எழுத்தாளன் கவிதை

எழுத்தாளன்


என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
உன் எழுத்துக்களை மட்டுமே வாசிக்கிறது இவ்வுலகு
ஒயினை அருந்தியபடியே
புகைமூட்டம் மணக்கும்
நள்ளிரவில்
எழுதியதாக யாருக்குமே தெரியாது
வாசிப்புக் கண்களில்
மின்னுகின்றன
எழுதும் உன் அறையைப் பற்றிய
புனிதக் கனவுகள்
எல்லாமும்
அனுமதிக்கப்படுகிறது
உன் உலகில்
எழுத்துகள் உன்னிலிருந்து
ஆவியைப் போலப் பறந்து பிரிகின்றன
பரிசுத்தமாகிறாய்
ஒவ்வொரு முறை
அவற்றின் கழுத்துகளை அறுத்து பலி கொடுக்கும்போதும்
முழுஉடலை
அலசி எடுத்துப் படைக்கும்
கவிதைப்பிரதியில்
நீ இருப்பதே இல்லை
ஆனால்
நீ சொல்வதெல்லாம்
எதிரொலிக்கிறது
மூளைப்பாறைகளுக்குள்
அழுக்கு ஊறிய
உன் விரல்களை மொய்க்கும்
தூரத்து முத்தங்கள்
மயக்கத்திலேயே மிதக்கின்றன.
இரா.கவியரசு