என் சகோதரியின் நுரையீரலிலிருந்து ஒரு கட்டி அகற்றப்பட்டது. அவளால் பேச முடிந்த போது, அவள் சொன்னாள், “நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்.” மூச்சு விட உதவும் குழாயால் அவள் குரல் பிசிறடித்திருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன், நான் சொல்லி இருந்தேன், “நீ என்னை அம்மாவோடு தனியாக விட்டு விட்டுப் போகக் கூடாது.” அவள் சொல்லி இருந்தாள், “அம்மா செத்துப் போயாச்சு. அவளுடைய சாம்பல் என்னுடைய துணி அலமாரியில் இருக்கிறது.”
பெஞ்சில் என் பக்கத்தில் ஓர் ஆள், ஒரு சிறிய நாயோடு அமர்ந்திருக்கிறார். அந்தச் சிறு நாயின் கீழ்த் தாடைப் பற்கள், மிக ஆழத்தில் கடலில் இருக்கும் மீனுடையதைப் போல இருக்கின்றன, அதனுடைய உரோமமோ ரீடா ஹேவொர்த்தின்[1] உரோம மேலங்கியைப் போல செழிப்பாக இருந்தது. நாயும் அந்த மனிதரும் நேற்றும், அதற்கு முந்தைய தினமும் என்னை அடுத்து இருந்தனர். நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதுகிறேன். நாங்கள் பேசுவதில்லை.
ஒரு ப்ரோமீலியாட் செடியை மாற்றுத் தொட்டியில் நடுவதற்கு தோட்டத்தறைக்குப் போன போது, அங்கு என்னோடு சேர்ந்து வாழும் மனிதனின் மூக்குக் கண்ணாடியை ஒரு பூந்தொட்டியில் கண்டேன். அந்தக் கண்ணாடி ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ளது, எட்டு மாதங்களாகக் காணாமல் போயிருந்தது. என் சகோதரி என்னிடம் கேட்டாள், எங்கள் பெற்றோர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று. நான் சொல்கிறேன், “சுதந்திரம் மேலும் சகோதரன் ஒருவன் இல்லாத நிலை.”
ஆரோக்கிய உணவுகளை விற்ற ஒரு கடையில் என் அம்மா வேலை பார்த்த போது பழைய பணப் பட்டுவாடா எந்திரம் ஒன்றை உபயோகித்து வந்தார். அது வேலை செய்யாமல் போன போது, என் மைத்துனர் அதற்குப் பதிலாக ஒரு மின் எந்திரத்தைக் கொணர்ந்தார். என் அம்மா சொன்னாள், “நான் இதை உபயோகிக்கிறது எப்படின்னு ஒரு நாளும் கற்க மாட்டேன்.” என் மைத்துனர் அம்மாவை பின் அறைக்கு அழைத்துப் போய், அந்த எந்திரம் எப்படி வேலை செய்கிறது என்று கற்றுக் கொடுத்தார். அவளுக்கு அப்போது 58 வயது, அதற்கு முன்பு அவள் வேலை செய்ததே இல்லை. என் மைத்துனர் அந்த ஆரோக்கிய உணவுக் கடையை வைத்து நடத்திய ஒன்பது ஆண்டுகள் என் அம்மாவின் வாழ்க்கையில் மிக சந்தோஷமான வருடங்கள். கடைக்குள் வருகிறவர்கள் என் அம்மாவைத்தான் தேடுவார்கள். அவள் இயல்பாக இருந்ததை விட அங்கு கனிவானவளாக இருந்தாள். நம் பெயரைச் சொல்லிக் கேட்டு அழைக்கப்படும்போது நாம் எல்லாருமே கனிவானவர்களாக ஆகிறோம்.
கேட் மில்லெட்டின்[2] ‘பாலுறவு அரசியல்’ (செக்ஷுவல் பாலிடிக்ஸ்) என்ற புத்தகத்தில் அவர் ஆண் எழுத்தாளர்கள் மீது தனக்கிருந்த விருப்பத்தைப் பிரித்துப் பார்த்து அதை உடைக்கிறதில்தான் அந்தப் புத்தகத்தின் உணர்ச்சியூட்டும் சக்தி கிட்டுகிறது. போவென் [3] தொலைத் தொடர் காட்சியைப் பார்த்து டேனிஷ் மொழியைக் கற்றுக் கொள்வது சாத்தியம். டிக்கென்ஸ் இல்லை, ஷார்லாட் ப்ரோண்டேதான் வலியைப் பற்றி மிக அந்தரங்கமான அளவில் பேசுகிற இளம் சிறார் பாத்திரத்தை முதலில் உருவாக்கியவர்.
