இரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’

ஆவணப்பட அறிமுகம்

“அவ எங்க அம்மாங்க…கடலம்மா, அவ தம் புள்ளைகள ஒரு போதும் கைவிட மாட்டா ”
– ஜோ டி க்ரூஸ்.

எனில் கைவிட்டவர் எவர்? எது?
சென்ற ஆண்டு இறுதியில் ஓகி புயல் வீசி, மனிதர்களை கடல் வாங்கி, துயரங்கள் கரை சேர்ந்த குமரி மாவட்ட கடற்கரை மணல் விரிவில் நின்று எழுத்தாளர் க்ரூஸ் ஊடகங்களுக்கு உரத்து சொன்ன சொல் இது. எனில், கைவிட்டவர் எவர், எது, என்ற கேள்விகளுக்கு
விடை தேடி பயணிக்கும் அருள் எழிலன் அவர்களின் ‘பெருங்கடல் வேட்டத்து’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் பேராசிரியர் வஹீதையா கான்ஸ்டன்டைன் அவர்கள் முன்னிலையில், மாலதி மைத்ரி அவர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலுக்கான திரையிடலில் காணக் கிடைத்தது.
இந்த ஆவணத்தின் தனித்தன்மை என முதன்மையாக ஒன்றை சொல்லவேண்டும் எனில் அது இதிலுள்ள காமம் செப்பாது கண்டது மொழியும் தன்மை. இது மீனவ துயர்களை ஊதிப் பெருக்கியோ, அல்லது பரிதாபத்துக்கு உரியவர்களாக காட்டியோ, அதன் வழியே அன்றைய நாளின் ஆளும் வர்க்கச் செயல்பாட்டின் மெத்தனப் போக்கை, இடர் நீக்கப் பணியின் அலட்சியத்தை, உணர்ச்சிச் சுரண்டலாக முன் வைக்கவில்லை. அதுவே இந்த ஆவணம் வழி எழும் வினாக்களை தவிர்க்க இயலா வலிமை கொண்டதாக ஆக்குகிறது.
கடலூரில் ஓகி ஓய்ந்து பத்து நாட்களுக்குப் பிறகு காணாமல் போன கடல் மக்களின் புகைப்படங்கள் ஒட்டிய ‘காணவில்லை’ பதாகை முன் நின்றிருந்த குழுவில், மீனவனோ, செய்தியாளனோ, அரசு பணியாளனோ அல்லாத பொது குடிமைச் சமூகத்தை சேர்ந்த ஒரே ஒரு மனிதன் நான் மட்டுமே. காரணம், கடலூரில் நிலத்தில் வாழும் எவரது மகனும் கடலில் சென்று மறைந்து போகவில்லை. அது எங்கோ ஊருக்கு வெளியே வாழும் கடல் மக்களின் துயரம். அதற்கும் நிலத்தில் வாழ் பொது சமூக மனதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த ஆவணத்தின் முதன்மைப்பணி, எங்கோ வாழும் கடல்புறத்து மக்களின் துயரமாக தமிழ் நிலத்தினின்றும் ”தனிமைப்பட்டு” நோக்கப்படும், பல்வேறு துயரங்கள் போல மறதியில் புதைந்து போகும் மற்றொரு துயரமாக மாறிப் போகவிருக்கும், ஓகி புயல் விளைவித்த துயரத்தை தமிழ் நிலம் முழுமைக்குமான சமூக துயரம் எனும் ”முழுமை” ஒன்றின் பகுதியாக மாற்ற முனையும் யத்தனம்.

