செயல்படுகிறது.
8. டாபெர்னா (Taberna) பண்டை ரோம நாகரிகத்தில் பொருள் விற்பனை செய்யும் ஒற்றை அறைக் கடை. சில்லறைக் கடை. இன்று இது போர்ச்சுகல்/ஸ்பெயின்/ அமெரிக்கா போன்ற நிலப்பகுதிகளில் ரெஸ்ட்ராண்(ட்) போன்ற சாப்பாடும், மதுவும் பரிமாறும் கடையாக அர்த்தம் பெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.