என்னோடு வாழும் ஆண், வீட்டுப் பூனைகள் போய் விடும், பிறகு திரும்பாது என்று கவலைப்படுகிறார், ஏனெனில் ஒருக்கால் அவருமே அதையே செய்யக் கூடியவர்தான். ஒரு நாள் அவர் எனக்கு லிடியா டேவிஸின் கதை ஒன்றைப் படித்துக் காட்டினார். அதில் கதை சொல்பவர், விவாஹ ரத்து ஆனவர், தன் கணவரின் தொண்டையில் சிக்கிக் கொண்ட ஒரு மீன் எலும்பை நினைவு கூர்கிறார். ப்ரெட்டும் தண்ணீரும் கொண்டு அதை அகற்றச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை, அவர்கள் பாரிஸ் நகரத்தின் தெருக்களில் வெளிப்படுகிறார்கள், அங்கே அவர்கள் ஒரு மருத்துவ மனைக்கு வழி காட்டி அனுப்பப்படுகிறார்கள். அங்கே ஒரு மருத்துவர் முள்ளெலும்பை ஒரு சிறு கொக்கியால் எடுத்து விடுகிறார். மருத்துவர், ஒரு யூதர், கணவர், அவரும் ஒரு யூதர், யூதர்களாக இருப்பது பற்றி ஃப்ரெஞ்சு மொழியில் பேசிக் கொள்கின்றனர். நான் சொன்னேன், “நல்லது, இது மர்மம் நிறைந்ததாக இருக்கிறது, ஆனால் இது எதைப் பற்றி என்று எனக்குக் கொஞ்சமும் தெரியவில்லை.” அந்த ஆண் சொன்னார், “உறுத்தலும், தொடர்பு கொள்வதும். ஒவ்வொருவரின் கதையின் மையத்திலும் உறுத்தல் இருக்கிறது, அந்த உறுத்தலை இருமி வெளியேற்றி விட முடியாது, விழுங்கவும் முடியாது. ஆனாலும், கதை சொல்லி இழப்பு ஏற்பட்ட வேளையில் ஒரு தொடர்பை நினைவு கூர்கிறார். அந்த சவாலை அவள் மேற்கொள்கிறாள்.” நான் சொன்னேன், “இதை ஒரு மிலியன் வருடங்களில் கூட நான் புரிந்து கொண்டிருக்க மாட்டேன்.” அவர் சொன்னார், “இல்லை, நீ புரிந்து கொண்டிருப்பாய்.”
போவரியும் [4], முதல் தெருவும் சந்திக்கும் இடத்தில் இருந்த ஒரு பரணில் கேட் மில்லெட் தன் கணவர் ஃபூமியோ யோஷிமுராவுடன் வாழ்ந்திருந்தார் என்பது எனக்கு நினைவு இருக்கிறது. அதில் சமதளப் பகுதிகளே இல்லை, தரை முழுதும் சிலாம்புகளும் பிளவுகளும் இருந்தன, தன்னிஷ்டத்துக்கு வேலை செய்யும் ஒரு எரிஉலை, மாட்டிறைச்சித் துண்டமும், வாட்டப்பட்ட உருளைக் கிழங்குகளும், வெண்ணெயும், சாய்ந்த கையெழுத்தில் எழுதப்பட்ட பக்கங்களுமாக ஒரு மர மேஜை மீது இறைந்து கிடக்கும். புத்தகங்களும்தான். ஃபூமியோ தயாரித்த பட்டங்கள் மேல் தளத்திலிருந்து தொங்கும், சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
‘ரோஸ்மேரிஸ் பேபி’ [5] படத்தில் ஜான் காஸவீடீஸ் [6] நியூயார்க் நகரவாசியான ஒரு நடிகனின் சுய மைய நோக்குடன், மிகவும் பராமரிக்கப்பட்டு வீணாக்கப்படும் கணவனுக்கு உரிய சாதாரணமான கவனமின்மையை இணைத்து ஒரு பாத்திரத்தைச் சித்திரிக்கிறார். அது தனக்கு நடிக்க மேலான நடிக வாய்ப்புகளைத் தருவதற்காக சாத்தானுக்குத் தன் மனைவியைத் தாரை வார்க்கும் ஒரு அற்பத் தரகனாகும் மனிதன் ஒருவனை