கைவிடப்படுதல் துயரின் முதல் தளத்தில் ஆளும் வர்க்கத்தின் அலட்சியங்களை சாட்சியம் சுத்தமாக காட்சிப்படுத்தும் இந்த ஆவணம், அடுத்த தளத்தில் இந்த மக்களை கைவிட்ட, இந்த மக்கள் சார்ந்திருக்கும் மத நிறுவனங்களின் இயலாமையை கேள்விக்கு உட்படுத்துகிறது. இந்த மக்கள் அவர்கள் சார்ந்திருக்கும் மத நிறுவனத்தின் தலைவர் கிழித்த கோட்டை தாண்டுவதில்லை. இதன் சாதக அம்சம் அனைத்தும் அந்த நிறுவன தலைவருக்கே. அரசின் எந்த மேஜைப் பேச்சு அமர்விலும் இந்த மக்கள் சார்பாக அந்த ஒரே நிறுவன தலைவர் அமர்ந்தால் போதும். அரசு தனது மக்களுக்கு அளிக்கும் எதையும் தலைவர் பெற்று இந்த மக்களுக்கு தருவார். அதன் பலனாக அவரது நிறுவனம் ஸ்திரமாக இருக்கும். பாதக அம்சம், அரசு இந்த ஒரே ஒரு தலைவரை நிராகரித்தால் போதும். அவர் கோட்டின் கீழ் நிற்கும் இந்த சமூகம் மொத்தமும் நிராகரிக்கப்படும். ஆவணத்தில் ஒருவர், கிறித்தவ மதத்தை சேர்ந்தவர், தன் மத நிறுவனத்தை நோக்கி, “எங்களுக்கான ஜனநாயக அரசியல் வெளியை எங்களுக்கு ஏன் மறுத்தீர்கள்?” எனக் கேட்கிறார்.
மதத்தால் கைவிடப்படும் துயரின் விமர்சனத்தை வலிமையான இரண்டு காட்சிகள் வழியே சமூக ஆழ் மனத்துக்குள் விதைக்கிறார் இயக்குனர். முதல் காட்சி ஒரு திருவிழா. இரவு. ஊரே வண்ண விளக்குகளில் ஜொலிக்கிறது. மையத்தில் கிறித்தவ மத ஆலயம் மட்டும் முற்றிருளில் வீழ்ந்து கிடக்கிறது. இரண்டாவது காட்சி, ஆலயத்துக்குள் ஆண்டவரை நோக்கி எழும் உருக்கமான பாடல். ”ஆழத்தில் தனிமையில் கிடக்கும் பாவி நாங்கள். எங்கள் குரலை செவிகொள்ளுங்கள். அன்பு கொண்டு எங்களை அரவணையுங்கள்”.
சகல நம்பிக்கைகளாலும் கைவிடப்பட்டு கடலில் சிக்கி மீண்ட சிலர் தங்கள் அனுபவத்தை சொல்கிறார்கள். ஒரு வாரம் கடலில் மிதக்கிறார்கள் சிலர். குடிக்க நீரில்லை. சிறுநீரை அருந்தியேனும் சற்றே தாகம் தீர்த்துக் கொள்ள முனைகிறார்கள். ஆனால், முயன்றும் சிறுநீர் பிரிவதில்லை. மற்றொருவர் மூன்று பகல், மூன்று இரவு, நீரோ உணவோ இன்றி, நீந்தி நீந்திக் கரை சேர்ந்தவர் தனது நண்பர்கள் நிலையை சொல்கிறார:
முதல் நாள் தத்தளிப்பு கைகளை பிரித்து விட்டது. இரண்டாவது நாள் நண்பர்கள் கைகள் எட்டும் தொலைவில். மூன்றாவது நாள் நண்பர்கள் கண்கள் எட்டும் தொலைவில். அடுத்த நாள் குரல்கள் மட்டுமே கேட்கும் தொலைவில். அவ்வப்போது இவர் குரல் எழுப்புவார். ஒவ்வொரு பதில் குரலாக கைகால் சோர்ந்து நீரடிக்குச் சென்று உறங்க, இவர் மட்டும் கரை சேர்கிறார். வேறொரு துண்டுக் காட்சி இடை வெட்டுகிறது. யாருமற்ற இல்லத்தின் வாசலில் அமர்ந்து தனது மகனின் பெயர் சொல்லி கடலை நோக்கி பெருங்குரலெடுத்து அழுகிறாள் ஒரு தாய்.
ஆதரவுக்கு வேறு யாரும் அற்ற தாய், இன்ஜினீயரிங் படித்த தனது ஒரே மகனை இழந்த துயரத்தை சொல்கிறார். “பிள்ளிய காங்கல. போட்டா மட்டும்தான் இருக்கு…” உடைந்து அழுகிறார், மகனின் புகைப்படத்தில் உறைகிறது சட்டகம். வேறொரு துண்டுக்காட்சியில் அந்த மகனின் படம் காணாமல் போன பிறரது படங்களுடன் சேர்ந்து ஊர் மத்தியில் பதாகையாக நிற்கிறது.