நம்பக் கூடிய முறையில் நமக்குக் கொடுக்கிறது. பட இயக்குநரான ரோமன் போலான்ஸ்கியின் சாமர்த்தியம் திரைப்படத்தை நடத்துகிறது, ஒருவேளை தான் ரோஸ்மேரியின் கணவனாக இருந்தால் அதே போன்ற ஒரு தேர்வைத்தான் மேற்கொண்டிருப்போம் என்று அவர் அறிந்திருக்கக் கூடும். மேலும் ஒருவேளை அவர் பலியாக ஆக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் ரோஸ்மேரி பாத்திரத்தோடும் தன்னை அடையாளம் கண்டிருக்கக் கூடும். பெண்கள் தம்மீது அன்பு செலுத்தாத ஆண்களைப் பற்றி எழுதுவதற்குக் காரணம், ஆண்கள் முக்கியமானவர்கள் என்பதில்லை, மாறாக காதலில், அன்பு செலுத்துவதில் கிட்டும் தோல்வியைப் பற்றிப் பெண்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதால். மறுக்கப்பட்ட ஒவ்வொரு கிளர்வுணர்வும், சாதிக்கும் விருப்பு என்ற உலைக்கு எரிபொருளாகிறது.
நேற்று நான் சேர்ந்து வாழும் ஆண் நான் வேலை செய்து கொண்டிருந்த அறைக்குள் வந்தார், சொன்னார், “மழை பெய்கிறது.” நாங்கள் விரைந்து வெளியே ஓடினோம், குண்டு குண்டாக மழைத்துளிகள் குளத்தில் விழுந்து, ஒரு அடி மேலே உயர எழுவதைப் பார்த்தோம். மழை பெய்து பல மாதங்கள் ஆகி இருந்தன. ஒரு பருவ கால மழை துவங்கியது. இளஞ்சிவப்பு நிறக் காற்று சுழன்று அடித்தது, உஷ்ண நிலை பத்து டிகிரி (F) கீழே இறங்கியது. நாங்கள் பாமி என்று அழைக்கிற, தொட்டிச் செடியின் மடலிலைகள் குனிந்து கொண்டிருந்தன. இடிச் சத்தம் மிகத் தொலைவில் கேட்டதால், மின்னல் இங்கு தோன்ற ஏதுவில்லை. முள்ளிலைச் செடிகளின் ஈட்டி முனை போன்ற சிறு இலைகள் நீரிடையே வடிகுழாய்களாகச் செயல்பட்டன. இருள் அதிக நேரம் நீடிக்கவில்லை.
குழந்தையாக இருக்கையில் என் அப்பா மாய்ஷெ என்று அழைக்கப்பட்டார். உயிர் பிழைத்த ஐந்து பையன்களின் அவர் நடுப் பையன். செங்கல் சுவர்களின் மீது கைப்பந்து விளையாடினார், ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளியை விட்டு நீங்கி நியூ இங்கிலாந்தில் உடுப்புகளை விற்பதற்குப் போகு முன் உள்ளூர் இளைஞர் சங்கத்தில் நீச்சல் பழகினார். எனக்குத் தெரிந்த அப்பாவோ, மர்ரி என்று அழைக்கப்பட்டிருந்தார். அவர் கைத் தையலில் ஆன உடுப்புகளை அணிந்தார், அவரிடம் நல்ல வாசனை வந்தது. 74 வயதில் அவருக்கு கல்லீரலில் புற்று நோய் என்று கண்டு பிடிக்கப்பட்டது. கடைசி தடவையாக மருத்துவ மனையில் அவர் சேர்க்கப்படுமுன், நான் அவரோடு சூரிய ஒளியில் அமர்ந்திருந்தேன். அவர் இறக்கும் போது அவர் உடலிலிருந்து உயிர் எழுந்து போவதை நான் பார்த்தேன். நான் கேட்ட அனேகக் கேள்விகளுக்கும் அவர் ஆமாம் என்றே பதிலளித்தார். அவருக்கு மகன்கள் வேண்டி இருந்ததாக நான் உணரவில்லை.
ஃபீனிக்ஸிலிருந்து ஃப்ளாக்ஸ்டாஃபிற்கு நான் க்ரேஹௌண்ட் பஸ்களில்தான் பயணம் செய்தேன். பஸ் நிறுத்த மையம் ஊரில் ஏழைகள் சேரும் பகுதியில் இருந்தது. அம்மக்கள் கவலைகளால் அரிக்கப்பட்டிருந்தார்கள், போதை மருந்தால் நிலைகுலைந்திருந்தும், மதுவால் புத்தியழிந்தும், புறவெளியில் அதிகம் இருந்ததால் அழுக்கானவர்களாகவுமிருந்தவர்களுக்கு, பற்களும் நிறைய நாட்களும் காணாமல் போயிருந்தன. ஒருவேளை அவர்கள், யாராருடைய வியர்வையெல்லாமோ கோடுகளாகப் பதிந்திருந்த பஸ் ஜன்னல்களுக்கு எதிராக வைத்து ஓய்வெடுக்க உதவியாகத் தலையணைகளை எடுத்துக் கொண்டு, மொத்தக் கண்டத்தின் இடதிலிருந்து வலது கோடிக்கும், மேலிருந்து கீழாகவும் பயணம் செய்து, இங்கு ஏதோ தவறால் வந்து சேர்ந்தார்களோ. அவர்கள் காகிதப் பைக்களிலிருந்து [7] பியரை அருந்தினார்கள், உதட்டின் உள் புறம் போல இளஞ்சிவப்பாக இருந்த ஹாட் டாக்களை [8] உண்டார்கள். பஸ்களின் விதிகளைப் பற்றி எனக்குக் கற்றுக் கொடுத்தனர். வெளியின் உஷ்ணம் கனிவைத் தவிர மற்றெல்லாவற்றையும் உறிஞ்சி விட்டிருந்தது.
என்னோடு வசித்த ஆண் சொல்கிறார், “வீட்டில் தாமே மரபணுச் சோதனையை மேற்கொள்ள உதவும் தயாரிப்புக் கருவிக் கலத்தை வாங்க முற்படுவோர், ஒரு வகையில் நாற்காலியில் அமர்ந்தபடி கடந்த காலத்துக்குள் பயணம் செய்ய முயல்கிறவர்கள்.” என்னால் ஒரு கோப்பை தேநீரை ஆற வைக்காமல் அருந்த முடிவதில்லை. என் சகோதரி சுவைக்கும் உணர்வை மறுபடி பெற்ற பின்னர், அவள் புற்றுநோயைப் பற்றிய நினைவை புறம் தள்ளி வைத்திருந்தாள். அவல் சொன்னாள், “நீ பிறந்த போது எனக்கு மகிழ்வாக இல்லை. நான் அம்மாவிடமும் அப்பாவிடமும், ‘என் தலை வலிக்கிறது,’ என்று சொன்னேன். அவர்கள் என்னை ஒரு மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள், அவர் என்னிடம் கேட்டார், ’நீ பொய் சொல்றே இல்லையா?’”
கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டிருந்த ஒரு போர் முனைச் செய்தியாளரோடு நான் காஃபி அருந்தினேன். அவர் ஒரு பிரம்பின் உதவியோடு நடந்தார், மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிந்தார். அவர் சொன்னார்: “போரின் நடுவே ஓடும் போது, நாம் வெடிச் சத்தங்களைக் கேட்போம், நம்மை நாமே கேட்டுக் கொள்வோம், ‘நாம் உயிரோடு இருக்கிறோமா?’ அது ஒன்றுதான் நம் யோசனையாக இருக்கும், அப்போது மற்ற எல்லா எண்ணங்களும் எத்தனை தேவையற்றவை என்பது தெரியும். கொஞ்ச நாளைக்கு நாம் அட்ரினலினால் (மதி மயங்கி) பெரும் ஊக்கத்தோடு இருப்போம். அது பழகிப் போய் தாக்கம் குறையும்போது, நமக்குப் பளுவாக இருக்கும் நம்முடைய பகுதிகளை நாம் தாண்டி மேலெழுந்து விட்டதாக நினைப்போம். அந்தக் கட்டமும் கடந்து போய் விடும், பிறகு முடிவில்லாது வரிசையாக எழும் தற்காலிக மயக்கங்களில் நாம் இருப்பதை அறிவோம், அவற்றிலிருந்து நாம் விடுதலை பெறப் போவதே இல்லை என்பதும் தெரிந்து விடும்.”