ஒளிப்பதிவு செய்வதற்கு வசதிகள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் உண்மையோ தீவிரமோ நேர்மையோ இன்றி எடுத்துத் தள்ளப்படும் சர்ச்சைகள் வழியே வணிகத்தையும் விளம்பரத்தையும் வெல்லும் ஆவணப்படங்கள் ஏராளம். அபூர்வமாக சில ஆவணப் படங்கள் இந்தப் போக்குக்கு வெளியில் நிற்கும்- கலையில் தீவிரமும், உண்மையும் நேர்மையும் உள்ள, கையாளும் கருவி மீது ஆளுமை கொண்ட, ‘கலைஞர்களால் ‘ எடுக்கப்படும். இந்த ஆவணம் இரண்டாவது வகை. அருள் எழிலன் எனும் கலைஞனால் எடுக்கப்பட்ட ஆவணப்படம் இது. சமகால கவனத்தை நோக்கிய கூறுகள் கடந்து இந்த ஆவணப்படத்தை என்றென்றைக்கும் நிற்கும் வண்ணம் நிலைபெற வைப்பது சமகால துயரத்தை சங்க காலம் முதல் நெய்தல் நிலப் பெண்கள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் கொள்ளும் துயருடன் இணைத்து, துயரின் காலாதீத சாரத்தைச் சுட்டி நிற்கும் கலை அம்சம்.
ராஜி எனும் பெண் சொல்கிறாள், அவள் கணவனுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கை கண்களில் மின்ன, புன்னகையுடன் (ஆம், புன்னகையுடன்), ”நான் பொம்பள புள்ளதான் வேணும்னு ஆசைப்பட்டேன், ஏன்னு மாமா கேட்டார், பொறக்கரது பொம்பள புள்ளயா இருந்தா நிச்சயமா நீ குடிக்கறத விட்டுருவ. அப்புறம் பொம்புள புள்ளைகதான் வீட்லயே இருக்கும், ஆம்புளைக மாதிரி எங்கயும் என்னை விட்டுட்டு போகாது, அப்டின்னேன் ”. கடலுக்குள் காதல் கணவன் சென்று மறைந்த பின் பிறந்த குழந்தை. அவன் ஒரு போதும் பார்க்காத அந்த மகளின் தாமரை மொக்கு கரங்களில் உறைகிறது காட்சிச் சட்டகம்.
இயக்குனரின் கலை ரீதியான, கருத்து ரீதியான, இடைவெட்டுக்கள் ஏதும் இன்றி, பெண்களின் தாள இயலா, காலங்காலமாய் தொடரும் அந்த ஒரே துயரத்தை, துல்லிய உணர்ச்சிகரம் கொண்டு இணைப்பதன் வழியே இந்த ஆவணத்தை சமகால நிலத்திலிருந்து என்றுமுள்ள வானில் எழுந்து பறந்து நிலை பெற செய்ததே ஒரு ஆவணப்பட இயக்குனராக அருள் எழிலன் அடைந்த வெற்றி. ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் துயர் எனும் எல்லையை அந்த துயரில் நிற்கும் பெண்களின் நிலைகள் வழியே உடைத்து அதை மானுடப் பொதுத் துயர் எனும் களத்துக்கு நகர்த்தியதே இந்த ஆவணப்படம் வழியே ஒரு கலைஞனாக அருள் எழிலன் அடைந்த வெற்றி.
ஆவணம் எதை இலக்காக கொள்ள வேண்டுமோ அது ஒரு பக்கம், அந்த நாணயத்தின் மறு பக்கம் கலை எதைச் சென்று எய்துமோ அது. இந்த உன்னத முயக்கத்தை வெற்றிகரமாக நிகழ்த்திய இந்த ‘பெருங்கடல் வேட்டத்து’, சமகால அலகுகள், இதழியல் காரணிகள் கடந்து ஒரு கலைப்பிரதியாக ஒவ்வொரு ரசிகனும் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய ஒரு உன்னதம். அதே சமயம், கலைக்கு அப்பால், சமூக மறதி வியாதிக்குள் புதைந்து போகாமல், காணும் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு மானுடத் துயரை கனல் போல பொருத்தி, இந்த மற்றும் இது போன்ற அரசியல், சமூக கைவிடப்படுதல் துயருக்கு மாற்றாக நாம் செய்யப்போவது என்ன எனும் கேள்வியை நமக்குள் விதைத்த வகையில் இந்த ‘பெருங்கடல் வேட்டத்து’ தனது களப்பணியையும் தீவிரமாக நிறைவு செய்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.