ஃப்ளாக்ஸ்டாஃபில் நான் கேளிக்கை விருந்தொன்றில் சந்தித்த ஒரு பெண்ணின் வீட்டில் நான் தங்கியிருந்தேன். அவள் அங்கே அதிகம் தங்குவதில்லை, பிறர் அந்த வீட்டைப் பயன்படுத்துவதை அவள் விரும்பினாள். ஃப்ளாக்ஸ்டாஃபில் குளுமையாக இருந்தது, நம் உணர்ச்சிகள் ஓட்டமாகத் திரும்பி வந்தன. சில நேரம் மழை கூடப் பெய்தது. நடை பயிலும்போது, ஒன்றின் மேலொன்றாக சமநிலையில் வைக்கும் முயற்சியால் அடுக்கப்பட்டிருந்த கற்கள் முகப்பில் இருந்த ஒரு வீட்டை நான் கடந்து போவேன். கற்களை அடுக்கிச் சமநிலையில் வைக்கும் முயற்சி அங்கு பிரபலம். கழுவாத கால்களோடு வரும் மலைப் பயணிகளும், கொழுந்து விட்டெரியும் கண்கள் கொண்ட யூனபாம்பரும் வந்த இடம் என்று புகழ் பெற்றிருந்த ஒரு கஃபேக்கு நான் போவதுண்டு. நம் மேஜையைப் பகிரலாமா என்று ஜனங்கள் நம்மைக் கேட்பார்கள். மணிக்கணக்காக அமர்ந்து நம் மூச்சு திரும்பும்வரை காத்திருக்கலாம், அல்லது கீழே விழும் கத்தியைப் பிடிக்க [9] முயற்சி செய்தபடியும் இருக்கலாம். இசை நாடகமொன்றில் மேடையில் எழும் மலைச் சித்திரங்கள் கொண்ட அட்டை வடிவுகளைப் போல நகரத்தைச் சுற்றி எங்கும் மலைகள் உயர்ந்து எழுந்திருந்தன.
என் சகோதரி சொல்கிறாள், “நீ நடக்கும்போது என்னை உன் சட்டைப் பையில் வைத்திரு.” நான் சொல்கிறேன், “சரி.” நாங்கள் மேலும் கீழும் எழுகிறோம், இறங்குகிறோம், மூச்சு விடும் உடல் ஒன்றைப் போல.
சூரிய ஒளியில் காய்ந்து பழுப்பான உடலோடும், இறுகிய தசைகளோடும், மின்னுகிற முடியோடும் உள்ள ஆண்கள் அந்த முகாமில் எனக்கு நீர் மீது சறுக்கிப் [10]போவதைச் சொல்லிக் கொடுத்தார்கள். நான், சிதிலமடைந்து கொண்டிருக்கும் படகுத் துறையின் விளிம்பில் அமர்ந்தபடி, காற்றில் வீசும் பெட்ரோலின் நெடியை முகர்ந்தபடி, நீரில் முத்துக்களின் நிறத்தில் தெரியும் வட்டச் சுழல்களைப் பார்த்திருப்பேன். கயிறு இறுகும், இளகியதை இறுகியதனோடு சமன் செய்தபடி, நான் எழுவேன்.
ஒரு கையை என் சகோதரியை நோக்கி நீட்டுகிற நான், சமையலறையின் மேடை மீது சாய்ந்து என் நிலையைச் சமாளித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது, அப்போது அவள் இறந்தாயிற்று என்பதை நினைவு கூர்கிறேன். இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில், ஒரு ஆசிய மக்களின் அறை ஒன்றும், ஆஃப்ரிக்க மக்களின் அறை ஒன்றும் உள்ளன, ஆனால் யூரோப்பிய மக்களுக்கு அறை ஏதும் இல்லை. நான் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரோபாட்டுகள் அவை அவற்றை நினைவு கூரும்படி செயல்நிரலியில் நிரப்பட்டிருக்கிறதால், பிந்தைய கால நினைவுகளை உணர்கின்றன. என் சகோதரி கன்னிமையைப் பெரிதாக மதிக்கவில்லை, கடவுளையும் நம்பவில்லை. அவள் சொன்னாள், “எனக்கு உன் சிறு கைகள் பிடிக்கும்.” அவள் மேலும் சொன்னாள், “படுக்கையில் நுழைந்து என் அருகில் படுத்துக் கொள்.” அவ்வப்போது நமக்கு ஒரு கூட்டாளி தேவைப்படுகிறது.
***
மூலக்கதை என்ப்ளஸ் ஒன் எனும் காலாண்டுப் பத்திரிகையில் வெளியானது. ஆசிரியர் லாரி ஸ்டோன், ஒரு கதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். ‘மை லைஃப் ஆஸ் ஆன் அனிமல்’ என்ற புத்தகம் அது. அது பற்றிய சில கட்டுரைகளை இங்கே காணலாம்:
http://literaryrejectionsondisplay.blogspot.com/2016/10/my-life-as-animal-by-laurie-stone.html
http://thecollagist.com/the-collagist/2017/5/19/my-life-as-an-animal-by-laurie-stone.html
லாரி ஸ்டோனின் ப்ளாக் ஒரு பக்கம் இங்கே கிட்டும்:
https://lauriestonewriter.com/blog/
இந்தக் கதையின் மூல வடிவு இங்கே கிட்டும்: https://nplusonemag.com/issue-32/fiction-drama/three-stories-2/
மூன்று கதைகளில் முதல் கதை மட்டும் இங்கே மொழிபெயர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டும் அடுத்த இதழில் பிரசுரமாகலாம்.
அடிக்குறிப்புகள்:
[1] ரீடா ஹேஒர்த் ‘50களில் ஹாலிவுட் சினிமாக்களில் புகழ் பெற்ற நடிகை. அவருடைய ஆடைகளின் பாணி அன்று பிரபலமாகி இருந்தது. அவற்றில் அவர் பல படங்களில், பொது நிகழ்ச்சிகளில் அணிந்து வருகிற உரோமத்தால் செய்யப்பட்ட மேலங்கிகள் அன்று விலை உயர்ந்த ஆடைகளுக்கு எடுத்துக் காட்டாக இருந்தது.
[2] கேட் மில்லெட் (1935-2017) அமெரிக்க எழுத்தாளர். பெண்ணியத்தின் இரண்டாம் கட்டத்துக்கான நகர்வை இவரது ‘பாலுறவு அரசியல்’ என்ற புத்தகம் சாதித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது மறைவுக் குறிப்பு ஒன்று இவர் வாழ்க்கையைப் பற்றிய நகச்சித்திரம் ஒன்றை அளிக்கிறது. அது இங்கே:
https://www.irishtimes.com/culture/books/kate-millett-a-tribute-by-rosita-sweetman-1.3214274
மேலுள்ள சுட்டி உணர்ச்சி ததும்ப வருணிக்கும் அதே வாழ்க்கையை உலர்ந்த, விலகி நின்ற பார்வையில் வருணிப்பது இடது சாரிப் பத்திரிகை என்று அறியப்படுகிற த கார்டியன் செய்தித்தாள். அது அடுத்தது:
https://www.theguardian.com/world/2017/sep/07/kate-millett-obituary
இந்தச் சுட்டி கொடுக்கும் பக்கத்தில் பிரபல குற்றப் புனைவு எழுத்தாளரான வால் மக்டெர்மிட் தான் கேட் மில்லெட் புத்தகத்தைப் படித்து எப்படி உத்வேகம் பெற்று பெண்ணியவாதியாக முடிந்தது என்பதைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு கடிதத்துக்கான சுட்டி உள்ளது. அது அப்பக்கத்தில் இடது பக்க ஓரப் பகுதியில் காணப்படும், அதைச் சுண்டிப் படித்துப் பாருங்கள், உதவும்.
முழு இடதுசாரி பெண்ணியப் பார்வை வேறாக இருக்கும். அதை இங்கே காணலாம்: https://www.jacobinmag.com/2017/09/kate-millett-obituary-sexual-politics
[3] Borgen என்ற டேனிஷ் தொலைத் தொடர் காட்சி ஒரு அரசீயல் நாடகம். அதை டேனிஷ் மொழியில் போவென் என்பது போல ஒலிப்பு தெரிகிறது. இதைப் பார்த்தே டேனிஷ் மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்பது வாக்கியம். ஓரிரு காட்சிகளைப் பார்த்த போது டேனிஷ் எத்தனை வேகமாகப் பேசப்படுகிறது என்பது தெரிகிறது. ஆக, அந்தத் திரைத்தொடரைப் பார்த்து டேனிஷ் மொழியைக் கற்பது எத்தனை கடினமாக இருக்கும் என்பதும் புரிகிறது.
[4] ஜப்பானிய சிற்பக் கலைஞர் ஃபூமியோ யோஷிமுராவை, தானும் சிற்பக் கலைஞராக இருக்க விரும்பிய கேட் மில்லெட் 1965 இல் மணந்து கொண்டு சில காலம் ஜப்பானிலும் வாழ்ந்திருந்தார். பிறகு இருவரும் நியுயார்க் நகரத்தில் வசதி அதிகம் இல்லாத கலைஞர்கள் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்திருந்தனர். அந்தத் தெரு நியுயார்க் மாநகரத்தில் இருந்த போவரி என்ற பகுதி. அந்தப் பகுதியைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரை இங்கே: https://ny.curbed.com/2017/10/4/16413696/bowery-nyc-history-lower-east-side
ஆனால் வரலாறு பற்றிய தீவிர உணர்வு கொண்டவர்கள் கூட எல்லா விதத் தகவல்களையும் சேமித்து விட முடியாது. இந்த நெடிய கட்டுரையில் கேட் மில்லெட் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர் என்ற தகவல் இல்லை. அதைச் சொல்ல ஒரு கதாசிரியரான லாரி ஸ்டோனின் இந்தக் கதை நமக்குத் தேவைப்பட்டிருக்கிறது. வரலாற்றின் இடைவெளிகளைப் புனைவு இட்டு நிரப்ப முடியும் என்பது, புராணம் என்பது எத்தனை தூரம் உதவி செய்யக் கூடியது என்பதையும் சொல்லலாம். வரலாறு எதிர் புராணம் என்று நின்று புராணத்தை இழிவு செய்யும் அதிபுத்திசாலிகளுக்கு இதைப் போன்ற பல ஆயிரம் சான்றுகள் கூட உதவப் போவதில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இந்த எதிரிடை அடிப்படையில் ஒரு பொய்மை என்பது தெரிய வைக்க இது ஒரு சிறு சான்றாக இருக்கலாம்.
[5] ரோஸ்மேரிஸ் பேபி என்ற திரைப்படம் 1968 ஆம் வருடம் வெளி வந்து உலகளாவிய அளவில் பிரபலமாகியது. ஐரா லெவின் என்ற அமெரிக்க எழுத்தாளர் 1967 இல் எழுதிய நாவல், ரோமன் போலான்ஸ்கியின் இயக்கத்தில் திரைப்படமாகி 1968இல் வெளி வந்தது. 2007 இல் இறந்த ஐரா லெவினின் மறைவுக் குறிப்பு ஒன்று இங்கே: https://www.nytimes.com/2007/11/14/books/14levin.html
இதில் ரோஸ்மேரிஸ் பேபி என்ற நாவலின் விளைவுகள் பற்றிய ஒரு பத்தியும் இருக்கிறது. பண்பாட்டு மாறுதல்கள் எப்படியெல்லாமோ நிகழும் அதில் பகுத்தறிவு என்ற கருத்தியல் அணுகல் எப்படிச் செயலற்ற சத்தை என்பது ஒருக்கால் புரியலாம். எல்லாம் நிகழ்ந்த பின் சக்தியில்லாத மனிதர் புலம்புவது போல ‘பகுத்தறிவாளர்கள்’ கட்டுரைகள் எழுதித் தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்வதொன்று வேண்டுமானால் எல்லா நாடுகளுக்கும் பொதுவான நிகழ்வாக இருக்கும்.
[6] ஜான் காஸவீடீஸ் மையப் பாத்திரமான ரோஸ்மேரி (மியா ஃபாரோ இதன் நடிகை) என்பாரின் கணவனாக நடித்தார். அந்தக் கணவன் முதல் நிலைக்கு வருவதற்குத் துடிக்கும் ஒரு நடிகன், அந்த நாவலில்.
[7] திறந்த பாட்டில்கள், பாத்திரங்கள், கோப்பைகளிலிருந்து வெளிப் புறங்களில் மதுபானங்களை அருந்துவது அமெரிக்காவின் பல பகுதிகளிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக பஸ், ரயில் நிலையங்கள், இதர பொது வெளிகளில் இப்படி அருந்துவது தடை செய்யப்பட்ட நடவடிக்கை. காகிதப் பைக்குள் வைத்த பியர் பாட்டில் அல்லது தகர டப்பாவிலிருந்து அருந்தினால் போலிசார் கண்டு கொள்ளாமல் போய் விடுவார்கள் என்பது வெளிப்படையாகச் சொல்லப்படாத ஒரு சமூக ஒப்பந்தம். வேண்டுமென்றால் காவல் துறையினர் காகிதப் பையைத் திறந்து சோதிக்க முடியும், ஆனால் இது அவர்களுக்குத் தேவையில்லாத வேலை என்பதால் விட்டு விடுகிறார்கள்.
[8] ஹாட் டாக் (hot dog) என்பது பன்றியிறைச்சியால் நிரப்பப்பட்ட குழல் போன்ற ஒரு தின்பண்டம். இது நீண்ட பன் வகை ரொட்டியின் இடையே வைத்து விற்கப்படுகிற காரமும் உப்பும் நிறைந்த இறைச்சி. யூரோப்பிலும், அமெரிக்காவிலும் தொழிலாளர் நடுவே அதிகம் புழங்கும் உணவாக இருந்தது, இப்போது தெருவில் விற்கப்படும் பண்டமாக தாராளமாக எங்கும் விற்பனை ஆகிறது. அவசர உணவாக இது பிரபலமாகி விட்டிருக்கிறது.
[9] கீழே விழும் கத்தியைப் பிடிப்பது என்பது ஒரு சங்கேதக் குறிப்பு. டானியெல் கானெமன் என்னும் உளவியலாளர், ஜேஸன் ஷ்வைக் என்னும் பத்திரிகையாளரோடு சேர்ந்து எழுதிய ஒரு புத்தகம் மிகப் பிரபலமடைந்திருந்தது. ’Thinking, fast and slow’ என்ற தலைப்புள்ள அந்தப் புத்தகம் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பவர்களின் மனநிலைகளை ஆராய்ந்திருந்த பகுதியில், ஒவ்வொரு பங்குச்சந்தை வியாபாரியும் பங்குச் சந்தை அடுத்து எப்படி நகரப் போகிறது என்பது குறித்துத் தனக்கு மட்டும் ஏதோ விசேஷ உள்ளொளி அல்லது தீட்சண்யப் பார்வை இருப்பதாகக் கருதி முடிவுகளை எடுக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள், பெரும்பாலான நேரம் வெற்றி பெறாதபோதும் இந்த மனநிலை நீடிக்கிறது என்று கண்டு பிடிக்கிறார்கள். இந்த மனோபாவத்தை, கத்தி வெட்டுக்காக வேகமாகக் கீழீறங்குகையில் கத்தியை வெறும் கையால் பிடித்து விட முடியும் வெட்டு விழுவதைத் தவிர்க்க முடியும் என்று நம்புவதை ஒத்தது என்று கானெமன் குறிக்கிறார். கதையில் இந்த இடத்தில் அந்த கஃபேயில் அமர்பவர்கள் தம் வாழ்வில் நடக்கவிருக்கும் விபரீதங்களைத் தாம் தடுத்து விட முடியும் என்று நம்பி அமர்ந்திருக்கலாம் என்று சொல்கையில் அத்தனை எச்சரிக்கை உணர்வோடும் அமர்ந்திருக்க முடியும் என்று கதை சொல்லி சுட்டுவதாக நாம் கருதலாம்.
[10] Water Skiing எனப்படும் நீர் விளையாட்டு இது. படகுக்குப் பின்னே நீண்ட கயிறு ஒன்றைப் பிடியால் பற்றிய ஒருவர், கால்களில் நீண்ட மெல்லிய கட்டைகளை அணிந்தபடி நீரின் மேல்பரப்பில் சறுக்கிப் போவார்கள். படகு விரையும் வேகம் அந்தச் சறுக்கலில் நீருக்குள் விழாமல் காப்பாற்றும்.